இலங்கையில் இந்து-மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சியை தொழிலதிபர் தொடங்கினார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மார்ச் 6, சனிக்கிழமையன்று யாழ்ப்பாண ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவின் வன்முறைமிக்கதும் கம்யூனிச எதிர்ப்பு மற்றும் முஸ்லீம் விரோத, இந்து-மேலாதிக்க கட்சியுமான பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) இணைந்து செயல்படுவதை நோக்கமாகக் கொண்ட "இலங்கை பாரதிய ஜனதா கட்சி" (SLBJP) உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

SLBJP பத்திரிகையாளர் சந்திப்பின் வீடியோ காட்சி. நடுவில் வி.முத்துசாமி, வலது செயலாளர் எம். இந்திரஜித் மற்றும் இடது பொருளாளர் வி.திலன். (ஆதாரம்: SLBJP)

இந்த கட்சியானது, முதலாளித்துவ சக்திகள் கோவிட்-19 தொற்றுநோய்க்கான விடையிறுப்பாக ஒரு ‘சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்’ கொள்கையை பின்பற்றுவதால் அதிகரித்துவரும் வர்க்க பதட்டங்களுக்கும் மற்றும் சீனாவிற்கும் வாஷிங்டனின் முக்கிய பிராந்திய நட்பு நாடான இந்தியாவிற்கும் இடையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களின் மத்தியிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் சீனாவும் இலங்கையில் பொருளாதார மற்றும் மூலோபாய செல்வாக்கிற்காக கடுமையான போராட்டத்தை நடத்தி வருகின்றன. இந்த கட்சியின் உருவாக்கம் இலங்கை முதலாளித்துவத்திற்குள் உள்ள பிரிவுகள் வகுப்புவாத மற்றும் அரசியல் வன்முறையை தீவிரமடையச் செய்ய தயாராகி வருகின்றன என்பதற்கான எச்சரிக்கையாகும்.

துல்லியமாக இதுபோன்ற ஒரு கட்சியை உருவாக்க இந்திய அரசாங்க அமைச்சர் அழைப்பு விடுத்ததை அடுத்து இலங்கை பாரதிய ஜனதா கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் திரிபுராவின் முதல்வர் பிப்லாப் குமார் தேவ் டெப், இந்தியா முழுவதும் மட்டுமின்றி, இலங்கை, நேபாளம் போன்ற அண்டை நாடுகளிலும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டமிடுவதாக கூறினார். மேலும் இலங்கையிலும் எமது ஆதரவாளர்கள் இருக்கின்றார்கள், அவர்கள் கட்சி ஆரம்பிக்கவுள்ளார்கள், அதற்கு நாம் ஆதரவு வழங்கவுள்ளோம் என தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கள் நேபாளம் மற்றும் இலங்கையில் ஆளும் வட்டாரங்களில் இருந்து கண்டனத்தை தூண்டியிருந்தன.

பாரம்பரிய முறையில் ஸ்தாபக மாநாடோ, ஸ்தாபக அறிக்கைகளோ எதுவுமின்றி, அக்கட்சியின் தலைவர் கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் வி.முத்துசாமி என்றும், செயலாளர் எம்.இந்திரஜித் மற்றும் பொருளாளர் வி. திலான் என்றும் மார்ச் 6 இல் யாழ்பாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நேற்றுவரை அரசியல் ரீதியாக பொதுமக்களுக்கு அதிகம் தெரிந்தவர்கள் அல்லர்.

கட்சி உருவாவதை அறிவிக்கும் 27 நிமிட பத்திரிகையாளர் சந்திப்பில், இந்திய அல்லது இலங்கை அரசாங்கங்களின் கொரோனா வைரஸ் பரவலை மோசமாக புறக்கணிப்பதைப் பற்றியோ அல்லது இலங்கை ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்க்ஷ கட்டியெழுப்பும் இராணுவ ஆட்சியைப் பற்றியோ ஒரு வார்த்தை கூட கூறப்படவில்லை. மாறாக, முத்துசாமி இலங்கையில் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் உருவாகி வரும் வெடிக்கும் அரசியல் நெருக்கடியை சுட்டிக்காட்டினார். கொழும்பில் இலங்கை ஆட்சியுடன் நெருக்கமாக இயங்கிய தமிழ்-தேசியவாத கட்சிகள், ‘சமூகநோய் எதிர்ப்பு சக்தி கொள்கை,’ சிக்கன மற்றும் பொலிஸ்-அரசு கொள்கைகளில் உடந்தையாக இருப்பதால் மதிப்பிழந்துபோயுள்ளன.

தமிழ் தேசியவாத கட்சிகளின் நெருக்கடியால் உருவாகியிருக்கும் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதே தனது கட்சி நோக்கம் என்பதை முத்துசாமி வார்த்தையாடலுடன் வலியுறுத்தினார்.

“இலங்கையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் இருக்கின்றன. என்றாலும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை புறந்தள்ளிவிடுகின்றன. அதேநேரம் தங்களின் தனிப்பட்ட நோக்கங்களை முன்னிறுத்தி அவை செயல்படுகின்றன. எனவேதான் தமிழ் மக்கள் மத்தியில், அந்தக் கட்சிகளால் நிலைத்து நிற்க முடிவதில்லை. தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், விளையாட்டு துறையை ஊக்குவிப்பதற்காகவும் இதை ஆரம்பிக்கிறோம். அதை முதலில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்” என்றார்.

பின்னர் மேலும் தொடர்ந்து கூறுகையில், தனது கட்சியின் இந்த வேலைத்திட்டம் தொடர்பாக நேரடியாக அரசாங்கத்துடன் பேசவேண்டுமாயின் “ஒரு அரசியல் கட்சி தேவைப்படுகிறது” என்றார். “இந்த கட்சியின் சார்பாக நான் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம்” என்றார்.

மாணவர்களின் கல்வியையும் விளையாட்டையும் ஊக்குவிப்பதற்கு, ஏன் அண்டை நாட்டில் நிறுவப்பட்ட ஒரு கட்சியின் பெயரை பயன்படுத்த வேண்டும்? என்ற கேள்வியை சுற்றி பல பத்திரிகையாளர்களும் கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்விகள், ஏற்கெனவே இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியை நிறுவுவதற்கு எதிராக இலங்கை அதிகாரிகள் எச்சரித்ததைத் தொடர்ந்து எழுப்பப்பட்டன. இலங்கை தேர்தல் ஆணையத்தின் தலைவர் நிமல் புஞ்சிஹேவ, இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியை ஸ்தாபிப்பது குறித்து டெப் கூறிய கருத்துக்களுக்கு, அத்தகைய கட்சி சட்டவிரோதமானது என எச்சரித்து ஏற்கனவே பதிலளித்திருந்தார்: "எந்தவொரு இலங்கை அரசியல் கட்சி அல்லது குழுவும் வெளிநாடுகளில் உள்ள எந்தவொரு கட்சியுடனும் அல்லது குழுவுடனும் வெளிப்புற தொடர்புகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் வெளிநாட்டு அரசியல் கட்சிகளை இங்கு பணியாற்ற எங்கள் தேர்தல் சட்டங்கள் அனுமதிக்காது" என்றார்.

முத்துசாமியும் இந்திரஜித்தும் பேட்டியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், இலங்கையின் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறி நகைச்சுவையான பாசாங்கைத் தக்க வைத்துக் கொள்ள முயன்றனர். இருப்பினும், அதே நேரத்தில், அவர்கள் இந்திய அரசாங்கத்துடன் நெருக்கமான அரசியல் உறவுகளை கொண்டிருப்பதாகவும், எதிர்காலத்தில் அதை தொடர விரும்புவதாகவும் அடையாளம் காட்டினர்.

“இந்திய கட்சி இலங்கையில் இருப்பது புதிதல்ல, காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி இங்கும் உள்ளது” என அவர்கள் பத்திரிகையாளருடன் வாதம் செய்தனர். மேலும் அவர்கள், “நாங்கள் தேசத்துரோகம் செய்யமாட்டோம்”, இந்தியாவுக்கு சார்பாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராடமாட்டோம்” ... “சேவையே எமது நோக்கம், போராட்டம் அல்ல, எந்த போராட்டத்திலும் பங்குபற்றமாட்டோம்” எனவும் அறிவித்தனர்.

இலங்கை பாரதிய ஜனதா கட்சியின் உருவாக்கம், திரிபுராவின் முதலமைச்சர் டெப்பின் அறிக்கையின் பிரதிபலிப்பு என்பதை முத்துசாமி மறுத்தார்: "அறிக்கை இப்போதுதான் வெளிவந்துள்ளது. நாங்கள் 6 மாதங்களுக்கு முன்பே இந்த முயற்சியைத் தொடங்கிவிட்டோம்" என்றார்.

எவ்வாறாயினும், அதே நேரத்தில், இலங்கை பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனர்கள் இந்திய பாரதிய ஜனதா கட்சியின் இந்து-மேலாதிக்க, தொழிலாள வர்க்க எதிர்ப்பு வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதை தெளிவுபடுத்தினர். தங்கள் கட்சியினுள் இந்திய அரசு ஈடுபாட்டை நிராகரிக்கவும் மறுத்துவிட்டனர்.

“ஒரு பிரபலமான கட்சியின் பெயரை வைத்தால் மக்கள் வரப்போகிறார்கள். இலங்கை மக்கள் இந்த பெயரை விரும்புகிறார்கள், ஆகையால் இந்த [பாரதிய ஜனதா கட்சி] பெயரை வைத்திருக்கிறோம்” என்றார். தனது கட்சியில் இந்திய ஈடுபாட்டு பற்றி எதிர்காலத்தில் ஆதாரங்கள் வெளிவந்தால் அவர் என்ன செய்வார் என்று கேட்டதற்கு, முத்துசாமி இழிந்த முறையில் "பெயரை மாற்றுவோம்." என்று பதிலளித்தார்:

அரசியல் நடவடிக்கைகள் குறித்து கேட்டதற்கு, கட்சியின் செயலாளர் இந்திரஜித் கருத்து தெரிவிக்கையில்: “ஆரம்பத்தில் அரசியலில் ஈடுபடுவதற்கான எண்ணம் கிடையாது. எதிர்காலத்தில் அரசியலில் பிரவேசிப்பதற்கான எண்ணம் உள்ளது” என அறிவித்த அதே வேளையில், அவர் மோடியை பாராட்டியதோடு, இந்திய பாரதிய கட்சியின் அரசியல் ஆதரவை இலங்கை பாரதிய ஜனதா கட்சி பெறுகிறது என்றும் வலியுறுத்தினார். “மோடி என்ற பெயர் எல்லோருடைய மனதிலும் இருக்கிறது” “பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் கட்சியொன்றை ஆரம்பிக்க, இந்திய பாரதிய ஜனதா கட்சி எந்த விதத்திலும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை” “நாங்கள் எல்லோரிடமும் உதவி பெறுவதற்கு தயாராக உள்ளோம்” எனக் கூறினார்.

இலங்கை பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபகம், தொழிலாள வர்க்கத்தின் மீதான கடுமையான விரோதத்தையும், சீனாவுக்கு எதிரான வாஷிங்டன் மற்றும் புது தில்லியின் சூழ்ச்சிகள் மற்றும் போர் அச்சுறுத்தல்கள் குறித்த நெருக்கமான ஒத்துழைப்பையும் ஒருங்கிணைக்கிறது. இலங்கை முழுவதும் பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் வர்க்கப் போராட்டங்களின் மத்தியில் இது வருகிறது. இப்போராட்டத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்கள் அதிகளவில் வேலைநிறுத்தங்கள் மற்றும் வர்க்கப் போராட்டங்களில் ஒன்றிணைந்து இருந்தனர். இப்போது, இலங்கையில் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் வேலைநிறுத்த அலை உருவாகி வரும் நிலையில் இலங்கை பாரதிய ஜனதா கட்சி நிறுவப்படுகிறது.

இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியை ஸ்தாபிக்க தங்கள் ஆதரவை தமிழ் தேசியக் கட்சித் தலைவர் கே.சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் உள்ளிட்ட இலங்கை தமிழ் தேசியவாதிகள் முன்பு சுட்டிக்காட்டியுள்ளனர். சிவாஜிலிங்கம், இலங்கை பாரதிய ஜனதா கட்சியை நிறுவுவதற்கான அழைப்புகளுக்கு ஒப்புதல் அளித்து, இதனால் அமெரிக்க மற்றும் இந்திய துருப்புக்கள் வடக்கு இலங்கையை ஊடுருவி ஆக்கிரமிக்க முடியும் என்று பரிந்துரைத்தார். இது இலங்கை அரசியல் ஸ்தாபகத்தில் உள்ள சீன எதிர்ப்பு கிளர்ச்சிக்கும் தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் விரோதத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை சுட்டிக்காட்டுகிறது.

அண்மையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரன் இந்திய அரசாங்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “அரசாங்கம் [இந்திய] உங்களுக்கு 14,000 வீடுகள் கட்டி கொடுக்கும்போது உங்களுக்கு நல்லது, தடுப்பூசி கொடுக்கும்போது உங்களுக்கு நல்லது, வைத்தியசாலை கட்டிக்கொடுக்கும்போது உங்களுக்கு நல்லது, பாடசாலைகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கும்போது உங்களுக்கு நல்லது, அவர்களுக்கு ஒரு தோட்டத்தை கொடுத்தால் அது பிழையா? இப்போ ஆர்ப்பாட்டங்கள் என வந்தவுடன் பெருந்தோட்டங்களை அதானி கம்பனிக்கு கொடுக்கப்போகிறார்கள் என்கிறார்கள். இன்னும் அப்படி ஒரு நோக்கம் எங்களுக்கு இல்லை” என்றார்.

இந்தியாவில், சேலத்தில் நடந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி இளைஞர் மாநாட்டில் பேசிய, இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் சீனாவை பின்வருமாறு எச்சரித்தார்: “என் உடம்பில் உயிர் இருக்கும் வரை இந்த தேசத்தின் ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுத்தரமாட்டோம்” என சீனாவை எச்சரித்தார். தொடர்ந்து கூறுகையில், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா 27,000 புதிய வீடுகள் கட்டிகொடுத்ததாகவும் 2015 க்கு பின்னர் யாழ்ப்பாணம் சென்ற இந்தியாவின் முதல் பிரதமர் மோடி என்றும் பெருமைபேசி, “இலங்கையில் தமிழர்கள் சமாதானம், சமத்துவம் மற்றும் கௌரவத்துடன் வாழ்வதற்கு பிரதமர் நரேந்திரமோடி அர்பபணிப்புடன் செயற்படுவார்” என்றார்.

இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி, அதிகரித்துவரும் வேலைநிறுத்தங்கள், விவசாயிகளின் மாதக்கணக்கான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அதன் முஸ்லிம் எதிர்ப்பு சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு மிருகத்தனமான மற்றும் இரத்தக்களரி அடக்குமுறையுடன் பதிலளிக்கின்றது.

Loading