முன்னோக்கு

பைடென் புலம்பெயர்ந்தோர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடங்குகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க-மெக்சிகோ எல்லைக்கு இடையே அரங்கேறும் காட்சிகள், "மனித உரிமைகள்" குறித்து உலகிற்கு எப்போதும் உபதேசம் செய்வதிலிருந்து அமெரிக்க அரசாங்கத்தைத் தகுதி இழக்கச் செய்கின்றன, நாடுகளை ஆக்கிரமிப்பதற்கும் ஒட்டுமொத்த சமூகங்களை வீணடிப்பதற்கும் "மனித உரிமைகள்" என்பதே அதன் விருப்பத்திற்குரிய சாக்குப்போக்காக இருந்துள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தால் கைது செய்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் குழந்தைகளின் எண்ணிக்கை இந்த வாரம் 3,200 இல் இருந்து 4,200 ஆக உயர்ந்துள்ளது. தங்களைக் குளிப்பதற்கு அனுமதிப்பதில்லை என்றும், பல நாட்களாக வானத்தையே பார்க்கவில்லை என்றும் குழந்தைகள் அரசு வழக்குரைஞர்களுக்குத் தெரிவிக்கின்றனர். குழந்தைகளைக் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் 3,000 பதின்ம வயது சிறுவர்களை டல்லாஸ் ஒன்றுகூடல் மண்டபத்திற்குக் கொண்டு செல்லுமென பைடென் நிர்வாகம் நேற்று அறிவித்தது, அவ்விடத்தை அவர்கள் "புலம்பெயர்ந்தோர் குவிப்பு மையம்" (immigrant decompression center) என்று நடுங்க வைக்கும் விதத்தில் குறிப்பிடுகின்றனர்.

டொனால்ட் ட்ரம்ப் உடனான ஒரு முறிவைப் பிரதிநிதித்துவம் செய்வதிலிருந்து விலகி, அவரது புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளையே ஜனநாயகக் கட்சி இன்னும் ஆழமாக தொடர்ந்து வருகிறது என்பதையே சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன. எல்லையில் நிலவும் நிலைமைக்குப் பிரதானமாக பைடென் நிர்வாகமோ அவரது சொந்த கட்சியோ பொறுப்பில்லை என்பதைப் போல, பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சி சபாநாயகர் நான்சி பெலோசி எல்லையில் உள்ள நிலைமையை ஒரு "மனிதாபிமான நெருக்கடி" என்பதாக குறிப்பிட்டார்.

புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள் குறித்து வேண்டா வெறுப்புடன் குறிப்பிடும் ஊடகங்கள், அந்த விடயத்தை ஒரு "நெருக்கடி" என்பதாக சித்தரித்து, கேட்பாரற்ற குழந்தைகளைப் பாரியளவில் தடுத்து வைத்திருப்பதன் மீது மிகக் குறைந்தளவே கவனம் செலுத்துகின்றன. குழந்தை பாதுகாப்பு குழு என்ற பாசாங்குத்தனத்துடன் திங்கட்கிழமை அந்த எல்லைக்குப் பயணித்த காங்கிரஸ் சபையிலுள்ள குடியரசுக் கட்சி உறுப்பினர்கள், அமெரிக்க எல்லைக்குச் செல்லும் புலம்பெயர்ந்தோர் குழந்தைகளின் "கொடூரமான" நிலைமைகள் கண்டு "தங்கள் இதயமே உடைந்து" விட்டதாக அறிவித்தனர். வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்கள் தான் அவர்களை வெளியேற்ற விரும்புகிறார்கள்.

கொரோனா வைரஸ் காரணமாக அவர்கள் சுகாதார அபாயத்தை முன்நிறுத்துகிறார்கள் என்ற அடித்தளத்தில், உள்நுழையும் பருவ வயதுடைய புலம்பெயர்ந்தோர் அனைவரையும் மற்றும் உறவினர்களுடன் எல்லை கடந்து வரும் குழந்தைகளையும் விசாரணையின்றி வெளியேற்றுவதற்கான பைடென் நிர்வாகத்தின் முடிவானது, குழந்தைகள் மற்றும் இளைஞர்களை நாட்டுக்குள் நுழைய அனுமதித்து பின்னர் அது திணிக்கும் நிலைமைகளை விட அனேகமாக இன்னும் மோசமானதாக உள்ளது.

ஜனவரி பிற்பகுதியில் பைடென் நிர்வாகத்திற்கு எழுதிய கடிதத்தில், டஜன் கணக்கான மருத்துவ வல்லுநர்கள் இத்தகைய “தலைப்பு 42” (“Title 42”) சட்ட வழிவகை வெளியேற்றங்கள் எந்த மருத்துவ நோக்கத்திற்கும் பயன்படாது என்று விளக்கினர்: “தஞ்சம் கோருவோர் மற்றும் குடியேற்ற அந்தஸ்து பெறுவதற்கான ஏனைய புலம்பெயர்ந்தோர் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது பாரபட்சமானது, இதுவொரு பொது மருத்துவம் சார்ந்த நடவடிக்கை என்பதற்கு எந்த விஞ்ஞானப்பூர்வ அடித்தளமும் இல்லை.” தலைப்பு 42 சட்ட வழிவகையானது உரிய விசாரணை செயல்முறைகளைக் கைவிடுகிறது, தஞ்சம் கோருவதற்கு அல்லது பிற நிவாரணங்களுக்கு விண்ணப்பிக்கும் உரிமையை இல்லாதாக்குகிறது, மேலும் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் ஒரு விசாரணை செய்ய வேண்டுமென்ற புலம்பெயர்ந்தோர் உரிமையை மறுக்கிறது. குழந்தைகள் உள்ளடங்கலாக பெப்ரவரியில் எல்லையை கடக்க முயன்ற 100,000 இக்கும் அதிகமானவர்களில் எழுபது சதவீதம் பேர், இந்த முறையில் தான் வெளியேற்றப்பட்டனர்.

தலைப்பு 42 சட்ட வழிவகையின் கீழ் காலணி நாடாக்கள் உள்ளடங்கலாக நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோரின் உடைமைகளை அமெரிக்க அதிகாரிகள் பறித்துக் கொண்ட பின்னர் அவர்கள் எல்லைகளுக்கு வெளியே திருப்பி அனுப்பப்பட்டனர், இது மெக்சிகோ பாலங்களைக் கடக்க அவர்களைத் திண்டாட விட்டது. அதில் பலர் அவர்கள் கடந்து வந்த இடத்திலிருந்து நூற்றுக் கணக்கான மைல் தொலைவுக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டு, எல்லையை ஒட்டி வெறொரு இடத்தில் வெளியேற்றப்பட இருந்தார்கள். தற்போது ஆயிரக் கணக்கானவர்கள் தங்களை வீடற்றவர்களாக காண்கிறார்கள் அல்லது தொற்றுநோய் தடையின்றி பரவி வரும் அமெரிக்க-மெக்சிகோ எல்லையை ஒட்டி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மெக்சிகோவில், புலம்பெயர்ந்தோர் அரசு தங்குமிடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர், எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் ஓர் அதிகாரி இதை "இடம் பெயர்த்தும் கூடாரத்தை விட மோசமாக உள்ளது, அங்கே சரியான தண்ணீர் வசதி கூட இல்லை,” என்று விவரித்தார். கடுமையான ஒடுக்ககுமுறைக்கான பைடென் நிர்வாகத்தினது கோரிக்கைகளுக்கு இணங்க, 1,000 குழந்தைகளை அத்தகைய இடங்களில் தடுத்து வைத்திருப்பதாக ஜனாதிபதி அந்திரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடரின் அரசாங்கம் நேற்று அறிவித்தது. மெக்சிகன் அதிகாரிகள் அமெரிக்காவின் சார்பாக சமீபத்திய வாரங்களில் தொடர்ச்சியாக மக்கள் மீது உயர்மட்ட சோதனைகளையும் நடத்தி உள்ளனர்.

இந்த ஒடுக்குமுறை பாரிய வெகுஜன மரணத்தில் போய் முடிந்துள்ளது. சனிக்கிழமை, குவாத்தமாலா நகரமான கொமிட்டன்சிலோவில் 11 நகரவாசிகளுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது, ஜனவரியில் அவர்கள் மெக்சிகன் மாநிலமான தமௌலிபாஸில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற போது, அவர்கள் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டு, அவர்களது உடல்கள் ஒரு காரில் தீயிட்டு எரிக்கப்பட்டன—இந்த குற்றம் மெக்சிகன் அதிகாரிகள் மூடிமறைக்கப்பட்டது. இம்மாத தொடக்கத்தில், அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற போது புலம்பெயர்ந்தோர் இருந்த ஒரு கார் விபத்துக்குள்ளானது, அதில் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவின் 13 புலம்பெயர்ந்தோர் கொல்லப்பட்டனர்.

உடனடியாக வெளியேற்றப்படாமல் அமெரிக்காவுக்குள் வர போதுமான "அதிருஷ்டசாலிகளாக" இருந்த வயது வந்த புலம்பெயர்ந்தோர்கள் மற்றும் உடன் வந்த குழந்தைகள் கூட்ட நெரிசலான தடுப்புக் காவல் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அங்கே கோவிட்-19 உம் காட்டுத் தீயைப் போல பரவி வருகிறது. அந்த தடுப்புக் காவல் மையங்களில் இப்போது 420 நோயாளிகள் உள்ளனர், கடந்த வாரயிறுதி வரையில் 370 பேர் வரையில் இருந்தனர். இந்த தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள மொத்தம் 10,000 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

தடுப்புக்காவல் மையங்களில் இருந்து விடுதலை பெற முடிந்தவர்களைப் பொறுத்த வரையில், குடியமர்வு மற்றும் சுங்க அமலாக்க ஆணையமும் (ICE) சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு ஆணையமும் (CBP) கோவிட் நோயுள்ள புலம்பெயர்ந்தோரிடம் இருந்து தங்களை விலக்கிக் கொள்ள, அவர்களுக்கு உரிய மருத்துவக் கவனிப்பும் இல்லாமல் மருத்துவ அதிகாரிகள் அல்லது உள்ளூர் அரசு-சாரா அமைப்புகளுக்குத் தகவலும் தெரிவிக்காமல் அவர்களை எல்லைக்கருகே டெக்சாஸ் நகரங்களில் விட்டுவிடுகின்றன.

புலம்பெயர்ந்தோர் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் பாசிசவாத தாக்குதலுடன் ஒப்பிடுகையில் ஜனநாயகக் கட்சி “குறைந்த தீமை” கொண்டது என்பதையே இந்த யதார்த்தம் அம்பலப்படுத்துகிறது. இன்று போலில்லாமல், ட்ரம்பின் “மெக்சிகோவிலேயே இருங்கள்” கொள்கையின் கீழ் கூட, வெளிப்பார்வைக்காவது புலம்பெயர்வோர்கள் தஞ்சம் கோருவதற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

பைடென் நிர்வாகம் விரைவில் அதன் முக்கிய புலம்பெயர்ந்தோர் சட்டமசோதாவை, அதாவது அமெரிக்க குடியுரிமை சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தும். இந்த மசோதாவைக் குறித்து அறிவிக்கையில், பைடெனும் ஜனநாயகக் கட்சியினரும் அமெரிக்கா எவ்வாறு "புலம்பெயர்ந்தோருக்கான ஒரு தேசம்" என்பதைக் குறித்து அர்த்தமற்ற வெற்றுரைகளைப் பிதற்றுவார்கள் (அவர்களின் சிறந்த முயற்சிகளுக்கு மத்தியில் என்பதையும் ஒருவர் சேர்த்துக் கொள்ளலாம்). ஆனால் அந்த சட்டமசோதாவுக்கும் புலம்பெயர்ந்தோரைக் குற்றகரமாக்குவதை நிறுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதோடு, குறிப்பாக இப்போது அமெரிக்காவுக்குள் நுழைய முயலும், அதுவும் குற்ற முன்வரலாறு கொண்டு உள்ளவர்களும் சேர்ந்து, மில்லியன் கணக்கானவர்களை நாடு கடத்துவதற்கே அது வழி வகுக்கும்.

அந்த மசோதாவின் கீழ், புலம்பெயர்ந்தோருக்கு அரசு வழக்குரைஞரை ஏற்பாடு செய்து கொள்வதற்கான உரிமையும் இருக்காது, புலம்பெயர்ந்தோர் சிறைச்சாலைகளின் வலையமைப்பு தொடர்ந்து திறந்திருக்கும், புலம்பெயர்ந்தோர் நீதிமன்ற அமைப்பு தொடர்ந்து உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் (DHS) கட்டுப்பாட்டின் கீழ் தான் இருக்கும், குழந்தைகளின் தடுப்புக்காவல் தொடர்ந்து “சட்டப்பூர்வமாக” இருக்கும், எல்லை இன்னும் கூடுதலாக இராணுவமயமாக்கப்படும், நூறு மில்லியன் கணக்கான டாலர்கள் மத்திய அமெரிக்க பொலிஸ் மற்றும் கொலைப்படைகளுக்கு ஆயுதங்களை வழங்குவதற்குச் செல்லும், அமெரிக்க எல்லையை எட்ட முயல்வதிலிருந்து மத்திய அமெரிக்கர்களைப் பயமுறுத்த "பொது தகவல் பிரச்சாரம்" ஒன்று நடத்தப்படும்.

முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் பெருநிறுவன ஊடகங்களிடம் இருந்து வரும் வெளிநாட்டவர் விரோத போக்கை நிராகரித்து, மெக்சிகோ, மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள தங்கள் வர்க்க கூட்டாளிகளைப் பாதுகாக்க, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொழிலாளர்கள் முன்வர வேண்டும்.

ஒரு நூற்றாண்டாக சக்தி வாய்ந்த பெருநிறுவனங்கள் மற்றும் ஏகாதிபத்திய ஆதரவு பெற்ற சர்வாதிகாரிகளால் ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்ட மக்களைக் கொண்ட, இயற்கை வளங்கள் சூறையாடப்பட்ட நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்களும், சிறு விவசாயிகளும் மற்றும் சீரழிந்த சிறுவணிகர்களுமே தங்கள் உயிரைப் பணயம் வைத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய முயல்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் இலத்தீன் அமெரிக்கா எங்கிலும் கிட்டத்தட்ட 800,000 பேரைக் கொன்றுள்ளது. 500 மில்லியன் பேர் வறுமையில் வீழ்வார்கள் என்று உலக பொருளாதார பேரவை மதிப்பிட்ட அதேவேளையில், இலத்தீன் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் பெரும் பகுதியினர் உள்ளடங்கலாக உலகெங்கிலும் 1.6 பில்லியன் உத்தியோகமற்ற வேலை இழப்புகள் ஏற்படும் அல்லது மிகப்பெரியளவில் கூலி வெட்டுகள் காணப்படுமென சர்வதேச தொழிலாளர் அமைப்பு அனுமானித்தது. 2020 இல் சர்வதேச தொழிலாள வர்க்கம் அனுபவித்த மொத்த வருமான இழப்பு தொகை 3.4 ட்ரில்லியன் டாலர் ஆகும், இது ஏறக்குறைய உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் குவித்துக் கொண்ட தொகைக்குச் சமம். 800 மில்லியன் புலம்பெயர்ந்த குடும்ப உறுப்பினர்கள் உணவு மற்றும் பிற தேவைகளுக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து பணம் அனுப்புவதில் 110 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக உலக வங்கி அறிவித்தது.

ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளது ஒரு நேரடி விளைவாக முன்னேறிய மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளின் தொழிலாளர்கள் ஒன்று போல கஷ்டங்களை முகங்கொடுக்கின்றனர். உலகளாவிய தொழிலாள வர்க்கம் இத்தகைய நிலைமைகளுக்கு எதிரான போராட்டத்தில் தேசிய எல்லைகளைக் கடந்து அதன் அளப்பரிய சமூக சக்தியை ஒன்று திரட்ட வேண்டும். இந்த காரணத்திற்காக தான், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதென்பது சோசலிச புரட்சிக்கான போராட்டத்தில் ஒரு தவிர்க்கவியலாத மூலோபாய கட்டாயமாக உள்ளது.

Loading