கோவிட்-19 பெருந்தொற்று நோயின் புதிய எழுச்சி சர்வதேச அளவில் தீவிரமயப்பட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

குளிர்கால எழுச்சிக்கு பின்னர் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் தொடர்ந்து ஏழு வாரங்கள் குறைந்து வந்ததன் பின்னர், கடந்த ஐந்து வாரங்களாக பூகோள அளவில் புதிய நோய்தொற்றுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை செய்கிறது.

மார்ச் 15 ஆம் தேதி தொடங்கிய வாரத்தில் 3.28 மில்லியன் புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகியது, இது பிப்ரவரி 15 இல் தொடங்கிய வாரத்தில் 2.49 மில்லியனாக இருந்து ஒரே மாதத்தில் இவ்வளவு அதிகரித்துள்ளது. இது பூகோள அளவில் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை நாளாந்தம் 100,000 ஆக இருப்பதற்கு சமமாகும்.

உலகின் ஆறு பிராந்தியங்களில், அமெரிக்கா, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் மேற்கு பசிபிக் ஆகிய ஐந்து பிராந்தியங்களில், நோய்தொற்றுக்கள் கடுமையாக அதிகரித்து வருகின்றன. ஆபிரிக்கா கண்டம் எங்கிலும் புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை உச்சபட்ச நாளாந்த விகிதங்களை எதிர்கொள்கின்றன.

ஒரே வார்த்தையில் குறிப்பிடுவதானால், வசந்தகால எழுச்சி நன்றாக நடந்து வருகிறது.

மார்ச் 19, 2021, வெள்ளிக்கிழமை அன்று, பிரேசிலில், பிரேசிலியாவிலுள்ள பிளானால்டோ ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே, கோவிட்-19 பெருந்தொற்று நோயை ஜனாதிபதி கையாண்ட விதத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்க்கின்றனர். போர்த்துகீஸில் அடையாள அட்டைகள் “கிட்டத்தட்ட 300,000 பேர் இறந்துவிட்டனர். போல்சொனாரோ இனப்படுகொலை”, மற்றும் “தடுப்பூசிகள் உயிர்களைக் காப்பாற்றுகின்றன” என்று தெரிவித்தன. (AP Photo/Eraldo Peres)

வாரந்தோறும் குறைந்து வந்த கோவிட்-19 காரணமான இறப்புக்கள் தற்போது மிகவும் அதிகரித்து வருகிறது என்ற உண்மை மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. மார்ச் 8 இல் தொடங்கிய வாரத்தில் கோவிட்-19 இறப்புக்களின் எண்ணிக்கை 59,000 ஆக குறைந்தது, மார்ச் 15 இல் தொடங்கிய வாரத்தில் அது 60,000 க்கு மேலாக அதிகரித்து பின்னர் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. பெருந்தொற்று நோய் பரவ ஆரம்பித்து ஒரே ஆண்டில் பூகோள அளவில் 22.5 மில்லியனுக்கும் அதிகமாக கோவிட்-19 நோய்தொற்றுக்கள் உருவாகியிருப்பதையும், 2.7 மில்லியனுக்கும் அதிகமாக இறப்புக்கள் ஏற்பட்டிருப்பதையும் உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் பாரிய வேலையிழப்புக்களை பெருந்தொற்று நோய் விளைவித்துள்ளமை, நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் பசி பட்டினிக்கு ஆளாகும், வீடற்றுப் போகும், நோயின் உச்சபட்ச பாதிப்புக்குள்ளாகும் மேலும் இறந்துபோகும் நிலைக்கு அச்சுறுத்துகிறது. பிப்ரவரியில் Science Advances விஞ்ஞான இதழில் பிரசுரமான ஒரு அறிக்கை, ஆபிரிக்கா, ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவிலுள்ள ஒன்பது நாடுகளில் 70 சதவீத குடும்பங்கள் நிதியிழப்புக்களை பதிவுசெய்துள்ள நிலையில், அவர்களது வருமான இழப்புக்களின் அதிர்ச்சியூட்டும் மட்டங்கள், மில்லியன் கணக்கான மக்கள் குறைந்தளவு உணவை சாப்பிடுவதற்கு அல்லது முற்றிலுமாக உணவை தவிர்ப்பதற்கான சூழலை உருவாக்கியுள்ளதைக் கண்டறிந்தது.

பேர்க்லி பல்கலைக்கழக பொருளாதார நிபுணரான எட்வார்ட் மிகுவல், “தொற்றுநோயின் ஆரம்பகட்ட மாதங்களில், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, 1990 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடி, 2008 இல் தொடங்கிய பெரும் பொருளாதார மந்தநிலை, அல்லது மிக சமீபத்திய எபோலா நெருக்கடி போன்ற நாம் அறிந்த வேறெந்த சமீபத்திய உலக பொருளாதார நெருக்கடியை விட மோசமாக இருந்தது. பொருளாதார விலைகொடுப்புக்கள் கடுமையாக இருந்தன, முற்றிலும் கடுமையாக இருந்தன” என்கிறார்.

தடுப்பூசி தேசியவாதம் தொற்றுநோய் நெருக்கடியை மோசமாக்கியுள்ளது. மார்ச் 21 நிலவரப்படி, உலகளவில் 440 மில்லியனுக்கு நெருக்கமான அளவுகளிலான கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு 100 பேருக்கு 5.7 அளவுகள் வீதம் வழங்கப்பட்டதற்கு சமமாகும். இருப்பினும், இந்த உயிர் காக்கும் மருந்துகளின் விநியோகம் சமத்துவமற்றதாகவும், குழப்பம் நிறைந்ததாகவும் உள்ளது.

அமெரிக்காவில் தீவிரமாக தடுப்பூசி விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது, 124.5 மில்லியன் அளவுகள், அல்லது பூகோள அளவிலான ஒட்டுமொத்த தடுப்பூசி விநியோகத்தில் 28 சதவிகிதம் அளவிற்கு அங்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகையில் வெறும் 4.25 சதவிகித மக்களையே அமெரிக்கா கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை அமெரிக்கா அதன் 38 சதவிகித மக்களுக்கு குறைந்தது ஒரு அளவு (dose) தடுப்பூசியை வழங்கியுள்ளது. ஏழுநாள் சராசரி நாளொன்றுக்கு சுமார் 2.6 மில்லியன் ஆகும்.

ஒப்பீடு செய்து பார்த்தால், ஐரோப்பாவை பொறுத்தவரை, தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளை அது எதிர்கொண்டுள்ள, மிக சமீபமாக அஸ்ட்ராசெனேகா (AstraZeneca) கோவிட்-19 தடுப்பூசி பற்றிய கவலைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலைமைகளில், 100 நபர்களில் 13 பேருக்கு மட்டுமே குறைந்தது ஒரு அளவு தடுப்பூசியை அதனால் வழங்க முடிந்துள்ளது.

சமீபத்திய சரிபார்ப்பின் படி, உலகின் பெரும்பாலான பகுதிகள் ஒரு கோவிட்-19 தடுப்பூசியை கூட பெறவில்லை, எல்லா வகையிலும் பார்த்தால் அடுத்த ஆண்டிலும் கூட அது நடக்காது. அதாவது, நியூ யோர்க் டைம்ஸின் கருத்துப்படி, பணக்கார மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் வசிப்பவர்கள் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த தடுப்பூசி விநியோகத்தில் 90 சதவிகிதத்தை பெற்றுள்ளனர்.

குறைந்த வருமான நாடுகள் உலக சுகாதார அமைப்பிடம் இந்த உயிர் காக்கும் தடுப்பு மருந்துகளை பெற்றுக்கொள்ள உதவுமாறும், மற்றும் தங்களது நாடுகளிலேயே தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறனை கட்டமைப்பதற்கான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறும் கோரியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் அத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்துள்ளன.

ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன் “ஐரோப்பியர்களுக்கு இயன்றளவு விரைவில் தடுப்பூசி வழங்கப்படுவதை உறுதிசெய்ய” கோவிட்-19 தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான அவசரகால கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த அவர் தயாராக இருப்பதாக தெரிவித்தார். தேவையான தடுப்பூசி இருப்புக்களை பாதுகாக்க அவசரகால நடவடிக்கைகளை பயன்படுத்த அனுமதிக்கும், விநியோகங்களின் ஒட்டுமொத்த பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும் மற்றும் மிகவும் சமமற்ற வகையில் அவை விநியோகிக்கப்பட வகைசெய்யும், ஐரோப்பிய ஒன்றியத்தின் லிஸ்பன் உடன்படிக்கையின் 122 வது ஷரத்தை பயன்படுத்தப் போவதாக அவர் மிரட்டினார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அமெரிக்க மக்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளார். “அமெரிக்கர்கள் முதலில் கவனிக்கப்படுவதை உறுதிசெய்ய நாம் தொடங்கப் போகிறோம்,” என்று அவர் சமீபத்தில் தெரிவித்தார். மேலும், “என்றாலும், அதன் பின்னர் உலகின் எஞ்சிய பகுதிகளுக்கு தடுப்பூசிகளை வழங்க முயற்சி செய்து உதவவிருக்கிறோம்” என்றும் தெரிவித்தார்.

அவரது அறிக்கையின் இரண்டாம் பகுதி இராஜதந்திர பிதற்றலேயன்றி வேறொன்றுமில்லை. பெயரளவிலான நட்பு மற்றும் எதிரி நாடுகளுக்கு எதிராக அமெரிக்க பெருநிறுவன புவிசார்-அரசியல் மற்றும் இலாப நலன்களை தொடர்ந்து பாதுகாப்பதிலுள்ள அமெரிக்க தடுப்பூசி அறிவுசார் சொத்துக்கள் மற்றும் உற்பத்தி திறன் தொடர்புபட்ட நெருக்கடியை ஒரு உந்துகோலாக அமெரிக்கா பயன்படுத்தும். குறிப்பாக, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அதன் ஆக்கிரோஷமான கொள்கைகளை அமெரிக்கா விடாமல் தொடரவும், மற்றும் பூகோள அளவிலான அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான அதன் முயற்சிகளுக்கு ஐரோப்பிய மற்றும் ஆசிய “நட்பு நாடுகள்” பின்நிற்க கோரவும் இது பயன்படுத்தப்படும்.

தொற்றுநோய் ஆளும் உயரடுக்குகளின் கைகளில் கிடைத்த ஆயுதமாக மாறியுள்ளது. தற்போது பெருந்தொற்றின் மையமாக பிரேசில் உள்ளது. அந்நாட்டின் பாசிச ஜனாதிபதி ஜெய்ர் போல்சொனாரோ, நாடு முழுவதும் கடுமையாக பரவி வரும் கொடிய P.1 வைரஸ் திரிபு வகை பற்றி முக்கியமாக ஒரு ஆய்வக சோதனையை நடத்திக் கொண்டிருக்கிறார், அதேவேளை கோவிட்-19 பற்றி “ஓலமிடுவதை நிறுத்துமாறு” மக்களிடம் கூறுகிறார்.

பிரேசிலில் இதுவரை 12 மில்லியன் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளது, மேலும் இறப்புக்களின் எண்ணிக்கை விரைந்து 300,000 ஐ எட்டிக் கொண்டிருக்கிறது, இதில் கடைசி 100,000 இறப்புக்கள் 2021 தொடக்கத்திலிருந்து நிகழ்ந்துள்ளன. புதிய கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதை கையாள முடியாமல் சுகாதார அமைப்புக்கள் சீர்குலைந்துவிட்டதால், மக்கள் வீட்டிலேயே இறந்து போகும் நிலையில், உத்தியோகபூர்வ நாளாந்த இறப்பு விகிதம் 2,700 க்கு அதிகம் என்பது கூட யதார்த்தத்தில் பரவலாக குறைத்துமதிப்பிடப்படுகிறது. பொது சுகாதார ஆராய்ச்சி நிறுவனமான ஓஸ்வால்டோ குரூஸ் அறக்கட்டளை (ஃபியோகுரூஸ்), “பிரேசிலில் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அவற்றின் திறனைத் தாண்டி செயல்படுகின்ற நிலையில், நாட்டின் சுகாதார சேவைகள் வரலாறு காணாத சிதைவை எதிர்கொண்டுள்ளது,” என்று எச்சரித்துள்ளது.

இந்தியா இரண்டாவது அலையின் ஆரம்பகட்டத்தில் உள்ளது. புதிய, அதிக உக்கிரமான வைரஸ் திரிபு வகைகள் தோன்றியுள்ளதால் நோய்தொற்றுக்கள் பரவுவது விரைந்து தீவிரப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும் 47,000 க்கும் அதிகமான புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பதிவாகியது உட்பட, நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு முன்பிருந்ததைப் போல கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இதனுடன் நாளாந்த இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாட்டின் 36 மாநிலங்களில் 29 இல் செயலிலுள்ள நோய்தொற்றுக்கள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் 400 வைரஸ் திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளன, இவற்றில் 158 வகைகள் கடைசி இரண்டு வாரங்களில் கண்டறியப்பட்டன.

வசந்தகால எழுச்சியுடன், B.1.1.7 திரிபு வகையின் காரணமாக, ஐரோப்பா எங்கிலும் முழு வீச்சில் நோய்தொற்று பரவ ஆரம்பித்த நிலையில், பல நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

பிரெஞ்சு பிரதமர் ஜோன் காஸ்டெக்ஸ், நோய்தொற்றின் கடும் எழுச்சியை எதிர்கொள்ள, பாரிஸ் உட்பட நாட்டின் 16 பிராந்தியங்களைச் சேர்ந்த சுமார் 21 மில்லியன் மக்களை உள்ளடக்கியதான மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கை முழுமுடக்கத்தில் வைத்துள்ளார். கடந்த வாரம், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நவம்பர் மாதத்திற்கு பின்னைய உச்சபட்ச அளவாக 4,200 க்கும் மேலாக அதிகரித்திருந்தது. நாளாந்த கோவிட்-19 நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 35,000 க்கும் மேலாக நிலைத்துள்ளது.

ஜேர்மனியில் நாளாந்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 12,000 க்கும் மேலாக அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், ஏழுநாள் போக்கு சராசரி தீவிரமடைந்துள்ளது, மேலும் இறப்பு எண்ணிக்கை குறைவதும் நின்றுபோனது. சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், “அவசரகால இடைநிறுத்தம்” பயன்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்பதால், பூட்டுதல் நடவடிக்கைகள் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைப்பதற்கு தேவையான தடுப்பூசிகள் ஐரோப்பாவிடம் இல்லை என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை நவம்பருக்குப் பின்னர் தங்களது முன்னைய உச்சபட்சங்களை நெருங்கிய நிலையில், போலந்தும் உக்ரேனும் பூட்டுதல் நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்தியுள்ளன. சுகாதார அமைப்புக்கள் மீண்டும் ஒரு முறை கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

செக் குடியரசில், கோவிட்-19 நோயாளிகள் கைவிடப்பட்ட நிலையில், பல-வகை அழற்சி நோயறிகுறி (MIS-C) பாதிப்புக்குள்ளான ஏராளமான நோயாளிகள் உருவாவதாக பதிவாகி வருகிறது. முறையான சிகிச்சைக்கு வழியில்லாத இந்த நிலை கடுமையான உறுப்பு சேதத்தை எற்படுத்தி, செயலிழக்கவும் செய்யும், மேலும் மரணத்திற்கும் வழிவகுக்கும். மேலும், கட்டுப்பாடுகளை விதிப்பதும் பின்னர் நீக்குவதும் சமூக பதட்டங்களை அதிகரிக்கிறது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆம்ஸ்டர்டாம் உட்பட பல ஐரோப்பிய நகரங்களில் பரவி வருகின்றன.

அமெரிக்கா இன்னும் ஒரு ஆபத்தான நிலையில் உள்ளது, அங்கு நாளாந்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை அண்ணளவாக 55,000 ஆக நிலைப்பெற்றுள்ளது. நாளாந்த இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது, என்றாலும் ஏழுநாள் போக்கு சராசரி தொடர்ந்து 1,000 க்கு அதிகமாக இருந்து வருகிறது. இருப்பினும், பைடென் நிர்வாகம் அதன் தடுப்பூசி பிரச்சாரத்தின் “வெற்றி” பற்றி பெருமைபீற்றிக் கொண்டாலும், நாட்டின் பல பிராந்தியங்கள் நோய்தொற்றுக்களின் புதிய எழுச்சிகளை எதிர்கொள்கின்றன.

நியூயோர்க் மாநிலத்தில் ஏழுநாள் போக்கு சராசரி நாளாந்தம் 7,000 க்கு அதிகமாக இருப்பதுடன், கடந்த ஒரு மாதமாக அப்படியே தொடர்கிறது; நோய்தொற்று பரவுவதற்கான நேர்மறை விகிதம் பல மாதங்களாக 6 சதவிகிதத்திற்கு குறையவில்லை.

நியூ ஜேர்சியில் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை பிப்ரவரி 25 முதல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ரோட் தீவிலும் (Rhode Island) நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை மெதுவாக மேல்நோக்கிச் செல்கிறது, அதேவேளை மாசசூசெட்ஸ் மாநிலம் நாளாந்தம் அண்ணளவாக 1,600 நோய்தொற்றுக்களை எதிர்கொள்கிறது. புளோரிடாவில் நாளாந்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து 5,000 ஆக நிலைத்துள்ளது. இருந்தாலும், மிச்சிகன் கடுமையாக நோய்தொற்றுக்களின் அதிகரிப்பை எதிர்கொண்டுள்ளது.

அமெரிக்கர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் தீவிரம் தொடர்ந்தாலும் கூட, சரியான பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பின்பற்றப்படாவிட்டால், அமெரிக்கா கோவிட்-19 நோய்தொற்றுக்களின் மறுஎழுச்சியை எதிர்கொள்ளக்கூடும் என்று பல சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வார இறுதியில் மியாமி கடற்கரைக்கு விடுமுறைக்கு வருபவர்கள் மற்றும் வசந்தகால இடைவெளியை கொண்டாடுபவர்களின் காட்சிகள், நோய்தொற்றுக்களின் தீவிரமான எழுச்சிக்கு அச்சுறுத்தும் சூழ்நிலையை உருவாக்குவது குறிப்பிடத்தக்க கவலையை எழுப்புகிறது.

Loading