இலங்கையின் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு இந்தியா அதிக சுயாட்சி வழங்குமாறு கோருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பெருகிவரும் பதட்டங்களுக்கு மத்தியில், இலங்கையின் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கே உள்ள மாகாண அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்குமாறு கொழும்பில் உள்ள அரசாங்கத்திற்கு விடுத்துள்ள இந்திய அரசாங்கத்தின் அழைப்பினை தீவில் உள்ள தமிழ் தேசியவாதக் கட்சிகள் ஆதரவளிக்கின்றன.

கோபால் பாக்லி (Credit-Facebook)

இதுதான், இந்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கான இந்தியாவின் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லி, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கிற்கான நான்கு நாள் விஜயத்தின் போதான விடயமாக இருந்தது. பாக்லி தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA), தமிழ் மக்கள் தேசிய கூட்டணி (TPNA) மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF) உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் சந்தித்தார். பாக்லி "சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவத்திற்கான தமிழ் சமூகத்தின் அபிலாஷைகள்" மற்றும் "ஒரு ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு" ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார் என இந்து பத்திரிகையின் அறிக்கை செய்துள்ளது.

இரு அரசாங்கங்களின் "சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கம்" என்ற சமூக படுகொலை கொள்கைகளால், கோவிட்-19 தொற்றுநோய், இந்தியாவையும் இலங்கையையும் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ள நிலையிலும், வடக்கின் மூன்று தீவுகளின் மின்சார திட்டத்தை மையமாக கொண்ட தமிழ் தேசியவாதிகளின் சீன எதிர்ப்பு பிரச்சாரம் சூடுபிடித்திருக்கும் நிலையிலும், இந்தியாவின் இந்து-மேலாதிக்க ஆளும் அரசியல் கூட்டாளியான பாரதிய ஜனதா கட்சியின் பெயரில் இலங்கை பாரதிய ஜனதா கட்சி (SLBJP) நிறுவப்பட்ட சிறிது காலத்திலும் இந்த விஜயம் நிகழ்ந்துள்ளது.

அவர்களின் வெற்று வார்த்தையாடலுகளுக்கு அப்பால், பாக்லியின் விஜயமும் தமிழ் தேசியவாதிகளுடனான சந்திப்புகளின் நோக்கமும் இலங்கையின் தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளையும் அவர்களது அபிலாசைகளையும் பாதுகாப்பதல்ல. மாறாக, தொற்றுநோயுடன் பிணைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய வெடிக்கும் சூழ்நிலைக்கு மத்தியில், 1983-2009 இலங்கையின் இனவாதப் போரில் இந்தியாவின் இரத்தக்களரிமிக்க 1987 இராணுவத் தலையீட்டை வழிநடாத்திய அதே புவிசார் மூலோபாய நலன்களைத் தொடர அவர்கள் ஒன்றிணைந்து வருகின்றனர். இங்கு என்ன கட்டவிழ்ந்து வருகின்றதெனில், தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு முரணான இலாபங்கள் மற்றும் மூலோபாய மேலாண்மைக்கான முதலாளித்துவத்திற்குள்ளான ஒரு கசப்பான போராட்டமாகும்.

தற்போதைய நூற்றாண்டில், வாஷிங்டனுடன் மிக நெருக்கமாக நகர்வதன் மூலம், அடுத்தடுத்து பதவிக்குவந்த இந்திய அரசாங்கங்கள் குறிப்பாக இலங்கை உட்பட இப்பிராந்தியமெங்கும் சீனாவுடனான கடுமையான புவிசார் மூலோபாய போட்டிகளில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. இந்தியப் பெருங்கடலில் முக்கியமான கப்பல் போக்குவரத்து பாதைகளில் இலங்கை அமைந்துள்ளது. சீனாவுடன் "போரிடுவதற்கு" தயாராவதற்கு அமெரிக்க இராணுவ செலவினங்களில் பாரிய அதிகரிப்புகளை அமெரிக்க அதிகாரிகள் கோருகையில், இந்த விஜயத்தின் நோக்கம் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்வதும் போருக்கு தேவையான அரசியல் மற்றும் இராணுவ தயாரிப்புகளை மேற்கொள்வதுமாகும்.

ராம் சேது பாலம் இருந்ததாக கூறப்படும் மன்னார் கடற்கரையில் பெகாலி வழிபாடு செய்கிறார் (Credit-facebook-India in Sri Lanka)

இலங்கை பாரதிய ஜனதா கட்சி ஸ்தாபிக்கப்பட்ட சில வாரங்களிலேயே, இலங்கையில் இந்து மதம் மற்றும் முஸ்லீம்-விரோத வன்முறைமிக்க இந்துமத சக்திகளுக்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவைக் குறிக்கும் ஒரு குறிப்பை பாக்லி தெரிவித்தார். பயணத்தின் முதல்நாளான 11ம் தேதி வியாழக்கிழமை, இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் கூடிவாழும் மன்னார் பகுதிக்கு சென்ற அவர், ராம் சேது பாலம் இருந்ததாக கூறப்படும் பகுதிக்குச் சென்று கடற்கரையில் இந்துமத வழிபாடுகளை மேற்கொண்டார். அங்கு, "இந்திய-இலங்கை உறவுகள் பலப்படுத்தப்படும்" என்று அவர் உறுதியளித்தார். பின்னர் நல்லூரில் உள்ள சைவ சித்தாந்தத்தை வளர்க்கும் மடத்திற்கும் அவர் விஜயம் செய்தார். அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான தனது வெறுக்கத்தக்க பேச்சுக்களுக்காக இழிபெயர்பெற்ற இலங்கை சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் அவரை வரவேற்றார்.

இந்துமத சடங்குகளுக்கு பின்னர், அவர் மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகள், வர்த்தகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் தனித்தனியாக சந்தித்தார்.

சந்திப்பிற்குப் பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் எம். ஏ. சுமந்திரன் பத்திரிகையாளர்களிடம் பின்வருமாறு கூறினார்: “இந்தியாவின் இராஜதந்திர நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என இந்திய உயர் ஸ்தானிகர் விளக்கினார். அவர்களின் அதிகாரப் பகிர்வு கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், இது தொடர்பாக அவர்கள் அழுத்தம் கொடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், இலங்கைக்கு உடனடியாக மாகாணத் தேர்தல்களை நடத்துமாறு இந்தியா மற்றும் தமிழ் தேசியவாத கட்சிகளின் அழைப்பை மீண்டும் தெரிவித்து: “மாகாண சபை மூலம் தேவையான அதிகாரங்களை நாங்கள் பெறவில்லை என்றாலும், ஒரு மாகாண சபை இல்லாததால் தமிழ் சமூகம் அதன் தனித்துவமான இருப்புகளை இழந்து வருகிறது. ... மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் மீண்டும் வலியுறுத்தினோம். உயர் ஸ்தானிகர் அதை ஏற்றுக்கொண்டார்" என்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனான பெகாலியின் சந்திப்பு (Credit- facebook-India in Sri Lanka)

இந்த கருத்துக்கள் இலங்கையிலும் இப்பிராந்தியத்திலும் வெடிக்கும் சர்வதேச வர்க்க மற்றும் புவிசார் மூலோபாய பதட்டங்களை சுட்டிக்காட்டுகின்றன. 2018 ல் தேர்தல் சட்ட சீர்திருத்தம் தொடர்பான சட்ட சிக்கல்களை மேற்கோள் காட்டி இலங்கை அரசு 2019 முதல் பிராந்திய தேர்தல்களை ஒத்திவைத்துள்ளது. இந்த மாதம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அரசாங்கத்தால் அவசர தேர்தலை நடத்த முடியாது என்றும் உயர்நீதிமன்றம் சட்டத்தை முறையாக வடிவமைத்த பின்னரே தேர்தலை நடத்த முடியும் என்றும் கூறினார்.

உடனடியாக தேர்தல்களை நடத்தப் போவதில்லை என்ற கொழும்பின் முடிவோடு பிணைந்திருக்கும் அரசியல் பிரச்சினைகளை அடையாளம் காண்பது கடினம் அல்ல. சீனாவுடனான அதன் பொருளாதார உறவுகளுக்கும் அதன் வரலாற்று கூட்டான வாஷிங்டனுக்கும் இடையில் சமநிலைப்படுத்த முயற்சிக்கையில், வடக்கில் மாகாணத் தேர்தல்கள், தமிழ் தேசியவாதிகளை வலுப்படுத்துவதுடன், இலங்கையில் இந்தியாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் சாத்தியத்தை கொழும்பு ஆட்சி கருத்தில் கொள்ளாமல் இருக்கவில்லை.

தமிழ் தொழிலதிபர் எம்.முத்துசாமி கடந்த மாதம் இலங்கை பாரதிய ஜனதா கட்சியை நிறுவியபோது, முன்னணி தமிழ் தேசிய அரசியல்வாதி கே. சிவாஜிலிங்கம் சீனாவுடனான தனது முக்கிய பொருளாதார உறவுகளை கொழும்பு துண்டிக்க வேண்டும் எனக்கோரி அல்லது அமெரிக்க-இந்திய கூட்டு படையெடுப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என மிரட்டினார். இலங்கையின் வடக்கிலிருந்து சீன நிறுவனங்களை "உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று அழைப்பு விடுத்த சிவாஜிலிங்கம், இல்லையெனில், "பெரிய மோதல் ஏற்படக்கூடும்" என்று எச்சரித்தார். மேலும் இலங்கையில் அமெரிக்க அல்லது இந்திய துருப்புக்கள் வடக்கு மற்றும் கிழக்கில் தரையிறங்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்றார்.

இந்த புவிசார் மூலோபாய நலன்கள், இந்திய மற்றும் இலங்கை தமிழ் முதலாளித்துவ வர்க்கங்கள் அதிகரித்து வரும் வர்க்க பதட்டங்களையும், தமது நாட்டில் வர்க்கப் போராட்டங்களையும் அடக்குவதற்கான முயற்சிகளுடன் நெருக்கமாக பிணைந்துள்ளது. இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வறுமை ஊதியத்திற்கு எதிராக தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டங்களை முன்னெடுத்து வருகையிலும், வடக்கே சுகாதார தொழிலாளர்களின் போராட்டங்களின் மத்தியிலும், இந்தியா வர்க்கப் போராட்டங்களின் வெடிப்பைக் கண்டது. இந்தியா முழுவதும் கிளர்ச்சிமிக்க விவசாயிகளின் போராட்டங்களும் மற்றும் தென் மாநிலமான தமிழ்நாட்டில் பாரிய பொதுத்துறை, வாகனத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களும், மோடி அரசாங்கத்தை அதன் அஸ்திவாரங்கள் வரை அசைத்துள்ளன.

இந்தியாவிலும் இலங்கையிலும் ஆளும் உயரடுக்கின் பரந்த பிரிவுகள் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக முஸ்லிம் விரோத வெறுப்புகளைத் தூண்டுவதை நோக்கித் திரும்பியுள்ளன.

இது இலங்கை தமிழ் தேசியவாதிகளின் நீண்டகால கருப்பொருளாக உள்ளது. 2002 இல் குஜராத்தில் 2,000 அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை மேற்பார்வையிட்ட பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர், விக்னேஸ்வரன் ஒரு "இந்தியாவில் வலுவான அரசாங்கத்தின்" வெற்றியை பாராட்டினார். அவர் ஒரு முஸ்லீம்-விரோத வார்த்தைப் பிரயோகத்தில் இறங்கினார்: “இந்தியாவுக்கு இன்று இருக்கும் சவால்களை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வடமேற்கே பாகிஸ்தான் வடகிழக்கே பங்களாதேஷ் உள்ளன. இரண்டுமே இஸ்லாமிய பெரும்பான்மை அரசுகள். பாகிஸ்தான் அணு ஆயுத பலம் கொண்டது. அத்துடன் இந்தியாவினுள் 20 கோடிக்கும் மேலாக முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். காஷ்மீர் இன்னமும் பிரச்சனை நிலையிலேயே இருக்கின்றது. உள்நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதம் எழுந்தால் நாட்டின் பாதுகாப்பு சவால்களுக்கு உள்ளாகி விடும். எனவே அயல் நாட்டு, உள்நாட்டு இஸ்லாமிய பிரச்சனையை இந்தியா தற்போது எதிர்நோக்கியுள்ளது.” என்றார்.

"இஸ்லாமிய அமைப்புகளின் சவால் இலங்கை வழியாக இந்தியாவுக்கு வரக்கூடும் என்று இந்தியா அஞ்சுகிறது," என்று அவர் மேலும் கூறினார். ஒரு சுயாதீனமான தமிழ் குட்டி அரசு இந்தியாவின் பாதுகாப்புக்கு உதவும் என அவர் நம்புவதாக கூறினார்: “வடகிழக்கு இணைப்பு, தாயகத்தில் சுயாட்சி போன்ற கருத்துக்களை நாம் செம்மையாக எடுத்துரைத்தால் இந்தியா ஒரு முக்கியமான விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டி வரும். எமது பிராந்தியங்களில் எமது சுயாட்சி அரசு அமையும் போது அரபிக்கடலும் வங்கக் கடலும் இந்தியாவின் பாதுகாப்புக்காக கைகோர்க்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு, கடல் ரீதியான ஊடுருவல் அச்சமின்றி பலமுற்று இருக்க நாங்கள் தக்க நடவடிக்கைகள் எடுக்க நேரிடும்” என்றார்.

சமீபத்தில், இந்திய அரசியல்வாதிகள் இதே போன்ற கருத்துக்களை தெரிவித்தனர். மார்ச் 12 இந்திய சமதா கட்சியின் தலைவர் N.A கோன் கருத்து தெரிவிக்கையில், “இப்பொழுது இலங்கைதான் நமக்கு முக்கியம். இலங்கையிலிருந்து அனாவசியமாக ஊடுருவிவிடலாம், நயினாதீவில் இருந்து இராமேஸ்வரத்துக்கு 20 நிமிடங்களில் வந்துவிடலாம். துறைமுகங்கள் [சீனா] அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே இது இந்தியாவுக்கு பெரிய அச்சுறுத்தல்” “சீனாவை இலங்கையில் இருந்து அப்புறப்படுத்தினால் மட்டுமே இந்தியாவுக்கு விடிவு கிடைக்கும்” என இந்திய ஆளும் தட்டுக்களின் கவலைகளை தெளிவுபடுத்தினார்.

தொற்றுநோய் பரவிக்கொண்டிருப்பதன் மத்தியில் இந்த சக்திகளுடனான தமிழ் தேசியவாதிகளின் ஒருங்கிணைப்பு தொழிலாள வர்க்கத்தின் மீதான அவர்களின் விரோதத்தை அம்பலப்படுத்துவதுடன் மற்றும் அனைத்து வகையான தேசியவாதங்களுக்கும் எதிரான இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கை ரீதியான போராட்டங்களை உறுதிப்படுத்தியுள்ளளது.

தமிழ் தேசியவாதிகளின் குற்றவியல் தனமான இன-குறுங்குழுவாத நடவடிக்கைகள், தமிழ் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று நம்புவதற்கு ஒருவர் அரசியல்ரீதியாக குருடராக இருக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி மற்றும் சிவசேனை உடன் கூட்டுவைப்பதன் மூலம், ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதையும் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவதையும் உறுதிப்படுத்த முடியும் என்ற தமிழ் தேசியவாதிகளின் கூற்றுக்கள், முந்தைய தசாப்தங்களில் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை அவர்களே முற்றிலும் நிராகரித்துள்ளதை சமிக்ஞை செய்கிறார்கள்.

சீனாவிற்கு எதிரான ஏகாதிபத்தியப் போரின் அச்சுறுத்தலுக்கு எதிராகவும், கோவிட் -19 பரவலுக்கு மத்தியில் ஆளும் வர்க்கம் ஏற்றுக்கொண்ட “சமூக நோய் எதிர்ப்புசக்தி” கொள்கைகளுக்கு எதிராகவும், இந்து சமுத்திரத்திற்கு இடையில் உள்ள அனைத்து இனங்களின் தொழிலாள வர்க்கத்தையும் சோசலிச சமத்துவக் கட்சியின் சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தில் ஐக்கியப்படுத்துவது அவசியமாக உள்ளது.

Loading