இலங்கையின் வடக்கில் இடைநிறுத்தப்பட்ட நியமனங்களை வழங்கக் கோரி சுகாதாரப்பணி உதவித் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

வட மாகாண சுகாதார அமைச்சினால் 2019 நவம்பர் 18 அன்று தங்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள், உடனடியாக இடை நிறுத்தப்பட்டு, கடந்த 16 மாதங்களுக்கும் மேலாக வேலை கொடுக்காமல் இருப்பதை எதிர்த்து, மார்ச் 1 தொடக்கம் மாகாணத்தின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 400 “சுகாதார பணி உதவியாளர்கள்” போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மார்ச் 7 முதல் இவர்களில் ஏழு ஆண்களும் 5 பெண்களும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அரசாங்கம் தொடர்ச்சியாக அலட்சியம் காட்டி வருவதால் கோபமடைந்த தொழிலாளர்கள், கடந்த திங்கட் கிழமை மட்டும் மதியமும் மாலையும் இரண்டு தடவைகள் இரண்டு மணித்தியாலத்துக்கும் அதிகமாக A-9 வீதியை மறித்து வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு முன்னரும் அவர்கள் பல தடவை வீதியை மறித்து போராடியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் A9 வீதியை மறித்து போராட்டம் செய்யும் சுகாதார பணி உதவியாளர்கள் (Photo: WSWS)

சுகாதார பணி உதவியாளர்கள் கனிஷ்ட தரம் 3 நியமனம் வழங்கப்பட்ட எங்களை பணியை தொடர அனுமதியுங்கள்! என்ற பதாகையின் கீழ், வட மாகாண ஆளுனர் செயலகம் மற்றும் மாவட்டச் செயலகத்துக்கும் முன்னால், கொட்டகை அமைத்து அமர்ந்துள்ள இந்த தொழிலாளர்களில் அநேகமானோர் பெண்களாக இருப்பதோடு சிலர் கைக்குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்குபற்றுகின்றனர்.

அரசாங்கமும் வட மாகாண ஆளுனரும் தொழிலாளர்களை அலட்சியம் செய்துள்ளதையிட்டு விரக்தியடைந்த 30 வயது தொழிலாளி, மார்ச் 15 நடந்த வீதி மறியலின் போது, தனது உடலில் பெற்றோலை ஊற்றிக் கொண்டு, “நான் செத்தால் உங்களுக்கு வேலை தருவார்கள் என்றால் நான் சாகின்றேன்” எனக் கூறி தீக்குளிக்க முற்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் ஆளுனர் அலுவலகம் முன்னால் சத்தியாகிரகம் இருக்கும் சுகாதார பணி உதவியாளர்கள் (Photo: WSWS)

இந்த தொழிலாளர்கள், வடக்கில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தம் தீவிரமாக்கப்பட்ட காலத்திலும், அது 2009 இல் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசங்கத்தால் கொடூரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும், தொண்டர்களாக உதியம் இல்லாமல் அல்லது அற்ப ஊதியத்துடன் சுகாதாரத சேவையில் இணைந்துகொண்டு தசாப்தத்துக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் 2019 செப்டெம்பர் 28, 29ம் திகதிகளில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வுகளின் பிரகாரமே தொழிலாளர்களுக்கு நவம்பர் 18 நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. கோட்டாபய இராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், நவம்பர் 25 தொழிலாளர்கள் வேலையில் இணைந்துகொள்ள சென்ற போதே, அவர்களது நியமனங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

முந்தைய சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் 6 துறைகளில் வழங்கிய நியமனங்களை இராஜபக்ஷ அரசாங்கம் இடை நிறுத்தி இருந்தது. பின்னர் 5 துறைகளுக்கு நியமன அனுமதியை வழங்கியது. எனினும், வட மாகாணத்தில் சுகாதார பணி உதவித் தொழிலாளர்களது நியமனங்கள் வழங்கப்படவில்லை.

கடற்றொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, இந்த விடயங்கள் சம்பந்தமாக அரசாங்கத்துடன் பேசி முடிவெடுக்க வேண்டும் என கூறி தொழிலாளர்களது பிரச்சனைகளில் இருந்து நழுவிக்கொண்டார், என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மார்ச் 17, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் வந்திருந்த தகவலை அறிந்த போராட்டக்காரர்கள் மாவட்ட செயலக வாயிலை முற்றுகையிட்டு கோசங்களை எழுப்பினர்.

கடந்த அரசாங்கம் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராகவே இந்த நியமனங்களை வழங்கியதாக கூறி சமாளித்த அளுத்கமகே, அமைச்சரவையில் பேசி தீர்மானம் எடுத்து உங்களது பிரச்சினையை தீர்ப்பேன், அதுவரையில் போராட்டத்தை கைவிடுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். எனினும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத தொழிலாளர்கள், தற்காலிகமாக உண்ணாவிரதத்தை மட்டும் கைவிட்டுள்ளனர்.

அதற்கு முன்னதாக ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சாவகச்சேரி பிரதேச அமைப்பாளர் என அடையாளப்படுத்திக்கொண்ட ஒருவர், உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடும்படியும் தான் அரசாங்கத்துடன் பேசி வேலை வாங்கித் தருகின்றேன் எனக் கூறியுள்ளார். நீண்ட நேரம் பலவிதமான உறுதிமொழிகளை வழங்கிப் பார்த்தார், ஆனால், நாங்கள் அதற்கு உடன்படாமையினால், உங்களது நியமனங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வெகுவிரைவில் உங்கள் முன் நிறுத்துவேன், என கூறிச்சென்றவர் இன்றுவரை வரவில்லை, என போராட்டக்காரர்கள் கூறினர்.

தன் பங்கிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தொழிலாளர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக வெற்று வாக்குறுதி கொடுக்க பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனை அனுப்பியிருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கொவிட்-19 தொற்று நோயை பற்றிக்கொண்டு அரசாங்கம் முன்னெடுக்கும் தொழில் வெட்டு, சம்பள வெட்டு உட்பட சகல சிக்கன நடவடிக்கைகளுக்கும் மற்றும் ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க முயல்வதையும் மௌனமாக ஆதரிக்கின்றன. அதன் மூலம் தங்களது முதலாளித்துவ வர்க்க ஒத்துழைப்பை வெளிப்படுத்தியுள்ளன.

தமிழ் கட்சிகள் இப்போது தமிழ் முதலாளித்துவத்துக்கு சிறப்புச் சலுகைகளைப் பெறுவதன் பேரில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க உந்துதலில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை பலப்படுத்துவதில் முழு நேரத்தையும் அர்ப்பணித்துக்கொண்டுள்ளன.

நிரந்தர நியமனக் கடிதம் பெற்ற மேற்படி 454 சுகாதார பணியாளர்களில் சிலர், 1998 முதல் சுகாதாரத் தொண்டர்களாக சம்பளம் ஏதுமின்றி கடமையாற்றி வருவதாகவும், பெரும்பாலானோர் 10 வருடங்களுக்கும் அதிகமான காலம் தாம் தொண்டு அடிப்படையில் வைத்தியசாலைகளில் பணியாற்றுவதாகவும் கூறுகின்றனர்.

இராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுக்கும் சிக்கனத் திட்டங்களின் பாகமே சுகாதார பணியாளர்களின் வேலை வெட்டு ஆகும். இந்த சிக்கன வெட்டுக்களுக்கு எதிராக தாதியர்கள், துறைமுக ஊழியர்கள், தோட்டத் தொழிலாளர்கள், புகையிரத ஊழியர்கள் இன்னும் பல தொழிலாளர் பிரிவினர் முன்னெடுக்கும் போராட்டங்களின் பாகமே வடக்கில் சுகாதார பணி உதிவியாளர்களின் போராட்டமாகும்.

கொவிட்-19 தொற்று நோய் தொடர்ந்தும் பரவுகின்ற நிலைமையில், வைத்தியசாலைகளில் முன்நிலை தொழிலாளர்களாக இருந்து உயிராபத்தான நிலைமையில் வேலை செய்யும் தாதிமாரும், சிற்றூழியர்களும் தங்களது எரியும் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு கோருக்கைகளை முன் வைத்து தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

உலக சோசலிசவலைத்தளத்துடன் பேசிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் நியமனம் கொடுக்காமைக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததோடு தங்களது வாழ்க்கை நிலைமைகளையும் தெளிவுபடுத்தினர்.

றொப்பியாஸ் மடுத்தீன்

47 வயதான றொப்பியாஸ் மடுத்தீன், 2010 முதல் தொண்டராக வேலைசெய்து வருவதாக கூறினார். “ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறும் அரசாங்கம் எங்களது நியமனத்தை இடைநிறுத்தியுள்ளது. எமது குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையிலும் நாங்கள் தொண்டராக பல வருடங்களாக சேவையாற்றியுள்ளோம். எனவே எமக்கு வழங்கப்பட்ட நியமனத்திற்கு ஏற்ப எம்மை பணிசெய்ய அனுமதிப்பதற்கான ஒழுங்கை இந்த அரசாங்கம் செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தை கிருஷ்ணகுமார் 8 வருடங்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றியுள்ளார். 4 வருடங்கள் சம்பளம் இல்லாமலும் 4 வருடங்கள் நாளொன்றிற்கு 350 ரூபா அற்ப ஊதியத்திற்கும் அவர் சேவையாற்றியுள்ளார்.

கிருஷ்ணகுமார் விளக்கியதாவது: “சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தொண்டர்களாக கணிசமான பெண்களும் ஒருசில ஆண்களும் இருந்தனர். பிணவறைகளில் வேலை செய்வதற்கும் இதர வேலைகளுக்கும் ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தமையால், சுகாதாரத் தொண்டர்களாக வடமாகாண சுகாதார அமைச்சினால் 820 பேர் உள்வாங்கப்பட்டோம். அவர்களில் இருந்து நேர்முகத்தேர்வின் மூலம், 30 சதவீதம் ஆண்களும் 60 சதவீதம் பெண்களும் 10 சதவீதம் பெண் தலமைத்துவ குடும்பங்களுமாக தேர்வு செய்தார்கள்.

“எமக்கு அரசாங்கம் நியமனங்களை வழங்கும் என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் அன்றாடம் சாப்பாட்டுக்கே திண்டாடிக்கொண்டு சேவை அடிப்படையில், குறைந்த சம்பளத்திற்கும் சம்பளம் இல்லாமலும் பணிபுரிந்தோம். ஆனால், அரசாங்கம் இப்போது எம்மை பட்டினிச்சாவிற்குள் தள்ளியுள்ளது.”

45 வயதான கு. தாயபரன், “நாங்கள் மழை வெயில் பாராது யுத்தம் இடம்பெற்ற சூழ்நிலைகளிலும் எமது உயிரை பணயமாக வைத்து மக்களுக்கு சேவையாற்றினோம், ஆனால் அதற்கு பரிசாக அரசாங்கம் எமக்கு எமாற்றத்தையே தந்துள்ளது,” எனத் தெரிவித்தார். “இந்த வேலை கிடைத்தால் நாங்கள் இவ்வளவு நாளும் பட்ட சிரமங்களுக்கு விடிவு கிடைக்கும் என நினைத்திருந்தோம். 5 பேர் கொண்ட எனது குடும்பம் வறுமைக்குள் சிக்கியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு எங்களின் உயிர் வாழ்வை கேள்விக் குறியாக்கியுள்ளது. அரசாங்கம்தான் இதற்கு முழுப்பொறுப்பு,” என அவர் மேலும் கூறினார்.

தர்மினி குணசேகரம் (Photo: WSWS)

தர்மினி குணசேகரம் 1998 ஆம் ஆண்டில் சேவையில் இணைந்துகொண்டுள்ளார். “ஆரம்பத்தில் எனக்கு ஒரு மாதத்துக்கு ரூபா 3,000 பெறுமதியான அரிசி, கோதுமை மா போன்ற உணவுப் பொருட்களையே கொடுத்தார்கள். பின்னர் கிராமிய சுகாதார தொண்டராக (RHV) சேவை செய்தேன். அதற்கு சம்பளமாக மாதம் 3,000 முதல் 6,000 ரூபா வரை கொடுத்தார்கள். அதுவும் ஒரு சிலருக்கு தான் கொடுத்தார்கள். ஐந்து வருடம் இந்த வேலையை செய்த பின்னர், 2012 இல் இருந்து இன்றுவரை மீண்டும் எந்த ஊதியமும் இல்லாமல் தொண்டராக பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன்,” என அவர் விளக்கினார்.

மேலும் பேசிய அவர் கூறியதாவது: “எனக்கு இதற்கு முன்னர் 3, 4 தடவைகள் நியமனம் எடுக்க அழைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டேன். இம்முறையே நியமனக் கடிதம் கைக்கு கிடைத்தது. அதுவும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தொடர்புடைய அதிகாரிகளிடம் கேட்டபோது, உங்களுக்கு நியமனத்தை வழங்குவதற்கான அதிகாரம் வட மாகாண ஆளுனரிடம் தான் உள்ளது என்றார்கள். ஆளுனரோ எம்மை சந்திக்கவும் மறுத்துவிட்டார். கடந்த இரண்டு தசாப்த காலத்திற்கும் அதிகமாக சேவை செய்த எமக்கான நீதி வழங்கப்பட்டே ஆகவேண்டும்.”

Loading