ரஷ்யாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வருவதற்கு மத்தியில் நேட்டோவுடனான கூட்டு இராணுவ பயிற்சிகளுக்கு உக்ரேன் அறிவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனின் தரைப்படையான செயல்பாட்டு கட்டளை கிழக்கு (Operational Command East) உக்ரேனின் ஆயுதப்படைகளுடன் (Armed Forces of Ukraine-AFU) சேர்ந்து, இந்த ஆண்டு பிற்பகுதியில் நேட்டோ படைகளுடன் “Exercise Cossack Mace” என்ற கூட்டு இராணுவ பயிற்சியை நடத்தவிருப்பதாக சனிக்கிழமையன்று ஆத்திரமூட்டும் வகையில் அறிவித்துள்ளது. நாட்டின் கிழக்கு டொன்பாஸ் பிராந்தியத்தில் உக்ரேனிய படைகளுக்கும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையேயான வன்முறை மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

பயிற்சியின் போதான உக்ரேனிய ஆயுதப்படைகளின் SSO ஆயுதக்குழுவினர் [Credit: Wikipedia/ArmyInform]

உக்ரேனிய-நேட்டோ கூட்டுப் பயிற்சிகள், “தற்காப்பு” நடவடிக்கைகள் தான் என்று தெளிவுபடுத்தும் அறிக்கைகளுடன் பெரும்பாலும் அறிவிக்கப்படுகின்றன என்றாலும், AFU இன் அறிக்கை வேறுபட்டதாக உள்ளது, அது பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள டொன்பாஸூக்கு எதிராக மட்டுமல்ல, ரஷ்ய படைகளுக்கு எதிரான தாக்குதலாகவும் இருக்கும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

“குறிப்பாக, தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், அதன் பின்னர் விரோதமான அண்டை நாடுகளில் ஒன்றின் ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ள ஒரு நாட்டின் எல்லையையும் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மீட்டெடுக்க ஒரு தாக்குதல் நடத்தப்படும்,” என்று தெளிவாக ரஷ்யாவை குறிப்பிடும் வகையில் அறிக்கை உள்ளது.

நேட்டோவின் 72 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் #WeAreNATO என்ற ஹேஸ்டேக்குடன், உக்ரேனிய ஆயுதப்படைகளின் பொதுப் பணியாளர்கள் குழு சனிக்கிழமை அன்று அதன் முகநூல் பக்கத்தில் அச்சுறுத்தும் வகையில் ஒரு காணொளியை பதிவிட்டதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளிவந்தது.

ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக, கிழக்கு உக்ரேனில் அரசாங்கப் படையினருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையில் நடந்து வரும் உள்நாட்டு போரில் உக்ரேன் மூழ்கியுள்ளது, இது அநேகமாக 14,000 பேர்களின் உயிரைப் பறித்துவிட்டது, 1.4 மில்லியன் பேரை இடம்பெயரச் செய்தது, மற்றும் 3.5 மில்லியன் பேரை மனிதாபிமான உதவியை நாடும் நிலைக்குத் தள்ளியுள்ளது. ஆறு ஆண்டுகளில் பெரும்பகுதியில், முழுமையான போர் வெடிப்பது தவிர்க்கப்பட்டாலும், ஒருவருக்கொருவர் விடாப்பிடியாக துப்பாக்கிச் சூடு வரை நடத்திக் கொள்ளும் ஒப்பீட்டளவில் போருக்கு குறைந்த மட்டத்திலான மோதலாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உக்ரேனிய அரசாங்கத்தின் சமீபத்திய அறிக்கைகளும் நடவடிக்கைகளும், இதுபோன்றதொரு சூழ்நிலைக்கு தற்போது திட்டமிடுவதையும், அதற்கு நேட்டோ ஆதரவை எதிர்நோக்கியிருப்பதையும் காட்டுகின்றன.

அமெரிக்காவும் மற்றும் ஏனைய பதினோரு ஐரோப்பிய நாடுகளும் இணைந்து எண்ணிக்கையளவில் உயர்ந்ததான சோவியத் ஒன்றியத்தின் இராணுவத்திற்கு எதிராக போரை நடத்த 1949 ஆம் ஆண்டில் நேட்டோ என்ற இராணுவக் கூட்டணியை ஸ்தாபித்தன. 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட போதிலும், இந்த கூட்டணி தற்போது முதலாளித்துவ ரஷ்யாவை எதிர்ப்பதை நோக்கமாக கொண்டு மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவியாக தொடர்ந்து இருந்து வருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்து கொண்டு, சோவியத் ஒன்றியத்தை கலைத்து முதலாளித்துவத்தை முழுமையாக மீட்டெடுக்க ஸ்ராலினிச அதிகாரத்துவம் தயாராகிக் கொண்டிருந்த அதேவேளை, சோவியத்துக்கு பின்னைய உலகில் நேட்டோ தனது எல்லைகளை விரிவுபடுத்தாது என்று சோவியத் ஜனாதிபதி மிக்கைல் கோர்ப்பச்சேவுக்கு (Mikhail Gorbachev) உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆயினும் கூட, துல்லியமாக அதைச் செய்துள்ளது, அதாவது எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1999 இல் போலந்து, ஹங்கேரி மற்றும் செக் குடியரசை நேட்டோ சேர்த்துக் கொண்டது. மேலும், நேட்டோ கிழக்கு நோக்கியும் விரிவடைந்து வருகிறது, மிக சமீபத்தில், யூகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக இருந்த மாண்டினீக்ரோவையும் வடக்கு மாசிடோனியாவையும் சேர்த்துக் கொண்டுள்ளது.

பெட்ரோ பொரொஷென்கோவின் (Petro Poroshenko) வலதுசாரி ரஷ்ய எதிர்ப்பு அரசாங்கத்தை ஸ்தாபித்த அமெரிக்க ஆதரவு ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு முன்னர், நேட்டோவை பொறுத்த வரை ஒரு அணிசேரா நிலையை உக்ரேன் பராமரித்து வந்தது. 2014 ஆம் ஆண்டு முதல், இது நேட்டோவுடன் ஒருங்கிணைந்து செல்லும் போக்கைத் தொடங்கியது. பிப்ரவரி 2019 இல், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டிலும் சேரவும், மேலும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நேட்டோவின் மேம்பட்ட வாய்ப்புக்களுக்கான கூட்டாண்மைத் திட்டத்தில் (NATO’s Enhanced Opportunities Partnership program) உறுப்பினராகவும் அதன் உறுதிப்பாட்டைத் தெரிவித்து, உக்ரேனிய அரசாங்கம் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியது.

தற்போதைய உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமைர் செலென்ஸ்கி 2019 இல் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது நேட்டோ பற்றிய தனது நிலைப்பாட்டில் தெளிவற்றவராக இருந்தார், அப்போது மேற்கத்திய இராணுவ கூட்டணி பற்றி எதுவும் சொல்லாமல் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்திற்கு தனது ஆதரவை அறிவித்தார், என்றாலும் இப்போது தனது நாட்டை நேட்டோவில் முழுமையாக சேர்க்க தொடர்ந்து கெஞ்சுகிறார். 2020 ஆம் ஆண்டில், உக்ரேனுக்கு நேட்டோவில் மேம்பட்ட அந்தஸ்து வழங்கப்பட்டது, இது “கணினி அமைப்புகள் அல்லது மென்பொருள் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் மற்றும் பயன்படுத்தும் திறனுக்கான திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை அணுகுவதற்கும், மற்றும் அதிக தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கும்” உக்ரேனை அனுமதித்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் HBO வுடன் பேசுகையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனுடன் பேசும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டால் அவரிடம் இவர் என்ன பேசுவார் என்று கேட்கப்பட்டபோது, செலென்ஸ்கி உடனடியாக, “என்னிடம் மிக எளிதான ஒரு கேள்வி உள்ளது: திரு ஜனாதிபதி, நாம் ஏன் தொடர்ந்து நேட்டோவில் இல்லை?” என்பது தான் என்றார்.

ஞாயிற்றுக்கிழமை, நேட்டோவின் ஆண்டுவிழா குறித்து செலென்ஸ்கி அதனை வாழ்த்தி இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்: “வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்தத்தின் ஆண்டுவிழா குறித்து நேட்டோ பங்காளிகளுக்கு வாழ்த்துக்கள்! யூரோ-அட்லாண்டிக் பாதுகாப்பை வலுப்படுத்த நமது நடைமுறை ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை எதிர்நோக்குங்கள். உக்ரேனுக்கு இடமளிப்பதில் நட்பு நாடுகளின் ஆதரவை நம்புங்கள். உக்ரேனின் இராணுவம் வலுவானது மேலும் தேவையான சீர்திருத்தங்களையும் அது தொடர்கிறது.”

ரஷ்யா, உக்ரேன் மற்றும் ஐரோப்பாவிலுள்ள பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு (Organization for Security and Co-operation in Europe-OSCE) ஆகியவற்றுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் தொடர்புபட்ட பேச்சுவார்த்தை, 2021 ஆம் ஆண்டு முழுவதுமாக இரு தரப்புக்கும் இடையே அதிகரித்து வரும் தாக்குதல்கள் மற்றும் கொலைகளால் வீழ்ச்சி கண்டது.

அதே சமயம், ரஷ்ய சார்பு எதிர்க்கட்சித் தலைவர்களை தடைசெய்வதன் மூலம், ரஷ்ய சார்பு ஊடகங்களை மூடுவதன் மூலம், நாட்டில் ரஷ்ய மொழி பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சர்ச்சைக்குரிய மொழிச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், செலென்ஸ்கி நிர்வாகம் படிப்படியாக ரஷ்ய எதிர்ப்பு வெறித்தனத்தை அதிகரித்துள்ளது. மிக சமீபத்தில், உக்ரேனிய அரசாங்கம், போருக்காக நாட்டை முழுமையாக அணிதிரட்டுவதற்கும், கிரிமியாவை மீண்டும் கைப்பற்றுவதற்கும் நோக்கம் கொண்ட ஒரு மூலோபாயத்தை அறிவித்துள்ளது.

சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச அழிவிலிருந்து தோன்றிய மாஸ்கோவின் தன்னலக்குழு முதலாளித்துவ அரசாங்கம் தனது பங்கிற்கு, மேற்கத்திய ஏகாதிபத்தியத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்ய தொடர்ந்து முயன்று வருகிறது. கடந்த வாரம் புட்டின், கியேவ் அல்லது வாஷிங்டன் டிசி பற்றி எந்தவித ஈடுபாடும் காட்டாமல், பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் நாடுகளின் தலைவர்களுடன் வெளிப்படையாக பேசுவார்த்தை நடத்தினார்.

இருப்பினும், நேட்டோ அங்கத்துவ நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி உடனான ஒப்பந்தத்தை சுருக்கிக் கொண்டு, புட்டின் அரசாங்கம் தற்போது போர்முரசு கொட்டுவதற்கும், சாத்தியமுள்ள போருக்கும் தயாராகி வருகிறது. எல்லை தாண்டிய உக்ரேனிய படைகளுக்கு இடையில் தற்செயலாக விரோதப்போக்கு வெடிக்கும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில், உக்ரேனிய எல்லைகளை நோக்கி டாங்கிகள் நகர்வதை இந்த வாரம் இறுதியில் வெளியான காணொளிகள் காட்டுகின்றன.

“சூழ்நிலையை அதிலும் குறிப்பாக ரஷ்ய துருப்புக்களின் நகர்வுகளை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம், மேலும் கட்டுப்பாட்டைக் காட்டவும், பத்தட்டங்களை உடனடியாகத் தணிக்கும் வகையில் செயல்படவும் அனைத்து தரப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்,” என்று குறிப்பிட்டு, சனிக்கிழமை இரவு பேர்லினும் பாரிஸூம் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன. சனிக்கிழமை மேலும் முனீச் பாதுகாப்பு மாநாட்டின் துணைத் தலைவர் போரிஸ் ரூஜ் (Boris Ruge), ரஷ்யா பதட்டத்தை அதிகரிக்குமானால், “அதற்கான விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அறிவித்ததுடன், ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு விநியோகம் செய்ய பயன்படவுள்ள Nord Stream 2 குழாய்வழி திட்டத்திற்கு அது “விளைவுகளை” ஏற்படுத்தும் என்றும் மறைமுகமாக குறிப்பிடுகிறார்.

இதற்கிடையில், கியேவில் உள்ள தனது இராணுவ பாதுகாப்பை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது, அத்துடன், அமெரிக்க தரப்பிலிருந்து எடுக்கப்பட்ட முன்முயற்சியாக ஏப்ரல் 1 தொலைபேசி அழைப்பின் போது போர் ஏற்பட்டால் உக்ரேனை வாஷிங்டன் கைவிடாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஆஸ்டின் தனது உக்ரேனிய சகாவான பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி தரனுக்கு உறுதியளித்தார். மேலும், ஏப்ரல் 2 ஆம் தேதி நடந்த ஒரு கூட்டத்தில், ஜோ பைடென், ரஷ்யாவுக்கு எதிராக “உறுதியான ஆதரவை” வழங்குவதாக செலென்ஸ்கிக்கு உறுதியளித்தார்.

கிழக்கு உக்ரேனில் அதிகரித்து வரும் போர் அபாயம் குறித்து மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்கள் சிறிதும் கவனம் செலுத்தவில்லை. இது தொடர்பான சில அறிக்கைகள், “ஆக்கிரமிப்பு” குறித்து ரஷ்யா மீது உலகளவில் குற்றம்சாட்டப்படுகிறது என்று குறிப்பிட்டு யதார்த்தத்தை அதன் தலையில் வைக்கிறது.

அதே நேரத்தில், இந்த நெருக்கடி பைடென் நிர்வாகத்திற்கான ஒரு “பரிசோதனை” என்று அதிகரித்தளவில் விவரிக்கப்படுகிறது, இது சீனா மற்றும் ரஷ்யா இரு நாடுகளுக்கும் எதிராக மிகவும் ஆக்கிரோஷமான போக்கை தொடரும் என்று அதன் தொடக்கத்திலிருந்து சமிக்ஞை செய்துள்ளது. வெளியுறவுக் கொள்கை சஞ்சிகையுடன் பேசுகையில், ஐரோப்பா மற்றும் நேட்டோவுக்கான முன்னாள் அமெரிக்க துணை உதவிச் செயலாளர் ஜிம் டவுண்சென்ட் (Jim Townsend), அதிகரித்து வரும் பதட்டங்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனுக்கும் இடையிலான வெறும் விளையாட்டுத்தனம் என்று கூறி அவற்றை நிராகரித்தார்.

“அமெரிக்கா என்ன செய்யப் போகிறது, நேட்டோ என்ன செய்யும், உக்ரேனியர்கள் என்ன செய்வார்கள், என்றெல்லாம் அவர்கள் ஆய்வு செய்கிறார்கள். இது ஒரு மோசமான நிர்வாகமா, அல்லது எதையும் தீர்மானித்து செயல்படவுள்ள ஒரு நிர்வாகமா? புதிய நிர்வாகங்களை மதிப்பிடுவதற்கு இந்த எல்லாவற்றையும் அவர்கள் செய்கிறார்கள்.”

முன்னாள் போலந்து வெளியுறவு அமைச்சர் ஒருவரை திருமணம் செய்த வலதுசாரி ஊடக பண்டிதரான அன்னே ஆப்பிள்பாம் (Anne Applebaum), “பைடென் நிர்வாகம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டிய இரண்டு நெருக்கடிகளில்” ஒன்றான “தைவான் மீது சீன படையெடுக்கும்” சாத்தியம் இருப்பதுடன் சேர்த்து உக்ரேனின் நிலைமையையும் விவரித்தார்.

ஆளும் வர்க்கத்தின் போரை நாடும் மற்றும் தேசியவாத வெறிக்கு எதிராக தொழிலாள வர்க்கம் சோசலிச சர்வதேசியவாதத்தின் ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டும். உலகப் போராக மாறுவதற்கு சாத்தியமுள்ள ஒரு போர் வெடிப்பதை தடுக்கவும், மில்லியன் கணக்கில் உயிர்கள் பலியிடப்படுவதையும் மற்றும் மில்லியன்களுக்கு அதிகமானவர்களின் வாழ்க்கை அழிக்கப்படுவதையும் முடிவுக்கு கொண்டு வரவும், உக்ரேன், ரஷ்யா மற்றும் சர்வதேச அளவிலான தொழிலாளர்கள், ஒரு சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்தை நிர்மாணிப்பதற்காக, சுயாதீன அடிப்படையில் போராட வேண்டும்.

Loading