பைடெனின் உள்கட்டமைப்பு திட்டத்தை விற்பனை செய்தல்: அடையாள அரசியல் மற்றும் சீன எதிர்ப்பு தேசியவாதம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பைடென் நிர்வாகம் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட உள்கட்டமைப்பு திட்டத்திற்கு ஆதரவைக் கோருவதற்கான ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இது சாலைகள் மற்றும் பாலங்கள் முதல் கிராமப்புற அகலக்கற்றை வரையிலான பலவிதமான உள்நாட்டு மற்றும் சமூக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் மற்றும் குழந்தை பராமரிப்பு, முதியவர்கள் பராமரிப்பிற்கான அதிகரிக்கப்பட்ட செலவினமாக 2.25 டிரில்லியன் டாலர்களை வழங்கும்.

பிட்ஸ்பேர்க்கில் உள்ள மரத்தொழிலாளர் பிட்ஸ்பேர்க் பயிற்சி மையத்தில் உள்கட்டமைப்பு செலவுகள் குறித்து ஜனாதிபதி ஜோ பைடென் உரை நிகழ்த்துகின்றார்.March 31, 2021 (AP Photo/Evan Vucci, File)

கடந்த வாரம் தனது முதல் முறையான அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர், அமெரிக்க வேலைகள் திட்டம் என்று அழைக்கப்படுவதற்கு, பொதுத் திட்டத்தை உருவாக்க ஐந்து அமைச்சரவை உறுப்பினர்களைக் கேட்டுள்ளதாக பைடென் அறிவித்தார். அதில், போக்குவரத்து செயலாளர் பீட் பட்டிகீக், எரிசக்தி செயலாளர் ஜெனிபர் கிரான்ஹோம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு செயலாளர் மார்சியா எல். புட்ஜ், தொழிலாளர் செயலாளர் மார்ட்டின் வால்ஷ் மற்றும் வர்த்தக செயலாளர் ஜினா ரைமொண்டோ ஆகியோர் அடங்குவர்.

இந்த ஐந்து பேரில் மூன்று பெண்கள் அடங்குவர். அவர்களில் ஒருவர் ஆபிரிக்க அமெரிக்கர், ஒரு ஓரின சேர்க்கையாளர் மற்றும் ஒருவர் முன்னாள் தொழிற்சங்க அதிகாரத்துவவாதி. இதனால் ஜனநாயகக் கட்சியின் அடையாள அரசியல் உள்ளடக்கம் எடுத்துக்கட்டப்படுகின்றது. அடையாள அரசியல் என்பது சமூகத்தின் முதல் 10 சதவிகிதத்தினருக்குள் செல்வத்தை "நியாயமாக" விநியோகிக்க விரும்பும் உயர் நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளின் நலன்களை ஊக்குவிப்பதன் மூலம் வோல் ஸ்ட்ரீட் நிதி பிரபுத்துவத்திற்கு ஜனநாயகக்கட்சி வாதிகளின் விசுவாசத்தை மூடிமறைக்க முயல்கிறது.

இந்த ஐந்து பேரும் எழுந்தமான முறையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் பைடென் அமைச்சரவையின் எந்தவொரு ஐந்து உறுப்பினர்களும் "பன்முகத்தன்மையின்" ஒரு ஒரேமாதிரியான எடுத்துக்காட்டாக சேவை செய்திருப்பார்கள். முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் ஊடக வர்ணனைகள் பைடெனின் (24 வேட்பாளர்களில் 23 பேர் செனட் ஒப்புதல் பெறும் வரை தாமதமாகினர்) 23 பேரில் ஆறு பேர் மட்டுமே வெள்ளை மனிதர்கள் என்று குறிப்பிட்டன. அதே நேரத்தில் ட்ரம்பின் அமைச்சரவையில் இதேபோன்ற நிலையில், 23 பேரில் 18 பேர் அந்த வகையினராக இருந்தனர்.

இந்த வர்ணனைகள் பைடென் நிர்வாகத்தால் பின்பற்றப்படும் கொள்கைகளின் உள்ளடக்கத்தை முற்றிலும் புறக்கணிக்கின்றன. கோவிட்-19 இலிருந்து உடல்நலம் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் மற்றும் பெற்றோர்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையில், பைடென் நிர்வாகம் ட்ரம்ப் நிர்வாகத்தைப் போலவே தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு மூர்க்கமாக எதிராக நிற்கின்றது.

சீனாவையும் ரஷ்யாவையும் நேரடியாக எதிர்கொள்வதை அடிப்படையாகக் கொண்ட அதன் வெளியுறவுக் கொள்கையில், பைடென் நிர்வாகம், இது நேரடியாக ஆத்திரமூட்டும் மொழியைக் காட்டிலும் மயக்கமான வார்த்தைகளுடன் தொடர்ந்தாலும் கூட, ட்ரம்ப் நிர்வாகத்தை விட இன்னும் தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் ஆக்கிரோஷமாகவும் உள்ளது. லிண்டன் ஜோன்சன் பெரும் சமூகம் (Great Society) அல்லது ரூஸ்வெல்ட்டின் புதிய உடன்படிக்கை (New Deal) போன்றவற்றிலிருந்து முற்போக்கான, சமூக சீர்திருத்த அரசியலுக்கான மிகப் பெரிய படியாக இதனை பேர்னி சாண்டர்ஸ் போன்ற வக்காலத்துவாங்குபவர்கள் முன்வைத்த போதிலும், உள்கட்டமைப்புத் திட்டம் முழுக்க முழுக்க பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்தின் அடிப்படை வலதுசாரிக் கொள்கைகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

பைடெனின் திட்டத்திற்கான ஆதரவாளர்களாக ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சிகளில் அவர்கள் முதன்முதலில் தோன்றியதில், போக்குவரத்துச் செயலாளர் பட்டிகீக் மற்றும் எரிசக்தி செயலாளர் கிரான்ஹோம் இருவரும் உள்கட்டமைப்பிற்கான செலவினங்களை சீனா ஒரு உலக சக்தியாக எழுவதற்கு எதிரான அமெரிக்காவின் பிரதிபலிப்பின் ஒரு முக்கிய பகுதியாக முன்வைக்க முயன்றனர்.

NBC யின் “Meet the Press” நிகழ்ச்சியில் பேசிய பட்டிகீக் பின்வருமாறு அறிவித்தார், “அமெரிக்க வேலைவாய்ப்பு திட்டம் குறுகிய கால உத்வேகத்தைப் பற்றியது அல்ல. அடுத்த தசாப்தத்திற்கும், அடுத்த தலைமுறையினருக்கும் போட்டியிட அமெரிக்கா தயாராக இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்துவது பற்றியதாகும். சீனாவும் எங்கள் பிற மூலோபாய போட்டியாளர்களும் ஏற்கனவே பெரிய முதலீடுகளைச் செய்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். இது அமெரிக்கா மீண்டும் வழிநடத்த வேண்டிய நேரம்” என்றார்.

NBCயிடம் சம்பளம் பெறும் வர்ணனையாளர்களில் ஒருவரான, முன்னாள் சிகாகோ மேயர் ரஹ்ம் இமானுவல் பைடென் அரசியல் மூலோபாயத்தை பின்வருமாறு சுருக்கமாகக் கூறினார்: “உள்கட்டமைப்பு திட்டத்திற்கு, நீங்கள் இல்லை என வாக்களித்தால், நீங்கள் சீனாவுடன் இருக்கிறீர்கள். நீங்கள் ஆம் என்று வாக்களித்தால், நீங்கள் அமெரிக்காவுடன் இருக்கிறீர்கள்”. “அவர்கள் சரியான எதிரிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்” என மேலும் கூறினார். CNN இன் "State of the Union" நிகழ்ச்சியில் பேசிய மிச்சிகனின் முன்னாள் ஆளுனரான எரிசக்தி செயலாளர் கிரான்ஹோம், திட்டத்தின் பொருளாதார தேசியவாதத்தை இன்னும் விரிவாகக் கூறினார்.

"நான் இதை ஒரு உற்பத்திசெய்யும் மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்து பார்க்கிறேன் ... இப்போது பல தசாப்தங்களாக, எங்கள் உற்பத்தி வேலைகள் வெளியேறுவதை நாங்கள் கவனித்திருக்கிறோம். நாங்கள் 70 ஆண்டுகளை விட மிகக் குறைந்த மட்டத்தில் இருக்கிறோம். இந்த மசோதா நாங்கள் அமெரிக்காவில் பொருட்களை உருவாக்கப் போகிறோம் என்று கூறுகிறது. நாங்கள் எங்கள் சொந்த எரிசக்தி பாதுகாப்பிற்கான வழிகளை உருவாக்கப் போகிறோம். அதாவது, இது ஒரு ஆச்சரியமான கூற்று, இறுதியாக, மற்ற நாடுகள் அனைத்தும் எங்களை ஓரங்கட்டுவதை பார்ப்பதற்குப் பதிலாக நாங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்யப் போகிறோம்”.

அவர் தொடர்ந்தார், “அந்த முதலீட்டின் ஒரு பகுதி, எங்கள் பொருளாதார போட்டியாளர்களிடமிருந்து அந்த மின்கலங்களை (batteries) பெறுவதற்குப் பதிலாக, மின்சாரம் மற்றும் எரிசக்தி சேமிப்பிற்காக அமெரிக்காவில் மின்கலங்களை உருவாக்க முடியும் என்பதை உறுதிசெய்கிறது. சீனா அவர்களின் மிக சமீபத்திய ஐந்தாண்டு திட்டத்தை முன்கொண்டு வந்தது. மின்கலங்களுக்கான விநியோகச் சங்கிலியில் சந்தையை ஆதிக்கம்செலுத்த அவர்களுக்கு ஒரு திட்டம் உள்ளது ... நாங்கள் அங்கே உட்கார்ந்து நடப்பதைக் பார்க்கலாம் அல்லது நாங்கள் முடிவு செய்யலாம். இல்லை, அந்த பொருட்களை இங்கே உருவாக்க விரும்புகிறோம்."

பைடெனின் உள்கட்டமைப்பு திட்டத்தின் சீன எதிர்ப்பு உந்துதல் Newsweek இதழில் வெளியிடப்பட்ட ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ ஜெனரல் ஜோன் ஆடம்ஸின் கருத்து பத்தியில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. கிரான்ஹோம் எதிரொலித்த வார்த்தைகளில், எஃகு, அலுமினியம் மற்றும் மைக்ரோசிப்களில் அமெரிக்க தகமையை மீண்டும் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தையும், இந்த மூன்றின் பிரதான வினியோகத்தராக சீனாவை நம்பியிருக்கும் ஆபத்தையும் ஆடம்ஸ் மேற்கோள் காட்டினார்.

"அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு அவசியமான மூலப்பொருட்கள் மற்றும் முக்கியமான பாகங்களுக்கு புவிசார் அரசியல் போட்டியாளர்களை நாங்கள் நம்ப முடியாது" என்று அவர் எழுதினார். “கோவிட்-19 எங்களுக்கு எதையும் கற்பித்திருந்தால், மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் எஃகு மற்றும் அலுமினியம் போன்ற முக்கியமான உலோகங்கள் போன்ற முக்கியமான விநியோகச் சங்கிலிகளின் மீது அமெரிக்கா கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். வாகனங்கள் முதல் அரைக்கடத்திகள் வரை பரந்த அளவிலான பொருட்களின் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை கோவிட் பாதித்துள்ளது. அத்துடன் உலகளாவிய போக்குவரத்து வலையமைப்புகளுக்கு இடையூறாக இருந்தது.

ஐரோப்பிய நாடுகள் பிற நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதியை அனுமதிக்க மறுத்து வருவதால், கோவிட் தடுப்பூசி விநியோகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களைக் கவனியுங்கள். இதேபோன்ற சூழ்நிலையை கற்பனை செய்வது பார்ப்பது நல்லதல்ல; ஒரு நெருக்கடியின் போது அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்தோ அல்லது மத்திய கிழக்கிலிருந்தோ அதிக தூய அலுமினியத்தைப் பெறவேண்டி இருந்தால், அவை எங்களுக்கு பொருட்களை மறுக்கலாம்? அலுமினியத்திற்காக அமெரிக்கா ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சார்ந்து இருந்தால் நமது தேசிய பாதுகாப்பு மற்றும் செழிப்பு பாதிக்கப்படும்.”

குறிப்பிடத்தக்க வகையில், சீன அச்சுறுத்தலை காட்டும் போது, பைடென் நிர்வாகத்தின் இரண்டு பிரதிநிதிகளில் எவரும் பெருநிறுவன வரி விகிதத்தை 21 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்துவதாக கூறப்பட்டதற்கு காட்டப்படும் பெருநிறுவன எதிர்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மாறாக, செல்வந்தர்களுக்கான 2017 ட்ரம்ப் வரிக் குறைப்புக்கு முன்னர் நிலவிய நிலை, விகிதத்தை 35 சதவீதத்திற்கு பைடென் திருப்பக்கூடாது என்பதை தான் கவனித்துக்கொள்வதாக கிரான்ஹோம் சுட்டிக்காட்டினார். பைடென் வழங்கிய 28 சதவிகித வீதத்தை காட்டி, ட்ரம்ப்பின் வரி குறைப்பில் பாதியளவை பெருவணிகத்தின் பைகளில் விட்டுவிடுவதற்கு அதனை ஒரு "நியாயமான நடுத்தர" அளவு என்று விட்டுவிட்டார்.

AT&T, Fedex, Kimberly- Clark, Home Depot, Toyota, UPS ஆகியவை அங்கத்தவர்களாக உள்ள RATE கூட்டமைப்பு என்ற வாஷிங்டனின் ஒரு பெருநிறுவன ஆதரவு அமைப்பு, ஆர்கன்சாஸின் முன்னாள் ஜனநாயக செனட்டரும், பைடெனின் நீண்டகால சகாவும், இப்போது மாபெரும் நிறுவனங்களுக்கான பரப்புரையாளராக மாறியுள்ள பிளான்ச் லிங்கன் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில் வரி அதிகரிப்புக்கு தாக்குதல் நடத்தியது.

பைடெனின் செய்தித் தொடர்பாளர்கள் எவரும், வார இறுதியில் பல ஊடக நேர்காணல்களில், பெருநிறுவன அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட வெட்கக்கேடான வரி ஏய்ப்பு மற்றும் வரி தவிர்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தத் தேர்வு செய்யவில்லை. வரிவிதிப்பு மற்றும் பொருளாதாரக் கொள்கை நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வின்படி, 55 பெரிய நிறுவனங்கள் கடந்த ஆண்டு மத்திய அரச வருமான வரிகளை செலுத்தவில்லை. தற்போதைய விகிதத்தில், 21 சதவீதத்தை அவர்கள் செலுத்தியிருந்தால், அவர்கள் மொத்தம் 8.5 பில்லியன் டாலர் வருமான வரி செலுத்தியிருப்பார்கள். அதற்கு பதிலாக, அவர்கள் மொத்தம் 3.5 பில்லியன் டாலர் வரிப்பணத்தை திருப்பிபெற்றனர்.

"2020 ஆம் ஆண்டிற்கான அவர்களின் மொத்த பெருநிறுவன வரி விலக்குகள், 8.5 பில்லியன் டாலர் வரி தவிர்ப்பு மற்றும் 3.5 பில்லியன் டாலர் தள்ளுபடிகள் உட்பட, 12 பில்லியன் டாலர் ஆகும்" என்று ITEP அறிக்கை தெரிவித்துள்ளது.

ட்ரம்ப்பின் வரிக்குறைப்பு நிறைவேற்றப்பட்ட 2017 முதல் Fortune 500 நிறுவனங்களில் 26 நிறுவனங்கள் பூஜ்ஜிய வருமான வரி செலுத்தியுள்ளன. டெட்ராய்ட் மற்றும் அதன் தொழிலாள வர்க்க புறநகர்ப்பகுதிகளில் உள்ள வறிய குடும்பங்களுக்கு மின்சாரத்தை நிறுத்துவதில் இழிபெயர்பெற்ற DTE Energy உடன் டெட்ராய்டை தளமாகக் கொண்ட FedEx, Duke Energy, Nike போன்றவை இதில் அடங்கும். கடந்த ஆண்டு கிட்டத்தட்ட ஒருமனதாக இரு கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட CARES சட்டத்தினால் DTE செலுத்திய மொத்தம் 220 மில்லியன் டாலர் வரிப்பணத்தை விரைவாக திரும்பப் பெற்றது.

Loading