ஆபிரிக்க அமெரிக்க ஊடக மில்லியனர்கள் ஜெனரல் மோட்டார்ஸின் மீது இனவாத பணம் பறித்தலை ஒழுங்கமைகின்றார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இனவாத குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஜெனரல் மோட்டார்ஸிடம் பணம் பறிக்க ஆபிரிக்க அமெரிக்க ஊடக மில்லியனர்கள் நடத்திய ஒரு இனவெறி பிரச்சாரம் கடந்த வாரம் அதற்கான பரிசை வென்றுகொண்டது. முக்கிய செய்தித்தாள்களில் விளம்பரங்களில் GM தலைமை நிர்வாக அதிகாரி மேரி பார்ரா (Mary Barra) வை கறுப்பு இனத்திற்கு சொந்தமான ஊடகங்களுக்கு விளம்பர டாலர்களில் போதுமான பங்கை கொடுக்காததற்காக "இனவெறியானவர்" என்று கண்டித்ததை தொடர்ந்து GM இன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அழுக்குமிக்க காலகட்டம், அடையாள அரசியலின் வெறித்தனமான மற்றும் நேர்மையற்ற சுரண்டலின் மூலம், கறுப்பு, வெள்ளை மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆகிய தொழிலாள வர்க்கத்தின் உழைப்பிலிருந்து வெளியெடுக்கும் இலாபத்தின் பங்கை அதிகரிக்க ஆபிரிக்க அமெரிக்க முதலாளித்துவத்தின் முயற்சிகளை ஒரு புதிய மட்டத்திற்கு கொண்டு செல்கின்றது.

GM Renaissance Center (Source: GM Media)

மார்ச் 28 அன்று, பணக்கார பிரபலங்கள் மற்றும் முதலாளிகளின் குழு Detroit Free Press இல் ஒரு முழு பக்க விளம்பரத்தை பிரசுரித்து, கறுப்பினத்தவருக்கு சொந்தமான ஊடகங்கள் வாகன நிறுவனத்தின் பல பில்லியன் டாலர் விளம்பர வரவு-செலவுத் திட்டத்தில் குறைந்தது 5 சதவீதத்தைப் பெற வேண்டும் என்று கோரியது. இந்த விளம்பரத்தில் பார்ராவுக்கு ஒரு பகிரங்க கடிதம் இடம்பெற்றதுடன், அதனை செய்யாதுவிட்டால் இராஜினாமா செய்ய வேண்டும் என்ற அழைப்போடு முடிந்தது.

அதில் பின்வருவோர் கையெழுத்திட்டிருந்தனர்:

• Allen Media Group LLC யின் நிறுவனர் மற்றும் தலைவரான பைரன் ஆலன் (நிகர மதிப்பு 400 மில்லியன் டாலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது). அவர் வானிலை தொலைக்காட்சி சேவை, ஏழு மற்ற கேபிள் வலைப்பின்னல்கள் மற்றும் பிற முதலீடுகளை வைத்திருக்கிறார். இனச்சார்பு என்று குற்றம்சாட்டி Comcast, Charter Communications நிறுவனங்களுக்கு எதிராக இதேபோன்ற பணம் பறிக்கும் நடவடிக்கையை அவர் தொடங்கினார். இரு நிறுவனங்களும் ஆலனுடன் உடன்பாட்டுக்கு வந்தன. முக்கிய Madison Avenue விளம்பர முகவர் நிறுவனங்களுக்கு எதிரான வழக்குகளையும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.

• ராப் பாடகரும், நடிகருமான Ice Cube, (நிகர மதிப்பு 160 மில்லியன் டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது). இவர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமான Cube Vision இன் இணை உரிமையாளராவார்.

• Ebony Media வின் தலைவரான ஜூனியர் பிரிட்ஜ்மேன் (நிகர மதிப்பு 600 மில்லியன் டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது). ஒரு முன்னாள் NBA விளையாட்டுவீரராவார். அவர் அமெரிக்காவின் மிகப்பெரிய Wendy’s உணவக விற்பனை உரிமையாளராகவும், Chilis இன் ஒரு பெரிய விற்பனை உரிமையாளராகவும் ஆவார். அமெரிக்காவில் கோக்கோ கோலா ஆலைகளை இயக்கும் Bridgeman Foods நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் தலைவருமான இவர் கனடாவில் கோக்கோ கோலா ஆலைககளின் இணை உரிமையாளராவார். அவர் உலகின் பணக்கார ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவராவார்.

• Earl “Butch” Graves யூனியர், அவரது தந்தை அவருக்கு வழங்கிய பதவியான கறுப்பு முதலாளித்துவத்தின் முன்னணி பத்திரிகையான Black Enterprise இன் தலைமை நிர்வாக அதிகாரி. அவர் AutoZone இயக்குநர்கள் குழுவிலும் பணியாற்றுகிறார். மற்றும் தனியார் பங்கு நிறுவனமான Black Enterprise/Greenwich Street Corporate Growth Fund (91 மில்லியன் டாலர்) இணை நிறுவனராவார்.

• டான் ஜாக்சன், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் Central City Productions நிறுவனர். அவர் சமீபத்தில் 24 மணிநேர, வாரத்தில் ஏழு நாள் ஆபிரிக்க அமெரிக்க பார்வையாளர்களை இலக்காகக் கொண்ட Stellar TV என்ற மத தொலைக்காட்சி பொழுதுபோக்கு வலையமைப்பைத் தொடங்கினார்.

• ரோலண்ட் மார்ட்டின், (நிகர மதிப்பு 3 மில்லியன் டாலர்) Nu Vision Media நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, பத்திரிகையாளர் மற்றும் CNN முன்னாள் வர்ணனையாளராவார். ஹிலாரி கிளிண்டனின் ஜனாதிபதி பிரச்சாரத்திற்கு உதவ வேண்டும் என்ற நம்பிக்கையில் CNN விவாதக் கேள்விகளை ஜனநாயக தேசியக் குழுவிடம் 2016 இல் கசிய விட்டதில் மார்ட்டின் மிகவும் இழி பெயர் பெற்றவர்.

பார்ரா ஆரம்பத்தில் தங்கள் பகிரங்க கடிதத்திற்கு பதிலளிக்காதபோது, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் மிச்சிகன் குரோனிக்கிள் ஆகியவற்றின் மார்ச் 31 பதிப்புகளில் முழு பக்க விளம்பரங்களை எடுத்துக்கொண்டு, இக்குழு அழுத்தத்தை அதிகரித்தது.

தங்கள் கோரிக்கைகளை முன்னெடுப்பதில், இக்குழு மினசோட்டாவின் மினியாபோலிஸில் ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொடூரமான கொலையால் தூண்டப்பட்ட கடந்த ஆண்டு பொலிஸ் வன்முறைக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களை தங்கள் சுயநலத்திற்காக இழிந்த முறையில் சுரண்ட முயன்றது. ஊடகங்களும் மற்றும் ஜனநாயகக் கட்சியினரும் பொலிஸ் கொலைகளை முதன்மையாக ஒரு இனவாதப் பிரச்சினையாக சித்தரிக்கையில், உண்மையில் உயர்மட்ட பொலிஸ் கொலைகள் நடந்த பல நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கறுப்பின அதிகாரிகள் மற்றும் கறுப்பின பொலிஸ் தலைவர்கள் தலைமை தாங்கினர். வருடாந்தம் பொலிஸாரால் கொல்லப்படும் 1,000 பேரில் பெரும்பான்மையானோர் வெள்ளை இனத்தவராவார்.

ஒட்டுமொத்த ஆபிரிக்க அமெரிக்க மக்களின் நலன்களுடன் சலுகை பெற்ற வணிக உரிமையாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவின் சுயநல முயற்சிகளை இணைக்க பார்ராவுக்கு எழுதப்பட்ட பகிரங்க கடிதம் வெளிப்படையாக முயன்றது. GM இன் அவமதிப்பு எனக்கூறப்படுவது “ஆபிரிக்க அமெரிக்கர்கள், சனத்தொகையில் சுமார் 14 சதவிகிதமான அமெரிக்கர்களாக இருப்பதால் மோசமானதாக இருக்கின்றது" என்று அது குறிப்பிட்டது.

Mary Barra (GM Media)

இந்த பல மில்லியனர்களின் கவலைகளுக்கும், ஒரு கடுமையான தொற்றுநோய் மற்றும் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தங்களுக்கான உணவை வாங்கவும் மற்றும் வாடகை செலுத்த வேண்டும் என்பதற்கான துன்பப்படும் ஆபிரிக்க அமெரிக்க வாகனத் தொழிலாளர்களின் கவலைகளுக்கும் பொதுவானவை என்ன உள்ளன?”

2020 ஆம் ஆண்டில் GM 9.7 பில்லியன் டாலர் வரிக்கு முந்திய இலாபத்தை ஈட்டியது. 2019 ஆம் ஆண்டில் தொற்றுநோய்க்கு முந்தைய இதன் எண்ணிக்கை 8.4 பில்லியன் டாலராக இருந்தது. இது வசந்த காலத்தில் பரவும் தொற்றுநோயிற்கு மத்தியில் தொழிலாளர்களால் தன்னியல்பாக சுருக்கமாக மூடப்பட்ட பின்னர், ஆண்டு முழுவதும் தொழிற்சாலைகள் முழு உற்பத்தியில் இயங்குவதன் மூலம் இது நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக நூற்றுக்கணக்கான வாகனத் தொழிலாளர் மத்தியில் உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகள் மற்றும் ஏராளமான இறப்புகள் உள்ளன. வாகன தொழிற்சாலைகள் பெருநிறுவன கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் மற்றும் ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்கங்கத்தின் உதவியுடன் தகவல்களை வேண்டுமென்றே மறைத்து வைத்திருப்பதால் உண்மையான எண்ணிக்கையை அறிவது சாத்தியமற்றதாக உள்ளது.

ஒரு மரணகரமான தொற்றுநோய்க்கு மத்தியில் உழைக்க கட்டாயப்படுத்தியதன் மூலம், ஏராளமான சிறுபான்மை தொழிலாளர்கள் உட்பட அதன் பணியாளர்களை மிருகத்தனமாக சுரண்டுவதன் மூலம் GM இற்கு பாரிய இலாபங்களை வழங்குவதில் ஆலனுன் மற்றும் அவரது கூட்டாளிகளும் எங்கும் விதிவிலக்காக இருக்கவில்லை. உண்மையில், முதல் ஆபிரிக்க அமெரிக்க ஜனாதிபதியான பராக் ஒபாமா GM மற்றும் பிற டெட்ராய்ட்டை தளமாகக் கொண்ட பல்லாயிரக்கணக்கான வேலைகள் அழிக்கப்படுவதற்கும், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான பரந்த தாக்குதலுக்கும் தலைமை தாங்கினார்.

இதில் பல அடுக்கு ஊதிய முறைகள், எட்டு மணி நேர வேலைநாளை திறம்பட ஒழித்த மாற்று வேலை அட்டவணைகள் மற்றும் பகுதிநேர விரிவாக்கம், ஒப்பந்தம் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் குறைந்த ஊதியம் மற்றும் ஏதேனும் ஒரு சிலசலுகைகளை தவிர ஏனையவற்றை இல்லாது ஒழித்தல் ஆகியவை இதில் அடங்கும். அவரது நிர்வாகம் தொழிலாள வர்க்கத்திடமிருந்து செல்வங்களை பெரும் செல்வந்தர்களின் கைகளுக்கு மாற்றுவதை மேற்பார்வையிட்டது.

1970களில் டெட்ராய்ட் நகரம் தொடர்ச்சியாக கறுப்பின மேயர்களால் தலைமை தாங்கப்பட்டது. அவர்கள் நகரத்தின் வறுமையை மேற்பார்வையிட்டதுடன், இது ஒரு காலத்தில் "Midwest இன் பாரிஸ்" என்று அழைக்கப்பட்டதிலிருந்து அமெரிக்காவில் மிகவறிய நகரமாக மாற வழிவகுத்தது.

கடந்த கோடையில் பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்களை அடுத்து Ice Cube நிறுவிய Contract With Black America இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் கறுப்பின முதலாளித்துவத்தின் பிற்போக்கான பாதை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. 1994 ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியின் சபாநாயகர் நியூட் கிங்ரிச் அவர்களால் உருவாக்கப்பட்ட Contract with America அடிப்படையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பணக்காரர்களின் வரியை குறைப்பதற்கு பணத்தை வழங்குவதற்காக சமூக திட்டங்களுக்கான அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் அழைப்புவிடப்பட்டது.

Ice Cube (Toby Adam Bielawski/Wikimedia Commons)

Ice Cube இன் ஆவணம் முதலாளித்துவத்தை வெளிப்படையாக பாதுகாக்கிறது. பொலிஸ் வன்முறை பிரச்சினையால் வெளிப்படையாக உந்துதல் பெற்றாலும், கறுப்பினத்தவருக்கு சொந்தமான வணிகத்திற்கு, (குறிப்பாக தொழில்முறை விளையாட்டு தொடர்பான) தொழிலாள வர்க்கத்தின் உழைப்பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட செல்வத்தின் பெரும்பகுதியை பெற்றுக்கொள்வதில் இந்த நீண்ட ஆவணம் கவனம் செலுத்துகிறது.

சமூக துயரங்கள் பற்றிய ஒவ்வொரு புள்ளிவிபரங்களிலும், ஆபிரிக்க அமெரிக்க மக்கள் பெரும்பான்மையாக பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறார்கள். ஆனால் இதுவல்ல Ice Cube, ஆலன் மற்றும் அவர்களது கூட்டாளிகளைத் தூண்டிவிடுவது.

டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியருடன் அடையாளம் காணப்பட்ட பொது உரிமைகளுக்கான வெகுஜன, சமத்துவ இயக்கத்துடன் மேலும் தம்மை செல்வந்தர்களாக்கிக்கொள்ள முனையும் அவர்களின் சுயநல முயற்சியை ஒப்பிடுவதை விட மோசமானது எதுவுமில்லை. உண்மையில், Ice Cube மற்றும் ஆலன் போன்ற நபர்கள் ஒரு சிறிய தட்டு செல்வந்த கறுப்பின முதலாளிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் வசதிபடைத்த பிரமுகர்களை முன்னணிக்கு கொண்டு வருவதன் மூலம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு சமூக இடைத்தடையை உருவாக்கும் ஆளும் வர்க்கத்தின் நனவான கொள்கையிலிருந்து பயனடைந்துள்ளனர்.

இந்த அடுக்கின் முயற்சிகள் சமத்துவத்திற்கான போராட்டத்துடன் எந்த தொடர்பும் இல்லை. உண்மையில் இது இனவாத மோதலைத் தூண்டுவதற்கும் தொழிலாள வர்க்கத்தை அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் பிரிப்பதற்கும் மட்டுமே உதவுகின்றன.

பைடென் நிர்வாகத்தின் கொலைகார மீண்டும் திறக்கும் கொள்கைக்கு வாகனத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அமசன் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவுகள் மத்தியில் அதிகரித்து வரும் எதிர்ப்பின் பின்னணியில் கறுப்பின ஊடக உரிமையாளர்களின் ஆத்திரமூட்டலைக் காண வேண்டும். எட்டு மணிநேர வேலைநாள் மீதான ஒரு முன்னணி தாக்குதலான Stellantis Sterling Heights Assembly ஆலையில் திறமையான வர்த்தக தொழிலாளர்களுக்கான 12 மணி நேர, ஏழு நாள் வேலை அட்டவணையை அமுல்படுத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பு இது வருகிறது.

குடியுரிமைகள் போராட்டங்களின் தேட்டங்கள் உட்பட, தொழிலாள வர்க்கத்தின் கடந்தகால சமூக வெற்றிகள் அனைத்தையும் ஆளும் வர்க்கம் இல்லாதொழிக்க முற்படும் ஒரு நேரத்தில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தைத் தடுக்க ஒரு ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

சமுதாயத்தில் மத்திய பிரிக்கும்கோடு இனம் அல்ல வர்க்கம் என்பதை சோசலிஸ்டுகள் புரிந்துகொள்கிறார்கள். அகங்கார மற்றும் சலுகை பெற்ற சமூக அடுக்குகளின் சுயநல முயற்சிகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கம் வர்க்க ஒற்றுமைக்கான ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். வர்க்க சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு பொதுவான போராட்டத்தில் அனைத்து இனங்கள், மொழிகள் மற்றும் நாடுகளின் தொழிலாளர்களை ஒன்றிணைக்க வேண்டும். இதன் பொருள், சமூகத்தை இலாபத்திற்காக அல்லாமல் மனித தேவைக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையின் அடிப்படையில் சோசலிச மறுஒழுங்கமைப்பு செய்யப்பட வேண்டும்.

Loading