இந்தியா: பெங்களூரில் டொயோட்டா தொழிலாளர்கள் நடத்திய 3 மாதங்களுக்கும் மேலான வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கம் காட்டிக் கொடுத்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவுக்கு அருகிலுள்ள இரண்டு டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் (TKM) ஆலைகளுடன் இணைக்கப்பட்ட 3,000 க்கும் மேற்பட்ட வேலைநிறுத்தத் தொழிலாளர்கள் காட்டிய மகத்தான போர்க்குணம் மற்றும் தைரியம் இருந்தபோதிலும், துரித உற்பத்தி மற்றும் போர்க்குணம் உள்ள தொழிலாளர்களுக்கு எதிரான நிர்வாகத்தின் பொய்க்குற்றம் சுமத்தலுக்கு எதிராக மூன்று மாதங்களுக்கும் மேலாக நடத்தப்பட்ட வேலைநிறுத்தம் தோல்வியில் முடிவடைந்தது. இந்த மாத தொடக்கத்தில் காட்டிக்கொடுப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக TKM ஊழியர் சங்கத்தின் (TKMEU) தலைமையில் ஒரு பிளவை நிறுவனம் வெற்றிகரமாக வடிவமைத்தது.

டொயோட்டா தொழிலாளர்கள் மற்றும் கர்நாடக விவசாயிகள் பெங்களூருவில் கூட்டு ஊர்வலம் நடத்துகின்றனர்

”நிறுவன விதிமுறைகளுக்கு இணங்க ஒரு ”உறுதி மொழி’ இல் கையெழுத்திட TKMEU செயற்குழுவின் ஒரு பிரிவை நிறுவனம் சம்மதிக்க வைத்த பின்னர் நிர்வாகம் மார்ச் 1 அன்று வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தொழிற்சங்கம் ஒப்புக் கொண்டதாக அறிவித்தது. மீதமுள்ள TKMEU தலைமை முதலில் நிறுவனத்தின் கூற்றுக்களை நிராகரித்து தொடர்ந்து போராடப்போவதாக உறுதியளித்த போதிலும் இரண்டு நாட்களுக்குப் பின்னர் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு மார்ச் 4 ஆம் தேதி தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு திரும்புமாறு உத்தரவிட்டது. இதன் அர்த்தம் என்னவென்றால் நிர்வாகத்தால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு பழிவாங்கப்பட்ட 70 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துவது உட்பட, எந்த ஒரு கோரிக்கையும் கூட வென்றெடுக்கப்படாமல் மூன்று மாத வேலைநிறுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது.

தொழிலாளர்களின் முக்கியமான பல்வேறு குறைகளை எழுப்பிய TKMEU வின் ஒரு தலைவரான உமேஷ் கவுடா அலூரை நிர்வாகம் அதிரடியாக பணியிடைநீக்கம் செய்ததற்கு எதிராக நவம்பர் 9 ஆம் தேதி TKM தொழிலாளர்கள் தங்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். தொழிலாளர்களின் பிரதான கவலையாக இருந்தது என்னவென்றால் ஒரு கடுமையான வேகமான உற்பத்தியை செய்ய வேண்டிய கட்டாயமாகும், இது முந்தைய இலக்கான மூன்று நிமிடங்களுடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு இரண்டரை நிமிடங்களுக்கும் ஒரு வாகனத்தை தொழிலாளர்கள் உற்பத்தி செய்ய வேண்டும்,

வேலைநிறுத்தம் "சட்டவிரோதமானது" என்று கூறி, ஒரு கதவடைப்பை நிர்வாகம் அறிவித்து அதற்கு பதிலளித்தது. அடுத்தடுத்த மாதங்களில் ஒரு தொடரான கதவடைப்புகளை அது திணித்தது மற்றும் வேலைநிறுத்தம் செய்த 70 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பழிவாங்கியது. இருந்தபொழுதிலும், TKM தொழிலாளர்கள் வேகம் மற்றும் பணியிட பழி வாங்கல்களுக்கு எதிராக தங்கள் வீரம் நிறைந்த போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

டொயோட்டா வேலைநிறுத்தத்தை ஆளும் வர்க்கம் ஒரு அச்சுறுத்தலாக பார்த்தது, வேலை நிறுத்தம் மற்ற தொழிலாளர்கள் மத்தியில் இதேபோன்ற எதிர்ப்புகளைத் தூண்டும் என்று அது அஞ்சியது அவர்கள் அனைவரும் தங்கள் ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர்.

நவம்பர் 17 அன்று கர்நாடக இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான மாநில அரசின் துணை முதல்வரான சி.என். அஸ்வத் நாராயண், நடந்துகொண்டிருக்கும் வேலைநிறுத்தம் குறித்து “தடை” உத்தரவை பிறப்பித்தார். சீனாவுடன் போட்டியிடும் திறன் கொண்ட உலகளாவிய மூலதனத்திற்கான மலிவான தொழிலாளர் தளமாக இந்தியாவை வளர்ப்பதற்கான இந்திய ஆளும் வர்க்கத்தின் பரந்த நோக்கத்தை எடுத்துரைத்த நாராயண், வேலைக்கு திரும்பும்படி விடுத்த உத்தரவை நியாயப்படுத்தினார், “முழு உலகமும் இந்தியாவை சீனாவுக்கு மாற்றாக பார்க்கிறது, மற்றும் ஜப்பான், தென் கொரியா மற்றும் தைவான் போன்ற நாடுகள் கர்நாடகாவில் ஆலை அமைக்க ஆர்வமாக உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், வேலைநிறுத்தங்கள் மற்றும் கதவடைப்புகள் பற்றி எந்தப் பேச்சும் இருக்கக் கூடாது.” என்றார்.

கர்நாடக முதலாளிகள் சங்கத்தின் தலைவர் பி.சி. பிரபாகர் மாநில தலைமைச் செயலாளர் டி.எம். விஜய் பாஸ்கருக்கு நடந்து வரும் வேலைநிறுத்தத்திற்கு எதிராக அடக்குமுறை நடவடிக்கைகளை எடுக்கும்படி கோரி ஒரு கடிதத்தை நவம்பர் பிற்பகுதியில் அனுப்பினார். TKM வளாகத்தை சுற்றி உடனடியாக ஊரடங்கு உத்தரவு அறிவித்தல், குழப்பம் செய்பவர்களை கைது செய்தல் மற்றும் பிடடி பகுதிக்குள் நுழைவதற்கு தடைகள் விதித்தல் ஆகியவை இதில் அடங்கும். இந்த வேலைநிறுத்தம் முழு பிராந்தியத்திலும் தொழில்துறை உறவுகளை "முறிக்கக்கூடும்" என்ற தனது அச்சத்தை முதலாளிகள் சங்கத் தலைவர் அப்பட்டமாகக் கூறினார், அதாவது, மிருகத்தனமான சுரண்டல் மற்றும் குறைந்த ஊதியங்களுக்கு எதிராக பெருமளவில் கிளர்ச்சி செய்யும்படி அது தொழிலாளர்களை ஊக்குவிக்கிறது.

டொயோட்டா வேலைநிறுத்தத்தை முறியடிப்பதற்கான அவர்களின் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, TKM மற்றும் பாஜக தலைமையிலான மாநில அரசு, பிரபாகரின் கடிதத்தில் முக்கியமாக காட்டப்பட்டுள்ள முதலாளிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, வெகுஜன துப்பாக்கிச் சூடு மற்றும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற அச்சுறுத்தல்களை வெளியிட்டன. எவ்வாறாயினும், அது தொழிலாள வர்க்கத்தினரிடையே சீற்றத்தை இன்னும் பரந்த அளவில் தூண்டக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இதுபோன்ற வெளிப்படையான மோதலைத் தவிர்க்க அவர்கள் முடிவு செய்தனர்.

நவம்பர் மாதத்தில் தொழிலாள வர்க்கத்தின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை விரிவுபடுத்துவதற்கான ஒரு ஊக்கியாக டொயோட்டா தொழிலாளர்களின் போராட்டம் சேவை செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் சாத்தியமானவையாக இருந்தன. நவம்பர் 26 அன்று நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மோடி அரசாங்கத்தின் முதலீட்டாளர் சார்பு பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தில் இணைந்தனர். அதே நாளில், மோடி அரசாங்கத்தின் வேளாண் வணிக சார்பு பண்ணை சட்டங்களை ரத்து செய்யக் கோரி நூறாயிரக்கணக்கான விவசாயிகள் ஒரு போராட்டத்தைத் தொடங்கினர். மோடியின் பாஜக அரசாங்கத்தை கடுமையான அரசியல் நெருக்கடிக்கு தள்ளி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மூன்று மாதங்களுக்கும் மேலாக டெல்லியின் புறநகரில் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்

இந்த பெருகி வரும் சமூக எதிர்ப்பிற்கு தலைமை வழங்குவதிலிருந்து TKM வேலைநிறுத்தக்காரர்கள் தடுக்கப்பட்டனர். அதனை அரசு அடக்குமுறை மற்றும் அவர்களின் போராட்டத்தின் குரல்வளையை தொழிற்சங்கத் தலைமை மற்றும் ஸ்ராலினிசத்துடன் இணைந்த கட்சிகள் நெரிப்பது போன்ற ஒன்றிணைந்த நடவடிக்கையின் மூலம் செய்தனர். TKM, பாஜக மாநில அரசாங்கத்தின் முழு ஆதரவோடு, தொழிலாளர்களை தங்கள் வேலைகளுக்குத் திரும்பும்படியும் "நன்னடத்தைக்கான ஒரு ஒப்பந்தத்தில்" கையெழுத்திடும்படியும் பயமுறுத்தியது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஒவ்வொரு தொழிலாளிக்கும் எதிராக கம்பெனியினால் நடத்தப்படும் ”விசாரணை” பூர்த்தி அடையாமல் அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படமாட்டார்கள் என்று கம்பெனி வலியுறுத்தியது.

வேலைநிறுத்தம் செய்யும் வாகன தொழிலாளர்களை TKMEU முறையாக தனிமைப்படுத்தி வந்ததால் TKM முதலாளி இவ்வளவு ஆணவத்துடன் தொடர முடிந்தது. கர்நாடகாவின் தொழில்துறை ஆலைகள் முழுவதுமாக TKM வேலைநிறுத்தக்காரர்களின் போராட்டத்தை விரிவுபடுத்த அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை, இதேபோன்ற சுரண்டல் நிலைமைகளில் இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான உழைக்கும் மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பது ஒருபுறமாக இருக்கிறது. இதற்கு காரணம் தொழிற்சங்கத்தின் முக்கியமான அக்கறை கம்பெனி நிர்வாகத்துடன் ஒரு சமரசத்தை ஏற்படுத்திக்கொள்வதில் தான் இருந்தது. இதன் மூலம் ஆலைக்குள் பேரம் பேசும் முகவராக தனது நிலையை அது உறுதிப்படுத்திக் கொள்ள முடியும், ஆனால் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அது பாதுகாக்க மாட்டாது.

கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக உறுதியுடன் போராடி வந்த தொழிலாளர்களை தனிமைப்படுத்தி வந்த நிலையில், வேலைநிறுத்தத்தை நாசப்படுத்த தொழிற்சங்கத்தில் பிளவுகளைத் தூண்டுவதில் TKM நிர்வாகம் மற்றும் மாநில அரசாங்கத்தின் கூட்டு முயற்சிகள் வெற்றிபெறக்கூடிய நிலைமைகள் உருவாக்கப்பட்டிருக்குமாயின் அதற்கு TKMEU தலைமை ஒட்டுமொத்தமாக கணிசமான பொறுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும். மார்ச் 1 ம் தேதி, தாவிச்சென்ற நான்கு பேர் நிறுவனம் கோரிய ஒரு உறுதிமொழி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதை மாநில அரசிடம் சமர்ப்பித்தனர். இது மார்ச் 1 இல் வேலைநிறுத்தம் நிறுத்தப்பட்டதாக TKM அறிக்கை ஒன்றை வெளியிட தூண்டுதலாக இருந்தது.

TKMEU வின் ஊடகச் செயலாளர் கங்காதர் ஆரம்பத்தில் நிறுவனத்தின் அறிக்கையுடன் முரண்பட்டார்; “நாங்கள் உத்தியோகபூர்வமாக போராட்டத்தை நிறுத்தவில்லை. நான்கு செயற்குழு உறுப்பினர்கள் நிர்வாகத்திடம் சென்று ஒரு உறுதிமொழியைக் கொடுத்தனர்...செயற்குழு உறுப்பினர்கள் அலுவலக பொறுப்பாளர்களுக்குக் தரத்தில் கீழே உள்ளவர்கள்.” என்று அவர் அறிவித்தார்,

இருப்பினும் TKMEU சீக்கிரமாக சரணாகதி அடைந்தது. சங்கடமான நிலையை தவிர்க்கும் ஒரு ஆற்றொணா நிலையில் TKMEU இவ்வாறு கூறியது, “எந்தவொரு உறுதி மொழியையும் கொடுக்கப்போவதில்லை என்பதில் தொழிலாளர்களும் தொழிற்சங்கமும் உறுதியாக இருந்த பட்சத்தில் மற்றும் உறுதிமொழி ஏதும் கொடுக்காமலே வேலைக்கு திரும்பும்படி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலைமையில் தான் சங்கம் தொழிலாளர்களை வேலைக்கு திரும்பும்படி ஆலோசனை கூறியது, ஏனென்றால் இது சங்கத்திற்கு ஒரு தார்மீக வெற்றியாக இருந்தது.”

அதன் காட்டிகொடுப்பு தொடர்பாக தொழிலாளர் கோபத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், TKM தொழிலாளர்களுக்கு TKMEU ஒரு தெளிவற்ற வாக்குறுதியை அதாவது "தொடர்ந்து எதிர்ப்பு மற்றும் வேலை நிறுத்தங்களை" மேற்கொள்ளப்போவதாக வாக்குறுதி அளித்தது.

அரசாங்கத்தின் வேலைக்கு திரும்பும்படி கோரும் உத்தரவு மற்றும் நிறுவனத்தின் அச்சுறுத்தல்களை மீறி அவர்கள் மூன்று மாத காலமாக நடத்திய வேலைநிறுத்தத்தின் மூலம், TKM தொழிலாளர்கள் தாங்கள் உட்படுத்தப்பட்ட அடிமை தொழிலாளர் நிலைமைகளுக்கு எதிராக போராட தங்கள் தயார்நிலையை எடுத்துக்காட்டினர். இருப்பினும் இந்தக்கால கட்டித்தில் TKMEU, நிறுவன மேலாண்மை மற்றும் முதலாளித்துவ அரசு எந்திரத்தின் அமைப்புகளுக்கு பயனற்ற முறையீடுகள் செய்வதற்கு தொழிலாளர்களை கீழ்ப்படியச் செய்ய முயன்றது. இந்தியாவில் சமூக சீற்றம் ஒரு கொதிநிலை நிலையில் இருந்ததால், போராட்டத்தை விரிவுபடுத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும் தொழிற்சங்கத் தலைமை நிராகரித்தது, மேலும் அவர்கள் TKM வேலைநிறுத்தம் ஒரு வெகுஜன தொழிலாளர் தலைமையிலான அணிதிரட்டலாக தூண்டப்படும் அபாயத்தை அவர்கள் விரும்பவில்லை, ஏனென்றால் அது விரைவாக அவர்களின் கட்டுப்பாட்டை கடந்து சென்றிருக்கும்.

ஒருமைப்பாடு வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற தொழில்துறை வசதிகளில் உள்ள தொழிலாளர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு TKMEU வால் அறைகூவல்கள் எதுவும் விடுக்கப்படபடவில்லை. அதற்கு பதிலாக காங்கிரஸ் கட்சி மற்றும் ஜனதா தளம் (மதச்சார்பற்ற) உள்ளிட்ட முதலீட்டாளர் சார்பு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு உதவுவார்கள் என்று வேலைநிறுத்தக்காரர்களிடையே TKMEU மாயைகளை விதைத்தது.

TKM வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்துவதில் மற்றும் இறுதியாக அதன் காட்டிக்கொடுப்புக்கான பிரதான அரசியல் பொறுப்பாளிகள் இந்திய ஸ்ராலினிச கட்சிகள் தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்களான இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) மற்றும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) ஆகியவற்றை உள்ளடக்கிய தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவிலிருந்து (JCTU) TKM வேலைநிறுத்தக்காரர்களை ஆதரிப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. TKM வேலைநிறுத்தக்காரர்கள் பரவலான ஆதரவைப் பெற்றிருந்தாலும், பிடடி முழுவதும் அல்லது இந்தியாவின் பிற தொழில்துறை பகுதிகளில் உள்ள தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு CITU எந்த அழைப்பும் விடுக்கவில்லை. தமிழ்நாட்டில் மாக்னா காஸ்மா மற்றும் மதர்சன் போன்ற அதேமாதிரியான வர்க்கப் போர்களில் ஈடுபட்டுள்ள வாகன தொழிலாளர்களுக்கும் கூட எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை அங்கே அரசாங்கம் மற்றும் நிறுவனங்களின் கடுமையான அடக்குமுறைகளுக்கு முகங்கொடுத்து தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்தங்களை தொடர்ந்ததன் மூலம் பெரும் போர்க்குணத்தைக் காட்டியுள்ளனர்.

ஸ்ராலினிஸ்டுகளின் துரோகப் பங்கு, தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக இந்தியாவின் முதலாளித்துவ எதிர்க்கட்சிகள் மற்றும் முதலாளித்துவ அரசின் அமைப்புகளுக்கு கீழ்ப்படுத்தும் அவர்களின் கொள்கையிலிருந்து ஊற்றெடுக்கிறது. 2020 இல் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பங்கெடுத்த இரண்டு பொது வேலைநிறுத்தங்களின் வடிவத்தில் மோடி அரசாங்கத்தின் மீது தொழிலாள வர்க்கத்தின் கோபத்தின் சக்திவாய்ந்த வெளிப்பாட்டை எதிர்கொண்ட ஸ்ராலினிச கட்சிகள் இந்த எதிர்ப்பை காங்கிரஸ் கட்சியுடன் முடிச்சுப்போட முயற்சி முயன்றன. அதன் மூலமாக அது மோடியின் வலதுசாரி நிகழ்ச்சி நிரலான - முதலீட்டாளர் சார்பு சிக்கன நடவடிக்கை மற்றும் இராணுவவாதத்திற்கு – வெளிப்படையான சவாலாக வளர்ச்சி அடைவதை தடுக்கின்றனர்.

TKM தொழிலாளர்களின் கசப்பான அனுபவம் அடிக்கோடிட்டுக் காட்டுவது என்னவென்றால் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகளிடமிருந்து அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் முறித்துக் கொள்ள வேண்டும். மேலும் அரசாங்கம் மற்றும் கம்பெனிகளின் தாக்குதலுக்கு எதிராக சிறந்த பணி நிலைமைகளுக்கான தங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக தங்களது சொந்த சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, TKM போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் அவர்கள் ஒரு திட்டத்தை பின்பற்ற வேண்டும்.

வேலைநிறுத்தத்தின் முதல் மாதத்தில் உலக சோசலிச வலைத் தளம் இவ்வாறு விளக்கியது, “டொயோட்டா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் மற்றும் மலிவான கூலிகளாக தொழிலாளர்களை வழங்க இந்தியாவின் ஆளும் உயரடுக்கு எடுக்கும் முயற்சிக்கு எதிரான போராட்டத்திற்கு எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயம் தேவைப்படுகிறது. வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் தங்கள் போராட்டங்களை ஒன்றிணைக்க முயற்சிக்க வேண்டும், அவர்கள் தங்கள் ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான அதே தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர், இத்தாக்குதல்களை தொடுக்கும் அதே நிறுவனங்கள் மற்றும் ஆளும் உயரடுக்கினர் வெறித்தனமான இலாப வேட்டையில் சற்றும் மூர்க்கத்தனம் குறைந்தவர்கள் அல்ல."

Loading