அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில் இரத்த உறைவுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய குழு முடிவு செய்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அஸ்ட்ராசெனெகாவின் கோவிட்-19 தடுப்பூசி ஒரு அரிய இரத்த உறைதல் கோளாறான, பெருமூளை இரத்த உறைவு (CVST) அதாவது மூளையில் இருந்து இரத்தத்தை வெளியேற்றும் நரம்புகளில் ஏற்படும் இரத்த உறைவு, கல்லீரல்-மண்ணீரல் இரத்த உறைவு (SVT) அல்லது குடல்களின் நரம்புகளில் உருவாகும் இரத்தக் கட்டிகள் ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்தின் (EMA) ஆலோசனைக் குழு புதன்கிழமை முடிவு செய்தது. அவை இரத்த மென்தகடுகளின் எண்ணிக்கையில் வீழ்சியுடன் சேர்ந்துள்ளன. இந்த இரத்த மென்தகடுகள் இரத்தத்தில் உள்ள அத்தியாவசியமான ஒரு கூறு ஆகும். இதன் செயல்பாடு இரத்தக்குழாய் காயம் மற்றும் எங்காவது இரத்தப்போக்கு ஏற்படுகையில் அதை தடுப்பதற்கு அவ்விடத்தில் இரத்தத்தை உறைய செய்வதாகும்.

அவர்களின் பகுப்பாய்வில், அவர்கள் 62 பெருமூளை இரத்த உறைவு ஏற்பட்டவர்களையும், 24 கல்லீரல்-மண்ணீரல் இரத்த உறைவு ஏற்பட்டவர்களையும் மதிப்பாய்வு செய்தனர். அவற்றில் 18 பேர் மரணமடைந்திருந்தனர். இப்புள்ளிவிவரங்கள் ஐரோப்பிய ஒன்றிய மருந்து பாதுகாப்பு தரவுத்தளத்திலிருந்து பெறப்பட்டன. அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பெற்ற 25 மில்லியன் மக்களிடையே இந்த பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. இவை முதல் ஊசி பெற்ற இரண்டு வாரங்களுக்குள் பெண்களில் பெரும்பாலானவை நிகழ்ந்தன. மினசோட்டா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட தொற்று நோய் ஆராய்ச்சி மற்றும் கொள்கை மையத்தின் வலைத் தளத்தின்படி, ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பில் 34 மில்லியன் தடுப்பூசி போட்ட நபர்களில் பெருமூளை இரத்த உறைவு ஏற்பட்டவர்களையும் பற்றிய 169 அறிக்கைகளும், 53 கல்லீரல்-மண்ணீரல் இரத்த உறைவு ஏற்பட்டவர்களையும் பற்றிய அறிக்கைகளும் கிடைத்துள்ளன.

மார்ச் 15 திங்கள், பாரிஸுக்கு வெளியே உள்ள போலோக்னே பில்லன்கோர்ட்டில் உள்ள ஒரு மருந்தகத்தில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி குப்பியின் படம்(AP Photo/Christophe Ena)

அஸ்ட்ராசெனெகாவின் தடுப்பூசி குறித்த ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், இங்கிலாந்தின் மருந்து கட்டுப்பாட்டாளரான மருந்துகள் மற்றும் மருத்துவ தயாரிப்புகள் ஒழுங்குபடுத்தும் நிறுவனம் (MHRA), கடந்த வாரம் அவர்கள் மேற்கொண்ட மதிப்பாய்வில் 20 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது என ஏற்றுக்கொண்டதில் கடுமையான இரத்த உறைவு சிக்கல்களுடன் 79 நபர்கள் கண்டறியப்பட்டதாக அறிவித்தது. தடுப்பூசி போடப்பட்ட சில நாட்களில் 19 நோயாளிகள் இறந்துவிட்டதாக கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த பாதகமான நிகழ்வின் சரியான காரணத்தை தீர்மானிக்க நிறைய வேலைகள் செய்யப்படவேண்டி உள்ளன. ஆனால் இது பெரும்பாலும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் எதிர்விளைவுடன் தொடர்புடையது என்று அவர்கள் கருதுகின்றனர்.

இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜொனாதன் வான்-டாம், வயதானவர்களை விட கோவிட்-19 உடன் இறப்பு அபாயம் குறைவாக உள்ள இளைஞர்களிடையே இந்த சிக்கலுக்கான முனைப்பு அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டார். தடுப்பூசியிலிருந்து இரத்தம் உறைவதற்கான சிறிய அபாயத்திற்கு எதிராக கடுமையான COVID-19 உருவாகும் இளைஞர்களின் ஆபத்து-பயன் பகுப்பாய்வின் (risk-benefit analysis) அடிப்படையில், 30 வயதிற்குட்பட்டவர்கள் மாற்று தடுப்பூசிகளைப் பெற வேண்டும் என்று இங்கிலாந்து சுகாதார கட்டுப்பாட்டாளர்கள் தங்கள் பரிந்துரைகளை மாற்றியுள்ளனர், அதாவது ஃபைசர் அல்லது மொடேர்னாவின் கோவிட்- 19 தடுப்பூசிகளை பரிந்துரைத்தது. இருப்பினும், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிக்கு உயர்ந்த வயது வரம்புகளை விதித்து வருகின்றன.

ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எமர் குக் நிருபர்களிடம் கூறுகையில், “அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி ஒட்டுமொத்த இரத்த உறைவு நிகழ்வுகள் அல்லது இரத்தக் கட்டிகளால் ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையது அல்ல என்பதை எங்கள் ஆய்வு கண்டறிந்துள்ளது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான, ஆனால் மிகவும் தீவிரமான உறைதல் கோளாறுகள் அதிக கவனம் செலுத்தவேண்டிய மதிப்பாய்வைத் தூண்டின. ”அவர் மேலும் கூறுகையில், "இந்த அசாதாரண இரத்தக் கட்டிகளின் குறித்து ஆழ்ந்த ஆய்வுக்குப் பிறகு, தடுப்பூசியின் சாத்தியமான பக்க விளைவுகளாக இவை பட்டியலிடப்பட வேண்டும் என்று நிறுவனம் முடிவு செய்துள்ளது." எவ்வாறாயினும், ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு அவர்களின் வயது அல்லது பாலினத்தால் தடுப்பூசிக்கு ஏதேனும் வரம்புகளை வைக்க பரிந்துரைப்பதை ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் நிறுத்திவிட்டது. குக் விளக்கமளித்தபடி, அவர்களின் மதிப்பாய்வு "வெவ்வேறு பாலினம் அல்லது வயதுக் குழுக்களுக்கு இடையில் ஏதேனும் நியாயமான தொடர்பு இருப்பதாக காட்டவில்லை" என்றார்.

இது சம்பந்தமாக, குக் கூறுகையில், “ஒரு நாடு தடுப்பூசி பற்றி ஒரு முடிவை எடுக்கும்போது அனைத்தையும் எடுத்துக்காட்டுவது மிகவும் முக்கியம். அந்த குறிப்பிட்ட மக்கள்தொகை பற்றிய முழு அறிவுடனும், கிடைக்கக்கூடியவை மற்றும் குறிப்பிட்ட ஆபத்து காரணிகள் என்ன என்பதை அவர்கள் எடுத்துக்காட்டவேண்டும். தடுப்பூசியை அது பாதுகாப்பானதா மற்றும் பயனுள்ளதா என்பதைப் பார்ப்பது மற்றும் அதனால் ஆபத்தை விட நன்மை அதிகமாக இருக்கின்றதா பார்ப்பதுதான் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்தின் பணி” என்றார்.

ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்தின் மருந்து கண்காணிப்பு இடர் மதிப்பீட்டுக் குழுவின் (PRAC) தலைவர் டாக்டர் சபீன ஸ்ட்ராஸ், குக்கின் கருத்துக்களையும் சேர்த்து, “இந்த மதிப்பாய்வு பற்றி நாங்கள் 24 மணித்தியாலமும் ஆய்வு செய்கின்றோம். எங்கள் முடிவு என்னவென்றால், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் ஆபத்துக்களை விட நன்மை மிகஅதிகமாகும். வழங்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகுதி தடுப்பூசியின் தரம் தொடர்பாக ஏதாவது பிரச்சினை இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை."

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி போட்டதன் பின்னர் ஒட்டுமொத்த இரத்த உறைவு நிகழ்வுகளின் எண்ணிக்கை மக்கள் தொகையில் எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக உள்ளது என்பதை விளக்கிய பின்னர் அவர் மேலும் கூறுகையில், "இது இரத்த உறைவுக்கான ஆபத்தை அதிகரிக்கச் செய்கையிலும் தடுப்பூசி கோவிட்-19 ஐ குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கையில், தடுப்பூசி பொதுவாகவே இரத்த உறைவு ஒட்டுமொத்தமாகக் குறைக்கப்படுவதற்கு இட்டுச் செல்லலாம்." இந்த நிலைக்கான ஒட்டுமொத்த விகிதாசாரம் 100,000 இல் 1 என்று அவர் மதிப்பிட்டார்.

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்ற எவருக்கும் தடுப்பூசி போடப்பட்டதைத் தொடர்ந்து நான்கு முதல் 20 நாட்கள் வரை, மூச்சுத் திணறல், மார்பு வலி, கால் வீக்கம், தொடர்ச்சியான வயிற்று வலி, கடுமையான தலைவலி அல்லது மங்கலான பார்வை அல்லது ஊசி போடும் இடத்தில் தோலின் கீழ் சிறிய இரத்த புள்ளிகள் போன்ற ஒரு அரிய சிக்கல் உருவாகினால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தினர். இந்த அரிய இரத்த உறைவு நிகழ்வுகளுடன் தொடர்புடைய இறப்புகள் இருந்தபோதிலும், அவ்வாறான பிரதிபலிப்புகள் சிகிச்சையளிக்கக்கூடியவை. தடுப்பூசியிலிருந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் இலேசான மற்றும் சாதாரண பக்க விளைவுகள் எதிர்பார்க்கப்படுவது பொதுவானதே.

இதைத் தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தடுப்பூசி பாதுகாப்புக்கான உலகளாவிய ஆலோசனைக் குழுவின் (GACVS) கோவிட்-19 துணைக்குழு ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் மற்றும் மருத்துவ தயாரிப்புகள் ஒழுங்குபடுத்தும் நிறுவனத்தால் நடத்தப்பட்ட விசாரணைகளின் மதிப்பாய்வின் அடிப்படையில் தங்கள் அறிக்கையை வெளியிட்டது. அவர்கள் பின்வருமாறு எழுதினார்கள், “தற்போதைய தகவல்களின் அடிப்படையில், தடுப்பூசிக்கும் குறைந்த இரத்த மென்தகடுகளுடன் இரத்த உறைவு ஏற்படுவதற்கும் இடையிலான ஒரு தொடர்பு நம்பத்தகுந்ததாகக் கருதப்படுகிறது, ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. தடுப்பூசிக்கும் சாத்தியமான ஆபத்தான காரணிகளுக்கு இடையிலான திறனை முழுமையாக புரிந்து கொள்ள சிறப்பு ஆய்வுகள் தேவை.”

உலகெங்கிலும் உள்ள மொத்தம் 710 மில்லியன் கோவிட்-19 தடுப்பூசி அளவுகளில் 200 மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி இதுவரை வழங்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நோய்த்தொற்றின் முதல் மரணம் பதிவாகியதிலிருந்து 16 மாதங்களில் கிட்டத்தட்ட 2.9 மில்லியன் மக்கள் கோவிட்-19 இனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Greifswald’s Institute for Immunology and Transfusion Medicine பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆண்ட்ரியாஸ் கிரேனச்சர், அரிய கோளாறுக்கு தடுப்பூசியால் தூண்டப்பட்ட இரத்தக்கட்டிபடல் நோயெதிர்ப்பு இரத்த மென்தகடுகள் (prothrombotic immune thrombocytopenia -குறைந்த இரத்த மென்தகடுகளின் எண்ணிக்கை) என்று பெயரிட்டார்.

இந்த அரிய இரத்த உறைவு நிகழ்வைப் பற்றிய மேலாதிக்கம் செலுத்தும் கோட்பாடு என்னவென்றால், இது ஹெப்பரின் தூண்டப்பட்ட இரத்தமென்தகடுகள் (Heparin-induced thrombocytopenia - HIT) எனப்படும் ஒரு நிலையை ஒத்திருக்கிறது. ஆனால் இது தடுப்பூசியால் வெளிப்படும் நோயெதிர்ப்பு பிரதிபலிப்பால் ஏற்படுகிறது. ஹெப்பரின் என்பது இரத்தக் கட்டிகளைத் தடுக்க அல்லது சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்தாகும். அரிதான நிகழ்வுகளில், இரத்தமென்தகட்டு கூறுகள் 4 (platelet factor 4 - PF4) எனப்படும் புரதத்துடன் பிணைக்கப்படும்போது, நோயெதிர்ப்புச்சக்தி முறைக்கு எதிராக பிறபொருளெதிரிகளை இந்த மருந்து உருவாக்கும். இந்த பிறபொருளெதிரிகள் இரத்தமென்தகடுகளுடன் பிணைக்கப்பட்டு அவற்றை தூண்டிவிடுகின்றன. இது தவறான இரத்தக் கட்டிகளை உருவாக்கத் தொடங்குகிறது. அதே நேரத்தில், இரத்தமென்தகடுகளின் எண்ணிக்கை குறைதல் நோய் ஏற்படுகிறது.

ஹெப்பரின் முதன்முதலில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான ஆய்வுகூடமருத்துவ பரிசோதனைகள் 1930 களின் நடுப்பகுதியில் மட்டுமே தொடங்கப்பட்டன. பின்னர் இந்த மருந்து, மருத்துவ ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு முக்கிய பாகமாக இருந்து வருகிறது. ஜூன் 1, 1957 அன்று, டாக்டர் ரோஜர் வைய்ஸ்மான் மற்றும் டாக்டர் ரிச்சர்ட் டோபின் ஆகியோர் நியூயோர்க்கில் நடந்த சர்வதேச இரத்தகுழாய்கள் அமைப்பின் விஞ்ஞானக் கூட்டத்தில் பத்து நோயாளிகள் குறித்த அறிக்கையை வழங்கினர். இந்த நோயாளிகளில் ஹெப்பரின் சிகிச்சையில் இருந்தபின் இரத்த நாடிகளில் (தமனிகளில்) அசாதாரண இரத்தக் கட்டிகளை உருவாக்கியுள்ளன. இறுதியாக, 1970 களில் இரத்தமென்தகடுகளின் எண்ணிக்கைகள் கணிப்பிடுவது வழக்கமாக நிகழ்த்தப்பட்ட பின்னர், இந்த நிலையின் நோய்க்கிருமி உருவாக்கம் புரிந்துகொள்ளப்பட்டது.

மார்ச் 29, 2021 அன்று முதன்முதலில் வெளியிடப்பட்ட ஒரு முன்கூட்டிய அறிக்கையில், கிரேனாச்சரும் மற்றும் பலரும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பெற்ற பின்னர் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவிலிருந்து வந்த ஒன்பது இரத்த உறைவு தொடர்பான விசாரணையை வெளியிட்டது. நோயாளிகளில் எட்டுப் பேர் பெண்கள், சராசரி வயது 36 ஆகவும், 22 முதல் 49 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தனர். ஏழு நோயாளிகளுக்கு பெருமூளை இரத்த உறைவு இருந்தது, ஒருவருக்கு நுரையீரல் தக்கையடைப்பு இருந்தது. ஒருவருக்கு கல்லீரல்-மண்ணீரல் இரத்த உறைவு இருந்தது. இறந்தவர்களில் நான்கு பேரின் முடிவிற்கு ரஹெப்பரின் தூண்டப்பட்ட இரத்தமென்தகடுகள் நோய் காரணம் என்ற முடிவுகளுக்கு வந்தனர். இந்த நோயெதிர்ப்பினால் உருவாக்கப்பட்ட வழிமுறையை துல்லியமாக தூண்டுவது எது என்பது இன்னும் தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளது.

நோய்த்தொற்றுகள், உயர் இரத்த அழுத்தம், இரத்த உறைவு மற்றும் நீரிழிவு நோயிலிருந்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு நவீன மருத்துவத்தில் மருந்துகள் ஒரு முக்கிய உதவியாக இருக்கின்றன. தொற்றுநோய்க்கான நோய்க்கிருமிகள் மற்றும் காசநோய், நச்சு காய்ச்சல், வாந்திபேதி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற சமூகத் துன்பங்களுக்கு பதிலளிக்கும் வகையிலான தடுப்பூசிகள் முக்கியமானவை. கடந்த 200 ஆண்டுகளில் ஆயுட்காலம் இரட்டிப்பாகியுள்ளது. இது அமெரிக்காவில் 80 ஐ எட்டியுள்ளது. 1880 மற்றும் 1920 க்கு இடையில் மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ஏனெனில் பொது சுகாதார நடவடிக்கைகளை அமுல்படுத்துவது தொற்று நோயின் கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவியது. குறிப்பாக அதிக மற்றும் பாதுகாப்பான உணவு மற்றும் தண்ணீருக்கான வினியோகங்கள் முக்கிய பங்கு வகித்தன.

ஆயினும்கூட, இந்த சமூக வெற்றிகளை வழங்கிய அதே மருந்துகள் தீங்கு விளைவிக்கும் மற்றும் ஒரு சிறிய அளவு மக்களுக்கு ஆபத்தானது என்று அறியப்படுகிறது. சுவாசப்பை இயங்காமைக்கு வழிவகுக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கான (antibiotic) கடுமையான ஒவ்வாமை இதற்கு ஒரு பொதுவான எடுத்துக்காட்டாகும். எவ்வாறாயினும், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் சமூகத்திற்கு என்ன நன்மைகளை அளித்தன என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை. கோவிட்-19 தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, மூன்று கட்ட மருத்துவ பரிசோதனைகள் அத்தகைய பாதுகாப்பு கவலைகள் எதுவும் இல்லை என்பதை காட்டியது. மில்லியன் கணக்கான மக்கள்தொகையினர் தடுப்பூசி போடப்பட்ட இந்த அரிய நிகழ்வுகளை விளங்கிக்கொள்ள ஒரு விழிப்புணர்வான மருந்து கண்காணிப்பு திட்டம் தேவைப்படுகின்றது.

ஆனால் இந்த உள்ளடக்கத்தில் துல்லியமாகவே சமூகத்திற்கு கிடைக்கும் நன்மைகள் ஒரு சிறிய சிறுபான்மை மக்களுக்கு ஏற்படும் அபாயங்களுடன் மதிப்பிட்டு பார்க்கப்பட வேண்டும். Guardian பத்திரிகை சமீபத்தில் பின்வருமாறு குறிப்பிட்டது போல, “வழமைக்கு மாறான நிகழ்வாக இருப்பதால் இந்த அரிதான நிகழ்வுக்கு பொருத்தமற்ற விகிதாசாரத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அரசியல் பெரும்பாலும் அறிவாற்றலின் பலவீனத்தை சுரண்டிக்கொள்கிறது. உணர்ச்சியும் மிகைப்படுத்தலும் பிரதிபலிப்பையும் பகுத்தறிவையும் பின்தள்ளுகின்றது. இது தொற்றுநோய் முழுவதும் ஆபத்தாக உள்ளது.”

தடுப்பூசிகள் அரசியல்மயமாக்கப்படாமலும் வியாபாரமயமாக்கப்படாமலும் இருப்பது என்பது அத்தியாவசியமாகின்றது. மேலும் சமூகங்கள் தங்கள் மருந்துகளை ஒழுங்குபடுத்தும் நிறுவனங்களால் எடுக்கப்படும் இந்த முடிவுகளின் தன்மையைப் பற்றி மேலும் அறியவதற்கு அவர்களின் சுகாதார அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவேண்டும். எவ்வாறாயினும், சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையின் தன்மையுடனும், அரசாங்க மற்றும் பொது சுகாதார அதிகாரிகளால் மக்களின் உயிர்கள் புறக்கணிக்கப்படுவதன் மத்தியிலும், தொழிலாள வர்க்கம் அதன் நலனை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கட்டமைப்பு தொடர்பாக ஒரு எதிர்ப்பை காட்டும் நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய நிலையில் உள்ளது.

Loading