ஐரோப்பிய கோவிட்-19 தடுப்பூசி திட்டம் ஒரு தோல்வியை ஏற்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 சர்வதேச அளவில் பரவி வருகின்ற அதேவேளையில், இன்னும் அதிகளவில் தொற்றக்கூடிய புதிய வகை வைரஸ் அதிகரித்தளவில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், ஐரோப்பாவில் தடுப்பூசிகளின் வினியோகம் சிக்கலுக்குள்ளாகி தாமதமாகி வருகிறது.

பிரான்சில் நிலைமை மிகவும் கடுமையாக உள்ளது, அங்கே 3.2 மில்லியன் மக்களுக்கு மட்டுமே முதல்கட்ட தடுப்பூசி கிடைத்துள்ளது, மார்ச் 4 நிலவரப்படி 1.7 மில்லியன் பேர் மட்டுமே அவசியமான இரண்டாவது கட்ட மருந்தைப் பெற்றிருக்கிறார்கள்—தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் விகிதம் வெறும் 2.5 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக உள்ளது. ஜேர்மனி தோராயமாக மொத்தம் சுமார் 6.2 மில்லியன் டோஸ் மருந்து அளித்துள்ளது, இதில் பெரும்பாலானவை இரண்டு கட்ட மருந்திடலில் முதல்கட்டமாக உள்ளது. ஐரோப்பா முழுவதுமே இதே போன்ற நிலைமை தான். பெல்ஜியம், சுவீடன், ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, செக் குடியரசு மற்றும் நெதர்லாந்தில் மூன்று சதவீதம் அல்லது அதற்கும் குறைந்த சதவீத தடுப்பூசிகளே போடப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த ஐரோப்பாவில் தடுப்பூசி இடுவதில் கணிசமாக முன்னேறி உள்ள பிரிட்டனில், மக்கள்தொகையில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவானவர்களே அவசியமான அவர்களின் இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்றுள்ளனர், அதே வேளையில் 23 மில்லியன் பேர் முதல் கட்ட தடுப்பூசியை பெற்றுள்ளனர். ஒப்பிட்டு பார்க்கையில், இஸ்ரேலில் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த வாரம் 4.9 மில்லியனைத் தாண்டியுள்ளது, இது மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

ஐரோப்பாவில் தடுப்பூசி திட்டம் ஆரம்பத்தில் இருந்தே குழப்பமாக இருந்தது. தடுப்பூசியின் ஒருங்கிணைந்த சர்வதேச விநியோகத்திற்கான நிஜமான திட்டம் எதுவும் அரசாங்கங்களிடம் இல்லாத நிலையில், செல்வந்தர்களுக்கும் பெருநிறுவனங்களுக்குமான வரிக் குறைப்புகளுக்கு நிதியளிக்க பல தசாப்தங்களாக சுகாதார அமைப்புகளில் செய்யப்பட்ட சிக்கன நடவடிக்கைகளால் முக்கிய உள்கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது. சான்றாக ஜேர்மனியில், தடுப்பூசிக்காக பதிவு செய்யும் இணைய தளம் பல மாதங்களாக ஒரேயொரு பதிவு செய்வதற்கு, அதாவது முதல் தடுப்பூசி பதிவு செய்வதற்கு மட்டுமே பயனர்களை அனுமதிக்கிறது, இதனால் அடுத்த மருந்து கிடைப்பதற்கான அறிவிப்புக்காக பயனர்கள் காத்திருப்போர் பட்டியலில் செல்ல அது எந்த வழிவகையும் வழங்கவில்லை.

குறைந்தபட்சம் ஜனவரி இறுதி வரையிலாவது தடுப்பூசி வழங்கும் வேகம் மெதுவாக இருந்ததற்கான ஒரு முக்கிய காரணி, மருந்து கையிருப்பு பற்றாக்குறையாகும். மிகப்பெரும் மருந்து தயாரிப்பு பெருநிறுவனங்கள், ஐரோப்பிய அரசாங்கங்களுடன் நடத்திய பத்து பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களின் விட்டுக்கொடுப்பற்ற பேரம்பேசல்களுக்குப் பின்னரும், அவை போதுமான தடுப்பூசிகளை வினியோகிக்க தவறின.

இது ஐரோப்பிய முதலாளித்துவத்தின் திவால்நிலையை அம்பலப்படுத்துகிறது. கடந்த வசந்த காலத்தில் இருந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆணையங்கள் வங்கி மற்றும் பெருநிறுவன பிணையெடுப்புகளுக்காக ட்ரில்லியன் கணக்கான யூரோக்கள் மற்றும் பவுண்டுகளை விநியோகித்துள்ளன. பங்குச் சந்தைகள் உயர்ந்துள்ளன, பிரான்சின் பேர்னார்ட் அர்னோல்ட் போன்ற தனிப்பட்ட பல கோடி பில்லியனர்கள் தங்கள் தனிப்பட்ட செல்வவளத்தில் பத்து பில்லியன் கணக்கில் யூரோக்களைச் சேர்த்துள்ளனர். ஆனால் தடுப்பூசி உற்பத்தி திறனைப் பாரியளவில் அதிகரிக்கவோ, அவற்றை விநியோகிக்கத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களை உற்பத்தி செய்யவோ அல்லது சுகாதார வரவு-செலவுத் திட்டங்களை அதிகரிக்கவோ பொதுப்பணித் வேலைத்திட்டங்கள் எதுவும் அங்கே இல்லை. அதற்கு பதிலாக, இந்த நெருக்கடியிலிருந்து இலாபத்தை அறுவடை செய்து வரும் அதே தனியார் பெருநிறுவனங்களுக்கே பில்லியன்கள் சென்று சேர்ந்தன.

சமூக இடைவெளி மற்றும் மக்களுக்கான தடுப்பூசி சம்பந்தமாக ஓர் உலகளாவிய கொள்கை அவசர தேவையாக உள்ளது. ஆனால் அது பெருநிறுவன இலாப நலன்களாலும், போட்டி முதலாளித்துவ அதிகாரங்களின் தேசிய நலன்களாலும் தடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கங்களும் தொழிற்சங்கங்களும் நூறாயிரக்கணக்கான உயிர்களை விலை கொடுக்கும் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை" கொள்கையைக் கொண்டு, தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்பச் செய்யவும், இளைஞர்களை மீண்டும் பள்ளிக்குத் திரும்ப செய்யவும் விரட்டிய போது, முதலாளித்துவச் சந்தை ஒரு படுவீழ்ச்சியை ஏற்படுத்தியது.

தடுப்பூசியை காப்புரிமையின்றி உற்பத்தி செய்ய அனுமதிக்குமாறு இந்தியா மற்றும் தென்னாபிரிக்காவின் கோரிக்கைகளை கடந்த அக்டோபரில் ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவும் வீட்டோ தடுப்பதிகாரம் கொண்டு தடுத்தன. ஏனெனில் இது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பெருநிறுவனங்களின் நலன்களை அச்சுறுத்தும் என்பதோடு தடுப்பூசி ஏகபோகத்தை ஓர் இராஜாங்க ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கான அவற்றின் திறனையும் அச்சுறுத்தும் என்பதால் ஆகும். இதே காரணத்தினால் தான், சீனா மற்றும் ரஷ்யா தயாரித்த தடுப்பூசிகளைச் சர்வதேச அளவில் விநியோகிக்கவும் அவை விரோதமாக இருந்தன.

டிசம்பரில், ஃபைசர்/ பயோஎன்டெக் (Pfizer/BioNTech) நிறுவனம் அது வாக்குறுதி அளித்தவாறு 2020 இன் இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 12.5 மில்லியன் டோஸ் மருந்துகளை அதனால் வினியோகிக்க முடியாது என்று அறிவித்தது. அது ஐரோப்பாவில் உற்பத்தியை அதிகரிப்பதாக உறுதியளித்தது என்றாலும், அக்கண்டத்தின் உற்பத்தியாளர்கள் உடனான அதன் பேரம்பேசல்களின் முடிவைப் பொறுத்திருக்கும் என்பதை அது தெளிவுபடுத்தியது.

ஜனவரி இல், மாடர்னா நிறுவனம் (Moderna) இத்தாலி மற்றும் பிரான்ஸ் இரண்டு நாடுகளுக்குமான வினியோகத்தில் 20 சதவீதத்திற்கும் கூடுதலாக வெட்டுக்களை அறிவித்தது.

ஐரோப்பிய மருத்துவ ஆணையத்தால் பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட மற்றொரு ஒரேயொரு தடுப்பூசி, ஆக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா (Oxford-AstraZeneca) தொடர்ச்சியான தாமதங்கள் மற்றும் திட்டமிட்ட வினியோகங்களில் வெட்டுக்களை அறிவித்துள்ளது. பெப்ரவரி 23 இல், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் அநாமதேய அதிகாரியை மேற்கோளிட்டு ராய்ட்டர்ஸ் குறிப்பிடுகையில், அஸ்ட்ராசெனெகா அதன் இரண்டாவது காலாண்டு ஏற்றுமதிகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைக்கும், ஏப்ரல் முதல் ஜூன் வரை உறுதியளித்த 180 மில்லியனில் 90 மில்லியனை மட்டுமே வழங்கக்கூடும் என்று குறிப்பிட்டது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளைப் பெற ஐரோப்பிய ஒன்றியம் முயன்று வருவதாக மார்ச் 6 இல் பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது.

உற்பத்தி குறைவு குறித்து அஸ்ட்ராசெனெகாவுக்கு ஜனவரி தொடக்கத்திலேயே தெரியும் என்றாலும், அது முதல் காலாண்டுக்கான 90 மில்லியன் டோஸ்களில் 40 மில்லியனை மட்டுமே வழங்க முடியும் என்பதை அந்த மாத இறுதியில் தான் அறிவித்தது. நடப்பிலிருக்கும் தடுப்பூசிகளின் பற்றாக்குறை, Île-de-France பகுதியில் பல வாரங்களாக தடுப்பூசிகான முன்னேற்பாடுகளை ஒத்தி வைக்க பிரான்ஸை நிர்பந்தித்தது, அதேவேளையில் ஸ்பெயினும் அதன் திட்டங்களைப் பின்னுக்கு இழுக்க வேண்டியிருந்தது.

அஸ்ட்ராசெனெகாவின் அறிவிப்பு ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஒரு கசப்பான தேசியவாத மோதலைத் தூண்டியது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட இரண்டு ஆலைகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளின் ஒரு பகுதியை, அஸ்ட்ராசெனெகாவின் ஐரோப்பிய ஒன்றிய கடமைப்பாடுகளைப் பூர்த்தி செய்ய திருப்பி விட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரியது, அதை பிரிட்டிஷ் அரசாங்கம் நிராகரித்தது. அயர்லாந்துக்குத் தடுப்பூசி ஏற்றுமதிகள் செய்வது இங்கிலாந்துக்கு தடுப்பூசிகளை அனுப்ப பயன்படுத்தப்படலாம் என்று குறிப்பிட்டு, ஐரோப்பிய ஒன்றியம் ஜனவரி 28 இல் பல மணி நேரம் அயர்லாந்துக்குத் தடுப்பூசி ஏற்றுமதிகள் செய்வதற்குத் தடை விதித்தது. ஜோன்சன் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன் ஐ தொலைபேசியில் அழைத்து அந்நடவடிக்கை குறித்து "கடுமையான கவலைகளை" வெளிப்படுத்திய பின்னரே அந்த முடிவு கைவிடப்பட்டது.

அதே வாரத்தில், பல ஐரோப்பிய நாடுகளும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பயன்படுத்துவது மீது கட்டுப்பாடுகளை அறிவித்தன, இது அதன் செயல்திறன் குறித்த விஞ்ஞான அக்கறையால் உந்தப்பட்டிருப்பதாக அவை வாதிட்டன. அரசு ஆதாரநபர்களை மேற்கோள் காட்டி ஐரோப்பிய அரசாங்கங்களும் செய்தி வெளியீடுகளும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி மீதான நம்பிக்கையைக் குறைக்க ஒரு பொறுப்பற்ற பிரச்சார நடவடிக்கையைத் தொடங்கின.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஜனவரி 29 இல் குறிப்பிடுகையில், “[அஸ்ட்ராசெனெகா] தடுப்பூசி நடைமுறையில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குச் செயல்திறனற்றதென இன்று நாங்கள் நினைக்கிறோம்,” என்றார், இந்த கூற்றுக்கான எந்த ஆதாரத்தையும் அவர் மேற்கோள் காட்டவில்லை. ஜேர்மனிய நாளேடான Handelsblatt, “அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி வயதானவர்களில் 8 சதவீதத்தினருக்கு மட்டுமே வெளிப்படையான செயல்திறன் கொண்டிருப்பதாக" வாதிட பெயர் வெளியிடா ஒரு ஜேர்மன் அரசு ஆதாரநபரை மேற்கோளிட்டது.

இந்த அறிக்கைகள் எந்த விஞ்ஞானபூர்வ உண்மையையும் அடிப்படையாகக் கொண்டவை அல்ல. சொல்லப் போனால் இந்த எட்டு சதவிகித எண்ணிக்கையே கூட, 56-69 வயதானவர்களுக்கு செய்யப்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி வெள்ளோட்ட பரிசோதனைகளின் போது பங்கெடுத்தவர்களின் பகுதியாகும். பங்கெடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் 18 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள், அதேவேளையில் 1,500 க்கும் குறைவானவர்கள் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், 450 பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தனர்.

ஐரோப்பிய மருத்துவ ஆணையம் ஜனவரியில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்தபோது, வெள்ளோட்ட பரிசோதனைகளில் பங்கெடுத்த வயதானதவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்ததை அது கவனத்தில் எடுத்திருந்தது. இந்த வயதினரிடையே நோயெதிர்க்கும் விடையிறுப்பு தென்பட்டதாலும், மற்ற தடுப்பூசிகளின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டும், வயதான நோயாளிகளிடையே இதேபோன்ற செயல்திறனை எதிர்பார்க்கலாம் என்றும், கூடுதல் புள்ளிவிபரங்களை தொடர்ந்து சேகரித்து பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அது குறிப்பிட்டிருந்தது.

நான்கு வாரங்களுக்கு இடையே இரண்டு முறை தடுப்பூசி செலுத்தும் அடிப்படையில், அஸ்ட்ராசெனெகாவின் மருத்துவ வெள்ளோட்ட பரிசோதனைகளின் ஆரம்ப பகுப்பாய்வு, 62 சதவிகித செயல்திறனுடன் நோய்க்கான எல்லா அறிகுறிகளையும் தடுத்திருந்ததாக அது மதிப்பிட்டது. மார்ச் 6 இல் லான்செட்டில் பிரசுரிக்கப்பட்ட மிகச் சமீபத்திய கட்டுரை ஒன்று, உரிய நேர இடைவெளியில் தடுப்பூசிகள் இரண்டு முறை வழங்கப்பட்டால் அந்த எண்ணிக்கை சுமார் 81 சதவீதத்திற்கு அதிகரிப்பதாக வாதிட்டது.

மாடர்னா மற்றும் ஃபைசர் இரண்டினது மருத்துவ வெள்ளோட்ட பரிசோதனைகள், மதிப்பீட்டின்படி 94 முதல் 95 சதவிகிதம் வரை செயல்திறன் பெற்றிருப்பதாக பதிவு செய்யப்பட்டது.

உற்பத்தியாளர்களின் வழிமுறையை மீறி ஆனால் பிரிட்டன் அரசு கொள்கைக்கு ஏற்ப, தடுப்பூசி ஒரேயொரு முறை வழங்கப்பட்டால், அஸ்ட்ராசெனெகா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகள் கோவிட்-19 நோயாளிகளின் அறிகுறியை நீக்கும் அளவுக்கும் (சுமார் 60 சதவீதம்), வயதான நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதத்தைக் குறைக்கும் அளவுக்கும் மட்டுமே செயல்திறன் கொண்டுள்ளன என்பதை பிரிட்டன் மற்றும் ஸ்காட்டிஷ்ஷின் சமீபத்திய ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

இந்த ஆய்வுகள் வெளியிடப்பட்ட பின்னர், ஜேர்மன் அரசாங்கம் 65 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைச் செலுத்த ஒப்புதல் அளித்தது. அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியும் மாடர்னா மற்றும் ஃபைசரைப் போலவே செயல்திறன் கொண்டதே, ஆனால் வயதானவர்களுக்குத் தவிர்த்து என்று அறிவித்து, பிரெஞ்சு அரசாங்கமும் அதேபோன்ற திடீர் திருப்பத்தை அறிவித்தது. ஏற்கனவே வேறு வியாதிகளுடன் இருக்கும் 65-74 வயதினர் உள்ளடங்கலாக, 75 வயதுக்கு குறைந்த எல்லா நோயாளிகளுக்கும் அதை பயன்படுத்தலாம் என்று அது அறிவுறுத்துகிறது. வயதான நோயாளிகளுக்கு இன்னமும் மாடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளே வழங்கப்படுகின்றன.

நேற்று டென்மார்க், ஆஸ்திரியா, எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா மற்றும் லுக்செம்பேர்க் ஆகிய அனைத்தும் ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்ட 1 மில்லியன் டோஸ் தொகுப்பிலிருந்து அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்தன. டென்மார்க்கில் ஒரு பெண்ணும், ஆஸ்திரியாவில் 49 வயதான ஒரு செவிலியரும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பெற்ற பின்னர் இரத்த உறைவால் உயிரிழந்தனர். டென்மார்க்கின் சுகாதார அதிகாரிகள் அந்த தடுப்பூசியைப் பயன்படுத்துவதில் இது வெறும் இடைநிறுத்தம் மட்டுமே என்று வலியுறுத்தினர், ஸ்பெயின் அரசாங்கம் குறிப்பிடுகையில் அது அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பயன்படுத்துவதை நிறுத்தவில்லை என்று ஓர் அறிக்கை வெளியிட்டது. ஐரோப்பிய மருந்துகள் ஆணையம் (EMA) குறிப்பிடுகையில், "தடுப்பூசி இத்தகைய நிலைமைகளை ஏற்படுத்தியதற்கான எந்த அறிகுறியும் தற்போது இல்லை, இவை இந்த தடுப்பூசியின் பக்க விளைவுகளாகவும் பட்டியலிடப்படவில்லை," என்றது.

என்ன தெளிவாக இருக்கிறதென்றால், தடுப்பூசிகளின் விநியோகம் உட்பட சுகாதாரக் கொள்கையானது மருத்துவ வல்லுனர்களின் விஞ்ஞானக் கண்ணோட்டங்களின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும், இப்போது வரையில் நடப்பிலிருக்கும் பெருநிறுவன இலாப மற்றும் அரசு மூலோபாய நலன்களின் மேலாளுமையிலிருந்து அது விடுவிக்கப்பட வேண்டும். அனைத்திற்கும் மேலாக, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய போதிய அவகாசம் வழங்கவும், புதிய வகை வைரஸ் உருவாவதைத் தடுக்கவும், சமூக அடைப்புகள் உள்ளடங்கலாக சமூக இடைவெளியை உறுதிப்படுத்துவது முக்கியமாகும். இது மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றும்.

ஆனால் ஐரோப்பாவில் வெறும் மேலோட்டமாக தொடங்கப்பட்டுள்ள ஒரு தடுப்பூசி செயல்திட்டம், நடப்பிலிருக்கும் சமூக தனிமைப்படலுக்கான மிகவும் மட்டுப்பட்ட நடவடிக்கைகளைக் கூட முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒரு காரண விளக்கமாக அரசாங்கங்களால் பயன்படுத்தப்படுகின்றன. இந்த குற்றகரமான கொள்கை கட்டுப்பாடின்றி அந்த வைரஸ் பரவுவதை உறுதிப்படுத்துவதோடு, அவசியமின்றி எண்ணற்ற உயிரிழப்புகளுக்கு இட்டுச் செல்ல அச்சுறுத்துகிறது. இதற்கும் மேலாக, தொடர்ந்து வைரஸ் பரவுவதும் மற்றும் வைரஸ் உருமாறுவதும், எதிர்கால உருமாறிய வைரஸ்களைத் தற்போதைய தடுப்பூசிகளும் மனித உடலில் தூண்டப்படும் எதிர்ப்புசக்தியும் எதிர்க்காமல் போவதற்கான வாய்ப்புகளை மட்டுமே அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறிருந்தாலும், சமூக அடைப்பைச் செயல்படுத்த மக்ரோன் மறுத்ததைச் சமீபத்தில் பாராட்டிய பிரெஞ்சு நாளேடு Le Monde, "இந்த அதிரடியான தீர்வை நிராகரிக்க இப்போது நிலவும் அரைகுறையான பொது அபிப்ராயத்தை" ஆதரித்தது. ஒரு சமூக அடைப்புக்குப் பதிலாக அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை ஊக்குவிக்க அழைப்பு விடுத்த அது பின்வருமாறு நிறைவு செய்தது: “தடுப்பூசிகளை இந்த நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான நமது முக்கிய வழியாக பரிசீலிப்பதற்காக, அவற்றை நோக்கிய அணுகுமுறைகளை மிகவும் அவசரமாக மாற்ற வேண்டும். இந்த நிலைப்பாட்டிலிருந்து பார்த்தால், துரதிருஷ்டவசமாக, அரசாங்கங்களின் சேதி என்ன அவசியமோ அதற்கும் மிகக் குறைவாக உள்ளது.”

பெருநிறுவன இலாபங்களை அதிகரிக்க தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்தி இருக்கும் அதேவேளையில் ஐரோப்பிய முதலாளித்துவம் இந்த வைரஸ் பரவ அனுமதிக்கும் விதத்தில் தொற்றுநோய் குறித்த அதன் ஒட்டுமொத்த "சமூக நோயெதிர்ப்பு பெருக்கும்" கொள்கைக்கு இணங்க, அது அதிஅவசியமான சமூக இடைவெளி பின்பற்றும் நடவடிக்கைகளைக் கூடுதலாக குறைப்பதற்கு ஒரு சாக்குபோக்காக இந்த தடுப்பூசிகளைப் பயன்படுத்துகிறது.

ஆளும் வர்க்கத்தின் தோல்வியுற்ற கொள்கைகளுக்கு எதிராகவும், விஞ்ஞான அடிப்படையிலான கொள்கைக்காகவும் ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் அணிதிரட்டுவதே முக்கிய கேள்வியாகும். தடுப்பூசிக்கு அவகாசம் வழங்கும் பொருட்டு சமூக இடைவெளி மற்றும் சமூக அடைப்புக்கான ஒரு போராட்டமே இந்த மோதலின் மையத்தில் உள்ளது. இதுபோன்றவொரு போராட்டத்தைத் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் பிடியில் ஒழுங்கமைக்க முடியாது என்பதை இந்த தொற்றுநோயின் கடந்தாண்டு எடுத்துக்காட்டுகிறது, இவை அனைத்துமே "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையை ஆதரித்தன. இந்த போராட்டத்தை நடத்த தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த சாமானிய பாதுகாப்பு அமைப்புகள் அவசியமாகும்.

அதே நேரத்தில், வைரஸை எதிர்த்துப் போராட, அத்தகைய அமைப்புகளுக்கு ஒரு சோசலிச முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டம் அவசியமாகிறது. அத்தியாவசியமற்ற வேலையிடங்களை மூடுவதற்காக தொழிலாளர்களுக்கும் சிறுவணிகங்களுக்கும் வாழ்வாதார கூலிகளை வழங்காமல் சமூக அடைப்புகளைச் செயல்படுத்த முடியாது. மிகப்பெரும் மருந்து நிறுவனங்களை, வங்கிகள் மற்றும் ஏகாதிபத்திய அரசுகளின் இலாபம் மற்றும் மூலோபாய நலன்களுக்காக அல்ல, தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றுவதற்கு, ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான ஒரு புரட்சிகர போராட்டம் தேவைப்படுகிறது.

Loading