ஜேர்மனியின் ஆயுதப்படைகள் "உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான தன்னார்வ இராணுவ சேவை" மூலம் உள்நாட்டில் ஈடுபடுத்துவதற்கு ஆட்களை திரட்டுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஏப்ரல் 6 அன்று, ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சகம் “உள்நாட்டுப் பாதுகாப்பில் தன்னார்வ இராணுவ சேவையை” ஆரம்பிக்க சமிக்ஞையை கொடுத்தது.

பாதுகாப்பு மந்திரி அன்னெக்ரெட் கிராம்ப்-காரன்பவர் (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், CDU), பாதுகாப்பு அமைச்சின் மாநில செயலாளர் பீட்டர் டவ்பர் மற்றும் இராணுவத்தின் துணை அதிகாரி மார்கூஸ் லவ்பென்தால் ஆகியோர் செய்தியாளர் கூட்டத்தில் இந்த திட்டத்தை வழங்கினர். இது ஆரம்பத்தில் "மூன்று மாத அடிப்படை இராணுவப் பயிற்சியையும், அதை தொடர்ந்து நான்கு மாத சிறப்புப் பயிற்சியையும் மொத்தமாக சுமார் 1,000 நபர்களுக்கு வழங்குகிறது." இதைத் தொடர்ந்து "இராணுவத்தின் சேமப்படை உறுப்பினர்களாக ஆறு ஆண்டு அடிப்படை பணி செய்யலாம். இதன் போது குறைந்தது ஐந்து மாதம் இராணுவத்திற்கு சேவை செய்யவேண்டும்."

இது 20 ஆம் நூற்றாண்டில் இரண்டு தோல்வியுற்ற உலகப் போர்களுக்குப் பின்னர் ஜேர்மனியை மீண்டும் ஒரு சக்திவாய்ந்த இராணுவ சக்தியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான இராணுவமயமாக்கல் முனைப்பின் ஒரு பகுதியாக படிப்படியாக விரிவாக்கப்படவுள்ள புதிய இராணுவ சேவையாகும். இது இரண்டு முதன்மை குறிக்கோள்களுக்கு உதவுகிறது: ஒன்று இராணுவத்தை உள்நாட்டிலையே பெருமளவில் ஈடுபடுத்துவது மற்றும் புதிய போர் நடவடிக்கைகளுக்கு கூடுதல் துருப்புக்களை அணிதிரட்டுதல்.

உள்நாட்டு பாதுகாப்பு படைக்கான விளம்பர பிரச்சார சுவரொட்டி

"இந்த சேவைக்கு ஒரு இராணுவ தேவை உள்ளது," என்று டவ்பர் கூடியிருந்த பத்திரிகை பிரதிநிதிகளிடம் கூறினார். ஜேர்மன் இராணுவத்திற்கு “ஒரு புதிய துணை சேமப்படை கட்டமைப்பிற்கான இராணுவத் தேவை உள்ளது. அதேபோல் இராணுவத்திற்கு பொதுவாக சேமப்படை தேவைப்படுகிறது. நாங்கள் தற்போது இதை நிர்வாகரீதியான உதவிகளில் மட்டுமல்ல, வெளிநாட்டு இராணுவநடவடிக்கைகளிலும் அனுபவித்து வருகிறோம். இது “சேமப்படையின் தேவை ஏற்கனவே தற்போது மட்டுமல்லாது எதிர்காலத்தில் இருக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இப்போது மீண்டும் வளர்ந்து வரும் இந்த உள்நாட்டு பாதுகாப்பு பிரிவுகள், பாதுகாப்புப் படைகளாக ஒரு தெளிவான இராணுவப் பணியைக் கொண்டுள்ளன” என்றார்.

புதிய சேவையுடன், கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் (CDU/CSU) மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் (SPD) மாபெரும் கூட்டணியின் விரிவான மறுசீரமைப்பு மற்றும் போர் திட்டங்கள் ஆகியவை நடைமுறைக்கு வரும் என்ற உண்மையை டவ்பர் வெளிப்படையாக பேசினார். "உள்நாட்டுப் பாதுகாப்பில் தன்னார்வ இராணுவ சேவையானது 'ஜேர்மனிக்கான உங்கள் ஆண்டு', நீங்கள் விரும்பினால் சேமப்படை வியூகத்திலிருந்து ஒரு தர்க்கரீதியான வழித்தோன்றல் எனக்கொள்ளலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக, இராணுவத்தின் திட்டம் மற்றும் எவ்வாறான தகமை இருக்கவேண்டும் என்ற நிறுவன ஆவணங்களில் ஒன்றாகும், ”என்று அவர் விளக்கினார்.

இது மிகத்தெளிவானது. ஜூலை 2018 இன் இறுதியில் வெளியிடப்பட்ட “இராணுவத்தின் திட்டம்” (Concept of the Bundeswehr) என்பது ஜேர்மனியின் “மிகப் பெரிய” இராணுவ நடவடிக்கைகளுக்கும் மூன்றாம் உலகப் போருக்கும் சாத்தியமான ஒரு தயாரிப்பாகும். இந்த "திட்டத்தின்" மத்திய புள்ளியாக "பணி நோக்குநிலை", "பணிகள் மற்றும் புதிய சவால்கள், அபாயங்கள் மற்றும் அச்சுறுத்தல்களின் அனைத்து வடிவங்களுக்கும்" இராணுவத்தைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறது என இந்த ஆவணத்தில் ஒரு கட்டத்தில் கூறுப்படுகிறது. "தேசிய மற்றும் கூட்டணியின் பாதுகாப்பிற்காக", இராணுவம் விரிவான திறன்களைக் கொண்டு "குறுகிய நேரத்திற்குள், அனைத்து பரிமாணங்களிலும் ஒரு போருக்கு தயாரான, பெரிய அளவிலான பிரிவுகளை நாட்டினுள்ளும் மற்றும் கூட்டணி நாடுகளின் எல்லைகளுக்குள்ளும் ஈடுபடுத்தகூடியதாக இருக்கவேண்டும்” எனக்குறிப்பிடுகின்றது.

"திறன் விவரக்குறிப்பு" (Capability Profile) என்பது வரவிருக்கும் ஆண்டுகளில் இராணுவத்தின் அனைத்து பிரிவுகளையும் பெருமளவில் மேம்படுத்துவதற்கான உறுதியான திட்டத்துடன் கூடிய உள் ஆவணம் ஆகும். 2031 வாக்கில், ஜேர்மன் இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவை முறையாக போருக்கு தயாராக வேண்டும்.

2014 ஆம் ஆண்டில் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் ஜேர்மன் இராணுவவாதம் திரும்புவதாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததிலிருந்து, 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜேர்மன் மீண்டும் ஒன்றிணைந்ததிலிருந்தும் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்தும், ஆயுதப்படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க "தேசிய மற்றும் கூட்டணி பாதுகாப்புக்குத் திரும்பு" என்ற முழக்கத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில், இராணுவத்தின் உலகளாவிய யுத்த நடவடிக்கைகள் தொடர்பான மூர்க்கமான நோக்குநிலை பராமரிக்கப்பட்டு மேலும் விரிவாக்கப்பட வேண்டும்.

புதிய இராணுவ சேவையுடன் செயல்படுத்தப்படும் 2019 அக்டோபரில் வெளியிடப்பட்ட “சேமப்படை மூலோபாயம்” (“reserve strategy”), திட்டமிடப்பட்ட போர் தாக்குதலுக்கு தேவையான படையினருக்கு பயிற்சி அளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது "பாரம்பரிய அதிகார அரசியலின் மறுமலர்ச்சியைப் பற்றி பேசுகிறது. இது தேசிய குறிக்கோள்களைப் பின்தொடர்வதில் வழக்கமான இராணுவ வழிமுறைகளைப் பயன்படுத்துவதையும் கற்பனை செய்கிறது". மற்றும் இதிலிருந்து சமூகம் முழுவதையும் ஒரு விரிவான இராணுவமயமாக்கும் தேவையை பெற்றுக்கொள்கின்றது.

சேமப்படையினர் "உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள இராணுவத்தின் முழு செயல்பாட்டு மற்றும் நடவடிக்கைகளிலும் செயற்பாட்டில் உள்ள சக்திகளின் திறன்களை வலுப்படுத்த வேண்டும்" என்று அது கூறுகிறது, மேலும் "சமூகத்தில் உத்தரவுகள் மற்றும் சேமப்படையினருக்கான சேவையிலிருந்து சுயாதீனமாக இராணுவத்தினருக்கு முகவர்களாகவும் மற்றும் பிரதிபலிப்பவர்களாக செயல்பட வேண்டும்”.

புதிய இராணுவ சேவையின் அர்த்தம் இந்த திட்டங்கள் இப்போது விரைவான வேகத்தில் செயல்படுத்தப்படுகின்றன. "ஐந்து உள்நாட்டு பாதுகாப்பு படைப்பிரிவுகளை நிறுவுவதன் மூலம், 2025 ஆம் ஆண்டளவில் உள்நாட்டு பாதுகாப்பை கட்டமைப்பு ரீதியாக மேலும் பலப்படுத்துவோம். ஒரு குழுவாக, உள்நாட்டு பாதுகாப்பு படைப்பிரிவுகள் பிராந்திய சேமப்படை மையத்தை உருவாக்கி பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஆதரவு நிறுவனங்களை வழிநடத்தும் ”என்று இராணுவத்தின் ஜெனரல் ஏபேர்ஹார்ட் ஸோர்னின் தினசரி உத்தரவை குறிப்பிடுகின்றது. "குறிப்பாக தேசிய மற்றும் கூட்டணியின் பாதுகாப்பின் சிக்கலான நிலைமைகளைப் பொறுத்தவரை, பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பைப் பாதுகாக்க எங்களுக்கு வலுவான உள்நாட்டு பாதுகாப்புப் படைகள் தேவை." எனவும் அதில் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இப்பிரிவுகள் பெருகிய முறையில் உள்நாட்டில் "நிர்வாக உதவிகளின் கட்டமைப்பிற்குள், இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டால், குறிப்பாக கடுமையான விபத்துக்கள் ஏற்பட்டால் அல்லது தற்போதுள்ளதைப் போல தொற்றுநோயின் பின்னணியில்" பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்த பிரிவுகளை அவ்வாறு பயன்படுத்துதல் இரண்டு விஷயங்களில் ஒரு எச்சரிக்கையாகும். வெளிப்புறமாக, ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யா மற்றும் சீனாவுடனான மோதலை அதிகரித்து வருகின்றன, இது ஒரு அணுசக்தி யுத்தத்தின் ஆபத்தை மனிதகுலத்திற்கு ஆபத்தான விளைவுகளுடன் இணைக்கின்றது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் இதில் பெருகிய முறையில் ஆக்கிரோஷமான பங்கைக் கொண்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, பாதுகாப்பு அமைச்சின் இணையதளத்தில் இப்போது முக்கியமாக பதிக்கப்பட்ட ஒரு நேர்காணலில், கிராம்ப்-காரன்பவர் பாதுகாப்பு செலவினங்களை மேலும் அதிகரிப்பதாக அறிவித்து மாஸ்கோ மற்றும் பெய்ஜிங்கிற்கு எதிராக அச்சுறுத்தல்களை செய்தார்.

உள்நாட்டில், ஆளும் வர்க்கம் ஏற்கனவே இராணுவத்தை ஏகாதிபத்திய பேரரசு, வைமார் குடியரசு மற்றும் நாஜிக்களின் கீழ் ஒடுக்குமுறை கருவியாகப் பயன்படுத்தியுள்ளது. இப்போது அது மீண்டும் சமூக எதிர்ப்புக்களையும் புரட்சிகர நிகழ்வுகளையும் நசுக்க தயாராகி வருகிறது. இது 1930களுக்கு பின்னரான முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடிக்கு இவ்வாறு பதிலளிக்கின்றது. இந்நெருக்கடியானது கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் ஏற்பட்ட சுகாதாரம், சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளால் மேலும் மோசமடைந்துள்ளது.

ஜேர்மனியின் போருக்குப் பிந்தைய வரலாற்றில் இராணுவத்தின் மிகப்பெரிய அணிதிரட்டல் தற்போது "தொற்றுநோய்களில் நிர்வாக உதவிகளை" வழங்கும் போர்வையில் நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், சுமார் 15,000 இராணுவத்தினரை கொண்ட கொரோனா வைரஸ் பிரிவு உருவாக்கப்பட்டது. மார்ச் 3 ஆம் தேதி கடைசியாக இது அதிகரிக்கப்பட்டதிலிருந்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் 25,000 படையினரை தமது கைகளில் கொண்டுள்ளன. அவற்றில் ஒரு சிறிய பகுதியே நேரடி மருத்துவ உதவியை வழங்குகிறது. பல ஆயிரக்கணக்கானோர் "உறுதிப்படுத்தல்/ பாதுகாப்பு" என்ற பிரிவின் கீழ் அதிகாரபூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளார்கள். இதனால் இறுதியில் மக்கள் மீதான பொலிஸ்-இராணுவக் கட்டுப்பாட்டிற்கும் முதலாளித்துவ அரசு மற்றும் அதன் நிறுவனங்களின் பாதுகாப்பிற்கும் பணியில் இருத்தப்பட்டுள்ளனர்.

கடந்த காலத்தைப் போலவே, ஆளும் வர்க்கமும் அதன் இராணுவமயமாக்கல் தாக்குதலில் தீவிர வலதுசாரி சக்திகளை நம்பியுள்ளது. உலக சோசலிச வலைத் தளம் ஏற்கனவே முந்தைய கட்டுரையில் "உள்நாட்டுப் பாதுகாப்பில் தன்னார்வ இராணுவ சேவையை" "புதிய நாஜிக்கள் மற்றும் பிற வலதுசாரி தீவிரவாதிகளுக்கு அழைப்பிதழ்" என்று விவரித்துள்ளது. "உள்நாட்டுப் பாதுகாப்பு" என்ற சொல் கூட வலதுசாரி பயங்கரவாதிகள் மற்றும் நவ-நாஜிக்களிடையே பயன்படுத்தப்படும் ஒரு குறியீட்டு வார்த்தையாகும். எடுத்துக்காட்டாக, 2000 மற்றும் 2007 க்கு இடையில் குறைந்தது ஒன்பது புலம்பெயர்ந்தோரைக் கொன்ற நவ-நாஜி National Socialist Underground (NSU) அமைப்பு, “துரிங்கியன் உள்நாட்டுப் பாதுகாப்பு” என்று அழைக்கப்படுவதிலிருந்து ஆட்சேர்ப்பு செய்தது.

பத்திரிகையாளர் சந்திப்பில், கிராம்ப்-காரன்பவர் "உள்நாட்டு பாதுகாப்பு" (“Heimatschutz”) என்ற பெயர் "மிகவும் நனவான அரசியல் முடிவு" என்று கூறினார். "இந்த நாட்டில் வலதுசாரிகளிடம் உள்நாட்டு என்ற வார்த்தையை விட்டுவிடுவது ஒரு தவறு. அவர்கள் அதை தவறாக பயன்படுத்துகிறார்கள்." "இந்த வார்த்தையை மீண்டும் ஜனநாயக மையத்திற்குள் கொண்டு வந்து அதை மீட்டெடுப்பதற்கான நேரம் இது" என்று அவர் இழிந்த முறையில் கூறினார். இராணுவத்திற்கு ஜனநாயகத்துடன் எந்த தொடர்பும் இல்லை. சிறப்புப் படைகள் மற்றும் பிற பிரிவுகளில் தீவிர வலதுசாரி பயங்கரவாத கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இது அரசு எந்திரத்தில் பாசிச சதித்திட்டத்தின் தெளிவான மையமாகும்.

Loading