ஜேர்மனிய பாதுகாப்பு மந்திரி கிராம்ப்-காரன்பவுர் ஒரு நேர்காணலில் ரஷ்யாவையும் சீனாவையும் அச்சுறுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

Redaktionsnetzwerk Deutschland (RND) க்கு அளித்த பேட்டியில், ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி அன்னெகிரெட் கிராம்ப்-காரன்பவர் இராணுவ செலவினங்களில் மேலும் அதிகரிப்பு மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளில் பாரிய மறுஆயுதமயமாக்கும் திட்டத்தை அறிவித்தார். அவர் ரஷ்யாவையும் சீனாவையும் அச்சுறுத்தியதுடன், அமெரிக்காவிலிருந்து சுயாதீனமாகவும் அதற்கு எதிராகவும் இராணுவ வழிமுறைகளால் உலகெங்கிலும் அதன் பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய நலன்களைச் செயல்படுத்தும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் நோக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

“முதலில், இது எங்கள் சொந்த நலன்கள் மற்றும் நமது சொந்த பாதுகாப்பு பற்றியது. இது ஒருபோதும் அமெரிக்காவிற்கு ஒரு உதவி செய்வது பற்றியது அல்ல. நாங்கள் எங்கள் சொந்த பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்," என்று அவர் நேர்காணலின் தொடக்கத்தில் குறிப்பிட்டார். "அமெரிக்க வெளியுறவுக் கொள்கை" புதிய ஜனாதிபதியின் கீழ் "மீண்டும் நம்பகரமானதாக" உள்ளது. எவ்வாறாயினும், இந்தோ-பசிபிக் போன்ற "முக்கிய வெளியுறவுக் கொள்கை பகுதிகள்" பைடெனின் கீழ் அவ்வாறே உள்ளன. நேட்டோவிற்குள் சுமை பகிர்வு பிரச்சினை வேறு ஒரு வடிவத்தில் இருந்தாலும் அமெரிக்காவினது அவ்வாறே உள்ளது என்பது தெளிவாக இருக்கின்றது.

ஜேர்மன் இராணுவ பிரதிநிதிகள்

உண்மையில், பைடென் நிர்வாகமும் அமெரிக்க இராணுவமும் அணுசக்திகொண்ட சக்திகளான ரஷ்யா மற்றும் சீனாவுடன் இராணுவ மோதலுக்கு வழி வகுத்து வருகின்றன. தென் சீனக் கடலில் சீனாவால் உரிமை கோரப்பட்ட நீரில் ஆத்திரமூட்டும் "கடல்பயணத்திற்கான சுதந்திர" பயிற்சிகளை நடத்துவதை அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் ஜப்பான், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல மக்கள் அடர்த்தியான தீவுகளின் கடற்கரையோரங்களில் தாக்குதல் ஏவுகணைகளை வைக்க திட்டமிட்டுள்ளனர்.

பைடென் ஆட்சியை பொறுப்பெடுத்ததிலிருந்து ரஷ்யாவிற்கு எதிரான போர் உந்துதலை தீவிரப்படுத்தியுள்ளார். மார்ச் நடுப்பகுதியில், அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை ஒரு "கொலைகாரன்" என்று வர்ணித்து, மற்றும் பதிலடி நடவடிக்கைகளை அச்சுறுத்தியுள்ளார். அப்போதிருந்து, அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் வோலோடிமைர் செலென்ஸ்கியின் உக்ரேனிய ஆட்சி, நாட்டின் கிழக்கில் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளுடன் தனது போரை முடுக்கிவிட்டது.

ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஒரு அணுசக்தி யுத்த அச்சுறுத்தலுக்கு அதன் சொந்த பெரிய யுத்த உந்துதலுடன் பதிலளிக்கிறது. தொற்றுநோய்க்கு மத்தியில், ஆளும் வர்க்கம் அத்தியாமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு போதுமான ஊதியங்களுக்கு பணம் இல்லை என்று கூறுகிறது. சமூக நலன்புரி சலுகைகள் குறைக்கப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டல் தீவிரமடைந்துள்ளது. அதே நேரத்தில், பில்லியன் கணக்கான யூரோக்கள் இராணுவ மறுஆயுதமயமாக்கலுக்குள் செலுத்தப்பட உள்ளன.

எதிர்வரவிருக்கும் ஆண்டில் இராணுவத்திற்கு "மேலதிகமாக 2.5 பில்லியன் யூரோ கிடைப்பது" நல்லது என்று கிராம்ப்-காரன்பவர் பேட்டியில் கூறினார். இது அடுத்த ஆண்டு பாதுகாப்பு செலவினங்களில் ஐந்து சதவீதம் அதிகரித்து 49.3 பில்லியன் யூரோவை எட்டும். பாதுகாப்புத்துறை வரவு-செலவுத் திட்டம் சுகாதரத்துறை மற்றும் கல்வித்துறைக்கான ஒன்றிணைந்த வரவு-செலவுத் திட்டங்களின் அளவைப் போலவே இருந்தாலும், ஆளும் உயரடுக்கு அதிருப்தி அடையவில்லை.

இந்த தொகைகள் "அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் திறன்களை மேலும் வளர்ப்பதற்கு இன்னும் போதுமானதாக இல்லை" என்று பாதுகாப்பு மந்திரி புகார் செய்து, செப்டம்பர் மத்திய தேர்தலுக்குப் பின்னர் பாதுகாப்பு செலவினங்களை மேலும் அதிகரிப்பதாக உறுதியளித்தார். "அடுத்த கூட்டணி அரசு" தொடர்பான பேச்சுவார்த்தைகள "தீர்க்கரமானவையாக" இருக்கும். அவை “எதிர்காலத்திற்கான பெரிய மறுஆயுதமயமாக்கல் திட்டங்களை உறுதிப்படுத்த வேண்டும். பாதுகாப்பு என்பது முழு அரசாங்கத்திற்கும் ஒரு முக்கிய பணியாகும்” என்றும் அவர் கூறினார்.

மக்களின் முதுகுக்குப் பின்னால், இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் வேர்மாக்ட்டின் இராணுவ கட்டமைப்பிற்கு பின்னர் ஜேர்மனியின் மிகப்பெரிய மறுஆயுதமயமாக்கல் திட்டத்தில் பெரும் கூட்டணி அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அவர்கள் "எங்கள் பாதுகாப்பிற்குத் தேவையானவற்றின் ஒருங்கிணைந்த திட்டத்தை முன்வைத்துள்ளனர்" என்று கிராம்ப்-காரன்பவர் கூறினார். இது “ஐரோப்பிய மட்டத்தில் நாங்கள் ஒப்புக் கொண்ட முக்கிய மறுஆயுதமயமாக்கல் திட்டங்களை உள்ளடக்கியது. எனவே அவை முன்னுரிமையை கொண்டுள்ளன. இந்த திட்டங்கள், சாதாரண பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்துடன் சேர்ந்து திட்டமிடல் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். ஏனெனில் அவை 10 முதல் 15 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும்.” அவர்கள் "நிச்சயமாக அதிக பணம் செலவழிக்க வேண்டும்" என்றார்.

கிராம்ப்-காரன்பவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் கனவுகாணும் புள்ளிவிவரங்களும் மற்றும் திட்டங்கள் மிகப்பெரியவை. "2025 க்குள் எங்கள் கணக்கிடப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கான தொகையை பத்தாயிரக்கணக்கான பில்லியன்களில் அளவிட முடியும்," என்று அவர் குறிப்பிட்டார். "பதினைந்து ஆயுதத் திட்டங்கள், அவற்றின் செலவு உட்பட" பெயரிடப்பட்டுள்ளன. “FCAS (எதிர்கால ஆகாய போர் அமைப்புமுறை) மற்றும் MGCS (முக்கிய தரைப்போர் அமைப்புமுறை) போன்ற ஜேர்மன்-பிரெஞ்சு திட்டங்களுடன்,“ டொர்னாடோ போர் விமானங்களை மாற்றுவது, காலாவதியான கடற்படை சேவைக் கப்பல்களை மாற்றுவதும் புதிதாக வாங்குவதும், நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான பாதுகாப்புக்கான விமானம், அத்துடன் ஒரு தந்திரோபாய வான் பாதுகாப்பு அமைப்புமுறை” ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும்.

பாதுகாப்பு மந்திரி உரிமை கோருவதைப் போல ஜேர்மனிய மக்களின் "பாதுகாப்பு" மற்றும் "செழிப்பு" ஆகியவற்றை உறுதி செய்வதிலும், "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" நடத்துவதிலும் அல்லது "பெண்கள் உரிமைகள்" மற்றும் "ஜனநாயகம்" ஆகியவற்றை அமுல்படுத்துவதையும் மறுஆயுதமயமாக்கல் நோக்கமாக கொண்டிருக்கவில்லை. இதில் உள்ளடங்கியிருப்பது ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் நலன்களை இராணுவ வழிமுறைகளால் திணிப்பதாகும்.

நேர்காணலில், கிராம்ப்-காரன்பவர் ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் இராணுவத் தலையீட்டை விரிவுபடுத்துவதற்கான மார்ச் மாத இறுதியில் பாராளுமன்றத்தின் முடிவைப் பாதுகாத்தார். மேலும் மத்திய ஆசிய நாட்டில் போர் நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வாசகர்களைத் தயார்படுத்தினார். அவர் "இராணுவத் தலைமையுடன் நெருக்கமான ஆலோசனையுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த உத்தரவிட்டார். வலுவூட்டல்கள், கூடுதல் ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் அங்கு அனுப்பப்படும்.” மேலும் அவர் "ஆயுதமேந்திய ஆளற்ற விமானங்களான ட்ரோன்கள் அங்கு கிடைப்பதை விரும்புகின்றார்."

ஆனால் ஆளும் உயரடுக்கின் மிருகத்தனமான ஆக்கிரமிப்பு மற்றும் ஆப்கானிஸ்தானை கொள்ளையடிப்பது என்பது பரந்த போர்களுக்கு முன்னோடியாகும். கிராம்ப்-காரன்பவரின் கூற்றுப்படி, இராணுவம் “ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளில் இருந்து நிறைய கற்றுக் கொண்டது.” "இந்த நாடு முழுவதற்குமான தலையீட்டைப் பற்றிய அரசியல் விவாதத்தை" அவர் விரும்புகிறார். “ஆப்கானிஸ்தானில் இறந்த அல்லது காயமடைந்த படையினருக்காக ஒருவர் அதைச் செய்ய கடமைப்பட்டிருக்கிறார்.” மேலும் “அடுத்த ஜேர்மன் தலையீட்டைப் பொறுத்தவரை, ஒருவேளை ஆபிரிக்காவின் மத்திய சஹேல் மண்டலத்தில், எந்த இலக்குகளை அடையமுடியும், எவை அடையமுடியாதவை என்பதை பற்றி ஆரம்பத்தில் இருந்தே ஒருவர் தெளிவாக இருக்க வேண்டும்” என்றார்.

உலக அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் இரண்டு உலகப் போரின்போது காட்டுமிராண்டித்தனமான குற்றங்களைச் செய்த ஜேர்மன் முதலாளித்துவத்தின் சிறப்பியல்புடன், கிராம்ப்-காரன்பவர் ரஷ்யாவையும் சீனாவையும் அச்சுறுத்தினார். "சீனாவைப் போலல்லாமல், ரஷ்யா அதன் ஆயுதக் களஞ்சியத்துடன், பாரம்பரிய மற்றும் அணு ஆயுதங்களுடன் மிக உடனடி அச்சுறுத்தலாக உள்ளது." எவ்வாறாயினும், சீனாவும் "தனது இராணுவத்தை உலகின் மிகப்பெரிய மற்றும் நவீனமயமாக்குவதற்கான மிக ஆர்வமான திட்டத்தை கொண்டுள்ளது." மேலும் அது “உலக ஒழுங்கை அது கற்பனை செய்யும் விதத்தில் வடிவமைப்பதற்கான விருப்பத்தை கொண்டுள்ளது, இதனால் பலவீனமான நாடுகளை குறிப்பாக குறிப்பிட்ட நடவடிக்கை எடுக்கும்படி கட்டாயப்படுத்துகிறது. அதன் அர்த்தம், ஐரோப்பா மற்றும் மேற்குநாடுகள் பலவீனமானவர்களாக இருக்க முடியாது”.

இந்த செய்தி மிகதெளிவானதாகும். ஜேர்மனியும் ஐரோப்பாவும் அணுசக்தி யுத்தம் உட்பட பெய்ஜிங் மற்றும் மாஸ்கோ மீது அவற்றை அடக்கிவைக்க மறுஆயுதமயமாகின்றன. இதில், ரஷ்யாவும் சீனாவும் அல்ல, ஏகாதிபத்திய சக்திகள் தான் ஆக்கிரமிப்பாளர்கள். சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதிலிருந்து நேட்டோ திட்டமிட்டு ரஷ்யாவை சுற்றிவளைத்து வருகிறது. இப்போது பெய்ஜிங்கிற்கு எதிரான அதன் விரோதத்தை தீவிரப்படுத்துகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான பொருளாதார உறவுகள் இருந்தபோதிலும், ஜேர்மனி பெருகிய முறையில் ஆக்கிரோஷமான நிலைப்பாட்டை எடுக்கின்றது.

மேற்கத்திய சார்பு ஆட்சியை நிறுவுவதற்கும் ரஷ்யாவை பலவீனப்படுத்துவதற்கும் 2014 இல் உக்ரேனில் வலதுசாரி சதித்திட்டத்தை பேர்லின் ஆதரித்த பின்னர், அது தனது கவனத்தை மேலும் கிழக்கு ஐரோப்பாவை நோக்கி திருப்புகிறது. ஏற்கனவே கடந்த செப்டம்பரில், சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான வெளியுறவு அமைச்சகம் "இந்தோ-பசிபிக் கோட்பாட்டை" வெளியிட்டது. அதில் பின்வருமாறு குறிப்பிட்டது: "இமயமலையும் மலாக்கா நீரிணையும் வெகு தொலைவில் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் வரவிருக்கும் தசாப்தங்களில், நமது செழிப்பு மற்றும் புவிசார் அரசியல் செல்வாக்கு துல்லியமாக இந்தோ-பசிபிக் நாடுகளுடன் நாங்கள் எவ்வாறு ஒத்துழைக்கிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டது.” உலகளவில் சுறுசுறுப்பான வர்த்தக தேசமாக, இராணுவ விடயங்கள் உட்பட ஜேர்மனி ஒரு "பார்வையாளரின் பங்குடன் திருப்தி அடைய முடியாது" எனவும் தெரிவித்தது.

இந்தக் கொள்கை இப்போது செயல்படுத்தப்பட உள்ளது. "இந்தோ-பசிபிக் நிலைமை நிச்சயமாக எங்களுக்கு ஆர்வமாக உள்ளது" என்று கிராம்ப்-காரன்பவர் வலியுறுத்தினார். ஜேர்மனி வரும் மாதங்களில் "இந்தோ-பசிபிக் பகுதிக்கு ஒரு போர் கப்பலை அனுப்பும்". இறுதியில், “சுதந்திர வர்த்தகம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான விதிகளை மதித்தல், ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற பிராந்தியத்தில் நமது ஜனநாயக பங்காளர்களை வலுப்படுத்துவது போன்றவை ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய நலன்களுக்கு அவசியமானது.” நாங்கள் “சீனாவின் கடல் பாதைகளின் போக்குவரத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் பற்றி பேசிக்கொண்டு மட்டும் இருக்கவில்லை, அதற்காக சிலவற்றையும் செய்துகொண்டிருக்கின்றோம்” என்றார்.

ஏகாதிபத்திய சக்திகளின் இரக்கமற்ற நடவடிக்கைகளுக்கு ஆழமான காரணம் முதலாளித்துவ அமைப்பின் ஆழ்ந்த நெருக்கடியாகும். இது கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பெரிதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜேர்மனியில் மட்டும் 75,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்த "வாழ்க்கையை விட இலாபத்திற்கு" முக்கியத்துவமான கொலைகார கொள்கையைப் போலவே, போருக்கான உந்துதலையும் பெயரளவு இடது உட்பட நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரிக்கின்றன.

அதன் தேர்தல் திட்டத்தில், பசுமைவாதிகள் ஜேர்மன் இராணுவம், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பாரிய மறுஆயுதமயமாக்கல் திட்டத்திற்காக அழைப்புவிட்டு, ரஷ்யாவையும் சீனாவையும் அச்சுறுத்தியது. ஒரு எதிர்கால சமூக ஜனநாயக / இடது கட்சி / பசுமைக்கட்சி கூட்டு அரசாங்கத்தில், ஆக்கிரமிப்பான வெளியுறவுக் கொள்கை பாதையை அது முழுமையாக ஆதரிக்கும் என்பதை இடது கட்சி நீண்ட காலத்திற்கு முன்பே தெளிவுபடுத்தியுள்ளது.

தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில், சோசலிச சமத்துவ கட்சி (SGP) மட்டுமே ஜேர்மன் இராணுவவாதத்தை நோக்கி திரும்புவதையும் மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தலையும் எதிர்க்கின்றது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் எதிர்ப்பிற்கு ஒரு முன்னோக்கை வழங்குவதற்காக இது ஒரு சர்வதேச மற்றும் சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுகிறது.

சோசலிச சமத்துவ கட்சியின் தேர்தல் முன்னோக்கு இவ்வாறு கூறுகிறது: “கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், அனைத்து பிரதான சக்திகளும் தங்கள் பொருளாதார நலன்களை உறுதிப்படுத்துவதற்கு புதிய போர்களுக்குத் தயாராகி வருகின்றன… ஜேர்மனிய நிதி உயரடுக்கின் ஏகாதிபத்திய நலன்களை இராணுவ வழிமுறைகள் மூலம் தொடருமானால் மில்லியன் கணக்கான மக்கள் இறக்க வேண்டியிருக்கும். அனைத்து வெளிநாட்டு தலையீடுகள் மற்றும் போர்களும் உடனடி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்! நேட்டோ மற்றும் ஜேர்மன் இராணுவம் கலைக்கப்பட வேண்டும்! மறுஆயுதமயமாக்கல் மற்றும் போருக்கு பதிலாக கல்வி மற்றும் வேலைகளுக்கு பில்லியன்கள் நிதியுதவி வழங்கப்பட வேண்டும்! என்று நாங்கள் கோருகிறோம்.

Loading