அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் வியாழக்கிழமை நிறைவேற்று ஆணை பிறப்பித்து ரஷ்யா மீது பெரியளவில் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளார். அமெரிக்கா, 10 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றியதுடன், அநேகமாக மூன்று டசின் நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும், அமெரிக்கா எரிசக்தி நிறுவனங்கள் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு அறிவித்ததோடல்லாமல், ரஷ்ய அரசு பத்திரங்களுக்கான அமெரிக்க நிதியளிப்பையும், ரஷ்ய அரசாங்க நிதி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதையும் தடை செய்துள்ளது.

அமெரிக்கா குறிப்பாக Nord Stream 2 எனும் ரஷ்ய-ஜேர்மன் எரிவாயு குழாய்வழித் திட்டத்திற்கு புதிய பொருளாதாரத் தடைகளிலிருந்து விலக்களித்துள்ளது. இந்த குழாய்வழித் திட்டத்தை ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் எதிர்ப்பதுடன், போலந்து, பால்டிக் நாடுகள் போன்ற நேட்டோ அங்கத்துவ நாடுகளும், அத்துடன் உக்ரேனும் எதிர்க்கின்றன, இது ரஷ்ய எரிவாயுவை அதன் பிராந்திய எல்லை ஊடாக ஐரோப்பாவிற்கு கொண்டு செல்வதற்கு கிடைக்கும் வருவாயை பெரிதும் நம்பியுள்ளது. இருப்பினும், இந்த திட்டத்தை அமெரிக்கா அனுமதிப்பதற்கு எதிராக ஜேர்மன் அரசாங்க பிரதிநிதிகள், ஜேர்மன் அதைத் தொடரப் போவதாக வலியுறுத்தி பலமுறை வாதிட்டனர். இந்த வார தொடக்கத்தில், அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லொயிட் ஆஸ்டின் ஜேர்மனியில் கூடுதலாக 500 அமெரிக்க துருப்புக்களை நிலைநிறுத்துவது தொடர்பாக விவாதிக்க ஜேர்மனிக்கு விஜயம் செய்தார்.

Monday, Feb. 15, 2021 photo of U.S. warship (AP Photo/Mohammad Farooq)

அமெரிக்கத் தேர்தல்களில் ரஷ்ய தலையீடு மற்றும் SolarWinds நிறுவனத்தின் தகவல் திருட்டு பற்றிய நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்கள் “ரஷ்ய கூட்டமைப்பு அரசாங்கத்தின் தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டு நடவடிக்கைகளை” உருவாக்கியதாக பைடெனின் நிறைவேற்று ஆணை கூறியது. அத்துடன், ரஷ்ய அரசாங்கம் “அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அதற்கான பாதுகாப்பை” கீழறுப்பதாகவும் அது குற்றம்சாட்டியது. இந்த நடவடிக்கைகள் “தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு ஒரு வழமைக்கு மாறான மற்றும் பெரியளவிலான அச்சுறுத்தல்” என்றும் உத்தரவு கூறுகிறது.

இதன் அடிப்படையில், பைடென் “இந்த அச்சுறுத்தலை சமாளிக்க தேசிய அவசரகாலநிலைக்கும்” அறிவித்தார். உக்ரேன் நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது, மார்ச் 6, 2014 இல் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதை முன்னிட்டு, அமெரிக்கா கடைசியாக ஒரு “தேசிய அவசரகால நிலைக்கு” அறிவித்திருந்தது. இந்த நெருக்கடி, பிப்ரவரி 18, 2014 அன்று கியேவில் நிகழ்த்தப்பட்ட அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஆதரவிலான ஆட்சிக் கவிழ்ப்பு சதியினால் தூண்டப்பட்டது, இது முதன்மையாக தன்னலக்குழு மற்றும் உக்ரேனிய வலதுசாரி பிரிவுகளை நம்பியிருந்தது. அந்த நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) விளக்கியது போல, இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதி “அக்டோபர் 1962 கியூபா ஏவுகணை நெருக்கடிக்கு பின்னைய மிகவும் ஆபத்தான சர்வதேச நெருக்கடியை உருவாக்கியது.”

நேட்டோ உடனடியாக, அமெரிக்க பொருளாதாரத் தடைகளை அங்கீகரித்து ஒரு அறிக்கை வெளியிட்டதுடன், “ரஷ்யாவின் நடவடிக்கைகளை” “யூரோ-அட்லாண்டிக் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்” என்றும் அழைக்கிறது. இந்த கூட்டணி, கடந்த மூன்று தசாப்தங்களாக ரஷ்யாவின் எல்லைகள் வரை தீவிரமாக விரிவடைந்ததுடன், ரஷ்யா “அதன் ஸ்திரமற்ற நடத்தையை உடனடியாக நிறுத்துமாறு” பாசாங்குத்தனமாக அழைப்பு விடுத்து, உக்ரேன் மற்றும் ஜோர்ஜியா போன்ற நாடுகளில் நிகழ்ந்த பல ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளை ஆதரித்தது.

பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கிரெம்ளின் உடனான “கடுமையான உரையாடலுக்கு” அமெரிக்க தூதர் ஜோன் சல்லிவனை ரஷ்யா அழைத்தது. மார்ச் மாதம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை ஒரு “கொலையாளி” என்று பைடென் பகிரங்கமாக கண்டித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கான தனது நாட்டு தூதரை ரஷ்யாவும் திரும்ப அழைத்தது. மேலும், பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா விரைவில் அமெரிக்க இராஜதந்திர பணியாளர்களை வெளியேற்றும் என்றும் கருதப்படுகிறது.

பொருளாதாரத் தடைகளின் பேரில், செவ்வாயன்று பைடென் முன்மொழிந்த பைடெனுக்கும் புட்டினுக்கும் இடையிலான உச்சிமாநாடு விரைவில் நடக்காது, என்றாலும் முழுவதுமாக கைவிடப்பட மாட்டாது.

கருங்கடல் பிராந்தியத்தில் இராணுவ மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆபத்தான மட்டங்களுக்கு அதிகரிப்பதற்கு மத்தியில், புதிய அமெரிக்க பொருளாதாரத் தடைகள் அறிவிக்கப்படுகின்றன. 2014 ஆட்சிக் கவிழ்ப்பு சதியிலிருந்து உள்நாட்டுப் போர் அதிகரித்துள்ள கிழக்கு உக்ரேனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரேனிய இராணுவத்திற்கும் இடையிலான இராணுவ மோதல்கள் அண்மையில் எழுந்ததன் பின்னணியாக, மார்ச் மாதம் உக்ரேனிய அரசாங்கம் “கிரிமியாவை மீட்டெடுக்கும்” மூலோபாயத்தை ஏற்றுக்கொண்டது இருந்தது.

கருங்கடலில் மூலோபாய ரீதியில் அமைந்துள்ளதும், ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் கடற்படைத் தளமாக விளங்குவதுமான இந்த தீபகற்பத்தை ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. “Crimean Platform” திட்டம் பற்றிய அறிவிப்பும், கிழக்கு உக்ரேனில் டொன்பாஸை “மீட்டெடுக்க” தாக்குதல் நடத்துவது தொடர்பான பொது விவாதமும், நேட்டோவின் ஆதரவை நம்பி, உக்ரேனிய அரசாங்கம் ரஷ்யாவுக்கு எதிரான முழுமையான போருக்கு தயாராகி வருவதை தெளிவுபடுத்தியுள்ளன.

கருங்கடல் பிராந்தியத்தின் வரைபடம் [Photo by Norman Einstein / CC BY-NC-SA 4.0]

அப்போதிருந்து, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமைர் செலென்ஸ்கி அவரது “Crimean Platform” திட்டத்திற்கு ஆதரவு கோர முயன்றார். குறிப்பாக, அமெரிக்காவும் நேட்டோவும் இராணுவக் கூட்டணியில் உக்ரேனை சேர்த்துக் கொள்வதை துரிதப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உக்ரேனை விரைவில் நேட்டோவுக்குள் அனுமதிக்காவிட்டால், உக்ரேன் “சொந்தமாக மறுஆயுதபாணியாகும்” நிலைக்கு தள்ளப்படும் என்று ஜேர்மனிக்கான உக்ரேனிய தூதர் ஆண்ட்ரிஜ் மெல்னிக் (Andrij Melnyk) வியாழக்கிழமை அச்சுறுத்தினார். Deutschlandfunk வானொலிக்கு அவர் பேசுகையில், உக்ரேனிய அரசாங்கம் அணுவாயுதக் கொள்முதலுக்கு “பரிசீலித்து வருவதாகவும்” தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை, செலென்ஸ்கி பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனை சந்திக்கவுள்ளார். ஏனைய பல விடயங்களுக்கு மத்தியில், மக்ரோனும் செலென்ஸ்கியும் உக்ரேனிய விமானப்படைக்கு பிரெஞ்சு டசால்ட் ரஃபேல் (Dassault Rafale) போர் விமானங்களை விநியோகிக்க ஒரு முக்கிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வது பற்றி விவாதிக்கக்கூடும், ஏனென்றால் அமெரிக்கா போர் விமானங்களை மெதுவாக விநியோகிப்பதாக கருதி உக்ரேன் அதிருப்தியடைந்துள்ளது என்று ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா அதன் புதிய பொருளாதாரத் தடைகளை அறிவிப்பதற்கு சற்று முன்னர், ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கவிருந்த துருக்கிய ஜலசந்தி ஊடாக கருங்கடலுக்கு இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா கைவிட்டது என்று துருக்கிய இராஜதந்திர ஆதாரங்கள் ராய்ட்டர்ஸூக்கு தெரிவித்தன. இந்த பெரும் ஆத்திரமூட்டும் நடவடிக்கை கிரெம்ளின் அதிகாரிகளின் சீற்றம் நிறைந்த பதிலடிக்குத் தூண்டியது. துணை வெளியுறவு அமைச்சர் சேர்ஜி ரியாப்கோ அமெரிக்கா “கிரிமியா மற்றும் எங்கள் கருங்கடல் கடற்கரை பகுதியிலிருந்து விலகியிருக்க வேண்டும்… அதுதான் அவர்களது சொந்த நலனுக்கு நல்லது” என்று எச்சரித்தார். போர்க்கப்பல்களை அனுப்புவதை நிறுத்திவைப்பதானது, மோதலின் கட்டுப்பாடற்ற விரிவாக்கத்திற்கு வழிவகுக்கும் வகையில் தொடர்ந்து முன்னேறுவதை வாஷிங்டன் அங்கீகரிப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி பிரதிபலிக்கிறது.

இருப்பினும், ரஷ்யாவையும் சீனாவையும் கீழறுக்கும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு பெரும் புவிசார் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கருங்கடல் பிராந்தியத்தின் சூழ்நிலை, தொடர்ந்து கத்தியின் விளிம்பில் உள்ளது.

அமெரிக்கா போர்க்கப்பல்களை அனுப்புவதை இரத்து செய்தாலும் கூட, பதட்டங்கள் “தணிக்கப்படவில்லை” என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் வியாழக்கிழமை எச்சரித்தார். அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்து சில மணி நேரங்களில், ஊடகச் செய்திகள், ஏப்ரல் 26 இல் தொடங்கி அக்டோபர் 2021 வரை இராணுவப் பயிற்சிகளை நடத்த அசோவ் கடலுக்கும் கருங்கடலுக்கும் இடைப்பட்ட கடல் பாதையான கேர்ச் ஜலசந்தியை ரஷ்யா மூடும் என்று தெரிவித்தன. உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் இது குறித்து உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார், என்றாலும் ஜலசந்தியை மூடுவது பற்றி ரஷ்ய அரசாங்கம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

அதன்பின்னர், உக்ரேனின் பொது ஊழியர்கள் முகநூல் பக்கத்தில் அசோவ் கடலில் “சர்வதேச கடல்சார் சட்ட விதிகளை” ரஷ்யா மீறி வருவதாக குற்றம்சாட்டினர். எந்தவித விபரங்களையும் ஆதாரங்களையும் வழங்காமல், “FSB (ரஷ்யாவின் உள்நாட்டு இரகசிய சேவை) இன் படகுகள்” முன் தினம் “போர் பணிக்கான” உக்ரேனிய கடற்படை கப்பல்களை செல்லவிடாமல் தடுத்தது என்றும் இது குற்றம்சாட்டியது. 2018 ஆம் ஆண்டில், கோடீஸ்வரர் பெட்ரோ பொரோஷென்கோ (Petro Poroshenko) தலைமையிலான அப்போதைய உக்ரேனிய அரசாங்கம், கேர்ச் ஜலசந்தியில் போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்படுவது தொடர்பாக அசோவ் கடலில் ரஷ்யாவிற்கு எதிராக பெரும் ஆத்திரமூட்டலைத் தொடங்கியது.

உக்ரேனின் பாதுகாப்பு சேவையும் (SBU) கேர்சன் மற்றும் கார்கோவ் ஒப்லாஸ்ட்களில் (பிராந்தியங்களில்) “பெரிய அளவிலான, பல கட்ட பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகளை” தொடங்கியுள்ளது என உக்ரேனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன, மேலும் Nezavisimaya Gazeta செய்தியிதழ் தெரிவிப்பது படி, உக்ரேனிய துருப்புக்களும் இராணுவ உபகரணங்களும் கேர்சன் ஒப்லாஸ்ட் மீது தற்போது கவனம் செலுத்துகின்றன. கேர்சன் ஒப்லாஸ்ட் தெற்கு உக்ரேனில் அமைந்துள்ளது, இது அசோவ் கடல் மற்றும் கருங்கடலுக்கு மிக அருகில் உள்ளது, மற்றும் கிரிமியன் தீபகற்பத்துக்கு வடக்கே அமைந்துள்ளது. ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள எல்லைப்புற பிராந்தியமான நாட்டின் கிழக்கில் கார்கோவ் ஒப்லாஸ்ட் அமைந்துள்ளது. இரண்டு பிராந்தியங்களுமே ரஷ்யாவுக்கு நெருக்கமான குடும்பங்கள் மற்றும் அதனுடன் கலச்சார உறவுகளைக் கொண்டுள்ள ரஷ்ய மொழி பேசுபவர்களின் பெரும் எண்ணிக்கையைக் கொண்டுள்ளன, இவர்களுக்கு மத்தியில் 2014 இல் கியேவில் நிகழ்த்தப்பட்ட தீவிர வலதுசாரி சதி மிகுந்த பிரபல்யமற்றது.

ரஷ்யாவின் சொந்த இராணுவப் பயிற்சிகள் அதன் தெற்கு எல்லையில் இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும். மேலும், ரஷ்யா அதன் கருங்கடல் கடற்படையையும் வலுப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Loading