கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் மூன்று மில்லியன் உயிரிழப்புகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகம் மற்றொரு கொடூரமான கட்டத்தை கடந்துள்ளது: கொரோனா வைஸ் பெருந்தொற்றிலிருந்து மூன்று மில்லியன் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஓராண்டுக்கும் சற்று அதிக காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிர்ச்சிகரமான உயிரிழப்புகள் ஒவ்வொரு பிரதான நாட்டின் மற்றும் ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆளும் உயரடுகள் மீதான ஒரு கடுமையான குற்றப்பத்திரிகையாகும்.

A nurse holds a phone while a COVID-19 patient speaks with his family from the intensive care unit at the Joseph Imbert Hospital Center in Arles, southern France, Wednesday, Oct. 28, 2020. (AP Photo/Daniel Cole)

இந்த சமீபத்திய வரம்பைக் கடந்தும் கூட, தீவிரமடைந்து வரும் இந்த பெருந்தொற்று வரவிருக்கும் மாதங்களில் இன்னும் அதிகமான இறப்புகளை உருவாக்கக்கூடியதாக உள்ளது.

இந்த ஒட்டுமொத்த பெருந்தொற்று காலத்தில், உலகளவில் உறுதிப்படுத்தப்பட்ட அன்றாட நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை இப்போது மிக அதிகபட்ச விகிதத்தில் உள்ளது. பெப்ரவரி மத்திய பகுதியில் 361,000 ஆக குறைந்திருந்ததிலிருந்து 752,000 க்கும் அதிகமாக இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில், 520,000 க்கும் அதிகமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்திருந்தனர், இந்த கடந்த ஜனவரியில் அதிகபட்சமாக அண்மித்து 12,000 ஆக இருந்த நாளாந்த இறப்புகளின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை, 14,000 க்கும் அதிகமாக அதிகரித்து வருகிறது.

பிரேசில், இந்தியா போன்ற நாடுகளில் அசாதாரண வேகத்துடன் தொற்றுநோய் தீவிரமடைந்துள்ளது. பிரேசிலில், நாள்தோறும் நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதம் அதிகரித்து 65,000 க்கும் அதிகமாக உள்ளன. ஆனால் நிஜமான எண்ணிக்கையையோ நாள்தோறும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் பார்க்க முடிகிறது, இது பெப்ரவரியில் இருந்து கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து, நாள்தோறும் ஏறக்குறைய 3,000 ஆக உள்ளது, இது தொற்றுநோய் தொடங்கியதற்குப் பிந்தைய அந்நாட்டின் மிக அதிகபட்ச விகிதம் என்பதோடு, அமெரிக்காவில் கடந்த குளிர்காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அடுத்த இடத்தில் உள்ளது, அப்போது அமெரிக்காவில் சில நேரங்களில் தினசரி உயிரிழப்புகள் கிட்டத்தட்ட 3,500 ஐ எட்டின.

இந்தியாவில், நிலைமை இன்னும் அதிக மோசமாக உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில், தினசரி நோயாளிகளின் எண்ணிக்கை 11,000 என்ற குறைந்த எண்ணிக்கையிலிருந்து 18 மடங்கு அதிகரித்து 200,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதற்கேற்ப, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 138,000 இல் இருந்து 1.8 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது, மேலும் தினசரி இறப்பு விகிதம் 100 க்கும் குறைவாக இருந்ததில் இருந்து 1,100 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இப்போது இந்தியாவே ஒவ்வொரு நாளும் உறுதி செய்யப்பட்ட புதிய நோயாளிகளின் அதிகபட்ச எண்ணிக்கையில் அதிகபட்ச எண்ணிக்கையைக் கொண்டுள்ளது, மேலும் அது அமெரிக்கா ஏற்படுத்திய சாதனைகளையே கடந்து அதன் பாதையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த வைரஸின் இத்தகைய வியத்தகு வெடிப்புகள், ஏற்கனவே இந்த தொற்றுநோயின் முந்தைய அலைகளைக் கொண்டிருந்த நாடுகளோடு மட்டும் அடங்கி இல்லை. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து பொதுத்துறை அதிகாரிகளால் நோய்தொற்றின் மொத்த எண்ணிக்கையை வெறும் 900 ஆக மட்டுப்படுத்தி வைத்திருக்க முடிந்த பாப்புவா நியூ கினியில், கடந்த இரண்டு மாதங்களில் அறியப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் பத்து மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, அங்கே மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது 9,500 க்கும் அதிகமாகும். இதேபோல் அதன் ஒன்பது மில்லியன் மக்கள்தொகையில் 10 க்கும் குறைவாக இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட 90 ஆக அதிகரித்துள்ளன.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் இந்த ஒட்டுவாரொட்டி நோயின் புதிய அலைகளை எதிர்கொண்டுள்ளன. பல்கேரியாவில் தினசரி புதிய நோயாளிகள் பெப்ரவரியில் கூர்மையாக அதிகரித்து, மார்ச்சில் ஒரு நாளைக்கு 3,600 க்கும் அதிகமான புதிய நோயாளிகள் என்ற உயரத்தை எட்டியதுடன், அங்கே ஒவ்வொரு நாளும் 110 க்கும் அதிகமான புதிய உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஹங்கேரியில், தினசரி நோயாளிகளின் எண்ணிக்கை மிகச் சமீபத்தில் தான் 5,000 க்கும் குறைவாக குறைந்தது, அங்கே இறப்பு விகிதம் இன்னமும் 250 க்கும் அதிகமாக உள்ளது, இது இரண்டரை மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

ஜேர்மனியில் உத்தியோகபூர்வ கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை நேற்று 80,000 ஐ எட்டியது, இந்த வைரஸின் பாரியளவிலான மூன்றாம் அலைக்கு மத்தியில் அரசாங்கம் பள்ளிகளையும் தொழிற்சாலைகளையும் மூட மறுப்பதால் வரவிருக்கும் நாட்களில் இன்னும் பலர் உயிரிழக்கக்கூடும். தற்போது அங்கே ஒவ்வொரு நாளும் சுமார் 30,000 புதிய நோய்த்தொற்றுகள் உள்ளன, மருத்துவக் கவனிப்பு முறை நிரம்பி வழிகிறது.

இந்த பேரழிவுக்கு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களே முழு பொறுப்பாகின்றன என்ற உணர்வு ஜேர்மன் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது. போராட்டங்களுடன் எதிர்வினையாற்றி வரும் பல தொழிலாளர்களும் இளைஞர்களும், இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் நேற்றைய உத்தியோகபூர்வ அரசு நிகழ்வில் பல தொழிலாளர்களும் இளைஞர்களும், உயிரிழந்தவர்களுக்கு நினைவாஞ்சலி செலுத்தும் நேற்றைய உத்தியோகப்பூர்வ அரசு நிகழ்வையும், ஒவ்வொரு ஜன்னலிலும் மெழுகுவர்த்தி ஏற்றுவதற்கான ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையரின் முன்மொழிவையும் பரிகசிக்கின்றனர்.

அதற்கு பதிலாக பலரும் நாடெங்கிலும் உள்ள அரசு கட்டிடங்களுக்கு முன்னால் மெழுகுவர்த்தியை ஏற்றினர். பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் நலன்களுக்காக நடைமுறையளவில் ஒரு சமூக படுகொலையை நடத்தி வருவதற்காக போராட்டக்காரர்கள் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களைக் குற்றஞ்சாட்டினர். "ஒவ்வொரு மெழுகுவர்த்தியும், உங்களின் தயக்கம் மற்றும் உங்கள் கொள்கைகளின் காரணமாக, உயிரிழந்தவர்களுக்காக நிற்கிறது,” என்று ஒரு சுவரொட்டி குறிப்பிடுகிறது. “இலாபம், பங்காதயம் மற்றும் ஆதாயங்களைப் பாதுகாக்க நீங்கள் எல்லாவற்றையும் செய்கிறீர்கள். நீங்கள் வெட்கப்பட வேண்டும்,” என்று மற்றொரு சுவரொட்டி குறிப்பிட்டது.

இந்த வைரஸின் தீவிர பரவலுடன் சேர்ந்து, இன்னும் அதிகமாக தொற்றக்கூடிய இந்த வைரஸின் புதிய வகைகளும் பரவி வருகின்றன, இவை இப்போது அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்ட கிட்டத்தட்ட 142 மில்லியன் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகளில் எண்ணற்ற முறை உருமாறி உள்ளன. தென்னாபிரிக்கா மற்றும் அமெரிக்க மேற்கு கடற்கரையில் தோன்றிய ஒன்றின் கூட்டுக் கலவையான ஒரு வகை வைரஸ், பிரிட்டன் வகை வைரஸூடன் சேர்ந்து, இந்தியாவில் மூர்க்கமாக பரவி வருகிறது. பிரேசிலில், அதிக இறப்பு விகிதத்திற்குப் பின்னால் P.1. வகை வைரஸ் இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. இவ்விரு நாடுகளிலும், குறைந்த நிதி ஒதுக்கீடு பெறும் மருத்துவ அமைப்புமுறைகள், உள்வரும் பத்தாயிரக் கணக்கான புதிய நோயாளிகளுக்கு அவசியமான கவனிப்பை வழங்க முடியாமல், பொறிவின் விளிம்பில் உள்ளன.

தீவிரமடைந்து வரும் தொற்றுநோய்க்கு முன்னால், உலகெங்கிலுமான அரசாங்கங்கள் இந்நோய் பரவலைத் தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை நிராகரித்து வருகின்றன. டைம்ஸ் ஆப் இந்தியா இன் ஒரு தலையங்கம், ஆளும் வர்க்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதத்தில், எந்தவொரு சமூக அடைப்பு நடவடிக்கைகளும் "உண்மையிலியே குணப்படுத்தல் நோயை விட மோசமாக" இருக்கும் என்று அறிவித்தது. ஆசிய பணக்காரர்களில் ஒருவரான அம்பானி குடும்ப வாரிசுகளில் ஒருவர், சமூக அடைப்புகளை "சர்வாதிகாரம்" என்று குறிப்பிட்டதுடன், அவை "நம் சமூக மற்றும் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே முறித்துவிடும்" என்றார்.

ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் உயரடுக்கின் மொழி இவ்விதத்தில் உள்ளது. “சமூகம்” மற்றும் “பொருளாதாரம்” பற்றி அவர்கள் பேசும் போது, அவர்கள் பணக்காரர்களின் நலன்களை அர்த்தப்படுத்துகிறார்கள். ஏற்கனவே ஏற்பட்டுள்ள மனித உயிர்களின் பெரும் இழப்பு குறித்தோ ஏற்படவிருக்கும் இன்னும் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் குறித்தோ அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை, மாறாக அவர்களின் தனிப்பட்ட இலாப திரட்சி தடையின்றி தொடர்வதை உறுதிப்படுத்துவதே அவர்களின் அக்கறையாக உள்ளது. வங்கிகளைப் பிணை எடுப்பதற்காக ஒவ்வொரு அரசாங்கமும் வழங்கிய பத்து ட்ரில்லியன் கணக்கான தொகை தொழிலாள வர்க்கத்தின் உயிர்க்களுக்காக செலவிடப்பட்டிருக்க வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் உறுதியளிக்கப்பட்டவாறு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் சர்வரோக நிவாரணியாக இருக்கும் என்பது ஒரு பொய் என்பது நிரூபணமாகி உள்ளது. உலகளவில் தடுப்பூசி விநியோகம் அசாதாரணமானரீதியில் சமமற்று இருந்துள்ளது, குறைந்தபட்சம் முதல் கட்ட தடுப்பூசி பெற்றவர்களில் 55 சதவீதம் பேர் உயர் வருவாய் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று ராய்டர்ஸ் மதிப்பிடுகிறது. அந்த நாடுகளுக்குள்ளும், ஏழைகளை விட பணக்காரர்களே பெரிதும் தடுப்பூசி போட்டுக் கொள்ளக்கூடியவர்களாக இருப்பதை பல்வேறு உள்ளூர் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.

இதற்கும் கூடுதலாக, நாடுகள் தடுப்பூசிகளையும் மற்றும் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களையும் பதுக்கி வைக்க தொடங்கி உள்ளன. மிக மோசமான குற்றவாளி, இப்போது ஜோ பைடென் நிர்வாகத்தின் கீழ் உள்ள அமெரிக்காவாகும். குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளை ஒதுக்கிவிட்டு பார்த்தாலும் கூட, ஜூலை இக்குள் [அமெரிக்கா] வசம் 300 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி மிகைமிஞ்சி இருப்பிருக்கும் என்று ட்யூக் பல்கலைக்கழக ஓர் ஆய்வு மதிப்பிடுகிறது, அவற்றில் எதையும் பைடென் நிர்வாகம் ஏனைய நாடுகளின் தடுப்பூசி திட்டங்களுக்கு தற்போது வழங்குவதாக இல்லை.

ட்யூக் ஆய்வு இதையும் குறிப்பிடுகிறது, “உலகளாவிய கோவிட்-19 தடுப்பூசி இயங்குமுறையான COVAX என்பதற்கு இந்தாண்டு முழுமையாக நிதி ஒதுக்கப்பட்டாலும் கூட, அப்போதும் உலகின் 92 மிக வறிய நாடுகளது மக்கள்தொகையில் 20-25 [சதவீதத்தினருக்கு] மட்டுமே தடுப்பூசி போட முடியும். தற்போதைய விகிதத்தில் சென்றால், 2023 வரையில் அல்லது அந்தாண்டு இறுதி வாக்கில் இந்த நாடுகள் 60 [சதவீதத்தினரையே] எட்டக்கூடும்.”

வேறு நாடுகளிலும் அதிக தடுப்பூசிகள் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் தடுப்பூசிகளுக்கான மூலப்பொருட்கள் மீதான தடைகளை நீக்குமாறு பைடென் நிர்வாகத்திற்கு கோரிக்கைகளும் விடுக்கப்படுகின்றன. தெற்காசிய செய்தி ஆதாரமான IANS தகவல்படி, “ஓர் உலகளாவிய நெருக்கடியின் போது பைடெனின் தடுப்பூசி பதுக்கும் கொள்கை மட்டுமே போதுமானதில்லை என்பதைப் போல, இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியைப் பாதிக்கும் விதத்தில், அவர் முக்கிய மூலப் பெருட்களின் ஏற்றுமதிகளுக்கும் தடை விதித்துள்ளார்,” என்று இந்தியாவின் சீன வல்லுனர் பிரம்மா செல்லானி இந்த கொள்கையைச் சாடினார்.

இந்திய மக்கள்தொகையில் சுமார் ஒரு சதவிகிதத்தினருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது, பாப்புவா நியூ கினியில் 0.1 சதவீதத்தினருக்கும் குறைவானவர்களுக்கே முதல் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக அமெரிக்க இராணுவத் தலையீடுகளால் சீரழிக்கப்பட்ட ஹோண்டுராஸ் மற்றும் குவாத்தமாலா போன்ற நாடுகள் அவற்றின் மக்கள்தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே தடுப்பூசி செலுத்தி உள்ளன, மெக்சிகோவும் பிரேசிலும் முறையே அவற்றின் மக்கள்தொகையில் 8.6 சதவீதம் மற்றும் 11.7 சதவீதத்தினருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளன.

இந்த தொற்றுநோய் தொடங்கியதில் இருந்தே, ஒன்றோடொன்று பிணைந்த இரண்டு காரணிகளால் பகுத்தறிவார்ந்த மற்றும் விஞ்ஞானபூர்வ விடையிறுப்பு முடக்கப்பட்டுள்ளது: சமூகத் தேவையை விட தனிநபர் செல்வவளத்திற்கு முன்னுரிமை அளிப்படுவதும் மற்றும் அவசியமான உலகளாவிய விடையிறுப்பைத் தேசிய புவிசார் அரசியலுக்கு அடிபணிய செய்வதும் ஆகும்.

கிட்டத்தட்ட எட்டு பில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட இந்த மனித இனத்திற்கு போதுமான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கும், அவற்றை சரியான நேரத்தில் விநியோகிப்பதற்கும் போதுமானளவுக்கு ஆதாரவளங்கள் உள்ளன. இந்த கொரொனோ வைரஸ் பரவலைத் தடுக்க அவசியமான நடவடிக்கைகளான பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற வணிகங்களை மூடுவதற்கும் மற்றும் அத்தகைய சமூக அடைப்பின் போது தங்களின் வருமானத்தை இழக்கும் எல்லா தொழிலாளர்களுக்கும் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களுக்கும் நஷ்டஈடு வழங்குவதற்கும் தேவைப்படும் பணத்தை விடவும் கூடுதலாகவே பணம் இருக்கிறது.

தொழிலாள வர்க்கம் இந்த தொற்றுநோய் மீது எடுக்கப்படும் தீர்மானத்தை அதன் சொந்த கைகளில் எடுக்க வேண்டும். அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்கள் ஒவ்வொரு நாட்டின் அனைத்து பிரிவு தொழிலாளர்களுடனும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். தனியார் இலாபத்தை விட மனித உயிரை முன்னிலையில் நிறுத்தும் கொள்கையை அமல்படுத்த தொழிலாள வர்க்கம் தலையிட வேண்டும். அதாவது, இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டமானது, மில்லியன்கணக்கானவர்களைக் கொன்று பில்லியன் கணக்கானவர்களுக்கு கூறவியலாத அவலங்களை ஏற்படுத்தி உள்ள இந்த ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

Loading