முன்னோக்கு

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அமெரிக்காவில் அரை மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்: பேரழிவு, குற்றம் மற்றும் வரலாற்று திருப்புமுனை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை, ஊடகங்களில் காட்டப்படும் முக்கிய ஆதாரங்களின்படி, திங்களன்று 500,000 ஐ தாண்டியது—இது ஏறக்குறைய ஏற்றுக் கொள்ள சாத்தியமில்லாத ஓர் அதிர்ச்சியூட்டும் உயிரிழப்பு எண்ணிக்கையாகும்.

கொரோனா வைரஸால் ஓராண்டில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் மற்றும் வியட்நாம் போர் ஆகிய போர்க்களங்களில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாகும். இது புளோரிடா, மியாமியின் மொத்த மக்கள்தொகையை (454,000) விட; வட கரோலினாவின் ராலே (464,000) அல்லது மிசோரியின் கான்சாஸ் நகர மக்கள் தொகையை (486,000) விட அதிகமாகும்.

President Joe Biden speaks after a tour of a Pfizer manufacturing site in Portage, Mich. (AP Photo/Evan Vucci)

அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு 670 பேரில் ஒருவர் கடந்தாண்டு COVID-19 நோயால் உயிரிழந்தார். அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில், பொருத்தமற்ற விகிதாசாரத்தில், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒவ்வொரு 100 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இறந்தவர்களுக்கு அப்பாற்பட்டு, 28 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு இந்நோய் தொற்று ஏற்பட்டுள்ளது, மேலும் நீண்டகால உடல்நல பாதிப்புகள் குறித்து இன்னும் அறியப்படவில்லை. மில்லியன் கணக்கானவர்கள் —பெற்றோர் மற்றும் வாழ்க்கை துணை, சக ஊழியர்கள் மற்றும் குழந்தைகளை என— தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பெருந்தொற்று பிரதான நகர மையங்களில் இருந்து சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்கள் வரை நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் ஆழமாக பாதித்துள்ளது. நியூ யோர்க் நகரில் 295 பேருக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். லோஸ் ஏஞ்சல்ஸ் உள்ளாட்சியில் 500 பேருக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார், இது தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டவாறு, “1,000 சதுர மைல் பரப்பளவில் 13,000 பேர் பரவலாக வசிக்கும், டெக்சாஸின் லாம்ப் உள்ளாட்சியில், 163 பேருக்கு ஒருவர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளார்,” என்று குறிப்பிட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பார்த்திராத விகிதத்தில் அமெரிக்காவில் ஆயுட்காலம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆண்களின் ஆயுட்காலம் இப்போது 75.1 ஆண்டுகளாக உள்ளது, இது 2019 இல் இருந்ததை விட 1.2 ஆண்டுகள் குறைவாகும். இதுவே பெண்களுக்கு 80.5 ஆண்டுகளாக உள்ளது, இது ஏறக்குறைய ஓராண்டு காலம் குறைந்துள்ளது. இந்த புள்ளிவிபரங்களும் கூட 2020 இன் முதல் பாதியை மட்டுமே கணக்கில் கொண்டதாகும் — அதாவது நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஏற்பட்ட பாரியளவிலான நோய் அதிகரிப்பு மற்றும் உயிரிழப்புகளுக்கு முந்தைய புள்ளிவிபரங்களாகும்.

இந்த தொற்றுநோய் சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் அதிர்ச்சியூட்டும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கலையும் கலாச்சாரமும் அழிக்கப்பட்டுள்ளன. பத்து மில்லியன் கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர், மில்லியன் கணக்கானவர்கள் நீண்ட கால மற்றும் நிரந்தர வேலையின்மை நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அரசின் சொற்ப உதவியை விட அதிகமாக, தொழிலாளர்கள் மீது ஏராளமான கடன்கள் குவித்துள்ளன. ஒரு தலைமுறை இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் சிதைந்திருப்பதைக் காண்கிறார்கள். பொருளாதார மற்றும் சமூக இடப்பெயர்ச்சியிலிருந்து ஏற்படும் உளவியல் அதிர்ச்சி கணக்கிட முடியாதுள்ளது.

இந்த தொற்றுநோயின் கொடூர பாதிப்பு ஒரு துன்பியல் என்பதை விட அதிகமாக உள்ளது. இது முதலாளித்துவ சமூகத்தின் பரந்த சமூக, அரசியல், பொருளாதார மற்றும் புத்திஜீவித தோல்வியை அம்பலப்படுத்தியுள்ள, ஒரு மிகப் பெரும் சமூக குற்றமாகும்.

திங்கட்கிழமை மாலை, ஜனாதிபதி ஜோ பைடென் அரை மில்லியன் பேர் உயிரிழந்த மைல்கல்லைக் குறிக்கும் விதத்தில் கடமைக்காக ஒரு 10 நிமிட உரை நிகழ்த்தினார். வெற்று பெருமைபீற்றல்களுடன் வாயில் வடை சுட்ட அவர் கருத்துக்களில், பைடென் ஒரு குறிப்பிடத்தக்க உண்மையை ஒப்புக் கொண்டார்: அதாவது, அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கை “பூமியில் வேறெந்த நாட்டையும் விட அதிகம்,” என்றார்.

இருந்தாலும் கூட பைடென் இந்த யதார்த்தத்தை உருவாக்கிய கொள்கைகளையும் செயல்களையும் விளக்க முயற்சிக்கவில்லை. பரிசோதனை, நோய்தொற்று ஏற்படுத்துபவர்களை தடமறிதல் மற்றும் சமூக அடைப்புகளைக் கொண்ட ஒரு கடுமையான வேலைத்திட்டத்தின் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்திய சீனாவின் திறமையானது, இந்த வைரஸின் கட்டுப்பாடற்ற பரவல் தவிர்க்க முடியாதவை அல்ல என்பதை எடுத்துக்காட்டுகிறது. அது உயிர்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை கொடுக்க ஆளும் வர்க்கமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் எடுத்த நனவுப்பூர்வமான தீர்மானங்களின் விளைவாக இருந்தது.

இந்த தொற்றுநோய் பரவுகையில், தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கக்கூடிய பல முக்கியமான கட்டங்கள் இருந்தன. அமெரிக்காவில் முதன்முதலில் பெப்ரவரியில் தான் முதல் அறியப்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டது. ட்ரம்ப் நிர்வாகம் —ஜனநாயகக் கட்சி மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்புடன்— வேண்டுமென்றே அச்சுறுத்தலின் அளவைக் குறைத்துக் காட்டியதுடன், நாடு முழுவதும் நோய்தொற்று பரவாமல் தடுக்க அவசர நடவடிக்கைகளை எடுக்க மறுத்தது.

மார்ச் மாதம், உயிரிழப்பு எண்ணிக்கை அப்போது 1,000 க்கும் குறைவாக இருந்த போதிலும், ஆனால் முக்கிய நகர மையங்களில், குறிப்பாக நியூ யோர்க் நகரில் அது வேகமாக அதிகரித்து கொண்டிருந்த போது, ஆளும் வர்க்கம் செல்வந்தர்களுக்குப் பாரியளவில் செல்வத்தைக் கைமாற்ற அந்த நெருக்கடியைப் பயன்படுத்தியது, அது அமெரிக்க காங்கிரஸ் சபையில் CARES சட்டம் என்றழைக்கப்பட்டதை அண்மித்து இருகட்சிகளின் ஒருமனதான ஆதரவுடன் நிறைவேற்றியதன் மூலமாக செயல்படுத்தப்பட்டது.

இதன் பின்னர் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப நிர்பந்திக்க மொத்த அரசியல் ஸ்தாபகத்தின் ஓர் ஒருங்கிணைந்த பிரச்சாரம் நடத்தப்பட்டது. நியூ யோர்க் டைம்ஸின் தோமஸ் ஃப்ரீட்மன் தான், “நோயை விட சிகிச்சை மோசமாக இருந்து விடக்கூடாது” என்ற சொற்றொடரை அறிமுகப்படுத்தினார், இந்த கோஷம் ட்ரம்பால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நடைமுறையில் இதன் அர்த்தம் என்னவென்றால், உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் ஆளும் வர்க்கத்தின் இலாப நலன்களுக்கும், பங்குச் சந்தைகளின் முடிவில்லா அதிகரிப்புக்கும் அடிபணிய செய்யப்பட வேண்டும் என்பதாகும்.

ட்ரம்ப் நிர்வாகம் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையை முன்னெடுத்ததுடன், வணிக நடவடிக்கைகள் மீதிருந்த எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்க கோரிய பாசிசவாத அமைப்புகளைத் தூண்டிவிட்டது. ஆனால் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டுமே ஆட்சியிலிருந்த நாடெங்கிலுமான மாநிலங்களில், இந்த தொற்றுநோய் பரவும் விதமான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து, மே மாதம் மூன்றாம் வாரத்தில் 100,000 ஐ எட்டியது; செப்டம்பர் மத்திய பகுதியில் 200,000; மற்றும் டிசம்பர் தொடக்கத்தில் 300,000 ஐ எட்டியது.

இந்த பேரழிவு கட்டவிழ்ந்து கொண்டிருந்த நிலையில், ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் அதிர்ச்சியூட்டும் அளவிலான ஓர் அலட்சியத்துடன் விடையிறுத்தன. கடந்தாண்டின் போது எந்த நேரத்திலும் இது எப்படி நடந்தது, என்ன செய்யப்பட வேண்டும் என்று விவாதிக்க அங்கே ஒரேயொரு காங்கிரஸ் சபை விசாரணையும் இருக்கவில்லை. உயிரிழப்புகளின் முடிவில்லா எண்ணிக்கையோ, ஊடகங்களால், வாழ்க்கையின் ஒரு பாகமாக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதாக கையாளப்பட்டது.

2020 இன் இரண்டாம் பாதியில் கூட, அனைத்து அத்தியாவசிமற்ற வேலையிடங்களை அடைப்பது, பள்ளிகளை மூடுவது மற்றும் நெருக்கடியைக் கடக்கும் வரை மக்கள் தாக்குப்பிடிப்பதற்கு அவசியமான நிதி உதவிகளுக்கு அவசர ஏற்பாடுகள் செய்வது உட்பட அவசரகால நடவடிக்கைகள் மூலமாக அந்த பேரழிவின் அளவைக் குறைத்திருக்க முடியும்.

ஆனால் அரசியல் ஸ்தாபகம் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அவசியமான இத்தகைய நடவடிக்கைகளை நிராகரித்தது. 2020 தேர்தல்கள் நெடுகிலும் மற்றும் அதற்குப் பின்னரும், பைடென் வலியுறுத்துகையில், ஜனநாயகக் கட்சி நிர்வாகத்தின் கீழ் அங்கே "தேசியளவில் சமூக அடைப்பு இருக்காது" என்று வலியுறுத்தினார். வேலைக்குத் திரும்புவதற்கான பிரச்சாரத்தை செயல்படுத்த அணிதிரட்டப்பட்ட அதே சக்திகளை உள்ளடக்கிய, ட்ரம்பின் ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியைத் தொடர்ந்து, "நல்லிணக்கம்" மற்றும் "இருகட்சிகளின் ஒருமனதான சம்மதம்" என்பதே ஜனநாயகக் கட்சியின் தாரக மந்திரமாக ஆகியுள்ளது.

பைடென் திங்கள்கிழமை மாலை அறிவிக்கையில், உயிரிழந்தவர்களை நினைவுக்கூர்வது மட்டுமில்லை, "செயல்படுவது. விழிப்புடன் இருப்பது. சமூக இடைவெளியை கடைபிடிப்பது" அவசியம் என்று அறிவித்தார். ஆனால் அவரின், வார்த்தைகள் அவரது நிர்வாக கொள்கைக்கு நேரெதிர் விதமாக உள்ளன, அது பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும் மற்றும் அத்தியாவசியமற்ற வணிகங்களைச் செயல்பட அனுமதிப்பதற்குமான முயற்சியை மையமாகக் கொண்டுள்ளது. ஏப்ரல் 1 க்குள் பள்ளிகள் "வாரத்திற்கு ஐந்து நாட்கள்" திறந்திருக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை, பைடென் கடந்த வாரம் மீண்டும் வலியுறுத்தினார்.

இறப்பு எண்ணிக்கை அரை மில்லியனைக் கடந்து சென்று கொண்டிருக்கையிலும் கூட, இந்த தொற்றுநோய் இன்னும் முடிந்துவிடவில்லை. புதிய அறிவிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கையும் மரணங்களும், ஐந்து வாரங்களுக்கு முன்னர் இருந்த மிகச் சமீபத்திய உச்சநிலையிலிருந்து குறைந்துள்ளன என்றாலும், அவை இரண்டுமே 2020 இன் பெரும்பகுதியின் சராசரியை விட அதிகமாகவே உள்ளன. இன்னும் அதிகளவில் பரவக்கூடிய உருமாறிய இந்த வைரஸின் புதிய வகைகள் பரவுகின்றன என்பது பரவலாக ஒரு தடுப்பூசி கிடைப்பதற்கு முன்னரே புதிய நோயாளிகளின் அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை அர்த்தப்படுத்துகிறது.

இறுதி பகுப்பாய்வில், COVID-19 வைரஸுக்கு எந்தவொரு பகுத்தறிவார்ந்த, விஞ்ஞானபூர்வ மனித விடையிறுப்பையும் ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு காரணிகள் தடுத்தன. முதலாவது சமூக தேவையை விட தனிப்பட்ட செல்வத்திற்கும் இலாபத்திற்கும் முன்னுரிமை அளித்தல். நிதிச் சந்தைகள் மற்றும் தன்னலக்குழுவின் செல்வத்தைப் பாதுகாப்பதே ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளின் ஒரே பரிசீலனையாக இருந்தது.

உண்மையில், "நல்லதொரு நெருக்கடி ஒருபோதும் வீணடிக்கப்படக் கூடாது" என்ற கொள்கையின் கீழ் செயல்பட்டு வரும் ஆளும் உயரடுக்கு, அமெரிக்க வரலாற்றில் ஈடு இணையின்றி செல்வத்தை கைமாற்றுவதை வடிவமைக்க இந்த தொற்றுநோயைப் பயன்படுத்தியது. பாரிய மரணங்கள் மற்றும் அதிகரிக்கும் வறுமை நிலைமைகளின் கீழ் கூட, பணக்காரர்கள் இன்னும் அதிக பணக்காரர்களாக ஆனார்கள். மார்ச் 2020 இல் இருந்து அமெரிக்க பில்லியனர்களின் செல்வவளம் 1.1 டிரில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது. பங்குச் சந்தையின் அதிகரிப்பில் உதாரணமாக எடுத்துக்காட்டப்பட்டவாறு, செல்வ குவிப்பிற்கான இந்த நிகழ்ச்சிப்போக்கானது, பாரிய உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியாததாக ஆக்கிய அதே கொள்கைகளால் தான் சாத்தியமாக்கப்பட்டது.

உலகளாவிய ஒரு தொற்றுநோய்க்கான விடையிறுப்பை தேசியவாத புவிசார் அரசியலுக்கு அடிபணிய செய்தமை இரண்டாவது காரணியாக இருந்தது. கிட்டத்தட்ட துல்லியமாக ஓராண்டுக்கு முன்னர், பெப்ரவரி 24, 2020 இல் நடந்த ஒரு கூட்டத்தில், இந்த தொற்றுநோய் அமெரிக்காவில் பரவத் தொடங்கியிருந்த ஒரு தருணத்தில், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் அதன் உலகளாவிய தன்மையைச் சுட்டிக்காட்டினார்:

சந்தைகள் மற்றும் நிலப்பகுதிகளுக்காக தேசிய அரசுகள் சண்டையிடத் தயாராகி வரும் நிலையில், இந்த கொரோனா வைரஸ் எல்லைகளைக் கண்டு கொள்ளாமல் உலகெங்கிலும் பரவிக் கொண்டிருக்கிறது. கடவுச்சீட்டு இல்லாமல் மற்றும் ஒரு நுழைவனுமதி விண்ணப்பிக்க கவலைப்படாமல் பயணிக்கும் இந்த வைரஸ், அதனால் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேசியம், பாரம்பரியம், இனப் பின்னணி, மதம் ஆகியவை மீது முற்றிலும் அலட்சியமாக உள்ளது.

அமெரிக்காவில் பின்பற்றப்பட்ட கொள்கை தான் உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்கின்ற நிலையில், எல்லா முதலாளித்துவ அரசுகளின் தேசியவாத அரசியலும் அந்த வைரஸைத் தடுக்க தேவையான ஆதாரவளங்கள் மற்றும் விஞ்ஞான நிபுணத்துவத்தை உலகளவில் ஒருங்கிணைப்பதை முடக்கின.

அந்த தொற்றுநோய் ஒரு பேரழிவும் மற்றும் குற்றமும் ஆகும். இதுவொரு வரலாற்று திருப்புமுனையும் ஆகும். அமெரிக்க முதலாளித்துவம் மீளமுடியாத அவமதிப்பை அடைந்துள்ளது. இந்த அனுபவத்தினூடாக வந்தவர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களின் ஓர் ஒட்டுமொத்த தலைமுறைக்கும், இது அவர்களுக்கு வாழ்க்கை அனுபவத்தை வழங்கி, உலகை பார்க்கும் அவர்களின் பார்வையை வடிவமைக்கும்.

உலக சோசலிச வலைத் தளம் விளக்கி உள்ளதைப் போல, இந்த தொற்றுநோய் ஒரு தூண்டுதல் நிகழ்வாகும். முதலாம் உலகப் போர் போல அதே விதத்தில், இது ஒட்டுமொத்த சமூக மற்றும் பொருளாதார அமைப்பின் திவால்நிலைமையை அம்பலப்படுத்தியுள்ளது — அரசியல் கட்சிகளை மட்டுமல்ல, போலி-புத்திஜீவி அடுக்குகளையும், இன மற்றும் பாலின அடையாளத்துடன் அவற்றின் ஆவேசத்தையும், ஆளும் வர்க்கத்தின் பொய்யுரைக்கும் ஊதுகுழல்களான ஊழல் ஊடகங்களையும், பெருநிறுவனங்கள் மற்றும் அரசின் கருவியாக செயல்படும் பெருநிறுவன தொழிற்சங்கங்களையும் இது அம்பலப்படுத்தி உள்ளது.

முதலாளித்துவத்தால் தோற்றுவிக்கப்பட்ட நெருக்கடிக்கு, சோசலிச சர்வதேசவாதத்தின் ஒரு வேலைத்திட்டம் மற்றும் அதிகாரத்திற்கான தொழிலாள வர்க்க போராட்டத்தின் மூலமாக மட்டுமே ஒரு தீர்வைக் காணமுடியும் என்பதை, அமெரிக்காவிலும் உலகெங்கிலுமான பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அது நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

Loading