அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் புட்டினின் வலதுசாரி விமர்சகர் நவால்னி குறித்த பிரச்சாரத்தை முடுக்கியுள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கருங்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இராணுவ பதட்டங்கள், மற்றும் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நிலவும் இராஜதந்திர நெருக்கடிக்கு மத்தியில், ஐரோப்பிய ஒன்றியமும் பைடென் நிர்வாகமும் புட்டின் எதிர்ப்பு வலதுசாரி எதிர்தரப்பு தலைவர் அலெக்ஸி நவால்னி குறித்த பிரச்சாரத்தை இப்போது மீண்டும் முடுக்கிவிட்டுள்ளன.

நவால்னி பேர்லினில் இருந்து ரஷ்யாவுக்கு திரும்பியதன் பின்னர் அங்கு அவருக்கு பிப்ரவரியில் இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது, ஆகஸ்டில் அவருக்கு நஞ்சுட்டப்பட்டிருப்பதாக கூறப்பட்ட பின்னரும் அங்கு அவர் பல மாதங்களை கழித்துள்ளார். ஆகஸ்ட் மற்றும் ஜனவரி மாதங்களுக்கிடையில், அமெரிக்க மற்றும் ஜேர்மன் பத்திரிகைகள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நவால்னியை நோவிசோக் விஷம் வைத்து கொலை செய்ய முயல்வதாகக் கூறப்படும் தொடர்ச்சியான செய்திகளால் நிரம்பியிருந்தன. மேற்கத்திய ஊடகங்களால் முன்வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டுக்கள், உண்மையில், ஒருபோதும் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், முரண்பாடுகளால் இவை புதிராகவே இருக்கின்றன.

தற்போது அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் நவால்னி குறித்த பிரச்சாரத்தை மீண்டும் முடுக்கிவிட்டுள்ளன. கடந்த மூன்று வாரங்களாக அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது மருத்துவர்கள், அவரது இரத்தத்தின் தன்மை மிகுந்த கவலையளிப்பதாக இருப்பதால், அவர் “எந்த நேரத்திலும் இறந்துபோக” கூடும் என்று அவர்கள் நம்புவதாக இப்போது தெரிவிக்கின்றனர்.

சனிக்கிழமையன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், நவால்னிக்கு அளிக்கப்படும் சிகிச்சை “முற்றிலும், முற்றிலும் நியாயமற்றது” மற்றும் “முற்றிலும் பொருத்தமற்றது” என்று விவரித்தார். தடுப்புக்காவலில் இருக்கும்போது நவால்னி இறந்துபோனால் “விளைவுகள்” ஏற்படும் என்று வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. திங்களன்று, வெள்ளை மாளிகை ஊடகத்துறை செயலர் ஜென் சாகி (Jen Psaki), “ரஷ்ய அரசாங்கத்தின் காவலில் இருக்கையில் திரு நவால்னிக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கு ரஷ்ய அரசாங்கம்தான் பொறுப்பு. மேலும் சர்வதேச சமூகத்தால் அவர்கள் பொறுப்பாக்கப்படுவார்கள்” என்று மீண்டும் வலியுறுத்தினார்.

ரஷ்யாவுக்கான அமெரிக்க தூதர் ஜோன் சுல்லிவனின் கருத்துப்படி, “இந்த பிரச்சினை தொடர்புபட்ட ரஷ்ய அரசாங்கத்திற்கான தகவல்” முதன்மையாக “ரஷ்ய அரசாங்கத்தின் அதிவுயர் மட்டங்களுக்கு தனிப்பட்ட முறையிலும் இராஜதந்திர வழிகள் ஊடாகவும் நேரடியாக” சென்றுவிடும்.

நியூ யோர்க் டைம்ஸ் கூட சனிக்கிழமை இதுபற்றி ஒரு தலையங்கத்தை வெளியிட்டது, அது, நவால்னி “தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள” அவரது மருத்துவர்களை பார்க்க அவரை அனுமதிக்கும்படி புட்டினை கோரியது.

செனட்டர் பேர்ணி சான்டர்ஸ் நவால்னி குறித்த புதுப்பிக்கப்பட்ட பிரச்சாரத்திற்கு பின்னால் அணிவகுத்து தனது நேரத்தை இழக்க விரும்பவில்லை, மாறாக, “இங்கே நடப்பது குறித்து எந்த தவறும் செய்யாதீர்கள்: புட்டினின் பரந்த ஊழலை அம்பலப்படுத்திய குற்றத்திற்காக உலகின் முன்னிலையில் அலெக்ஸி நவால்னி புட்டினால் கொலை செய்யப்படுகிறார். நவால்னியை பார்க்க அவரது மருத்துவர்களை உடனடியாக அனுமதிக்க வேண்டும்” என்று ட்வீட் செய்தார்.

இதே தீவிரத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட பிரதிநிதி ஜோசப் பேரல் (Josep Barrel), நவால்னிக்கு தேவையான மருத்துவ சிகிச்சையளிக்க கிரெம்ளினுக்கு அழைப்புவிடுத்தார். மேலும், ஐரோப்பிய ஒன்றியம் அவரது நிலை குறித்து “மிகவும் வருந்துவதாகவும்”, இதற்கு ரஷ்யா தான் “பொறுப்பு” என்றும் பேரல் கூறினார்.

திங்களன்று, நவால்னி தற்போது சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது, என்றாலும் அவரது ஊழியர்கள் வேறொரு தண்டனைப் பகுதிக்குத்தான் அவர் மாற்றப்பட்டுள்ளார் என்று வலியுறுத்துகின்றனர்.

நவால்னி தவறாக நடத்தப்படும் விதம் மற்றும் கண்டிக்கத்தக்கதான நவால்னி மீதான “கொலை” முயற்சி ஆகியவை தொடர்பாக ஏகாதிபத்திய சக்திகள் முன்னெடுக்கும் பாசாங்குத்தனமான பிரச்சாரத்தை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். நவால்னியை தவறாக நடத்துவதாக குற்றம்சாட்டி கிரெம்ளினை தற்போது தாக்கும் இதே அரசியல்வாதிகள் தான், மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்று போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளரும், வெளியீட்டாளருமான ஜூலியன் அசான்ஜை பல ஆண்டு காலம் சித்திரவதை செய்வதற்கும் சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பதற்கும் முழு பொறுப்பாளிகளாகவுள்ளனர். உலகில் எந்தவொரு அரசியல் கைதியாவது அரசால் மெதுவாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுவதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்றால், அது அசான்ஜ் பற்றியது தான் என்பதுடன், அதற்கு அமெரிக்க அரசாங்கமே முதன்மை பொறுப்பாகும்.

உண்மை என்னவென்றால், புட்டினுக்கு எதிராக ரஷ்ய தன்னலக்குழு, அரசு மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்திற்குள் பல அடுக்குகளை அணிதிரட்டும் தகுதியுடன், ஒரு தாசப்த காலத்திற்கும் மேலாக ஒரு முதலாளித்துவ சார்பு ஏதிர்தரப்பு பிரமுகராக அவர் கட்டமைக்கப்படவில்லை என்றால், இந்த ஏகாதிபத்திய அரசியல்வாதிகள் எவரும் நவால்னியை பற்றி கவலைப்பட மாட்டார்கள். நியூ யோர்க் டைம்ஸும், மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அரசியல்வாதிகளும் அவரை ஒரு “ஜனநாயக” எதிர்ப்பாளராக முன்வைக்கும் அதேவேளை, நவால்னி ரஷ்ய நவ-நாஜி களத்துடன் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட தொடர்புகளைக் கொண்டுள்ளார்.

இவர் மோசமான வருடாந்திர தீவிர வலதுசாரி ரஷ்ய அணிவகுப்பை தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக இணைந்து ஒழுங்கமைத்ததுடன், காக்கசஸிலிருந்து புலம்பெயர்ந்த மக்களை “கரப்பான் பூச்சிகள்” என்று கண்டனம் செய்து கெட்டுப்போன பற்களை அகற்றுவது போல இவர்கள் “அகற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு வெறித்தனமான இனவெறி பிரச்சார வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். இந்த தீவிர வலதுசாரி கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகளுக்காக அவர் ஒருபோதும் மன்னிப்பு கோரவில்லை அல்லது அவற்றிலிருந்து விலகியிருக்கவில்லை. பிப்ரவரியில், சர்வதேச மன்னிப்பு சபை பெரும் பொது அழுத்தத்தை எதிர்கொண்டது என்பதில் சந்தேகமில்லை, அதாவது “வெறுக்கத்தக்க பேச்சு” என்று அவர்கள் இதை ஒப்புக்கொண்டதால், “மனச்சாட்சிப்படியான கைதி” என்று அவரது நிலையை இரத்து செய்ய அது நிர்ப்பந்திக்கப்பட்டது.

கருங்கடல் பிராந்தியத்தில் உக்ரேனில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நவால்னி குறித்த இந்த புதுப்பிக்கப்பட்ட பிரச்சாரம் நடத்தப்படுகிறது. கடந்த வாரம், கருங்கடலுக்கு இரண்டு போர்க்கப்பல்களை அனுப்ப திட்டமிட்டிருந்ததை அமெரிக்கா நினைவு கூர்ந்தது. ஒரு கிரெம்ளின் பிரதிநிதி அமெரிக்கா “கருங்கடலிலிருந்து விலகியிருக்க வேண்டும்… அதுவே அதன் சொந்த நலனுக்கு நல்லது” என்று முன்னரே எச்சரித்திருந்தார். என்றாலும் கூட, அடுத்து உடனடியாக, வியாழனன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ரஷ்யாவுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளுக்கும், 10 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றுவதற்கும் அறிவித்துள்ளார்.

இதற்கு பதிலடியாக கிரெம்ளின் இதுவரை 10 அமெரிக்க இராஜதந்திரிகளை வெளியேற்றியுள்ளது. மேலும், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆயுத தொழிற்சாலையில் நிகழ்ந்த சந்தேகத்திற்குரிய வெடிப்பை ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தி, செக் குடியரசு இப்போது 18 ரஷ்ய இராஜதந்திரிகளை “உளவாளிகள்” என்று கூறி வெளியேற்றியுள்ளது, அதற்கு கிரெம்ளின் 20 செக் குடியரசு இராஜதந்திரிகளை வெளியேற்றி பதிலடி கொடுத்தது. ஞாயிற்றுக்கிழமை, இங்கிலாந்து கருங்கடலுக்கு இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பப்போவதாக அறிவித்தது.

அமெரிக்க-ரஷ்ய உறவுகள் விரைந்து மோசமடைந்து வருவது குறித்து கருத்து தெரிவிக்கையில், கிரெம்ளினுடன் நெருங்கிய உறவைக் கொண்ட ரஷ்யாவின் முக்கிய வெளியுறவுக் கொள்கை நிபணர்களில் ஒருவரான ஃபியோடர் லுக்கியானோவ் (Fyodor Lukyanov), “ஏதோவொரு வகையில் இராணுவம் கவனித்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகவுள்ள [சிரியா, உக்ரேன்] உடன் ‘போர் ஆபத்தை குறைத்தல்’ என்ற அவர்கள் குறிப்பிடும் விடயத்தைத் தாண்டி ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அடிப்படையில் எந்தவொரு பொதுவான திட்ட நிரலும் இல்லை” என்று திங்கட்கிழமை குறிப்பிட்டார். இருதரப்பு உச்சிமாநாட்டிற்கான பைடெனின் முன்மொழிவு உட்பட, ரஷ்யாவைப் பொறுத்த வரை வாஷிங்டனின் முன்னுக்குப் பின் முரணான முடிவுகள், “குழப்பத்தை” குறிப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும், கடந்த தசாப்தங்களில் “மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான உறவுகளின் இறுதி அழிவுக்கு நாங்கள் சாட்சியாக இருக்கிறோம்” என்று லுக்கியானோவ் எழுதினார். மாஸ்கோவின் பதிலிறுப்பு, சீனாவுடனான ஒரு கூட்டணியை நாடும் எப்போதும் வலுவான நோக்குநிலையை கொண்டிருக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.

ரஷ்ய-அமெரிக்க உறவுகள் விரைந்து முறிந்து கொண்டிருக்கும் நிலையில், நவால்னி குறித்த பிரச்சாரத்தில் பேர்லின் பெரிதும் ஈடுபடுவது பற்றி கிரெம்ளின் குறிப்பாக கவலை கொண்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் நவால்னி ஒரு விமானத்தில் பயணிக்கையில் நோய்வாய்ப்பட்டபோது, சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் நேரடி தலையீட்டைத் தொடர்ந்து அவர் பேரலினின் Charité மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பசுமைக் கட்சியைச் சேர்ந்த ஜூர்கன் டிரிட்டின் (Jurgen Trittin) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நில்ஸ் ஷ்ச்மிட் (Nils Schmid) உட்பட பல முன்னணி ஜேர்மன் அரசியல்வாதிகள், ரஷ்ய அரசாங்கத்தின் “குறிவைக்கப்பட்ட சித்திரவதை” குறித்து குற்றம்சாட்டியும், அவருக்கு தங்களது “முழுமையான ஒற்றுமையை” வெளிப்படுத்தியும் நவால்னிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர் என்று கடந்த வாரம் Spiegel பத்திரிகை செய்தி வெளியிட்டது.

Spiegel பத்திரிகை மேலும், புட்டினுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை விவரிக்கும் இரண்டு மணி நேர வீடியோவை தயாரிக்க ஜேர்மன் அரசாங்கம் நவால்னிக்கு உதவியதாக குற்றம்சாட்ட, ஜேர்மனிக்கான ரஷ்ய தூதர் சேர்ஜி நெச்சேவ் பிப்ரவரி 16 அன்று ஜேர்மன் வெளியுறவு அமைச்சகத்திற்கு ஒரு முறையான விஜயம் செய்தார் என்றும் தெரிவித்தது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் அழிக்கப்பட்டு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், உலகின் வேறு எந்த பொருளாதாரத்தையும் விட ரஷ்யாவில் உச்சமாகவுள்ள சமூக சமத்துவமின்மை குறித்த பரந்த மக்கள் அதிருப்தியை எடுத்துக்காட்டுவதாக வேண்டுமென்றே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதை 116 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.

திங்களன்று, Tagesspiegel நாளிதழ், நவால்னி ஊழியர்களில் ஒருவரான அலெக்ஸி கிரெஸ்கோவுடனான ஒரு பேட்டியை வெளியிட்டது. இதில் அவர், சில மாதங்களுக்கு முன்னர் நோவிச்சோக்கினால் நவால்னிக்கு உடனடி மரணம் ஏற்படலாம் என்று அவரது ஊழியர் குழு உலகிற்கு அநேகமாக தினமும் எச்சரிக்காதது போல நாடகமாடி, “அவரது மரணத்திற்கான சாத்தியம் பற்றி பேசுவதற்கு முன்னர் ஒருபோதும் நாங்கள் துணியவில்லை. ஆனால் இப்போது அவர் இறக்கக்கூடும் என்று வெளிப்படையாக விவாதிக்கிறோம்” என்று கூறினார். “வலிமையை” காட்டி பதிலளிக்க மேற்கு நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். மேலும், “நிதிய விளைவுகளுடன் கூடிய ஒரு பதிலிறுப்பாக அது இருக்க வேண்டும்: அதாவது புட்டின் ஆதரவாளர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட வேண்டும். அவரும் அவரை நம்புபவர்களும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரே மொழி இதுதான்” என்றும் தெரிவித்தார்.

நவால்னி குறித்த பிரச்சாரத்தின் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதை இந்த முறையீடுகள் மிகவும் தெளிவுபடுத்துகின்றன: புட்டினை இன்னும் பெரிதும் ஆதரிக்கும் தன்னலக்குழுக்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் புட்டின் ஆட்சியை சீர்குலைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது, அதேவேளை தன்னலக்குழு மற்றும் ஏகாதிபத்தியத்தின் ஒரு போட்டி பிரிவின் பின்னால் நடுத்தர வர்க்கத்தின் வலதுசாரி அடுக்குகளை இது அணிதிரட்டுகிறது. இது, ஒரு வலதுசாரி, மேற்கத்திய சார்பு அரசாங்கத்தை அங்கு ஸ்தாபிப்பதை நோக்கமாகக் கொண்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். தன்னலக்குழு சார்பு புட்டின் ஆட்சிக்கு எதிராக, ஏகாதிபத்தியம் மற்றும் தன்னலக்குழுவின் பிரிவுகளின் சூழ்ச்சிகளிலிருந்து முற்றிலும் சுயாதீனமான, ஒரு சோசலிச அடிப்படையிலான ஒரு எதிர்ப்பைக் காட்டுவதன் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கம் அதன் சொந்த நலன்களை முன்னெடுக்க முடியும்.

Loading