பிரெஞ்சு ஓய்வு பெற்ற இராணுவ தளபதிகள் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு அச்சுறுத்துகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

1961ல் அல்ஜியர்ஸில் பிரெஞ்சு இராணுவ ஆட்சி சதிக்கு முயற்சிக்கப்பட்டதன் 60வது ஆண்டு நிறைவின் ஏப்ரல் 21 அன்று, ஓய்வுபெற்ற 23 தளபதிகள் நவ பாசிச வலைத் தளமான Valeurs Actuelles இல் அரசாங்கத்திற்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டனர். அக் கடிதம் அரசியல் வாழ்வில் இராணுவத்தின் அசாதாரண தலையீட்டைக் குறிக்கிறது. 1871 பாரிஸ் கம்யூன் மற்றும் இரத்தக்களரி வாரம் (Semaine sanglante)இராணுவத்தால் கம்யூனார்ட்டுக்கள் படுகொலை செய்யப்பட்டு நூற்று ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தக் கடிதம் பிரெஞ்சுக்காரர்களின் "திருப்தி" ஆல் தூண்டப்பட்டதாகக் கூறப்படும் ஒரு இராணுவத் தலையீடு மற்றும் இரத்தக் களரி போரை நாட்டில் குறிக்கிறது.

பிரான்சின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மற்றும் பிரெஞ்சு இராணுவங்களின் தலைமை அதிகாரி ஜெனரல் பிரான்சுவா லுகுவாந்ர் (Francois Lecointre) ஆகியோர் பாஸ்டி தின இராணுவ அணிவகுப்பு தொடங்குவதற்கு முன்னர், பாரிஸில் ஜூலை 14, 2020 செவ்வாயன்று துருப்புக்களை மறுஆய்வு செய்யும் போது, மையத்திலுள்ள கட்டளை காரில் நிற்கின்றனர். (AP Photo/Francois Mori)

இந்த பாசிச அச்சுறுத்தல்களின் தொடர்பும் மற்றும் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியும் வெளிப்படையானது. 2019 இல், "மஞ்சள் சீருடைகள்" மற்றும் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான இரயிவே வேலைநிறுத்தத்தை எதிர்கொண்ட ஓய்வுபெற்ற ஜெனரல் பியர் டு வில்லியே (Pierre de Villiers) எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் ஒடுக்குமுறையில் இன்னும் "உறுதியைக்" கோரினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் "சமூக நோய் எதிர்ப்பு சக்திப் பெருக்கும்" கொள்கைக்கு எதிராக தொழிலாளர்களின் கோபம் அதிகரித்து வரும் நிலையில், இது கண்டத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளுக்கு வழிவகுத்துள்ளது, அதிகாரிகள் குழு ஒன்று வெகுஜனக் கொலை என்ற ஆவியை எழுப்புவதன் மூலம் தொழிலாளர்களை அச்சுறுத்த முயற்சிக்கிறது.

மக்ரோன் மற்றும் பாராளுமன்றத்திற்கு முகவரியிட்ட முன்னாள் தளபதிகள் அதிக தேசபக்தியைக் கோருகின்றனர், அதாவது "பிரான்ஸ் ஆபத்தில் உள்ளது, பல மரண ஆபத்துக்கள் அதை அச்சுறுத்துகின்றன. ... நாட்டைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் கொள்கைகளை ஆதரிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்."

இந்தக் கடிதம் தொழிலாள வர்க்க புறநகர்ப் பகுதிகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறது மற்றும் இஸ்லாமியவாதத்தையும் காலனித்துவத்திற்கு பிந்தைய கோட்பாடுகளையும் பிளவுபடுத்துவதாகவும் இரத்தம் தோய்ந்த அடக்குமுறை தேவை என்றும் கண்டனம் செய்கிறது.

இஸ்லாமிய "பிரிவினைவாதம்" என்று அழைக்கப்படுவதை இலக்காகக் கொண்ட மக்ரோனின் முன்மொழியப்பட்ட பாசிச சட்டத்தை எதிரொலிக்கும் வகையில், அவர்கள் "இஸ்லாமியவாதம் மற்றும் புறநகர் கூட்டங்களுடன், நாட்டின் பல பகுதிகளை பிரிக்க வழிவகுக்கும், அவற்றை நமது அரசியலமைப்பிற்கு முரணான கோட்பாடுகளுக்கு உட்பட்ட பிராந்தியங்களாக மாற்றும் சிதைவு" என்று கண்டனம் செய்கின்றனர், அவர்கள் மேலும் கூறுகிறார்கள்: "இன்று, சிலர் இனவாதம், சுதேச தேசியவாதம் மற்றும் காலனித்துவ கோட்பாடுகள் பற்றி பேசுகிறார்கள், ஆனால் இந்த வார்த்தை பிரயேகங்களின் மூலம் இந்த வெறுக்கத்தக்க மற்றும் வெறித்தனமான ஆதரவாளர்கள் விரும்புவது இனப் போர் ஆகும்."

எவ்வாறெனினும், அதிகாரிகள் விவரிக்கும் படுகொலையின் தீவிரமும் அளவும், அவர்களின் இலக்கு பின்நவீனத்துவ கல்வி ஆராய்ச்சியாளர்களின் குழு அல்லது பயங்கரவாத தாக்குதல்களை அச்சுறுத்தும் இஸ்லாமியவாதிகளின் ஒரு சிறிய வலைப்பின்னல் என்ற கருத்தை மறுக்கிறது. அவர்களின் இலக்கு ஒரு பரந்த எழுச்சியாகும். உண்மையில், அவர்கள் முடிவில் எழுதுகிறார்கள்:

எதுவும் செய்யப்படவில்லை என்றால், சமூகத்தின் மூலம் தளர்ச்சி தவிர்க்க முடியாமல் தொடர்ந்து பரவி, இறுதியில் ஒரு வெடிப்பையும், நமது நாகரிக மதிப்புகளைப் பாதுகாக்கவும், தேசிய பிராந்தியத்தில் நமது சக தேசத்தவர்களைப் பாதுகாக்கவும் ஒரு ஆபத்தான பணியில் நமது செயலூக்கமான தோழர்களின் தலையீட்டை ஏற்படுத்தும். தள்ளிப்போடுவதற்கு இனி நேரம் இல்லை என்பதை நாங்கள் காண்கிறோம், இல்லையெனில் நாளை உள்நாட்டுப் போர் இந்த அபிவிருத்தியடைந்து வரும் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும், நீங்கள் பொறுப்பேற்கும் இறப்புக்கள் ஆயிரக்கணக்கில் கணக்கிடப்படும்.

ஆளும் உயரடுக்குகளால் இந்த பெருந்தொற்று நோயை அரசியல் ரீதியாக குற்றவியல் முறையில் தவறாக நிர்வகிப்பது குறித்து தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபம் இராணுவ உயர் அதிகாரிகளை பயமுறுத்துகிறது. கடந்த நவம்பரில் பெருந்தொற்று நோய்க்கு மத்தியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு எதிராக பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தங்கள் அதிகரித்தபோது, டு வில்லியே இந்த பெருந்தொற்று நோயின் பின்னர், சர்வதேச அளவில் "ஆழமான மாற்றங்கள்" மற்றும் அரசியல் நெருக்கடி குறித்து அவர் பயந்து Valeurs Actuelles இல் எச்சரித்தார்.

"இன்று, பாதுகாப்பு நெருக்கடிக்கு மேலதிகமாக, இந்த பெருந்தொற்று நோய் உள்ளது, இவை அனைத்தும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியின் பின்னணியில் தலைவர்கள் மீது நம்பிக்கையின்மையுடன் உள்ளன," என்று அவர் கூறினார். "இந்த அச்சுறுத்தல்களை நீங்கள் சேர்க்கும்போது, குறுகிய காலத்தில் கவலைப்படுவதற்கு ஒவ்வொரு காரணமும் உள்ளது. இந்தக் கோபம் ஒரே நேரத்தில் வெடிக்கும் என்று நான் பயப்படுகிறேன்," என்று அவர் தொடர்ந்தார், மேலும் அவர் கூறினார்: "நாம் நினைத்துப் பார்க்க முடியாததை சிந்திக்க வேண்டும். ... சட்டத்தின் ஆட்சி வெளிப்படையாக மரியாதைக்குரியது, ஆனால் ஒரு கட்டத்தில், நாம் ஒரு மூலோபாய பிரதிபலிப்பை உருவாக்க வேண்டும்."

ஏப்ரல் 21 ம் தேதி கடிதத்தில் டு வில்லியே கையெழுத்திடவில்லை என்றாலும், இராணுவ உயர் மட்டத்தினரின் குழுக்கள் ஒரு பாராளுமன்ற ஆட்சிக்கு மாற்றீடு என்ற "பிரதிபலிப்பு" அதாவது சர்வாதிகாரத்தின் மீது தீவிரமாக வேலை செய்கின்றன என்பதை அது தெளிவுபடுத்துகிறது. இது கையெழுத்திட்டவர்களின் அடையாளத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்ட முதலாவது நபரும், கலைக்கப்பட்ட அதிவலது குழுவான Génération identitaire இன் ஆதரவாளருமான வெளிநாட்டு படையணிப் பிரிவின் (Foreign Legion) ஜெனரல் கிறிஸ்டியன் பிக்மால் (Christian Piquemal), 2016 இல் கலே என்ற இடத்தில் நடந்த புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது சீருடை அணிந்திருந்ததால் பின்னர் கைது செய்யப்பட்டு இராணுவத்தில் இருந்து விலக்கப்பட்டார்.

மற்றொருவரான ஜெனரல் டொமினிக் டுலவார்ட் (Dominique Delawarde) கொரோனா வைரஸுக்கு எதிரான சமூக இடைவெளி நடவடிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார், இது "மக்கள் அதை தள்ளிவைக்க விரும்பும் அளவுக்கு ஆபத்தானது அல்ல" என்று வாதிடுகிறார். கையெழுத்திட்ட மற்ற இரண்டு தளபதிகளான இமானுவல் டு ரிச்சுஃப்ட்ஸ் (Emmanuel de Richoufftz) மற்றும் பிலிப் டெரூஸ்ஸோ டு மெட்ரானோ (Philippe Desrousseaux de Médrano) ஆகியோர் "பிரெஞ்சு பிரபுக்களின் குடும்பங்களில் உறுப்பினர்களாக" உள்ளனர், அதாவது 1789 புரட்சியின் போது பிரான்சில் நிலப்பிரபுத்துவ சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட பிரபுத்துவ குடும்பங்களின் உறுப்பினர்கள் ஆவார்கள்.

இந்தக் கடிதத்தின் முக்கியத்துவத்தை முதலாளித்துவ ஜனநாயகத்தின் உடைவின் சர்வதேச சூழலுக்கு வெளியே புரிந்து கொள்ள முடியாது. 1991ல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிஸ்டுக்களால் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐரோப்பாவில் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஏகாதிபத்திய போர்களால் மூன்று தசாப்தங்களாக கீழறுக்கப்பட்ட அது பெருந்தொற்று நோயின் அதிர்ச்சியின் கீழ் சிக்கிக் கொண்டிருக்கிறது. வெகுஜனங்களின் கோபத்தைக் கண்டு பயந்து, தொற்றுநோயின் போது அது திரட்டிய பரந்த செல்வத்தைப் பாதுகாக்க, ஆளும் வர்க்கம் பாசிச அரசியலை நோக்கிய போக்காக மாற்றிக்கொண்டிருக்கிறது.

இந்தப் போக்கு சர்வதேச அளவில் முடுக்கிவிடப்படுகிறது. அமெரிக்காவில், ட்ரம்ப் ஜனவரி 6 அன்று வாஷிங்டன் டி.சி இல் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதியை முயற்சிசெய்து நாடாளுமன்றத்தை ஆக்கிரமித்து ஜனாதிபதி தேர்தல்களின் முடிவுகளை மாற்ற முயன்றார். ஓய்வு பெற்ற ஸ்பெயினின் உயர் இராணுவ தளபதிகள் பெருந்தொற்று நோயின் போது அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்துவதற்கான வேலைநிறுத்தங்களை எதிர்கொள்ளுகையில் தங்கள் பாசிச அனுதாபங்களை அறிவித்தனர் மற்றும் "26 மில்லியன்" ஸ்பானியர்கள் கொல்லப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

பிரான்சில், முதலாளித்துவ வர்க்கமானது 2022 தேர்தலை அதன் விளைவு எதுவாக இருந்தாலும், இன்னும் கூடுதலான சர்வாதிகார ஆட்சியை நிறுவப் பயன்படுத்தும் என்பது பெருகிய முறையில் தெளிவாகிறது. ஏப்ரல் 23ம் திகதி, அதிவலது தேசிய பேரணியின் (FN) தலைவரான மரின் லு பென், Valeurs Actuelles இல் ஒரு கட்டுரையில், பாசிச தளபதிகளை பாராட்டி, 2022ல் அவரது வேட்புமனுவை ஆதரிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

லு பென் குறிப்பிட்டார் "எங்கள் நாட்டின் நிலைமை மோசமடைந்து சீரழிவை எதிர்கொள்ளும் போது நீங்கள் அக்கவலையின் அளவாக இருக்கிறீர்கள்." அவர்களின் கவலையானது "ஜனநாயகத்தில், ஒரு அரசியல் தீர்வுக்கான தேடல் தேவைப்படுகிறது, இது பிரெஞ்சு வாக்குகளால் உறுதிப்படுத்தப்பட வேண்டிய மாற்றத்திற்கான திட்டத்தால் கட்டமைக்கப்பட வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார். தேசிய ஒன்றிய (National Union) அரசாங்கத்தின் இலக்கைக் கொண்டு, எனது பிரச்சாரத்தின் நோக்கம் மற்றும் குடியரசின் ஜனாதிபதி பதவிக்கான எனது வேட்புமனுவின் நோக்கம் இதுதான்."

பிரான்சில் ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட வேண்டும் என்று திட்டமிடும் தளபதிகளுக்கு வணக்கம் செலுத்தும் அவரது முடிவானது அவர்களுக்கு "ஜனநாயகத்தில்" ஒரு பாடம் கற்பிக்கும் ஒரு அருவருப்பான முயற்சியுடன், லு பென் தலைமையிலான ஒரு "தேசிய ஒன்றிய" ஆட்சியானது வன்முறையான பிற்போக்குத்தனமானதாகவும் இரத்தவெறிகொண்டதாகவும் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. பாசிச சட்டங்களை நிறைவேற்றி வரும் தற்போதைய அரசாங்கமானது பெருந்தொற்று நோயின் போது 100,000 க்கும் மேற்பட்ட இறப்புக்களை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் கொள்கை, லு பென்னுக்கு ஒரு ஜனநாயக மாற்றீட்டை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

மக்ரோன் அரசாங்கத்திலுள்ள ஆயுதப் படைகளின் அமைச்சர் ஃபுளோரன்ஸ் பார்லி, நேற்று இரவு ட்டுவிட்டரில் முதல் முறையாக முழு விவகாரத்தையும் குறைக்க முயற்சித்ததன் மூலம் எதிர்வினையாற்றினார். "Valeurs Actuelles” இல் வெளியிடப்பட்ட பொறுப்பற்ற தீர்ப்பாயமானது ஓய்வு பெற்ற இராணுவத்தினரால் மட்டுமே கையெழுத்திடப்பட்டுள்ளது, அவர்கள் இனி எங்கள் இராணுவங்களில் எந்த செயல்பாட்டையும் கொண்டிருக்கவில்லை, தங்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்," என்று அவர் எழுதினார்.

லு பென்னை விட மிகவும் ஒரு பொறுப்பான இராணுவாதியாகவும் பார்லி காட்டிக் கொண்டார்: "திருமதி லு பென்னின் வார்த்தைகள் இராணுவ அமைப்பு குறித்து கடுமையான அறியாமையை பிரதிபலிக்கின்றன, இது ஆயுதப் படைகளின் தலைவராக விரும்பும் ஒருவர் பற்றி கவலையளிக்கிறது. ... திருமதி லு பென் பரிந்துரைத்த ஆயுதப் படைகளின் அரசியல்மயமாக்கல் நமது இராணுவ கருவியையும் எனவே பிரான்சையும் பலவீனப்படுத்தும்."

"சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்" மற்றும் முஸ்லீம்-விரோத கொள்கைகளை பின்பற்றும் அதே வேளை, அரசாங்கமானது இராணுவத்தில் பாசிச போக்குகளை அடைகாத்து வருகிறது. இது 2017 தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் எச்சரிக்கைகளை நிரூபணம் செய்கிறது: அதாவது மக்ரோன் லு பென்னுக்கு மாற்று இல்லை. சோசலிச சமத்துவக் கட்சியானது இரண்டாம் சுற்று தேர்தல்களை தீவிரமாக புறக்கணிக்குமாறும், வெற்றி பெற்ற வேட்பாளருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் ஒரு சுயாதீனமான இயக்கத்தை கட்டியெழுப்புமாறும் அழைப்பு விடுத்தது. இந்த பெருந்தொற்று நோயயானது சர்வாதிகாரத்திற்கு எதிராகவும், ஆளும் வர்க்கத்தின் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைக்கு எதிராகவும் போராட, உலகளாவிய அளவில் அத்தகைய இயக்கத்தின் தேவையை உயர்த்திக் காட்டியுள்ளது.

Loading