முன்னோக்கு

முதலாளித்துவம் தொற்றுநோய்க்கு எதிராக அல்ல போர்களை நடத்த தயாராகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த ஆண்டு, கோவிட்-19 தொற்றுநோய் முதலில் சீனாவிலும், பின்னர் இத்தாலியிலும், அமெரிக்காவிலும் நாட்டிலிருந்து நாட்டிற்கு பரவுகையில் அனுதாபத்தோடும் ஒற்றுமையை வெளிப்படுத்தியும் உழைக்கும் மக்கள் ஒவ்வொரு புதிய நோய்க்கும் பதிலளித்தனர்.

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் வூஹானின் மருத்துவர்களையும் பெர்கமோவின் செவிலியர்களையும் உற்சாகப்படுத்தினர். மருத்துவர்கள் தங்கள் சர்வதேச சகாக்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கான சமீபத்திய அறிவையும் உதவிக் குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டனர். நோயின் தோற்றத்தை அறியவும், அதன் மரபணுவை வரிசைப்படுத்தவும், தடுப்பூசிகளின் வளர்ச்சிக்கு உதவவும் விஞ்ஞானிகள் தேசிய எல்லைகளை கடந்து நெருக்கமாக ஒத்துழைத்தனர்.

ஆனால் உலக அரசாங்கங்களுக்கு வேறு சிந்தனைகள் இருந்தன. கடந்த ஆண்டு, பொங்கி எழும் தொற்றுநோய்க்கு மத்தியில் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் உயிர்களை இழந்த நிலையில், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் ஆயுதங்கள் மற்றும் போருக்கான தயாரிப்புகளுக்காக சாதனைமிக்க தொகையான கிட்டத்தட்ட 2 ட்ரில்லியன் டாலரை செலவிட்டன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார சரிவான உலகளாவிய பொருளாதார உற்பத்தி 4.4 சதவிகிதம் குறைந்துவிட்டாலும் உலகெங்கிலும் இராணுவச் செலவுகள் 2.6 சதவிகிதம் உயர்ந்தன. 587,000 மற்றும் எண்ணிக்கையுடன் கோவிட்-19 தொற்றுநோயால் இறப்பதில் உலகளாவிய அளவில் முன்னிலையில் இருக்கும் அமெரிக்கா இதுவரை உலகின் மிகப் பெரிய இராணுவ செலவினத்தை கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு, அமெரிக்கா தனது ஆயுத செலவினங்களை 4.4 சதவீதம் அதிகரித்து 870 பில்லியன் டாலராக உயர்த்தியது. இது பட்டியலில் உள்ள அடுத்து வரும் 10 நாடுகளின் மொத்ததொகையை விட அதிகமாகும்.

தென் சீனக் கடலில் யு.எஸ். கடற்படை யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகனின் மேற்தளத்தில் ஒரு எஃப் / ஏ -18 சூப்பர் ஹார்னெட் போர் விமானம் காணப்படுகிறது 2018 [Credit: AP Photo/Kin Cheung]

அமெரிக்க இராணுவம் பொறுப்பற்ற முறையில் பணத்தை செலவிட்டு வருகிறது. வாஷிங்டனின் ஊதிப்பெருக்கப்பட்ட அணு ஆயுதத் திட்டத்தின் ஒவ்வொரு கிளையும், கண்டங்களுக்கு இடையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள் முதல் சூப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் வரை மீண்டும் கட்டப்பட்டு தரையில் இருந்து விரிவுபடுத்தப்படுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் இராணுவ செலவினங்களை இரட்டிப்பாக்க அமெரிக்கா விரும்புகிறது. ஜப்பான், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தரையிலிருந்து இயக்கப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளுடன் சீன கடற்கரையை சுற்றிவளைக்க பணத்தைப் பயன்படுத்துகிறது.

இராணுவத்திற்கான அமெரிக்க அரசாங்கத்தின் செலவினம் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து சுகாதார மற்றும் தடுப்பூசிகளுக்கான அனைத்து அவசர மத்திய அரசின் செலவுகளையும் பெருமளவில் குறைத்துவிட்டது. 2020 மார்ச்சில் நிறைவேற்றப்பட்ட CARES சட்டம், அவசரகால சுகாதார செலவினங்களில் சில பில்லியன் கணக்கான டாலர்களை மட்டுமே உள்ளடக்கியது. அதே நேரத்தில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடெனின் கீழ் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க மீட்புத் திட்டம் சுகாதார நடவடிக்கைகளுக்கான அவசரகால செலவினங்களுக்காக வருடாந்த அமெரிக்க இராணுவ வரவு-செலவுத் திட்டத்தில் எட்டில் ஒரு பகுதியை மட்டுமே உள்ளடக்கியுள்ளது.

உலகின் அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் தங்கள் இராணுவ செலவினங்களை பெருமளவில் விரிவுபடுத்துகின்றன. இதில் முன்னணியில் இருப்பது உலக மேலாதிக்கத்திற்கான ஆக்ரோஷமான தேடலுக்கு உதவிய இரண்டு உலகப் போர்களைத் தூண்டிய ஜேர்மனியாகும். ஜேர்மனியின் இராணுவச் செலவு கடந்த ஆண்டு 5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த தசாப்தத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது. பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஒவ்வொன்றும் தங்கள் செலவினங்களை 2.9 சதவிகிதம் அதிகரித்தன. இது உலக சராசரியை விட கணிசமாக அதிகமாகும்.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இங்கிலாந்து அரசாங்கங்கள் அனைத்தும் கோவிட்-19 தொற்றுநோயை கட்டுப்படுத்த அத்தியாவசியமற்ற வணிகங்களை மூடுவதை நிராகரித்தன. இந்த முக்கியமான உயிர் காக்கும் நடவடிக்கைகளை சமூகத்தால் தாங்கிக்கொள்ள முடியாது என்று வாதிடுகின்றனர்.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மக்கள் வைரஸுடன் "வாழ கற்றுக்கொள்ள வேண்டும்" என்று அறிவித்தார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், பூட்டுதல்களை நிராகரித்து "உடல்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து போகட்டும்" என்று அறிவித்தார். அமெரிக்காவில், பாரிய நோய்த்தொற்று விரைவான பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும் என்று கூறி, ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள், “அவர்கள் தொற்றுக்குள்ளாக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று அறிவித்தனர்.

ஆனால் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது மிகவும் செலவுமிக்கது என்று கூறும் அதே வேளையில், உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் தங்கள் ஆயுதப்படைகளுக்கும் ஆயுத உற்பத்தியாளர்களுக்கும் 2 டிரில்லியன் டாலர்களைக் கண்டுபிடித்தன. உலகளாவிய மூலோபாயத்தின் அடிப்படையில் மட்டுமே தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கும் நேரத்தில் இது நிகழ்கின்றது. தொற்றுநோயியல் நிபுணர் மைக்கேல் ஓஸ்டர்ஹோம் கடந்த மாதம் பின்வருமாறு எச்சரித்தார்,

தேசிய அடிப்படையில் சிந்திப்பதன் மூலம் அமெரிக்காவோ அல்லது வேறு எந்த உலக சக்தியோ ஒரு தொற்றுநோயை தோற்கடிக்க முடியாது. கோவிட்-19 தடுப்பூசிகள் இப்போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் மைய அங்கமாகும். ஆனால் பாதுகாப்புத் துறையின் மற்ற துறைகளைப் போலல்லாமல், இது போரை போலல்லாது வெளிநாட்டினரை பாதுகாப்பதை உள்ளடக்கியது. கவிஞர் ஜோன் டோன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்டது போல், “எந்த மனிதனும் தனக்கு தானே ஒரு தீவு அல்ல; ஒவ்வொரு மனிதனும் ஒரு முழுமையினதும் ஒரு கண்டத்தின் ஒரு பகுதியாகும்.” தற்போதைய உலகளாவிய தொற்றுநோயின் காலத்தில் இருந்ததை விட இது ஒருபோதும் உண்மையாக இருந்ததில்லை.

உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களால் எடுக்கப்பட்ட முற்றிலும் எதிர்மாறான அணுகுமுறையை ஓஸ்டர்ஹோமின் எச்சரிக்கை உள்ளடக்கியுள்ளது. தொற்றுநோய்க்கு உலகளவில் ஒருங்கிணைந்த எந்தவொரு நடவடிக்கையும் அவர்கள் நிராகரித்துள்ளனர். செல்வந்த நாடுகள் தடுப்பூசிகளை பதுக்கி வைத்திருக்கின்றன. அதே நேரத்தில் வளரும் உலகநாடுகளில் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி திட்டம் பற்றி பேசக்கூட இல்லை.

கோவிட்-19 தொற்றுநோயின் வெடிப்பு, முதலாளித்துவ அரசாங்கங்களினாலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆளும் உயரடுக்கினரால் தேசியவாதம், இனவெறி மற்றும் இராணுவவாதம் ஆகியவற்றின் கடுமையான வெடிப்பைத் தூண்டியுள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோவிட்-19 தொற்றுநோயை “சீன வைரஸ்” மற்றும் “குங் காய்ச்சல்” என்று அழைத்தார்.

சீனாவை அரக்கர்களாக்குவதற்கான ட்ரம்ப்பின் முயற்சிகளை பைடென் அரசாங்கம் தொடர்ந்து, பெய்ஜிங் இதனை மூடிமறைத்தது என்று பொய்யாகக் கூறி, இந்த நோய் ஒரு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட உயிரியல் ஆயுதம் என்று குறிக்கிறது. சீனாவை அரக்கர்களாக்குவதற்கான இந்த முயற்சிகளின் விளைவாக, ஆசிய அமெரிக்கர்களுக்கு எதிரான இனரீதியான உந்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் கடந்த ஆண்டு அதிகரித்துள்ளன.

தொற்றுநோய் முதலாளித்துவத்தின் மேலாதிக்க குணாதிசயங்களான தேசியவாதம், இனவெறி, உன்-அண்டைநாட்டை பிச்சைக்காரனாக்கும் வர்த்தகக் கொள்கைகளை மேம்படுத்துதல் மற்றும் போர் தயாரிப்புக்களை மட்டுமே தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால் உலகம் முழுவதும், அரசியல் மற்றும் சமூக அமைப்புக்குமான ஒரு வேறுபட்ட அச்சு உருவாகி வருகிறது.

முதலாளித்துவ தன்னலக்குழுவின் செழுமைப்படுத்தலுக்கு அனைத்து சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையையும் அடிபணிய வைப்பதை எதிர்த்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் அலைகளில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில், தொழிலாளர்கள் தங்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாக்க சாமானிய தொழிலாளர் குழுக்களை அமைத்து, இலாபங்களை உருவாக்குவதற்காக மனித உயிர்களை தியாகம் செய்யும் நோக்கத்தை கொண்ட நிறுவனங்களை எதிர்க்கின்றனர்.

ஒரு பொதுவான, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்த போராட்டங்களை ஒன்றிணைக்க, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணியை அமைப்பதற்கான ஒரு அறிக்கையை வெளியிட்டது. "தொற்றுநோய்க்கு எதிரான போராட்டமானது போர், சமத்துவமின்மை, சுரண்டல் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டமும், முழு முதலாளித்துவ சமூக மற்றும் பொருளாதார ஒழுங்கிற்கு எதிரான போராட்டமாகும்" என்று அந்த அறிக்கை அறிவிக்கிறது.

உலகளாவிய பேரழிவிற்கு காரணமான முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தால் கட்டுப்படுத்தப்படும் அரசாங்கங்களின் படுகொலை கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய எதிர்ப்பை அபிவிருத்தி செய்வதற்கான இந்த முயற்சியை மே 1 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வருடாந்திர இணைவழி மே தின பேரணி முன்னெடுக்கும். இந்த முக்கியமான நிகழ்வில் கலந்து கொள்ள உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் அழைக்கின்றோம்.

Loading