ஜேர்மனியின் இடது கட்சி அரசாங்கத்தினையும் நேட்டோவினையும் நோக்கி தனது பாதையை அமைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இடது கட்சி செப்டம்பர் 26 கூட்டாட்சித் தேர்தலில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டீட்மார் பாட்ஷ் (Dietmar Bartsch) மற்றும் கட்சித் தலைவர் ஜனீன் விஸ்லர் (Janine Wissler) ஆகியோருடன் முன்னணி வேட்பாளர்களாக பங்கேற்கிறது. இதை கட்சியின் இணைத் தலைவர் சுசான ஹென்னிக்-வெல்சோ (Susanne Hennig-Wellsow) திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார். கட்சியின் செயற்குழு "கிட்டத்தட்ட 87சதவிகித ஆதரவுடன் இரண்டு வலுவான வேட்பாளர்கள் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியது" என்று அவர் விளக்கினார். இருவரும் "இந்த நாட்டை மாற்றுவதற்காக, கிளர்ந்து எழுவதற்கான எங்கள் நோக்கத்தை உள்ளடக்கியிருக்கின்றார்கள். யூனியன் கட்சிகளுக்கு [கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள், CDU/CSU] இடதுபுறத்தில் ஒரு முற்போக்கான பெரும்பான்மை சாத்தியமாகும்” என்றார்.

டீட்மார் பாட்ஷ் (Foto: Die Linke / flickr)

இக்கட்சியின் வலதுசாரி, முதலாளித்துவ சார்பு நோக்குநிலையை இதைவிட இன்னும் தெளிவாக எடுத்துக்காட்ட முடியாது. இடது கட்சி, மத்திய ஆட்சி மட்டத்தில் போர் மற்றும் சிக்கனக் கட்சிகளான சமூக ஜனநாயகவாதிகள் (SPD) மற்றும் பசுமைவாதிகளுடன் அரசாங்க கூட்டணியை நாடுகிறது. அத்தகைய கூட்டணி "முற்போக்கான" அல்லது "இடது" கொள்கைகளை பின்பற்றாது. மாறாக சமூக தாக்குதல்களின் கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரசின் அடக்குமுறை சக்திகளை முடுக்கிவிட்டு மற்றும் கொலைகார "சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்க" கொள்கையை தொடர நாடுகின்றது.

இதை நிரூபிக்க சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியின் முன்னணி வேட்பாளர்களைப் பார்த்தால் போதும். சமூக ஜனநாயகக் கட்சியின் அதிபருக்கான வேட்பாளர், ஓலாஃப் ஷோல்ஸ், (தற்போது மத்திய நிதி மந்திரி), பெரிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு ஒப்படைக்கப்பட்ட பில்லியன்கள் மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் பெரும் இராணுவச் செலவுகளுக்கு பொறுப்பானவர். சில வாரங்களுக்கு முன்புதான், அவரது ஆதரவின் கீழ், பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டம் மேலும் 5 சதவிகிதமாக அதிகரித்து, இப்போது 50 பில்லியன் டாலர்களாக உயர்த்தப்பட்டது. கடந்த வார இறுதியில் சமூக ஜனநாயகக் கட்சி மாநாட்டில், கிறிஸ்தவ ஜனநாயகவாதிகளுடனான பெரும் கூட்டணியின் அரசியல் பாதையை அவர் பாதுகாத்தார். அதன் "உயிர்களுக்கு முன் இலாபங்கள்" கொள்கை ஏற்கனவே ஜேர்மனியில் கோவிட்-19 இனால் 85,000 க்கும் அதிகமான இறப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.

அதிபருக்கான பசுமைக் கட்சியின் வேட்பாளர் அன்னலினா பேர்பொக் எந்த வகையிலும் ஷோல்ஸை விட குறைந்தவரல்ல. ஒரு நேர்காணலில் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிராக மேலும் ஆக்கிரோஷமான நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்து, நேட்டோவை வலுப்படுத்துவதற்கும், ஒரு ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்குவதற்கும், அதிக பாதுகாப்பு செலவினங்களுக்காகவும் நாள்தோறும் தனது நேர்காணல்களில் பிரச்சாரம் செய்கின்றார். "நாங்கள் அதைப் பற்றி நேர்மையாக இருக்க வேண்டும். ஆமாம், சில பகுதிகளில் துப்பாக்கிகளைச் சுட நீங்கள் அதிக முதலீடு செய்ய வேண்டும்” என்று அவர் Süddeutsche Zeitung இடம் கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் சமூக ஒற்றுமை பற்றிய பாட்ஷ் மற்றும் விஸ்லர் இன் சொற்றொடர்களால் இடது கட்சி முற்றிலும் பிற்போக்குத்தனமான மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்புக் கொள்கையை பின்பற்றுகிறது என்ற உண்மையை மறைக்க முடியாது. சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகளுடன் சேர்ந்து அது மாநில அளவில் எங்கு அதிகாரத்தில் உள்ளதோ அங்கெல்லாம், அது சமூகச் செலவுகளைக் குறைக்கிறது, தனியார்மயமாக்கலை முன்தள்ளுகின்றது, அரசு எந்திரத்தை ஆயுதமாக்குகிறது மற்றும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை கொடூரமாக நாடுகடத்துகிறது.

இந்த பின்னணியில், இடது கட்சி "செவிலியர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதி விநியோகிப்பவர்கள், பல்பொருள் அங்காடி தொழிலாளர்கள்" மற்றும் "குறைந்த ஊதியத்தில் அடிமைப்பட்டுள்ள மில்லியன் கணக்கானவர்கள்" ஆகியோரின் "ஆதரவாளன்" என்று பாட்ஷ் விவரிப்பது ஒரு இழிந்த ஆத்திரமூட்டலாகும். தற்போதைய உதாரணமாக: பிரேமன் நகரில், தொற்றுநோய்க்கு மத்தியில், சமூக ஜனநாயக - இடது கட்சி - பசுமைக் கட்சி மாநில அரசாங்கம், Gesundheit Nord என்ற மருத்துவமனை குழுவில் 400 க்கும் மேற்பட்ட முழுநேர வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்த வெட்டுக்களை ஒழுங்கமைக்கும் சுகாதார செனட்டர் (மாநில அமைச்சர்) கிளாவ்டியா பேர்ன்ஹார்ட் இடது கட்சியின் உறுப்பினராவார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியதிலிருந்து இடது கட்சியின் வலதுசாரி, முதலாளித்துவ சார்பு தன்மை பெருகிய முறையில் வெளிப்படையாகிவிட்டது. மார்ச் 2020 இல், ஷோல்ஸ் மற்றும் பெரும் கூட்டணியால் தொடங்கப்பட்ட “கொரோனா வைரஸ் அவசரகால நிதியுதவிக்கு” அது கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் வாக்களித்தது. இது பெரிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் தொண்டையினுள் நூற்றுக்கணக்கான பில்லியன்களை இறைத்தது. அப்போதிருந்து, எங்கு அது அரசாங்கத்தில் இருந்தாலும் இந்த பிரமாண்டமான தொகைகளை தொழிலாள வர்க்கத்திடமிருந்து மீட்டெடுக்க வேண்டி பொருளாதாரத்தைத் திறக்கும் இரக்கமற்ற கொள்கையை அது பின்பற்றி வருகிறது.

தூரிங்கியா மாநிலப் பிரதமர் போடோ ராமெலோ (Bodo Ramelow) போன்ற முன்னணி இடது கட்சி அரசியல்வாதிகள், “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” என்ற கொலைகார மூலோபாயத்தை வெளிப்படையாக ஆதரித்துள்ளனர். மற்றவர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, முன்னாள் கூட்டாட்சி நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாரா வாகன்கினெக்ட் (Sahra Wagenknecht), ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்று கட்சி (AfD) பாணியில் தேசியவாதத்தை தூண்டிவிட்டு புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு எதிராக ஆத்திரமூட்டுகின்றார்.

இந்த பாதையை பொதுத் தேர்தலுக்கான முன்னணி வேட்பாளர்கள் ஆதரிக்கின்றனர். பத்திரிகையாளர் சந்திப்பில், பாட்ஷ், வாகன்கினெட்டின் புத்தகமான Die Selbstgerechten (சுய-நீதியுள்ளவர்) ஐ பாராட்டினார். இப்புத்தகம் AfDயால்: “செல்வி. வாகன்கினெக்ட் நிச்சயமாக பல வழிகளில் உற்சாகமான ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்” என்று புகழப்பட்டது. வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் முன்னணி வேட்பாளராக "இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஒரு முக்கிய பங்கை வகிப்பார்" என்று பாட்ஷ் கூறினார். அவர் "முக்கியமாக பேச வேண்டிய மூலோபாய விடயங்களை" பற்றி பேசுகின்றார், மேலும் அவர் "இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டால்" தான் மகிழ்ச்சியடைவதாக பாட்ஷ் தெரிவித்தார்.

பாட்ஷ், வேறொருவரையும்விட இடது கட்சியின் பிற்போக்கு நோக்குநிலையை பாதுகாக்கின்றார். 30 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஜேர்மனியில் ஸ்ராலினிஸ்டுகள் முதலாளித்துவத்தை மீண்டும் ஸ்தாபித்தபோது, இடது கட்சியின் முன்னோடி அமைப்பான SED / PDS இல் உறுப்பினராக இருந்தார். பின்னர், கட்சியின் கூட்டாட்சி பொருளாளராக (1991-97) மற்றும் நிர்வாக இயக்குநராக (1997-2002), மெக்லென்பேர்க்-மேற்கு பொமரேனியாவில் மாநிலத்தில் சமூக ஜனநாயகக் கட்சியுடன் முதல் அரசாங்க கூட்டணியைத் தொடங்க அவர் உதவினார். இது பாரிய சமூக தாக்குதல்களுக்கும் அரசுக்கு சொந்தமான மற்றும் நகராட்சி நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கும் வழிவகுத்தது. இது அதற்கு பின்னரான இடது கட்சியின் அரசாங்க பங்களிப்புக்கு ஒரு முன்மாதிரியாக செயல்பட்டது.

பாராளுமன்றக் கட்சித் தலைவராக தனது பங்கில், சமீபத்திய ஆண்டுகளில் ஜேர்மன் இராணுவவாதம் திரும்புவதில் பாட்ஷ் முக்கிய பங்கு வகித்துள்ளார். ஏப்ரல் 2014 இல், சிரிய இரசாயன ஆயுதங்களை அழிக்க மத்தியதரைக் கடலுக்கு ஒரு ஜேர்மன் போர் கப்பலை அனுப்புவதற்கு ஆதரவாக வாக்களித்த ஐந்து இடது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். 2017 ஆம் ஆண்டில் கடைசியாக நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, ஜேர்மன் ஆயுதப்படை சங்கத்திற்கு (DBwV) அளித்த பேட்டியில், இடது கட்சியை தொடர்ந்து படையினரின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக முன்வைத்தார்.

இப்போது, பாட்ஷ் தேர்தல் பிரச்சாரத்தில் உள்ள அனைத்து பாசாங்குகளையும் கைவிட்டு, வெளிநாட்டு மற்றும் போர் கொள்கையின் மையப் பிரச்சினைகள் குறித்து ஆளும் வர்க்கத்திற்கு தனது கட்சியின் ஆதரவை அடையாளம் காட்டுகிறார். திங்கள்கிழமை மாலை ஒளிபரப்பப்பட்ட Tagesthemen செய்தி நிகழ்ச்சியில் முன்னணி வேட்பாளராக தனது முதல் தொலைக்காட்சி கலந்துகொள்ளலில், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நேட்டோ தொடர்பான கேள்வியினால் "தோல்வியடையாது" என்று கூறினார்.

"இடது கட்சி அரசாங்கத்திற்கு வந்தால் நேட்டோ இல்லாதுபோய்விடுமா" என்று நிகழ்ச்சித்தொகுப்பாளர் இங்கோ ஜம்பரோனி கேட்டதற்கு, பாட்ஷ்: "நேட்டோ கலைக்கப்படும் வரை இடது கட்சி மேஜையில் அமர்வதற்கு காத்திருக்காது என்பது உலகில் அனைவருக்கும் தெரியும். எங்கள் மீது குற்றம் சாட்டுவது அபத்தமானது” என பதிலளித்தார்.

செவ்வாய்க்கிழமை காலை Deutschlandfunk வானொலியுடன் ஒரு முன்னணி வேட்பாளராக தனது முதல் விரிவான நேர்காணலில், விஸ்லர் உடனடியாக கட்சி மற்றும் தேர்தல் திட்டத்தில் கூறப்படும் "சிவப்பு கோடுகள்" அவை எழுதப்பட்டிருப்பதுபோல் அவற்றிற்கு மதிப்பு இல்லை என்பதை தெளிவுபடுத்தினார். "நேட்டோ இல்லாவிட்டாலே ஒரு கூட்டணி அரசு அமைப்பது" என்பது பற்றி அவர் "மிகவும் தெளிவாக" இருக்கிறாரா என்று கேட்டதற்கு, விஸ்லர் பின்வருமாறு பதிலளித்தார்: "ஜேர்மனி நேட்டோவை விட்டு வெளியேறும்போது மட்டும்தான் ஒரு கூட்டணி என்று நான் நிச்சயமாக சொல்லவில்லை. ஆனால் இடது கட்சி எங்கள் நிலைப்பாடுகளுடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்கிறது. எனது கட்சி "ஜேர்மனியை நேட்டோவிலிருந்து வெளியேற்ற" விரும்பவில்லை. இது நேட்டோவை "கலைத்து" அதை "ஒரு கூட்டு பாதுகாப்பு கூட்டணியால்" மாற்ற விரும்பியது" என்று கூறினார்.

அது மிகவும் தெளிவானது. விஸ்லரைப் பொறுத்தவரை, ஒரு சமூக ஜனநாயகக் கட்சி - இடது கட்சி - பசுமை கூட்டாட்சி அரசாங்கம் நேட்டோவின் கேள்வியால் தோல்வியடையாது. அதே நேரத்தில், ஒரு புதிய "பாதுகாப்பு கூட்டணி" ஒரு சமாதானத் திட்டமாக இருக்காது. ஆனால் ஜேர்மன் ஏகாதிபத்தியம் அதன் புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை இன்னும் சுதந்திரமாக தொடரும் கட்டமைப்பாகும். இத்தகைய திட்டங்கள் வெளியுறவுக் கொள்கை வட்டங்களில் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டுள்ளன. இக்கோரிக்கை "இடது கட்சி கண்டுபிடித்தது இல்லை" என்று விஸ்லர் வலியுறுத்தினார். "ஒரு புதிய பாதுகாப்பு கூட்டணியை உருவாக்குவது அவசியமா" என்ற "இந்த விவாதங்கள்" "துல்லியமாக 1990 களின் தொடக்கத்தில்" நடந்தன.

ஸ்ராலினிசவாதியாக இருந்து மாறிய பாட்ஷுடன் சேர்ந்து, தேர்தல் பிரச்சாரத்தில் இடது கட்சியை அரசாங்கத்திற்கும் போருக்கும் ஒரு போக்கிற்கு கொண்டு வருவதில் விஸ்லர் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பது தற்செயல் நிகழ்வு அல்ல. அவர் போலி இடது குழுவான மார்க்ஸ் 21 என்ற அமைப்பில் இருந்து வருகிறார். இவ்வமைப்பு முதலாளித்துவ ஊடகங்களில் அவ்வப்போது கூறப்படும் கூற்றுகளுக்கு மாறாக, ட்ரொட்ஸ்கிசத்தின் பாரம்பரியத்தில் நிற்கவில்லை. மாறாக ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு "அரசு முதலாளித்துவ" (“state capitalism”) போக்கினதும் மற்றும் டோனி கிளிஃப் நிறுவிய சர்வதேச சோசலிச போக்கின் (IST) பாரம்பரியத்திலும் நிற்கின்றது.

கிளிஃப் ஏற்கனவே இரண்டாம் உலகப் போரின் முடிவில் நான்காம் அகிலத்திருந்து முறித்துக் கொண்டு மற்றும் அக்டோபர் புரட்சியால் உருவாக்கப்பட்ட சமூகமயமாக்கப்பட்ட சொத்து உறவுகள் இருந்தபோதிலும் சோவியத் ஒன்றியத்தை "அரசு முதலாளித்துவம்" என்று வரையறை செய்தார். "அரசு முதலாளித்துவ" போக்கின் மற்ற வகைகளைப் போலவே, கிளிஃப்பின் நிலைப்பாடு ஒரு "இடது" பின்னணியிலான கம்யூனிச எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு இணங்கிப்போவதை கொண்டுள்ளது. ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மீள் அறிமுகப்படுத்தியதிலிருந்து, அரசு முதலாளித்துவவாதிகள் மற்றும் பணக்கார நடுத்தர வர்க்க அடுக்குகள் அவர்கள் நலன்களை வெளிப்படுத்துகின்றன. அவை வெளிப்படையாக ஏகாதிபத்திய முகாமில் உள்ளன.

இது குறிப்பாக ஜேர்மனியில் அப்பட்டமாக தெரிகின்றது. மார்க்ஸ் 21 இன் முக்கிய பிரதிநிதிகளில் ஒருவரான கிறிஸ்டின் புக்கோல்ஸ், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பாராளுமன்ற பாதுகாப்புக் குழுவில் அமர்ந்துள்ளார். இதனால் நேரடியாக ஜேர்மன் போர் கொள்கையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சருடன் சேர்ந்து, ஆபிரிக்காவில் உள்ள முகாம்களில் ஜேர்மன் துருப்புக்களை பார்வையிடுகிறார். மத்திய கிழக்கிலும் ரஷ்யாவிற்கும் எதிரான ஏகாதிபத்திய தாக்குதல்கள் மார்க்ஸ் 21 ஆல் ஆதரிக்கப்படுகின்றன.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே, இடது கட்சியின் வலதுசாரிக் கொள்கைகள் வெறுக்கப்படுகின்றன. சமீபத்திய தேர்தல் வாக்கெடுப்புகளில், இது தற்போது 6 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது 2017 இல் 9.2 சதவீதமாக இருந்தது.

சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) அனைத்து பாராளுமன்ற கட்சிகளுக்கு எதிராக வளர்ந்து வரும் கோபத்தையும் எதிர்ப்பையும் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தினால் ஆயுதபாணியாக்க போராடுகிறது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன தலையீட்டின் மூலம் மட்டுமே தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, இராணுவவாதம், பாசிசம் மற்றும் போர் நிறுத்தப்பட்டு, சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும்.

Loading