பிரான்சின் ஜோன்-லூக் மெலோன்சோன் பாசிச சதித்திட்டம் தீட்டிய இராணுவ தளபதிகளுக்கு எதிராக ஜனாதிபதி மக்ரோனிடம் முறையிடுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஒரு இராணுவத் தலையீட்டினாலும் மற்றும் பிரான்சில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுவதன் ஊடாகவும் "தேசத்தைப் பாதுகாப்பதற்காக" நவ-பாசிச இதழான Valeurs Actuelles ல் வெளியிடப்பட்ட 20 க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற பிரெஞ்சு இராணுவ தளபதிகளின் ஏப்ரல் 21 அழைப்பு, அரசியல் ஆட்சியின் மரண நெருக்கடியின் மூடுதிரையை நீக்கியுள்ளது.

2017ம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் இமானுவேல் மக்ரோன், பாசிசத்தின் ஆபத்தை எதிர்ப்பதன் பேரில் மரின் லு பென்னுக்கு எதிராக தனக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார். அப்போதிருந்து, அவர் தனது சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக அணிதிரண்ட "மஞ்சள் சீருடை" எதிர்ப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் இரயில்வே தொழிலாளர்களை அடக்குவதற்கு பாதுகாப்புப் படையினரை இடைவிடாமல் நம்பியுள்ளார். அவரது அரசாங்கம் இப்போது தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் வகையில் ஒரு கொலைகாரக் கொள்கையை பின்பற்றுகிறது. ஒரு அடக்குமுறைமிக்க "பொதுப் பாதுகாப்பு" சட்டத்தை நடைமுறைப்படுத்தி மற்றும் ஒரு இஸ்லாமிய "பிரிவினைவாத" அச்சுறுத்தல் என்று தனது அரசாங்கம் கூறுவதற்கு எதிராகவும் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வருகிறது. இந்த நிலைமைகளின் கீழ், மக்ரோன் அரசாங்கமே அரச அமைப்பினுள் நவ-பாசிச குழுக்களை உள்ளிளுத்து வருகிறது என்பது தெளிவாகிறது.

எந்தவொரு பெரிய நெருக்கடியும் அரசியல் போக்குகளின் பங்கை அம்பலப்படுத்தி விடுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி (PES) ஒரு தீவிர வலதுசாரி சதித்திட்டத்தின் அபாயத்திற்கு எதிராக தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்ட வேண்டும் என அழைக்கும் அதேவேளையில், ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் அமைப்பு (La France insoumise) மக்ரோனினதும் மற்றும் உயர் இராணுவத் தட்டின் நடவடிக்கையின் மீது தொழிலாள வர்க்கத்தை தங்கியிருக்க ஊக்குவிக்கிறது.

ஜோன்-லூக் மெலோன்சோன் (Wikimedia Commons)

புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், மெலோன்சோன் ஒரு நவ-பாசிச போக்கின் ஆபத்தை மனநிறைவுடன் குறைத்து மதிப்பிட்டார். "இந்த கையளவிலான கிளர்ச்சியாளர்கள் பற்றி குழப்பமடைய வேண்டாம்.” என்று அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார். குடியரசின் இராணுவத்தால் இவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இராணுவத்தின் அநேகமான பிரிவினர் நாட்டிற்கான அதன் கடமைகளுக்கு விசுவாசமானவர்களாக உள்ளனர்.” என்று அவர் கூறினார்.

கிளர்ச்சிக்கான எந்தவொரு முயற்சியையும் மெலோன்சோன் கண்டனம் செய்து, அரச அமைப்பினுள் ஒழுங்கை மீட்டெடுக்குமாறு மக்ரோனிடம் அழைப்புவிடுத்தார். "ஒரு கிளர்ச்சி இயக்கத்தை இயக்குவது அல்லது ஏற்பாடு செய்வது ஆயுள் தண்டனை மற்றும் 750,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்" என அவர் கூறினார். பதவியேற்றதிலிருந்து மக்ரோன் பாராட்டிய அதே பாதுகாப்புப் படையினரை அரசாங்கம் முறியடிக்க வேண்டும் என்று அவர் கோரினார்.

"எனவே நாங்கள் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். நீதி அமைச்சர் தனது வேலையை செய்யுமாறு நாங்கள் கேட்கிறோம். "அரச வழக்குத்தொடுனர் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்," என்று மெலோன்சோன் கூறினார். ஆட்சிக் கவிழ்ப்பு தளபதிகளுக்கு எதிராக தலையிட அவர் ஆயுதப்படை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி தொடங்கி அழைத்த மூத்த அதிகாரிகளின் நீண்ட பட்டியலை அவர் தயாரித்தார்.

அவர் பின்வருமாறு கேட்கின்றார்,

இராணுவ உளவுத்துறை சேவைகளிலிருந்து ஓய்வுபெற்றவர்களில் இருவர் இந்த உரையில் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களை தேடி, யார் பதவியில் உள்ளனர், உண்மையில் ஓய்வு பெற்றவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என அவர்களை கோருகின்றோம். பதவியில் இருப்பவர்களை, அவர்கள் இராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். .... இராணுவத்தில் ஊடுருவி, நாஜிக்களின் சிறிய கூட்டங்களை ஏற்பாடு செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பதில் அவர் எங்கு நிற்கிறார் என்று நான் அவரிடம் [பார்லி] கேட்கிறேன். அவர்கள் இராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்களா? வேறும் யாராவது இருக்கிறார்களா? இதுபற்றி விசாரணைகள் நடத்தப்பட்டதா?

இந்த தலையீட்டின் முக்கிய நோக்கம் தொழிலாளர்களை அமைதியாக்குவதாகும். ஆட்சி கவிழ்ப்பு செய்பவர்களுக்கு தற்போது இராணுவத்த்தில் பெரும்பான்மை இல்லை என்று தனது வாக்காளர்களுக்கு உறுதியளிக்க அவர் எடுத்த முயற்சிகள் பயனற்றவை. மேல்முறையீட்டில் கையெழுத்திட்ட ஆயிரக்கணக்கான அதிகாரிகள், வலதுசாரி பத்திரிகைகள் மற்றும் மரின் லு பென்னின் நவ-பாசிச ஜனாதிபதி வேட்பாளருடன் இணைந்துள்ளவர்களாவர். இவர்கள் பிரெஞ்சு மண்ணில் ஒரு இராணுவத் தலையீட்டைப் பற்றி சிந்தித்து வருகின்றனர், அதனாலான இறப்புகள் ஜெனரல்கள் எழுதியது போல், “ஆயிரக்கணக்கானவர்களாக இருக்கும்."

இங்குள்ள கேள்வி ஒரு புதிய பாசிச சதியை எவ்வாறு நிறுத்துவது என்பது மட்டுமல்லாமல், இராணுவ சர்வாதிகாரத்திற்கான உந்துதலை எவ்வாறு இல்லாதொழிப்பது என்பதுமாகும். ஆயினும்கூட இந்த நிகழ்ச்சிப்போக்கு மரின் லு பென்னை சுற்றியுள்ள சக்திகளுடன் மட்டும் தொடர்புபட்டதில்லை. மக்ரோன் அரசாங்கமே, அதன் வன்முறை பொலிஸ் அடக்குமுறையுடனும், அதன் ஜனநாயக விரோத சட்டங்களுடனும் ஜனநாயகத்தின் வீழ்ச்சியை உண்டாக்கும் அரசாங்கங்களில் ஒன்றாகும்.

இந்த ஆட்சி கவிழ்ப்பு அச்சுறுத்தல்கள் பற்றிய மக்ரோனின் சொந்த மௌனம், ஆட்சி கவிழ்ப்பாளர்களை தடுப்பவர்களை தடுக்கும் அரசாங்கத்திடம், மெலோன்சோன் விடுக்கும் அழைப்பின் இயலாமையைப் பற்றி பேசுகிறது. இந்த மௌனம் மக்ரோனின் தனிப்பட்ட தவறு மட்டுமல்ல, ஜனநாயக மற்றும் தேர்தல் விதிமுறைகளின் சர்வதேச மற்றும் வரலாற்று சரிவின் ஒரு பகுதியாகும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜனவரி 6, 2021 அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது எதிர் வேட்பாளரான ஜோ பைடெனின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதை தடுக்கும் முயற்சியாக வாஷிங்டன் டி.சி.யில் உள்ள காங்கிரஸ் கட்டிடத்தில் ஒரு சதி முயற்சியைத் தொடங்கினார். ட்ரம்ப் அவருக்கும், தொற்றுநோய் குறித்த அவரது கொடிய, வெளிப்படையான கவனமற்ற கொள்கைக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் பரவலான எதிர்ப்பையும் எதிர்கொண்டு, ஆட்சி கவிழ்ப்பை முயற்சித்தார். பென்டகன் பல முக்கியமான மணிநேரங்களுக்கு தேசிய காவலரை பயன்படுத்துவதை தாமதப்படுத்திய பின்னர், பாதுகாப்புப் படையினர் கடைசி நிமிடத்தில் மட்டுமே இந்த சதியை நிறுத்தினர்.

பொருளாதார சமத்துவமின்மை மற்றும் அரசாங்கங்கள் பின்பற்றும் குற்றவியல் "சமூக நோய் எதிர்ப்பு சக்தி" கொள்கைக்கு எதிராக, தொழிலாளர்கள் மத்தியில் கோபம் அதிகரித்து வருவது ஐரோப்பாவில் உள்ள முழு ஆளும் வர்க்கத்திற்கும் தெரியும். 1930 களில் இருந்து ஐரோப்பா அதன் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது, அது 1 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் இறப்புகளைக் கண்டது. மறுபுறம், அதனது கோடீஸ்வரர்கள் ஒரு ஆண்டில் 1 டிரில்லியன் டாலருக்கு மேல் செல்வந்தர்களாக மாறிவிட்டனர்.

எரிமலையின் மீது அமர்ந்து எந்த நேரத்திலும் ஒரு சமூக வெடிப்புக்கு அஞ்சும் ஆளும் வர்க்கம், எதிர்ப்பை அடக்குவதன் மூலமும், அரசை பலப்படுத்துவதன் மூலமும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தயாராகி வருகிறது. இது காவல்துறையிலும், இராணுவ அதிகாரிகளிடமும் பாசிச சக்திகளின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. அவர்கள் தங்களைச் சுற்றி உயர்ந்து வருவதாக உணரும் சமூக கோபத்தால் பயந்து, அவர்கள் தாம் மக்ரோனுக்கும் ஐந்தாவது குடியரசிற்கும் இன்றியமையாதவர்கள் என்பதை அறிவார்கள்.

புதிய பாசிச தளபதிகளின் காலடியில் இருந்து கம்பளத்தை வெளியே இழுக்க, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அணிதிரட்டல் தேவைப்படுகிறது. கடந்த ஆண்டு பிணை எடுப்புகளில் பெருநிறுவன உயரடுக்கிற்கு ஒப்படைக்கப்பட்ட 2 டிரில்லியன் டாலர்களை பறிமுதல் செய்வது, வைரஸைத் தடுக்க ஒரு விஞ்ஞான சுகாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது மற்றும் ஒரு பொலிஸ் அரசை நோக்கிய உந்துதலைத் தடுத்து, தொழிலாளர்களுக்கும், பெரும்பான்மையான மக்களுக்கும் அதிகாரத்தை மாற்றக்கூடிய ஒரேயொரு முன்னோக்கு இதுதான்.

தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன அணிதிரட்டலையும் மெலோன்சோன் நிராகரிக்கும் அதே வேளையில், இராணுவத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த அவரது எச்சரிக்கைகள் கூட அவரது பார்வையாளர்களை அமைதியாக்கும் நோக்கம் கொண்டவை. அல்ஜீரியாவிற்கு சுதந்திரம் வழங்க ஜனாதிபதி சார்ல்ஸ் டு கோலின் தயாரிப்புகளுக்கு விரோதமான ஜெனரல்கள் தலைமையில், அல்ஜீரியப் போரின்போது, 1961 ஏப்ரல் 21 ஆம் தேதி அல்ஜீரிய சதியின் 60 வது ஆண்டு நினைவு நாளில் இந்த கடிதம் வெளியிடப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். அவர் எழுதுகின்றார்:

21 ஆம் தேதி அல்ஜீரியாவில் உள்ள மோசமான தளபதிகளின் சதியின் ஆண்டுவிழா. ... இதுபோன்ற ஆவணத்திற்கு எதிராக அதிகமான மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதைக் காணாதது எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. ஒரு நாகரிக நாட்டில், ஒரு கணம் முன்பு நான் குறிப்பிட்ட நிகழ்வுகளுக்குப் பின்னர், அல்ஜீரியப் போரின் நிகழ்வுகள், அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு, பிரான்சில் ஓய்வுபெற்ற இராணுவத்தினர்கள் ஒரு குழுவாக தலையிடுவதை நாங்கள் காண்கிறோம். தங்களது தற்போது கடமையிலுள்ள சகாக்களுக்கு, “நாகரிக” மதிப்புகள் என்ன என்பது எனக்கும் தெளிவற்ற ஒன்றை, மீண்டும் நிறுவுவதற்கு தலையிடுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

1961 ஆட்சி சதிக்கு டு கோலின் பிரதிபலிப்பை ஒரு மாதிரியாக எடுத்துக்கொள்வதாக மெலோன்சோன் பரிந்துரைக்கிறார் என்றால், அது ஒரு மோசடியும் மற்றும் தொழிலாளர்களுக்கான அரசியல் பொறியுமாகும்.

அல்ஜீரியாவில் உள்ள ஐரோப்பிய காலனித்துவவாதிகளிடமிருந்தும், மாட்ரிட்டில் உள்ள ஜெனரல் ஃபிராங்கோவின் பாசிச ஆட்சியின் பிரிவுகளிலிருந்தும் ஆதரவை பெற்ற சதியாளர்களுக்கு எதிராக, பிரெஞ்சு மக்களை தன்னை ஆதரிக்குமாறும் தளபதிகளின் கட்டளைகளுக்கு இராணுவத்தை கீழ்ப்படியாதிருக்குமாறும் அழைப்பு விடுத்ததன் மூலம் டு கோல் 1961 சதியை நிறுத்தினார். அந்த நேரத்தில் இன்னும் கட்டாய இராணுவமாக இருந்த பிரெஞ்சு இராணுவம், சதியாளர்களை ஆதரிக்க மறுத்துவிட்டது. சதியாளர்களுக்கு ஆதரவான பாராசூட் படையினர்கள், காலனித்துவ துருப்புக்கள் மற்றும் வெளிநாட்டு படையினரின் சில பிரிவுகள் விரைவாக தனிமைப்படுத்தப்பட்டு ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சி தோல்வியடைந்தது.

2021 ஆம் ஆண்டில், மாற்றமடைந்த புறநிலை நிலைமைகளின் கீழ், தீவிர வலதுசாரி ஆட்சி கவிழ்ப்பாளர்களுக்கு எதிராக, மக்ரோன் அரசாங்கம், சோசலிஸ்ட் கட்சி, அடிபணியா பிரான்ஸ் இயக்கம் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளுக்கு இடையில் ஒரு கூட்டணியை உருவாக்க மெலோன்சோன் முயற்சிக்கிறார். சதித்திட்டம் குறித்து மக்ரோன் காது கேளாத நிலையில் அமைதியாக இருப்பது மட்டுமல்லாமல், பிரெஞ்சு இராணுவம் முற்றிலும் மாறுபட்ட தன்மையை இப்பொழுது கொண்டுள்ளது. மாலி மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த நவ-காலனித்துவ போர்களின் இரத்தக்களரி குற்றங்களில் அனுபவம் வாய்ந்த தொழில்முறை இராணுவம், 1960 களின் அந்தக் காலத்தின், கட்டாய இராணுவத்தை போலல்லாது, கூடுதலாக பாராசூட் படையினரைப் போல இருக்கின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பொருளாதார அடித்தளங்கள் முற்றிலும் அழுகிவிட்டன. அப்போது வெகுஜன தொழிலாள வர்க்க ஆதரவுத் தளத்தை கொண்டிருந்த ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) ஆதரவையும், அப்போது முழு வீச்சில் இருந்த முப்பது புகழ்பெற்ற ஆண்டுகள் (Trente Glorieuses - 1945-1975) இலான பொருளாதார வளர்ச்சியையும் டு கோல் நம்பியிருந்தார். 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்ட பின்னரும், 30 ஆண்டுகால சிக்கன நடவடிக்கைகளின் முடிவிலும் மற்றும் கொரோனா வைரஸினால் ஐரோப்பாவில் ஒரு மில்லியன் இறப்புகளின் (மற்றும் பிரான்சில் 100,000) போதும் மக்ரோன் பதவிக்கு வருகிறார்.

"மஞ்சள் சீருடை எதிர்ப்பாளர்களுக்கு" எதிராக கலகப் பிரிவு பொலிஸை ஏவுவதற்கு முன்பு, சர்வாதிகாரி பிலிப் பெத்தானை ஒரு சிறந்த சிப்பாய் என்று மக்ரோன் பாராட்டினார். ஏனெனில் துல்லியமாக அவர் தானும்கூட மக்கள் எதிர்ப்பிற்கு எதிராக அரசு அமைப்பினுள் நவ-பாசிச உணர்வுகளை நம்பியுள்ளார்.

பிரான்சில் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் வலது நோக்கிய ஆழ்ந்த மாற்றம் மெலோன்சோன் முறையிடும் அரசியல் சக்திகளை ஆழமாக மாற்றியுள்ளது. தொழில்துறை மந்திரி அன்னியேஸ் பன்னியே-ருனாச்சேர் மற்றும் முன்னாள் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பெனுவா அமோன் ஆகியோர், 1961 ஆம் ஆண்டின் அல்ஜீரிய சதியாளர்களை தற்போதைய சதியாளர்களுடன் இணைத்திருந்தாலும், மெலோன்சோன் அவர்களுடன் ஒரு அரசியல் முன்னணியை எளிதில் உருவாக்குவார் என்று பரிந்துரைத்தார்:

நிலைமைக்கு பதிலளிக்கும் திறனில் எந்தவிதமான தனித்துவத்தையும் நாங்கள் கோரவில்லை. இதைத்தவிர, ஏற்கனவே தங்களை வெளிப்படுத்தியவர்களுக்கும், தாமதமின்றி அவ்வாறு சிறப்பாகச் செய்தவர்களையும் நாங்கள் கேட்போம். ஒருவருக்கொருவர் ஆலோசிப்போம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்க வேண்டும்: மெலோன்சோன் அணிதிரட்ட விரும்பும் சக்திகள் ஒரு புதிய பாசிச சதியின் ஆபத்துக்கு எதிராக எதுவும் செய்யாது. இதை மெலோன்சோனின் ஸ்பானிய கூட்டாளிகளான பப்லோ இக்லெசியாஸ் தலைமையிலான பொடேமோஸ் கட்சி நிரூபிக்கிறது. "26 மில்லியன்" இடதுசாரி வாக்காளர்களை கொல்ல ஒரு ஆட்சி கவிழ்ப்பைத் தொடங்கவும், ஆளும் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் பொடேமோஸ் பின்பற்றும் சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைக்கு எந்தவொரு எதிர்ப்பையும் முறிக்கவும் முயலும் நவ-பாசிச அதிகாரிகளின் அச்சுறுத்தல்களுக்கு அவர்கள் அரசியல் ரீதியாக உடந்தையாக உள்ளனர்.

ஓய்வு பெற்ற ஜெனரல்கள், பிராங்கோவையும் பாசிசத்தையும் பாராட்டி மற்றும் இடது படுகொலைகளுக்கு அழைப்பு விடுத்து, வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்ட பின்னரும், துணைப் பிரதமராக இக்லெசியாஸ் ஒரு சதித்திட்டத்தின் ஆபத்து இருப்பதை மறுத்தார். TVE1 TV இல், அவர்: "இந்த மனிதர்கள் தங்கள் வயதில் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் அரட்டையில் கூறுவது, அதிகமாக குடிப்பதால் வருகின்றது, எந்த அச்சுறுத்தலையும் முன்வைக்கவில்லை." என்று கூறினார்.

ஒரு புதிய பாசிச ஆட்சி கவிழ்ப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்கையில், பிரான்சில் உள்ள தொழிலாளர்களை மெலோன்சோன் வேறு வழியில் தூங்க வைக்கின்றார். அவர் தன்னை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகள், குறிப்பாக தொழிற்சங்கங்கள், தொழிலாள வர்க்கத்துடனான எந்தவொரு தொடர்பையும் துண்டித்துவிட்டன. உண்மையில், CGT, இது இராணுவ மற்றும் உளவுத்துறை சமூகத்துடன் அதன் ஒருங்கிணைப்பை ஆழப்படுத்த விரும்புகிறது என்று குறிப்பிட்டு Valeurs Actuelles இல் இந்த அச்சுறுத்தல்களுக்கு பதிலளித்தது. ஸ்ராலினிச தொழிற்சங்க கூட்டமைப்பு ஒரு அறிக்கையில் பின்வருமாறு கூறியது:

இந்த விவகாரம் பாதுகாப்பை பாதிக்கும் பகுதிகளின் குடிமக்களின் கட்டுப்பாட்டை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உறுதிப்படுத்துகிறது. இந்த விஷயத்தில், CGT அது அங்கத்துவம் வகிக்கும் இராணுவ சேமப்படை உயர் குழு அதன் விதிகளில் வழங்கப்பட்ட தவணைகளில் சந்திப்பதில்லை என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இருப்பினும் இது குடிமக்களின் தலையீட்டிற்கும் இராணுவத்திற்கும் தேசத்திற்கும் இடையிலான இன்றியமையாத இணைப்பிற்கும் ஒரு முக்கிய இடமாகும். இந்த காரணத்தினாலேயே, CGT இராணுவத்திற்கான ஒரு கூட்டமைப்பு கட்டமைப்பிற்குள் தொழிற்சங்கமயமாக்கும் உரிமையை அங்கீகரிப்பதற்கு ஆதரவாக உள்ளது.

தீவிர வலதுசாரிகளின் ஆபத்துக்கு பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் தொழிலாளர்கள் மத்தியில் வரலாற்றில் வேரூன்றிய ஆழ்ந்த எதிர்ப்பு உள்ளது. தீர்க்கமான கேள்வி என்னவென்றால், மெலோன்சோன் போன்ற போலி-இடது சக்திகளின் மனநிறைவான பிரச்சாரத்தை உடைப்பதும், தொற்றுநோயையும் சதித்திட்டத்தின் ஆபத்தையும் எதிர்த்துப் போராடுவதற்காக தொழிலாளர்கள் எதிர்ப்பை தேசிய தொழிற்சங்க அமைப்புகளிலிருந்து சுயாதீனமாக ஒழுங்கமைப்பதும் ஆகும். பிரான்சில், மெலோன்சோன் போன்ற தோல்வியுற்ற போலி-இடது அரசியல்வாதிகளுக்கு மாற்றாக PES ஐ கட்டியெழுப்புவது இதற்கு தேவையாக உள்ளது.

Loading