அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதல்களை அதிகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை எங்கிலும் எழுந்த நக்பா தின ஆர்ப்பாட்டங்களை இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் அடக்கி ஒடுக்கிய போதும், வார இறுதி வரை காசா மீதான இஸ்ரேலின் குண்டுவீச்சு தாக்குதல் நிறுத்தப்படவில்லை.

காசாவில், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் (Israel Defense Forces - IDF) ஹமாஸ் மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்களை தாக்கியதோடு, மூத்த ஹமாஸ் பணியாளர்களை படுகொலை செய்து, காசாவில் உள்ள பாதுகாப்பற்ற மக்கள் மீது இரக்கமற்ற வகையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி அச்சுறுத்தினர். இதுபோன்ற மூன்றாவது தாக்குதல், குறிவைக்கப்பட்ட இலக்குகளில் ஒன்றாக இருந்த காசாவில் உள்ள ஹமாஸின் மிக மூத்த அதிகாரியான யேயா அல்-சின்வாரின் வீட்டின் மீது நடத்தப்பட்டது, இவர் குழுவின் அரசியல் மற்றும் இராணுவ பிரிவுகளுக்கு தலைமை வகித்தார். ஹமாஸூம் இஸ்லாமிய ஜிஹாத் இயக்கமும் தங்களது 20 உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தின. படுகொலைகள் உட்பட ஹமாஸ் மீது மேலும் தாக்குதல்களை நடத்த IDF ஒப்புதல் கோரியுள்ளது.

திங்கட்கிழமைக்கு பின்னர் நடந்த மிகக் கொடூரமான தாக்குதலாக, சனிக்கிழமை ஒரே இரவில் காசா நகரில் நடத்தப்பட்ட ஒரேயொரு குண்டுவீச்சுத் தாக்குதலில், 12 பெண்கள் மற்றும் எட்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 50 பேர் காயமடைந்தனர், மீட்பாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை இன்னும் வெளியே எடுத்துக் கொண்டிருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். மற்றொரு வான்வழித் தாக்குதல் காசா நகரிலுள்ள சத்தி அகதிகள் முகாமிலுள்ள ஒரு வீட்டைத் தாக்கியது, அங்கிருந்த பெரும் குடும்பத்தின் குறைந்தது 10 உறுப்பினர்கள் இதில் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளாவர், அதேவேளை சனிக்கிழமை இரவு குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர், மேலும் 45 பேர் காயமடைந்தனர், அவர்களில் இரண்டு மருத்துவர்கள் உட்பட, பெரும்பாலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

மே 16, 2021, ஞாயிற்றுக்கிழமை, காசா நகரில் ஒரே இரவில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட 17 பாலஸ்தீனிர்களுக்காக துக்கம் அனுஷ்டிக்கின்றனர் (AP Photo/Sanad Latifa)

திங்கட்கிழமை மாலை முதல் முற்றுகையிடப்பட்ட காசா பிராந்தியத்தில் இஸ்ரேல் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தத் தொடங்கியதில் இருந்து 58 குழந்தைகள் உட்பட, குறைந்தது 192 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், சுமார் 1,200 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் காசாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. அநேகமாக 220 வீடுகள் அழிக்கப்பட்டன அல்லது சேதப்படுத்தப்பட்டன என்ற நிலையில், 20,000 பேர் வீடற்றவர்களாயினர்.

படுகொலையின் ஒருதலைப்பட்ச தன்மையைக் குறிக்கும் இஸ்ரேல், காசாவிலிருந்து 3,000 ஏவுகணைகள் வீசப்பட்டதால், இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு சிப்பாய் உட்பட 10 பேர் இறந்ததாக அறிவித்தனர். பெரும்பாலானவை காசாவிற்குள் தரையிறங்கின என்றாலும், 1.5 பில்லியன் டாலர் அமெரிக்க நிதியுதவி பெற்ற இஸ்ரேலின் அதிநவீன இரும்பு மண்டப அமைப்பால் அவை தடுக்கப்பட்டன.

சனிக்கிழமை பிற்பகல், காசாவில் அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் (AP), மற்றும் ஏனைய செய்தி ஊடக நிறுவனங்களின் அலுவலங்கள் அமைந்துள்ள பகுதியில் குடியிருந்தவர்களை வெளியேற்ற ஒரு மணி நேரத்திற்கு குறைவான கால அவகாசம் வழங்கி பின்னர் ஊடக கோபுரத்தை IDF வீழ்த்தியது. இது, இஸ்ரேலின் குற்றங்களை அம்பலப்படுத்துவதை மவுனமாக்குவதற்கான தெளிவான முயற்சியாக வாரத்தின் தொடக்கத்தில் செய்தி ஊடக அலுவலகங்கள் அமைந்திருந்த ஏனைய இரண்டு கட்டிடங்கள் ஏற்கனவே குண்டுவீசி தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்டது.

இந்த கட்டிடம் ஹமாஸால் பயன்படுத்தப்பட்டது என்று IDF கூறியிருந்தாலும், அது எந்தவித ஆதாரத்தையும் வழங்கத் தவறிவிட்டது. AP இன் தலைவரான கேரி ப்ரூட் (Gary Pruitt), 15 ஆண்டுகளாக இந்த கட்டிடத்தைப் பயன்படுத்தி வந்தாலும், இதனை ஹமாஸ் பயன்படுத்தி வந்ததற்கான எந்தவொரு அடையாளத்தையும் AP பார்த்ததில்லை என்று கூறினார். பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு வான்வழித் தாக்குதலை “பயங்கரவாத அமைப்புக்கள்” மீதான வெற்றிகரமான தாக்குதல் என்று பாராட்டியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் காசாவின் மின் நிலையத்திற்கு டீசல் எரிபொருள் வழங்குவதை இஸ்ரேல் நிறுத்திவிட்டதாலும், இஸ்ரேலில் இருந்து காசா வரையிலான மின் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாலும், ஆதரவற்ற பாலஸ்தீனியர்கள் தற்போது மின் வெட்டை சமாளிக்க நேரிட்டுள்ளது.

“பாலஸ்தீனிய பேரழிவு” என்றும் அழைக்கப்படும் நக்பா தினத்தை குறிக்கும் வகையில் மேற்குக் கரை முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டங்களை IDF மிருகத்தனமாக ஒடுக்கியது. இது வழமையாக மே 15 அல்லது அதற்குள் நினைவுகூரப்படுகிறது. இது, 1948 இல் பாலஸ்தீனத்திலிருந்து பிரிட்டன் உத்தியோகபூர்வமாக வெளியேறியதையும், பின்னர் அங்கு இஸ்ரேல் அரசை ஸ்தாபித்ததையும் குறிக்கிறது. இது, முதல் அரபு-இஸ்ரேலியப் போரின் ஆரம்பம், பாலஸ்தீனிய சமுதாயத்தின் அழிவு, மற்றும் பெரும்பாலான பாலஸ்தீனிய மக்களின் நிரந்தர இடம்பெயர்வு ஆகியவற்றைக் கண்டது. 750,000 முதல் 900,000 வரையிலான பாலஸ்தீனியர்கள் போரிலிருந்து உயிர் தப்பி பின்னர் அகதிகளாயினர் அல்லது உள்நாட்டிற்குள் இடம்பெயர்ந்தவர்களாயினர், அல்லது சிறுபான்மையினராக இருந்த யூத மக்களுக்கு பாலஸ்தீனத்தில் ஒரு தாயகத்தை உருவாக்க தேவையான ஒத்துழைப்பை வழங்க மேற்கொள்ளப்பட்டதான இன அழிப்பு பிரச்சாரத்தினால் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்.

இன்று, உலகெங்கிலுமாக பாலஸ்தீனியர்களும் மற்றும் அவர்களது சந்ததியினரும் அண்ணளவாக 13 மில்லியன் பேர் உள்ளனர், அவர்களில் 5 மில்லியன் பேர் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசாவில் வாழ்கின்றனர், 1.5 மில்லியன் பேர் இஸ்ரேலில் வாழ்கின்றனர், மேலும் 6.5 மில்லியன் பேர் லெபனான், ஜோர்டான் மற்றும் சிரியாவில் அகதிகளாக வாழ்கின்றனர் அல்லது உலகம் முழுவதுமாக சிதறிக்கிடக்கின்றனர். இவர்களில் பலர் தங்களது சொத்துகளுக்கான உரிமை பத்திரங்களை வைத்திருந்தாலும், அவர்களது தாயகத்திற்குத் திரும்புவதற்கான உரிமை அவர்களுக்கு மறுக்கப்படுகிறது, அதேவேளை பாலஸ்தீனத்தில் ஒருபோதும் வசிக்காத யூதர்களுக்கு கூட தாயகம் திரும்பும் சட்டத்தின் கீழ் இஸ்ரேலிய குடியுரிமை பெற உரிமை உள்ளது.

எவ்வாறாயினும், ஏராளமான போர்கள் மற்றும் அடக்குமுறைகளால் அவர்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வந்தாலும், இஸ்ரேல்/பாலஸ்தீனத்தில் அவர்களின் எண்ணிக்கை விரைவில் யூதர்களை விட அதிகமாக இருக்கும். ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள இஸ்ரேலின் பாலஸ்தீனிய குடியிருப்பாளர்களும் மற்றும் இஸ்ரேலில் உள்ள அதன் குடிமக்களும் கூட தற்போது இன அழிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற நிலையில் அது ஏராளமான பாலஸ்தீனியர்களை வீதிகளுக்கு கொண்டு வந்துள்ளது. கிழக்கு ஜெருசலேமில், ஷேக் ஜர்ரா மற்றும் சில்வானில் உள்ள குடும்பங்கள் யூதர்களுக்கு வீடுகளை வழங்க வழிவகுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவின் பேரிலான வெளியேற்றங்களை எதிர்கொள்கின்றனர். இஸ்ரேலில், தீவிர தேசியவாத மற்றும் பாசிச கட்சிகள் பல ஆண்டுகளாக “மக்கள் இடமாற்றங்களுக்கு” அழைப்பு விடுத்துள்ளன, மற்றும் தீவிர வலதுசாரி சக்திகள், 1948 இல் கட்டாய வெளியேற்றங்களைக் கண்ட, மற்றும் அவற்றை “நியாயப்படுத்தும்” வெளிப்படையான நோக்கத்துடன் தற்போது அவசரகால சட்டம் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளுக்குட்பட்டுள்ள Lod போன்ற கலப்பு மக்கள் வசிக்கும் நகரங்களை நோக்கி நகர்ந்துள்ளன.

IDF, மேற்குக் கரையில் கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கூர்மையான இரப்பர் தோட்டாக்கள், உணர்ச்சிகளை மழுங்கச் செய்யும் கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளால் தாக்கி கலைத்ததில் ஒன்பது பேரைக் கொன்றது. பயங்கரவாத தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறி நிராயுதபாணியாக நின்ற மேலும் இரண்டு எதிர்ப்பாளர்களையும் சிப்பாய்கள் கொன்றனர், இந்நிலையில் ஏப்ரல் 2002 இல் மேற்குக் கரையில் இராணுவப் படையெடுப்புக்குப் பின்னைய மிக மோசமான நாளாக இந்நாள் அமைந்தது. இது வாரத்தின் தொடக்கத்தில் இருந்து மேற்குக் கரையில் கொல்லப்பட்டவர்களது எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்கச் செய்தது. பாலஸ்தீனியர்களின் ஆர்ப்பாட்டங்களை இஸ்ரேலுக்குள் வைத்து நசுக்க, வழமையான படைப் பிரிவினர் மற்றும் எல்லைக் காவல் படையினருக்கு பதிலாக மாற்றுப் படையினர் உட்பட, இராணுவம் வழமையான துருப்புக்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி கூடுதல் துருப்புக்களை மேற்குக் கரைக்கு அனுப்பியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ், வாரத் தொடக்கத்தில், இஸ்ரேல் மேற்குக் கரையில் பதட்டம் மற்றும் மோதலின் “அதிகரிப்பைக் காண்கிறது” என்றும், “எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராகவுள்ளது” என்றும் அறிவித்து, “காசா எரியும்” என்று உறுதியளித்தார். பாலஸ்தீனியர்கள் அமைதியாகவும் எந்தவித எதிர்ப்பு தெரிவிக்காமலும் இஸ்ரேலிய ஆட்சிக்கு அடிபணியவில்லை என்றால், “கொரோனா வைரஸ் ஆண்டுக்குப் பின்னர் பாலஸ்தீனிய பொருளாதாரத்திற்கும் சமூகத்திற்கும் உதவுவதற்கான நடவடிக்கைகளை இரத்து செய்யும் நிலைக்கு நாங்கள் கட்டாயப்படுத்தப்படுவோம்” என்று மிரட்டினார்.

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எகிப்தின் முயற்சிகளுடன், போரை நிறுத்துவதற்கான ஹமாஸின் முயற்சிகளை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. சனிக்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் கேள்விக்கு இடமற்ற ஆதரவிற்கு மீளுறுதியளித்து, போர் நிறுத்த பணியை மேற்கொள்ள இஸ்ரேலுக்கு, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய விவகாரங்களுக்கான துணை உதவி செயலாளர் இடைநிலை தூதர் ஹாடி அம்ரை மட்டுமே அனுப்பினார், அதேநேரம் காசா மீதான தாக்குதலுக்கு எந்தவித எதிர்ப்பும் இருக்காது என்று நெத்தனியாகு அறிவித்தார். இஸ்ரேல் “இந்த நடவடிக்கையின் பாதியில் உள்ளது, இது இன்னும் முடிவடையவில்லை, மேலும் தேவைப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும்” என்று அவர் கூறினார்.

“பூமிக்கு மேலே அல்லது கீழே என நீங்கள் எங்கும் மறைய முடியாது. எவரும் தப்ப முடியாது,” என்று அறிவித்து, இஸ்ரேல் படுகொலைக்கு குறிவைக்கப்பட்டவர்களின் பட்டியலைக் கொண்டுள்ளது என்று ஹமாஸை அவர் எச்சரித்ததுடன், அமெரிக்க ஜனாதிபதியின் “தெளிவான மற்றும் ஐயத்திற்கு இடமில்லாத ஆதரவுக்கு” நன்றி தெரிவித்தார்.

தனது தீவிர வலதுசாரி கூட்டாளிகள் மற்றும் யூத மேலாதிக்கவாதிகளைச் சேர்ந்த விழிப்புணர்வு குழுக்களால் தூண்டப்பட்ட இஸ்ரேலிய நகரங்களில் அண்மையில் நடந்த கலவரங்களை நெத்தனியாகு கண்டித்தார். கலப்பு மக்கள் இருக்கும் நகர்ப்புறங்கள் மற்றும் நகரங்கள் போர் மண்டலங்களாக தோற்றமளிக்கும் அதேவேளை இப்பகுதிகளில் காவல்துறை கண்மூடித்தனமாக நடந்துகொள்கின்றது. ஒரு டஜன் மக்கள் இறந்துவிட்டனர், மேலும் அண்ணளவாக 1,000 பேர், பெரும்பாலும் பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், “எங்களது குடிமக்களுக்கு எதிரான படுகொலைகளை யூத அரசு பொறுத்துக் கொள்ளாது. எங்கள் யூத குடிமக்களை கொலை செய்யவோ அல்லது கொலைகார அரபு கும்பல்களுக்கு பயந்து வாழவோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம். யூதர்களின் ஜெப ஆலயங்களை எரிப்பதையும், சொத்துக்களை எரிப்பதையும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். யார் இதைத் தூண்டுகிறார்களோ அவர்கள் இதற்கு பெரும் விலை கொடுப்பார்கள்” என்றும் அவர் கூறினார்.

Loading