அமெரிக்கா மற்றும் பல அரபு நாடுகளின் ஆதரவுடன் காசா மீது இஸ்ரேல் “முழுவீச்சு” தாக்குதல்களைத் தொடர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு, “தேவைப்படும் வரை” போர் தொடரும் என்றும் காசா மீதான தாக்குதல் “முழுவீச்சுடன்” தொடரப்படும் என்றும் வலியுறுத்தி, நேற்று காசா மீதான இஸ்ரேலின் மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்களை அங்கீகரித்தார். மேலும், காசாவை ஆட்சி செய்யும் முஸ்லீம் சகோதரத்துவக் குழுவான ஹமாஸிடமிருந்து இஸ்ரேல் “பெரும் விலை கொடுப்பை விரும்புகிறது” என்றும் அவர் கூறினார்.

“இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள உரிமையுள்ளது” என்று மீண்டும் மீண்டும் அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனின் முழு ஆதரவுடன் பெரிதும் பாதுகாப்பற்ற மக்கள் மீது தனது குற்றகரமான போரை நெத்தனியாகு தொடர்கிறார். ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா, ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக, போரை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை வீண் அழைப்பு விடுப்பதை தடுத்தது.

மே 17, 2021, திங்கட்கிழமை, காசா நகரில், ஒரு வணிகக் கட்டிடத்தின் மேல்தளங்களை அழித்து, அருகிலுள்ள சுகாதார அமைச்சகத்திற்கும் மற்றும் பிரதான சுகாதார நிலையத்திற்கும் சேதம் விளைவித்த ஒரு இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர் ஒருவரது சடலத்தை மற்றவர்கள் எடுத்துச் செல்கையில் அவரது மகன் கதறுகிறார் (AP Photo/Khalil Hamra)

இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதல் கட்டுப்பாட்டை மீறி அச்சுறுத்துவதுடன், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிராந்தியங்களிலும் மற்றும் இஸ்ரேலிலும் மட்டுமல்லாமல் பிராந்தியமெங்கிலுமாக தீவிரவாதத்தையும் வகுப்புவாத வன்முறையையும் அதிகரிக்கிறது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் ஏகாதிபத்திய சக்திகளை எச்சரித்துள்ள போதிலும் இது நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை, நெத்தனியாகுவுடன் தான் தொலைபேசியில் பேசியதாக பைடென் கூறினார், என்றாலும் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க அவர் மறுத்துவிட்டார்.

ஆபிரகாம் உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டு, நெத்தன்யாகு அரசாங்கத்துடனான தங்கள் உறவை இயல்பாக்கிய நான்கு அரபு நாடுகள் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், மொராக்கோ மற்றும் சூடான் - முதன்முறையாக அமெரிக்காவுடன் இணைந்து, வெளிப்படையாக இஸ்ரேலின் பக்கம் எடுத்துக் கொண்டன. “ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் வார இறுதியில் அரசு ஆதரவுடன் கூடிய பதிலிறுப்பில் ‘பாலஸ்தீனம் எனது காரணம் அல்ல’ என்ற ஹேஷ்டேக் பரவியுள்ளது என்று கார்டியன் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை / திங்கட்கிழமை இரவு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மிகவும் தீவிரமானவை, பரந்த பகுதியை பாதிப்புக்குள்ளாக்கின, மற்றும் முன்னைய இரவில் 42 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலை விட நீண்ட நேரம் நீடித்தன. தாக்குதலில் ஈடுபட்ட 54 போர் விமானங்கள் 20 நிமிடங்களில் 35 இலக்குகள் மீது 110 துல்லியமான போர் ஆயுதங்களை போட்டு தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது. முற்றுகையிடப்பட்ட பிராந்தியத்தின் மீது கடந்த திங்கட்கிழமை முதல் இஸ்ரேல் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தத் தொடங்கியதிலிருந்து இரண்டு மருத்துவர்கள், குறைந்தது 35 பெண்கள் மற்றும் 58 குழந்தைகள் உட்பட, ஏற்கனவே 200 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர், அநேகமாக 1,300 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 700 க்கும் மேற்பட்ட வீடுகளும் 80 கட்டிடங்களும் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது உணவு உட்பட வாழ்க்கையின் மிக அடிப்படையான தேவைகளை பெற முடியாமல் 34,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். காசாவிலிருந்து ஏவப்பட்ட 3,100 ஏவுகணைத் தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு சிப்பாய் உட்பட 10 பேர் இஸ்ரேலில் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய தாக்குதல்களின் கடும் தாக்கத்தை பொதுமக்கள் தாங்கிக் கொண்டுள்ளனர். காசாவின் முக்கிய மருத்துவ வசதியான அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகிலுள்ள நான்கு மாடி வீடுகள் உட்பட, வீடுகளையும் அரசாங்க கட்டிடங்களையும் இந்த திடீர் தாக்குதல்கள் குறிவைத்தன என்று பாலஸ்தீன செய்தி நிறுவனம் வாஃபா தெரிவித்துள்ளது. ஏனைய உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, வான்வழித் தாக்குதல்கள் நகரின் மேற்கே உள்ள முக்கிய கரையோர சாலை, பாதுகாப்பு வளாகங்கள் மற்றும் திறந்த வெளிகளையும் தாக்கின, அதேவேளை, மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து தெற்கு காசா நகரின் பெரும்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்படும் ஒரு மின்னூட்டு வழியை வான்வழித் தாக்குதல்கள் சேதப்படுத்தியுள்ளன என்று காசாவின் மின் விநியோக நிறுவனம் கூறியுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) போர் விமானங்கள் ஹமாஸின் 15 கிலோமீட்டர் தொலைவுள்ள நிலத்தடி சுரங்கப்பாதை வலையமைப்பை மூன்றாவது முறையாக தாக்கின, அத்துடன் உயர்மட்ட ஹமாஸ் தளபதிகளுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒன்பது குடியிருப்புக்களையும் தாக்கின என்று IDF இன் செய்தித் தொடர்பாளர் பிரிகேரியர்-ஜெனரல் ஹிடாய் ஜில்பர்மேன் தெரிவித்தார். இது, ஹமாஸ் தலைவர் யேயா சின்வார், மற்றும் அவரது சகோதரர் முஹம்மது ஆகியோரது சொந்த வீடுகளும், ஹமாஸ் அதிகாரிகள் மற்றும் தளபதிகளின் பல வீடுகளும் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்டது.

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் குழுவின் தலைவர்களுள் ஒருவரான ஹூசாம் அபு ஹர்பீட்டைக் கொன்றதாக இஸ்லாமிய ஜிஹாத் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட மூத்த ஆயுதக்குழு தலைவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் தான் என்று IDF கூறினாலும், இஸ்ரேல் தனது 20 தலைவர்களை படுகொலை செய்துள்ளதாக ஹமாஸ் முன்னரே உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரு முழு குடும்பக் கூட்டத்தில் ஒரு குழந்தையை மட்டும் உயிரோடு விட்டு 10 பேரை கொன்றதான ஒரு அகதிகள் முகாமிலுள்ள ஒரு வீட்டின் மீது, மற்றும் அசோசியேட்டட் பிரஸ் மற்றும் அல் ஜசீரா, மற்றும் 13 மாடி அலுவலகம் மற்றும் அடுக்குமாடி கட்டிடம் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலைச் சுட்டிக்காட்டி, காசாவில் பொதுமக்களுக்கு எதிராக இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்ததாக பாலஸ்தீனிய வெளியுறவு அமைச்சர் ரியாத் அல்-மாலிகியும், மற்றும் இஸ்ரேலிய மனித உரிமைகள் குழுவான B’tselem உம் குற்றம்சாட்டியுள்ளன. இந்நிலையில், இஸ்ரேல் தனது குற்றங்களை பெருமை பீற்றி தாக்குதலுக்கு முன்னைய மற்றும் பின்னைய புகைப்படங்களை பதிவிட்டுள்ளது.

பொதுமக்கள் இறப்பு தவிர்க்க முடியாதது என்று முற்றிலும் அறியப்பட்ட “இராணுவ” இடங்கள் என்று அழைக்கப்படுவதை IDF குறிவைக்கிறது. திங்களன்று ஹமாஸின் “நிலத்தடி இராணுவ உள்கட்டமைப்பை” இஸ்ரேல் தாக்கியது என்று கூறிய இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் அலுவலகத்தை கார்டியன் மேற்கோள் காட்டியது. தாக்குதலின் விளைவாக, “நிலத்தடி வசதி சீர்குலைந்து போனது, மேலும் இதனால் பொதுமக்கள் வீடுகளின் அஸ்திவாரங்களும் தகர்ந்து விழுந்தன, மேலும் இது திட்டமிடப்படாத உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்தது” என்று செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவித்ததாக செய்தியிதழ் கூறியது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களை அச்சுறுத்துவதை அதிகரித்துள்ளனர். பாலஸ்தீனிய ஆணையம் (PA) சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, மே 7 முதல் 21 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 3,728 பேர் காயமடைந்துள்ளனர், இவர்களில் குறைந்தது 441 பேர் நேரடி குண்டுவீச்சு தாக்குதலுக்குள்ளாயினர். ஆர்ப்பாட்டங்களின் போது பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர், இது நக்பா தின போராட்டங்களில் உச்சக்கட்டத்தை அடைந்தது, இது ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசம் முழுவதையும் சுத்தமாக அழித்து, ஏப்ரல் 2002 க்கு பின்னர் ஏராளமானோர் கொல்லப்பட்ட மோசமான ஒரு நாளை உருவாக்கியது.

ரமலானின் போது அல்-அக்ஸா மசூதியை இஸ்ரேல் தீவிரமாக தாக்கியதையும், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் பழைய நகரத்தை ஒட்டியுள்ள ஷேக் ஜர்ரா மற்றும் சில்வான் சுற்றுப்புறங்களிலிருந்து பாலஸ்தீனிய குடும்பங்களை வெளியேற்ற திட்டமிட்டதையும் எதிர்த்து பாலஸ்தீனியர்கள் ஆரம்பத்தில் வீதிகளில் இறங்கி போராடினர். இது, பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் இஸ்ரேலின் பரந்த இன அழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

அத்தகைய படுகொலைகளை எதிர்ப்பவர்களை இரப்பர் தோட்டாக்களால் சுடும் அல்லது நேரடி குண்டுவீச்சு தாக்குதலை நிகழ்த்தும் படையினரின் பாதுகாப்பின் கீழ் ஆயுதமேந்திய குடியேறியவர்கள் அதிகரித்தளவில் நடத்திய வன்முறைமிக்க தாக்குதல்களையும் பாலஸ்தீனிய கிராமவாசிகள் எதிர்கொண்டுள்ளனர். IDF, இஸ்ரேலுக்குள் வளர்ந்து வரும் பாலஸ்தீன அமைதியின்மையை நசுக்க அனுப்பியிருந்த எல்லை காவல்படையை மாற்றி, வழமையான படையினர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி, தற்போது 24 பட்டாலியன்களை மேற்குக் கரையில் நிலைநிறுத்தியுள்ளது.

நெத்தனியாகுவும் இஸ்ரேலின் அரசியல் தலைமையும், பாலஸ்தீனிய குடிமக்கள் வசிக்கும் நகர்ப்புறங்கள் மற்றும் நகரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய குடியேறியவர்கள், வலதுசாரி கால்பந்து குண்டர்கள் மற்றும் தீவிர தேசியவாத வெறியர்கள் அடங்கிய கும்பல்களை அனுப்ப அவரது பாசிச நட்பு நாடுகள் முன்னோக்கிச் செல்ல அனுமதித்துள்ளனர். கிழக்கு ஜெருசலேம் உட்பட நாடு முழுவதிலுமுள்ள நகர்ப்புறங்கள் மற்றும் நகரங்களில் வார இறுதி வரை தொடர்ந்த வன்முறை, ஒரு டஜன் பேர் இறப்பதற்கும் அண்ணளவாக 1,000 பேர் கைதாவதற்கும் வழிவகுத்தது, இவர்களில் 850 பேர் பாலஸ்தீனியர்களாவர். லோடில், ஒரு யூத மேலாதிக்கவாதியால் ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்ட பின்னர் இரவுநேர ஊரடங்கு விதித்தும், ஊருக்குள் குடியிருப்பாளர்கள் அல்லாதவர்கள் நுழைய தடை விதித்தும், அதிகாரிகள் அங்கு அவசரகால நிலையை அறிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் பாலஸ்தீனிய குடிமக்களுக்கான உயர்மட்ட கண்காணிப்புக் குழு, அல்-அக்ஸா மசூதியில் ஏற்பட்ட மோதல் மற்றும் கலப்பு மக்கள் நகரங்களில் குடியேறியவர்களின் வன்முறை தொடர்பாக செவ்வாய்கிழமை நடத்தப்படவுள்ள ஒரு பொது ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுவரை, அரசு வழக்குரைஞர்கள் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை மட்டுமே வலியுறுத்தியுள்ளனர். அத்தகைய 116 குற்றச்சாட்டுக்களில் பெரும்பாலானவை பொலிஸ் அதிகாரிகளை தாக்கியது தொடர்பானவை. பாலஸ்தீனிய எதிர்ப்பு வன்முறையில் ஈடுபட்ட யூத குடிமக்களுக்கு எதிரானதாகக் கூறப்படும் அதிக குற்றச்சாட்டுக்களுக்கு “விரைந்து” அழுத்தம் கொடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக Ha’aretz செய்தியிதழுக்கு தெரிவிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை, இஸ்ரேலில், வடக்கு நகரமான கஃபர் கானாவில், 28 பேரை காயமடையச் செய்ததும், அவர்களில் நான்கு பேர் கடுமையாக தாக்கப்பட்டதுமான, கடும் மோதல்களை தூண்டியதாக சந்தேகத்தின் பேரில் இஸ்லாமிய இயக்கத்தின் வடக்கு கிளையின் துணைத் தலைவரான ஷேக் கமல் அல்-காதிப்பை பொலிசார் கைது செய்தனர்.

Ha’aretz இன் கூற்றுப்படி, இஸ்ரேலின் உள்நாட்டு உளவு நிறுவனம் Shin Bet இடம் மிகக் கடுமையான வன்முறை வழக்குகளை பொலிசார் ஒப்படைத்துள்ளனர். இது, கலவரங்களையும் மோதல்களையும் நசுக்க அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்த எந்தவொரு விசாரணைக்கும் பொலிசார் அஞ்சக்கூடாது என்ற நெத்தனியாகுவின் உறுதிமொழியை தொடர்ந்து நடக்கிறது.

Loading