முன்னோக்கு

காசா போர் குற்றங்களும், இஸ்ரேலின் நெருக்கடியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

காசாவிற்கு எதிராக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) நடத்தி வரும் ஒருதலைப்பட்சமான படுகொலையை உலக சோசலிச வலைத் தளம் எந்தவித ஐயத்திற்கும் இடமின்றி கண்டிக்கிறது. 10 நாட்களாக, இஸ்ரேலிய விமானங்களும் பீரங்கிகளும், ஈவிரக்கமின்றி இடைவிடாது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பான அந்த சிறிய வறிய கடற்கரையோர பகுதியில் சிக்கியுள்ள 2 மில்லியன் பாலஸ்தீனியர்கள் மீது குண்டுகளையும், ஏவுகணைகளையும், கையெறி குண்டுகளையும் மழையென பொழிந்துள்ளன.

An Israeli artillery unit fires toward targets in Gaza Strip, at the Israeli Gaza border, Tuesday, May 18, 2021. (AP Photo/Tsafrir Abayov)

குறைந்தபட்சம் 219 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் பெண்களும் குழந்தைகளும் ஆவர், அதேவேளையில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். சுமார் 41,000 காசாவாசிகள் அவர்களின் வீடுகளை விட்டு ஐ.நா. சபை நடத்தும் பள்ளிகளில் உள்ள தற்காலிக தங்குமிடங்களுக்கு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் "ஸ்மார்ட் குண்டுகள்" மூலமாக முழு உயரடுக்கு கட்டிடங்களையும் தரைமட்டமாக்கியது உட்பட, இஸ்ரேலின் தந்திரோபாயங்கள் மொத்த மக்களையும் அச்சுறுத்தியுள்ளன.

காசாவின் மருத்துவக் கவனிப்பு அமைப்புமுறை முறியும் நிலையில் உள்ளது, படுக்கை இடங்களும் மருத்துவ பொருட்களும் தீர்ந்து வருகின்றன. கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாக ஏற்கனவே மக்கள் நெரிசலாக குவிந்துள்ள மருத்துவமனைகள் இப்போது காயமடைந்தவர்களால் நிரம்பி வழிகிறது, அவர்களில் பலர் கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். துண்டிக்கப்பட்ட கைகள் கால்களுடன் காயமடைந்தவர்கள் மருத்துவமனை படுக்கையில் குவிக்கப்பட்டிருப்பதாக ஒரு செவிலியர் அல் ஜசீராவிடம் கூறினார்.

உள்கட்டமைப்பு சேதங்கள், அப்பிராந்தியத்திற்கான எரிபொருள் நிறுத்தம் ஆகியவை வீடுகளுக்கும் அத்துடன் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள், அதன் சாக்கடை வடிகால் வசதிகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கான மின்சாரத்தை நிறுத்தி, காசா முழுவதையும் இருட்டுக்குள் தள்ளிவிடுமென எதிர்நோக்கப்படுகிறது. இஸ்ரேலிய குண்டுகளாலும் எறிகுண்டுகளாலும் கொல்லப்பட்டவர்கள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் ஒரு பகுதி தான்; ஏனென்றால் மருத்துவக் கவனிப்பு வசதிகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பின் அழிவும் முடக்கமும் வரவிருக்கும் நீண்டகாலத்திற்கு இறப்பு விகிதத்தை அதிகரிக்கும்.

இந்த போர்க்குற்றங்களுக்கு இஸ்ரேல் மட்டுமே குற்றவாளி அல்ல, அதன் முக்கிய உதவியாளரான அமெரிக்க ஏகாதிபத்தியமும் இதில் குற்றவாளியாகும். இந்த குண்டுவீச்சுக்களுக்கு மத்தியில், ஜனாதிபதி ஜோ பைடெனின் ஜனநாயகக் கட்சி நிர்வாகம் மே 5 இல் அமெரிக்க காங்கிரஸ் சபையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கையில், காசாவின் உயர்ந்த கட்டிடங்களை இடிபாடுகளாக ஆக்க பயன்படுத்தப்பட்ட அதே ஆயுதங்களான, நேரடி தாக்குதலுக்கான ஒருமித்த வெடிபொருட்கள் (JDAM) உட்பட இஸ்ரேலுக்கு 735 மில்லியன் டாலர் ஆயுத பொதியை வழங்கயிருப்பதாக செய்திகள் குறிப்பிட்டன. ஆண்டுதோறும் இஸ்ரேலுக்கு வாஷிங்டன் வழங்கும் கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர் உதவியின் ஒரு தவணையாக இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது, காசா குற்றங்களில் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சித் தலைமையும் நேரடியாக உடந்தையாக இருப்பதை தெளிவுபடுத்துகிறது.

இதற்கிடையில், இஸ்ரேலின் நடவடிக்கைகளை விமர்சித்து ஐ.நா. பாதுகாப்பு அவையில் எந்தவொரு அறிக்கை வெளியிடுவதையும் தடுக்க வாஷிங்டன் இந்த ஒரு வார காலத்தில் மூன்று முறை அதன் வீட்டோ தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது.

பைடென் வெள்ளை மாளிகை ட்ரம்ப் நிர்வாகத்தின் தொடர்ச்சியைப் பேணுகிறது என்பதற்கும், அதுமட்டுமின்றி 2008-2009, 2012 இலும் மற்றும் பெருவாரியான அப்பாவி மக்களை உள்ளடக்கிய குறைந்தபட்சம் 3,500 காசாவாசிகள் ஒருமித்து கொல்லப்பட்ட 2014 இலும் தொடுக்கப்பட்ட இஸ்ரேல் போர்களுக்கு இதேபோல உதவிய மற்றும் உடந்தையாய் இருந்த பராக் ஒபாமா மற்றும் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ஆகிய அதன் முன்னோடிகளின் தொடர்ச்சியையும் பேணுகிறது என்பதற்கும் காசாவில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் படுகொலைக்கு பைடென் வெள்ளை மாளிகையின் விடையிறுப்பு சர்ச்சைக்கிடமற்ற ஆதாரத்தை வழங்குகிறது.

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களும் இளைஞர்களும் இஸ்ரேலின் போர்க்குற்றங்கள் மீது மட்டுமல்ல, மாறாக "இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாக்கும் உரிமை உண்டு" என்ற வாசகங்களை அதிகரித்தளவில் உச்சரிக்கும் பைடென் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் போன்றவர்களின் பாசாங்குத்தனமான நியாயப்படுத்தல் மீதும் நியாயமாகவே சீற்றம் கொண்டுள்ளனர். உலகின் அதிநவீன போர் இயந்திரங்களில் ஒன்றைக் கொண்ட ஓர் ஆக்கிரமிப்பு சக்திக்கு, இஸ்ரேலே சொந்தமாக தயாரித்த ஒரு பெரிய சேரி பகுதியில் சிக்கியுள்ள, நடைமுறையளவில் நிராயுதபாணியான அகதி மக்கள் வசிக்கும் அந்த ஆக்கிரமிப்பு பகுதி மீது இடைவிடாது மரணத்தையும் வன்முறையையும் திணிக்கும் "உரிமை" அதற்கு உண்டு என்பதே நடைமுறையில் இதன் அர்த்தமாகும். திங்கட்கிழமை பைடென் ஓர் அர்த்தமற்ற வெளிப்பாட்டுடன் இந்த பல்லவியில் இணைந்து கொண்டார், பிளேட்டோ தத்துவ பாணியில் தேதி எதுவும் குறிப்பிடாமல் போர்நிறுத்தத்தை அவர் ஆதரிப்பதாக ஒரு செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.

காசா போர்க்குற்றங்கள் மீது பெருகிவரும் மக்கள் கோபம், அண்டார்டிகாவைத் தவிர, ஒவ்வொரு கண்டத்திலும் நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான போராட்டங்களில் வெளிப்பாட்டைக் கண்டது. அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை ஆதரித்தாலும், உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களின் பார்வையில், அனைத்து தார்மீக மற்றும் அரசியல் சட்டபூர்வத்தன்மையையும் இழந்துள்ள ஓர் அரசாக, இஸ்ரேல் அன்னியமாகவே பார்க்கப்படுகிறது.

இத்தகைய போராட்டங்களை யூத-எதிர்ப்புவாதமாக முத்திரை குத்துவதற்கான முயற்சிகள் இது எதற்காக செய்யப்படுகிறது என்று பார்க்கப்பட்டு வருகிறது, இந்த யூதவாத அரசின் நடவடிக்கைகளால் அதிர்ச்சி அடைந்து கிளர்ந்தெழுந்துள்ள உலகெங்கிலுமான மில்லியன் கணக்கான யூதர்களுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் குற்றங்கள் மற்றும் அவதூறுகளை எதிர்க்கும் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்கு இது அவர்களின் ஓர் அருவருக்கத்தக்க முயற்சியாகும்.

ஆனால் இந்த கோபமும் போராட்டங்களும் போதாது. என்ன அவசியப்படுகிறது என்றால் இந்தக் குற்றங்களை எது உருவாக்கியதோ அதன் மீதும், அவற்றை எவ்வாறு நிறுத்தலாம் என்பதன் மீதும் ஓர் அரசியல் முன்னோக்கு தேவைப்படுகிறது.

காசாவிற்கு எதிரான வன்முறை வெடிப்பானது, இஸ்ரேலிய சமூகத்திற்குள்ளேயே நிலவும் அளப்பரிய நெருக்கடி மற்றும் முரண்பாடுகளால் உந்தப்படுகிறது. போருக்குள் இறங்குவதென்ற டெல் அவிவ் இன் முடிவு முதலாவதாக இரண்டு ஆண்டுகளில் நான்கு தேர்தல்களுக்குப் பின்னரும் ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்க முடியாமல், சுழன்று வரும் அரசியல் நெருக்கடியைத் தவிர்க்கும் ஒரு முயற்சியாக இருந்தது, மேலும் ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிறையில் அடைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக பெஞ்சமின் நெத்தனியாஹூ பிரதம மந்திரியாக அதிகாரத்தில் இருக்க வேண்டி உள்ளது.

இந்த அரசியல் நெருக்கடியின் அடித்தளத்தில் தீர்க்கவியலாத சமூக முரண்பாடுகள் உள்ளன. இஸ்ரேல், அமெரிக்காவுடன் சேர்ந்து, OECD நாடுகளிலேயே மிகவும் சமநிலையற்ற நாடுகளில் ஒன்றாக உள்ளது. இஸ்ரேலிய உதவி நிறுவனமான Latet இன் வருடாந்தர வறுமை அறிக்கையின்படி, இஸ்ரேலின் வறுமை விகிதம் 20.1 சதவீதத்தில் இருந்து 2020 இல் 29.3 சதவீதமாக உயர்ந்தது, அதே நேரத்தில் உலகின் மிகப்பெரிய பில்லியனர்கள் அங்கே அதிகரித்துள்ளனர், அதன் மிகப்பெரும் 20 பணக்காரர்கள் ஒருமித்து 61 பில்லியன் டாலருக்கும் அதிகமான செல்வ வளத்தைக் குவித்துக் கொண்டுள்ளனர்.

இதுபோன்ற சமூக இடைவெளியைத் தாங்கமுடியாத நிலைமை, முதலில் அல்-அக்ஸா மசூதி மீது வன்முறையான பொலிஸ் தாக்குதலாலும், கிழக்கு ஜெருசலேமில் அதிகரித்தளவில் ஆக்கிரோஷமான "இனச் சுத்திகரிப்பு" நடவடிக்கைகளாலும் தூண்டிவிடப்பட்டு, இஸ்ரேலிலுள்ள பாலஸ்தீனிய மக்களின் கிளர்ச்சியில் பட்டவர்த்தனமாக அம்பலப்பட்டுள்ளது. இஸ்ரேல் மக்கள்தொகையில் 20 சதவீதமாக இருக்கும் இஸ்ரேலிய பாலஸ்தீனியர்கள், காசா மீதான தாக்குதலை எதிர்த்தும் அவர்களை இரண்டாந்தர குடிமக்களுக்கும் கீழானவர்களாக ஆக்கும் இஸ்ரேலின் நிறவெறி பாணியிலான "இனவாத சட்டங்களை" எதிர்த்தும் செவ்வாய்கிழமை ஆக்கிரமிப்பு பகுதிகளில் பாலஸ்தீனியர்களுடன் சேர்ந்து பொது வேலைநிறுத்தத்தில் இணைந்தனர். கடைகள், பள்ளிகள் மற்றும் கட்டுமான தளங்களை அடைக்க செய்த தொழிலாளர்கள், நாடெங்கிலும் அவர்கள் வேலைகளில் இருந்து ஒதுங்கி கொண்டனர்.

இஸ்ரேலின் பில்லியனிய ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதன் ஆளும் சூழ்ச்சிக் குழுக்கள் இராணுவவாதம் மற்றும் அரபு-விரோத வெறுப்பை ஊக்குவிப்பதன் மூலமாகவும், வீதிகளில் பாசிச-சியோனிச கும்பல்களைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலமாகவும் ஓர் ஆதரவு தளத்தை உருவாக்க முயல்கின்ற அதேவேளையில், தொழிலாள வர்க்கத்திற்குள் அந்த அரசாங்கத்தின் மீதும் அதன் குற்றங்கள் மீதும் பரந்த கோபமும் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு அனுதாபமும் உள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை ஹைஃபாவின் Rambam மருத்துவமனைக்கு வெளியே ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்து யூத மற்றும் இஸ்ரேலிய பாலஸ்தீனிய மருத்துவக் கவனிப்பு பணியாளர்களின் ஓர் ஆர்ப்பாட்டத்தில் வெளிப்பாட்டைக் கண்டது, அரும்பு நிலையிலுள்ள இது, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒருமித்த ஒடுக்குமுறையாளருக்கு எதிரான ஒரு பொதுப்போராட்டத்தில் அது ஒற்றுமையாக ஒன்றுதிரண்டு வர விழையும் முனைவை வெளிப்படுத்துகிறது.

இஸ்ரேல் அரசு ஸ்தாபிக்கப்பட்டு எழுபத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரும், விரிவாக்கவாத ஆறு நாள் போருக்கு 55 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட, இஸ்ரேலிய ஆளும் வர்க்கத்தாலும் அதன் பரந்த இராணுவ எந்திரத்தாலும் பாலஸ்தீனிய எதிர்ப்பை நசுக்க முடியவில்லை, இது பிரிக்க முடியாத வகையில் ஒட்டுமொத்த இஸ்ரேலிய சமூகத்தில் நிலவும் அளப்பரிய உள்முரண்பாடுகளுடன் பிணைந்துள்ளது. இதற்கு விடையிறுப்பாக தான், இந்த அரசாங்கம் அதன் நெருக்கடியை ஆழப்படுத்த மட்டுமே செய்யும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, அதன் தலையை இழந்து விட்டதைப் போல நடந்து கொள்கிறது.

இஸ்ரேல் அதுவே அதன் பாதை முடிவைக் காண்கிறது. பாலஸ்தீனிய மக்களை வெளியேற்றுவதன் மூலம் மத்திய கிழக்கில் ஒரு குறுங்குழுவாத யூத முதலாளித்துவ அரசை உருவாக்கும் ஒரு பிற்போக்குத்தனமான முன்னோக்கான இந்த ஒட்டுமொத்த சியோனிய திட்டமும், கண்கூடாகவே தோல்வியடைந்துள்ளது. யூத இன ஒழிப்பை அடுத்து யூதர்களுக்கு ஒரு பாதுகாப்பான சொர்க்க பூமியாக இந்த அரசை சியோனிச சித்தாந்தம் நியாயப்படுத்திய அதேவேளையில், இனச் சட்டங்களை நிறுவுகின்ற இஸ்ரேலிய அரசாங்கமோ இன்னும் அதிகளவில் நாஜிக்களின் குற்றங்களுக்கு நிகரான வன்முறை குற்றங்களை நடத்துகிறது.

இஸ்ரேலிய அரசின் குற்றங்களுக்கு இஸ்ரேலிய அரேபியர்களிடையேயும், யூத தொழிலாள வர்க்கத்திலும் பாரிய எதிர்ப்பு மேலெழுந்திருப்பது, இந்த சியோனிச திட்டத்தின் முற்றிலும் நம்பகத்தன்மையற்ற தன்மையை இன்னும் கூடுதலாக எடுத்துக்காட்டுகிறது. பாலஸ்தீனிய மற்றும் யூத தொழிலாளர்களுக்கு இடையே ஒரு பிளவை ஏற்படுத்துவதற்கு பல தசாப்த கால முயற்சிகள் முறிந்து, தொழிலாள வர்க்க கிளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகரித்து வருகின்ற நிலையில், கொடுங்கோல் சர்வாதிகாரத்தை நாடுவதைத் தவிர இஸ்ரேல் உயிர் பிழைக்க முடியாத நிலையில் உள்ளது.

முன்னாள் காலனித்துவ சக்திகளால் வரையப்பட்ட எல்லைகளின் அடிப்படையில் பெயரளவிற்கு சுதந்திர அரசுகளை உருவாக்கியதன் மூலம் தோற்றுவிக்கப்பட்ட ஒட்டுமொத்த மத்திய கிழக்கு தேசிய-அரசு முறையின் உடைவுடன் இஸ்ரேலின் இந்த நெருக்கடி பிணைந்துள்ளது. கைக்கூலி அரபு முதலாளித்துவ வர்க்கம், இஸ்ரேல் மற்றும் ஏகாதிபத்தியத்துடன் நெருங்கி செல்வதன் மூலமாக அதிகரித்து வரும் சமூக எதிர்ப்புக்கு எதிராக அதன் சொந்த ஆட்சியைப் பாதுகாக்க முயலுவதால், அது பாலஸ்தீனியர்களை ஆதரிக்கும் அதன் நாடகத்தையும் மற்றும் அது ஊக்குவித்து வந்த "இரு-அரசு தீர்வு" என்ற கனவையும் கைவிட்டுள்ளது. பரந்த மத்திய கிழக்கு அமெரிக்க போர்களால் சீரழிக்கப்பட்டுள்ள அதேவேளையில், எகிப்திய புரட்சியை இரத்தக்களரியாக நசுக்கி ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், லெபனான், ஜோர்டான், சிரியா என இஸ்ரேல் எல்லைகளாக உள்ள அனைத்து நாடுகளும் மற்றும் எகிப்தும் கூட உள்நாட்டு மோதலால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதே போல, காசாவில் மேலாதிக்க அரசியல் சக்தியாக விளங்கும் ஹமாஸும் எந்தவொரு முற்போக்கான மாற்றீட்டையும் வழங்க இலாயக்கற்றதாகும். பாலஸ்தீன விடுதலை அமைப்பைப் போலவே, இதுவும் இரு-அரசு தீர்வு என்றழைக்கப்படுவதைத் தழுவியுள்ளது, இந்த தீர்வானது சியோனிச அரசின் கட்டைவிரலின் கீழ் காசாவையும் மேற்கு படுகையையும் பாலஸ்தீன சேரிப்பகுதிகளாக பேணும். இஸ்ரேலுக்குள்ளேயே ஒரு கிளர்ச்சி அபிவிருத்தி அடைந்து வரும் நிலைமைகளின் கீழ், ஹமாஸ் யூத தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுப்பது ஒருபுறம் இருக்கட்டும், இஸ்ரேலிய அரபு மக்களுக்கும் கூட எந்த முறையீடும் செய்ய இலாயக்கற்று உள்ளது.

அமெரிக்க முப்படை தலைவர்களின் தலைவரான ஜெனரல் மார்க் மில்லே திங்களன்று கூறுகையில், காசாவில் "பரந்த ஸ்திரமின்மையும்" மற்றும் "சண்டை தொடர்ந்தால் ஒட்டுமொத்தமாக தொடர்ச்சியான பல எதிர்மறை விளைவுகளும்" ஏற்படலாம் என்று எச்சரித்தார். தெளிவாக, இஸ்ரேலிலும் ஆக்கிரமிப்பு பிராந்தியங்களிலும் நடக்கும் சம்பவங்கள் அப்பிராந்தியம் முழுவதிலும் புரட்சிகர எழுச்சிகளைத் தூண்டக்கூடும் என்பதும், அதே நேரத்தில் முதலாவதாக ஈரானுக்கு எதிராக இன்னும் பரந்த போர் அச்சுறுத்தலையும் முன்நிறுத்தி வருகிறது என்பதுமே அவர்களின் அச்சமாக உள்ளது.

போரா புரட்சியா என்ற இந்த மாற்றீடுகள், மத்திய கிழக்கில் மட்டுமல்ல, உலகளவில் முன்நிற்கின்றன. 3.5 மில்லியன் உயிர்களை பலி கொண்ட ஓர் உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள நிலையில், ஏகாதிபத்திய சக்திகளோ உலகளாவிய போருக்கான தயாரிப்பில் ஒரு பாரிய இராணுவ கட்டமைப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதே தொற்றுநோய் தொழிலாள வர்க்கத்தில் சமூக எதிர்ப்பை தூண்டிவிட்டிருப்பதுடன், உலகளவில் வர்க்க போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளது, இது சமூக புரட்சிக்கு வழி வகுத்து வருகிறது.

இதில் தான் மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு முன்னோக்கிய பாதை உள்ளது. முன்னோக்கு மற்றும் தலைமையின் நெருக்கடியைக் கடந்து வருவதே மையப் பிரச்சினையாகும்.

நாசரிசம் முதல் PLO வரை, முதலாளித்துவ தேசியவாதத்தின் முட்டுச்சந்தை, லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவம் முற்றிலுமாக நிரூபணம் செய்துள்ளது. ஏகாதிபத்திய சகாப்தத்தில், ஒடுக்கப்பட்ட நாடுகளில் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்கான அடிப்படை பணிகளைத் தேசிய முதலாளித்துவத்தின் தலைமையின் கீழ் தீர்க்க முடியாது, அது முற்றிலுமாக ஏகாதிபத்தியத்துடன் பிணைந்து அதையே சார்ந்துள்ளது. ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் தலையீட்டின் மூலமாக மட்டுமே அவற்றை அடைய முடியும்.

காசா மீதான இராணுவத் தாக்குதலும் இஸ்ரேலுக்குள்ளேயே அதிகரித்து வரும் கிளர்ச்சியும், உலகம் முழுவதிலும் முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டுவதற்கான போராட்டத்தின் பாகமாக மத்திய கிழக்கு சோசலிச கூட்டமைப்பிற்கான ஒரு பொதுவான போராட்டத்தில், தேசிய மற்றும் குறுங்குழுவாத பிளவுகள் அனைத்தையும் கடந்து, அரபு, யூத மற்றும் ஈரானிய தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தின் அதிஅவசர தேவையை முன்நிறுத்துகின்றன.

இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் அதிமுக்கிய பணியானது, ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரிவுகளாக ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட புதிய புரட்சிகர தலைமையைக் கட்டமைப்பதைச் சார்ந்துள்ளது.

Loading