முன்னோக்கு

உலகளவில் பாரிய மரணங்களுக்கு மத்தியில், கோவிட் தொற்றுநோய் தடுப்பூசி பில்லியனர்களை வளர்த்தெடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 தடுப்பூசிகளின் உற்பத்தியிலிருந்து பெறப்பட்ட இலாபங்கள், 19.3 பில்லியன் டாலர் நிகர செல்வவளத்துடன் ஒன்பது புதிய பில்லியனர்களை உருவாக்கி உள்ளன. அதேபோல 32 பில்லியன் டாலர் தடுப்பூசி உற்பத்தி பெருநிறுவனங்களுடன் சம்பந்தப்பட்ட ஏற்கனவே பில்லியனர்களாக உள்ள எட்டு பேரின் நிதிய முதலீடுகளையும் கொழிக்கச் செய்துள்ளன.

மே 25, 2021, ஸ்ரீநகரில் உள்ள ஒரு தகன மேடை ஒன்றில், கோவிட் -19 ஆல் இறந்த ஒருவர் எரியும் நெருப்புக்கு அடுத்ததாக குடும்ப உறுப்பினர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். [Foto: AP Photo/Dar Yasin]

உலகளாவிய பாரிய இறப்பு மற்றும் பொருளாதார வறுமைக்கு மத்தியில் வெறுப்பூட்டும் அளவுக்குத் தனியார் செல்வங்களின் திரட்சியை அம்பலப்படுத்தும் இந்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள், ஜி20 உலகளாவிய சுகாதார உச்சி மாநாட்டுக்கு முன்னதாக, நிவாரண உதவி அமைப்புகளின் ஒரு கூட்டமைப்பு தயாரித்த ஓர் அறிக்கையில் வெளியிடப்பட்டன.

மொடேர்னா மற்றும் ஃபைசர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்களாக மாறிய பில்லியனர்களிடம் புதிதாக குவிந்த செல்வத்தைக் கொண்டு "குறைந்த வருமான நாடுகள்" என்று அழைக்கப்படும் நாடுகளின் மொத்தம் 780 மில்லியன் மக்களுக்கு 1.3 முறை தடுப்பூசி போடலாமென அந்த அறிக்கை மதிப்பிடுகிறது.

முன்பிருந்த பில்லியனர்களால் கடந்தாண்டு குவித்துக் கொள்ளப்பட்ட 32 பில்லியன் டாலர்களைக் கொண்டு இந்தியாவிலுள்ள மொத்தம் 1.4 பில்லியன் மக்களுக்கும் முழுமையாக தடுப்பூசி போட நிதியளிக்க முடியும். அந்நாடு கோவிட்-19 பேரழிவின் புதிய குவிமையமாக ஆகியுள்ளது, அங்கே நோய்தொற்றுக்கள் கடந்த இரண்டு மாதங்களில் இரட்டிப்பாகி உள்ளன. பதிவு செய்யப்பட்ட தினசரி இறப்புக்கள் 4,000 ஆக உயர்ந்துள்ளதுடன், மருத்துவ சிகிச்சை அமைப்புமுறை பெரும் அழுத்தத்தில் உள்ளது, சுடுகாடுகளும் மின்-மயானங்களும் சடலங்களால் நிரம்பி வழிகின்றன.

மொடேர்னாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டெபேன் பன்செல் ($4.3 பில்லியன்); BioNTech நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் உகுர் சாஹின் ($ 4 பில்லியன்); நோயெதிர்ப்புசக்தி வல்லுனரும் மொடேர்னாவின் ஸ்தாபக முதலீட்டாளருமான டிமோதி ஸ்பிரிங்கர் ($ 2.2 பில்லியன்); மொடேர்னாவின் தலைவர் நௌபர் அஃபியன் ($ 1.9 பில்லியன்) ஆகியோர் தடுப்பூசி நிறுவன புதிய பில்லியனர்களில் உள்ளடங்குவர்.

தேசிய சுகாதார நிறுவனங்களுக்கும் (NHS) பல்கலைக்கழக ஆய்வக ஆராய்ச்சிகளுக்கும் அரசு வழங்கிய நிதியுதவி, அத்துடன் தடுப்பூசிகளின் கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்திக்காக பொது நிதியிலிருந்து வழங்கப்பட்ட சுமார் 10.5 பில்லியன் டாலர் ஆகியவை தான் இந்த தனிநபர்கள் குவித்துக் கொண்ட இந்த அளப்பரிய செல்வத்திற்கான அடித்தளமாகும்.

சமூகரீதியாக உருவாக்கப்பட்ட விஞ்ஞான சாதனைகளை தனியார் கைப்பற்றியமை, Moderna, Pfizer-BioNTech நிறுவனங்களையும் இதர நிறுவனங்களையும், தடுப்பூசிகளின் விலையை உற்பத்தி செலவுகளை விட குறைந்தபட்சம் 20 சதவீதம் அதிகமாக உயர்த்தவும், கடுமையாக தடுப்பூசி தேவைப்படும் நாடுகள் மலிவான மருந்துகளை உற்பத்தி செய்வதில் இருந்து அவற்றை தடுக்கவும் அனுமதித்துள்ளது.

அதற்கும் மேலாக, மிகப்பெரும் மருந்து-உயிரிதொழில்நுட்ப நிறுவன பில்லியனர்களின் சொத்துக்கள், பெருமளவில் அரசு பணம் பாய்ச்சப்படுவதிலிருந்து உயர்ந்து வரும் பங்குச் சந்தையால் வீங்கிப் புடைத்துப் போயுள்ளன. சான்றாக, மொடேர்னா நிறுவன பங்கு விலைகள் கடந்தாண்டில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

மொடேர்னா மற்றும் ஃபைசர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளும் முதலீட்டாளர்களும் மிகவும் நேரடியாக பயனடைந்தவர்களில் உள்ளடங்கி இருக்கலாம் என்றாலும், "தொற்றுநோயிலிருந்து இலாபமடைந்தவர்கள்" அவர்கள் மட்டுமே இல்லை. கடந்த மாதம் ஃபோர்ப்ஸ் இதழின் ஆண்டறிக்கை விவரித்தவாறு, உலக பில்லியனர்களின் ஒட்டுமொத்த செல்வவளம் கடந்தாண்டு 8 ட்ரில்லியன் டாலரில் இருந்து 13.1 ட்ரில்லியன் டாலராக 60 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்தது. உலக வங்கியின் தகவல்படி, இந்த தொற்றுநோயும் அதன் சமூக-பொருளாதார விளைவுகளும் கடந்தாண்டு உலகளவில் குறைந்தபட்சம் 255 மில்லியன் முழுநேர வேலைகளை துடைத்தெறிந்த நிலையில் மற்றும் இது தொடரும் என்கின்ற நிலையில், பில்லியனர்களின் செல்வவள அதிகரிப்பு 2021 இல் இன்னும் 150 மில்லியன் மக்களைத் தீவிர வறுமைக்குள் தள்ளும்.

தடுப்பூசி உற்பத்தி ஆளும் தன்னலக் குழுவின் ஒரு சிறிய அடுக்கிற்குப் பெரும் செல்வத்தை கொடுத்துள்ள அதேவேளையில், உலக மக்களில் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. அவற்றின் வினியோகம் தேசியவாதத்தாலும், இலாபத்திற்காகவும் மற்றும் இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான எந்தவொரு ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கையையும் பிரதான ஏகாதிபத்திய சக்திகள் அப்பட்டமான நாசப்படுத்துவதனாலும் முடக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசிகள் மீதான காப்புரிமைகளை நீக்குவது உற்பத்தி ஏகபோகங்களைத் திறன்பட முறிக்கும் என்பதால், உலக வர்த்தக அமைப்பின் அதற்கான அழைப்புகளைப் பெருநிறுவனங்களும் நிதி மூலதனமும் மூர்க்கமாக எதிர்த்துள்ளன. தொழில்நுட்பத்தைக் கைமாற்றுவதற்கும் ஏனைய நாடுகளில் உற்பத்தி கொள்ளளவை அதிகரிப்பதற்கும் பல மாதங்களாகும் என்பதால் காப்புரிமை நீக்கம் நடைமுறைக்கு பயன்படாதென நிறுவனங்களும் அவற்றின் தரகர்களும் வலியுறுத்தி உள்ளனர். இந்த வாதத்தை அவர்கள் பல மாதங்களாக முன் வைத்து வருகிறார்கள், அதேவேளையில் இந்நாடுகளின் மக்களோ அவர்களது உயிர்களைக் காப்பாற்றும் தடுப்பூசிகள் தடுக்கப்பட்டிருப்பதால் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

உலக சுகாதார அமைப்பின் 74 வது உலக சுகாதாரப் பேரவை திங்களன்று தொடங்கிய போது, உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயசஸ் குறிப்பிடுகையில், இந்தாண்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டின் மொத்த நோயாளிகள் எண்ணிக்கையை விஞ்சிவிட்டது, அதாவது, தற்போதைய நிலவரப்படி பார்த்தால், கோவிட்-19 இறப்புக்களின் எண்ணிக்கை அடுத்த மூன்று வாரங்களுக்குள் 2020 இன் மொத்த இறப்பு எண்ணிக்கையையே விஞ்சிவிடும் என்றார்.

உலக சுகாதார நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களில் பிரதிபலிப்பதை விட மூன்று மடங்கு அதிகமானவர்கள் இந்த தொற்றுநோயால் இறந்திருக்கலாம் என்று மதிப்பிட்டது. இது, உண்மையான உலகளாவிய இறப்பு எண்ணிக்கையை 10 மில்லியனுக்கும் அதிகமாக கொண்டு செல்லும்.

உலகளாவிய தடுப்பூசி விநியோகத்தில் உள்ள பரந்த சமத்துவமின்மையைச் சுட்டிக்காட்டிய கெப்ரேயசஸ், "தற்போதைய இந்த தடுப்பூசி நெருக்கடி இந்த தொற்றுநோயை நீடிக்கச் செய்து கொண்டிருக்கும் ஒரு கண்டிக்கத்தக்க சமத்துவமின்மையாகும்,” என்று அறிவித்தார். உலகின் 75 சதவீத தடுப்பூசிகள் வெறும் 10 நாடுகளில் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளன என்றவர் குறிப்பிட்டார்.

"இதை சொல்ல எந்த இராஜாங்க வழியும் இல்லை. உலகின் பெரும்பாலான தடுப்பூசிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நாடுகளின் ஒரு சிறிய குழு, உலகின் மற்ற பகுதிகளின் தலைவிதியைக் கட்டுப்படுத்துகிறது," என்றார், அதேநேரத்தில் சமமான தடுப்பூசி விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட உலகளாவிய நிறுவனமான COVAX க்கு "பெரிதும் போதுமானளவுக்கு" தடுப்பூசி மருந்துகள் "அனுப்பப்படவில்லை" என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

2021 இன் இறுதிக்குள் இரண்டு பில்லியன் டோஸ் மருந்து வினியோகிப்பதே COVAX இன் அறிவிக்கப்பட்ட இலக்காக இருந்தது. ஆனால் இம்மாத தொடக்கம் வரையில், 125 நாட்டு மொத்த மக்கள்தொகையில் 1 சதவீதத்தினருக்கு ஒருமுறை தடுப்பூசி போடும் அளவை விட குறைவாக, அந்நாடுகளுக்கு வெறும் 70 மில்லியன் அளவை மட்டுமே அதனால் வினியோகிக்க முடிந்திருந்தது.

உலக மக்கள்தொகையில் 17 சதவீதத்தைக் கொண்ட ஆபிரிக்கா, உலகெங்கிலுமான தடுப்பூசிகளில் வெறும் 1.5 சதவீதத்தை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது. சோமாலியாவின் 15 மில்லியன் மக்களுக்கு வெறும் 300,000 டோஸ் மருந்தையும், நைஜரின் 23 மில்லியன் மக்கள்தொகைக்கு 355,000 டோஸ் மருந்தையும், லிபியாவின் 6.8 மில்லியன் மக்களுக்கு 175,000 டோஸ் மருந்தையும் மட்டுமே COVAX ஆல் வினியோகிக்க முடிந்துள்ளது. மத்திய கிழக்கில் 39 மில்லியன் ஈராக்கியர்களில் வெறும் 336,000 பேருக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது, 43 மில்லியன் அல்ஜீரியர்களில் 364,800 பேர்களுக்கும், ஆக்கிரமிப்பு பிராதியங்களின் 4.7 மில்லியன் பாலஸ்தீனியர்களில் 164,000 பேர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. வறிய இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இதுபோன்ற புள்ளிவிபரங்களே மேலோங்கி உள்ளன, சான்றாக, பொலிவியா அதன் 12 மில்லியன் மக்களுக்காக வெறும் 421,000 டோஸ் மருந்துகளை மட்டுமே பெற்றுள்ளது; ஆசியாவில், அங்கே பிலிப்பைன்ஸ் அதன் 108 மில்லியன் மக்களுக்கு வெறும் 2.6 மில்லியன் டோஸ் மருந்துகளை மட்டுமே பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே COVAX இக்குத் தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை, வாஷிங்டன் முன்னணியில் இருக்க பிரதான ஏகாதிபத்திய சக்திகள் அந்த சர்வதேச அமைப்பைத் தவிர்த்து விட்டு ஃபைசர், மொடர்னா மற்றும் ஏனைய நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசிகளில் பெரும்பங்கைத் தாங்களே கொள்முதல் செய்து கொள்வதற்காக ஒப்பந்தங்கள் செய்து கொண்டதால், சமமாக விநியோகிப்பதற்கான அந்த அமைப்பின் நோக்கம் நசுக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் சொந்த கொள்கைகளால் எரியூட்டப்பட்டு இந்த தொற்றுநோய் கட்டுப்பாடின்றி அதிகரித்ததற்கு, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான இந்தியாவின் செரம் அமைப்பின் (SII) அனைத்து ஏற்றுமதிகளையும் நிறுத்துமாறு இந்திய அரசாங்கம் உத்தரவிட்டதன் மூலம், இந்த தடுப்பூசி தேசியவாதத்தின் படுமோசமான விளைவுகள் இன்னும் கூடுதலாக தீவிரமாகி உள்ளன. இதன் விளைவாக, முதல் கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்ட உலகின் மிக வறிய நாடுகளின் பத்து மில்லியன் கணக்கான மருத்துவப் பணியாளர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி கிடைக்காமல் போகும்.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளும் பெருங்கடலில் ஒரு துளி என்றளவுக்கு மிகக் குறைவான தடுப்பூசிகளுக்கு வாக்குறுதிகளை அளித்து இந்த நெருக்கடிக்கு விடையிறுத்துள்ளன. பைடென் நிர்வாகம் 80 மில்லியன் டோஸ் மருந்துகளுக்கு உறுதியளித்துள்ளது, ஐரோப்பிய ஒன்றியம் 100 மில்லியன் டோஸ் மருந்துகளுக்கு உறுதியளித்துள்ளது.

உலகளவில் நோய்தொற்றுகள் மற்றும் இறப்புக்கள் அன்றாடம் புதிய உச்சத்தை எட்டி வருகையில், இந்த விடையிறுப்பு ஈவிரக்கமற்றவையாக மட்டும் தெரியவில்லை, மாறாக பகுத்தறிவற்ற சொல்லப்போனால் பைத்தியக்காரத்தனமானவும் தெரிகிறது. உலகளாவிய இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு தேசிய அடிப்படையில் முடிவில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கெப்ரேயசஸ் திங்களன்று எச்சரித்தது போல, "எந்த நாடும், அதன் தடுப்பூசி விகிதம் எதுவாக இருந்தாலும், அது தப்பித்துவிடலாமென நினைக்க முடியாது.” இந்தியா, பிரேசில் மற்றும் ஏனைய நாடுகளிலும் இந்த வைரஸ் கட்டுப்பாடின்றி பரவி வருகின்ற நிலையில், தடுப்பூசியையே எதிர்க்கும் புதிய வைரஸ் வகைகள் உருவாகும் அச்சுறுத்தலும் இருக்கிறது.

உலகளவில் அதிஅவசியமாக தேவைப்படும் தடுப்பூசி நடவடிக்கைக்கு முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் ஆளும் வர்க்கங்களின் குற்றமான அலட்சியம், இந்த தொற்றுநோய்க்கு அவற்றின் ஒட்டுமொத்த கொலைகார விடையிறுப்புடன் ஒத்திசைந்துள்ளது. அவை, ஆரம்பத்தில் இருந்தே, மனித உயிரைப் பாதுகாப்பதை, வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் இலாப நலன்களுக்கும் மற்றும் தனது கரங்களில் அளவில்லா செல்வத்தை குவித்துக் கொண்டுள்ள ஓர் ஆளும் தன்னலக்குழுவிற்கும் கீழ்ப்படியச் செய்துள்ளன.

உயிர் உட்பட உழைக்கும் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கு முன்நிபந்தனைகளாக, முதலாளித்துவ தேசிய-அரசு முறையை ஒழித்து, நிதிய தன்னலக்குழு திரட்டிய செல்வத்தைப் பறிமுதல் செய்து, உற்பத்தி சாதனங்கள் மீதான தனியுடைமையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய அவசியத்தை இந்த தொற்றுநோய் அப்பட்டமாக எடுத்துக்காட்டி உள்ளது.

கோவிட்-19 தொற்றுநோய்க்கு முதலாளித்துவ விடையிறுப்பால் தோற்றுவிக்கப்பட்டுள்ள இந்த சமூகப் பேரழிவினால் எரியூட்டப்பட்டு, உலகெங்கிலுமான தொழிலாளர்கள் போராட்டங்களில் நுழைந்து வருகின்றனர். இந்தப் போராட்டங்கள், தன்னலக்குழுக்களது இலாபங்கள் மற்றும் செல்வவளத்தை விட மனித தேவைகளை முன்நிறுத்தும் ஒரு சமூகத்திற்கான ஒரு பொதுவான போராட்டத்தில் தேசிய எல்லைகளைக் கடந்து தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் மற்றும் முதலாளித்துவத்தின் போர் முனைவுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை முன்னெடுக்கும், ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தைக் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.

Loading