பிரெஞ்சு MBF உலோகத்துறை தொழிலாளர்கள் ஆலை மூடலுக்கு எதிராக உண்ணாவிரதம் செய்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 18 ல் இருந்து, கிழக்கு பிரான்சின் ஜூரா பிராந்தியத்திலுள்ள செயிண்ட்-குளோட்டிலுள்ள (Saint-Claude) எம்.பி.எஃப் அலுமினிய வார்ப்பாலையில் (MBF Aluminium foundry) நான்கு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மார்ச் மாதத்திலிருந்து தொழிற்சாலை செயற்படவில்லை. தொழிற்சாலை மூடப்பட்டால் அதற்கு டைனமைட் வைக்கப் போவதாக தொழிலாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர். நகரத்தின் மிகப் பெரிய தொழில் வழங்குனரான எம்.பி.எஃப் மூடப்பட்டால், 30 தற்காலிக தொழிலாளர்கள் உட்பட 280 பேர் வேலையின்மையில் தள்ளப்படுவார்கள்.

எம்பிஎஃப் அலுமினிய ஆலை (Source: MBF Aluminum)

மே 25 அன்று, டிஜோன் வர்த்தக நீதிமன்றம் ஒரே ஒருவர் விலைக்கு வாங்குபவரான மிக்கையில் அஸோலேயின் வாய்ப்பை நிராகரித்தது, ஆனால் எம்பிஎஃப் ஊழியர்களுக்கு தற்காலிக அவகாசம் கொடுக்கவும், உள்ளூர் அரசாங்கமானது திட்டத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற அனுமதிக்கவும் முடிவு செய்தது. ஆலை மூடப்படுவதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது, எம்.பி.எஃப் தொழிலாளர்களின் தீவிரமயமாதல் பிரான்சிலுள்ள மற்றய ஆலைகளிலுள்ள தொழிலாளர்களுக்கும் பரவிவிடும் என்ற அச்சத்தால் உந்தப்பட்டது.

உலோகப் பணிகளில் பெருநிறுவன கொள்வனவுகளின் சரிவை விளக்குவதற்கு பொதுவாக இரண்டு காரணங்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன: டீசல் என்ஜின்களின் குறைந்த பயன்பாடு (மற்றும் மின்சார கார்களுக்கு மாறுவதன் ஒரு பகுதியாக அடுத்த 20 ஆண்டுகளில் வெப்ப என்ஜின்களிலிருந்து திட்டமிடப்பட்ட வெளியேற்றம்), மற்றும் உலகளாவிய பெருந்தொற்று நோய்க்கு முன்பே வெளிப்பட்டு வந்த சர்வதேச பொருளாதார நெருக்கடி ஆகியவைகளாகும்.

மற்றய தளங்களும் மூடப்படும் அச்சுறுத்தலுக்கு உட்பட்டதாக இருக்கின்ற: பிரிட்டானி வார்ப்பாலைகள் -Brittany foundries (ரெனால்ட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன, 340 ஊழியர்களுடன்), சோசியேட்டே அவெய்ரோனைஸ் டு மெடல்லுர்ஜி - Société Aveyronnaise de Métallurgie (365 ஊழியர்கள்), ஃபோண்டெரி டு புவத்தோ- Fonderie du Poitou மற்றும் முன்னாள் பிரான்சைஸ் டு ரூ - ex-Française de roue (மொத்தம் 850 ஊழியர்கள்), பிரான்சில் அலுமினிய தொழில்களின் கடைசி உற்பத்தியாளர். ஸ்டெல்லண்டிஸ் - Stellantis (பியூஜியோட்) மற்றும் ரெனால்ட் போன்ற கார் உற்பத்தியாளர்களை நம்பியிருக்கும் இந்த தொழிற்சாலைகள் எப்போதும் சிறிய ஆர்டர்களை சார்ந்துள்ளன.

உற்பத்தியாளரால் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஃபோண்டெரி டு பிரெட்டான்யே, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ இயந்திரங்கள் அழிக்கப்படுவதையும், குறிப்பாக, ஃபோண்டெரி டு பிரெட்டான்யேவின் மற்றய கருவிகளை அழிப்பதற்கான அச்சுறுத்தல்களையும் காட்டிய பின்னர், ஒரு குற்றவியல் புகாரை தாக்கல் செய்துள்ளதாக ரெனால்ட் குழுமம் சுட்டிக்காட்டியுள்ளது.

டிஜோன் வர்த்தக தீர்ப்பாயத்தின் முடிவிற்கு பல நாட்களுக்கு முன்னர், எம்.பி.எஃப் ஊழியர்கள் எரிவாயு சிலிண்டர்களை நிறுவி, வார்ப்பாலையை டைனமைட் வைக்கப் போவதாக அச்சுறுத்தினர், சில ஊழியர்கள் உண்ணாவிரதமும் இருந்தனர்.

உணவு இல்லாமல் மூன்று நாட்களுக்குப் பின்னர், 45 வயதான இயந்திர இயக்குபவரான இசபெல் ஆல்வ்ஸ் டா கோஸ்டா, வார்ப்பாலை மூடல் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக பேரழிவு குறித்து எச்சரித்தார். "இது கடினமாக இருக்கிறது, உடல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும். ஆனால் நாங்கள் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளோம், அவர்கள் எங்களைக் கவனத்திலெடுக்கவில்லை. ... நிலைமை தீவிரமானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். செயிண்ட்-குளோட் பிராந்தியம் பேரழிவிற்கு உட்பட்டுள்ளது. எம்.பி.எஃப் மூடப்பட்டால், அதனால் பாதிக்கப்படும் 280 ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மட்டுமல்ல, அது அனைவருக்கும் ஒரு பேரழிவாக இருக்கும்!"

நிறுவனத்தின் கலைப்பு சாத்தியம் குறித்து எச்சரிக்கவும், தொழில்துறையின் சிரமங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஊழியர்கள் தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளனர். தொழிற்சங்கத்தின்படி, எம்பிஎஃப் அலுமினியத்தின் இரண்டு பிரத்தியேக வாடிக்கையாளர்களான ரெனால்ட் மற்றும் பிஎஸ்ஏ-ஸ்டெல்லாண்டிஸ் (PSA-Stellantis) ஆகியவைகள் தங்கள் ஒப்பந்தங்களின் விதிமுறைகளின்படி ஆர்டர்களை மதிக்கவில்லை.

தொழிற்சங்க எந்திரங்கள் தொழிலாளர்களை தனிமைப்படுத்தி, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்கள் ஒன்றுபட்ட அணிதிரள்வை தடுத்து நிறுத்துகின்றன. இது கார்த் தொழிலில் நடைபெற்றுவரும் பரந்த உலகளாவிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, அவர்களின் வேலைகள் அழிக்கப்படுவதையும் எதிர்கொண்டுள்ளது.

மே 9 திகதியிட்ட ஒரு செய்திக் குறிப்பில் தொழிற்சங்கங்கள் பின்வருமாறு குறிப்பிட்டன: "பிரெஞ்சு உற்பத்தியாளர்கள் எம்.பி.எஃப் ஐ கொல்ல முடிவு செய்துள்ளனர், ஏனெனில் கடந்த ஒப்பந்தங்களின் போது அவர்கள் செய்த உறுதிமொழிகளின் அளவு கூட கடந்த வார இறுதியில் கீழ்நோக்கி திருத்தப்பட்டது, இது நிறுவனத்தின் உயிர்பிழைப்பை மேலும் சிக்கலாக்கியது."

தொழிலாளர் பொது கூட்டமைப்பு (CGT)- உலோகத்துறை தொழிற்சங்கமானது வார்ப்பாலைகளின் "மறுசீரமைப்பிற்கு ஒரு தடையை" தவிர வேறு எதையும் முன்மொழியவில்லை, மேலும் மே 4 அன்று பாரிஸில் நடந்த ஒரு கூட்டத்தில், தொழில்துறையில் "அனைத்து வீரர்களையும்" ஒன்றிணைக்கும் வாகனத் துறையின் வட்டமேசைக்கான அதன் கோரிக்கையை "மீண்டும் வலியுறுத்தியது" என்று கூறியது. தொழிற்சங்கங்கள் நிதி உத்தரவாதங்களை வழங்குமாறும், ரெனால்ட் மற்றும் ஸ்டெல்லண்டிஸ் (PSA) மீது அழுத்தம் கொடுக்குமாறும் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தொழிற்சங்கத் தலைவர்களும் அவர்களது பிரதிநிதிகளும் முதலாளியின் திட்டத்தின் "காளைகளை..." கண்டனம் செய்கின்றனர்.

தொழிற்சங்கங்கள் ஏப்ரல் 13 அன்று மக்ரோனின் நிதி மந்திரி புருனோ லு மேயரிடம் வாகன உற்பத்தியாளர்களுடன் வட்டமேசை பேச்சுவார்த்தையைக் கேட்டன. "இது உண்மையில் வார்ப்பாலைத் துறையிலும் குறிப்பாக எம்.பி.எஃப்.லும் இறைமையைப் பராமரிப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்து கேள்வியை எழுப்புகிறது" என்று அவர்கள் புகார் கூறினர்.

கடந்த ஆண்டு மே மாதம் ஜனாதிபதி எலிசே அரண்மனைக்கு நெருக்கமான ஒரு வட்டாரம், இந்தத் துறையில் அரசாங்கத்தின் முதலீடு "ஒரு தொழில்துறை பிரச்சினை, வேலைகள் மற்றும் தரமான வாகனங்களுக்கு மாற்றம் மற்றும் மாற்றத்தை நோக்கி துறையை மாற்றும் பிரச்சினை" மற்றும் "துறையின் போட்டித்தன்மையை பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று வலியுறுத்தியது. அப்பொழுது பிரதம மந்திரியாக இருந்த எட்வார்ட் பிலிப், பிரான்சில் சட்டமன்ற நடவடிக்கைகளை பராமரிப்பதற்கு ஈடாக வேலை இழப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று ஆலோசனை கூறினார்.

தொழிற்சங்க எந்திரத்தை நம்புவதன் மூலம், தொழிலாளர்கள் எம்.பி.எஃப். ஐ காப்பாற்றுமாறு அரசை நிர்ப்பந்திக்க முடியும் என்ற மாயையை உருவாக்குவதன் மூலம் தொழிலாளர்களின் கோபத்தை திசைதிருப்ப தொழிற்சங்கங்கள் முயற்சிக்கின்றன.

ஆயினும்கூட தொழிற்சங்கங்கள் பல ஆண்டுகளாக அரசாங்கத்திற்கும் முதலாளிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் வாகனத்துறையை மறுசீரமைப்பதற்காக உள்ளன. லு மேயரின் கருத்துக்கள் தெளிவுபடுத்துவது போல், அத்தகைய "மறுசீரமைப்பின்" முழு அடிப்படையும் துறையின் "போட்டித்தன்மையை" அதிகரிப்பது, அதாவது ஊதியங்கள் மற்றும் நிலைமைகளைக் குறைப்பது மற்றும் "போட்டியற்றது" என்று கருதப்படும் ஆலைகளை துடைத்தெறிவது ஆகும்.

இது ஐரோப்பிய மீட்புத் திட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் பொதுப் பணத்தால் நிதியளிக்கப்படுகிறது, இது CGT தலைமையிலான தொழிற்சங்கங்கள் பாராட்டியுள்ளன. மீட்புத் திட்டத்திற்கு பகிரங்கமாக நிதியளிக்கப்படுவதால், வார்ப்பாலை தொழிலாளர்களே அதற்கு பங்களிக்கிறார்கள். ஆயினும்கூட இந்த பிணையெடுப்பு வேலைகள் அழிக்கப்படுவதை மேற்பார்வையிடவும் பெருநிறுவன இலாபங்களை அதிகரிக்கவும் மட்டுமே உதவுகிறது. தொழிற்சங்கங்கள் எந்த பெரிய அளவிலான நடவடிக்கையையும் ஏற்பாடு செய்யவில்லை, முற்றிலும் அடையாள குணாம்சத்திலும் கூட.

தொழிற்சங்கங்கள் பிரெஞ்சு முதலாளித்துவத்தையும் அதன் மூலோபாய துறைகளையும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கும் வேலைகளுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் இன்னும் போட்டித்தன்மை மிக்கதாக ஆக்குவதற்கான "சமூக உரையாடல்" கட்டமைப்பில் பங்கேற்கின்றன. ஐரோப்பிய பிணையெடுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, CGT யும் தொழிற்சங்க எந்திரமும் பெருந்தொற்று நோய் முழுவதிலும் ரெனால்ட் மற்றும் PSA தொழிற்சாலைகளில் வேலை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று திணித்துள்ளன.

எம்.பி.எஃப். அலுமினியம் மூடப்படுவதற்கும், தொழிற்துறையிலுள்ள நெருக்கடிகளுக்கும் எதிரான போராட்டம் தொழிற்சங்க எந்திரத்தில் இருந்து சுயாதீனமான ஒரு சர்வதேச தொழிலாளர் இயக்கத்தை கட்டமைக்க வேண்டும் என்று கோருகிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஒரு பொதுவான அணிதிரட்டலுக்காக சாமானிய குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) அமைக்க அழைப்பு விடுத்துள்ளது. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக போராட, பொது நிதியில் டிரில்லியன் கணக்கான யூரோக்கள் உட்செலுத்தப்பட்டு வரும் முக்கிய சர்வதேச பெருநிறுவனங்கள், தனியார் கைகளிலிருந்து அகற்றப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பொதுப் பயன்பாட்டிற்காக மாற்றப்பட வேண்டியது அனைத்து நாடுகளிலும் இன்றியமையாததாகும். மூடப்படும் அச்சுறுத்தலுக்கு உள்ளான தொழிற்சாலைகள், எம்.பி.எஃப் வார்ப்பாலை உட்பட பராமரிக்கப்பட வேண்டும். ஏற்கனவே மூடப்பட்ட தொழிற்சாலைகள், தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ், சர்வதேச பொதுப் பயன்பாட்டிற்காக செயற்பட மீண்டும் திறக்கப்பட வேண்டும்.

முதலாளித்துவ அரசானது தொழிலாள வர்க்கத்திற்கு உறுதியான விரோதப் போக்கைக் கொண்டுள்ள நிலையில், இந்த முன்னோக்கை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச அளவில் தொழிலாள வர்க்க அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டம் தேவைப்படுகிறது.

Loading