இலங்கை அரசாங்கத்தின் கொடூரமான அத்தியாவசிய சேவை உத்தரவுகளை எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஆதரிக்கின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ, மே 27 அன்று, பல அரசாங்கத் துறைகளை 'அத்தியாவசிய சேவைகள்' என பெயரிட்டு அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் தடை செய்யும் ஒரு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார். துறைமுகங்கள், சுங்கம், பெட்ரோலியம், ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து சேவைகள், நிர்வாக மற்றும் நலன்புரி அலுவலகங்கள், மத்திய வங்கி உட்பட அரச வங்கிகள் மற்றும் காப்ப்புறுதி சேவைகள், உள்ளூராட்சி மன்றங்களால் பராமரிக்கும் கழிவு முகாமைத்துவம் ஆகியவை இந்த உத்தரவுக்கு உட்பட்டவை.

துறைமுக தனியார்மயமாக்கலுக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

தொழிலாளர் போராட்டங்களை அடக்குவதில் பேர் போன இந்த அத்தியாவசிய சேவை உத்தரவுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்களில், கடமைக்கு வருகைதராத எந்தவொரு ஊழியருக்கும் எதிராக அபராதம் விதிக்கவும் நீண்ட சிறைவாசம் விதிக்கவும் முடியும், மேலும் அவர்களை வேலை நீக்கம் செய்யவும் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் முடியும். இவற்றுக்கும் மேலாக, இந்த நிறுவனங்களில் வேலை நிறுத்தங்கள் உட்பட வர்க்க நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பது அல்லது தொழிலாளர்கள் மத்தியில் அதுபற்றி கலந்துரையாடுவது கூட குற்றமாக கருதப்படுகிறது. அதன்படி, அந்தத் துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க போராடும் எவருக்கும் தண்டனை வழங்கப்படலாம்.

'தொற்றுநோய்க்கு மத்தியில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்யவே' இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் அவிழத்துவிட்டுள்ள போலிக் கதைக்கு மாறாக, அதன் உண்மையான நோக்கம், கொவிட்-19 நோய்த்தொற்றுகள் நாடுபூராவும் அதிகரிக்கும் போது, வாழ்க்கை நிலைமைகள் சீரழிந்து வருகின்றமை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான உக்கிரமாக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராக, மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் கோபம் மற்றும் அமைதியின்மையை அடக்குவதே ஆகும். நாடு முழுவதும் வேகமாக. அடக்குமுறை. கொவிட்-19 தடுப்பூசியை உடனடியாக வழங்கக் கோரி மே 25 நள்ளிரவு முதல் 12,000 கிராம சேவை உத்தியோகத்தர்கள் முன்னெடுத்த தீவு முழுவதுமான வேலைநிறுத்தமே இந்த உத்தரவைப் பிறப்பிப்பதற்கான உடனடி நிமித்தமாக கூறப்பட்டது.

எவ்வாறாயினும், இந்த நச்சுத்தனமான ஜனநாயக விரோத நடவடிக்கையை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) மட்டுமே ஒரு தொழிலாள வர்க்க நிலைப்பாட்டில் இருந்து வெளிப்படையாக எதிர்த்தது.

கடந்த ஆண்டு துறைமுகத் தொழிலாளர்களுக்கு எதிராக அத்தியாவசிய சேவை ஆணை திணிக்கப்பட்டதைப் போலவே, இந்த முறையும், எதிர்க் கட்சிகள், தொழிற்சங்கங்கங்கள், “இடது” அரசியல் அமைப்புகள் எதுவும் அதற்கு எதிராக எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. இந்த உத்தரவு சம்பந்தமாக அவர்கள் அனைவரும் கடைப்பிடிக்கும் முழு மௌனம், அரசாங்கத்தின் அடக்குமுறை கொள்கைகளுக்கு வழங்கப்படும் வெளிப்படையான ஒப்புதலாகும்.

முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் அரசியல் நலன்களுக்காக, மிகவும் நனவுடன் செயல்படும் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் மே 30 அன்று வெளியான அரசியல் பத்தியில், அத்தியாவசிய சேவை ஒழுங்கிற்கு எதிர்க்கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் மேற்கண்ட பிரதிபலிப்புக்கான அடித்தளத்தை பின்வருமாறு அமைத்தது: “உண்மையில், இந்த துறைகளில் ஏதேனும் ஒரு நடவடிக்கையை நாசப்படுத்த தொழிற்சங்கங்கள் திட்டமிட்டிருந்தால், அவர்களுக்கு எதிராக கட்சியின் அரசியல் ஆதரவு இருக்காது என்பது தெளிவாகிறது. இத்தகைய சூழ்நிலையில், இவற்றில் ஏதேனும் ஒரு பகுதியில் சில தொழிற்சங்கங்கள் எவ்வாறு வெற்றிகரமாக முடியும்?”

அத்தியாவசிய சேவை ஆணைக்கு எதிர்க் கட்சிகளின் முழு ஆதரவும் கிடைக்கின்றது என்பது சண்டே டைம்ஸின் அரசியல் நிருபருக்கு உறுதியாக தெரிகின்றது. தொழிலாளர்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு அதிகரித்து வரும் வெகுஜன எதிர்ப்பை திசைதிருப்பவும் கலைக்கவும் அவ்வப்போது தொழிற்சங்கங்கள் அழைக்கும் எதிர்ப்பு பிரச்சாரங்கள் எனப்படுபவை கூட தொழிற்சங்க எல்லைகளுக்கு அப்பால் வளரும் என்ற ஆளும் வர்க்கத்தின் கவலையையே அவரது கட்டுரை வெளிப்படுத்துகிறது.

அரசியல் பத்தி எழுத்தாளர் 'உளவு அமைப்புகள், சில தொழிற்சங்கங்களின் குழப்பம் ஏற்படுத்தும் திட்டங்களை அரசாங்கத்திற்கு எச்சரித்துள்ளன' என்றும் கூறுகிறார். வேலை நிறுத்தம் உட்பட வர்க்க நடவடிக்கைகளுக்கு குழி பறிக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் இரும்புப் பிடியில் இருந்து விடுபட்டு, சுயாதீனமாக போராட்டங்களில் குதிக்க இருக்கும் கீழ் மட்ட உறுப்பினர்கள் சம்பந்தமாகவே, 'தொழிற்சங்கங்களின் சில உறுப்பினர்கள்' என்று குறிப்பிடுவதன் மூலம் அவர் ஆளும் வர்க்கத்தின் அவதானத்திற்குத் திருப்புகின்றார்.

அரசாங்கத்தின் அத்தியாவசிய உத்தரவுக்கு ஒப்புதல் அளித்து, தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளன. 'தொழிலாளர்களே, போராட்டத்திற்குள் நுழையும் உங்களுக்கு எதிரான இந்த (கொடூரமான) அத்தியாவசிய சேவை விதிகளின் கீழ் தொடுக்கப்படும் தாக்குதல்களில் நாங்கள் உங்களுடன் இருக்கவில்லை, தாக்குபவர்களுடனேயே இருக்கிறோம்,' என்பதே அந்த செய்தியாகும்.

தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக எழும் போராட்டங்களுக்கு தலைமைத்துவம் கொடுக்கும் தொழிலாளர்களைத் தண்டிப்பதற்காக, இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் முதலாளிகளுடனும் அரசுடனும் கூட்டுச் சேர்ந்திருப்பது சம்பந்தமாக, ஹட்டனில் உள்ள ஓல்டன் தோட்டத்தின் சம்பவங்கள் ஒரு சக்திவாய்ந்த உதாரணத்தை வழங்குகின்றன. சமீபத்தில் நடந்த சம்பள உயர்வு வேலை நிறுத்த போராட்டத்தின் போது அங்கு தோட்ட முகாமையாளர் மீது தாக்குதல் நடத்தியதாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி, அந்த தோட்டத்தின் 38 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய கம்பனி எடுத்துள்ள அடக்குமுறை நடவடிக்கைகளில் தோட்டத் துறையின் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தொழிலாளர்களின் பெயர்களை பொலிசுக்கு வழங்கி அந்த வேட்டையாடலுக்கு வெளிப்படையாக உதவியது. தொழிலாளர்கள் மீது வழக்குகள் பதிவு, இ.தொ.கா. தலைவர்களே அவர்களை கூட்டமாக கூட்டிச் சென்று பொலிசில் ஒப்படைத்தனர்.

முதலாளிகளின் இலாபத்தைப் பாதுகாப்பதற்காக ஆடைத் தொழிற்சாலை போன்ற அத்தியாவசியமற்ற உற்பத்திகளைக் கூட பராமரிப்பதன் மூலம் இராஜபக்ஷ அரசாங்கம் தொழிலாளர்களை தொற்றுநோய்க்கு காவு கொடுக்கும் போது, சுதந்திர வர்த்தக வலய பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் அன்டனி மார்கஸ், அண்மையில், கொவிட் மருத்துவமனைகளை சுதந்திர வர்த்தக வலயத்துக்குள்ளேயே உருவாக்கி, தொழிலாளர்களை முதலாளிகளின் சிறைக்குள்ளேயே வைத்து வேலை வாங்கும் திட்டத்தை வகுக்குமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிந்தார். மார்கஸின் தொழிற்சங்கம் உட்பட ஏனைய தொழிற்சங்கங்கள், அரசாங்கத்துடனும் முதலாளிகளுடனும் கூட்டாக சேர்ந்து ஸ்தாபித்த “முத்தரப்பு செயலணி” மூலம், தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் ஊதியங்களைக் குறைப்பதன் மூலம், வேலையை விரைவுபடுத்துவதற்கு வெளிப்படையாக பங்களிப்பு செய்தன.

தொழிலாளர்களுக்கு முழு சுகாதாரப் பாதுகாப்பு வழங்கி, அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி முன்னெடுக்கப்படும் அதே வேளை, ஆடைகள் உட்பட அத்தியாவசியமற்ற பொருட்களை உற்பத்தி செய்வதை நிறுத்தி, அவற்றின் தொழிலாளர்களுக்கு முழு ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்குதல், வருமானம் இழக்கும் ஏனைய மக்களுக்கு முழு நட்ட ஈடும் வழங்க வேண்டும் என கோரி போராடிய ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே.

முதலாளித்துவ முறைமையோடு நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சங்கங்கள், மனித வாழ்க்கையை விட இலாபத்தை முன்நிறுத்தும் முதலாளித்துவ கொள்கைகளாலேயே இயக்கப்படுகின்றன. இந்தக் கொள்கையை, இ.தொ.கா. தலைவரும் அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தோண்டமான் அப்பட்டமாக வெளிப்படுத்தினார். அண்மையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், அவர் தோட்டத் தொழிலாளர்களிடம் 'தொற்றுநோய்க்கு அஞ்சாமல் இரண்டு கைகளால் கொழுந்து எடுப்பதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க' கூறினார். “எங்கள் பலவீனம் கொவிட்19 வைரசுக்கு பயப்படுவதுதான். பயத்தை நீக்குவதன் மூலம் நாம் வைரஸைக் கட்டுப்படுத்த முடியும்,” என்றும் “உற்பத்தியை அதிகரிக்காமல் தொழிலாளர்களின் ஊதியத்தை' அதிகரிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

தொழிற்சங்கங்களின் ஆதரவோடு, ஆடை மற்றும் தேயிலை உள்ளிட்ட ஏற்றுமதி துறையில் உள்ள தொழிலாளர்களை காவு கொடுத்து, முதலாளித்துவ இலாபம் எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதை மத்திய வங்கி அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. அந்த அறிக்கைகளின்படி, 2020 ஏப்ரல் முதல் இதுவரை இலங்கையின் ஏற்றுமதி நூற்றுக்கு 183 சதவீகிதம் அதிகரித்துள்ளது. அதே போல், ஐந்து ஆண்டுகளின் பின்னர் இந்த ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கையின் தேயிலை கொழுந்து அறுவடை மிக அதிகமாக பதிவாகியுள்ளது.

தொழிற்சங்கங்களின் தடை மற்றும் காட்டிக் கொடுப்புகள் இருந்தபோதிலும், சமீபத்திய மாதங்களில் அஞ்சல், ரயில், பெருந்தோட்டம், கல்வி, சுகாதாரம் மற்றும் மின்சாரத் தொழிலாளர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. வேலைத் தளங்களில் கொவிட்-19 நோய்த்தொற்றுகள் அதிகரிப்பது, சுகாதார பராமரிப்பு உட்பட முன்நிலை தொழில்களில் இருப்பவர்களுக்கு முறையான சுகாதார உபகரணங்கள் மற்றும் தடுப்பூசிகளை வழங்கத் தவறியமை, உணவுப் பொருட்களின் விலை கூர்மையாக உயர்ந்தமை மற்றும் போதுமானளவு சமூக நிவாரணங்கள் வழங்கப்படாமை உட்பட, மோசமாக சீரழிந்து வரும் தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் புதிய அலைகளை சுட்டிக் காட்டும் வகையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கனிஷ்ட தொழிலாளர்கள் அடிப்படை வசதிகளை கோரி போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கொழும்பு தேசிய மருத்துவமனையின் கணிஷ்ட சுகாதார ஊழியர்கள் தொர்ச்சியான சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதே நேரத்தில், திங்களன்று களுபோவில், கேகல்ல, தெல்தெனிய, நுவரெலியா மற்றும் மட்டக்களப்பு போன்ற பல பகுதிகளில் உள்ள கனிஷ்ட சுகாதார ஊழியர்கள் போராட்டங்களை ஏற்பாடு செய்து அதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

சரியான சுகாதார மற்றும் போக்குவரத்து வசதிகளைக் கோரி செவிலியர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவமனை ஊழியர்களின் பங்களிப்புடன், ஜூன் 3 அன்று, கொழும்பு தேசிய மருத்துவமனை உட்பட நாட்டின் பிரதான மருத்துவமனைகளில் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஐந்து மணி நேர வேலைநிறுத்தம் நடத்தினர்.

இந்த போராட்டங்கள் ஏனைய பொது மற்றும் தனியார் துறைகளுக்கும் பரவி, முதலாளித்துவ அரசாங்கத்திற்கு மட்டுமன்றி, முழு முதலாளித்துவ முறைமைக்கும் சவால் விடக்கூடும் என்ற கவலைகள் ஆளும் வர்க்கத்திற்குள் வளர்ந்துள்ளன. அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் இந்த சவாலை கூட்டாக எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மே மாத தொடக்கத்தில், 'நாட்டை தொற்றுநோயில் இருந்து காப்பாற்றுவதற்காக அரசாங்கத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் ஈடுபடத் தயாராக உள்ளேன்' என்று அறிவித்ததோடு, மற்ற கட்சிகளையும் தங்கள் வேறுபாடுகளை மறந்து சேருமாறு அழைப்பு விடுத்தார்.

அதே போன்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), மே 11 கூட்டிய செய்தியாளர் சந்திப்பில், அதன் தலைவர் அனுர குமார திசானநாயக்க பின்வருமாறு கூறினார்: “நாங்கள் ஆரம்பத்திலேயே எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் ஒரு பொறிமுறையை உருவாக்க அழைப்பு விடுத்தோம். எதிர்க்கட்சிகளை இணைத்துக்கொள்ள விருப்பம் இல்லையென்றால், அரசாங்கத்துக்கு உள்ளேயோ அல்லது கூட்டுத் தலைமைக்கோ இதை கீழ்ப்படுத்த வேண்டும்.”

தொற்றுநோய் சம்பந்தமாக அரசாங்கத்தின் குற்றவியல் பிரதிபலிப்புக்கு எதிராக மக்களின் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ கடந்த ஆண்டு கூட்டிய “அனைத்து கட்சி” பேச்சுவார்த்தையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உள்ளிட்ட குழுக்கள் பங்கேற்றன. இந்த வெகுஜன எதிர்ப்புக்கு கூட்டாக முகங்கொடுப்பதற்காக உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கிலேயே அவை அவ்வாறு ஒன்றுகூடின.

அரசாங்க அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் கெஹெலியே ரம்புக்வெல்ல, 'அத்தியாவசிய சேவைகளின் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்வதற்காக' இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்களைத் தடுக்க பொலிஸ் மற்றும் இராணுவத்தை வேலைத் தளங்களில் நிறுத்துவதற்கு அரசாங்கம் அதே தர்க்கத்தைப் பயன்படுத்தும்.

ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸ் ஏற்கனவே தெரு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், ஜனாதிபதி இராஜபக்ஷ, நாட்டின் 25 மாவட்டங்களில் “சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்கும்” பெயரில் ஆயுதப் படைகளை அணிதிரட்டுவதற்கான வர்த்தமானி அறிவிப்பை மீண்டும் பலப்படுத்தியுள்ளார். அத்தியாவசிய சேவை ஆணை உட்பட இவை அனைத்தும், தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை கொடூரமாக நசுக்குவதை நோக்கமாகக் கொண்ட, இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கி ஜனாதிபதி இராஜபக்ஷ மேற்கொள்ளும் பயணத்தின் படிக்கற்களாகும்.

தங்கள் மீதான அரசாங்கத்தின் தாக்குதலின் அபாயங்களை தொழிலாள வர்க்கம் பாரதூரமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இராஜபக்ஷ அரசாங்கம், முதலாளித்துவ “எதிர்க்கட்சி”, தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது கட்சிகளின் உதவியுடன், முழு அளவிலான வர்க்கப் போருக்கு தயாராகி வருகிறது. தொழிற்சங்கங்களிலிருந்து விலகி, ஒவ்வொரு வேலைத் தளத்திலும் அமைத்துக்கொள்ளும் நடவடிக்கை குழுக்கள் மூலம் தங்கள் தொழிற்துறை மற்றும் அரசியல் பலத்தை அணிதிரட்டிக்கொள்வதன் மூலம் மட்டுமே, தொழிலாளர்களால் தங்கள் உயிர்களையும், ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளையும் பாதுகாக்க முடியும்.

Loading