அமெரிக்க தொழிலாள வர்க்கம் அசான்ஜைப் பாதுகாக்க வர வேண்டும்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூலியன் அசான்ஜின் தந்தையும் சகோதரரும், ஜோன் மற்றும் கேப்ரியல் ஷிப்டன், விக்கிலீக்ஸ் நிறுவனரின் விடுதலைக்கு அழைப்பு விடுக்க அமெரிக்காவில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் பயணத்தை வாஷிங்டன் டி.சி. இல் நிறைவு செய்வதற்கு முன்னதாக, மியாமி, போஸ்டன், பிலடெல்பியா, மில்வாக்கி, சான் பிரான்சிஸ்கோ மற்றும் டென்வர் உள்ளிட்ட பல அமெரிக்க நகரங்களுக்கு விஜயம் செய்கிறார்கள்.

அசான்ஜ் பல விருதுகள் பெற்ற பத்திரிகையாளர். தைரியமாக இரகசியத்தை வெளிப்படுத்திய செல்சியா மானிங் உடன் சேர்ந்து ஈராக் மற்றும் ஆப்கான் போர் ஆவணங்களையும் மற்றும் 2010 இல் அமெரிக்க இராஜாங்க உள்அலுவலக ஆவணங்கள் மற்றும் 2011 இல் குவாண்டனமோ கோப்புகளையும் விக்கிலீக்ஸ் மூலம் வெளியிட்ட அவர் பணி மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்த வெளியீடுகள் உலகெங்கிலும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் நடத்திய போர்க்குற்றங்கள், சித்திரவதை, ஆட்சிக்கவிழ்ப்பு சதிகள் மற்றும் ஊழலை அம்பலப்படுத்தின.

இந்த காரணத்திற்காக, அசான்ஜ் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஏகாதிபத்திய சக்திகளால் இடைவிடாமல் வக்கிரமான துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இப்போது அவர் இலண்டனின் அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து போராடி வரும் அவர், அங்கே உளவுபார்ப்பு சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்காக அனேகமாக 175 ஆண்டு கால தண்டனையை எதிர்கொள்கிறார்.

Gabriel Shipton addressing a 2019 event in London in support of Julian Assange (credit: WSWS media)

ஜனவரி 4 இல், இங்கிலாந்து நீதிபதி வனேசா பாரிட்சர், அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது அவரின் தார்மீக மனநல நல்லொழுக்கத்தின்படி பார்த்தால் "ஒடுக்குமுறையாக" இருக்கும், அமெரிக்க சிறை அமைப்புமுறையில் அவர் தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் உள்ளது என்ற அடித்தளங்களில் அதற்கு தடை விதித்தார், என்றாலும் அவரை அதனிடம் ஒப்படைப்பதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் அப்பட்டமான ஜனநாயக விரோத வழக்கின் ஒவ்வொரு அம்சத்தையும் பாரிட்சர் தாங்கிப் பிடித்தார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் இறுதிமுடிவு இன்னமும் தெளிவாக இல்லை என்கின்ற நிலையில், ஆகவே அந்த தீர்ப்பு அசான்ஜின் வழக்கை நிலுவையில் வைப்பதாக இருந்தது. அதன் பின்னரும் அசான்ஜிற்குப் பிணை மறுக்கப்பட்டு, பெல்மார்ஷில் அடைக்கப்பட்டுள்ளார், அதேவேளையில் அமெரிக்கா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தயாரிப்பு செய்து வருகிறது.

அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பது மனிதாபிமானமற்றது. அசான்ஜ் முகங்கொடுக்கும் ஒரேயொரு குற்றச்சாட்டையும் பிரிட்டிஷ் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டு, ஆனால் அதே நீதிமன்றம் அவரை சிறையில் வைத்திருக்க உத்தரவிட்டது. அவர் ஒரு நாளைக்கு 22 மணி நேரம் பத்து சதுர யார்ட் அளவிலான சிறையில் வைக்கப்பட்டு, குளிக்கவும், உடற்பயிற்சி செய்யவும், உணவு பெறவும் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளைப் பெறவும் மட்டுமே அந்த அறையிலிருந்து வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அசான்ஜின் துணைவி ஸ்டெல்லா மோரிஸ் சமீபத்தில் விவரிக்கையில், "பெல்மார்ஷிற்குள் தூக்கிலிடாத குறைதான்… இது முடிவில்லா தண்டனையாக தெரிகிறது. விரக்தியிலிருக்கும் சில நேரங்களில் அவர் தன்னை ஒரு சுமையாக நினைக்கிறார், ஆகவே தற்கொலை குறித்த பயம் நிஜமானதாக இருக்கிறது,” என்றார்.

மோரிஸ் தொடர்ந்து கூறினார், "அவருக்கு மனித தொடர்புகளும், உளவியல்ரீதியான ஊக்கப்படுத்தலும் தேவைப்படுகிறது. நான் அவரை பயங்கரமான நிலையில் பார்த்திருக்கிறேன், அவரால் ஒரு வாக்கியத்தை கூட தொடர்ச்சியாக பேச முடியவில்லை.

“உள்ளே வாழ்க்கையைக் கடத்துவது மிகவும் சிரமம். அந்த சிறைச்சாலை அதற்கென பிரத்யேக குற்றவியல் நீதி முறையைக் கொண்டுள்ளது, அவருக்கு ஸ்பூன் கிடைக்காத போது அதை கேட்பது போன்ற சிறிய விஷயங்களுக்காக கூட [அவரது பாதுகாவலர்களிடம்] பிரச்சினையைச் சந்திக்கிறார்.”

ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய பயணங்களைத் தொடர்ந்து ஷிப்டன் அமெரிக்காவுக்கு வந்திருப்பது, மேல்முறையீடு தீர்ப்பு அசான்ஜிற்கு எதிராக வந்தால், அமெரிக்காவை அவரது விடுதலை பிரச்சாரத்தின் முக்கிய தாக்குமுகப்பாக வைத்து போராட வேண்டியிருக்கும் என்பதை அங்கீகரிப்பதாக உள்ளது.

அத்தகைய ஒரு கேவலமான தீர்ப்பை ஒதுக்கி வைத்து விட முடியாது. வரவிருந்த பைடென் நிர்வாகத்தின் முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக, ட்ரம்ப் முடுக்கிவிட்ட அசான்ஜைப் பின்தொடரும் நடவடிக்கையைத் தொடர அது தீர்மானகரமாக இருப்பதைச் சமிக்ஞை காட்டியது. ஆகவே பிரிட்டிஷ் அரசு, ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி இன்னும் நடைமுறையில் இருந்தபோது இருந்ததை விட, விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை அமெரிக்காவுக்கு கப்பலேற்றுவதை மிகவும் சுலபமாக உணரும்.

அசான்ஜின் பாதுகாப்புக்காக இந்த அமெரிக்க பயணத்தைத் தூண்டியுள்ள இந்த நாடுகடத்தும் அச்சுறுத்தல், அவரது பாதுகாப்பு பிரச்சாரம் மீதுள்ள எல்லா கேள்விகளிலும் முக்கியமான கேள்வியை முன்னுக்குக் கொண்டு வருகிறது: அதாவது, எந்த சமூக சக்தியால் அவரை விடுவிக்க முடியும்?

ஷிப்டன்களின் இந்த அமெரிக்க பயணம், அசான்ஜ் வழக்கின் மிகவும் அரசியல்ரீதியில் தாக்கம் கொண்டுள்ள அம்சத்தை உயர்த்திக் காட்டுகிறது— அதாவது திட்டமிட்ட வகையில் அவர் மீது அவதூறு சுமத்தப்படுகிறது, ஊடகங்கள் மற்றும் போலி-இடது குழுக்களால் அவர் கண்டு கொள்ளாமல் விடப்படுகிறார்.

இது அமெரிக்காவை விட வேறெங்கும் இந்தளவுக்கு உண்மையாக இருக்காது. ஒரு தசாப்தத்தின் சிறந்த பகுதியாக, முக்கிய செய்தி நிறுவனங்கள் விக்கிலீக்ஸ் நிறுவனரை ஒரு கணினி ஊடுருவல்காரர் என்றும், பயங்கரவாதி, பாலியல் வேட்டையாடுபவர், அல்லது ரஷ்ய முகவர் என்றும் அவதூறு செய்ய ஒன்று திரண்டன. நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் பிற வெளியீடுகள் கடைசி நிமிடத்தில் ஜனநாயக உரிமைகளுக்கான அவரது வழக்கின் பயமுறுத்தும் தாக்கங்களை அங்கீகரித்திருப்பது அடிப்படையில் நிலைமையை மாற்றவில்லை. ஜனாதிபதி பைடெனுக்கு விடுக்கும் தாழ்மையான முறையீடுகளாக கட்டமைக்கப்பட்டுள்ள இத்தகைய எதிர்ப்புகள், அவரது அரசாங்கத்தை சங்கடப்படுத்த வாய்ப்பில்லை.

அமெரிக்க செய்தி ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக தேசிய பாதுகாப்பு அரசின் தொங்குதசையாக சீரழிந்திருப்பதை, இந்த ஞாயிற்றுக்கிழமை —நியூ யோர்க் டைம்ஸ் முதன்முதலில் பென்டகன் ஆவணங்களை வெளியிட்டதிலிருந்து 50 ஆம் நினைவுதினம்— வெளிச்சமிட்டுக் காட்டும். அப்போது அந்த பத்திரிகை, வியட்நாம் மீதான அமெரிக்க படையெடுப்பின் நாசகரமான நிலையை விவரித்து இரகசிய ஆவண வெளியீட்டாளர் டானியல் எல்ஸ்பேர்க் (Daniel Ellsberg) கசியவிட்ட ஆவணங்களைப் பிரசுரிக்கவும் மற்றும் நீதிமன்றத்தில் அரசு அலைக்கழிப்புகளுக்கு எதிராக தன்னைப் பாதுகாக்கவும் அது தயாராக இருந்தது.

Socialist Alternative போன்ற போலி-இடது அமைப்புக்கள், சுவீடன் அரசு இட்டுக்கட்டிய பாலியல் தாக்குதல் வாதங்களுக்கு மதிப்பளித்தும், அல்லது ஜாகோபின் மற்றும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் போன்று வாயை மூடிக் கொண்டிருந்ததன் மூலமும் அசான்ஜ் மீதான வேட்டையாடலில் இணைந்தன. பைடென் பதவியேற்பதற்கு முன்னர் பிரசுரித்த இரண்டு கருத்துரைகள், மற்றும் அசான்ஜிற்கு ஒரு நியாயமான விசாரணை கிடைக்காது என்று முன்னாள் சிஐஏ இரகசிய ஆவண வெளியீட்டாளர் ஜெஃப்ரி ஸ்டேர்லிங்கை (Jeffrey Sterling) மேற்கோளிட்டு ஏப்ரலில் ஒரு நேர்காணல் ஆகியவற்றுடன் மட்டுந்தான் சமீபத்தில் ஜாகோபின் அதன் கடும் மவுனத்தை முறித்துக் கொண்டது. பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு முன்வைக்கப்படும் அச்சுறுத்தல் மீது காலத்தாமதமாக முன்வைக்கப்பட்ட எச்சரிக்கைகள், அசான்ஜின் பாதுகாப்பில் எவரையும் அணிதிரட்ட அரசியல்ரீதியாக குற்றகரமாக மறுப்பதை மட்டுமே அடிக்கோடிடுகின்றன.

அரசியல் கட்டாயத்திற்காக ஜனநாயகக் கட்சியினரை ஆதரிப்பதாக வடிவமைக்கப்பட்ட இத்தகைய மழுப்பலான தோரணைகள் என்னவாக இருந்தாலும் அவற்றின் மீது எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது. அமெரிக்க ஆளும் வர்க்கம், அசான்ஜை அழிக்கப்படுவதை அதன் ஏகாதிபத்திய போர் வெறிக்கு எதிரான பாரிய எதிர்ப்பு மீதான ஒரு முன்கூட்டிய தாக்குதலாக பார்க்க உறுதியாக உள்ளது.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஓர் இயக்கம் மட்டுந்தான் அசான்ஜை விடுவிக்கக்கூடிய ஒரே சக்தியாகும், அதன் அமெரிக்க படை ஒரு முன்னணி பாத்திரம் வகிக்க வேண்டும்.

நேற்று, போஸ்டன் சமூக தேவாலயத்தின் சமூக நீதிக்கான 2021 Sacco-Vanzetti நினைவு விருதை அசான்ஜ் சார்பாக பெறுவதற்காக ஜோன் மற்றும் கேப்ரியல் ஷிப்டனும் போஸ்டனில் இருந்தனர். இந்த விருது அவருக்கு முற்றிலும் பொருத்தமானது.

இத்தாலியைச் சேர்ந்த அரசு-ஒழிப்பு கோட்பாட்டாளர்களான Nicola Sacco மற்றும் Bartolomeo Vanzetti உம், செந்நிற பயம் (red scare) காலத்தின் உச்சத்தில், அப்போது ஆயிரக் கணக்கான இடதுசாரி பிரமுகர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 1920 களில் படுகொலை குற்றம் ஜோடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். சோசலிஸ்டுகளைச் சிறையில் அடைக்கவும் தணிக்கை செய்யவும் தேசதுரோக சட்டத்தைப் பயன்படுத்தியதும் அதில் உள்ளடங்கும், உண்மையில் முதல் உலகப் போரின் ஏகாதிபத்திய மனிதப்படுகொலைகளை அவர்கள் எதிர்த்ததற்காகவே அவை நடத்தப்பட்டன.

Sacco மற்றும் Vanzetti ஐ விடுவிக்க ஒரு பாரிய உலகளாவிய பிரச்சாரம் தொடங்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அந்த பிரச்சாரத்தை ஒழுங்கமைத்தவர்கள் தொழிலாள வர்க்கத்தின் திருப்பி தாக்கும் நடவடிக்கையை ஒழுங்கமைப்பதற்கான முயற்சிகளை, "முற்போக்கான" அரசியல்வாதிகள், அரசு மற்றும் நீதித்துறை கூறுபாடுகளுக்கு மரியாதையான முறையீடுகளைச் செய்ய ஆதரவாக, ஓரங்கட்டினர். விரைவிலேயே அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை ஸ்தாபிப்பதில் ஒரு முன்னணி பாத்திரம் வகித்த மாக்ஸ் சாக்ட்மனின் வார்த்தைகளில் கூறுவதானால், “அது அந்த வழக்கின் ஆழ்ந்த வர்க்க இயல்பைப் புரிந்து கொள்ள தவறியது அல்லது மறுத்ததால், பிரதிவாதி வழக்குரைஞரின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்தார்; அது தொழிலாளர்கள் இயக்கத்தை வழக்கறிஞர்களின் தீர்மானங்களுக்கு விட்டுக்கொடுத்தது; அது Sacco மற்றும் Vanzetti இன் வர்க்க பிறப்புரிமையை அலங்கோலமான தாராளவாத மசியலுக்கு விற்றுத் தள்ளியது.”

உலக சோசலிச வலைத் தளம், சாத்தியமான ஒரே வழிவகையான வர்க்கப் போராட்டத்தின் மூலம், Sacco மற்றும் Vanzetti இன் விடுதலைக்காக போராடியவர்களின் பாரம்பரியத்தில் நிற்கிறது. அப்போது போலவே இப்போதும், அசான்ஜின் தலைவிதி அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச அளவில் அவர்களின் வர்க்க சகோதர மற்றும் சகோதரிகள் கரங்களிலும் தங்கியுள்ளது.

பைடென் நிர்வாகமும் அமெரிக்க ஊடகங்களும் சீனாவுடனான இராணுவ மோதல்களுக்குத் தயாரிப்பு செய்வதில் வூஹான் ஆய்வக பொய் விஷத்தை உமிழ்ந்து வரும் நிலைமைகளின் கீழ், இதில் கோவிட்-19 வெடிப்புகள் மீதான செய்திகள் ஒடுக்கப்பட்டுள்ளதுடன், வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களை பத்திரிகைகள் இருட்டடிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில், பொய்கள் மற்றும் போருக்கு எதிராக உண்மை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமானது பெருந்திரளான தொழிலாள வர்க்கத்தைப் பற்றிக் கொள்ளும். அசான்ஜை விடுவிப்பதற்கான பிரச்சாரம் இந்தப் போராட்டத்தின் தாக்குமுகப்பாகும்.

Loading