அதிவலது தேசிய பேரணி லு பென்னை 2022 பிரெஞ்சு ஜனாதிபதி வேட்பாளராக பிரேரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வார இறுதியில், பிரான்சின் நவ-பாசிச தேசிய பேரணியானது (RN) பெர்ப்பினியோனில் அதன் மாநாட்டிற்காக கூடியது, அது மரின் லு பென்னை RN இன் ஜனாதிபதி வேட்பாளராகவும் கட்சியின் தலைவராகவும் அங்கீகரித்தது. இரு பதவிகளுக்கும் நிற்கும் ஒரே நபரான லு பென் 98.35 சதவீத வாக்குகளை வென்றார்.

அதிவலது தலைவர் மரின் லு பென் தெற்கு பிரான்சின் துலோனில் ஜூன் 17, 2021 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் (AP Photo/Daniel Cole)

லு பென்னின் எதிர்ப்பற்ற மகத்தான வெற்றி இருந்தபோதிலும், ஜூன் பிராந்திய தேர்தல்களில் எதிர்பாராத பின்னடைவுக்குப் பின்னர், அவர் அழுத்தத்தின் கீழ் RN மாநாட்டிற்கு வந்தார். பிரான்சின் 12 பிராந்தியங்களில் ஆறு பிராந்தியங்களை RN வெற்றிபெறும் என்பதாக கருத்துக் கணிப்புக்கள் காட்டின, ஆனால் அதன் வேட்பாளர்கள் ஒரு பிராந்தியத்தைக் கூட வெல்லத் தவறிவிட்டனர்.

ஐரோப்பாவில் கோவிட்-19 இனால் 1.1 மில்லியனுக்கும் அதிகமான இறப்புக்களுக்கு வழிவகுத்த கோவிட்-19 பெருந்தொற்று நோய்க்கு எதிராக ஒரு விஞ்ஞானரீதியான நடவடிக்கை எடுக்க ஐரோப்பிய அரசாங்கங்கள் பிடிவாதமாக மறுத்ததால் பெரும் ஏமாற்றம் மற்றும் கோபத்திற்கு மத்தியில், வாக்காளர்கள் தேர்தலை பெருமளவில் புறக்கணித்தனர். வாக்களிக்காமையானது 65 சதவீத சாதனை மட்டத்தை எட்டியது. பெரும்பாலும் ஓய்வு பெற்றவர்களால் உந்தப்பட்ட வாக்களிப்புடன், தற்போதைய 12 பிராந்திய தலைவர்களாக ஏழு பழமைவாதிகள் மற்றும் ஐந்து சமூக ஜனநாயகவாதிகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்தல் இரவில், பத்திரிகையாளர்கள் பிரெஞ்சு ஜனநாயகத்தின் நெருக்கடி குறித்து பேசியபோது, லு பென், வெளிப்படையாக விரக்தியடைந்து, தனது வாக்காளர்களை குற்றம் சாட்டினார். அவர் கூறினார்: 'கருத்துக் கணிப்புக்களால் அளவிடப்பட்ட வாக்களிப்பு நோக்கங்களுக்கு இடையிலான இடைவெளி மற்றும் உண்மையான வாக்கெடுப்பு ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளி, இதை நான் மிகவும் தீவிரமாகவும் மனப்பூர்வமாகவும் கூறுகிறேன், ஒரே ஒரு விளக்கம் மட்டுமே உள்ளது: எங்கள் வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லவில்லை. அதனால்தான் நான் அவர்களை விழித்தெழுமாறு அழைக்கிறேன். நமது நாட்டை பேரழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்லும் இந்த அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் எதிர்வினையாற்ற வேண்டிய கடமையைக் கொண்டுள்ளனர். நீங்கள் விஷயங்களை மாற்ற விரும்பினால், நீங்கள் வாக்களிக்க வேண்டும். நீங்கள் உங்கள் கருத்துக்களுக்கு வாக்களிக்கவில்லை என்றால், உங்கள் குரல் இனி ஒலிக்கப்போவதில்லை.'

பெர்பினியோன் மாநாட்டிற்கு முன்னதாக வெளிப்பட்ட ஊடக விவாதம் பிரான்சில் உத்தியோகபூர்வ பொது வாழ்க்கை முற்றிலும் சீரழிவிற்கு சான்றாக இருந்தது. சோசலிஸ்ட் கட்சியின் (PS) ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட், சார்லி ஹெப்டோ இதழின் மீதான இஸ்லாமியவாதிகளின் தாக்குதல்களுக்குப் பின்னர், 2015 இல் மரின் லு பென்னை எலிசே ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்ததிலிருந்து, RN முற்றிலும் பிரதான அரசியலில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் நாஜி-ஒத்துழைப்பு துரோகி பிலிப் பெத்தானை ஒரு 'பெரும் சிப்பாய்' என்று பாராட்டியதைப் போன்று, ஆளும் உயரடுக்கின் பரந்த அடுக்குகள் இப்போது பாசிச நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்கிறது.

முதலாளித்துவ செய்தி ஊடகத்தின் கணிசமான பிரிவானது லு பென்னின் 'அரக்கத்தனத்தை அகற்றுதல்' கொள்கையைத் தாக்கியது. லு பென் பழைய தேசிய முன்னணியை (FN) தேசிய பேரணி (RN) என்று பெயர் மாற்றம் செய்து, 20 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய பாசிசத்தின் யூதப் படுகொலை மற்றும் பிற குற்றங்களை புகழ்வதை RN தவிர்க்க வேண்டும் என்று கோரினார். மாறாக, வலதுசாரி செய்தி ஊடகத்தின் சில பகுதிகள் லு பென் இன்னும் 'தீவிரமான' நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம், இஸ்லாம் அல்லது ஐரோப்பிய ஒன்றியம் மீதான கடுமையான கண்டனங்களுடன், மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது பெத்தானின் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியுடன் அவரது கட்சியின் வரலாற்று உறவுகளை இன்னும் வெளிப்படையான முறையில் பாதுகாப்பதன் மூலம் அவரது தோல்விக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்று கோரின.

இந்தக் கருத்தின் முக்கிய ஆதரவாளரும், செல்வாக்கு மிக்க முன்னாள் லு ஃபிகாரோ பத்திரிகையாளரும், விச்சி ஆட்சியின் ஊக்குவிப்பாளருமான எரிக் செமூர் ஆவார். அவர் இன வெறுப்பைத் தூண்டியதற்காகவும் தண்டிக்கப்பட்டுள்ளார். இப்போது பில்லியனர் வன்சென்ட் போல்லோரேயின் அதிவலது CNews தொலைக்காட்சி சேனலின் முக்கிய கருத்துரையாளராக பணியாற்றும் செமூர், சேவியர் பெர்ட்ரண்ட் அல்லது ஜனாதிபதி ஜாக் சிராக் அல்லது தற்போதைய ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் போன்ற பிரதான பழமைவாத அரசியல்வாதிகளிடமிருந்து லு பென்னை பிரித்தறிய முடியாதவர் என்று கேலி செய்தார்.

'RN அதிகாரிகள், மரின் லு பென் முன்னணியில், வாக்காளர்களை இழிவுபடுத்துவதை நாங்கள் கேட்டோம், அது மனதை உறைய வைத்தது. அவர்கள் தங்கள் பங்கு இலாபத் தொகைகளைக் கோரும் பங்குதாரர்களைப் போல் காணப்பட்டனர்,' என்று ஜெம்மூர் கூறினார்: 'உண்மையில், இமானுவல் மக்ரோன் அல்லது சேவியர் பெர்ட்ரண்ட் ஆகியவர்களிடமிருந்து அவரது வழியைப் பிரிப்பது எதுவும் இல்லை. ... அவர் எல்லாவற்றையும் கைவிட்டு, எல்லாவற்றையும் காட்டிக்கொடுத்து, சிராக் போல ஆகிவிடுகிறார், அதற்காக அவர் அதிக விலை கொடுக்கிறார் என்று மக்கள் கூறுகிறார்கள்.'

முன்னாள் சமூக-ஜனநாயக சுதந்திரவாத எழுத்தாளர் மைக்கேல் ஆன்ஃப்ரே, இப்போது அதிவலதில் இருப்பவர், இதேபோல் லு பென்னை ' தன்னையே சிராக்மயமாக்குகிறார்' என்று விமர்சித்தார், அவதானிப்பு: 'யூரோ, ஐரோப்பா, சுதந்திர சந்தை, இவைகள் அனைத்தும் அற்புதமானவை, என்று L’Opinion பத்திரிகை ஒன்றில் லு பென் எழுதுகிறார். அவர் எல்லா இடங்களிலும் செல்கிறார் ... 'எனக்கு எப்படி அதிகாரம் கிடைக்கும்? அங்கு செல்வதற்கு நான் என்ன சொல்ல வேண்டும்?' என்று அவர் தன்னையே கேட்டுக்கொள்ளுகிறார்.

ஆனால் கட்சி காங்கிரசில், RN ஆனது செமூர், ஆன்ஃப்ரே மற்றும் மற்றவர்களின் ஆலோசனையை நிராகரித்தது. மாநாட்டில் உரையாற்றிய லு பென், RN இன் பாசிச பாரம்பரியத்திற்கு வணக்கம் செலுத்துவதன் மூலம், எந்த ஆழமான வேறுபாடுகளும் தனது நிலைப்பாடுகளை அவர்களிடமிருந்து பிரிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தினார். எவ்வாறெனினும், இன்னும் வெளிப்படையான பாசிச அரசியல் நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்ற அழைப்புகளை அவர் நிராகரித்தார். அவர் கூறினார்: 'நாங்கள் பின்னோக்கி செல்ல மாட்டோம். நமது வரலாற்றின் மீது நமக்கு இருக்கும் அனைத்து மரியாதையுடனும், நாங்கள் மீண்டும் தேசிய முன்னணிக்கு (National Front) செல்ல மாட்டோம். வெறுமனே பார்வையாளர்களாக இருக்க விரும்பாத அனைத்து பிரெஞ்சு மக்களுக்கும் நாம் தொடர்ந்து நம்மைத் திறந்து கொள்ள வேண்டும்.'

பிரான்சை ஆளத் தயார் செய்வதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்வதில் RN கவனம் செலுத்தியுள்ளது என்று லு பென் வலியுறுத்தினார். 'அரசியல் மாற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியாக' மாறிவிட்டதாகக் கூறப்படும் RN ஐ அவர் பாராட்டினார், முன்னெப்போதையும் விட, மிக உயர்ந்த பதவியை ஏற்க தயாராக இருக்க வேண்டும். ... இந்த ஆரோக்கியமான மற்றும் அவசியமான பரிணாமத்திற்கு RN மாறிவிட்ட வடிவத்தைப் பெற்றுள்ளது, அனைவருக்கும் திறந்த ஒரு கட்சியாகவும், படைப்பாற்றல் மற்றும் துணிச்சலான, பொறுப்பு மற்றும் தன்னை நோக்கி கோருகிறது.'

அது ஜோர்டான் பார்டெல்லாவை தற்காலிக கட்சித் தலைவராகவும், லு பென் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் லு பென்னின் அறிக்கையானது காங்கிரசால் அங்கீகரிக்கப்பட்டது.

அதிவலது, சர்வாதிகார ஆட்சியின் எழுச்சியானது பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் ஒரு தீவிர ஆபத்தை ஏற்படுத்துகிறது. அதன் தேர்தல் பின்னடைவு இருந்தபோதிலும், குறிப்பாக பதவியில் இருக்கும் 'செல்வந்தர்களின் ஜனாதிபதி' மக்ரோனின் செல்வாக்கற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு RN இன்னும் 2022 தேர்தல்களில் வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்ற முடியும். ஒரு 'அரக்கத்தனத்தை அகற்றும்' மூலோபாயத்தை தொடர்வதற்கான லு பென்னின் முடிவானது அரசியல் விரக்தியின் திசைதிருப்பப்பட்ட வெளிப்பாட்டில் பாசிசம் அல்லது யூதப் படுகொலை இன்னும் ஆக்கிரோஷமாக அங்கீகரிக்கும் போக்குக்கு வாக்களிக்காத லு பென்னுக்கு வாக்களிக்கக்கூடிய தொழிலாளர்களை அந்நியப்படுத்துவதைத் தவிர்ப்பதை தெளிவாக நோக்கமாகக் கொண்டுள்ளது.

இறுதியாக, 1991ல் ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை கலைத்ததிலிருந்து முழு காலகட்டத்திலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) அபிவிருத்தி செய்த அரசியல் முன்னோக்குகளின் அடிப்படையில் மட்டுமே பிரெஞ்சு அதிவலது எழுச்சியை எதிர்த்து போராடப்பட முடியும்.

2002ல், மரீனின் தந்தையான FN தலைவர் ஜோன்-மரி லு பென், சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் லியோனல் ஜோஸ்பன் வெளியேற்றப்பட்டதன் காரணமாக, சிராக்குடன் சேர்ந்து ஜனாதிபதித் தேர்தல்களின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். முன்னாள் மாணவர் எதிர்ப்புப் போராட்டக்காரரும் பியர் லம்பேர்ட்டின் முன்னாள் ட்ரொட்ஸ்கிச அமைப்பின் (Organisation communiste internationaliste - OCI) உறுப்பினருமான ஜோஸ்பன் 1998-2002 பன்மை இடது அரசாங்கத்தின் வலதுசாரி கொள்கைகளால் மதிப்பிழந்தார். சிராக்கிற்கும் ஒரு நவ-பாசிசவாதிக்கும் இடையிலான தவறான தேர்வை எதிர்கொண்ட மில்லியன் கணக்கான மக்கள் வெகுஜன எதிர்ப்புக்களில் தெருக்களில் இறங்கினர்.

சிராக் பதவிக்கு வந்தவுடன் கடைப்பிடிக்கும் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு, செயலூக்கமான புறக்கணிப்பு பிரச்சாரத்திற்கான அழைப்பை ICFI முன்வைத்தது. மறுபுறத்தில், பப்லோவாத புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (LCR) மற்றும் லம்பேர்ட் போக்கு போன்ற குட்டி-முதலாளித்துவ குழுக்கள் சிராக்கிற்கான வாக்குக்காக பிரச்சாரம் செய்து, லு பென்னை அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுக்க இது அவசியம் என்று கூறின.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின்னர், குட்டி-முதலாளித்துவ குழுக்களின் முன்னோக்கு முற்றிலும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. லு பென்னின் கட்சியை தந்திரோபாய ரீதியாக எதிர்ப்பதன் மூலம் பாசிச ஆபத்தை வெறுமனே எதிர்த்துப் போராட முடியாது. இரண்டு தசாப்த கால போர்கள் மற்றும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், குறிப்பாக 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவின் பின்னர், முழு பிரெஞ்சு முதலாளித்துவமும் பாசிசக் கொள்கைகளை நோக்கி கூர்மையாக திரும்பியுள்ளது. உண்மையில், மக்ரோன் 2018 இல் பெத்தானை அங்கீகரித்த பின்னர், கலகப் பிரிவு போலீசார் 'மஞ்சள் சீருடை' எதிர்ப்புக்களை வன்முறையில் தாக்கிய போது, உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனன் முஸ்லிம்கள் மீது 'மிகவும் மென்மையைக்' கடைப்பிடிக்கிறார் என்று ஒரு பொது விவாதத்தில் லு பென்னை தாக்கினார்.

செமூர் அல்லது ஒன்ஃப்ரே போன்ற அரசியல் குப்பைகள் பிரெஞ்சு செய்தி ஊடகத்தில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்ற உண்மையானது ஆளும் வர்க்கத்தின் பாசிச பரிணாமம் அதன் அரசியல் அதிகாரிகளை மட்டுமல்லாமல், கலாச்சார மற்றும் ஊடக ஸ்தாபனத்திலும் செயல் விளைவைக் காட்டுகின்றது என்பதை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த ஆபத்துக்கள் அதிவலது சஞ்சிகையான Current Values ஆனது பிரெஞ்சு செயலூக்கமுள்ள சிப்பாய்களால் சமீபத்தில் விடுக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதி அச்சுறுத்தல்களால் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டன.

இந்த அச்சுறுத்தலை எதிர்ப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் அணிதிரட்டல் தேவைப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் சர்வதேச ரீதியாகவும் பிரான்சிலும் பல வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும் நடந்துள்ளன, அவைகள் 'மஞ்சள் சீருடைகள்' மற்றும் 2019-2020 இரயில்வே வேலைநிறுத்தம் போன்றவைகளாகும். சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் குட்டி முதலாளித்துவ போலி-இடது குழுக்களுக்கு ஒரு இடதுசாரி, ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது, குழப்பமான விரக்தியில் RN க்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்காதவர்களை முதலாளித்துவம் மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான இயக்கத்தில் நான்காம் அகிலத்தின் பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியானது (PES) தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துகிறது.

Loading