ஜேர்மனியின் பிராங்பேர்ட் நகர பொலிஸ் சிறப்பு நடவடிக்கை பிரிவில் வலதுசாரி தீவிரவாத வலையமைப்பு அம்பலமானது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மற்றொரு வலதுசாரி தீவிரவாதக் குழு ஜேர்மனிய மாநிலமான ஹெஸ்ஸவில் காவல்துறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிராங்பேர்ட் சிறப்பு நடவடிக்கை பிரிவின் (SEK) 20 அதிகாரிகளை அரசு வழக்குத்தொடுனர் விசாரித்து வருகிறார். ஏனெனில் அவர்கள் ஒரு கலந்துரையாடல் குழுவில் நாஜி சின்னங்களை பகிர்ந்து கொண்டதுடன், மற்றும் மக்கள் மீதான வெறுப்பு உரையாடல்களிலும் ஈடுபட்டனர்.

புதன்கிழமை காலை, குற்றவியல் பொலிஸ் மாநில பணியகம் இந்த உயரடுக்கு பிரிவின் ஆறு உறுப்பினர்களின் குடியிருப்புகள் மற்றும் பணியிடங்களை தேடியது. கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் (CDU) உள்துறை மந்திரி பீட்டர் பொய்த் வியாழக்கிழமை இப்பிரிவு கலைக்கப்படுவதாக அறிவித்தார். "நாங்கள் சிறப்பு நடவடிக்கை பிரிவிற்க்கு ஒரு அடிப்படையான புதிய தொடக்கத்தை முன்னெடுக்கின்றோம்," என்று அவர் கூறினார். ஒரு முழுமையான நிறுவன மறுசீரமைப்பு மற்றும் ஒரு புதிய தலைமை கலாச்சாரம் இருக்கும் என்று பீட்டர் பொய்த் வலியுறுத்தினார்.

ஹெஸ்ஸ SEK 2017 ஒரு பயிற்சியின் போது(படம்: wiesbaden112.de / CC BY-NC-ND 2.0)

"எங்கள் சிறப்புப் படைகள் இல்லாமல் எதிர்காலத்தை பற்றி நிச்சயமாக சிந்திக்க முடியாதது, ஆனால் வேறுபட்ட வழிகாட்டுதல்களின் கீழ்" என்று அவர் தொடர்ந்தார்.

நிகழ்வுகளின் உத்தியோகபூர்வ கருத்தின்படி, கடந்த கோடையில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தமாக சந்தேகிக்கப்படும் 38 வயதான ஒரு அதிகாரியை விசாரிக்கும் போது இந்த காவல்துறையினர் குழுவைப் பற்றி அறிந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தொலைபேசிகள் மற்றும் கணினிகளில் சிறுவர் ஆபாசப் படங்கள் மட்டுமல்லாமல், ஹிட்லர், ஸ்வஸ்திகா சின்னங்கள் மற்றும் புகலிடம் கோருவோருக்கு எதிரான அவமதிப்பு போன்ற படங்களும் இருந்தன. இவற்றை அந்த அதிகாரி தனது சக ஊழியர்களுடன் கலந்துரையாடல் குழுவில் பகிர்ந்து கொண்டார்.

ஹெஸ்ஸ மாநில குற்றவியல் பொலிஸ் பணியகம் (LKA) இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதுபற்றிய விசாரணையை ஏற்றுக்கொண்டது. SEK ஐப் போலவே, LKA உள்துறை மந்திரி பொய்த்தின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது.

அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் சமீபத்திய வெளிப்பாடுகள் குறித்து திகிலுடன் பிரதிபலிப்பை காட்டின. மிகவும் சிறப்பு வாய்ந்த பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் இந்த வகையில் தமக்கிடையே கலந்துரையாடுவது “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று பொய்த் தனது பங்கிற்கு விவரித்தார். அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் "எந்தவொரு முறைகேடான நடவடிக்கையும் முழுமையாக விசாரிக்கப்படும் என்பதை எல்லா நேரங்களிலும் அறிந்திருக்க வேண்டும்." என்றார்.

குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், "குற்றம் சாட்டப்பட்டவர்களில் எவரும் ஹெஸ்ஸவில் ஒரு சிறப்பு செயல்பாட்டு பிரிவில் பணியாற்ற இனி பொருத்தமானவர்கள் அல்ல" என்று அவர் தீர்மானித்தார். இது சட்டபூர்வமாக சாத்தியமானால், அவர்கள் ஹெஸ்ஸ மாநில போலீசில் இருந்து அகற்றப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

பிராங்பேர்ட் காவல்துறையின் தலைவர் ஹெகார்ட் பெரெஸ்வில் புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அதிகாரிகளின் குற்றம் சாட்டப்பட்ட நடத்தை எமது ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் அடித்தளங்களை தாக்கியது என்றார். "தவறான நடத்தை பற்றிய சந்தேகம் இருக்குமானால், ஆரம்பத்திலேயே தலையிட்டு தீர்க்கமாக செயல்படுவது அவசியம்" என்றும், உண்மைகளை முழுமையாக வெளிக்கொணர்வதே முதன்மை முன்னுரிமையாக இருக்கும்" என்றும் அவர் கூறினார்.

முன்கூட்டியே தடுப்பு வேலைகளை மேம்படுத்துவதை சாத்தியமாக்குவதால் இந்த வெளிப்படுத்தல்கள் ஒரு நேர்மறையான பக்கத்தைக் கொண்டுள்ளது என்று பெரெஸ்வில் கூறினார். "எங்கள் சக ஊழியர்களில் ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்கள் எங்கள் தொழிலின் விதிகளை மதிக்க வேண்டியதில்லை என்று நினைப்பது எங்கள் தவறுகளைத் திருத்துவதற்கான முயற்சிகளைத் தொடரவும் தீவிரப்படுத்தவும் தூண்டுகிறது," என்று அவர் கூறினார்.

ஹெஸ்ஸ மாநில நாடாளுமன்றத்தில் உள்ள சமூக ஜனநாயக கட்சி (SPD) குழுவின் நாடாளுமன்ற விவகாரங்களின் தலைவர் குந்தர் ருடோல்ப், "ஹெஸ்ஸ காவல்துறையினுள் வலதுசாரி தீவிரவாத நடவடிக்கைகளின் இந்த புதிய வழக்கு அனைத்து பரிமாணங்களையும் வெடிக்க செய்கின்றது" என்று கோபமடைந்தார். இறுதியாக அரசியல் பொறுப்பை ஏற்குமாறு உள்துறை மந்திரி பொய்த்திடன் அவர் அழைப்புவிட்டார்.

இடது கட்சியின் உள்துறை கொள்கை செய்தித் தொடர்பாளர் ஹெர்மன் ஷாஸ், "ஹெஸ்ஸி பொலிஸால் செய்யப்பட்ட ஊழல்களை இழிந்த தன்மையுடன் மட்டுமே பார்க்க முடியும்" என்று கருத்து தெரிவித்தார். "ஹெஸ்ஸ பொலிஸை எதிர்மறையான தலைப்புச் செய்திகளில் இருந்து எவ்வாறு வெளியே கொண்டு வர அவர் விரும்புகிறார்" என்று பொய்த் விளக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

இவை அனைத்தும் ஒரு மூடிமறைப்பு மற்றும் மக்களை முட்டாள்கள் போல நடத்துவதற்கான வெளிப்படையான முயற்சிகளாகும். உண்மையில், நாஜி கலந்துரையாடல் குழு, மாநில பாதுகாப்புத்துறை அமைப்புகள் வலதுசாரி தீவிரவாத வலைப்பின்னல்களுடன் பழகுவதையும், இந்த பிரிவுகள் அரசு மற்றும் அரசியல் ஸ்தாபனத்தால் பாதுகாக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துகிறது.

குறிப்பாக வங்கிகளின் தலைநகரான பிராங்பேர்ட்டின் தாயகமாக இருக்கும் ஹெஸ்ஸ இந்த வலதுசாரி தீவிரவாத சதித்திட்டத்தின் மையமாகும். இந்த மாநிலத்தில்தான் 2019 ஜூன் 2 ஆம் தேதி இரவு, காசல் மாவட்டத் தலைவர் வால்டர் லுப்க 30 ஆண்டுகளாக உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்ட வலதுசாரி தீவிரவாதி ஸ்டீபன் எர்ன்ஸ்டால் கொலை செய்யப்பட்டார். பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் தகவலறிபவர்கள் நிறைந்திருந்த காசலில் தீவிரவாத நவ-நாஜி பிரிவுகளில், National Socialist Underground பயங்கரவாத குழுவின் உறுப்பினர்களைப் போலவே எர்ன்ஸ்ட் தீவிரமாக இருந்தார்.

பல வலதுசாரி தீவிரவாத தகவல் வழங்குபவர்களை மேற்பார்வையிட்ட உளவுத்துறை முகவர் ஆண்ட்ரியாஸ் டெம்ம, காசலில் இணைய நிலைய உரிமையாளர் ஹலித் யோஸ்காட்டை NSU கொலை செய்த இடத்தில் இருந்தார். லுப்க கொலை செய்யப்பட்டபோது லுப்கவின் அரசாங்கத் துறையில் பணிபுரிந்த டெம்ம ஒருபோதும் சாட்சியமளிக்க அழைக்கப்படவில்லை. இந்த நிகழ்வுகளின் கோப்புகள் உள்துறை மந்திரி பொய்த்தால் குறைந்தது 30 ஆண்டுகளாக அணுகப்பட முடியாது வைக்கப்பட்டுள்ளன.

SEK செயல்படும் பிராங்பேர்ட் பொலிஸ் தலைமையகத்தில், "Itiotentest" என்று அழைக்கப்படும் ஒரு வலதுசாரி தீவிரவாத கலந்துரையாடல் குழு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. NSU 2.0. என கையெழுத்திடப்பட்டு தனிநபர்களுக்கு அனுப்பப்பட்ட மரண அச்சுறுத்தல்களின் மூலத்தைத் தேடும் போது புலனாய்வாளர்கள் இக்குழுவைக் கண்டுபிடித்தனர். பிராங்பேர்ட்டை தளமாகக் கொண்ட வழக்கறிஞர் பாயே-யெல்டஸ் இன் பகிரங்கப்படுத்தப்படாத தகவல்கள் சிறிது நேரத்திற்கு முன்பு பிராங்பேர்ட் பொலிஸ் தலைமையகத்தில் உள்ள ஒரு கணினியிலிருந்து எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

இந்த விசாரணையின் போது, பிற பொலிஸ் தலைமையகம் உள்ளிட்ட பலவழக்குகள் அதிகரித்து வருகின்றன. வலதுசாரி தீவிரவாதக் கருத்துக்களை கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் ஹெஸ்ஸ பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 94 நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. பெப்ரவரியில், நான்கு ஆண்கள் மீது இனவெறி படங்கள், ஹிட்லர் படங்கள் மற்றும் நாஜி நினைவுச் சின்னங்களைப் பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இதேபோன்ற தீவிர வலதுசாரி குழுக்கள் செப்டம்பர் 2020 இல் வடக்கு-ரைன் வெஸ்ட்பாலியாவில் காணப்பட்டன.

பிராங்பேர்ட் கலந்துரையாடல் குழு பற்றிய விசாரணை முழு வீச்சில் இருந்தபோது, ஊடகங்கள் அதைப் பற்றி புகாரளிக்கத் தொடங்கியபோதும் SEK அதிகாரிகள் தடையின்றி கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். கண்டுபிடிக்கப்பட்ட பெரும்பாலான கலந்துரையாடல்கள் 2016 மற்றும் 2017 இற்கும் இடைப்பட்ட காலத்திலிருந்து வந்தவையாகும். ஆனால் செய்திகள் இன்னும் 2019 இல் பகிரப்பட்டன. SEK அதிகாரிகள் வெளிப்படையாக மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தனர்.

இந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில், 53 வயதான வலதுசாரி தீவிரவாதியை பொலிசார் கைது செய்து, "NSU 2.0" என கையெழுத்திட்டு வழக்கறிஞர்கள், கலைஞர்கள், மத சமூகங்களின் தலைவர்கள், முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் விசாரணை பத்திரிகையாளர்களுக்கு அனுப்பப்பட்ட 130க்கும் மேற்பட்ட மரண அச்சுறுத்தல்களுக்கு ஒரே ஆதாரமாக முன்வைத்தனர். எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட நபர்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை அந்த நபர் எவ்வாறு பொலிஸ் ஆதாரங்களில் இருந்து பெற முடிந்தது என்பது ஒருபோதும் தெளிவுபடுத்தப்படவில்லை.

தனிநபராக செயற்பட்டார் எனக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, பொய்த் காவல்துறைக்கு ஒரு நற்சான்றிதழை வழங்கினார். "இன்று நமக்குத் தெரிந்த எல்லாவற்றின் படி, ஹெஸ்ஸவில் உள்ள எந்தவொரு பொலிஸ் அதிகாரியும்‘ NSU 2.0 ’தொடர் மரண அச்சுறுத்தல்களுக்குப் பொறுப்பில்லை” என்று அவர் அப்போது வலியுறுத்தினார். ஹெஸ்ஸவில் உள்ள முழு பொலிஸும் "ஆழ்ந்த மூச்சுவிடக்கூடியதாக" இருந்தது. இதற்கு பின்னர் ஹெஸ்ஸ மாநில காவல்துறையின் அணிகளுக்குள் இருக்கும் புதிய நவ-நாஜி குழு கண்டுபிடிக்கப்படுவதற்கு நான்கு வாரங்கள் மட்டுமே எடுத்தது.

ஆனால் ஹெஸ்ஸ என்பது பனிப்பாறையின் முனை மட்டுமே. இராணுவம், புலனாய்வு அமைப்புகள் மற்றும் காவல்துறையில் உள்ள வலதுசாரி தீவிரவாத பயங்கரவாத வலைப்பின்னல்களைப் பற்றி WSWS விரிவாக தெரிவித்துள்ளது, இராணுவ அதிகாரிகள் பிராங்கோ ஏ மற்றும் இது "ஹனிபால்" என்ற மாற்றுப்பெயரைக் கொண்டிருந்த ஆண்ட்ரே எஸ் போன்ற நபர்களைச் சுற்றி குழுவாக இருந்தது. ஜேர்மனி முழுவதும் உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஹனிபாலின் தயார்படுத்தல் வலைப்பின்னல் ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்தில் "பாதுகாப்பான வீடுகளை" வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இது "X தினத்தன்று" உள்நாட்டுப் போருக்கான ஆயுதங்கள் மற்றும் கொலை பட்டியல்களைத் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.

பிராங்கோ ஏ அப்போது பிராங்பேர்ட்டில் நீதிமன்றத்தில் இருக்கும்போது, ஹனிபால் ஒரு சுதந்திர மனிதராக இருந்தார். பொய்ப்லிங்கன் மாவட்ட நீதிமன்றம் துப்பாக்கி மற்றும் வெடிபொருள் விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டி, அவருக்கு 60 நாள் தண்டனை வழங்கியது மற்றும் அவரது துப்பாக்கி வைத்திருக்கும் அனுமதியை நீக்கியது. ஒரு சிப்பாய் என்ற அவரது சேவைக் காலம் முடிவடைவதற்கு முன்னர் அவர் ஒருபோதும் இராணுவத்தால் பணிநீக்கம் செய்யப்படவில்லை. அரசு வழக்குத்தொடுனர் அவரது குழுவை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று விசாரிக்க மறுத்துவிட்டார்.

அரச அமைப்பினுள் உள்ள வலதுசாரி தீவிரவாத வலைப்பின்னல்கள் மற்றும் அவை நிர்வாக மற்றும் நீதித்துறை பிரிவுகளால் மறைக்கப்படுவது வைமார் குடியரசை நினைவுபடுத்துகின்றன. Consul அமைப்பு போன்ற பயங்கரவாத குழுக்கள், மாநிலத்தின் மிக உயர்ந்த அரச தலைவர்களுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டு, கொலை செய்து பயங்கரவாதத்தை விருப்பப்படி பரப்புவது நாஜிக்களின் எழுச்சியில் முக்கிய பங்கு வகித்தது.

இந்த நிகழ்வுகள் ஒரே மூலகாரணத்தைக் கொண்டுள்ளன. ஒரு சிறிய சிறுபான்மையினரின் மோசமான செல்வமயமாக்கல், பெரும்பான்மையினர் நாளாந்த வாழ்க்கைக்கு கஷ்பட்டும் நிலையில், கோவிட்-19 தொற்றுநோயைப் பொறுத்தவரையில், “வாழ்க்கையைவிட இலாபங்களுக்கு முன்னுரிமை” கொள்கையின் காரணமாக பல்லாயிரக்கணக்கானோரின் தவிர்க்கக்கூடிய மரணங்கள், மற்றும் ஆயுதமயமாக்கலுக்கு திரும்புவது, இராணுவவாதம் மற்றும் போர் ஆகியவை ஜனநாயக உரிமைகளுடன் பொருத்தமற்று இருக்கின்றது. இதனால்தான் ஜேர்மனியிலும் உலகெங்கிலும் உள்ள ஆளும் உயரடுக்கு அதிகளவில் சர்வாதிகாரம் மற்றும் பாசிசத்தை நாடுகிறது.

வலதுசாரி தீவிரவாத வலைப்பின்னல்கள் ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்று (AfD) உடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன. பிராங்கோ ஏ இன் தனிப்பட்ட நண்பரும் கூட்டாளியுமான மாக்சிமிலியன் ரிஷ்லர், AfD துணைத் தலைவர் ஜோன் நோல்டவுடன் பணிபுரிவதுடன், பாராளுமன்றத்திற்கு செல்வதற்கான அணுகலும் உள்ளது. AfD மற்ற அனைத்து கட்சிகளாலும் ஊக்குவிக்கப்படுவதுடன், அக்கட்சிகளில் இருந்தே தோன்றியது. AfD யின் அரசியல் தலைவரான அலெக்சாண்டர் கவ்லாண்ட், ஹெஸ்ஸ மாநிலத்தில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி உறுப்பினராக தனது 40 ஆண்டுகால வாழ்க்கையில் மாநிலத்தில் மூத்த பதவிகளை வகித்தார். 1987 மற்றும் 1991 க்கு இடையில் அவர் மாநில முதலமைச்சர் வால்டர் வால்மனின் அரச அலுவலகத்திற்கு தலைமை தாங்கி மற்றும் ஹெஸ்ஸ உளவு அமைப்பின் பொறுப்பாளராக இருந்தார்.

தீவிர வலதுசாரி அச்சுறுத்தலை அடக்குவதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கம் தேவைப்படுகிறது. இதுதான் பாசிசம், இராணுவவாதம் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் இணைக்கிறது.

Loading