இலங்கை அரசாங்கம் வதுபிட்டிவல மருத்துவமனையில் வேலைநிறுத்தத்தை முறியடிக்க செயற்பட்டது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

ஜூன் 9 அன்று, வதுபிட்டிவல மருத்துவமனையின் தாதிமார் மற்றும் சிற்றூழியர்கள் உட்பட கனிஷ்ட ஊழியர்கள், மகப்பேற்று தாதிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்கள், தங்கள் குடும்பங்களுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 22 அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி குப்பிகளை அபகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மருத்துவமனை வளாகத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

வதுபிட்டிவல வைத்தியசாலையில் சுகாதார ஊழியர்கள்

வைத்தியசாலை ஊழியர்களால் நீண்ட காலமாக நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து ஒதுக்கி வைத்துக்கொண்டிருந்த தடுப்பூசிகளை மீண்டும் எடுத்துச் செல்வதற்காக கம்பஹா சுகாதார சேவைகள் ஆணையாளர் நளின் ஆரியரத்ன முடிவெடுத்து இருந்தார். அதற்காக அவர் ஜூன் 9 அன்று தனது வாகனத்தை அனுப்பி இருந்தார். அதற்கு எதிராக அணிதிரண்ட மருத்துவமனை ஊழியர்கள், அதை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று ஒருமனதாக நின்றதால் வாகனம் வெறுமையாக திரும்பி சென்றது.

மருத்துவமனை ஊழியர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், தொழிலாளர்கள் மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்கவுக்கு ஒரு கடிதத்தையும் அனுப்பி, இந்த தடுப்பூசி கொள்ளைக்கு எதிராகப் போராட தங்கள் தயார் நிலையை அறிவித்தனர்.

தங்களுக்கு கோபத்தை ஏற்படுத்திய பல விடயங்கள் குறித்து மருத்துவமனை தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்திற்கு கருத்துத் தெரிவித்தனர்.

அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி முதன்முதலில் சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட போது, அது மருத்துவ சிக்கல்கள் உள்ளவர்களுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் பரிந்துரைக்கப்படாத காணத்தால், மருத்துவமனையின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தடுப்பூசியை பெற முடியாமல் இருந்தனர்.

பின்வந்த காலத்தில், அந்த தரப்பினருக்கு தடுப்பூசி வழங்க பரிந்துரைக்கப்பட்ட போதிலும், அதை வழங்குவதற்கு எந்த முறைமையும் மேற்கொள்ளப்படவில்லை. அதைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சைனோபார்ம் தடுப்பூசியை ஊழியர்களுக்கு வழங்கவும் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவமனைகளின் கொள்ளளவையும் விஞ்சி அவை நிரம்பி வழிவதால், வதுபிடிவல மருத்துவமனை உட்பட பல வைத்தியசாலைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இதன் விளைவாக, தடுப்பூசி போடாத தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்து அதிகமாகியது. இதற்கிடையில், வதுபடிவலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் தங்கி இருக்கும் நிலையத்திற்கும் மருத்துவமனையில் இருந்து ஊழியர்களை நியமிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இந்த சூழ்நிலை காரணமாக, மருத்துவமனை ஊழியர்களின் குடும்பங்களும் தடுப்பூசியின் அவசியத்தை உணர்ந்தன.

நிலைமை இவ்வாறு இருக்கையில், வதுபிடிவல ஆஸ்பத்திரி வளாகத்தையும் அதன் ஊழியர்களையும் பயன்படுத்தி, சைனோபார்ம் தடுப்பூசி மற்றும் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பல அந்நியர்களுக்கு வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக உலக சோசலிச வலைத் தளத்திடம் மருத்துவமனை ஊழிர்கள் கூறினர். இவ்வாறு தடுப்பூசிகளை யார் யாருக்கு கொடுக்கின்றீர்கள் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, சுகாதார சேவைகள் ஆணையாளரும் அரசியல் உயர்மட்டத்தினரும் அனுப்பும் நபர்களுக்கே தடுப்பூசி வழங்கப்படுகிறது என்று வைத்தியசாலை அதிகாரிகள் பதிலளித்தனர்.

இதற்கிடையில், ஆடை உற்பத்தி நிறுவனங்களும் அந்த தொழிற்சாலைகளுக்கு தடுப்பூசி போட தொழிலாளர்களை அனுப்பியுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். மருத்துவமனை ஊழியர் குழுவினரை சில தனியார் நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று, தடுப்பூசி போடுவதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறிய அவர்கள், வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தனியார் மருத்துவ மையங்களில் (செனலிங் சென்டர்) கூட தடுப்பூசி ஏற்றல் நடந்ததாக நம்பகமான தகவல்கள் தங்களுக்கு கிடைத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனினும், தடுப்பூசி போடாத மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தடுப்பூசி போட மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வந்தது. இடைவிடாமல் தொழிலாளர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான 22 குப்பிகளை மட்டுமே தேவைப்படும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு ஒதுக்கியுள்ளதாக தொழிலாளர்கள் கூறினர்.

ஜூன் 8 அன்று, மாகாண சுகாதார ஆணையாளரால் திட்டமிடப்பட்டவாறும், சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு கோரியவாறு, அதை திருப்பி அனுப்ப வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் ஜூன் 9 அன்று அறிவித்தது. வைத்தியர்கள் தவிர முழு மருத்துவமனை ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தடுப்பூசிகளை எடுத்துச் செல்வதை தடுப்பதற்காக, தொழிலாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் ஒரு சத்தியாக்கிரகத்தைத் தொடங்கினர். தரப்படுத்தல் பிளவுகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஏற்படுத்தும் பிளவுகளை முறியடித்து, தொழிலாளர்கள் இதை எதிர்த்துப் போராட முன்வந்தனர்.

மருத்துவமனையில் அனைத்து தொழிலாளர்களும் ஜூன் 10 அன்று இந்த வேலைநிறுத்தத்திலும் சத்தியாக்கிரகத்திலும் ஈடுபட்ட நிலையில், மாகாண சுகாதார ஆணையாளர் வைத்தியசாலையின் அனைத்து தொழிற்சங்கங்களினதும் தலைவர்களின் கூட்டத்தை கூட்டினார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சில மருத்துவமனை ஊழியர்களின் எதிர்ப்புக்கள் இருந்த போதிலும், பல தொழிற்சங்க கிளைத் தலைவர்கள் அதில் பங்குபற்றி இருந்தனர்.

காலியில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடான தடுப்பூசி ஏற்றுதல் காரணமாக, நாட்டில் உள்ள அனைத்து அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளையும் சேகரிக்க மேலிருந்து உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி, வதுபிடிவல மருத்துவமனையில் உள்ள தடுப்பூசிகளை உடனடியாக தன்னிடம் வழங்க வேண்டும் என்றும் மாகாணத்தின் சுகாதார ஆணையாளர் கூறியதாக வதுபிடிவல ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்தனர்.

தடுப்பூசிகளை தொடர்ந்தும் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தினால், அதைக் கைப்பற்ற அரசாங்கம் படையினரை அனுப்பும், அப்படியானால், வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்கள் அதை எதிர்கொள்ளத் தயாரா? என்றும் மாகாண சுகாதார ஆணையாளர் கேட்டுள்ளார் என ஊழியர்கள் கூறினர். பெப்ரவரி 24-25 திகதிகளில் தீவு முழுவதும் உள்ள கனிஷ்ட சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முறியடிக்க அரசாங்கம் இராணுவத்தை அனுப்பியது.

வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலிறுப்பாக எந்தவொரு கோரிக்கையும் நிநறைவேற்ற முன்வரக் கூடாது என்று 'மேலிருந்து' தனக்கு கூறப்பட்டதாகவும், இந்த வேலை நிறுத்தத்தை முறிக்க படையினரை அனுப்பவேண்டுமா என்று இராணுவத் தளபதி ஏற்கனவே அவரிடம் கேட்டிருந்ததாகவும் ஆணையாளர் அந்த கூட்டத்தில் கூறினார். இந்த வேலை நிறுத்த த்தகை தகர்காகவிட்டால் பல மருத்துவமனைகளில் இதற்கு ஆதரவாக வேலைநிறுத்தம் வெடிக்கலாம் என்பதால், அதை அனுமதிக்காமல் இந்த கூட்டத்தை கூட்டியதாக ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.

இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி வழங்குவதாக கொடுத்த வெற்று வாக்குறுதியின் அடிப்படையில், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து தொழிலாளர்கள் தடுத்து வைத்திருந்த தடுப்பூசிகள் தொகையை திருப்பித் தர கூட்டத்தில் கலந்து கொண்ட கிளை தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொண்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தின் அனுபங்களை அனைத்து தொழிலாளர்களும் பாரதூரமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி சர்வாதிகாரத்தை பலப்படுத்தி வரும் இராஜபக்ஷ அரசாங்கம், தொழிலாளர்களின் சிறிதளவு கோரிக்கையின் அடிப்படையிலான ஒரு உள்ளூர் போராட்டத்தை கூட நசுக்க இராணுவத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது என்பதையே இது குறிக்கிறது.

மே 27 மற்றும் ஜூன் 2 ஆகிய திகதிகளில் ஜனாதிபதி இராஜபக்ஷ பிறப்பித்த அத்தியாவசிய சேவை உத்தரவுகளின்படி, சுகாதாரம், துறைமுகங்கள், ரயில், பேருந்து போக்குவரத்து, பெட்ரோலியம், எரிவாயு, அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி தொழிலாளர்களுக்கும்; அரசுக்கு சொந்தமான உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ஒன்பது மாகாண மற்றும் அரச துறைகளின் ஊழியர்களுக்கும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறினால், வேலை நீக்கம், இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையான “கடின உழைப்புடன் கூடிய சிறைத்தண்டனை” வழங்கல் மற்றும் 'அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள்' அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படலாம். 'சரீர ரீதியான நடவடிக்கை அல்லது எந்தவொரு பேச்சு மூலம் அல்லது ஆவணம்' ஊடாக ஒரு வேலைநிறுத்த த்துக்கு அல்லது போராட்டத்துக்கு 'தூண்டிவிடுகின்ற, பிரேரிக்கின்ற அல்லது ஊக்குவிக்கிற' எந்த நபரும் சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்.

பெரும் வணிகர்களின் இலாப நலன்களுக்காக மக்களை தொற்று நோய்க்கு பலிகடாவாக்கும் அரசாங்கம், மறுபுறம், தான் எதிர்கொள்ளும் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் அனைத்து சுமைகளையும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்தி வருகின்றது. இரண்டு முன்னரங்குகளில் இருந்து தொடுக்கப்படும் இந்த தாக்குதலுக்கு எதிராக எழுச்சி பெரும் தொழிலாள வர்க்க ஏழைகளை மக்களை நசுக்குவதற்கான இராணுவ பொறிமுறையை வலுப்படுத்தி, அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு இராணுவ தளபதிகளை நியமித்து, ஜனாதிபதி இராஜபக்ஷ, நாட்டின் அனைத்து 25 மாவட்டங்களையும் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரிளின் கீழ் கொண்டுவந்துள்ளார்.

வதுபிடிவல மருத்துவமனையின் அனுபவம், அரசாங்கத்தின் இந்த கொடூரமான திட்டங்கள் குறித்து ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு பலமாக எச்சரிக்கை ஆகும்.

Loading