இலங்கையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் அரசாங்க சட்டங்களை மீறி வேலைநிறுத்தம் செய்தனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

வியாழக்கிழமை இலங்கை முழுவதும், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு உட்பட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள், பல கோரிக்கைகளை முன்வைத்தும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் 'அத்தியாவசிய சேவைகள்' சட்டங்களை மீறியும் ஐந்து மணி நேரம் வெளிநடப்பு செய்தனர்.

கண்டி வைத்தியசாலை தாதிமார் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் (WSWS Media)

காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடந்த இந்த வேலைநிறுத்தத்தில், ஒன்பது பெரிய மருத்துவமனைகளின் மருத்துவர்கள், துணை மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் மற்றும் குமாஸ்தாக்களும் ஈடுபட்டனர். கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலை மற்றும் போதனா வைத்தியசாலை, பேராதனை, கண்டி, அனுராதபுரம், கராபிட்டி, ரத்னபுர, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மருத்துவமனைகளும் இதில் அடங்கும். கர்ப்பிணி செவிலியர்களுக்கு விடுமுறை கோரியும் தேசிய ரீதியில், அரை மணி நேர மதிய உணவு நேர போராட்டத்தில் சுகாதார ஊழியர்களும் பங்கேற்றனர்.

புதன்கிழமை நள்ளிரவில், ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ ஒரு அசாதாரணமான வர்த்தமானியை வெளியிட்டு, நாட்டின் சுகாதார சேவையை அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் கீழ் வைத்ததுடன், திட்டமிடப்பட்ட வேலை நிறுத்தத்தை குறிவைத்திருந்தார். இந்த பிற்போக்கு உத்தரவு அரச விநியோக நிறுவனங்கள் மற்றும் ஒன்பது மாகாண சபைகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.

ஒரு வாரத்திற்கு முன்னதாக, மே 27 அன்று, துறைமுகம், பெட்ரோலியம், எரிவாயு, ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்துத் துறைகள், அத்துடன் அனைத்து மாவட்ட அளவிலான அரச நிர்வாக அலுவலகங்கள், அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி மற்றும் சுங்கத் துறைகள் தொடர்புடைய சேவைகளிலும் அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் தடை செய்ய ஜனாதிபதி இராஜபக்ஷ அத்தியாவசிய சேவைகள் சட்டத்தைப் பயன்படுத்தினார்.

ஏறக்குறைய ஒரு பத்து இலட்சத்துக்கும் அதிகமான இலங்கை தொழிலாளர்கள், வேலைநிறுத்தம் செய்யவோ அல்லது வேறு எந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கவோ தங்களுக்கு உள்ள நியாயமான மற்றும் ஜனநாயக உரிமை குற்றமாக்கப்படும் நிலைமையை எதிர்கொள்கின்றனர்.

வியாழக்கிழமை போராட்டம், மருத்துவ ஊழியர்களின் தொழிற்சங்க ஒன்றியம் (ம.ஊ.தொ.ஒ.), மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் மற்றும் அரச சாதிமார் சங்கம் (GNOU) உள்ளிட்ட 35 சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களின் கூட்டணியால் அழைப்பு விடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தின் முன்னணியில் இருக்கும் சுகாதார ஊழியர்களின் அதிகரித்துவரும் கோபத்தை கரைத்துவிடவே ம.ஊ.தொ.ஒ. இந்த ஐந்து மணி நேர வெளிநடப்புக்கு அழைப்பு விடுத்தது. தீவு முழுவதிலும் உள்ள அவர்களது சகாக்களைப் போலவே, சுகாதார தொழிற்சங்கங்களும், மனித வாழ்வை விட இலாபங்களுக்கு முன்னுரிமை அளிக்கும், 'பொருளாதாரத்தை திறந்த நிலையில்' வைத்திருப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை ஆதரிக்கின்றன.

கம்பொல மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் (WSWS Media)

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பொது சேவை தாதிமார் சங்கம் மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இலங்கை சுகாதார ஊழியர் சங்கமும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க மறுத்துவிட்டன. எவ்வாறாயினும், இந்த தொழிற்சங்கங்களின் சில உறுப்பினர்கள், வியாழக்கிழமை தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்துகொண்டனர். அனைத்து இலங்கை சுகாதார ஊழியர் சங்கமானது மே 29 அன்று ஒரு தனியான போராட்டத்தை நடத்தியது.

வேலைநிறுத்தம் செய்யும் சுகாதாரத் தொழிலாளர்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பிற கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள், ஆபத்து கொடுப்பனவு, வேலை நாட்களில் உணவு, பயண-கட்டுப்பாட்டு காலங்களில் போக்குவரத்து, கர்ப்பிணி ஊழியர்களுக்கு விசேட விடுமுறை மற்றும் பொது விடுமுறை நாட்களில் வேலை செய்வதற்கான கொடுப்பனவுகளில் கட்டுப்பாடுகளை அகற்றுதல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கடந்த இரண்டு மாதங்களாக கோவிட்-19 தொற்றுநோய்களின் பெரும் எழுச்சியை எதிர்கொண்டுள்ள சுகாதார ஊழியர்கள், இந்த அடிப்படைக் கோரிக்கைகளை முன்னெடுத்து பலவிதமான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள எந்தவொரு உரிமை கோரல்களையும் வழங்க அரசாங்கம் மறுத்துவிட்டது.

குறைவான பணியாளர்கள் மற்றும் வளங்கள் குறைவான மருத்துவ வசதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்கள், கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் சமீபத்திய மாதங்களில் குறைந்தது நான்கு பேர் இறந்துள்ளனர்.

சுகாதார ஊழியர்கள் மற்றும் இலங்கை தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள், தொழில்கள் ஊதியங்கள் வேலை நிலைமைகள் மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்கள், மூலம் கோவிட்-19 தொற்றுநோயின் பொருளாதாரச் சுமையை அவர்கள் மீது சுமத்த அரசாங்கங்கள் மற்றும் முதலாளிகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் எதிர்ப்பின் ஒரு பகுதியாகும்.

ஜூன் 8 ஆம் திகதிக்கு பின்னர், மேலதிக நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதாக சுகாதார சு.ஊ.தொ.ஒ. கூறுகிறது, ஆனால் எந்த குறிப்பிடத்தக்க விவரங்களையும் அது வழங்கவில்லை. அரசாங்க தாதிமார் சங்கத்தின் (அ.தா.ச.) தலைவர் சமன் ரத்னபிரிய, சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் கவனிக்கத் தவறினால், தொழிற்சங்கம் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கு புகார் அளிக்கும் என்று பயனற்ற மிரட்டலை விடுத்தார்.

கொழும்பின் அடக்குமுறை வேலைநிறுத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் ஒரு மரண மௌனத்தை கடைபிடித்து வருகின்றன. அவை அத்தியாவசிய சேவைச் சட்டத்தை இராஜபக்ஷ அமுல்படுத்தி இருப்பதன் உள்ளர்த்தத்தை கூட தமது உறுப்பினர்களுக்கு தெரிவிக்கவில்லை. ஏனைய இலங்கை தொழிற்சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் இந்த கொடூரமான சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து எதுவும் கூறவில்லை.

கண்டி மருத்துவமனைக்கு வெளியே இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் (WSWS media)

அரசாங்கத்தின் சர்வாதிகார தாக்குதல்களை எதிர்கொள்ள அரசியல் ரீதியாக தயாராகாவிட்டால், தொழிலாளர்கள் நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் ஜனநாயக உரிமைகளுக்குமான தங்கள் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது.

நேற்றைய உலக சோசலிச வலைத் தள முன்னோக்கு விளக்கியது போல், இதன் அர்த்தம், தொழிற்சங்கங்களிலிருந்து விலகி, சுயாதீனமான நடவடிக்கை குழுக்கள் உட்பட புதிய போராட்ட அமைப்புகளை உருவாக்குவதாகும்:

வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியானது தேசியம், இனம் அல்லது பாலினம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து, தொழிலாளர்களின் புறநிலை ஐக்கியத்தை நிரூபிக்கின்றது. ஆனால் இந்த ஒற்றுமை, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் நனவுடன் நிராகரிப்பதன் மூலமே நிலைத்திருக்கும்.

இலங்கையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஒன்றிணைப்பதற்கான போராட்டமானது அரச அனுசரணையிலான “சிங்களம் முதலில்” கொள்கையை எதிர்ப்பது, அதே போல், வாஷிங்டனின் சீனாவுக்கு எதிரான போர் திட்டங்களுக்கு இலங்கையை அடிபணிய வைப்பதற்கு மிக உறுதியான ஆதரவாளர்களாக தலைதூக்கியுள்ள தமிழ் முதலாளித்துவம் தமிழ் தேசியவாதத்தை ஊக்குவிக்க எடுக்கும் முயற்சிகளையும் எதிர்ப்பதாகும்.

இந்த நோக்கத்திற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, அதன் மே தின இணையவழி கூட்டத்தில், சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணியை (IWA-RFC) ஸ்தாபிப்பதற்கு முன்முயற்சி எடுத்தது.

பல சுகாதார ஊழியர்கள் WSWS உடன் பேசினர், இராஜபக்ஷ வின் அடக்குமுறை வேலைநிறுத்த எதிர்ப்பு சட்டங்களை கண்டித்த அவர்கள், தங்கள் மருத்துவமனைகளில் ஆபத்தான நிலைமைகளை விளக்கினர்.

பொலன்றுவை மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறியதாவது: “வேலை நிறுத்தங்களைத் தடைசெய்து இப்போது விதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய சேவை உத்தரவை நாங்கள் ஆழமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். 1980 இல் வேலை நிறுத்தக்காரர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட சட்டமும் இதுதான் [1980 இல் அரசாங்க தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தத்தை தகர்ப்பதற்கு ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன அவசரகால சட்டங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பயன்படுத்தியதையே அவர் குறிப்பிடுகிறார்.].

'வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் இந்த உத்தரவின் கீழ் சிறையில் அடைக்கப்படலாம், எனவே இந்த தாக்குதலுக்கு எதிராக எங்கள் சொந்த மூலோபாயத்தை நாங்கள் ஒழுங்கமைக்க வேண்டும். இந்த மூலோபாயத்தை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையில் அமைப்பதே முக்கிய விஷயம். அதாவது சோசலிச சமத்துவக் கட்சியால் முன்மொழியப்பட்ட படி, ஒவ்வொரு வேலைத்தளத்திலும் நடவடிக்கைக் குழுக்களை அமைத்து நமது சர்வதேச நண்பர்களை ஒன்றிணைக்க வேண்டும்.

“இதுவரை, பொலன்னறுவை மருத்துவமனையில் சுகாதார ஊழியர்களிடையே அதிக விழிப்புணர்வு இல்லை. அவர்கள் இந்தச் சட்டம் குறித்து கலந்துரையாடத் தொடங்கவில்லை. தொழிற்சங்கங்கள் இந்த பிரச்சினைகளைப் பொருட்படுத்தாமல் தொடர்கின்றன, ஆனால் நாங்கள், தொழிலாளர்கள்தான் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டும்.'

கண்டி பொது மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, தொழிற்சங்கப் பிரிவுகளில் இந்த வசதியில் உள்ள அனைத்து ஊழியர்களும் இந்த செயலில் இணைந்ததாக விளக்கினார்.

'தொழிற்சங்கங்கள் தனித்தனியாக நடவடிக்கைகளுக்கு அழைக்கின்றன. உதாரணமாக, ஒரு எதிர்ப்பு மே 29 அன்று, மற்றொரு எதிர்ப்பு ஜூன் 3 அன்று நடந்தது. மற்ற தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒரே மாதிரிதான். ஒன்றுபட்ட நடவடிக்கைக்கு அவர்கள் முற்றிலும் விரோதமானவர்கள் என்பதையும், அரசாங்கம் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ளும் என்று அவர்கள் அஞ்சுவதையும் இது காட்டுகிறது.

'வைத்தியசாலையில் உள்ள துணை சுகாதார ஊழியர்கள், இப்போது நாம் எதிர்கொள்ள முடியாத அழுத்தம் காரணமாக போராட்டத்திற்கு வர தயாராக உள்ளனர். எங்களுக்கு பாதுகாப்பான அல்லது ஒழுக்கமான பயண வசதிகள் கிடையாது. பேருந்து கட்டணங்களும் அதிகரித்துள்ளன, எந்தவொரு சமூக இடவெளியும் இல்லாமல் அவற்றில் பயணிக்கிறோம்.”

அரசாங்கத்தின் வேலைநிறுத்த தடை சட்டங்கள் குறித்து யாழ்ப்பாண மருத்துவமனை செவிலியர் ஒருவர் கூறியதாவது: “இது சர்வாதிகார விதி போன்றது. இது தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் மீதான ஜனநாயக விரோத தாக்குதல். அதை நாம் எதிர்க்க வேண்டும்.

'அரசாங்கம் கொரோனா வைரஸ் சூழ்நிலையைப் பயன்படுத்தி மக்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை சுமத்தியது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டுமென்றால், அரசாங்கம் முறையான தேசிய முடக்கத்தையும் மற்றும் பிற சுகாதார நடவடிக்கைகளையும் விதித்திருக்க வேண்டும்.

'நான் வேலைநிறுத்தத்தை ஆதரித்தேன், ஏனெனில் இந்த கோரிக்கைகள் மிக முக்கியமானவை. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வார்டில் நான் வேலை செய்கிறேன். எனக்கு தடுப்பூசி போடப்பட்டது, ஆனால் எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்பூசி இல்லை. நான் அவர்களைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டுள்ளேன், எனவே நான் இப்போது தனியாகவே வாழ்கிறேன்.

'நாங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் வேலை செய்கிறோம். எங்கள் வார்டில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே இருக்கிறார், போதுமானளவு தாதிமார் இல்லை. எந்தவொரு தளர்வும் இல்லாமல் நாங்கள் நீண்ட நேரம் வேலை செய்கிறோம், தொழிலாளர்களுக்கு சிகிச்சையளிக்க சரியான வசதிகள் இல்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே குளியலறைகள், கழிப்பறைகள் மற்றும் ஆடைமாற்று அறைகளைப் பயன்படுத்த வேண்டும். தங்களிடம் நிதி இல்லை என்று கூறி அதிகாரிகள் இந்த நிலைமையை மாற்றவில்லை.”

Loading