சீன-எதிர்ப்பு உந்துதல் அதிகரிக்கும் நிலையில், பைடென்-புட்டின் உச்சிமாநாட்டில் பதட்டங்களைத் தணிக்க அமெரிக்கா முயல்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் பைடெனுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான உச்சிமாநாடு பேச்சுவார்த்தைகள் “நல்ல விதமாக,” “சாதகமானதாக,” மற்றும் “மிகுந்த ஆக்கபூர்வமானதாக” இருந்தது என்பதான இரு நாட்டுத் தலைவர்களின் அறிவிப்புடன் புதன்கிழமை நிறைவடைந்தது. சீனாவுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் அமெரிக்க தலைமையிலான போர் உந்துதலின் பின்னணியில், கிரெம்ளினுடனான பதட்டங்களைத் தணிக்க வாஷிங்டன் முயலுவதாகத் தெரிகிறது.

ஜனாதிபதி ஜோ பைடெனும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும், ஜூன் 16, 2021, புதன்கிழமை, சுவிட்சர்லாந்தின் ஜெனேவாவில் உள்ள ‘வில்லா லா கிரெஞ்ச்’ மாளிகையில் சந்திக்க வருகிறார்கள். (AP Photo/Patrick Semansky)

இதுகுறித்து மிகப்பெரிய கேள்விக்குறிகள் இருந்தாலும், இத்தகைய முயற்சியின் இறுதி நோக்கம், போருக்கான தயாரிப்பில் சீனாவை தனிமைப்படுத்துவதற்காக பெய்ஜிங் உடனான மாஸ்கோவின் ஆழ்ந்த பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ உறவுகளை சீர்குலைப்பதாகும். உலக ஏகாதிபத்தியத்தின் முதன்மை இலக்காக சீனா அடையாளம் காணப்பட்ட ஜி7 மற்றும் நேட்டோ உச்சிமாநாடுகள் நடந்து முடிந்த பின்னரே இந்த கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

புதன்கிழமை தனிப்பட்ட செய்தியாளர் சந்திப்புகளில் பேசிய பைடெனும் புட்டினும், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தங்களது கலந்துரையாடல், அணுசக்தி ஒப்பந்தங்கள், உக்ரேன் மோதல், ஆர்க்டிக் குறித்த போட்டி, இணைய பாதுகாப்பு (cyber security), மனித உரிமைகள் மற்றும் பொருளாதார உறவுகள் உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கியது எனக் கூறினர். சில விபரங்களை வழங்குகையில், “மூலோபாய ஸ்திரத்தன்மையை” மீட்டெடுக்கும் முயற்சிக்காக மேலும் உயர்மட்ட விவாதங்கள் நடைபெறக்கூடும் என்பதை இருவருமே சுட்டிக்காட்டினர். புட்டினை ஒரு “கொலையாளி” என்று பைடென் அழைத்ததன் பின்னர் மார்ச்சில் முறிந்து போன நாட்டின் தூதர் சார்ந்த உறவுகள் இனி மீட்கப்படும். புதிய START ஒப்பந்தம் 2024 வரை நீட்டிக்கப்படவுள்ளது. ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் இணையவழி (ransomware) தாக்குதல் விவகாரங்களை எதிர்கொள்ள இருதரப்பு பணிக்குழுக்கள் உருவாக்கப்படும்.

உக்ரேன் விவகாரத்தைப் பொறுத்தவரை, அமெரிக்காவும் ஐரோப்பாவும் கருங்கடல் தீபகற்பமான கிரிமியாவை ரஷ்யா சட்டவிரோதமாகக் கைப்பற்றியதாக குற்றம்சாட்டுவது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. மேலும், இருதரப்பினரும் மின்ஸ்க் நெறிமுறையை அமல்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டைத் தெரிவித்தனர், 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தங்கள் டொன்பாஸின் நிலை குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதை அடிப்படையாகக் கொண்டவை, கிழக்கு உக்ரேனின் ஒரு பகுதியான இது, ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது, இவர்கள் கியேவில் தீவிர வலதுசாரி, அமெரிக்க ஆதரவு சதித்திட்டத்தை நடத்தி முடித்து பின்னர் ஆட்சிக்கு வந்தனர்.

அண்மையில் துருப்புக்களையும் இராணுவ உபகரணங்களையும் போட்டியிட்ட பகுதிக்கு நகர்த்தி வரும் உக்ரேனிய அரசாங்கம், கிரிமியாவை வலுக்கட்டாயமாக திரும்பப் பெற விரும்புவதாகக் கூறியதுடன், மின்ஸ்க் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தனது எதிர்ப்பை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. நேட்டோவில் உறுப்பினராக, கியேவ் இன்னமும் “தயாராக இல்லை” என்று உச்சிமாநாட்டிற்கு முன்னைய பைடெனின் அறிக்கை தெரிவித்ததன் பின்னணியில் மின்ஸ்க் க்கு புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்படுகிறது, ஆனால் நேட்டோவில் சேர இந்நாடு வெறித்தனமாக வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. உக்ரேனின் இறையாண்மை மீதான மாஸ்கோவின் “அத்துமீறல்கள்” பற்றி வாஷிங்டனின் கடுமையான ரஷ்ய எதிர்ப்பு வாய்வீச்சுக்கள் விடுக்கப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பின்னர், பெரும் புவிசார் அரசியல் நோக்கங்களுக்கான அமெரிக்க நாட்டத்தின் நலன்களுக்காக, நாடும் அதன் தீவிர தேசியவாத தலைவர்களும் குறைந்தபட்சம் தற்காலிகமாக ஓரங்கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்க ஜனாதிபதி தனது ரஷ்ய சமதரப்புக்கு விரோதமான அறிவிப்புக்களை வழங்க நிருபர்களால் பலமுறை அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும், மேலும் இணையவழி தாக்குதல்கள் (cyberattacks) குறித்து அமெரிக்கா “இராணுவ விளைவுகளுக்கு” அச்சுறுத்தியதாக அவர்கள் கூறினாலும், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் சிரியா தொடர்புபட்ட விவகாரங்களுக்கு கிரெம்ளின் தலைவர் “உதவ” முன்வந்ததால், “எந்தவித அச்சுறுத்தல்களும்” விடுக்கப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி கூறினார். “ஜனநாயக சார்பு” எதிர்ப்பாளராக பெரிதும் பிரபல்யபடுத்தப்பட்ட அலெக்ஸி நவால்னியைப் பற்றி ஒப்பீட்டளவில் குறைவாகவே பேசப்பட்டது, மேலும், அவர் இறந்தால் அது மோசமாக இருக்கும் என்று மட்டும் பைடென் குறிப்பிட்டார்.

இரத்தக்களரிக்கு குறைந்த நோக்கம் கொண்ட பைடெனின் இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க பத்திரிகைப் படைகள் உண்மையில் ஏமாற்றமடைந்தன. ட்ரம்புக்கு பதிலாக பைடென் ஆட்சிக்கு வந்தமை மாஸ்கோ மீது கடுமையான கொள்கையை பின்பற்றுவதற்கான சமிக்ஞையாக இருக்கும் என அமெரிக்க ஊடகங்களிலும் ஆளும் ஸ்தாபகத்திலும் பலர் எதிர்பார்த்திருந்தனர்.

ரஷ்யாவுடனான வாஷிங்டனின் உறவில் ஏற்பட்டுள்ள ஒரு தந்திரோபாயமான மாற்றம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு மோதல்களைத் தூண்டும். இது பற்றிய ஒரு பார்வை புதன்கிழமை காட்சிப்படுத்தப்பட்டது. புட்டின் பத்திரிகையாளர் சந்திப்பை முடித்த மாத்திரத்தில், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசெப் பொரெல் (Josep Borrell), “ரஷ்யாவுடனான நெருக்கமான ஒத்துழைப்பின் முழு தகைமையை உணர அனுமதிக்கும் புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மை ஒரு எட்டாத வாய்ப்பாக இருக்கும் என்றே நாங்கள் நம்புகிறோம்” என்று பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார். மேலும், மாஸ்கோவுடனான “எங்கள் உறவுகள் இன்னும் வீழ்ச்சி காணும்” என்று ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

வாஷிங்டன் என்ன தந்திரோபாய சூழ்ச்சியை மேற்கொள்ள முயற்சித்தாலும், மாஸ்கோவை தாக்குவதற்கான அதன் தயார்நிலை பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது. புட்டின் “சர்வதேச விதிமுறைகளுக்கு,” கட்டுப்படாவிட்டால், அவரது “உலகளாவிய நம்பகத்தன்மை” குறைந்துவிடும் என்பதுடன், அதன் “விளைவுகள்” மோசமாக இருக்கும் என்று புட்டினை பைடென் எச்சரித்தார். இணையவழி தாக்குதலை (cyberwarfare) கட்டவிழ்த்துவிடுவதற்கான பெரும் திறனை அமெரிக்கா கொண்டுள்ளது, அமெரிக்க தலைவர் குறிப்பிட்டதை கவனித்ததில், குறிப்பாக ரஷ்யாவின் எண்ணெய் தொழில் துறையின் பாதிப்பை குறிப்பிட்டது தெரிகிறது.

ரஷ்யாவில் “ஜனநாயக” கட்டமைப்பு அமைப்புக்களுக்கான அமெரிக்க ஆதரவை புட்டின் சுட்டிக்காட்டினார், இது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் கைப்பாவைகளை விட சற்று அதிகமாக இவர் கவனித்திருப்பதைக் காட்டுகிறது. புட்டின் ஒரு கொலையாளி மற்றும் மனித உரிமைகளை மீறுபவர் என்ற பைடெனின் முன்னைய விளக்கத்தை குறைத்துக் காட்டினாலும், மனித உரிமைகள் பற்றி கேள்வி எழுப்பும் அமெரிக்க பாசாங்குத்தனத்திற்கு எடுத்துக்காட்டுக்களாக உள்ள அமெரிக்காவில் நடந்த பொலிஸ் கொலைகள், ஆளில்லா விமானத் தாக்குதல்களில் (drone strikes) அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது, CIA இன் கறுப்பு தளங்களின் இருப்பு மற்றும் குவாண்டனாமோ விரிகுடாவின் தொடர்ச்சியான செயல்பாடு ஆகியவை பற்றி ரஷ்ய ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நல்லுறவை பேணுவதற்கான மேலோங்கிய தோற்றப்பாங்கிற்கு அடியில் வெடிப்புறும் பதட்டங்கள் நிலவுவதை இரு தலைவர்களும் எடுத்துக்காட்ட முயன்றனர். உச்சிமாநாடு நடந்து முடிந்தவுடன், நேட்டோ முன்னெப்போதும் நடத்தாத வகையில் தனது மிகப்பெரிய இராணுவப் பயிற்சிகளை நடத்தியது, அதிலும் ரஷ்யாவை வெளிப்படையாக குறிவைத்து நடத்தியது. உக்ரேன், கருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் அமெரிக்கா தனது இராணுவ இருப்பை அதிகரித்து வருகிறது, மேலும் மே மாதத்தில் பைடென் நிர்வாகம் ஒரு இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை வெளியிட்டது, இது அமெரிக்க ஆயுத செலவுகளை சாதனை மட்டங்களுக்கு உயர்த்தும். ரஷ்யா அதன் மேற்கு எல்லைகளில் நிலைநிறுத்த, 20 புதிய நேட்டோ எதிர்ப்பு இராணுவப் பிரிவுகளை உருவாக்குவதாக சமீபத்தில் அறிவித்தது. இந்த கோடையில், தேசியளவில் அதன் தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படைகளின் போரிடும் திறன் மற்றும் தயார்நிலையை ரஷ்யா மதிப்பாய்வு செய்து வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி புதன்கிழமை தனது கருத்துக்களில், "பிடென் ரஷ்யாவை ஆக்கிரமிப்பதாகக் கூறினார்" என்று கேட்க சிலர் எதிர்பார்த்ததாக அவர் கூறினார், இது உச்சிமாநாட்டைச் சுற்றியுள்ள உண்மையான போர் அச்சுறுத்தல்களை தற்செயலாக வெளிப்படுத்திய ஒரு கருத்தாகும். நேரடி இராணுவ மோதலின் மூலமாகவோ, நாட்டை துண்டாட இன, தேசிய வேறுபாடுகளைப் பயன்படுத்துவதாலோ, அல்லது உள்நாட்டு மோதலை ஊக்குவிப்பதாலோ என ஏதோவொன்றை அல்லது இவை மூன்றையுமே பயன்படுத்தும் வகையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துப்பாக்கி முனையில் ரஷ்யா உள்ளது. அதாவது யுரேசிய நிலப்பரப்பின் பெரும்பகுதி மீதான ரஷ்யாவின் ஆதிக்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வேட்கைக்கு பொறுத்துக்கொள்ள முடியாத வரம்பாக கருதுகிறது.

என்றாலும், ஜி 7 உச்சிமாநாட்டில் நிரூபிக்கப்பட்டதைப் போல, அமெரிக்க போர் தயாரிப்புகளில் சீனா முதல் இலக்காக இருக்க வேண்டும் என்ற உணர்வுதான் அதிகரித்தளவில் முன்னணிக்கு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கையின் மைய கருத்தாகவுள்ள வூஹான் ஆய்வகக் கோட்பாடு, மில்லியன் கணக்கான மக்களின் மரணத்திற்கு பெய்ஜிங் தான் பொறுப்பு என்ற வாதத்திற்கு அடித்தளம் அமைக்கிறது. இது, சீனா தனது நாணயத்தை கையாளுகிறது, சர்வதேச வர்த்தக மரபுகளை மீறுகிறது, கிழக்கு ஆசிய கடல் பாதைகளை தொடர்ந்து கட்டுப்படுத்துகிறது, மனித உரிமை மரபுகளை இரத்து செய்கிறது என்பது போன்ற இன்னும் பல முடிவில்லாத அமெரிக்க குற்றச்சாட்டுக்களின் பின்னணியில் தொடர்கிறது.

இரண்டு முனைகளில் போரை அமெரிக்காவால் சமாளிக்க முடியாது என்று வாஷிங்டனில் குறிப்பிடத்தக்க கவலைகள் உள்ளன. ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரம் மாஸ்கோவிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையில் நெருக்கமான உறவுகளை ஊக்குவித்ததைப் போல, அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னால் சமாளிக்கக்கூடியதை விட அதிகளவு பிரச்சினைகளை உருவாக்குமோ என்ற கவலைகளை எழுப்பியுள்ளது.

ரஷ்ய ஆளும் வர்க்கம் அதன் பங்கிற்கு, தானும் வலையில் சிக்கிக் கொண்டதாகக் கருதி, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதலைச் சமாளிக்க என்ன செய்வது என்பது குறித்து ஆழ்ந்த குழப்பத்தில் உள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா உடனான நாட்டின் உறவுகள் குறித்து கிரெம்ளினுக்கு உள்ளேயும் வெளியேயும் பிளவுகள் உள்ளன. ரஷ்யா அதன் மிகப் பெரிய அண்டை நாடுகளால் ஒவ்வொரு வகையிலும் மறைக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக, அமெரிக்காவுடன் மிகுந்த நல்லுறவை வளர்த்துக் கொள்ள புட்டின் முனைந்தார், வாஷிங்டனுடனான பதட்டங்கள் அதிகரித்தபோதும், அட்லாண்டிக் முழுவதும் தனது “நண்பர்களுக்கு” இதுபற்றி தொடர்ந்து குறிப்பிடுகிறார்.

அமெரிக்க-ரஷ்ய உறவுகளில் ஒரு புதிய “பனிப்போர்” உருவாகிறதா என்று அவரைக் கேட்டபோது, மாஸ்கோ எதிர்கொள்ளும் நெருக்கடியை பைடென் கூட அடையாளம் கண்டார். இதற்கு பதிலளித்த அவர், “சீனாவுடன் ரஷ்யா பல ஆயிரம் மைல்கள் எல்லையைக் கொண்டுள்ளது. சீனா முன்னேறி வருகிறது… உலகின் மிக சக்திவாய்ந்த பொருளாதாரமாக இருக்க முயல்கிறது,” ஆனால் ரஷ்யாவின் “பொருளாதாரமோ போராட்டத்தில் உள்ளது” என்று கூறினார். “[புட்டின்] அமெரிக்காவுடனான ஒரு பனிப்போரை எதிர்பார்க்கிறார் என்று நான் நினைக்கவில்லை,” என்று பைடென் கூறினார்.

ஒவ்வொன்றும் "எதை நாடுகின்றன" என்பதைப் பொருட்படுத்தாமல், போருக்கு அதன் சொந்த தர்க்கம் உள்ளது. தந்திரோபாய திருப்பங்களும் மாற்றங்களும் ஒருபுறமிருக்க, அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் வீழ்ச்சியடைந்து வரும் உலகளாவிய மேலாதிக்கத்தை பாதுகாப்பதற்கான அதன் உந்துதல் உலகத்தை ஒரு மிகப்பெரிய இராணுவ மோதலுக்கு இட்டுச் செல்ல அச்சுறுத்துவது தெளிவாகிறது.

Loading