முன்னோக்கு

வேர்ஜீனியா, டப்ளினில் வொல்வோ ட்ரக் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் தனிமைப்படலை முறியடிப்போம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வொல்வோ தொழிலாளர்களும் மற்றும் வாகனத்துறை தொழிலாளர்கள் அனைவரும் நியூ ரிவரில் வேலைநிறுத்தம் செய்து வரும் அண்மித்து 3,000 வொல்வோ டிரக் தொழிலாளர்களின் ஆதரவுக்கு வருமாறு உலக சோசலிச வலைத்தளம் அழைப்பு விடுக்கிறது.

ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கம் (UAW) மீண்டும் கொண்டு வந்த இரண்டாவது இடைக்கால ஒப்பந்தத்தை, பெருவாரியாக 91 சதவிகிதத்தினர் நிராகரித்ததைத் தொடர்ந்து, அந்த வொல்வோ தொழிலாளர்கள் இப்போது 10 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். முந்தைய சலுகைகளை ஈடுசெய்ய கூலிகளில் கணிசமான அதிகரிப்பு, நுகர்வு பொருட்களின் அதிகரித்து வரும் விலையுயர்வை சமாளிக்க வாழ்வாதார செலவுக்கேற்ப தொகைகளை அதிகரிக்கும் நெறிமுறை, பல அடுக்கு சம்பள முறையை மற்றும் சலுகை முறைகளைக் கைவிடுதல், நாளொன்றுக்கு எட்டு மணி நேர வேலையின் பாதுகாப்பு, தற்போதைய தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு முழுமையான மருத்துவக் கவனிப்பு ஆகியவற்றை அந்த தொழிலாளர்கள் கோருகின்றனர்.

Volvo Truck workers last month [Source: UAW 2069]

NRV வொல்வோ தொழிலாளர்கள் இரண்டு முனைகளில் ஒரு போரை முகங்கொடுக்கின்றனர். முதலாவதாக, அவர்கள் 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆண்டு வருவாய் மற்றும் 4 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆண்டு இலாபங்களுடன் ஒரு பன்னாட்டு பெருநிறுவனத்திற்கு எதிராக போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வொல்வோ நிர்வாகம், முதலாளித்துவ அரசின் முழு ஆதரவுடன், அதன் முக்கிய பங்குதாரர்களுக்கு வழங்கும் பில்லியன் கணக்கான டாலர்களுக்கு பணம் செலுத்துவதற்காக தொழிலாளர்கள் மீதான சுரண்டலைத் தீவிரப்படுத்த தீர்மானமாக உள்ளது.

வொல்வோ NRV பொது மேலாளர் ஃபிராங்கி மார்சண்ட் (Franky Marchand) வியாழனன்று ஓர் அறிக்கை வெளியிட்டார், "புதிய சுற்று பேச்சுவார்த்தைகளுக்கான வழிமுறை அனைவருக்கும் தெளிவாகும்" வரை —அதாவது, ஒரு புதிய ஒப்பந்தம் தோல்வியின்றி ஒப்புதலைப் பெறும் என்று UAW சங்கத்திடமிருந்து உத்தரவாதங்களைப் பெறும் வரையில்— நிறுவனம் பேரம் பேசும் மேஜைக்குத் திரும்பாது என்றவர் அறிவித்தார்.

"இந்த வழிமுறை நம் அனைவருக்கும் இடையே ஏற்படுத்தும் மன அழுத்தத்தைத் மிகவும் சிக்கலானதாக [அவர் காண்பதாகவும்], இது நம் சமூகத்தின் இயல்புக்கு மாறானது" என்பதையும் மார்சண்ட் சேர்த்துக் கொண்டார். உண்மையில் வொல்வோவுக்கு "தொந்தரவாக" இருப்பது என்னவென்றால், தொழிலாளர்களின் விருப்பத்தை அது கணக்கில் ஏற்க நிர்பந்திக்கப்பட்டு வருகிறது என்ற உண்மை தான். இம்மாத தொடக்கத்தில் வாக்கெடுப்பில் இரண்டாவது ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்ட போது, மார்சண்ட் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "இந்நடவடிக்கையைப் புரிந்து கொள்வது சிரமமாக உள்ளது," ஏனென்றால் இந்த ஒப்பந்தம் "ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தின் சர்வதேச தலைமை, பிராந்திய மற்றும் உள்ளூர் தலைமையால்" அங்கீகரிக்கப்பட்டுவிட்டது,” என்றார்.

மார்சண்ட் எதை "புரிந்து கொள்வது சிரமமாக" உணர்கிறார் என்றால், ஒப்பந்த ஒப்புதல் பெறும் வழிவழியாக நடந்து வந்த "வழிமுறை" —அதாவது, நிறுவனம் அது விரும்புவதை UAW சங்கத்திற்குக் கூறும், பொய்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலமாக UAW அதை நிர்பந்தித்துக் கொண்டு செல்லும்— இது தொழிலாளர்களே தலையீடு செய்வதன் காரணமாக முறிந்து போயுள்ளது.

ஜூன் 23 இல் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க UAW உடன் அது உடன்பட்டிருப்பதாக, அதாவது இன்னுமொரு வாரத்திற்கு பேச்சுவார்த்தைகள் இல்லை, என்று வியாழக்கிழமை பிற்பகல் வொல்வோ அறிவித்தது. தொழிலாளர்கள் மறியல் போராட்ட களத்தில் இருக்கும் அதேநேரத்தில் அந்த வேலைநிறுத்தத்தை நசுக்க நிர்வாகம் தீர்மானமாக உள்ளது என்பதை இது தெளிவுபடுத்துகிறது. வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களின் மருத்துவ கவனிப்பு சலுகைகளை ஏற்கனவே இரத்து செய்துள்ள நிறுவனம், ஆலை செயல்பாடுகளைத் தொடர்வதற்கு உதிரி தொழிலாளர்களைக் கொண்டு வருவதற்காக வேர்ஜீனியாவின் ஜனநாயகக் கட்சி ஆளுநரால் நிலைநிறுத்தப்பட்ட மாநில பொலிஸைப் பயன்படுத்தி வருகிறது.

இந்த போரின் இரண்டாம் முகப்பு, வொல்வோ தொழிலாளர்களைத் தனிமைப்படுத்த தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வரும் UAW இக்கு எதிரானதாகும். அது வெற்றிக்கான மூலோபாயத்தை கொண்டிருக்கவில்லை, மாறாக தோல்விக்கான மூலோபாயத்தைக் கொண்டிருக்கிறது.

மார்சண்டுக்கு விடையிறுத்து, UAW இன் 2069 உள்ளூர் கிளையின் தலைவர் மாட் ப்ளாண்டினோ (Matt Blondino) குறிப்பிடுகையில், UAW “முந்தைய இடைக்கால ஒப்பந்தங்களில் இருந்த குறைபாடுகளைச் சரிசெய்து, உரிமைக்குரியவற்றை நிறுவனம் நிறைவேற்றித் தர வேண்டுமென சங்க உறுப்பினர்கள் விரும்புகிறார்கள், அதற்காக கடுமையாக செயலாற்றி" வருகிறது என்ற வெற்று வாக்குறுதிகளுடன் ஓர் அறிக்கை வெளியிட்டார். "அவர்கள் வேலைநிறுத்த களத்தில் நமது தைரியத்தைச் சோதிக்க விரும்புகிறார்கள்" என்று குறைகூறும் அதேவேளையில், நிறுவனம் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு ப்ளாண்டினோ பணிவடக்கத்துடன் நிறுவனத்திடம் கெஞ்சுகிறார்.

ஆனால், பெருவாரியான வொல்வோ தொழிலாளர்களால் நிராகரிக்கப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களின் "குறைபாடுகளிலிருந்து" வித்தியாசமாக UAW உண்மையில் என்ன தான் முன்மொழிகிறது என்பதை பற்றி ப்ளாண்டினோ எதுவும் கூறவில்லை. அந்த ஒப்பந்தங்கள் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லையென தொழிலாளர்கள் "சரியாக" நினைத்தார்கள் என்றால், UAW உம் தனிப்பட்டரீதியில் ப்ளாண்டினோவும் ஏன் அந்தளவுக்கு ஆக்ரோஷமாக பிரச்சாரம் செய்தார்கள் என்பதையும் அவர் விளக்கவில்லை. மிகவும் குறிப்பிடத்தக்கதாக, இந்த வேலைநிறுத்தத்தில் ஜெயிக்க UAW எதையும் செய்யும் என்றவர் கூறவில்லை. அதற்கு பதிலாக, தொழிலாளர்களை மறியல் களத்தில் பட்டினியில் கிடத்துவதன் மூலமும் அவர்களைத் தனிமைப்படுத்துவதன் மூலமும் UAW அவர்களின் தைரியத்திற்குக் குழிபறிக்க அனைத்தையும் செய்து வருகிறது.

அந்த தொழிலாளர்கள் அவர்களின் எதிர்ப்பை ஒழுங்கமைக்கவும் மற்றும் அவர்கள் போராட்டத்தின் மீது UAW சங்கம் திணித்த தனிமைப்படுத்தலில் இருந்து முறித்துக் கொள்ளவும் NRV தொழிலாளர்கள் சாமானிய வொல்வோ தொழிலாளர் குழுவை (Volvo Workers Rank-and-File Committee – VWRFC) அமைத்துள்ளனர்.

திங்கட்கிழமை, ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தின் சர்வதேச தலைவர் ரோரி கேம்பிள், UAW சங்க நிதிச் செயலாளர் ரே கர்ரி மற்றும் ப்ளாண்டினோவுக்கு VWRFC ஒரு சக்தி வாய்ந்த பகிரங்க கடிதம் அனுப்பியது. இந்த கடிதம், பெருவாரியான தொழிலாளர்களால் நிராகரிக்கப்பட்ட அந்த இரண்டு உடன்படிக்கைகளில் நிறுவனம் என்ன முன்மொழிந்ததோ UAW அதிலிருந்து வித்தியாசமாக என்ன முன்மொழிகிறது என்பதை விளக்குமாறு அந்த கடிதம் கோருகிறது. மேலும் UAW வசம் பாரியளவில் ஆதாரவளங்கள் இருக்கின்ற போதும், வேலைநிறுத்த சம்பளமாக தொழிலாளர்களுக்கு வறுமை மட்டத்திற்கு வாரத்திற்கு வெறும் 275 டாலர் மட்டும் ஏன் வழங்கப்படுகிறது என்பதை UAW விளக்க வேண்டுமென்றும் அது கோருகிறது.

வேலைநிறுத்தத்தை UAW சங்கம் தனிமைப்படுத்துவதை அந்த கடிதம் பலமாக சுட்டிக்காட்டியது. UAW சங்கத்தின் சர்வதேச பேஸ்புக் பக்கம் அந்த வேலைநிறுத்தம் குறித்து ஒரேயொரு அறிவிப்பைக் கூட பதிவிடவில்லை என்றும், வாகனத்துறை தொழிலாளர்கள் உட்பட மற்ற ஆலைகளது தொழிலாளர்கள் அது குறித்து அவர்களுக்கு தெரியவே தெரியாது என்று கூறியுள்ளதையும் அது குறிப்பிடுகிறது. "நீங்கள் எங்கள் பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்கிறீர்கள்,” “இருப்பினும் ஒவ்வொரு முகப்பிலும் உங்கள் நடவடிக்கைகள் எங்கள் வேலைநிறுத்தத்தைக் கீழறுப்பதை நாங்கள் காண்கிறோம்" என்று பகிரங்கக் கடிதம் கூறுகிறது.

வேலைநிறுத்தத்தைத் தனிமைப்படுத்தும் முயற்சியில், வொல்வோவும் UAW உம் வலதிலிருந்து போலி இடது வரையில் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் மற்றும் ஊடகங்களின் பெரும் ஒத்துழைப்பைப் பெற்றுள்ளன. ஜனநாயகக் கட்சியின் முக்கிய ஊதுகுழலான நியூ யோர்க் டைம்ஸ், இம்மாதம் அந்த வேலைநிறுத்தம் மீண்டும் தொடங்கியதைப் பற்றி ஒரேயொரு கட்டுரை கூட வெளியிடவில்லை. தனது உள்ளூர் செய்தி பிரிவில் வேர்ஜீனியாவை உள்ளடக்கி உள்ள வாஷிங்டன் போஸ்டும் எந்தவொரு கட்டுரையும் வெளியிடவில்லை. அந்த வேலைநிறுத்தம் குறித்து தொலைக்காட்சி வலையமைப்புகளோ அல்லது கேபிள் செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ எதுவும் செய்தி வழங்கவில்லை. அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) ஒரு பிரிவுடன் இணைந்த ஜாகோபின் பத்திரிகை அது பற்றி எழுதவில்லை என்பதோடு, DSA அதுவே கூட எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

தொழிலாள வர்க்கம் தான் வொல்வோ NRV தொழிலாளர்களுக்கு ஆதரவை ஒழுங்கமைக்க வேண்டும். இது பென்சில்வேனியாவின் மேரிலாந்து மற்றும் வேர்ஜீனியாவில் உள்ள வொல்வோ மற்றும் வொல்வோ-மேக் தொழிலாளர்களிடம் இருந்து தொடங்குகிறது. NRV வேலைநிறுத்தம் ஏற்படுத்திய பண்டங்களின் பற்றாக்குறை காரணமாக வொல்வோ-மேக் நிறுவனம் தற்காலிக வேலை குறைப்பைத் தொடங்கி வருகின்ற போதும் கூட, அந்த ஆலைகளின் வேலையிடங்களில் UAW 3,500 தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்தி வைத்துள்ளது.

வொல்வோ, ஐரோப்பா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் செயல்பாடுகளைக் கொண்டுள்ள ஒரு சர்வதேச நிறுவனமாகும். வேர்ஜீனியாவின் டப்ளினில் உள்ள அவர்களது சகோதர சகோதரிகளின் போராட்டத்தை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வொல்வோ தொழிலாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருவது அவசியம்.

இதே நிலைமைகளை எதிர்கொண்டிருக்கும் அனைத்து வாகனத்துறை தொழிலாளர்கள் வரையில் ஆதரவு விரிவாக்கப்பட வேண்டும். வொல்வோ வேலைநிறுத்தம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட போது, Big Three ஆலைகள் மற்றும் உதிரி பாகங்களுக்கான ஆலையின் வாகனத்துறை தொழிலாளர்கள் அவர்களின் முழு ஆதரவையும் ஒரு கூட்டுப் போராட்டத்திற்கான விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். NRV இல் எடுக்கப்பட்ட நிலைப்பாடு பற்றிய செய்தி இன்னும் பரவலாக தொலைதூரத்திற்குப் பரப்பப்பட்டு, UAW மற்றும் ஊடகங்கள் திணித்துள்ள இருட்டடிப்பு முறிக்கப்பட வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக வொல்வோவில் இந்த வேலைநிறுத்தமானது, அலபாமாவில் Warrior Met சுரங்க தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்; மாசசூசெட்ஸ் வொர்செஸ்டரில் செவிலியர்கள் வேலைநிறுத்தம்; பென்சில்வேனியா மற்றும் பிற மாநிலங்களில் ATI எஃகுத்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் உள்ளடங்கலாக, தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் கோபம் மற்றும் கிளர்ச்சி மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் அமெரிக்கா எங்கிலுமான தொடர்ச்சியான போராட்டங்களின் ஒரு பகுதியாகும். டெக்சாஸ் பியூமாண்டில் ExxonMobil எண்ணெய் நிறுவன தொழிலாளர்கள் வேலைகளைப் பாதுகாப்பதற்கும் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளைப் பெறுவதற்குமான அவர்களின் போராட்டத்தில் கதவடைப்பு செய்துள்ளனர்.

இந்த ஒவ்வொரு இடத்திலும், தொழிற்சங்கங்கள்—ஐக்கிய அமெரிக்க சுரங்கத்துறை தொழிலாளர்கள் சங்கம், மாசசூசெட்ஸ் செவிலியர் சங்கம் மற்றும் ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை—UAW போலவே அதே அணுகுமுறைகளையே பயன்படுத்தி வருகின்றன. அவை போராட்டங்களைத் தனிமைப்படுத்தி வரும் அதேவேளையில், வொல்வோவில் வெடித்துள்ள இந்த வேலைநிறுத்தம் குறித்து அவை தொழிலாளர்களுக்கு ஒன்றும் கூறுவதும் இல்லை. இது முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

இந்த பெருந்தொற்றுக்கு ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பு, பாரியளவில் சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பு, அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு என இவை உலகம் முழுவதும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு எரியூட்டுகின்றன. ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர் சங்கம் மீண்டும் கொண்டு வந்த ஓர் ஒப்பந்தத்தை நிராகரித்த பின்னர், கனடாவில் சுரங்கத் தொழிலாளர்கள் தற்போது Vale Inco இக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் பெருகிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், வாகனத்துறை தொழிலாளர்கள் உற்பத்தியை நிறுத்தும் முயற்சியில் வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இலத்தீன் அமெரிக்கா எங்கிலுமான சுரங்கத் தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு எதிராக வேலைநிறுத்த நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

ஒரு சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுவை ஒழுங்கமைப்பதில், வொல்வோ தொழிலாளர்கள் NRV இல் தொழிலாளர்களே அவர்களின் புதிய அதிகாரத்தை உருவாக்கி உள்ளார்கள். இந்த முன்முயற்சி, முதலாளித்துவ சுரண்டல் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஐக்கியப்பட்ட எதிர்த்தாக்குதலை அபிவிருத்தி செய்ய, வொல்வோ எங்கிலும், வாகனத் தொழில் துறை மற்றும் அதற்கு அப்பாலும், அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும், விரிவுபடுத்தப்பட வேண்டும்.

வொல்வோ வேலைநிறுத்த தனிமைப்படுத்தல் உடைக்கப்பட வேண்டும்!

சாமானிய வொல்வோ தொழிலாளர் குழுவின் பகிரங்கக் கடிதத்தை முடிந்த வரை பரவலாக விநியோகிக்குமாறு அனைத்து தொழிலாளர்களுக்கும் உலக சோசலிச வலைத் தளம் அழைப்பு விடுக்கிறது. உங்கள் சக-தொழிலாளர்களுக்கும், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அனுப்புங்கள், சமூக ஊடகங்களில் பதிவிடுங்கள். உங்கள் ஆதரவு செய்திகளை vwrfc@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்கள் பணியிடத்தில் ஒரு சாமானிய தொழிலாளர் குழுவை உருவாக்குவதற்கு உதவ WSWS தொடர்பு கொள்ளுங்கள்.

Loading