முன்னோக்கு

ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியில் இராணுவமும் பொலிஸூம் உடந்தையாய் இருந்ததன் மீதான புதிய வெளியீடுகளை ஜனநாயகக் கட்சியும் ஊடகங்களும் மறைக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்கு ஐந்து மாதங்களுக்கும் அதிகமான பின்னரும், ட்ரம்பும் மற்றும் குடியரசுக் கட்சியினரும் அணித்திரட்டிய பாசிசவாத சக்திகளையும் மற்றும் அந்த சதியின் முழு அளவையும், அமெரிக்க மக்களிடமிருந்து மூடிமறைக்க, FBI, பென்டகன் மற்றும் அமெரிக்க தலைமைச் செயலக (Capitol) பொலிஸ் என இவற்றின் உயர்மட்ட அதிகாரிகளின் உதவியுடன், ஒரு தொடர்ச்சியான முயற்சி நடந்து வருகிறது.

ட்ரம்ப் ஆதரவாளர்கள் 2021, ஜனவரி 6, புதன்கிழமை, வாஷிங்டனில் நாடாளுமன்றக் கட்டிடத்தை தாக்கினர் [Credit: AP Photo/John Minchillo]

அமெரிக்க முதலாளித்துவத்தின் இரு கட்சிகளும் செயல்களைப் பங்கு போட்டு கொண்டுள்ளன. ஹிட்லர் பாணியில் வரவிருந்த தலைவர் (Führer) ட்ரம்பின் பின்னால் பெருமளவில் அணிவகுத்து நிற்கும் குடியரசுக் கட்சி, Proud Boys, Oath Keepers போன்ற அமைப்புகளாலும், வெள்ளையின மேலாதிக்கவாதிகள் மற்றும் நவ-நாஜிக்களால் தலைமைச் செயலகம் (Capitol) அடித்து நொறுக்கப்பட்ட நிகழ்வு போன்ற எதுவும் அங்கே நடக்கவே இல்லை என்ற அவரின் பொய்யான வாதங்களையும், அந்த தேர்தல் மோசடியானது என்றும் திரும்ப திரும்ப கூறி வருகிறது.

தலைமைச் செயலக வளாகத்தின் எந்தவொரு பாதுகாப்பையும் நாசப்படுத்துவதில் அரசுக்குள் இருந்த ட்ரம்ப் கூட்டாளிகள் வகித்த முக்கிய பாத்திரத்தை ஆவணப்படுத்தி, ஜனநாயகக் கட்சியினர் கூட்டிய காங்கிரஸ் சபை விசாரணைகளிலேயே சில விசயங்கள் அம்பலப்பட்டு வெளிப்படுகின்ற நிலையில், பைடென் நிர்வாகமும் பெரும்பாலான ஊடகங்களும் அதிர்ச்சியூட்டும் அந்த வெளியீடுகளை ஒடுக்க வேலை செய்து வருகின்றன.

"இருகட்சிகளது ஒருமனதான சம்மதத்துடன்" மற்றும் "நல்லிணக்கத்திற்காக" குடியரசுக் கட்சியில் ட்ரம்புக்கு உடந்தையாய் இருந்தவர்களிடம் கெஞ்சியவாறு, வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்தின் ஒரு கட்சியாக விளங்கும் ஜனநாயகக் கட்சி, அமெரிக்க "ஜனநாயக" வெளிவேஷத்திற்குப் பின்னால் வீசும் சர்வாதிகார துர்நாற்றத்தை அம்பலப்படுத்தும் அந்த வெளியீடுகளின் அரசியல் மற்றும் சமூக விளைவுகளைக் குறித்து பீதியடைந்துள்ளது. ஒவ்வொரு புதிய வெளியீடும், நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் முதல் ஒளிபரப்பு மற்றும் கேபிள் செய்தி வலையமைப்புகள் வரை, பிரதான செய்தி ஊடகங்களாலும் ஜனநாயகக் கட்சித் தலைமையாலும் முறையாக குறைத்துக் காட்டப்படுகிறது அல்லது முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிறது.

FBI இயக்குனர் கிறிஸ்டோபர் இவ்ரே, இராணுவத் தளபதிகளின் இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் வால்டர் பியாட் மற்றும் அமெரிக்க இராணுவ பசிபிக்கின் இப்போதைய உயர்மட்ட தளபதி ஜெனரல் சார்லஸ் ஃப்ளின் ஆகியோரிடம் மேற்பார்வை மற்றும் சீர்திருத்தத்திற்கான பிரதிநிதிகள் சபை குழு செவ்வாயன்று விசாரணை நடத்தியது.

அந்த விசாரணையின் போது, பின்வருவன வெளிப்படுத்தப்பட்டன:

• சமூக ஊடக தளமான பார்லரில் (Parler) பதிவிடப்பட்ட 50 க்கும் அதிகமான குறிப்புகள் மீது FBI நடவடிக்கை எடுக்க தவறியது, மற்றும் தலைமை பெண்மணி கரோலின் மலோனியின் வார்த்தைகளில் கூறுவதானால், “தலைமைச் செயலகத்தில் குறிப்பிடத்தக்க வன்முறை அச்சுறுத்தல்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன,” என்பதைக் கண்டுங்காணாமல் உதறி விட்டது.

• ஜனவரி 6 ஐ குறிப்பிட்டு அந்த ஆணையம் ஏன் சாத்தியமான ஓர் அச்சுறுத்தல் குறித்த மதிப்பீட்டை வழங்கவில்லை அல்லது உள்நாட்டு பாதுகாப்புத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படவில்லை மற்றும் ஜனவரி 6 ஐ தேசிய சிறப்பு பாதுகாப்பு தினமாக ஏன் முன்வைக்கவில்லை என்பதற்கு இயக்குனர் இவ்ரே பதிலளிக்க மறுத்துவிட்டார். அந்த குழு கோரிய ஆவணங்களை கூட FBI ஏன் இதுவரை வழங்கவில்லை என்பதற்கும் இவ்ரே விளக்கம் கூறவில்லை.

• தலைமைச் செயலகம் பாசிச போராளிகள் குழுவால் முற்றுகையிடப்பட்டு, சட்ட பிரதிநிதிகள் பெரும்பிரயத்தனத்துடன் உதவிக்காக கெஞ்சி கொண்டிருந்த போதும் கூட, “தலைமைச் செயலகத்தைச் சீர்செய்யும் படைகளாக" பெடரல் துருப்புகளைப் பயன்படுத்த அவர் விரும்பவில்லை என்பதை ஜெனரல் பியாட் ஒப்புக் கொண்டார்.

• தலைமைச் செயலகத்தை சீர்செய்ய தேசிய பாதுகாப்புப்படை துருப்புகளை அனுப்ப ஏன் பல மணி நேரம் ஆனது என்பதையும் எந்த ஜெனரலும் விளக்கவில்லை. ஒரு "திட்ட நடவடிக்கையின் கருத்துரு" இன் (concept of operation) தேவை மீது அவர்கள் அபத்தமாக பதில் கூற மறுத்ததின் பொய்மை, அப்போதைய வாஷிங்டன் டி.சி. தேசிய பாதுகாப்புப்படை தளபதி வில்லியம் வால்கரின் முந்தைய சாட்சியத்தில் எடுத்துக்காட்டப்பட்டிருந்தது. தலைமைச் செயலகத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த சிப்பாய்கள் "மோசமாக தெரிகிறார்கள்" என்ற அடிப்படையில், தேசிய பாதுகாப்புடை துருப்புகளை நிலைநிறுத்த அனுமதிக்குமாறு, மதியம் 1.49 மணிக்கு, அவரின் முதல் கோரிக்கையை பியாட் மற்றும் ஃப்ளின் நிராகரித்து அதை நியாயப்படுத்தியதாக வால்கர் தெரிவித்திருந்தார்.

வால்கரிடம் முழுமையாக ஆயுதமேந்திய 155 பாதுகாவலர்கள் நிலைநிறுத்த தயாராக இருந்ததாகவும், தலைமைச் செயலகத்திற்கு அவர்கள் சரியான நேரத்தில் அனுப்பப்பட்டிருந்தால் "சுற்றுவட்டாரத்தைப் பாதுகாத்து" “வித்தியாசத்தை ஏற்படுத்தி" இருக்க முடியுமென்று வால்கர் மார்ச் மாதம் மற்றொரு சாட்சிய உரையில் குறிப்பிட்டிருந்தார்.

ட்ரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஓய்வுபெற்ற ஜெனரல் மைக்கல் ஃப்ளினின் இளைய சகோதரர் தான் இந்த சார்லஸ் ஃப்ளின் என்ற உண்மையைச் செவ்வாய்கிழமை விசாரணையில் யாருமே குறிப்பிடவில்லை. ஃப்ளின் ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்கு சில நாட்களுக்கு முன்னர், இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்துமாறும், பைடெனுக்கு சிறிய வித்தியாசத்தில் வெற்றியை வழங்கியிருந்த இழுபறியான மாநிலங்களில் துப்பாக்கி முனையில் புதிய தேர்தல்களை நடத்தவும் பகிரங்கமாக ட்ரம்பை வலியுறுத்தினார்.

அதே நாளில், பிரதிநிதிகள் சபை நிர்வாகக் குழு தலைமைச் செயலக பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மைக்கல் போல்டனிடம் விசாரணை நடத்தியது, அப்போது அதில் போல்டன் அவரது நான்காவது "அதிரடி அறிக்கையின்" உள்ளடக்கம் குறித்து விவாதித்தார். அந்த அறிக்கையிலும் மற்றும் அந்த விசாரணையின் போதும் பின்வருவன வெளிப்படுத்தப்பட்டன:

• அமெரிக்க தலைமைச் செயலக பொலிஸ் கட்டுப்பாட்டு மற்றும் அவசர விடையிறுப்பு குழு, அல்லது CERT, 2018 மற்றும் 2019 இல் ஒரு தனியார் துணைஇராணுவப் படை ஒப்பந்த நிறுவனத்தின் பயிற்சிக்காக மொத்தம் 90,075 டாலர் செலவிட்டிருந்தது, இந்த நிறுவனம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்காவின் அருவருக்கத்தக்க காலனித்துவ போர்களில் பல் உடைபட்ட நவ-பாசிசவாத முன்னாள் சிறப்பு படை நடவடிக்கைகளின் கொலைகாரர்கள் நடத்தப்படுவதாகும்.

• இந்த CERT குழு தான், ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் போது தலைமை செயலகத்திற்குள் சிக்கியிருந்த பொலிஸிடம் இருந்து வந்த அவசர கோரிகைகளுக்குப் பதிலளிக்க மறுத்தது. "மக்கள் படிகளில் இருந்து கீழே விழுவதை அவர்கள் விரும்பவில்லை," என்பதால் CERT "உயிருக்கு பாதிப்பேற்படுத்தாத" வெடிமருந்துகளைப் பயன்படுத்த விரும்பவில்லை என்று ஒரு CERT அதிகாரி சிறப்பு-நடவடிக்கை குழு அதிகாரி ஒருவரிடம் கூறியது அந்த விசாரணையின் போது வெளிப்பட்டது.

"தலைமை வெளியேற்றங்கள்," அதாவது, இலக்கு வைக்கப்பட்ட ஜனநாயகக் கட்சி சட்ட பிரதிநிதிகளையும் அத்துடன் துணை ஜனாதிபதி மைக் பென்ஸையும் தூக்கிலிட வேண்டுமென கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட இராணுவ பயிற்சி பெற்ற போராளிக்குழு உறுப்பினர்களிடமிருந்து அவர்களை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள CERT தவறிவிட்டது.

CERT துருப்புகளை நிலைநிறுத்த தவறியதால் தான் "காங்கிரஸ் சபை தலைமை அல்லது துணை ஜனாதிபதியே கூட ஆபத்தில்" சிக்கினாரா? என்று போல்டனிடம் அக்குழுவின் தலைவி Zoe Lofgren வினவினார், "அவர்கள் அங்கே இல்லை என்பது தான் கவலை அளிக்கிறது," என்று போல்டன் அழுத்தத்துடன் கூறினார்.

இந்த உண்மைகள் எதுவுமே நடைமுறையளவில் பிரதான செய்தி ஊடகங்களில் அறிவிக்கப்படவில்லை அல்லது பைடென் நிர்வாகமோ அல்லது ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் சபை தலைமையோ இதை குறிப்பிடவில்லை. குடியரசுக் கட்சி மற்றும் அரசு ஒடுக்குமுறை அமைப்புக்களுக்குள் நவ-நாஜி துணை இராணுவப் படைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்பது உட்பட அந்த சதி மீதான மவுனத்தில், ஜனநாயகக் கட்சியில் "முற்போக்கானவர்கள்" என்றழைக்கப்படுபவர்களும் சேர்ந்துள்ளனர். பேர்ணி சாண்டர்ஸ் அல்லது அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்ட்டெஸ் மற்றும் பிரதிநிதிகள் சபையிலுள்ள அவரது சக "குழு" உறுப்பினர்கள் யாருமே இன்று வரையில் ட்விட்டர் கணக்குகளில் கூட இந்த வெளியீடுகளைக் குறித்து ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லை.

ஜனவரி 6 இல் உயர்மட்ட இராணுவ தலைமையிடம் தேசிய பாதுகாப்பு துருப்புக்களை நிலைநிறுத்துமாறு கோரிய முதல் கோரிக்கைக்கும் அதன் இறுதி ஒப்புதலுக்கும் இடையில் நூற்று தொண்ணூற்றொன்பது நிமிடங்கள் இருந்ததாக வால்கர் முதல்முறை மார்ச் ஆரம்பத்தில் சாட்சியம் வழங்கிய போது WSWS எழுதியது, “வால்கர் ஆவணப்படுத்திய சம்பவங்கள் வேறெந்த நாட்டில் நடந்திருந்தாலும், அவை சரியாக ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியாக பார்க்கப்பட்டிருக்கும். ஆனால், வால்கரின் சாட்சியம் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு, ஊடகங்களில் குறைத்துக் காட்டப்பட்டது."

மூன்றரை மாதங்களுக்குப் பின்னர், மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் கவனமாக சுற்றி வளைத்து காங்கிரஸ் விசாரணைகளில் வெளிவந்துள்ள தகவல்களும் இந்த பகுப்பாய்வை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் "நல்லிணக்கம்" என்ற பெயரிலும், போர் மற்றும் சமூக பிற்போக்குத்தனத்திற்கான இருகட்சிகளது ஒருமனதான கொள்கையைப் பாதுகாப்பதற்கும், பதவியிலிருந்த ஓர் அமெரிக்க ஜனாதிபதியால் முயற்சிக்கப்பட்ட பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சி ஆளும் வர்க்கத்தின் தரைவிரிப்புக்குக் கீழ் சுருட்டப்படுகிறது என்றளவுக்கு அமெரிக்க ஜனநாயகம் சீரழிந்துள்ளது.

இந்த அபிவிருத்திகளைத் தொழிலாளர்கள் கூர்மையான எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் மற்றும் பாசிச சக்திகளின் வளர்ச்சியை எதிர்ப்பதில், ஜனநாயகக் கட்சியின் மீதோ அல்லது ஆளும் வர்க்கத்தின் வேறெந்த பிரிவு மீதோ நம்பிக்கை வைக்க முடியாது. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும், சோசலிசத்திற்கான ஒரு நனவான போராட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஐக்கியப்பட்ட போராட்டத்தால் மட்டுமே, முதலாளித்துவ போர் முனைவையும், பாரிய வறுமை மற்றும் சர்வாதிகாரத்தையும் தடுத்து நிறுத்த முடியும்.

Loading