ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொலை செய்யப்பட்டதற்காக டெரெக் சோவன் இற்கு 22.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

2020 மே 25 அன்று ஜோர்ஜ் ஃபுளோய்ட்டை கொன்ற முன்னாள் மினியாபோலிஸ் காவல்துறை அதிகாரி டெரெக் சோவனுக்கு வெள்ளிக்கிழமை 22.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2021 ஜூன் 25, வெள்ளிக்கிழமை, மினியாபோலிஸில் உள்ள ஹென்னெபின் கவுண்டி நீதிமன்றத்தில், ஹென்னெபின் கவுண்டி நீதிபதி பீட்டர் கேஹில் 22 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததை முன்னாள் மினியாபோலிஸ் காவல்துறை அதிகாரி டெரெக் சோவன் கேட்கின்றார் [Credit: Court TV via AP, Pool]

மூச்சுத்திணறல் அடையும் வரை 9 நிமிடங்களுக்கும் மேலாக ஃபுளோய்ட்டின் கழுத்தில் அழுத்திய கைத்தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட சோவன் நீதிமன்றத்தில் ஒரு மருத்துவ முகமூடியை அணிந்துகொண்டு ஹென்னெபின் கவுண்டி நீதிமன்ற நீதிபதி பீட்டர் ஏ. கேஹில் தண்டனையை வாசித்தபோது அவரது இடது பக்கம் பார்த்தார். சோவன் விசாரணை முடிந்தவுடன் உடனடியாக நீதிமன்ற அறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டு, சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஏப்ரல் 20 ம் தேதி சோவன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கான அரசின் விதிமுறைகளால் தேவைப்படும் குறைந்தபட்ச 12.5 ஆண்டுகளை விட இந்த தண்டனை அதிகமாக இருந்தது. அவரது 22 பக்க “தண்டனை உத்தரவு மற்றும் குறிப்பாணை கருத்தில்” நீதிபதி கேஹில் “150 மாத வழமையான சிறைத் தண்டனையை விட கூடுதல் பத்து ஆண்டுகள் அதிகமான 270 மாதங்கள் என்பது பொருத்தமானது” என எழுதினார்.

நீதிபதி "திரு. ஃபுளோய்ட்டின் மரணத்திற்கும், குறிப்பாக கொடூரமான முறையில் மற்றும் அவரது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காகவும் சோவன் பொறுப்பேற்க வேண்டும்" என்று எழுதினார். இது அரசு தரப்பு கோரிய முப்பது ஆண்டுகளைவிட குறைவான தண்டனையாகும். இது ஒரு மினசோட்டா வழக்கில் ஒரு போலீஸ் அதிகாரியால் கொலை செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட மிக நீண்ட தண்டனையாகும்.

சட்ட வல்லுநர்களின் கூற்றுப்படி, சோவன் சிறையில் இருந்து மூன்றில் இரண்டு பங்கு சிறைவாசம் அல்லது சுமார் 15 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் சிறையில் இருந்து வெளியேற முடியும். ஃபுளோய்ட் குடும்பத்தின் வழக்கறிஞரான பென் க்ரம்ப், இந்தத் தீர்ப்பிலிருந்து குடும்பம் "ஓரளவு நீதியை" பெற்றுள்ளது, ஆனால் வரவிருக்கும் மத்திய பொதுஉரிமைகள் விசாரணையில் சோவனிற்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று நம்புவதாக குறிப்பிட்டார்.

தண்டனை அறிவிப்புக்கு முன்னதாக, "கூடுதல் சட்ட விஷயங்கள் கையிலுள்ளதன்" காரணமாக ஒரு முழுமையான முறையான அறிக்கையை கொடுக்க முடியாது என்று சோவன் சுருக்கமாகப் பேசினார். பின்னர், ஃபுளோய்ட் குடும்பத்தினரிடம் திரும்பி, "எதிர்காலத்தில் வேறு சில தகவல்கள் கிடைக்கப்போகிறது. அவை ஆர்வத்திற்குரியதாக இருக்கும். மேலும் விஷயங்கள் உங்களுக்கு மன அமைதியைத் தரும் என்று நம்புகிறேன்” என்றார். ஆனால் இதன் மூலம் அவர் எதை கருதினார் என்பதை அவர் விளக்கவில்லை.

நீதிமன்ற அறைக்கு வெளியே பேசிய மினசோட்டா அரச வழக்குத்தொடுனர் கீத் எலிசன், சோவன் மீது தனது அலுவலகம் வழக்குத் தொடர்ந்ததாக குறிப்பிட்டார். "இன்றைய தண்டனை நீதி அல்ல, ஆனால் இது நீதிக்கான பாதையில் உண்மையான பொறுப்புக்கூறலின் மற்றொரு தருணம்" என்று கூறினார். எவ்வாறாயினும், அமெரிக்காவில் இதுவரை நடந்த பொலிஸ் கொலைகளின் எண்ணிக்கை வாஷிங்டன் போஸ்ட் அறிவித்தபடி ஜூன் 21 வரை 431 இறப்புகளாகும். இந்த ஆண்டு 1,000 பேரை சென்றடையலாம். அதே எண்ணிக்கையில் 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் கொல்லப்படுகிறனர்.

ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் அன்புக்குரியவரை பகிரங்கமாக கொலை செய்ததற்காக அதிகபட்சமாக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டுமென, அவர் அறிவிப்பதற்கு முன்னர் நீதிபதி கேஹிலிடம் கேட்டுக் கொண்டனர். ஃபுளோய்ட்டின் சகோதரர் ரோட்னி, இது ஒரு சிறிய தண்டனையாகும் என்றும், குடும்பம் “அவர் நம் வாழ்வில் இல்லாததால் ஆயுள் தண்டனையை அனுபவிக்கின்றது. அது என்னை மரணம்வரை பாதிக்கிறது” என்றும் கூறினார். ஃபுளோய்ட் மருமகன் பிராண்டன் வில்லியம்ஸ், "ஜோர்ஜ் கொலை செய்யப்பட்டதைப் பற்றி நீங்கள் நினைக்கும் போது, இரத்தம்தோய்ந்தவிதத்தில், கழுத்தில் முழங்காலுடன் 9 நிமிடங்கள் 29 விநாடிகள் மரணதண்டனை பாணியில் பட்ட பகலில் நிகழ்ந்தது" என்று கூறினார்.

சோவனின் பாதுகாப்பு வழக்கறிஞர் எரிக் நெல்சன், ஜூரி முறைகேடு மற்றும் நீதித்துறை பிழைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய விசாரணையை கோரியதன் மூலம், இந்த நாள் தொடங்கியது. ஜூரர் பிராண்டன் மிட்செல் ஃபுளோய்ட் கொலை செய்யப்பட்ட ஒளிப்பதிவு ஏன் சோவனின் தண்டனையை ஒரு தெளிவான தேர்வாக மாற்றியது என்பதை விளக்கினார். இவை ஒரு சிறப்பு விசாரணைக்கு அடிப்படையாக இருந்ததுடன், மற்றைய விடயங்களுடன் நீதிபதி விசாரணை இடத்தை மாற்றியிருக்க வேண்டும் என நெல்சன் வாதிட்டார். இருப்பினும், கேஹில் இவ்விண்ணபங்களை நிராகரித்து, மதியத்திற்கு பின்னர் தண்டனை அறிவிப்புக்கு சென்றார்.

2020 நினைவு நாளில் 17 வயது டார்னெல்லா ஃப்ரேஷியரால் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட ஜோர்ஜ் ஃபுளோய்ட் சோவனால் கொலை செய்யப்பட்ட கொடூரமான ஒளிப்பதிவு இணையத்தளத்தில் 1.4 பில்லியன் முறை பார்க்கப்பட்டது. 46 வயதான கறுப்பின மனிதரான ஃபுளோய்ட் தனது உயிருக்கு மன்றாடி தனது தாயை கூப்பிடுகையில், வெள்ளையின பொலிஸ் அதிகாரி சோவன் கழுத்தில் கொலைகாரத்தனமாக அலட்சியத்துடன் அழுத்தியமை, இன பாகுபாடு மற்றும் பொலிஸ் வன்முறைக்கு எதிராக அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் மில்லியன் கணக்கானோர் கலந்துகொண்ட பல்லின வெகுஜன இயக்கத்தைத் தூண்டியது.

குற்றம்சாட்டப்பட்டதிலிருந்து, சோவன் மினசோட்டாவின் ஓக் பார்க் ஹைட்ஸில் உள்ள அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் அவரது சொந்த பாதுகாப்பிற்காகவும், அவரிடம் கொண்டு வரப்படும் உணவுடனும் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

மார்ச் நடுப்பகுதியில், நடுவர் விசாரணைக்கு சில வாரங்களுக்கு முன்பு, மினியாபோலிஸ் நகரம், ஃபுளோய்ட்டின் குடும்பத்திற்கு தவறான மரணத்திற்கு 27 மில்லியன் டாலர்களை இழப்பீடாக வழங்க ஒப்புக்கொண்டது. இது நகர வரலாற்றில் இதுபோன்ற மிகப்பெரிய உடன்பாடாகும்.

ஃபுளோய்ட்டின் கொலையில் தொடர்புடைய மற்ற மூன்று அதிகாரிகளான ஜே. அலெக்சாண்டர் குயெங் (27 வயது), தோமஸ் லேன் (38 வயது) மற்றும் டூ தாவோ (35வயது) ஆகியோர் மார்ச் மாதத்தில் கொலை மற்றும் படுகொலை ஆகிய இரண்டிற்கும் உதவி மற்றும் உதவியது என்ற அரச குற்றச்சாட்டில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட உள்ளனர். நான்கு அதிகாரிகளும் அமெரிக்க நீதித் துறையால் மத்திய அரச குற்றங்களுக்காகவும், சோவன் அதிகப்படியான பலத்தை பிரயோகித்தற்காகவும், ஃபுளோய்ட்டின் குடியியல் உரிமைகளை மீறியதற்காகவும், குயெங் மற்றும் தாவோ ஆகியோர் குயெங் மற்றும் சோவனை தடுக்க தவறியதற்காகவும் மற்றும் லேன் மற்றும் தாவோ ஆகியோர் ஃபுளோய்ட்டிற்கு மருத்துவ உதவி கிடைப்பதை வேண்டுமென்றே தடுத்ததற்காகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

2017 ஆம் ஆண்டில் பொலிஸ் மிருகத்தனமான சம்பவத்திற்காக சோவன் மீது ஒரு தனி மத்திய ஆட்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதன்போது அவர் 14 வயது சிறுவனை மூச்சுத் திணறடித்தார் மற்றும் ஒரு இளைஞனின் தலையில் ஒரு போலீஸ்காரரின் ஒளிரும் விளக்கால் அடித்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் சோவன் மீது வழக்குத் தொடுப்பது, தண்டனை வழங்குவது மற்றும் இப்போது தண்டனை வழங்கப்படுவது ஆகியவை தொழிலாள வர்க்கம் மற்றும் அனைத்து இனங்களையும், இனப் பின்னணியை சேர்ந்த ஏழைகளுக்கு எதிரான பொலிஸ் வன்முறையின் வெடிக்கும் சமூக மற்றும் அரசியல் தாக்கங்கள் குறித்த அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்திற்குள்ளேயே உள்ள கவலையினால் எழுந்த ஒரு நடவடிக்கையாகும். சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் விகிதாச்சாரத்திற்கு பொருத்தமற்ற பொலிஸ் மிருகத்தனம் மற்றும் வன்முறைக்கான காரணத்தை அமெரிக்க முதலாளித்துவ சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் வறுமை மற்றும் சமூக-பொருளாதார சமத்துவமின்மை ஆகியவற்றின் நிலைமைகளிலேயே கண்டுகொள்ள முடியும்.

Loading