தடுப்பூசி வழங்கலின் நிலையற்ற தன்மையால் ஆபிரிக்கா மூன்றாவது கொடிய COVID-19 தாக்கத்தை எதிர்கொள்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

COVID-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் ஆபிரிக்கா முன்னொருபோதும் இல்லாத வகையில் தொற்றுஅதிகரித்து வருகிறது, புதிய தொற்றுக்கள் ஆறு வாரங்களுக்குள், வாரத்தில் சராசரியாக 25 சதவிகிதம் அதிகரித்து, ஜூன் 28 ஆம் தேதியுடன் கிட்டத்தட்ட தொற்றுக்கள் 202,000 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இந்தியா முழுவதையும் தாக்கியதைப் போன்ற புதிய அலை ஒன்று வரலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஆபிரிக்கா உத்தியோகபூர்வமாக 4.8 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுக்களையும் 130,000 இறப்புகளையும் பதிவு செய்துள்ளது, இது உலகளாவிய தொற்றுக்களில் 2.9 சதவிகிதத்தையும் இறப்புகளில் 3.7 சதவிகிதத்தையும் குறிக்கிறது. ஆனால் நோய் அறிகுறிகள் உள்ளவர்களைச் பரிசோதிக்க போதியவசதிகளின்மை, இறப்புகளைப் பதிவு செய்வதற்கான தரப்படுத்தப்பட்ட அறிக்கையிடல் நடைமுறைகள் இல்லாதது மற்றும் பல நாடுகள் இறப்புத் தரவைச் சேகரிக்காத நிலைமைகளின் கீழ் இது மிகவும் குறைத்து மதிப்பிடப்படுகிறது.

இந்த வியாழக்கிழமை ஜூன் 17, 2021 இல், கென்யாவின் மச்சாகோஸில் உள்ள மச்சகோஸ் கவுண்டி லெவல்-5 (Machakos County Level-5) மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில், கோவிட் -19 பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்த கோப்பு புகைப்பட மருத்துவ ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். டெல்டா மாறுபாட்டால், COVID-19 இன் புதிய அலை ஆபிரிக்க கண்டம் முழுவதும் பரவி வருகிறது, அங்கு புதிய தொற்றுக்கள், மருத்துவமனையில் அனுமதி மற்றும் இறப்புகள் அதிகரித்து வருகின்றன. (AP புகைப்படம் / பிரையன் இங்காங்கா / ஆவணம்)

ஆபிரிக்க கண்டத்தில் மிகவும் தொழில்துறையில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடான தென்னாபிரிக்கா சுமார் 60,000 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. ஆனால் அதன் அதிகப்படியான இறப்பு புள்ளிவிவரங்கள் தொற்றுநோயால் மேலும் 100,000 பேர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறந்துவிட்டதாகக் காட்டுகின்றன. கண்டம் முழுவதும் சரியான புள்ளிவிபரம் இருப்பின், உண்மையான இறப்பு எண்ணிக்கை 500,000 ஐ நெருங்கும்.

உலக சுகாதார அமைப்பு (WHO) 60 சதவிகிதம் அதிகமாக பரவும் மற்றும் ஆபத்தான டெல்டா மாறுபாடு ஆபிரிக்காவில் மூன்றாவது அலையானது மிகவும் தீவிரமானதாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது. குறைந்தது 21 நாடுகளில் இதுவரை மூன்றாவது அலை நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன, அவற்றில் 10 நாடுகள் முன்பை விட கடுமையான நிலைகளை அனுபவிக்கின்றன. இதில் உகண்டா, கொங்கோ ஜனநாயக குடியரசு, நமீபியா, சாம்பியா, ருவாண்டா, தென்னாபிரிக்கா, எத்தியோப்பியா மற்றும் கென்யா ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளாகும்.

டெல்டா மாறுபாடு இதுவரை 16 ஆபிரிக்க நாடுகளில் பதிவாகியுள்ளது, இதில் ஐந்து நாடுகளில் மூன்று அதிக எண்ணிக்கையிலான புதிய தொற்றுக்களைப் உறுதிப்படுத்தியுள்ளன. கொங்கோ மற்றும் உகாண்டாவில், 45 வயதிற்குட்பட்டவர்களில் கடுமையாக 66 சதவீதம் பேர் டெல்டா மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய் கட்டுப்பாட்டுக்கான ஆபிரிக்கா மையங்கள் (Africa Centres for Disease Control) இன் கூற்றுப்படி, 21 ஆபிரிக்க நாடுகள் இறப்பு விகிதங்களை உலக சராசரியான 2.2 சதவீதத்திற்கு மேல் பதிவாகின்றன. தி லான்செட் (The Lancet) வெளியிட்ட ஒரு ஆய்வு, அதிக இறப்பு விகிதமானது மட்டுப்படுத்தப்பட்ட சுகாதார வளங்களின் விளைவாகும் என்று கூறுகிறது. எடுத்துக்காட்டாக, 10 ஆபிரிக்க நாடுகளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் பதிவுகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் இறந்துவிட்டனர், இது உலகளாவிய இறப்பில் மூன்றில் ஒரு பங்காகும்.

இந்த மூன்றாவது அலை மருத்துவமனை படுக்கைகள் பற்றாக்குறை, வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் பொருட்கள் மற்றும் மோசமான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான சுகாதாரத் தொழில் அதிகாரிகள் பற்றாக்குறை, சோதனை வசதிகள் இல்லாதது மற்றும் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை குறித்த கடுமையான நிலமைகளால் அதிகரிக்கிறது.

வியாழக்கிழமை பேசிய ஆபிரிக்காவிற்கான WHO இன் பிராந்திய இயக்குனர் மாட்ஷிடிசோ மொயட்டி (Matshidiso Moeti), கண்டத்தை தாக்கும் மூன்றாவது அலை “நாம் முன்பு பார்த்தது போல் எதுவும் இருக்கப்போவதில்லை” என்று எச்சரித்தார். “டெல்டா மாறுபாடு பற்றிய அக்கறை என்பது நாம் கண்டவற்றில் மிக மோசமான தொற்றுநோயாகும்.”

Big Pharma மருந்து உற்பத்தியாளர்களின் சார்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் கடுமையான எதிர்ப்பால், தடுப்பூசி உற்பத்தியில் காப்புரிமை கட்டுப்பாடுகளை நீக்க உலக வர்த்தக அமைப்பு மறுத்ததன் மூலம் உலகளாவிய தடுப்பூசி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. மில்லியன் கணக்கான உலகின் ஏழைகள் இந்த நோய்க்கு பலியாகின்றனர். இக் கட்டுப்பாடுகளை நீக்கினால் ஆபிரிக்காவிலும் பிற இடங்களிலும் பல தளங்களில் உற்பத்தி செய்து தடுப்பூசி விலையைக் குறைக்க முடியும்.

எகிப்து, செனகல், துனிசியா, மொராக்கோ மற்றும் அல்ஜீரியாவில் உண்மையான மற்றும் சாத்தியமான உற்பத்தித்திறன் இருந்தபோதிலும், ஆபிரிக்கா 99% தடுப்பூசிகளை இறக்குமதி செய்கிறது (ஏனைய மருந்து உற்பத்திகளில் 70 சதவிகிதம்). இது பெரும்பாலும் இரண்டு ஆதாரங்களை நம்பியுள்ளது: அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை வழங்கும் கோவாக்ஸ் (Covax) மற்றும் 220 மில்லியன் டோஸ் வழங்க ஒப்புக் கொண்ட ஜோன்சன் & ஜோன்சனுடன் ஆபிரிக்க ஒன்றியம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தடுப்பூசி வழங்கலை பாதித்துள்ளது, ஏனெனில் கோவக்ஸ் வழியாக ஆபிரிக்காவுக்கு இதுவரை வழங்கப்பட்ட பெரும்பாலான தடுப்பூசிகள் அங்கு தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனெகா வகையாகும். உள்நாட்டு தேவையை சமாளிக்க மார்ச் மாதத்தில் இந்தியா தனது தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது, ஆபிரிக்கா சி.டி.சி யின் இயக்குனர் ஜோன் நெங்கன்சாங் (John Nkengasong), இந்தியாவின் நிலைமை ஆபிரிக்காவின் தடுப்பூசி வழங்கலை 'வாரங்கள் மற்றும் சில மாதங்கள்' பாதிக்கக்கூடும் என்று எச்சரித்தார்.

தடுப்பூசி பற்றாக்குறையை மேலும் அதிகரிப்பது “தடுப்பூசி இன ஒதுக்கீட்டுக் கொள்கை” ஆகும். ஏனெனில் பணக்கார நாடுகள் தேவையான அளவு தடுப்பூசிகளை விடவும் அதிகமாக வாங்கியுள்ளன. இது பகுத்தறிவான அல்லது சமமான விநியோகத்திற்கான எந்தவொரு சாத்தியத்தையும் நாசமாக்குகிறது. பார்க்லே (Barclays) ஆய்வாளர்களின் கூற்றுப்படி, உலகின் பணக்கார நாடுகள் தங்களது மக்கள்தொகைக்கு நான்கரை மடங்கு அதிகமாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை போதுமான அளவில் பெற்றுள்ளன, அதே நேரத்தில் ஏழ்மையான நாட்டில் மக்கள் 10 சதவீத மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி அளவு பெற்றுக்கொள்ள முடிந்தது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் கடலில் ஒரு துளி நீரை கொடுக்கும் வாக்குறுதிகளுடன் தடுப்பூசிக்கு பதிலளித்துள்ளன. அமெரிக்க பைடென் நிர்வாகம் 80 மில்லியன் அளவுகளையும், ஐரோப்பிய ஒன்றியம் 100 மில்லியன் தடுப்பூசிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளன, மேலும் இவைகூட அவற்றின் சொந்த புவிசார் அரசியல் நலன்களுக்கு ஏற்ப விநியோகிக்கப்படும். இங்கிலாந்து அதன் உதவி வரவு-செலவுத் திட்டத்தில், நீர், துப்பரவு மற்றும் சுகாதார (வாஷ்) திட்டங்களுக்கான நிதியுதவியையும் குறைப்பதன் மூலம் பதிலளித்துள்ளது, இது வெளிநாட்டு செலவினங்களை மட்டுமல்ல, ஆக்ஸ்போர்ட் (Oxford) பல்கலைக்கழகத்தின் திட்டங்கள் உட்பட விஞ்ஞான ஆராய்ச்சிகளையும் பாதிக்கிறது.

புள்ளிவிவரங்களின் படி. ஆபிரிக்காவின் 1.2 பில்லியன் மக்கள்தொகையில் 1 சதவிகிதத்தினரே தடுப்பூசி போடப்பட்டுள்ளனர், இது உலகளவில் 11 சதவிகித மக்களுடன் ஒப்பிடும்போது மிகக்குறைவு, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் 46 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி பெற்றுள்ளனர். Nkengasong கருத்துப்படி, ஆபிரிக்கா 800 மில்லியன் அளவுகளைக் கொண்டிருக்க வேண்டும், பெரும்பாலும் ஆபிரிக்க ஒன்றியத்தின் முன்முயற்சியின் மூலம், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்த இலக்கை அடையலாம், ஆனால் இதுவரை 65 மில்லியனை மட்டுமே பெற்றுள்ளது. உலகெங்கிலும் 90 மில்லியனுக்கும் குறைவான அளவுகளை அனுப்பியுள்ள கோவாக்ஸ் திட்டத்திலிருந்து பல ஆபிரிக்க நாடுகள் வெளியேறுகின்றன.

ஆபிரிக்காவில் தடுப்பூசி உற்பத்தி தோல்வியுற்றால், புதிய மற்றும் மிகவும் ஆபத்தான நடைமுறைகள் தோன்றக்கூடும். பணப் பற்றாக்குறை விடயமானது தடுப்பூசிகளை வாங்குவதற்கு செலவழிக்கும் ஒவ்வொரு டாலருக்கும், அவற்றின் விநியோகம் மற்றும் பயன்பாட்டிற்கு மற்றொரு 5 டாலர் தேவை என தொண்டு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு தடுப்பூசிகளை வாங்குவதற்கும் வழங்குவதற்கும் தனது திட்டங்களை செயல்படுத்த இன்னும் 3 பில்லியன் டாலர்கள் தேவை என கோவாக்ஸ் கூறுகிறது. உலக வங்கி, தடுப்பூசிகள் மற்றும் வளரும் நாடுகளில் அவற்றின் வெளியீடுகளுக்காக 12 பில்லியன் டாலர் உறுதியளித்திருந்தாலும், ஜூலை 1 நிலவரப்படி, அது 4.4 பில்லியன் டாலர் மட்டுமே மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது, அவற்றில் 1.7 பில்லியன் டாலர் ஆபிரிக்காவில் உள்ளது.

சுகாதார நெருக்கடியை அதிகரிப்பது பெரும்பாலான ஆபிரிக்க நாடுகள் எதிர்கொள்ளும் பயங்கரமான பொருளாதார நிலைமைகளாலாகும். உலக வங்கி மதிப்பீடுகளின்படி, 2020 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் 4.3 சதவிகிதம் சுருங்கி, டிரில்லியன் கணக்கான டாலர்களை அழித்துவிட்டது, இதனால் ஏழ்மையான நாடுகளே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, கண்டத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.5 சதவிகித பங்களிப்பை வழங்கிய ஆபிரிக்காவின் சுற்றுலாத் துறை பல ஆண்டுகளுக்கு மீழ வாய்ப்பில்லாதுள்ளது. ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனலின் சமீபத்திய அறிக்கை, உலகின் ஏழ்மையானவர்களுக்கு தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள ஒரு தசாப்தத்திற்கும் மேல் தேவைப்படும் என்று மதிப்பிட்டுள்ளது, அதே நேரத்தில் உலகெங்கிலும் வறுமையில் வாழ்ந்த 494 மில்லியன் மக்களுடன் மேலும் 131 மில்லியன் மக்கள் தள்ளப்பட்டதாக பியூ (Pew) ஆராய்ச்சி மையம் மதிப்பிடுகிறது. இதில் தொற்றுநோய்க்கு முன் 40மில்லியன் மக்கள் வறுமையில் துணை-சஹாரா ஆபிரிக்காவில் இருந்தனர்.

உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களின் பிரதிபலிப்பு உலகளாவிய தடுப்பூசி பிரச்சாரத்தின் தேவையை நிராகரிப்பதாகும். உலகின் ஏழ்மையானவர்களின் அவலநிலை குறித்த அவர்களின் குற்றவியல் அலட்சியம், நிதிய தன்னலக்குழுவின் செறிவூட்டலுக்கும் ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் நலன்களுக்கும் மனித தேவைகளை அடிபணிய வைக்கும் முழு முதலாளித்துவ சமூக ஒழுங்கையும் வெளிப்படுத்துகிறது. அதனால்தான், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் போராட்டமானது முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்கு கொண்டு வருவதுடன், அதை சோசலிச மாற்றத்திற்கான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாகும்.

Loading