முன்னோக்கு

அமெரிக்காவில் அதிகரித்து வரும் போராட்டம் போலி-இடதைக் குறித்து எதை வெளிப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தொழிலாளர்கள், பல தசாப்தங்களாக மோசமடைந்து வரும் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் வேலை நிலைமைகளை மாற்றியமைக்கும் முயற்சியில், அமெரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும், வேலைநிறுத்தங்கள் மற்றும் போர்க்குணமிக்க போராட்டங்களின் ஓர் எழுச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். பெரும்பாலான சம்பவங்களில் நடந்துள்ளதைப் போலவே, வர்க்க போராட்டத்தின் அபிவிருத்தியானது அரசியல் வேலைத்திட்டங்கள் மற்றும் போக்குகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தி, சமகால சமூக மற்றும் அரசியல் வாழ்வின் அடிப்படை அம்சங்களை வெளிச்சமிட்டு வருகிறது.

Striking Volvo Truck workers (Source: UAW Local 2069/Facebook)

திங்களன்று நள்ளிரவுக்குப் பின்னர், கன்சாஸின் டோபெகாவில் அண்மித்து 600 Frito-Lay நிறுவனத் தொழிலாளர்கள், குறைந்தபட்சம் 1970 களின் ஆரம்ப காலத்திற்குப் பிந்தைய அந்த ஆலையின் முதல் வேலைநிறுத்தத்தில் வெளிநடப்பு செய்தனர், அப்போது தான் பேக்கரி, மிட்டாய், புகையிலை தொழில்துறை மற்றும் தானிய மில் தொழிலாளர்களின் சங்கம் (BCTGM) முதன்முதலாக அந்த ஆலையில் பிரசன்னத்தை ஸ்தாபித்தது. நொறுக்குத்தீனி உற்பத்தி நிறுவனமான அதன் தொழிலாளர்கள், பல ஆண்டுகளாக நடைமுறையளவில் சம்பள உயர்வு நிறுத்தப்பட்டுள்ளதை ஈடுகட்டும் விதமாக கணிசமான உயர்வு கோரிய அவர்களின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யாத ஓர் ஒப்பந்தத்தை BCTGM சங்கம் நிறைவேற்றுவதற்காக செய்த முயற்சிகளை எதிர்த்து, இந்தாண்டின் நான்காவது ஒப்பந்த முன்மொழிவைப் பெருவாரியாக கடந்த வாரம் நிராகரித்திருந்தனர்.

நிறுவன-தொழிற்சங்க விட்டுக்கொடுப்பு உடன்படிக்கைகளுக்கு எதிரான சமீபத்திய பல தொடர்ச்சியான கிளர்ச்சிகளில் இந்த Frito-Lay நிறுவன வேலைநிறுத்தம் சமீபத்தியதாகும். வேர்ஜீனியாவின் நியூ ரிவர் வலி வொல்வோ ட்ரக் ஆலையில், சுமார் 2,900 தொழிலாளர்கள் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் முன்நகர்த்திய இரண்டு ஒப்பந்தங்களைப் பெருவாரியாக நிராகரித்த பின்னர் இரண்டு மாதங்களால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஒப்பந்தங்கள் கணிசமானளவுக்கு மருத்துவச் சிகிச்சை செலவுகளை அதிகரித்து, கூலி உயர்வுகளைக் குறைத்திருக்கும். அலபாமாவின் Warrior Met சுரங்கத்தில், வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்கள் ஏப்ரலில் அதிர்ச்சியூட்டும் வகையில் 1,006 இக்கு 46 வாக்குகள் என்றளவில் ஐக்கிய சுரங்கத்துறை தொழிலாளர் சங்கம் ஆதரித்த ஒப்பந்தத்தை நிராகரித்து, தொழிற்சங்க வளாகத்திற்கு வெளியிலேயே அந்த நிறுவன-சார்பு ஒப்பந்த நகல்களைத் தீயிட்டு எரித்தனர்.

அமெரிக்காவுக்கு அப்பாற்பட்டு, நாடுகடந்த நிறுவனமான Vale Inco இன் வடக்கு ஒன்டாரியோ செயல்பாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ள நிக்கல் சுரங்கத் தொழிலாளர்கள், சம்பள விகித உயர்வுகளைப் பணவீக்கத்தை விட குறைவாக வைத்திருந்த, ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர்கள் சங்கத்தால் ஆதரிக்கப்பட்ட ஓர் ஒப்பந்தத்தைப் பெருவாரியாக நிராகரித்த பின்னர், அவர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு போராட்டத்திலும், தொழிலாளர்கள், கடந்த 40 ஆண்டுகளாக தங்களை நிர்வாகத்துடனும் முதலாளித்துவ அரசுடனும் மேலும் மேலும் ஆழமாக ஒருங்கிணைத்துக் கொண்டுள்ள தொழிற்சங்கங்களால் முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்ட பயங்கரமான சுரண்டல் நிலைமைகளுக்கு எதிராக போராடி வருகின்றனர். சமீபத்திய ஒப்பந்த நிராகரிப்புகள் அலை காட்டுவது போல, இத்தகைய நிலைமைகளைப் பேணுவதற்கும் தாக்குதல்களை ஆழப்படுத்தவும் பெருநிறுவன-தொழிற்சங்க நடப்பு கூட்டு முயற்சிகளுடன் அதிகரித்தளவில் தொழிலாளர்கள் இப்போது வெளிப்படையான மோதலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

சோசலிச அல்லது மார்க்சிச அமைப்பு இல்லையென்றாலும், எந்தவொரு உண்மையான இடதுசாரி அமைப்பும், தொழிலாள வர்க்கத்தின் போராடும் ஆற்றல் இந்தளவுக்கு மீண்டும் உயிர்பெற்றிருப்பதையும், பெருநிறுவனங்களின் சார்பாக செயல்படும் முகமைகளுக்கு அதன் எதிர்ப்பையும் வரவேற்றிருக்கும் என்பது மட்டுமல்ல, மாறாக அதிகபட்ச அளவுக்கு அவற்றை ஊக்கப்படுத்தி உதவியிருக்கும், இதுதான் உலக சோசலிச வலைத் தளம் (WSWS), நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளின் (SEP) விடையிறுப்பாக இருந்துள்ளது.

ஆனால் இது தங்களை இடதுசாரி அல்லது சோசலிஸ்ட் என்று காட்டிக் கொள்ளும் பல கட்சிகள் மற்றும் பிரசுரங்களும் காட்டும் எதிர்வினைக்கு நேரெதிராக உள்ளது.

வொல்வோ டிரக் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) மற்றும் அதன் பிரதான ஊடக நிறுவனமான ஜாகோபின் பத்திரிகை காட்டிய விடையிறுப்பு—அல்லது விடையிறுப்பே காட்டாமல் இருப்பது—இதில் மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. ஏப்ரலில் இருந்து நடந்து வரும் வொல்வோ போராட்டம் பற்றி, இன்று வரையில், ஜாகோபின் ஒரு கட்டுரை கூட வெளியிடவில்லை, அல்லது DSA எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கைகளையும் வெளியிடவில்லை.

வொல்வோ வேலைநிறுத்தம் குறித்து DSA மற்றும் ஜாகோபின் இன் மவுனம், இந்த வேலைநிறுத்தம் மீது பூஜ்ஜிய கட்டுரைகளைப் பிரசுரித்துள்ள சோசலிஸ்ட் மாற்றீடு (Socialist Alternative) இல் இருந்து, வெறுமனே மேலோட்டமான அறிக்கைகளை மட்டுமே பிரசுரித்துள்ள Left Voice மற்றும் Labor Notes வரையில், அமெரிக்காவில் 'இடதாக' தன்னை பொய்யாக காட்டிக்கொள்ளும் ஒட்டுமொத்த கூட்டத்திலும் ஏதோவொரு விதத்தில் எதிரொலிக்கிறது.

இந்த பிரசுரங்களில் வெளியாகி உள்ள சிறிய செய்திகளில், தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வரும் வேர்ஜீனியா ஆலையில் எதிர்ப்பை ஒழுங்கமைப்பதில் முக்கிய பங்காற்றி உள்ள சாமானிய வொல்வோ தொழிலாளர்கள் குழுவைக் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. VWRFC மீதான செய்தி ஊடக இருட்டடிப்பில் ஒரேயொரு குறிப்பிடத்தக்க விதிவிலக்காக Counterpunch இல் (கென்னத் சுரின் எழுதிய “வொல்வோ வேலைநிறுத்தம்”) என்றவொரு கட்டுரை வந்தது. அந்த ஆலையில் தொழிலாளர்கள் 'வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களைத் தனிமைப்படுத்துவதற்கான UAW இன் முயற்சியை எதிர்ப்பதற்காக அவர்கள் வொல்வோ சாமானிய தொழிலாளர் குழுவை அமைக்கும் அளவுக்கு, அவர்களின் தொழிற்சங்கம் மீது ஆழ்ந்த அவநம்பிக்கை கொண்டுள்ளனர்,” என்று அது குறிப்பிட்டது.

அலபாமாவின் பெஸ்மார் அமசன் ஆலையில் தொழிற்சங்கமயப்படுத்துவதற்கு ஒன்றுவிடாமல் செய்திகளை வழங்கி ஆதரித்த DSA போன்ற அமைப்புகள் வொல்வோ போராட்டத்தின் மீது முற்றிலுமாக தயக்கம் காட்டுவது மிகவும் எதிர்முரணாக உள்ளது. பெஸ்மார் ஆலையில் ஒரு தொழிற்சங்கத்தைக் கொண்டு வருவதற்கான முனைவு, பைடென் நிர்வாகம், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் பிரிவுகளிடம் இருந்தும் கூட, அத்துடன் பெருநிறுவன ஊடகங்களின் கணிசமான பகுதிகளிடம் இருந்தும் உத்தியோகபூர்வ ஆசிர்வாதத்தைப் பெற்ற அரசு-ஒப்புதலுடன் கூடிய மேலிருந்து கீழ் கொண்டு வரப்பட்ட முயற்சியாக இருந்தது.

வொல்வோ தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்து ஜாகோபின் எதுவும் வெளியிடவில்லை என்ற அதேவேளை, அமசனைத் தொழிற்சங்கமயமாக்குவதற்கான சில்லறை விற்பனை, மொத்த விற்பனை மற்றும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் தொழிற்சங்கம் (RWDSU) இன் முனைவைக் குறித்து கிட்டத்தட்ட 50 கட்டுரைகளை அது வெளியிட்டது. சோசலிஸ்ட் மாற்றீடு 15 கட்டுரைகளையும், Left Voice 10 கட்டுரைகளையும் மற்றும் Labor Notes எட்டு கட்டுரைகளை உருவாக்கின.

தொழிலாள வர்க்க இயக்கம் பெருநிறுவன சார்பு தொழிற்சங்கங்களுக்கு எதிராக வளர்ந்து வரும் நிலைமைகளின் கீழ், போலி-இடதோ தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான நடவடிக்கையையும் மற்றும் அமைப்பையும் கடுமையான எதிர்த்து, அதே தொழிற்சங்க எந்திரத்தை தூக்கி நிறுத்த நகர்ந்து கொண்டிருக்கின்றன. தொழிற்சங்கங்களுக்கான ஆதரவைப் பலப்படுத்துவதை நோக்கமாக கொண்ட, குறிப்பாக Uber, Lyft மற்றும் Doordash இன் நிரந்தரமற்ற தற்காலிக தொழிலாளர்கள் போன்ற தொழிற்சங்கத்தில் இல்லாத தொழிலாளர்களின் அதிகரித்து வரும் பிரிவுகளை 'ஒழுங்கமைக்கும்' அவர்களின் ஆற்றலைப் பலப்படுத்துவதும் நோக்கில், ஜனநாயகக் கட்சி கொண்டு வந்த சட்ட மசோதாவான ஒழுங்கமைப்பதற்கான உரிமையைப் பாதுகாக்கும் சட்டம் அல்லது PRO சட்டம் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துவதே அதன் 'அதிகபட்ச தேசிய முன்னுரிமை' என்பதை DSA குறிப்பிட்டுள்ளது.

தொழிற்சங்கங்களை விரிவுபடுத்துவதற்கான ஒவ்வொரு அரசு-ஆதரவு முயற்சிக்கு எல்லையற்ற உற்சாகத்துடனும், வொல்வோவில் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்திற்கு எதிரான கிளர்ச்சிக்கு உறைந்த மவுனத்துடனும், DSA மற்றும் ஏனைய போலி-இடது குழுக்களின் வேறுவேறு விதமான மாறுபட்ட பிரதிபலிப்புகள், தொழிலாள வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத, ஆனால் நடுத்தர உயர்மட்ட வர்க்கத்தின் சலுகை கொண்ட பிரிவுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் இதுபோன்ற அமைப்புகளின் சமூக அடித்தளம் மற்றும் அரசியல் நோக்குநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

போலி-இடது குழுக்கள் அனைத்தும் ஒன்று ஜனநாயகக் கட்சிக்குள் இருந்து செயல்படுகின்றன அல்லது அதை நோக்கி நோக்குநிலை கொண்டுள்ளன என்கின்ற நிலையில், தொழிலாளர்களை ஒழுங்குபடுத்துவதிலும் அவர்களை ஜனநாயகக் கட்சிக்கு அடிபணியச் செய்வதிலும் முக்கிய பாத்திரம் வகிப்பதால், “தொழிற்சங்கங்கள்' என்று பொய்யாக விவரிக்கப்படும் இந்த பெருநிறுவன பொலிஸ் முகமைகளின் மேலாதிக்கத்தையே அவை இடைவிடாது வலியுறுத்துகின்றன.

வொல்வோ வேலைநிறுத்தத்தைப் பற்றி DSA எதுவும் கூறாத நிலையில், உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் VWRFC ஐ உருவாக்குவதில் தொழிலாளர்களுக்கு உதவி செய்து, பெருநிறுவன UAW ஐ எதிர்ப்பவர்களிடையே பரந்தளவில் செவிமடுப்பைக் கண்டு, அவை முக்கிய பாத்திரம் வகித்துள்ளன. DSA வழமையாக WSWS ஐ 'குறுங்குழுவாத' அமைப்பாக குறைகூறுகின்ற அதேவேளையில், தொழிலாள வர்க்கத்தில் அதன் செல்வாக்கு அதிகரிப்பதைக் குறித்தும் மற்றும் சோசலிசத்தை நோக்கிய ஒரு பரந்த தொழிலாளர் இயக்கம் வளர்வதற்கான சாத்தியக்கூறு குறித்தும் உண்மையில் அவர்கள் அஞ்சுகிறார்கள், இந்த வளர்ச்சி DSA மற்றும் ஜாகோபின் பிரதிநிதித்துவம் செய்யும் உயர்மட்ட நடுத்தர அடுக்குகளின் கணிசமான முதலீட்டு கணக்குகளை அச்சுறுத்தும்.

ஒரு 'தொழிலாளர் இயக்கம்' பற்றிய அவர்களின் கருத்துரு, நடுத்தர வர்க்க சில பிரிவுகள் மத்தியஸ்தர்களாக செயல்படும், அரசு மற்றும் பெருநிறுவன நிர்வாகத்திற்குள் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்றாகும். அனைத்திற்கும் மேலாக, தற்போதைய நிலைமைகளின் கீழ், வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கும் ஆளும் வர்க்கத்தின் கோரிக்கைகளைத் திணிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு 'தொழிலாளர் இயக்கம்' என்பதே இதன் அர்த்தமாக உள்ளது.

போலி-இடது அமைப்புக்களின் அதிகரித்த உறுப்பினர் எண்ணிக்கை தொழிற்சங்க பதவிகளுக்குள் அவர்களுக்குப் பாதையைத் திறந்து விட்டு, செல்வசெழிப்பையும் தனிச்சலுகைகளையும் வழங்கியது, அனேகமாக இதற்கு மிகவும் சமீபத்திய முன்னுதாரணமாக சிகாகோ ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெஸ்ஸி ஷார்க்கி திகழ்கிறார், இப்போது DSA ஆக மாறியுள்ள ஆனால் முன்னர் செயலிழந்து போன சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் நீண்டகால முன்னணி உறுப்பினராக இவர் இருந்தார்.

போலி இடதுகள் தொழிற்சங்கங்களின் கட்டமைப்பில் ஒருங்கிணைவது, தொழிற்சங்கங்களே பெருநிறுவன இலாபங்களுக்கு அவை அடிபணிந்து தொழிலாளர்களின் நலன்களை அலட்சியப்படுத்துவதை அதிகரித்தளவில் மூடிமறைக்க முடியாமல், அவை பெருநிறுவனங்கள் மற்றும் அரசின் துணை-அமைப்புகளாக மாறியதுடன் பொருந்தி உள்ளது.

அண்மித்து 40 ஆண்டுகளுக்கு முன்னர், AFL-CIO சங்கத்தால் வேண்டுமென்றே தனிமைப்படுத்தப்பட்டு உடைக்கப்பட்ட PATCO விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தத்தைத் தோற்கடித்த உத்வேகத்திலிருந்து தொடங்கி, தொழிற்சங்கங்கள் எங்கெல்லாம் அவை மேலோங்கி உள்ளனவோ அங்கெல்லாம் சர்வதேச அளவில் அமெரிக்க தொழிலாளர்களைப் 'போட்டித்தன்மைக்குள்' தள்ள போதுமானளவுக்கு சம்பளங்களைக் குறைத்து, தொழிலாளர் சக்தியைப் பெரிதும் கட்டுப்பாடான பணியாளர்களை உறுதிப்படுத்த செயல்பட்டுள்ளன.

வாகனத்துறை, எஃகுத்துறை மற்றும் ஏனைய தொழில்துறைகளில் பெரும்பாலான வேலைகளை அழித்ததன் மூலமாகவும் —இவற்றில் எழுந்த எதிர்ப்புகளையும் சங்கங்கள் நசுக்கிய நிலையில்— தொழிற்சங்கங்களின் முடிவில்லா காட்டிக்கொடுப்புகளைக் கண்ட அல்லது அவற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களால் தொழிற்சங்கங்கள் அதிகரித்தளவில் நிராகரிக்கக்கட்டதன் மூலமாகவும் இரண்டு விதத்திலும், தொழிற்சங்கங்கள் இந்த காலகட்டம் நெடுகிலும் உறுப்பினர்களின் இரத்தத்தை உறிஞ்சி உள்ளன.

அமசன் பெஸ்மார் ஆலையில் தொழிற்சங்கத்தைக் கொண்டு வருவதற்கான வாக்குகளில் RWDSU ஆல் தொழிலாளர்களிடமிருந்து 13 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற முடியவில்லை என்பது தொழிலாளர்களின் வலதுசாரி நகர்வை வெளிப்படுத்தவில்லை. மாறாக அது வொல்வோ மற்றும் Frito-Lay இல் சங்கத்தின் ஆதரவு பெற்ற ஒப்பந்தங்களைப் பாரியளவில் நிராகரிப்பதற்கு இட்டுச் சென்ற அந்த மனநிலையின் மற்றொரு வெளிப்பாடாகும்.

எவ்வாறிருப்பினும் இந்த நிகழ்வுபோக்கில் தொழிற்சங்க நிர்வாகிகளும் அதிகாரிகளும் பணக்காரர்களாக வளர்ந்துள்ளனர். புறநிலையாகச் சொல்வதானால், அவர்கள் தொழிலாளர்களை விட்டு விட்டு அவர்களின் வழியை வேறொரு சமூக வர்க்கத்தை நோக்கி அமைத்துக் கொண்டதுடன், குறைந்த நூறாயிரத்தில் இருந்து நடுத்தர நூறாயிரம் தொகை சம்பளங்களைப் பெற்று, தங்களை வருவாய் ஈட்டுபவர்களில் முதல் 5 அல்லது 1 சதவீதத்தினரில் கூட நிறுத்திக் கொண்டனர். அவர்களின் அதிகரித்து வந்த சொத்துக்கள் மற்றும் செல்வங்களைப் பங்குச் சந்தைக்குள் மாற்றியதுடன், போலி-இடதில் உள்ள அவர்களின் சகாக்கள் போலவே, அமெரிக்க பெருநிறுவன இலாபங்கள் மற்றும் ஊதிப்பெருத்த பங்கு மதிப்புகளை அடிப்படையாக கொண்ட குறைவூதிய ஆட்சியைக் கவிழ்த்துவிடக் கூடிய தொழிலாளர்களது எந்தவொரு இயக்கத்தை நோக்கியும் அதிகரித்தளவில் விரோதமாகி உள்ளனர் மற்றும் பீதியுற்றுள்ளனர்.

அவற்றின் வரலாற்றின் பெரும் பகுதியில் ஒரு மூர்க்கமான கம்யூனிச-விரோதத்தாலும் மற்றும் முதலாளித்துவத்திற்கான ஆதரவுடனும் மேலாதிக்கம் பெற்றிருந்த அமெரிக்க தொழிற்சங்க எந்திரங்கள், அவற்றின் சடரீதியிலான நலன்களில் ஏற்பட்ட மாற்றத்திற்கேற்ப, இன்னும் அதிகமாகவே அரசியல்ரீதியில் வலதுக்கு நகர்ந்துள்ளன, இவை மிகவும் பிற்போக்குத்தனமான தேசியவாதம், பெருநிறுவனவாதம் மற்றும் பாசிசவாத அரசியலுக்கும் கூட இப்போது ஆதாரத்தளமாக மாறியுள்ளன.

தொழிற்சங்கங்களுக்கு எதிராக தொழிலாளர்களின் அதிகரித்து வரும் கிளர்ச்சி போலி-இடதின் ஒவ்வொரு நிலைப்பாட்டையும் எதிர்த்து வருகின்ற அதேவேளையில், அது WSWS மற்றும் ICFI இன் அரசியல் ஆய்வுமுடிவுகளை ஊர்ஜிதம் செய்கிறது.

PATCO வேலைநிறுத்த காலக்கட்டத்தில், அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு முன்னோடி அமைப்பான தொழிலாளர் கழகம் குறிப்பிடுகையில், முதலாளித்துவம் மற்றும் அதன் பிரதான அரசியல் கட்சிகளுக்கு AFL-CIO அடிபணிவது ஒரு தோல்வி மாற்றி ஒரு தோல்விக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரித்ததுடன், “இத்தகைய காட்டிக்கொடுப்புகளுக்கு எதிரான போராட்டத்தை வெறுமனே போர்குணத்தின் மீது மட்டுமே அமைக்க முடியாது, மாறாக அரசாங்கத்திற்கு எதிரான போராட இதற்காக ஓர் அரசியல் மூலோபாயம் அவசியப்படுகிறது,” என்று வலியுறுத்தியது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் உச்சக்கட்டத்தை அடைந்த 1980 களின் தோல்விகளில் இருந்து இருப்புநிலைக் குறிப்பு வரைந்த ICFI, தொழிற்சங்கங்களும் ஏனைய தேசிய தொழிலாளர் அதிகாரத்துவங்களும், மட்டுப்படுத்தப்பட்ட திறனில் கூட, தொழிலாள வர்க்க நலன்களைப் பாதுகாக்க தகுதியற்றவை என்பதை தீர்மானகரமாக அறிவித்தது.

இந்த முன்னோக்கை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்தாண்டு மே தினத்தில், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) அமைக்க அழைப்பு விடுத்ததன் மூலம் முன்னெடுத்தது. IWA-RFC “சர்வதேச அளவில் ஆலைகளிலும், பள்ளிகள் மற்றும் வேலையிடங்களிலும் தொழிலாளர்களின் சுயாதீனமான, ஜனநாயகரீதியான மற்றும் போர்குணமிக்க சாமானிய அமைப்புகளது புதிய வடிவங்களின் கட்டமைப்பை அபிவிருத்தி செய்ய பாடுபடும்' என்றும், “உலகெங்கிலுமான தொழிலாளர்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்தவும் இதுவொரு வழிவகையாக' இருக்கும் என்றும் அந்த அழைப்பு விவரித்தது.

வொல்வோ ஆலையிலும் மற்றும் ஏனைய இடங்களிலும் தொழிலாளர்களின் போராட்டமானது, இந்த முன்னோக்கும் இத்தகைய அமைப்புகளும் தான் வர்க்க போராட்ட அபிவிருத்திக்கான பாதை என்பதை கூடுதலாக உறுதிப்படுத்துகின்றன.

Loading