இலங்கை: வேலைச் சுமையை அதிகரிப்பதற்கும் சம்பள வெட்டுக்கும் எதிராக கிளனுஜி தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மாஸ்கெலியா சாமிமலையில் உள்ள கிளனுஜி தோட்டத்தின் தொழிலாளர்கள் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான தோட்ட உரிமையாளர்களின் திட்டத்தித்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஆகிய தொழிற்சங்கங்கள் நேரடியாக ஆதரவு கொடுக்கும் நிலையில், கிளனுஜி தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு வெளியே போராட்டத்தில் இறங்கினர்.

கிளனுஜி தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் ஒரு பகுதியினர்

வேலை நிறுத்தத்தில் சுமார் 200 தொழிலாளர்கள் பங்கேற்றனர். தொழிற்சங்கங்களுக்கு வெளியே தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள் சமீபத்திய மாதங்களில் மீண்டும் மீண்டும் தலை தூக்கியுள்ளதுடன், இது தோட்ட நிர்வாகிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் எதிராக வளர்ந்து வரும் தோட்டத் தொழிலாளர்களின் கிளர்ச்சியைக் குறிக்கிறது.

தோட்ட நிர்வாகிகள் ஏப்ரல் முதல் தேயிலை கொழுந்து பறிப்பதை நாளொன்றுக்கு 16 கிலோவில் இருந்து 18 கிலோ வரை அதிகரிப்பதற்கும் ஆண் தொழிலாளர்களுக்கான நில சுத்திகரிப்பை 600 சதுர அடியில் இருந்து 1,000 சதுர அடி வரை அதிகரித்துள்ளனர். இந்த இலக்குகளை பூர்த்தி செய்யத் தவறும் தொழிலாளர்களின் வார வேலை நாட்கள் மற்றும் ஊதியங்களைக் குறைப்பார்கள்.

ஜூன் 29 அன்று, அதன் முகாமையாளர், இலக்குகளை பூர்த்தி செய்யாவிட்டால் தோட்டத்தில் வேலை செய்ய முடியாது என்று கூறினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, தொழிலாளர்கள் அடுத்த நாள் முகாமையாளரின் அலுவலகத்துக்குச் சென்று, புதிய வேலை இலக்குகளை நிராகரித்து, முந்தைய நிலைக்குக் குறைக்க வேண்டும் என்றும், வேலை நாட்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்றும் கோரினர். ஆனால் தொழிற்சங்கங்கள், நிர்வாகிகளுடன் சேர்ந்து, தொழிலாளர்கள் மீது புதிய வேலை இலக்குகளை சுமத்த முயன்றன.

வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் முயற்சியில், தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் தொழிலாளர்களை அச்சுறுத்துவதன் பேரில், பிரச்சாரத்தின் முன்னணியில் இருந்த எஸ். சந்திரசேகர் என்ற தொழிலாளியை முகாமையாளர் வேலை இடைநீக்கம் செய்தார்.

அன்று மாலையே, முகாமையாளர் தொழிற்சங்க பிரதிநிதிகளை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து, தொழிற்சங்கங்களின் ஒப்புதலுடன் வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் திட்டத்தை செயல்படுத்தினார். அதன்படி தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாகவும் சந்திரசேகரின் இடைநிறுத்தம் தொடர்பாகவும், ஹட்டன் உதவி தொழில் ஆணையாளரிடம் முன்வைத்து தீர்வு பெறுவதாக கூறி, வேலை நிறுத்தத்தை முடித்துக்கொண்டு வேலைக்குத் திரும்புமாறு தொழிற்சங்க பிரதிநிதிகள் தொழிலாளரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.

தொழிலாளர்களின் லயன் வீடுகள்

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிராகரித்த தொழிலாளர்கள் மறுநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அந்த சூழலில், முகாமையாளரும், தொழிற்சங்கங்களும் இணைந்து போராட்டத்தை கலைக்கும் நோக்கத்துடன் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டனர். ஆனால் வேலைநிறுத்தத்தை ஆதரிக்கவும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான ஒரு வேலைத் திட்டத்தை முன்வைக்கவும் அங்கு சென்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) உறுப்பினர்கள் வெளியேறும் வரை, முகாமையாளரும், தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டனர்.

முகாமையாளருக்கும் தொழிற்சங்கங்களுக்கும், போராட்டத்தில் தொழிலாளர்களின் சுயாதீனமாக தலையிடுவதைத் தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டமையினாலயே, சோ.ச.க. உறுப்பினர்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்ற அவர்கள் விரும்பினர். தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் போராட்டங்களை காட்டிக் கொடுத்து, முதலாளித்துவ ஆட்சியாளர்களினதும் தோட்டக் கம்பனிகளதும் திட்டங்களை தொழிலாளர்கள் மீது திணிக்க செயற்பட்டு வரும் நிலையில், தொழிற்சங்கங்களின் பிடியிலிருந்து விடுபடவும், தொழிலாளர்கள் தாங்கள் சுயாதீனமான போராட்டங்களில் இறங்குவதற்கான தொழிலாளர்களின் முயற்சிகள், தொழிலாளர்கள் மீது தொழிற்சங்கங்கள் செலுத்திவந்த ஆதிக்கம் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளதை குறிக்கின்றன. எனவே அவை, முதலாளிகள் மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களின் சார்பில் பொலிஸ்கார சேவையில் ஈடுபடும் தொழிற்சங்கங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கும் தோட்டக் கம்பனிகளுக்கும் உள்ளது.

தோட்ட நிர்வாகிகளும் தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களுக்கு எதிராக ஆத்திரமூட்டலை உருவாக்குவதை தவிர்க்கும் வகையில், சோ.ச.க. உறுப்பினர்கள் அங்கிருந்து விலகினர். அவர்கள் வெளியேறிய பிறகு வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை சந்தித்த முகாமையாளர், சந்திரசேகரனை மீண்டும் வேலையில் அமர்த்த ஒப்புக்கொண்ட போதிலும், புதிய வேலைச் சுமையை திருத்தவோ அல்லது ஏனைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவோ மறுத்துவிட்டார். தொழிற்சங்கம் போராட்டத்தை காட்டிக் கொடுத்துவிட்டதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வேலைச் சுமை அதிகரிப்புக்கும் சம்பள வெட்டுக்கும் எதிராக, இதற்கு முன்னர், ஏப்ரல் 23 அன்று போராட்டம் நடத்திய கிளனுஜி தோட்டத் தொழிலாளர்கள், சோ.ச.க.வின் வழிகாட்டுதலின் கீழ் அமைத்துக்கொண்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழு, இந்தப் போராட்டத்தில் பிரதான தலையீட்டைச் செய்தது.

தொழிலாளர் நடவடிக்கை குழுவின் தலைவரான ரவிச்சந்திரன், தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை வெல்ல முடியாது என்று வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு விளக்கினார்: “அவர்கள் எப்போதும் நிர்வாகங்களை ஆதரிக்கிறார்கள். தொழிற்சங்கங்கள் எங்கள் தோட்டத்தில் மட்டுமல்ல, ஏனைய தோட்டங்களிலும் இலங்கையிலும் உலகெங்கிலும் அவ்வாறே செயல்படுகின்றன. தொழிலாளர்கள் அவர்களது காட்டிக்கொடுப்ப தோற்கடித்து, தங்களின் உரிமைகளை வென்றெடுக்க மாற்று அமைப்புகள் தேவை. அதனால், நடவடிக்கைக் குழுவில் பங்குபெறாத அனைவரும் இதில் சேர வேண்டும். தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஏனைய தொழிலாளர்கள் மத்தியில், இத்தகைய நடவடிக்கைக் குழுக்களை அமைக்க நாங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதற்கு சோசலிச சமத்துவக் கட்சி நமக்கு உதவும்.”

அவரது கோரிக்கைக்கு தொழிலாளர்கள் மத்தியில் பரவலான ஆதரவு இருந்தது.

ஜனவரி மாதம் 1,000 ரூபாய் தினசரி ஊதியத்தை கொடுக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டதை அடுத்து, தோட்டக் கம்பனிகள் வேலை சுமையை அதிகரித்து, ஊதிய வெட்டுக்களை அமல்படுத்தியதாக தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்தனர். 'எங்களுக்கு நியமிக்கப்பட்ட 20 கிலோ கொழுந்தை பறிக்காவிட்டால் சம்பளத்தில் பாதியே தருவார்கள். வேலை நாட்களின் எண்ணிக்கை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களாக குறைக்கப்படும். அதற்கு தொழிற்சங்கங்கள் ஆதரவளிக்கின்றன. தோட்ட நிர்வாகங்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தும் தொழிற்றசங்கங்களை நாங்கள் எதிர்க்கிறோம். அவர்கள் அவ்வாறு செய்து எமது போராட்டத்தை காட்டிக் கொடுக்கின்றனர்” என அவர்கள் கூறினர்.

உயரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் வறிய மட்ட ஊதியங்கள் தொடர்பாக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தையும் அமைதியின்மையையும் தணிக்கும் முயற்சியில், ஜனவரி மாதம் அரசாங்கம் அவர்களின் அன்றாட ஊதியத்தை 1,000 ரூபாயாக உயர்த்த உத்தரவிட்டது. அரசாங்க உத்தரவுக்கு எதிராக தோட்டக் கம்பனிகள் நீதிமன்றம் சென்றன. ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தால் நிலைமை மோசமடையும் என்றுணர்ந்த முதலாளித்துவ நீதிமன்றம் தோட்ட நிறுவனங்களின் கோரிக்கையை நிராகரித்தது.

பின்னர் தோட்டக் கம்பனிகள் தொழிற்சங்கங்களின் ஆதரவோடு வேலை இலக்குகளை உயர்த்தி சம்பளத்தை குறைத்தன. கடந்த சில மாதங்களாக, ஹட்டன், மஸ்கெலியா, பொகவந்தலாவா, தலவாக்கலை மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதோடு தோட்டக் கம்பனிகளின் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அந்த போராட்டங்கள் அனைத்தும் தொழிற்சங்கங்களால் தனிமைப்படுத்தப்பட்டு காட்டிக் கொடுக்கப்பட்டன. இதனால் பலமடைந்த தோட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பெப்ரவரி 5 அன்று, இ.தொ.கா. அழைப்புவிட்ட 1,000 ரூபாய் ஊதியம் கோரி முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மஸ்கெலியா ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள், வேலை நிறுத்தத்தை முறியடிக்க தோட்ட நிர்வாகமும் பொலிசும் மேற்கொண்ட ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக, 47 நாட்கள் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக, தோட்ட முகாமையாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொலிசும் கூட்டாக சேர்ந்து மேற்கொண்ட சதியைத் தொடர்ந்து, தொழிலாளர்களில் 38 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 24 தொழிலாளர்கள் மற்றும் இரண்டு இளைஞர்களுக்கு எதிராக, தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரை உடல் ரீதியாக தாக்கியதாக குற்றம் சாட்டி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த பழிவாங்கப்படும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களை நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்துவதற்கும் சோ.ச.க. ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாள வர்க்கப் பகுதியினரின் போராட்டங்களின் வளர்ச்சியானது, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை அமைத்துக்கொண்டு, இராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் தோட்ட கம்பனிகள் உட்பட முதலாளிகளுக்கும் எதிராக, ஒரு ஒன்றிணைந்த போராட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டியதன் அவசியத்தை தொழிலாள வர்க்கத்தின் முன் வைத்துள்ளது.

Loading