லெனா மொக்கைனாவின் நாட்குறிப்பு: லெனின்கிராட் முற்றுகை குறித்த முக்கியமான ஆவணம்

லெனாவின் நாட்குறிப்பு, லெனா கோரெலிக் மற்றும் கேரோ ஃபெட்கே ஆல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, முனிச், 2013

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

2013 ல், மூனிச்சை தளமாக கொண்ட கிராஃப் பதிப்பகம் லெனா முக்கைனாவின் நாட்குறிப்பை ஜேர்மன் மொழியில் வெளியிட்டது. லெனின்கிராட் மீதான வேர்மாக்டின் (Wehrmacht) முற்றுகையின் முதல் ஆண்டில் முக்கைனா ஒரு மாணவியாக அதை கண்ட சாட்சியாக இருந்தார். அவரது நாட்குறிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்ய வரலாற்றாசிரியர்களால் காப்பகங்களில் கண்டுபிடிக்கப்பட்டு, முதன்முதலில் ரஷ்ய மொழியில் 2011 இல் வெளியிடப்பட்டது.

இந்த நாட்குறிப்பு ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் மிகப் பெரிய, பெரும்பாலும் மறக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கான ஒரு முக்கியமான வரலாற்று ஆவணமாகும். 1941 கோடையின் பிற்பகுதியிலிருந்து 1944 ஆம் ஆண்டின் முற்பகுதியில் லெனின்கிராட் மீது நாஜிக்கள் முற்றுகையிட்டபோது சுமார் 1.1 மில்லியன் மக்கள் உயிர் இழந்தனர். இது உலக வரலாற்றில் ஒரு நகரத்தின் மீதான மிக நீண்ட முற்றுகைகளில் ஒன்றாகும்.

லெனா முக்கைனா [Photo: Ullstein Buchverlage]

லெனின்கிராட்டை பாதுகாப்பதில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான செம்படை வீரர்கள் இறந்ததுடன், மேலும் 2.4 மில்லியன் பேர் காயமடைந்தனர். ஜேர்மன் தரப்பில் சுமார் 130,000 படையினர் இறந்தனர். அதே நேரத்தில் 480,000 பேர் காயமடைந்ததுடன் மற்றும் 220,000 பேர் காணாமல் போயுள்ளனர் அல்லது கைப்பற்றப்பட்டனர்.

லெனாவின் நாட்குறிப்பு மே 1941 இல் தொடங்கி 1942 மே மாத இறுதியில் லெனின்கிராட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டபோது முடிவடைகிறது. நாட்குறிப்பின் ஆரம்பத்தில், ஒருவர் ஒரு உள்முக சிந்தனையாளரான 16 வயது சிறுமியை அறிந்துகொள்ளமுடியும். லெனா, தனது அத்தை லெனா மற்றும் அகா என்ற குடும்ப நண்பருடன் லெனின்கிராட்டில் உள்ள ஒரு அரச குடியிருப்பில் வசித்து வருகிறார். குடும்பம் ஏழ்மையானதுடன் மற்றும் முக்கியமாக கடன் வாங்கிய பணத்தில்தான் வாழ்கிறது. லெனாவுக்கு பள்ளியில் சில நண்பர்கள் உள்ளனர், மேலும் வோவா என்ற தனது வகுப்பிலுள்ள பையனை சந்தோசமின்றி காதலிக்கிறாள். ஒரு 'நல்ல சோவியத் பள்ளி மாணவி' ஆக அவள் முயற்சித்த போதிலும், அவளுடைய தரங்கள் மிகவும் சிறப்பாக இருக்கவில்லை.

1941 ஜூன் 22 அன்று நாஜிக்கள் சோவியத் ஒன்றியத்தை ஆக்கிரமித்தபோது நாட்குறிப்பின் தொனி திடீரென மாறுகிறது. மில்லியன் கணக்கான பிற சோவியத் குடிமக்களைப் போலவே, அவர் வெளியுறவு மந்திரி மொலோடோவின் உரையை வானொலியில் கேட்கிறார். பல எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் அவற்றை நம்பாததால் நாஜி படையெடுப்பால் அதிர்ச்சியடைந்த ஸ்ராலின், போர் வெடித்த இரண்டு வாரங்கள் வரை ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை.

முதல் குண்டுவெடிப்பின் போது காயமடைந்தவர்களுக்கு உதவி செய்யும் செவிலியர்கள்

ஜூன் 23 அன்று, மக்கள் போருக்குத் தயாராக இல்லை என்று லெனா குறிப்பிடுகிறார். அவர் எழுதுகிறார்: 'உண்மையை கூறினால், நாங்கள் அல்லது எங்கள் குடியிருப்பில் உள்ள எவரும் தாக்குதலை சமாளிக்கத் தயாராக இருக்கவில்லை: மருத்துவ உதவி மையம், கதிரியக்கத்தை தூய்மைப்படுத்தும் தளம், வான்வழித் தாக்குதல் பதுங்கிடம் ஆகியவற்றை எங்கே கண்டுபிடிப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஏதேனும் வான் பாதுகாப்பு பிரிவுகள் உள்ளனவா அல்லது குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு நாங்கள் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாது.” [பக். 53]

போர் ஆரம்பிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்புதான், லெனா தனது நாட்குறிப்பில் சோவியத் இராணுவப் பயிற்சிகள் குறித்த தனது எண்ணங்களை பதிவு செய்திருந்தார்: “நாளுக்கு நாள், வீரர்கள் தங்கள் தளபதிகளுடன் பயிற்சியெடுத்து வருகிறார்கள். எதிரி நம்மைத் தாக்கும்போது அது விரைவிலோ அல்லது பின்னரோ ஒரு போராக இருக்கும். வெற்றியை நாம் உறுதியாக நம்பலாம். நாங்கள் எதைப் பாதுகாப்போம், அதை எவ்வாறு பாதுகாப்போம், யாரைப் பாதுகாப்போம் என்பது எங்களுக்குத் தெரியும்.” [பக். 42]

உண்மையில், சோவியத் ஒன்றியம் தாக்குதலுக்கு இராணுவ ரீதியாக தயாராக இருக்கவில்லை. செம்படையின் தலைமையின் பெரும்பகுதி 1937 ஆம் ஆண்டின் பாரிய பயங்கரத்தில் அழிக்கப்பட்டுவிட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 1919 முதல் 1924 வரை செம்படையை வழிநடத்திய லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் பயிற்சியும் கல்வியும் பெற்றவர்களாவர். ஸ்ராலின், ஹிட்லருக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்படக்கூடியவாறு நாட்டின் இராணுவத் தலைமையை அழித்தார்.

1933 ஜனவரியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தது ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பேரழிவுகரமான கொள்கைகளின் விளைவாகும். ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி மீது அது திணித்த தீவிர இடது போக்கு, நாஜிக்களுக்கு எதிராக ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தைத் தடுத்து ஹிட்லரின் வெற்றியை சாத்தியமாக்கியது.

அடுத்த மாதங்களில், ஸ்ராலினிச அதிகாரத்துவம் வலதுபுறமாக திரும்பி, 'மக்கள் முன்னணியின்' பேரழிவு மூலோபாயத்தை ஏற்றுக்கொண்டது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அணிதிரட்டல் மூலம் சோசலிசத்திற்கான போராட்டம் வெளிப்படையாக நிராகரிக்கப்பட்டது. மாறாக, ஸ்பெயினிலும் பிரான்சிலும் உள்ள தொழிலாளர்கள் பாசிசத்திற்கு எதிராக முதலாளித்துவ ஜனநாயகத்தை ஆதரிப்பதுடன் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக்கூறப்பட்டது. இதன் விளைவாக மேலும் அழிவுகரமான தோல்விகள் ஏற்பட்டன. அதே நேரத்தில், சோவியத் ஒன்றியத்தில் பல்லாயிரக்கணக்கான ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மற்றும் நூறாயிரக்கணக்கான பிற சோசலிச தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

1939 ஆம் ஆண்டில், ஸ்ராலின் ஹிட்லருடன் ஒரு ஒப்பந்தம் செய்தார், இதன் மூலம் சோவியத் ஒன்றியத்தின் மீதான ஜேர்மன் தாக்குதலைத் தடுக்க முடியும் என்று அவர் நம்பினார். உண்மையில், இந்த ஒப்பந்தம் ஒரு வாரம் கழித்து போலந்தின் மீது ஜேர்மன் படையெடுப்பிற்கு வழி வகுத்தது.

சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி தாக்குதல் குறித்து எச்சரிக்க, நாடுகடந்த நிலையிலிருந்த லியோன் ட்ரொட்ஸ்கி இடைவிடாமல் உழைத்தாலும், ஸ்ராலினிச அதிகாரத்துவம் மக்களை ஒரு தவறான பாதுகாப்பாக இருப்பது போன்ற உணர்வுக்கு இழுத்துச் சென்றது.

லெனாவைப் பொறுத்தவரைலும், அதேபோல் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் விவசாயிகளைப் பொறுத்தவரை சோவியத் ஒன்றியத்தின் மீதான தாக்குதல் ஒரு அதிர்ச்சியாக வந்தது. போரின் முதல் மாதங்களில் செம்படை பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த ஆண்டின் இறுதியில், வேர்மாக்ட் மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியை அடைந்தது. சோவியத் இராணுவமும் மக்களும் ஆழ்ந்த மனச்சோர்வடைந்தனர். சோவியத் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை, 1930களின் இரத்தக்களரியான பாரிய பயங்கரத்திற்குப் பின்னரும் இருந்தபோதும், அது இப்போது சிதைந்துபோனது.

உக்ரேனிய தலைநகரான கியேவை சரணடையுமாறு செம்படை கட்டாயப்படுத்தப்பட்ட பின்னர், சுமார் 500,000 செம்படை வீரர்கள் நகரத்தை பாதுகாத்து உயிர் இழந்தனர். லெனா முக்கைனா செப்டம்பர் 22 அன்று எழுதினார்: “நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன், ஒரு நாட்குறிப்பை என்னால் எழுத முடியும். லெனின்கிராட் கைவிடப்படமாட்டாது என்று நான் இனி நம்பவில்லை. பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. கியேவ் மற்றும் லெனின்கிராட் அசைக்க முடியாத கோட்டைகள் !!! ... உக்ரேனின் செழிப்பான தலைநகரில் ஒருபோதும் ஒரு பாசிசவாதி கால்பதிக்க மாட்டார், எங்கள் நாட்டின் வடக்கு முத்தான லெனின்கிராட்டினுள் ஒருபோதும் அவர்களால் நுழைய முடியாது என்று நாம் பல நல்ல சொற்களையும் பேச்சுகளையும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அது இன்று வானொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது… பல நாட்கள் கசப்பான போருக்குப் பின்னர் எங்கள் இராணுவம் கியேவிலிருந்து… பின்வாங்கியது! அதன் பொருள் என்ன? ஒருவராலும் அதை விளங்கிக்கொள்ள முடியவில்லை”. [பக்கம் 115-16]

மே 1942 முதல் ஜனவரி 1943 வரை லெனின்கிராட்

ஏற்கனவே 1941 இலையுதிர்காலத்தில் லெனின்கிராட் கிட்டத்தட்ட சுற்றி வளைக்கப்பட்டது. லடோகா ஏரி மட்டுமே நாஜிகளால் துண்டிக்கப்படாததோடு வெளி உலகத்துடன் தொடர்ந்து ஒரு தொடர்பை வழங்கியது. செப்டம்பரில், விமானத் தாக்குதல்கள் வழக்கமான மற்றும் எரிகுண்டுகளுடன் தொடங்கியது. இது போரின் முடிவில் 16,474 பேர் இறந்து மற்றும் 33,782 பேர் காயமடைந்ததுடன் சுமார் 50,000 பேர் பாதிக்கப்படுவதற்கும் இட்டுச்சென்றது. [1]

முக்கைனாவின் பல உட்குறிப்புகள் பாசிஸ்டுகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகின்றன, அவர்கள் படுகொலைகளையும் பாலியல் பலாத்காரங்களையும் முன்கூட்டியே செய்து, அதே நேரத்தில் முழு பிராந்தியத்தையும் இடிபாடுகளாக்கினர். நாஜிக்கள் நவம்பரில் இருந்து, ரொட்டி தொழிற்சாலைகள், கையிருப்புகள், பெரிய அரசாங்க சமையலறைகள் மற்றும் மின்சார ஆலைகள் மீது குண்டுகளை வீசத் தொடங்கினர். 20 ஆம் நூற்றாண்டின் மிகக்குளிரான ஒரு குளிர்காலத்தில் நகரத்தின் உணவு மற்றும் எரிசக்தி விநியோக வலையமைப்புகள் கிட்டத்தட்ட முற்றிலும் உருக்குலைந்துபோயின. குழாய்களிலிருந்து தண்ணீர் கூட எப்போதாவது வெளியே வருகிறது.

அதுவரை வழக்கமாக அவரது அரசியல் மற்றும் தனிப்பட்ட கவலைகள் மற்றும் எண்ணங்களை கையாண்ட முக்கைனாவின் நாட்குறிப்பு உள்ளீடுகள், பெருகிய முறையில் இரண்டு விஷயங்களான குளிர் மற்றும் பசி பற்றி மட்டுமே கவனம் செலுத்துகின்றன. அவரது பிறந்த நாளான நவம்பர் 21 அன்று, அவருக்கு சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் மாணவர்களுக்கான ரொட்டி பங்கீடு 125 கிராம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இது ஒரு மிக மெல்லிய துண்டு ரொட்டிக்கு சமம். இது தவிர, லெனா, அவரது அத்தை மற்றும் அகா முக்கியமாக சூடான கோதுமைமா கஞ்சி மற்றும் ஒரு சில இனிப்புகளில் உயிர் வாழ்ந்தனர்.

நவம்பர் 22 அன்று, முக்கைனா எழுதுகிறார்: “எரிவாயு வழங்கல் நிறுத்தப்பட்டது. நீங்கள் எங்கும் மண்ணெண்ணெய் வாங்க முடியாது, மக்கள் தங்கள் அன்றாட உணவை விறகு மற்றும் மரத்தூள்கள் மூலம் எரிபொருளாக பயன்படுத்தும் அடுப்புகளில் சமைக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் பல்வேறு உணவகங்களையே சார்ந்துள்ளனர். இப்போதெல்லாம், யாரும் வான்வழித் தாக்குதல் பாதுகாப்பு அகழிக்குள் இறங்குவதில்லை. முறையான ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கான ஆற்றல் அவர்களுக்கு இனி இல்லை.” [பக். 146]

நூறாயிரக்கணக்கானவர்களைப் போலவே, பசியும் முக்கைனாவின் குடும்பத்தினரை டிசம்பர் மாதத்தில் தங்கள் வீட்டு செல்லப்பிராணியான ஒரு பூனையை கொல்லும்படி கட்டாயப்படுத்துகிறது. அந்த ஆண்டின் இறுதியில், அனைத்து நாய்கள், பூனைகள் மற்றும் பெருச்சாளிகள் மற்றும் எலிகள் கூட லெனின்கிராட்டில் இருந்து மறைந்துவிட்டன.

குடியிருப்புகளின் பெரும்பாலான தொகுதிகள் வெப்பமூட்டப்படாதிருந்தன. கடுமையான குளிர் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பரவலான மரணங்களுக்கு வழிவகுக்கிறது. டிசம்பரில், கிட்டத்தட்ட 40,000 பேர் இறந்தனர். ஜனவரி மற்றும் பிப்ரவரி 1943 இல், இந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 100,000 ஐ எட்டியது. 1942 கோடையில், மேலும் 150,000 மக்கள் இறந்தனர். நரமாமிசம் உண்ணுதல் பரவலாக வெடித்தெழுந்தது.

அகா மற்றும் லெனாவின் அத்தை குளிர்காலத்தில் பசியினால் வாடினார்கள். ஏற்கனவே 76 வயதும், பசியால் முற்றிலுமாக சோர்ந்துபோன அகா, ஜனவரி 1, 1942 அன்று இறந்து விடுகிறார்.

முக்கைனாவின் நாட்குறிப்பு உள்ளீடுகள் மேலும் மேலும் விரக்தியடைகின்றன.

ஜனவரி 3 ம் தேதி, அவர் கோபமாக எழுதுகிறார்: “பசி காரணமாக நாங்கள் இங்கே ஈக்கள் போல இறந்து கொண்டிருக்கிறோம், ஆனால் நேற்று ஸ்ராலின் மாஸ்கோவில் ஈடனுக்கு [பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் அந்தோனி ஈடன்] மதிப்பளிக்க மற்றொரு இரவு உணவைக் கொடுத்தார். இது மூர்க்கத்தனமானது. அவர்கள் வயிற்றை அங்கே நிரப்புகிறார்கள், அதே நேரத்தில் எங்களுக்கு ஒரு ரொட்டி துண்டு கூட கிடைக்காது. அவர்கள் எல்லா வகையான அற்புதமான வரவேற்புகளிலும் விருந்தினராக விளையாடுகிறார்கள், அதே நேரத்தில் நாங்கள் குகை மனிதர்களைப் போலவும், குருட்டு பெருச்சாளிகளைப் போலவும் வாழ்கிறோம்.” [பக். 187-88]

முக்கைனாவின் அத்தை பிப்ரவரி தொடக்கத்தில் இறந்துவிடுகிறார். அவள் அவநம்பிக்கையுடன், பட்டினியால் இறக்கும் கட்டத்தில் இருக்கிறாள். அவளால் தொடர்ந்து பயன்படுத்த முடிந்த அவளுடைய அத்தையின் உணவு அட்டைகளால் மட்டுமே முக்கைனாவால் உயிர்வாழ முடிந்தது.

ஏறக்குறைய முற்றிலும் சுயமாக, முக்கைனா இப்போது லெனின்கிராட்டில் இருந்து 'வாழ்க்கை பாதை' லடோகா ஏரி வழியாக தப்பிக்க திட்டமிட்டுள்ளார். அவர் மாஸ்கோவில் உள்ள உறவினர்களுடன் சென்று வாழ விரும்பினார்.

ஏப்ரல் மாதத்திற்குள், லடோகா ஏரியின் வழியாக அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். மே மாத இறுதியில் முக்கைனாவால் தப்பிக்க முடிகின்றது. அவரது நாட்குறிப்பு திடீரென மே 25 அன்று முடிகிறது.

அக்டோபர் 1942 இல் வோல்கோவோ கல்லறையில் முற்றுகையின் பாதிக்கப்பட்டவர்கள்

1943 முதல், ஸ்ராலின்கிராட் வெற்றியைத் தொடர்ந்து, லெனின்கிராட் உட்பட பல தாக்குதல்களுடன் செம்படையால் வேர்மாக்டை மீண்டும் தாக்க முடிந்தது. இருப்பினும், ஜனவரி 27, 1944 வரை நகரம் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. அதற்குள், லெனின்கிராட்டின் ஒவ்வொரு மூன்றாவது குடிமகனும் கொல்லப்பட்டார். மேலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான செம்படை வீரர்கள் நகரத்தின் பாதுகாப்பின்போது வீழ்ந்தனர்.

போருக்குப் பின்னர், முக்கைனா தனது கல்வியைத் தொடர ஒரு காலத்தில் விரும்பியபடி முடியவில்லை. அவர் பயிற்சி பெற்று மற்றும் வெவ்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிந்தார். முற்றுகையிலிருந்து தப்பிய பலரைப் போலவே, அவர் தனது வாழ்நாள் முழுவதும் கடுமையான மருத்துவ பிரச்சினைகளால் அவதிப்பட்டார். சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிச அதிகாரத்துவம் கலைப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் 1991 இல் இறந்தார்.

முற்றுகையின் அதிக இழப்புகள் பற்றிய புள்ளிவிவரங்கள் போரின் ஒரு திட்டமிடப்படாத துணைவிளைவு என்பதை தவிர வேறு எதுவும் இல்லை. மாறாக, லெனின்கிராட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களை அழிப்பது நாஜிக்களின் “Master Plan East” [கிழக்கிற்கான பொதுத்திட்டம்] என்று அழைக்கப்படுவதில் ஒரு பகுதியாகும், அத்திட்டத்தின் அடிப்படையிலேயே சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நிர்மூலமாக்கல் போர் அமைந்தது.

ஜேர்மனியின் கிழக்கின் பொருளாதார பணியாளர்களை திட்டமிடுபவர்கள் பின்வருமாறு எழுதினார்கள்: 'இந்த பகுதியில் [வடக்கு மற்றும் மத்திய ரஷ்யாவில்] பல மில்லியன் கணக்கான மக்கள் மிதமிஞ்சியவர்களாக இருப்பார்கள். மேலும் அவர்கள் இறந்துவிடுவார்கள் அல்லது சைபீரியாவுக்கு குடியேற வேண்டியிருக்கும்.' மொத்தம் 30 மில்லியன் சோவியத் குடிமக்கள் பட்டினிச்சாவிற்கு பலிகொடுக்கப்பட வேண்டும்.

திட்டத்தின் நோக்கம் 'கிழக்கில் உயிர்வாழும் இடத்தை [Lebensraum] உருவாக்குவதாகும்.' 'ஸ்லாவ்களுக்கு' பதிலாக மேற்கு ரஷ்யாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் ஜேர்மனியர்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும்.

பிரிட்டனுக்கு எதிரான போரில் ஜேர்மனி வெற்றிபெற, வேர்மாக்ட் மற்றும் ஜேர்மனிய மக்களுக்கு போதிய அளவு உணவு வழங்கப்படுவதை உறுதி செய்வது கிழக்கில் அழிக்கப்படும் போரின் நோக்கமாக இருந்தது. இந்த உணவு, ரஷ்யா மற்றும் உக்ரேனில் இருந்து வரவேண்டி இருந்தது.

'Master Plan East' என்பது முதலாம் உலகப் போரில் இராணுவ மூலோபாயம் மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது. அபபோதும், உக்ரேன் 'ஐரோப்பாவின் ரொட்டி கூடையாக' ஜேர்மனிய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. எவ்வாறாயினும், பிரான்சுக்கு எதிரான இராணுவ மூலோபாயத்தை போலவே, கிழக்கிலும் தோல்வியுற்றது. 1914 மற்றும் 1918 க்கு இடையில் ஜேர்மனியில் சுமார் 800,000 மக்கள் பட்டினியால் இறந்தனர். 1918/19 ஆம் ஆண்டு ஜேர்மன் நவம்பர் புரட்சியின் முக்கிய உந்து சக்திகளாக பரவலான வறுமை மற்றும் பசி இருந்தன. சமூக ஜனநாயகத்தின் துரோகத்தால் இது முறியடிக்கப்பட்டது.

நாஜிக்கள் அத்தகைய சூழ்நிலையை எந்த விலை கொடுத்தும் தவிர்க்க விரும்பினர். இரண்டாம் உலகப் போரில் ஜேர்மன் விமானப்படையின் தளபதியாக இருந்த ஹேர்மான் கோரிங், 1941 இலையுதிர்காலத்தின் முடிவில் லெனின்கிராட்டை கைப்பற்றுவதல்ல, அதை முற்றுகையிட்டு பட்டினி கிடக்கவைக்கும் தீர்மானத்தில் முக்கிய பங்கு வகித்தார். 'யாராவது பட்டினி கிடக்கவேண்டியிருந்தால், அது ஒரு ஜேர்மனியராக இருக்க கூடாது' என்று அவர் அறிவித்தார்.

லெனின்கிராட் மற்றும் மாஸ்கோ முற்றுகைகள், அத்துடன் உக்ரேனில் உள்ள கியேவ், கார்கோவ் மற்றும் செவாஸ்டோபோல் போன்ற பிற முக்கிய நகரங்களும் இந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் லெனின்கிராட் போல வேறு எங்கும் இரக்கமின்றி முற்றுகை செயல்படுத்தப்படவில்லை. நகரத்தை தரைமட்டமாக்க வேண்டும் என்று ஹிட்லரே சொன்னார். 'ஜேர்மனியமயமாக்கப்பட்ட ரஷ்யா' திட்டங்களில், மூன்று மில்லியன் மக்கள் தொகை கொண்ட லெனின்கிராட்டிற்கு அங்கே எந்த இடமுமில்லை.

நகரம் பல விஷயங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. உலக வரலாற்றில் முதல் தொழிலாளர் புரட்சி 1917 அக்டோபரில் நடந்தது. இதனால் சோவியத் மக்களுக்கும் நாஜிக்களுக்கும் லெனின்கிராட் பெரும் அடையாள முக்கியத்துவம் வாய்ந்தது. நாஜிகள் சோவியத் ஒன்றியத்தையும் தொழிலாள வர்க்கத்தின் சாதனைகளையும் அழிக்க விரும்பினர்.

மேலும், லெனின்கிராட் சோவியத் ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய தொழில்துறை மையமாக இருந்தது. மேற்கு ரஷ்யாவிலும் முக்கிய நகரங்களிலும் நாஜிக்களின் “நிர்மூலமாக்கும் உத்தி” முதன்மையாக தொழிலாள வர்க்கத்தை இலக்காகக் கொண்டது. துறைமுக நகரமான லெனின்கிராட் மூலோபாய காரணங்களுக்காகவும் முக்கியமானது. பால்டிக் பிராந்தியத்தின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக நாஜிக்கள் அதைக் கைப்பற்ற விரும்பினர்.

பிற்குறிப்புகள்

[1] Jörg Ganzenmüller: Das belagerte Leningrad 1941-1944: Die Stadt in den Strategien von Angreifern und Verteidigern [Leningrad under siege 1941-1944: The City in the Strategy of its Attackers and Defenders], Paderborn 2007, p. 66

[2] Quoted in ibid, p. 47

[3] Quoted in ibid, p. 63

Loading