கல்வியை தனியார்மயமாக்குவதற்கு எதிரான மாணவர் போராட்டத்தை ஒரு முதலாளித்துவ கூட்டணிக்குள் கரைத்துவிட மு.சோ.க. மீண்டும் முயல்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கல்வியை தனியார்மயமாக்குவதனதும் இராணுவமயமாக்குவதனதும் ஒரு திருப்புமுனையாக, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்வதற்கு இராஜபக்ஷ அரசாங்கம் இப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு மார்ச் 06 அன்று அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ள இந்த மசோதாவுக்கு, பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுவும் நேற்று ஒப்புதல் அளித்தது. இது 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது முறையாக விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் 1978 பல்கலைக்கழகச் சட்டத்துடன் எந்த தொடர்பும் இல்லாத ஒரு நிறுவனமாக கொத்தலாவல பல்கலைக்கழகம் மாற்றப்படுவதுடன், நாடு முழுவதும் பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் பீடங்களை தொடங்குவதற்கும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் இதற்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. முப்படைகளின் உறுப்பினர்களுக்கு மேலதிகமாக, ஆயிரக்கணக்கான சிவில் மாணவர்களை, கட்டண வசூலிப்பின் அடிப்படையில் இந்த நிறுவனத்திற்கு சேர்த்துக்கொள்வதற்கு இந்த சட்டம் அனுமதி அளிக்கிறது.

அதே போல், கல்வி தொடர்பான இந்த முடிவுகள் அனைத்தும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள் மற்றும் இராணுவத்தின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரால் எடுக்கப்படுகின்றன. இந்த மசோதாவானது 'தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய கொள்கைக்கு' அச்சுறுத்தல் என்ற போலிக்காரணத்தின் கீழ், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் அரசியல் மற்றும் தொழில்முறை தலையீட்டைக் அடக்குவதற்கு இராணுவத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.

ஜெனரல் சேர் ஜோன் கொதலால பாதுகாப்பு பல்கலைக்கழகம் - பட்டதாரி கற்கைகள் பீடம்- [photo: kdu.ac.lk]

கல்விக்கான தனியார்மயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கல் திட்டங்கள், கொரோனா தொற்றுநோயால் தீவிரமாக்கப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மத்தியில், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் மீது அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ள தாக்குதல்கள் மற்றும் எதேச்சதிகார வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியே இதுவாகும்.

புதிய சட்டத்தின் மூலம் கொண்டுவரப்படும் ஆபத்துகள், அது சம்பந்தமாக ஏற்கனவே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட உழைக்கும் மக்களிடையே எதிர்ப்பைத் தூண்டிவிட்டுள்ளது. இந்த சூழலில், போலி-இடது முன்நிலை சோசலிசக் கட்சியும் (மு.சோ.க.) மற்றும் அதன் கட்டுப்பாட்டிலான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் (அ.ப.மா.ஒ.) இந்த எதிர்ப்பை, முதலாளித்துவ அமைப்புகள், போலி-இடது கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களை உள்ளடக்கிய ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியின் மூலம் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் வேலைத் திட்டத்திற்கு இந்த எதிர்ப்பை சிறைப்படுத்த முயல்கின்றன.

ஜூலை 1, மு.சோ.க.வின் கல்வி செயலாளர் புபுது ஜாகொட, கொத்தலாவல சட்டம் குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் தோற்கடிக்க, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் அவர் அழைப்பு விடுத்தார். இல்லையெனில், 'ஒரு பரந்த சக்தியைக் கட்டியெழுப்பி' தாம் தலையிடு செய்வதாக அவர் சபதம் செய்தார்.

கல்வியை தனியார்மயமாக்குவதற்கும் இராணுவமயமாக்குவதற்கும் எதிர்க்கும் பிரிவுகள், அரசாங்கத்தின் முதலாளித்துவ கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்குள் உள்ளன என்ற மாயையை ஜாகொட இவ்வாறு தூக்கிப் பிடிக்கின்றார். அதிகாரத்தில் இருக்கும் கோடாபய இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) மட்டுமல்லாமல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ,ல.சு.க.), ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) மற்றும் அதில் இருந்து பிளவுபட்ட ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட அனைத்து கட்சிகளும், தாம் அதிகாரத்தில் இருந்த போது, தொழிலாள வர்க்கத்தின் மீது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தி வந்துள்ளன.

அவர்கள் அரசாங்கத்திலோ அல்லது எதிர்க்கட்சி என்று சொல்லப்படுபவற்றிலோ இருந்த போது, சர்வதேச நிதி மூலதனத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கை கொள்கைகளையே கூட்டாக செயல்படுத்தி வருகின்றனர். கொத்தலாவல மசோதாவானது அதன் நச்சுத்தனத்துடனேயே முதன்முதலில் 2018 ஆம் ஆண்டில் முந்தைய சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஆட்சியை பதவிக்கு கொண்டுவர ஜே.வி.பி. நேரடியாகவும் மு.சோ.க. மறைமுகமாகவும் செயற்பட்டன.

அதுமட்டுமன்றி, சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட 26 ஆண்டுகால இனவாதப் போரில் பங்காளிகளாக இருந்து, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இராணுவமயமாக்க அவர்கள் பங்களிப்பு செய்துள்ளனர். போரின் போது தமிழ் மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட அரச அடக்குமுறை இயந்திரம், இப்போது கோடாபய இராஜபக்ஷவின் கீழ் தொழிலாள வர்க்கம், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பாராளுமன்றத்தில் ஏதாவது செய்யப்படும் என்ற மாயையை விதைப்பதிலும், அதே போல், பாராளுமன்றத்திற்கு வெளியே 'பரந்த சக்திகளை' அணிதிரட்டுவதற்கு மு.சோ.க. மற்றும் அ.ப.மா.ஒ. முன்னெடுக்கும் முயற்சிகளின் முதன்மை நோக்கமானது, கல்வி வெட்டினதும் எதேச்சதிகார ஆட்சிகள் பதவிக்கு வருவதனதும் பிரதான மூலமாக இருக்கும் உலக முதலாளித்துவ முறைமையின் அமைப்பு ரீதாயன நெருக்கடி நிலைமையை மூடி மறைப்பதும் அரசாங்கத்தின் தாக்குதல்களை தோற்கடிக்கும் வல்லமை கொண்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் வேலைத் திட்டத்தை சூழ மாணவர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டுவதற்கு எதிராக மதில் கட்டுவதும் ஆகும்.

ஒரு மந்திரத்தைப் போல அவர்கள் மீண்டும் மீண்டும் உளறுகின்ற “போராடும் படைகள்” எதனால் அமைந்திருக்கின்றன என்று பார்த்தால், அவை முதலாளித்துவ அரசாங்கத்தின் ஒவ்வொரு தாக்குதலிலும் நேரடியாக ஈடுபட்டுள்ள வாசுதேவ நாணயக்கார போன்ற அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற பிற போலி இடது கட்சிகள் மற்றும் அந்தந்த துறைகளில் தொழிலாளர்களின் போராட்டங்களை காட்டிக் கொடுப்பதன் மூலம் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் போன்ற பல தொழிற்சங்கங்களைக் கொண்டே அமைந்திருக்கின்றன.

மு.சோ.க. சார்பு அ.ப.மா.ஒ., 'மசோதாவுக்கு எதிரானது' என்று கூறிக்கொள்ளத் தொடங்கியுள்ள மேற்கண்ட அமைப்புகளின் வீடியோக்களை ஏற்கனவே தங்கள் முகநூலில் பதிவேற்றத் தொடங்கியுள்ளன. தான் “அ.ப.மா.ஒ. தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதாகவும் எதிர்காலத்தில் 'இரு தரப்பினரும் உடன்படக்கூடிய ஒரு இடத்திற்கு பயணிக்க முடியும்' என்று நாணயக்கார அந்த வீடியோவில் குறிப்பிடுகின்றார்.

'மூட முடியாது என்று சொன்ன சைடம் பட்டப் படிப்பு கடை மூடப்பட்டுள்ளது. போராடி வென்ற ஒரு இயக்கம் தான் மாணவர் இயக்கம். இதை விலக்கிக்கொள்ளாவிட்டால், இலங்கை முழுவதும் பிரச்சாரம் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்,” என்று கடந்த வாரம் நடத்திய ஒரு செய்தியாளர் மாநாட்டில் அ.ப.மா.ஒ. அழைப்பாளர் ரவீந்திர முதலிகே தெரிவித்தார்.

மலாபேயில் அமைந்துள்ள சைட்டம் தனியார் மருத்துவ பட்ட நிறுவனத்தை மூடக் கோரி, அ.ப.மா.ஒ. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக (2008-2019) மேற்கூறிய முதலாளித்துவ குழுக்களுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியது. சிறிசேனா-விக்ரமசிங்க அரசாங்கத்தினால் முதன்முதலில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மசோதா 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போது, அது வரை சைட்டம் இல் படித்த மாணவர்களை கொத்தலாவலை பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொண்டே மசோதாவை அறிமுகப்படுத்தியது.

சைட்டம் பல்கலைக்கழகத்தை மூடுவதற்கான அழைப்புகளுக்கு மத்தியில், முதலீட்டுச் சபை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் ஒப்புதலின் கீழ், நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவி, கல்வியை தனியார்மயமாக்குவது முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. மு.சோ.க. மற்றும் அ.ப.மா.ஒ. இன் 'வெற்றிகளின்' சரித்திரம் இதுதான்.

இருப்பினும், ஜாகொடவின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, இராணுவமயமாக்கல் சம்பந்தமாக மு.சோ.க. காட்டும் எதிர்ப்பு ஒரு மோசடி என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. அரசாங்கத்தின் இராணுவமயமாக்கலை, 'தோல்வி மற்றும் பற்றாக்குறையை' எதிர்கொள்ளும் நிலையில் மேற்கொள்ளப்படும் நடைமுறைவாத வேலைத்திட்டமாக சித்தரிக்க அவர் முயன்றார். 'தற்போதுள்ள அமைப்பு ரீதியான நெருக்கடிக்கு முன்னால், தலைதூக்க முடியாது போகும் பட்சத்தில், போக்கிடமற்று பீதியினால் செய்யப்படும் பைத்தியக்கார வேலையே இது, எல்லாவற்றுக்கும் இராணுவத்தை பதிலீடு செய்வது பைத்தியக்காரத்தனம்,” என்று ஜாகொட கூறினார்.

கொவிட் தொற்றுநோயை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு, 'அரிசி ஆலை மாஃபியாவுக்கு எதிராகவும் மற்றும் சாரதி உரிமைப் பத்திரிங்களை வழங்குவதற்கும் இராணுவத்தை பயன்படுத்துவது தோல்வியடைந்துள்ளது' என்று ஜாகொட கூறினார்.

அரசாங்கம் இந்த துறைகளுக்கு இராணுவத்தை நிறுத்தியிருப்பது, கொவிட் தொற்றுநோயை அடக்குவதற்கோ, பொதுமக்களுக்கு அரிசியை ஒழுங்காக விநியோகிப்பதற்கோ அல்லது தாமதமின்றி சாரதி உரிமங்களை வழங்குவதற்கோ அல்ல. மேற்கண்ட சாக்குப்போக்கின் கீழ், அந்த துறைகளில் இராணுவத்தை நுழைத்து, தொழிலாளர்களை மிரட்டி அவர்களின் போராட்டங்களை அடக்குவதற்குமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது 'பைத்தியக்காரத்தனம்' அல்ல, மாறாக நெருக்கடிக்கு மூழ்கியுள்ள முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகார திட்டங்களின் ஒரு பகுதி ஆகும். ஜாகொட வேண்டுமென்றே அதை மூடி மறைக்கிறார்.

தொற்று நோய்க்கு மத்தியில் மனித உயிருக்கும் மேலாக பெரும் வணிக இலாபங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு பெருகிவரும் வெகுஜன எதிர்ப்பை அடக்குவதற்கே கொவிட்டை கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியானது இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது என்பதை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் ஆடைத் தொழிலாளர்களை பலாத்காரமாக வேலைக்கு அனுப்புவதில், இராணுவ பலாத்காரத்தை பயன்படுத்துவது, சுகாதாரத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் துருப்புக்களை மருத்துவமனைகளுக்கு அனுப்புவது ஆகியவற்றின் மூலம் இராணுவம் இந்த முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சாரதி உரிமைப் பத்திரங்களை வழங்குவதற்கும், பொதுமக்களின் தகவல்களை அணுகுவதற்கான குறிக்கோளுடனேயே இராணுவம் பயன்படுத்தப்பட்டது.

இந்த போலி இடதுசாரிகள் இராணுவத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பைப் பற்றி கவலை கொண்டுள்ளனர். 'எல்லாவற்றுக்கும் இராணுவத்தைப் பயன்படுத்தி, இராணுவத்திற்கு ஏதேனும் நற்பெயர் இருந்தால், அதுவும் இப்போது பாழாகிவிடும்' என்று ஜாகொட கூறினார்.

சிங்கள மேலாதிக்க முதலாளித்துவ அரசு மற்றும் அதன் உள்ளார்ந்த கருவிகளில் ஒன்றான இராணுவத்தை முழுமையாக நியாயப்படுத்தும் ஒருவரால் மட்டுமே, மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரின்போது பல்லாயிரக்கணக்கான தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களையும் 1971 மற்றும் 1988-89 ஆம் ஆண்டுகளில் தெற்கில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளையும் கொடூரமாக படுகொலை செய்த இராணுவத்திற்கு “ஒருவித நற்பெயர் இருப்பதாக” கூற முடியும்.

இந்த ஆண்டு முதல் 2026 வரை, 29 பில்லியன் டொலர் பிரமாண்ட கடனை அடைக்க அரசாங்கம் மேலும் மேலும் கடன் வாங்குகிறது. ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையின் வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் குறைவதால் அரசாங்கத்தின் நெருக்கடி அதிகரித்துள்ளது.

அந்தச் சூழலில், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட சமூக நலச் செலவுகளை பிரமாண்டமான அளவில் குறைக்கும் அதே வேளை, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் இலாபத்தை அதிகரிப்பதற்கான ஒரு வழியாக கல்வியை தனியார்மயமாக்குவதை துரிதப்படுத்த சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. அதே நேரம், கல்வி உட்பட அனைத்து பகுதிகளிலும் இராணுவமயமாக்கல் திட்டத்தை பரவலாகவும் விரைவாகவும் செயல்படுத்த அரசாங்கம் விரும்புகிறது.

மு.சோ.க. மற்றும் அ.ப.மா.ஒ. மேற்கொள்ளும் குட்டையை குழப்பும் நடவடிக்கைகளுக்கு எதிராக, உலக முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியை தெளிவுபடுத்தி, இராணுவமயமாக்கல் உட்பட அரசாங்கத்தின் தாக்குதல்களை தோற்கடிக்க, உலக சோசலிச முன்னோக்கின் கீழ், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி கலந்துரையாடுவதற்க்காக, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் ஏற்பாடு செய்துள்ள ஒரு இணையவழி கூட்டம், இந்த மாதம் 16 ஆம் திகதி இரவு 7.00 மணிக்கு நடைபெறும்.

'கல்வியை இராணுவமயமாக்குவதற்கும் மற்றும் தனியார்மயமாக்குவதற்கும் எதிராகப் போராடுவது எப்படி?' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

Loading