விடைபெறும் பயணம், மேர்க்கெலின் வாஷிங்டன் விஜயம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மன் சான்சிலராக வாஷிங்டனுக்கு அவரின் கடைசி உத்தியோகப்பூர்வ விஜயமென எதிர்பார்க்கப்படும் பயணத்தை அங்கேலா மேர்க்கெல் வியாழக்கிழமை மேற்கொண்டார். அவரின் பதினாறு ஆண்டு கால பதவி காலத்தில் இருபதுக்கும் அதிகமான முறை அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள அவர், ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடென் ஆகிய நான்கு வெவ்வேறு ஜனாதிபதிகளைச் சந்தித்துள்ளார்.

கூட்டு வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சந்திப்பில் மேர்க்கெல் மற்றும் பைடென் (AP Photo/Susan Walsh)

இந்த விஜயம், ட்ரம்ப் சகாப்தத்தில் கடுமையான அபாயப் பகுதிகளைச் சுமூகமாக்கும் முயற்சியாக இருந்தது. பைடென் வெள்ளை மாளிகைக்கு வருகை தர அழைக்கப்பட்ட முதல் ஐரோப்பிய அரசாங்கத் தலைவரான மேர்க்கெலுக்கு பாராட்டுக்களும் மரியாதைகளும் குவிந்தன. அவர் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுடன் காலை உணவருந்தி, ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து (அவரது 18 வது) கெளரவ டாக்டர் பட்டம் பெற்றார், பின்னர் பேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதி பைடெனைச் சந்தித்தார். அதன் பின்னர், பைடெனும் அவர் மனைவி ஜில்லும் அவரை கௌரவிக்கும் வகையில் இரவு விருந்து வழங்கினர்.

கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தில், பைடென் மேர்க்கெலுக்குப் பாராட்டுக்களை பொழிந்தார். அவரது அதிபர் பதவி 'வரலாற்று தன்மையைக்' கொண்டிருப்பதாக கூறிய பைடென், ஜேர்மனிக்கும் உலகிற்கும் அவரது 'தலையாய சேவைகளை' புகழ்ந்துரைத்தார். அவர் எப்போதும் சரியான விஷயத்திற்காக எதிர்த்து நின்றார் என்றும் மனித கண்ணியத்தைப் பாதுகாத்தார் என்றும் பைடென் அறிவித்தார். மேர்க்கெல் கட்டமைத்த அடித்தளத்தில், ஜேர்மனிக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பங்காண்மை இன்னும் வலுவடையும் என்றவர் தெரிவித்தார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மன் மறுஐக்கியத்திற்கு அதன் 'சிறப்பார்ந்த பங்களிப்பை' வழங்கிய அமெரிக்காவுக்கு நன்றி கூறிய மேர்க்கெல், 'ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் ஐக்கியப்பட்டிருப்பதைப் போல பொதுவான நலன்களில் இந்தளவுக்கு ஆழமாக மற்றும் விரிவாக உலகில் வேறெந்த இரண்டு பிராந்தியங்களும் ஒன்றிணைந்திருக்கவில்லை,” என்று வலியுறுத்தினார்.

புஷ், ஒபாமா, ட்ரம்ப் மற்றும் பைடென் உடனான மேர்க்கெலின் தனிப்பட்ட நல்லுறவை உயர்த்திக் காட்டி ஊடங்கங்களில் முன்னரே எண்ணற்ற செய்திகள் உள்ளன. தனிப்பட்ட நல்லுறவுகளும் அரசியலில் ஒரு பாத்திரம் வகிக்கின்றன தான், என்றாலும் அவை இரண்டாம் நிலையில் பங்காற்றுகின்றன. முடிவாக, அரசுத் தலைவர்களுக்கு இடையிலான நல்லுறவு என்பது, அதுவும் குறிப்பாக அமெரிக்கா போன்ற சக்தி வாய்ந்த ஏகாதிபத்திய அரசு மற்றும் உலகின் மிகப்பெரிய மற்றும் நான்காவது மிகப்பெரிய பொருளாதாரமான ஜேர்மனி என இவற்றின் தலைவர்களாக இருக்கையில், புறநிலை காரணிகள் மற்றும் நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது.

மேர்க்கெலின் 16 ஆண்டு கால அதிபர் பதவியின் போது, தவிர்க்க முடியாத ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், அமெரிக்காவுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. சமீபத்திய உச்சிமாநாட்டில் வெளிப்படுத்தப்பட்ட நல்லிணக்கத்திற்குப் பின்னாலும் கூட —நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாய்வழித் திட்டம் மீதான மோதல் போன்றவற்றில்— கடுமையான பதட்டங்கள் உள்ளன, இவற்றை வியாழக்கிழமை சிரமப்பட்டும் மறைக்க முடியாமல் வெளியில் தெரிந்தன.

மேர்க்கெல் கையிலெடுத்த 'பொதுவான மதிப்புகள் மற்றும் நலன்கள்', கொலைபாதகப் போர்கள், அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் அட்லாண்டிக்கின் இரண்டு தரப்பிலும் பாசிசவாத சக்திகளின் எழுச்சி ஆகியவற்றில் அவை உணரப்பட்டுள்ளன.. இதையொட்டி, இராணுவவாதம், வர்க்கப் போர் மற்றும் எதேச்சதிகார ஆட்சி வடிவங்களை நோக்கிய திருப்பம், பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான மோதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. இது ஜேர்மன் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் பொருந்தும், அவை இரண்டு உலகப் போர்களில் ஒன்றையொன்று எதிரிகளாக எதிர்கொண்டன மற்றும் சமரசமற்ற பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைப் பின்தொடர்கின்றன.

நவம்பர் 2005 இல் மேர்க்கெல் அதிபராவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பேர்லினுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமடைந்தன. 2003 ஈராக் போர் மத்திய கிழக்கில் அவற்றின் சொந்த நலன்களை அச்சுறுத்தியதால், ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள் அந்தப் போரை எதிர்த்தன. ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் அமெரிக்க நிர்வாகம் ஐரோப்பாவைப் பிளவுபடுத்த முயன்றதன் மூலம் விடையிறுத்தது. அது 'பழைய ஐரோப்பாவுக்கு' (ஜேர்மனி மற்றும் பிரான்ஸ்) எதிராக 'புதிய ஐரோப்பாவை' (கிழக்கு ஐரோப்பா) நிலைநிறுத்தியது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மேற்கு ஐரோப்பாவுடன் அமெரிக்கா நெருக்கமாக கூட்டணி, 'உண்மையில், வரலாற்று விதிமுறைக்கு விதிவிலக்கு' ஆக இருந்தது. ஒரு பெரிய ஏகாதிபத்திய சக்தியாக சற்றே தாமதமாக மேலெழுந்ததில் வேரூன்றிய அமெரிக்க முதலாளித்துவத்தின் மிக அடிப்படையான போக்கு, ஐரோப்பாவை விலையாக கொடுத்து அதன் உலக அந்தஸ்தை வளர்த்துக் கொள்வதாக இருந்தது,” என்று அந்நேரத்தில் உலக சோசலிச வலைத் தளத்தில் டேவிட் நோர்த் கருத்துரைத்தார்.

அமெரிக்காவின் நடத்தை மேற்கத்திய ஐரோப்பியர்களுக்கு ஒரு சங்கடத்தை முன்வைக்கிறது, நோர்த் பின்வருமாறு நிறைவு செய்தார்: 'அமெரிக்காவின் கட்டளைகளுக்கு அடிபணிவதென்பது பழமைவாத பிரெஞ்சு நாளேடான Le Figaro இன் வார்த்தைகளில் கூறுவதானால், ’அமெரிக்காவின் ஒரு எளிய காபந்து அரசாக’ அவை தரங்குறைவதை ஏற்றுக் கொள்வதாக இருக்கும். ஆனால் பகிரங்கமாக எதிர்ப்பது அமெரிக்காவுடன் சாத்தியமான பேரழிவுகரமான இராணுவ மோதலின் ஆபத்தை எழுப்பும்.'

அந்நேரத்தில் ஜேர்மன் நாடாளுமன்றத்தின் (கூட்டாட்சி நாடாளுமன்றம்) எதிர்க் கட்சித் தலைவராக இருந்த அங்கேலா மேர்க்கெல், ஒரு வெளிநாட்டு செய்தித்தாளில் அவரது சொந்த அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையைத் தாக்கும் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை எடுத்தார். வாஷிங்டன் போஸ்டில் வெளியான 'ஷ்ரோடர் ஜேர்மனியர்கள் அனைவருக்காகவும் பேசவில்லை' என்ற கட்டுரையில், அவர் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்ட விரோதமான ஈராக் போரை ஆதரித்தார்.

அதிபர் என்ற முறையில் மேர்க்கெல் பின்னர், பொய்களின் அடிப்படையில் ஈராக்கைத் தாக்கிய ஜனாதிபதி புஷ்ஷுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டார். மெக்லென்பேர்க் கிராமத்தில் ஒரு கூட்டு விருந்து, புஷ்ஷின் டெக்சாஸ் பண்ணைக்கு விஜயம் மற்றும் இன்னும் பல பிரசன்னங்களும் ஊடகங்களுக்கு அவர்களின் நட்புறவை நிரூபித்தன. பின்னர், மேர்க்கெல் ஜேர்மனிய சிப்பாய்களையும் ஈராக்கிற்கு அனுப்பினார், ஆனால் குர்திஷ் ஆதிக்கம் செலுத்திய வடக்கிற்கு மட்டும் அனுப்பினார்.

ஆனால் மேர்க்கெலும் கூட ஐரோப்பியர்களின் சங்கடத்தில் இருந்து தப்பித்து விட முடியவில்லை. 2008 இல் உக்ரேனும் ஜோர்ஜியாவும் நேட்டோவில் இணைய புஷ் வழிவகுக்க விரும்பிய போது, அவர் அதை மறுத்தார். ஜேர்மனிய பொருளாதாரம் எரிசக்தி வினியோகத்திற்குச் சார்ந்திருக்கும் ரஷ்யாவுடனான உறவில் அமெரிக்கா ஆணையிடுவதை அவர் விரும்பவில்லை.

பாரக் ஒபாமாவுடனான மேர்க்கெலின் நல்லுறவு ஆரம்பத்தில் சீராக இருக்கவில்லை. 2008 இல், பேர்லினில் உள்ள அடையாள பிராண்டன்பேர்க் வாயிலுக்கு முன்னால் ஜனாதிபதி வேட்பாளராக ஒரு பிரச்சார உரையை நிகழ்த்துவதை அவர் தடுத்தார். பின்னர் 2011 இல், அவர் 2003 இல் ஷ்ரோடரை விட மேலதிகமாக சென்றார். லிபியப் போர் மீதான வாக்கெடுப்பில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் ஜேர்மனி சீனாவுடன் சேர்ந்து அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனை எதிர்த்தது. மீண்டும் இது சமாதானத்திற்காக இருக்கவில்லை, மாறாக வட ஆபிரிக்காவில் ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்கள் சம்பந்தப்பட்டதாக இருந்தது.

2013 இல், மேர்க்கெலின் மொபைல் போனை அமெரிக்க உளவுத்துறை அமைப்பான NSA ஒட்டுக் கேட்டது என்ற வெளியீடு மற்றொரு இராஜாங்க நெருக்கடியைத் தூண்டியது.

ஒபாமா நிர்வாகத்தின் போக்கில், உறவுகள் மேம்பட்டன. வாஷிங்டன் சீனாவை எதிர்கொள்வதில் அதன் வெளியுறவுக் கொள்கையின் கவனத்தை மாற்றி, ரஷ்யாவைக் கையாள்வதில் பேர்லினுக்கு அதிக வழியை வழங்கியது, இதன் மூலம் இடைப்பட்ட காலத்தில் அவற்றுக்கிடையிலான உறவுகள் கணிசமாக தணிந்திருந்தன.

2014 வசந்த காலத்தில், அப்போது அதன் மூன்றாவது பதவிக் காலத்தில் இருந்த மேர்க்கெல் அரசாங்கம், இராணுவரீதியாக உட்பட ஜேர்மனியின் பொருளாதார பலத்திற்கு நிகராக ஜேர்மனி மீண்டும் உலக அரசியலில் ஒரு பாத்திரத்தை வகிக்கும் என்று அறிவித்தது— இது உடனடியாக நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டது. அமெரிக்காவுடன் சேர்ந்து, பாசிச கும்பல்களின் ஆதரவைக் கொண்டிருந்த உக்ரேனில் ஆட்சிக்கவிழ்ப்பை ஏற்பாடு செய்த அது, மேற்கத்திய-சார்பு ஆட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது மற்றும் ரஷ்யாவுடனான மோதலை வியத்தகு முறையில் தீவிரப்படுத்தியது. அப்போதிருந்து, ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ நிலைநிறுத்தலில் பேர்லின் ஒரு முன்னணி இராணுவ பாத்திரம் வகிக்கிறது.

வெள்ளை மாளிகைக்கு டொனால்ட் ட்ரம்பின் வருகை ஜேர்மன்-அமெரிக்க உறவுகளை ஒரு புதிய தாழ்நிலையில் கொண்டு வந்தது. நேட்டோவைக் கேள்விக்குள்ளாக்கிய முதல் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், பிரெக்ஸிட் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிவினையை ஆதரித்தார், மற்றும் வேண்டுமென்றே ஐரோப்பாவுக்கு எதிரான வர்த்தகப் போரை தீவிரப்படுத்தினார். ட்ரம்பின் மோதல் நடத்தை, பிராங்கோ-ஜேர்மனிய தலைமையின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இணையாக ஓர் உலக சக்தியாக அபிவிருத்தி செய்வதற்கான பழைய திட்டங்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்தது. ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையிலான போட்டியின் காரணமாக அதுவரையில் அத்தகைய திட்டங்கள் பலமுறை தோல்வியடைந்திருந்தன.

மேர்க்கெலை நோக்கிய பைடெனின் போலித்தனமான நயவஞ்சக பேச்சுக்கள் இந்தத் திட்டங்களை கீழறுக்க சிறிதும் உதவுவதாக இல்லை. பைடென் நிர்வாகம் —ஒபாமா மற்றும் ட்ரம்ப் நிர்வாகங்களைப் போலவே— சீனாவை அதன் மிக முக்கிய புவிமூலோபாய போட்டியாளராக கருதுகிறது. சீனாவுடனான மோதலில் ஐரோப்பியர்களை அதன் பக்கம் கொண்டு வர விரும்புகின்ற அதே நேரத்தில், அவர்கள் மிகவும் சுதந்திரமாக மாறுவதையும் தடுக்க விரும்புகிறது.

ஐரோப்பாவில் சீனாவுடனான மோதல் போக்கு குறித்து கணிசமான தயக்கங்கள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும் இப்போது அந்நாட்டை ஒரு மூலோபாய போட்டியாளராக கருதினாலும், சீனாவுடனான பூசலில் அமெரிக்க நலன்களுக்காக தன்னை அடிபணிய செய்து கொள்ள அதற்கு விருப்பமில்லை. ஜேர்மனிய வணிக வட்டங்கள் எச்சரிக்கை அடைந்துள்ளன. நெதர்லாந்தை அடுத்து, சீனா தான் ஜேர்மனியின் மிக முக்கிய வர்த்தக பங்காளியாக உள்ளது. மிகப் பெரிய ஜேர்மனிய கார் நிறுவனமான வோல்க்ஸ்வாகன் அதன் மொத்த வருவாயில் 41 சதவீதத்தை அங்கிருந்து தான் பெறுகிறது. போஷ்ச் போன்ற பிற ஜேர்மனிய நிறுவனங்களும் புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சிகளை உருவாக்குவதில் சீன நிறுவனங்களுடன் ஒத்துழைக்குகின்றன.

பைடென் பதவியேற்பதற்கு சற்று முன்னர், ஜேர்மனியின் முன்முயற்சியின் பேரில் ஐரோப்பிய ஒன்றியம் சீனாவுடன் ஒரு முதலீட்டு உடன்படிக்கையை நிறைவேற்றியது, ஜேர்மனிய அரசாங்கம் இதையொரு 'வர்த்தகக் கொள்கையில் மைல்கல்' என்று கொண்டாடியது. மறுபுறம், வாஷிங்டனில் அது ஓர் எதிர்நடவடிக்கையாக பார்க்கப்பட்டது, இதற்கிடையே, அது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் மீண்டும் அதிகரித்தளவில் அழுத்தத்தின் கீழ் வந்து கொண்டிருக்கிறது.

பைடென் மற்றும் மேர்க்கெலுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் சீனா ஒரு முக்கிய தலைப்பாக இருந்தது என்றாலும், அதில் இருவருமே பத்திரிகையாளர் கூட்டத்தில் அழுத்தத்துடன் தெளிவின்றி இருந்தனர். 'பொருளாதாரப் பகுதியில், காலநிலை பாதுகாப்பு ப,குதியில், இராணுவப் பகுதியில், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் நாங்கள் சீனாவுடனான கூட்டுறவு அல்லது போட்டியிலும் கூட பல அம்சங்களைக் குறித்து பேசினோம்—நிச்சயமாக இங்கே பல சவால்கள் எழுகின்றன,' என்று மேர்க்கெல் கூறினார்.

ரஷ்யாவை ஜேர்மனியுடன் நேரடியாக இணைக்கும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 இயற்கை எரிவாயு குழாய்த்திட்டம் பற்றிய மோதலும் தொடர்ந்து புகைந்து கொண்டிருக்கிறது. ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்துவதற்காக அமெரிக்கா அதைத் தடுக்க விரும்புகிறது, அதேவேளையில் ஜேர்மனியோ, அதன் சொந்த எரிசக்தி இருப்புக்கள் எதுவும் இல்லாததால், அதன் சுதந்திரமான உத்தரவாதமான எரிசக்தி விநியோகத்திற்கு (அமெரிக்காவிடமிருந்தும் சுதந்திரமாக) மாற்று ஏற்பாடுகளைப் பரிசீலிக்கிறது. முந்தைய போக்குவரத்து நாடு என்ற முறையில் உக்ரேனுக்கு எந்த வருமான இழப்பும் இருக்காது என்பதை உறுதிப்படுத்தும் ஒரு தீர்வு ஆகஸ்ட் மாதத்திற்குள் இப்போது கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

தொழிலாள வர்க்கம் சர்வதேச அளவில் ஐக்கியப்பட்டு தலையிட்டு, போர் வெறியர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், கடந்த தசாப்தங்களில் எழுந்துள்ள ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான பதட்டங்கள், தவிர்க்க முடியாமல் ஒரு வன்முறை வெடிப்புக்கு இட்டுச் செல்லும். போர் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டம் அவற்றுக்குக் காரணமான முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாகும்.

Loading