பிரெஞ்சு நவபாசிசவாதிகள் அழைப்பு விடுத்த தடுப்பூசி எதிர்ப்பு போராட்டத்தை ஜோன்-லூக் மெலோன்சோன் ஆதரிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூலை 17 இல், கட்டாய கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் சமூக இடைவெளி கட்டுப்பாடுகளுக்கு எதிராக பிரான்சில் நடந்த போராட்டத்தில் பத்தாயிரக் கணக்கானோர் பங்கெடுத்தனர். இந்த போராட்டங்கள், மரியோன் மரிஷால்-லு பென் மற்றும் தேசப்பற்று கட்சியின் (Patriots Party) தலைவர் புளோரியான் பிலிப்போ உட்பட நவ-பாசிச பிரமுகர்களால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன மற்றும் ஆதரிக்கப்பட்டிருந்தன.

ஐரோப்பா எங்கிலும், டெல்டா வகை வைரஸால் உந்தப்பட்டுள்ள, கோவிட்-19 அதிகரிப்பின் பின்னணியில் இந்த போராட்டம் நடந்தது. அத்தியாவசியமற்ற வேலையிடங்கள் மற்றும் பள்ளிகளை மூடுவது உள்ளடங்கலாக விஞ்ஞான-அடிப்படையிலான சமூக இடைவெளி பேணும் கொள்கைகளை மக்ரோன் அரசாங்கம் நிராகரித்து வருகிறது. அதற்கு பதிலாக, மருத்துவப் பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடலாம் என்றும், உணவகங்கள் மற்றும் சமூக நிகழ்வுகளுக்கு வருவதற்கு முன்னதாக, முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர் என்பதைக் காட்டும், அல்லது பரிசோதனையில் வைரஸ் இல்லை என்பதைக் காட்டும் சமீபத்திய ஆவணம், அல்லது வைரஸில் இருந்து சமீபத்தில் குணமானவர் என்பதைக் காட்டும் ஆவணம் என ஒரு 'மருத்துவ அனுமதிச்சீட்டு' வைத்திருப்பதை மக்ரோன் முன்மொழிகிறார். மரிஷால் லு பென் மற்றும் பிலிப்போவும் உயிர்களைக் காப்பாற்றும் நோக்கிலான கட்டாய தடுப்பூசி மற்றும் எந்தவொரு சமூக கட்டுப்பாடுகளையும் கண்டனம் செய்துள்ளனர்.

இந்த வைரஸ் தடையின்றி பரவவேண்டும் என்ற அவர்களின் அழைப்பு, நவ-பாசிச செயற்பாட்டாளர்களிடையே மட்டுமல்லாமல், ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் கட்சி, (La France insoumise —LFI) மற்றும் பசுமை கட்சியின் அடுக்குகளுக்குள் ஆதரவைப் பெற்றுள்ளது. அடிபணியா பிரான்ஸ் கட்சியின் சிலர் பிலிப்போ மற்றும் மரிஷாலின் போராட்டங்களில் இணைந்தனர், இதற்காக பாரிசில் நடந்த பல ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர், மொன்பெலியே இல் 5,500 பேர், மார்சைய்யில் 4,500, ஸ்ராஸ்பேர்க்கில் 2,800 பேர், துலூஸ் மற்றும் நாந்தேர் 2,500, ரென்னில் 2,000 பேர், பெர்ப்பினியோன் மற்றும் நான்சியில் 1,200 பேர் கலந்து கொண்டனர்.

ஜூலை 17, 2021 சனிக்கிழமையன்று ஸ்ட்ராஸ்பேர்க்கில் நடந்த பேரணியில் தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர். (AP Photo/Jean-Francois Badias)

மரின் லு பென்னின் தேசிய பேரணியின் (RN) முன்னாள் தலைவர் பிலிப்போ; அதிவலது கட்சியான Debout la France இன் நிக்கோலா டுபோன்-எய்னியோன்; மற்றும் அரசு எந்திரத்திற்குள் பதவிகளுக்குப் போட்டியிடுமாறு வலியுறுத்தியதும் மஞ்சள்சீருடை போராட்டக்காரர்கள் மத்தியில் பரந்தளவில் எதிர்க்கப்பட்ட நன்கறியப்பட்ட 'மஞ்சள் சீருடை' பிரமுகர் ஜாக்லின் மோரோ ஆகியோர் பாரிஸ் அணிவகுப்பின் தலைமையில் இருந்தனர். அவற்றில் 'மக்ரோன் இராஜினாமா செய்' 'சுதந்திரம் வேண்டும்' என்ற கோஷங்கள் இருந்ததுடன், 'கட்டாய தடுப்பூசி வேண்டாம். தடுப்பூசி சுதந்திரம் ஓர் உரிமை' அல்லது 'எங்கள் குழந்தைகளைத் தொடாதே,' என்று அறிவிக்கும் பதாகைகள் இருந்தன.

அந்த ஆர்ப்பாட்டம் பல தரப்பட்ட தன்மையைக் கொண்டிருந்தது. மக்ரோனின் கொள்கையைக் கண்டிக்க விரும்பிய மருத்துவக் கவனிப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களில் இருந்தனர், தங்கள் வாடிக்கையாளர்களிடம் 'மருத்துவ அனுமதிச் சீட்டுகளை' ஆய்வு செய்ய வேண்டும் என்ற தேவையை உணவக உரிமையாளர்கள் எதிர்த்தனர், மற்றும் முன்னாள் 'மஞ்சள் சீருடையாளர்களும்' அதில் கலந்து கொண்டிருந்தனர். பொலிசாரால் கண்களில் சுடப்பட்ட அந்த இயக்கத்தின் நன்கறியப்பட்ட நபரான ஜெரோம் ரொட்ரிக்கேஸ் தடுப்பூசியை மறுக்க அழைப்பு விடுத்தார், ஆனால் நவ-பாசிசவாதிகள் தலைமையிலான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார்.

எவ்வாறிருப்பினும், அந்த ஆர்ப்பாட்டத்தின் அரசியல் தன்மை தெளிவாக அதிவலதுகளால் செல்வாக்கு செலுத்தப்பட்டது. பிரான்சிலும் உலகெங்கிலும், தீவிர வலதுகள், வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக விஞ்ஞானபூர்வமாக வழிநடத்தப்படும் தடுப்பூசி கொள்கை மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றுக்கு எதிர்ப்பை வழிநடத்துகின்றன. இந்த பெருந்தொற்றால் ஏற்கனவே சர்வதேச அளவில் நான்கு மில்லியனுக்கும் அதிகமானவர்களும், ஐரோப்பாவில் 1.1 மில்லியன் பேரும் உயிரிழந்துள்ளதை மற்றும் மீண்டுமொருமுறை தீவிரமடைந்து வருவதை வைத்து பார்த்தால், இந்த எதிர்ப்பு அடிப்படையில் பிற்போக்குத்தனமாக உள்ளது.

'ஆச்சரியப்படுமளவுக்கு நான் உணவக உரிமையாளர்களைப் பார்க்கிறேன், #PassSanitaire [மருத்துவ அனுமதிச்சீட்டை] ஆதரிக்க இவர்களுக்கு சுத்தமாக விருப்பமில்லை, இதை விட முன்னெப்போதும் இல்லாத வகையில், அவற்றை செயலூக்கத்துடன் அமலாக்க தங்களுக்கு விருப்பமில்லையென பொலிஸ் அதிகாரிகளே என்னிடம் கூறுகிறார்கள்… மனிதாபிமானம் இன்னமும் இருக்கிறது,” என்று ட்வீட்டரில் குறிப்பிட்டு, அந்த வைரஸை ஊக்குவிக்கும் கொள்கைக்கு பொலிஸின் மறைமுக ஆதரவை பிலிப்போ வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மரியோன் மரிஷால் லு பென் அதிவலது பத்திரிகையான Valeurs actuelles க்கு பின்வருமாறு கூறினார்: 'கோவிட்டைத் தடுக்க கட்டாய தடுப்பூசி மற்றும் மருத்துவ அனுமதிச் சீட்டு இவற்றை நான் உறுதியாக எதிர்க்கிறேன். டெகார்ட் இன் தேசத்தில் சந்தேகப்படுவதற்குரிய உரிமை இன்னும் அனுமதிக்கப்பட வேண்டுமென எனக்குத் தோன்றுகிறது!' என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'இப்போது, உரிமையோடு ஒரு காப்பி குடிக்க வேண்டுமானாலும் அந்நியர் ஒருவரிடம் ஆரோக்கியமாக இருப்பதை நியாயப்படுத்த வேண்டுமா? அதிகார கடிவாளங்களை வைத்திருப்பவர்கள் தீவிரப்படும் ஒரு போக்கு வெளிப்படையானவே நடந்து வருகிறது,” என்றார்.

அதே நேரத்தில், நவ-பாசிசவாதிகள் மில்லியன் கணக்கானவர்களைக் காப்பாற்றக்கூடிய தடுப்பூசிகள், 20 ஆம் நூற்றாண்டில் தென்னாபிரிக்க ஆட்சியின் கறுப்பின வெறிக் கொள்கை மற்றும் பாசிச ஐரோப்பாவில் யூதர்களின் இனப்படுகொலை ஆகியவற்றுக்கு இடையே தவறான மற்றும் வெறுப்பூட்டும் கருத்துக்களைக் கலந்து குழப்பத்தைப் பரப்ப வேலை செய்தனர். மக்களிடையே வைரஸைப் பரப்புவதற்கான அவர்களின் தீவிர வலதுசாரிக் கொள்கைக்கு 'இடதுசாரி' மூடிமறைப்பை அளிக்கும் முயற்சியே அந்த நடவடிக்கையின் வெளிப்படையான நோக்கமாக இருந்தது.

ஃபைசர், மொடேர்னா மற்றும் அஸ்ட்ராசெனெக்கா ஆகிய பிரான்சில் கிடைக்கும் தடுப்பூசிகள் விஞ்ஞானபூர்வமாக பரிசோதிக்கப்பட்டவை என்பதோடு, அவற்றின் செயல்திறன் எண்ணற்ற ஆய்வுகளில் பரிசோதிக்கப்பட்டுள்ளன. விஞ்ஞானபூர்வமாக வழி நடத்தப்பட்ட மருத்துவக் கொள்கையில் அவற்றைப் பயன்படுத்துவது அவசர தேவையாகும், அது மில்லியன் கணக்கானவர்களைக் காப்பாற்றும். அவை மில்லியன் கணக்கானவர்களில் ஒரு சிலருக்கு அபாயகரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், அந்த வைரஸ் நோய்தொற்று ஏற்பட்ட மில்லியன் கணக்கானவர்களில் பத்தாயிரக் கணக்கானவர்களைக் கொன்று விடுகிறது. அதை எதிர்க்க எந்த விஞ்ஞானபூர்வ காரணமும் இல்லை.

இப்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மில்லியன் கணக்கில் கணக்கில் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியமும் மக்ரோனும் பின்பற்றும் கொள்கைகள் மீது தொழிலாளர்களும் சிறு வணிக உரிமையாளர்களும் கோபமாகவும் சந்தேகமாகவும் உள்ளனர். ஆனால் நிதிய பிரபுத்துவம் இந்த உணர்வுகளைச் சாதகமாக்கி, தீவிர வலதுசாரி சக்திகளை ஊக்குவித்து, உத்தியோகபூர்வ அரசியலை இன்னும் வலதுக்குத் தள்ளுகிறது. கட்டாய தடுப்பூசி மற்றும் சமூக அடைப்புகளின் எந்தவொரு கொள்கைக்கும் வங்கிகள் மற்றும் நிதிய சந்தைகளுக்கான பிணையெடுப்புகளை விட மருத்துவத்துறைக்கு முதலீடு தேவைப்படும் என்பதால், நவ-பாசிசவாதிகளின் பொய்களைப் பயன்படுத்தி, நிதிய பிரபுத்துவம் அத்தகைய கொள்கைகளைத் தடுக்க விரும்புகிறது.

2018 இல் மக்ரோன் அரசாங்கம் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான 'மஞ்சள் சீருடை' ஆர்ப்பாட்டங்களுக்கும் மற்றும் பிலிப்போ அழைப்பு விடுத்த இந்த போராட்டங்களுக்கும் இடையிலான தவறான ஒப்பீடும் இந்த பொய்களில் உள்ளடங்குகிறது. 'மஞ்சள் சீருடையாளர்கள்' மக்ரோனுக்கும் மற்றும் செல்வந்தர்களின் தனிச்சலுகைகளுக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர், அவர்கள் பிரெஞ்சு மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருந்தனர், சில கருத்துக் கணிப்புக்களால் 72 சதவீத ஆதரவு இருந்தது.

இப்போது, நவ-பாசிசவாதிகள் வைரஸ் பரவுவதற்காகவே அழைப்பு விடுக்கின்றனர், இந்தவொரு கொள்கை அடிப்படையில் மக்ரோன் மற்றும் பொலிஸ் முகமைகளால் ஆதரிக்கப்படுகிறது, அதேவேளையில் பிரான்ஸ் மக்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி இடுவதையும் மற்றும் மருத்துவத்துறை தொழிலாளர்களுக்குக் கட்டாய தடுப்பூசி செலுத்துவதையும் ஆதரிப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

இப்பிரச்சினையைக் குழப்புவதிலும், அதிவலது கொள்கையை ஒரு பிரபலமான கொள்கையாக முன்வைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் அரசியல் சக்தி அடிபணியா பிரான்ஸ் கட்சியாக (LFI) உள்ளது.

பிகார்டியின் LFI தலைவர் பிரான்சுவா ரூஃபன், போராட்டத்திற்கான நவ-பாசிசவாதிகளின் அழைப்புகளுடன் அவர் குரலை சேர்த்தார். 'இதனுடன் நான் அவமானகரமாக வாழ்கிறேன்,' என்று ருஃபின் BFM-TV க்குக் கூறினார். அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார் என்றாலும், கட்டாய தடுப்பூசியை எதிர்த்து அவர் 'போராட' விரும்பினார். மக்ரோன், “அவரிடம் அதிகாரம் இருப்பதால், அதை துஷ்பிரயோகம் செய்கிறார். இங்கே முழுமையான முடியாட்சியுடன் அதை அவர் துஷ்பிரயோகம் செய்கிறார் … அவர் ஒரு வரம்பைச் சந்தித்தாக வேண்டும். அந்த வரம்பு நாமாக இருக்க வேண்டும்,” என்பதை சேர்த்து, “நான் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்,” என்றவர் அறிவித்தார்.

ஆனால் வெள்ளியன்று வெளியிடப்பட்ட ஒரு சிடுமூஞ்சித்தனமான காணொளியில் மெலோன்சோன் நேரடியாக அதை அங்கீகரித்த நிலையில், ரூஃபனின் அரசியல் ஒட்டுமொத்தமாக LFI ஐ உள்ளடக்கி இருந்தது, அந்த காணொளியில் மெலோன்சோன் நவ-பாசிச போராட்டத்தில் இணையும் அவர் ஆதரவாளர்களை அவரால் புரிந்து கொள்ள முடிகிறது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

ஒரு புறம், தடுப்பூசி-எதிர்ப்பு போராட்ட ஏற்பாட்டாளர்களின் அருவருக்கத்தக்க அரசியல் வாதங்களால் அவர் புண்பட்டதாக அவர் கூறினார். அதிவலது ஆர்ப்பாட்டத்தில் இணையப் போகும் அவர் ஆதரவாளர்கள் அரசியல் கருத்துக் கலவைகளைப் பயன்படுத்த வேண்டாம் அது தனது செல்வாக்கைக் குறைக்குமென அவர் கெஞ்சினார். 'முற்றிலும் பொருத்தமற்ற மொழியை' தவிர்க்குமாறு அவர்களை அவர் வலியுறுத்தினார். 'இல்லை, இலவசமாக விநியோகிக்கப்படும் தடுப்பூசி நிறவெறி அல்ல மற்றும் அதன் பரவல் மனிதப் படுகொலையும் அல்ல… மீண்டும் பகுத்தறிவுக்குத் திரும்ப நான் அழைப்பு விடுக்கிறேன்,” என்றார்.

மறுபுறம், மக்ரோனின் பிற்போக்குத்தனமான கொள்கைக்கு எதிராக மட்டுமல்லாமல், கொரோனா வைரஸுக்கு எதிரான விஞ்ஞானபூர்வக் கொள்கைக்கு எதிராகவும் அதிவலதுகளின் அனைத்து வாதங்களையும் மெலோன்சோன் ஏற்றிருந்தார்.

'நமது வாழ்க்கை முறையில் ஒரு ஆழமான மாற்றம்,' 'சுதந்திரங்கள் மீது கணிசமான கட்டுப்பாடு' மற்றும் 'ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொருவரும் அவர்கள் யார், அவர்கள் என்ன நோய்வாய்ப்பட்டுள்ளனர், அவர்கள் என்ன நோய் இல்லை என்று கூற கடமைப்படுத்தும் கூட்டான நிலைமைகளை' ஒரு மருத்துவ அனுமதிச் சீட்டை முன்வைக்க வேண்டிய கடமைக்கு அவர் அழைப்பு விடுத்தார். இந்த 'முற்றிலும் அசாதாரண' நிலைமை 'நிரந்தர மற்றும் உலகளாவிய கட்டுப்பாட்டின் ஒரு சமூகத்திற்கு' மற்றும் 'நிரந்தர மோதலின் ஒரு சமூகத்திற்கு' வழிவகுக்கும் என்றவர் தெரிவித்தார்.

இந்த விஞ்ஞான-விரோத கருத்துக்களும், அதன் விளைவாக அதிவலதுடன் LFI இன் அரசியல் அணி சேர்க்கையும் பிரான்சிலும் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை ஒலியை ஒலிக்க வேண்டும்.

டெல்டா வகை பரவுவதால் நூறாயிரக்கணக்கான உயிர்கள் மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கும் நோய்தொற்று ஏற்படவும் மற்றும் வைரஸ் பரவுவதையும், தடுப்பூசி போடாத மற்றும் பாதிக்கப்படக்கூடிய இளைஞர்களே கூட உயிரிழப்பதற்கு அனுமதிக்கும், ஒரு கொலைபாதக கொள்கையைப் பின்பற்றி வருகிறது.

அதிவலது மற்றும் போலி-இடதுகளால் ஐரோப்பா முழுவதும் ஒரு புதிய மரண அலை அனுமதிக்கப்படுவதைத் தடுக்க, தொழிலாள வர்க்கம் ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கிற்கு எதிராகவும் அரசியல்ரீதியாக அணிதிரட்டப்பட வேண்டும். இதற்கு தொழிற்சங்க எந்திரங்களில் இருந்து சுயாதீனமான வேலையிடங்கள் மற்றும் பள்ளிகளில் சாமானிய பாதுகாப்பு குழுக்களைக் கட்டமைப்பதும், சோசலிசத்திற்காகவும் மற்றும் பெருந்தொற்றுக்கு எதிரான ஒரு விஞ்ஞானபூர்வ போராட்டத்திற்காகவும் ஐரோப்பிய மற்றும் சர்வதேச அரசியல் இயக்கத்தைக் கட்டமைப்பதும் அவசியமாகும்.

Loading