பிரெஞ்சு தடுப்பூசி-எதிர்ப்பு போராட்டங்கள் ஜோன்-லூக் மெலோன்சோனின் வலதுசாரி அரசியலை அம்பலப்படுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைச் சட்டப்பூர்வமாக கட்டாயமாக்கும் மக்ரோன் அரசாங்கத்தின் 'மருத்துவ அனுமதிச்சீட்டு'க்கு (health pass) எதிரான போராட்டங்களில் கடந்த வாரயிறுதியில் பத்தாயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். அந்த போராட்டங்கள் அரசியல்ரீதியில் தீவிர வலதால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வழிநடத்தப்பட்டன. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை வெளிப்படையாக எதிர்க்கும் பாசிசவாத அடுக்குகளையும், தடுப்பூசியை எதிர்க்கும் நடுத்தர வர்க்கத்தின் திசைதிருப்பப்பட்ட, தாராளவாத மற்றும் விஞ்ஞான-விரோத பிரிவுகளையும் அவை அணித்திரட்டி இருந்தன.

மரியோன் மரிஷால் லு பென் மற்றும் தேசபக்தர்கள் கட்சியின் (Patriots party) தலைவர் புளோரியான் பிலிப்போ உட்பட நவ-பாசிசவாத கட்சிகளால் பகிரங்கமாக அந்த போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன. லு பென் மற்றும் பிலிப்போவும் அந்த வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளைக் கூட முடிவுக்கு கொண்டு வர வெளிப்படையாகவே அழைப்பு விடுத்துள்ளனர். இந்த இயக்கத்தில் அணிதிரட்டப்பட்ட அரசியல் சக்திகளை அடிக்கோடிட்டுக் காட்டும் விதத்தில், வாரயிறுதி போராட்டங்களின் போது இசரே மற்றும் பைரனீஸ் பிராந்தியங்களின் இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி மையங்கள் தாக்கப்பட்டன.

Jean-Luc Melenchon in Marseille, May 11, 2019. (AP Photo/Claude Paris)

ஆனால் இந்த இயக்கத்திற்கு ஒரு 'வெகுஜன' பிம்பத்தை வழங்குவதில், ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (La France Insoumise—LFI) உட்பட போலி-இடது போக்குகள் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றன.

தேனீர் விடுதிகள் மற்றும் உணவகங்கள், பொது போக்குவரத்து மற்றும் வர்த்தக மையங்கள் உட்பட பொது இடங்களுக்குச் செல்லும் எவரொருவரும், முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான ஆதாரமோ, கொரோனா வைரஸிலிருந்து சமீபத்தில் குணமடைந்ததற்காக ஆதாரமோ, அல்லது கடந்த 48 மணி நேரத்திற்குள் பரிசோதனை செய்யப்பட்டு அதில் நோய்தொற்று இல்லை என்பதற்கான ஆதாரத்தையோ உள்ளடக்கிய ஒரு 'மருத்துவ அனுமதிச்சீட்டு' கொண்டு செல்ல மக்ரோனின் சட்டம் அவசியப்படுத்துகிறது. மருத்துவத்துறை தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பதை சட்டபூர்வமாக அவசியப்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட பிற்போக்குத்தனமான நடவடிக்கையாக, கொரோனா வைரஸ் பரிசோதனைகள் இனி இலவசமாக இருக்காது.

மக்ரோனின் சட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி ஆதரிக்கவில்லை, அது கொரோனா வைரஸ் பரவுவலைத் தடுக்க நோக்கம் கொண்டதல்ல. அது பொருளாதாரத்தை முழுமையாக மீண்டும் திறப்பதையும், சமூக-இடைவெளி நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதையும் மற்றும் வணிக நடவடிக்கைகள் மற்றும் பெருநிறுவன இலாபங்களுக்கு ஆதரவளிப்பதற்காக கொரோனா வைரஸ் பரவலை அனுமதிப்பதையும் நியாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரான்சில் தடுப்பூசி போடுவது கிட்டத்தட்ட 40 சதவீதமே நிறைவேறி உள்ளது, அதேவேளையில் வேகமாக பரவக்கூடிய டெல்டா வகை ஆதிக்கம் செலுத்தும் நிலையில் ஏற்கனவே நாளொன்றுக்கு 10,000 பேர் நோய்தொற்றுக்கு உள்ளாகி வருகிறார்கள். சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் மக்ரோனின் கொள்கை ஒரு புதிய மரண அலையைத் தயார் செய்து வருகிறது.

ஆனால் அந்த சட்டத்திற்கு எதிராக LFI இன் பிரச்சாரம், இந்த சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதை நோக்கமாக கொண்டதில்லை. மாறாக, அது தடுப்பூசிகளை எதிர்ப்பதை ஊக்குவிப்பதன் மூலமும் மற்றும் அந்த பெருந்தொற்றுக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தின் அவசியம் குறித்த பொதுமக்களின் நனவைக் கீழறுப்பதன் மூலமும் அதே கொள்கையை ஆதரிக்கிறது.

திங்கட்கிழமை மக்ரோன் புதிய சட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, மெலோன்சோனும் LFI இன் சக துணை நிர்வாகி பிரான்சுவா ரூஃபானும் பாரிய தடுப்பூசிக்கு எதிரான வலதுசாரி பிரச்சாரத்துடன் பொருத்தமாக இணைந்த அறிக்கைகளை வெளியிட்டனர். அதிவலது சக்திகள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன என்பதை ஏற்காமல் அவர்களும் ஜூலை 17 இல் போராட்டங்களை நடத்த ஆமோதித்தனர்.

கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு காணொளி உரையில், மெலோன்சோன் அனைவருக்குமான தடுப்பூசி கொள்கையைத் தாக்கினார்: 'உலக சுகாதார அமைப்பின்படி, அனைவருக்கும் தடுப்பூசி தேவையில்லை என்பதை வைத்து பார்த்தால், கட்டாய தடுப்பூசி என்பது ஒரு பொருத்தமில்லா நடவடிக்கையாக தெரிகிறது, அனைத்திற்கும் மேலாக அந்த வைரஸ் சுற்றி வரும் இடத்தில் நேரடியாக அபாயத்தில் இருப்பவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதே போதுமானது எனும் போது, எல்லாருக்கும் தடுப்பூசி செலுத்த விரும்புவது அர்த்தமற்றது,” என்றார்.

மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி போடக் கூடாதவர்களைத் தவிர, ஒட்டுமொத்த மக்களுக்கும் பரந்தளவில் தடுப்பூசி போட வேண்டும் என்று தீவிரமாக பிரச்சாரம் செய்யும் உலக சுகாதார அமைப்பின் நிலைப்பாட்டை இது அப்பட்டமாக இட்டுக்கட்டுவதாக உள்ளது. வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்கள்தொகையில் போதுமான சதவீதத்தினருக்கு —இது எண்ணிக்கையில் தீர்மானிக்கப்படவில்லை— தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. மெலோன்சோனோ, அதை எதிர்க்கும் ஒரு விஞ்ஞான-விரோத கொள்கையை அறிவுறுத்துகிறார், உயிரிழக்கும் அபாயத்திலிருக்கும் பெரும்பாலானவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தலாம் என்பதை அது உள்ளடக்கி உள்ளது.

அத்தகைய கொள்கை புதிய மற்றும் இன்னும் கொடிய வைரஸ் வகைகள் உருவாவதற்குரிய வளமான இனப்பெருக்க களத்தை வழங்குவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மெலோன்சோன், தடுப்பூசிகளை முன்னுரிமைப்படுத்துவது பற்றிய பிரச்சினையை மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஒட்டுமொத்த இலக்குடன் குழப்புவதற்காக நேர்மையற்ற முறையில் 'எல்லாவற்றிற்கும் மேலாக' என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்.

சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய தேவையையும் கூட மெலோன்சோன் எதிர்க்கிறார். “தடுப்பூசி போட வேண்டியவர்களின் எந்த பட்டியலைப் பாருங்கள் — வெறுப்பாக உள்ளது,” என்றார். “நாங்கள் மருத்துவத்துறை தொழிலாளர்களைப் பார்க்கிறோம். அவர்கள் ஏன் கொதிப்படைவார்கள் என்பது எனக்குத் தெரியும். பல மாதங்களாக அவர்கள் மாவீரர்களைப் போல கொண்டாடப்பட்டார்கள், இப்போதோ… கேவலமானவர்களைப் போல அவர்களை நோக்கி நாம் விரலைக் காட்டுகிறோம்,” என்றார்.

சுகாதாரத்துறை தொழிலாளர்கள் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக விஞ்ஞானத்தின் நவீன அபிவிருத்திகளைப் பயன்படுத்தி, பொதுமக்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளுடன் நேரடியாக வேலை செய்கிறார்கள். அவர்களின் சொந்த பாதுகாப்புக்காகவும் மற்றும் அவர்களது நோயாளிகளின் பாதுகாப்புக்காகவும் அவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பது முற்றிலும் பொருத்தமானதே. அனைத்திற்கும் மேலாக, கருத்துக்கணிப்புகளின்படி, பிரான்ஸ் மக்கள்தொகையில் 70 சதவீதத்தினருக்கும் அதிகமானவர்கள் இதை ஆதரிக்கிறார்கள். இந்த பெருந்தொற்றை நிறுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளில் உதவும் ஓர் அவசியப்பாடு மீது சுகாதாரத்துறை தொழிலாளர்கள் ஏன் 'கோபமடைகிறார்கள்' என்பதை மெலோன்சோன் விளக்கவில்லை.

தடுப்பூசிக்கான மக்கள் ஆதரவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் பிரான்சுவா ரூஃபான் பிரச்சாரம் செய்தார். அவரின் பல்வேறு தலையீடுகளில், அந்த வைரஸ் நடைமுறையளவில் அவருக்கோ அல்லது அவர் வயதுடைய எவருக்குமோ எந்த அபாயத்தையும் முன்நிறுத்தவில்லை என்று வலியுறுத்தி, அதன் அபாயத்தைக் குறைத்துக் காட்டுகிறார். அவர் தனிப்பட்டரீதியில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார் என்கின்ற அதேவேளையில், சமூக இடைவெளி கட்டுப்பாடுகளின் சாத்தியக்கூறைக் குறைப்பதற்காகவே அதை எடுத்துக் கொண்டதாகவும் அது முற்றிலும் தனிப்பட்ட விருப்பத்தேர்வு என்றும் அவர் வலியுறுத்துகிறார். இந்த பெருந்தொற்றின் எந்தவொரு அபாயங்களையும் குறைத்துக் காட்டி, BFMTV இல் ரூஃபான் வாதிடுகையில், “இப்போது தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் கொரோனா வைரஸ் மீதான பயத்தால் குறைவாகவே அதை செய்கிறார்கள், ஏனென்றால் நான் மதுக்கூடத்திற்கும், அமைதியான உணவு விடுதிக்கும், மருத்துவமனையில் உள்ள என் குடும்பத்தைப் பார்க்கவும் செல்ல விரும்புகிறேன் அதற்காக நான் தடுப்பூசி போட்டுக் கொள்கிறேன் என்றவர்கள் கூறுகிறார்கள்,” என்றார்.

அதற்கு பதிலாக “ஆபத்துக்களை விட ஆதாயம் அதிகமாக இருக்கிறதென நமக்குத் தெரியும் போது,” தடுப்பூசி போட்டுக் கொள்வதைத் தனிப்பட்டரீதியில் அவரவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும் என அதே பேட்டியில் ரூஃபான் கூறினார். ஆனால் இதுவொரு மோசடி. யதார்த்தத்தில, தடுப்பூசி போடப்பட்ட மில்லியனில் ஒரு சிலருக்கு மட்டுமே கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அந்த தடுப்பூசிகளின் நன்மைகள், தவிர்க்கவியலாமல், நோய்தொற்று ஏற்பட்ட மில்லியன் பேரில் பத்தாயிரக் கணக்கானோரைக் கொல்லும் ஒரு வைரஸின் ஆபத்துகளை விடவும் மேலானதாக உள்ளது. அந்த வைரஸைத் துரத்துவதற்குத் தடுப்பூசி ஒரு கருவி என்பதற்கு எதிராக ரூஃபான் திறமையாக வாதிடுகிறார்.

தடுப்பூசிக்கு எதிரான எதிர்ப்பை பாதுகாத்த ரூஃபான், கட்டாய தடுப்பூசியானது 'ஓர் அடிப்படை மருத்துவ நெறிமுறை கொள்கையை கீழறுக்கிறது: அதாவது, ஒருவரை மற்றொருவருக்காக பயன்படுத்த நமக்கு உரிமை இல்லை' என்று வாதிட்டார்.

'மாற்றீடு என்ன?' என்று அவர் கூறினார். 'அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு பதிலாக, நாம் பாரியளவில் ஆபத்தில் உள்ளவர்களை இலக்கு வைக்க வேண்டும்.' எவ்வாறேனும் அந்த கொடிய வைரஸ் மக்களிடையே பரவிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாக, “எப்படி பார்த்தாலும், மருத்துவமனைகளில் ஜனம் நிரம்பி வழிவதை நிறுத்துவதற்கு அது தெளிவாக உதவும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

கட்டாய தடுப்பூசி என்பது அவர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று அதிவலதைப் போலவே அதே வாதத்தைப் பயன்படுத்தி மெலோன்சோனும் ரூஃபானும் அவர்களின் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை நியாயப்படுத்துகிறார்கள்.

இது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதல்ல. அவரவர் விரும்புவதைச் செய்ய ஒவ்வொருவருக்கும் 'உரிமை' உண்டு என்ற அடித்தளத்தில், மது அருந்தி வாகனம் ஓட்டுவது உட்பட, பரந்தளவில் பல்வேறு சமூக-விரோத நடவடிக்கையை நியாயப்படுத்தவும் அவர்கள் வாதத்தைப் பயன்படுத்தலாம்.

உண்மையில், தற்போது 11 வைரஸ்கள் உள்ளன, இவற்றுக்காக பிரான்சில் தடுப்பூசிகள் சட்டபூர்வமாக கட்டாயப்படுத்தப்படுகின்றன. சோவியத் ஒன்றியத்திலும் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளிலும் 20 ஆம் நூற்றாண்டு முழுவதும் அனைவருக்குமான தடுப்பூசி நீடிக்கப்பட்டமை, விஞ்ஞான முன்னேற்றங்களின் மற்றும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சுகாதார கவனிப்பின் வளர்ச்சியின் துணை விளைவாக இருந்தது, இவை தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரும் சமூக போராட்டங்களால் வென்றெடுக்கப்பட்டவை ஆகும்.

தடுப்பூசிகளுக்கு எதிரான சனிக்கிழமை வலதுசாரி போராட்டங்களில் LFI பங்கெடுத்த அதேவேளையில், இந்த பெருந்தொற்று இருக்கும் போதே 'வேலைக்குத் திரும்ப செய்யும்' அல்லது பள்ளிகளை மீண்டும் திறக்கும் மக்ரோனின் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு இதுபோன்ற அழைப்புகளை அவர்கள் விடுக்கவில்லை.

ஏனென்றால் தடுப்பூசிகளுக்கு எதிரான அவர்களின் பிரச்சாரம் வைரஸ் பரவுவதை இயல்பாக்கவும், பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கு கோரும் சமூக நோயெதிர்ப்பு பெருக்கும் கொள்கையை நியாயப்படுத்தவும் செய்யப்படும் அவர்களின் முயற்சிகளின் பாகமாக உள்ளது.

மக்ரோன் அரசாங்கம் அதன் சொந்த கொள்கையை நியாயப்படுத்துவதற்கான ஒரு முயற்சியில் வெளிப்படையான இந்த வலதுசாரி தடுப்பூசி-விரோத போராட்டங்களை பயன்படுத்திக் கொள்ள முனைந்துள்ளார். இதையொட்டி, செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டால் சனிக்கிழமை நடந்த பேரணிகளை 'குழப்பத்திலும் செயலற்ற தன்மையிலும் மகிழ்ச்சியாக இருக்க' ஒரு 'முட்டாள்தனமான மற்றும் தோல்விவாத விளிம்பினர்' என்று கண்டனம் செய்தார். இது “வைரஸைத் தங்களுக்குப் பின்னால் வைத்து செயலாற்ற விரும்பும்' “உழைக்கும் தன்னார்வ' மக்களை அவர் எதிர்நிறுத்தினார். உண்மையில், தடுப்பூசி மீதான தயக்கம் மக்ரோனின் கொள்கைகளால் அதிகரித்துள்ளது, அது ஆரம்பத்தில் இருந்தே உயிர்களை அல்ல இலாபங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்ததுடன், தொடர்ச்சியான பொய்கள் மற்றும் 180 பாகை திருப்பங்களால் அது குறிக்கப்பட்டிருந்தது.

சோசலிச சமத்துவக் கட்சி, எல்லா தொழிலாளர்களுக்கும் மற்றும் சிறுவணிகங்களுக்கும் முழுமையான நஷ்டஈடுடன் அத்தியாவசியமற்ற வேலையிடங்களை மூடுவது, பரந்தளவில் சாத்தியமானளவுக்கு மக்களுக்குத் தடுப்பூசி வழங்குவது உட்பட இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட போராடி வருகிறது. ஐரோப்பா முழுவதிலும் தொழிலாளர் அரசாங்கங்களுக்கான போராடுவது, நிதிய உயரடுக்கு கொள்ளையடித்து சேர்த்த செல்வத்தை பறிமுதல் செய்வது, தனியார் இலாபத்திற்குப் பதிலாக சமூகத் தேவை மற்றும் விஞ்ஞானப்பூர்வ திட்டமிடலுக்கு ஏற்ப பொருளாதார வாழ்வை சோசலிச அடிப்படையில் மறுசீரமைத்தல் என்பதே இதன் அர்த்தமாகும்.

Loading