டிரேடன் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை மறு ஒழுங்கமைக்க தீர்மானித்தனர்

கொட்டகலையில் உள்ள டிரேடன் தோட்டத்தின் டி.டீ. பிரிவின் சுமார் 250 தொழிலாளர்கள் ஜூலை 19 அன்று வேலை சுமையை அதிகரிப்பதற்கும் வேலை நாட்களைக் குறைப்பதற்கும் எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தோட்ட நிர்வாகம் தேயிலை கொழுந்து பறிக்கும் அளவை 17 கிலோவில் இருந்து 20 கிலோ வரை அதிகரித்துள்ளதுடன் அந்த இலக்கை நிறைவேற்றத் தவறினால் வேலை நாட்களை ஒரு வாரத்தில் 6 நாட்களில் இருந்து 3 நாட்களுக்கு குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இருப்பினும், ஜூலை 22 அன்று, ஹட்டனில் உள்ள உதவி தொழில் ஆணையாளர் மற்றும் தோட்ட நிர்வாகத்துடன் நடத்திய கலந்துரையாடலில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மற்றும் தொழிலாளர் தேசிய சங்கமும் (NUW) ஒரு உடன்பாட்டுக்குச் சென்றன. நிர்வாகம் முன்மொழிந்தபடி தினசரி இலக்கை அதிகரிக்க தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொண்டன. வாரத்தில் ஆறு நாட்கள் வேலை கொடுக்க மட்டுமே நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. தொழிலாளர்கள் தயக்கத்துடன் வேலைக்குத் திரும்ப முடிவு செய்துள்ளதுடன் தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பு சம்பந்தமாக பெரும் கோபத்தை வெளிப்படுத்தினர்.

ஹட்டன்-நுவரெலியா வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தும் டிரேட்டன் தோட்டத் தொழிலாளர்கள் [Photo credit: K. Kishanthan]

கொட்டகல பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் டிரேடன் தோட்டம் இயங்கி வருகிறது. தோட்டத்தில் கே.ஓ. மற்றும் டிடீ ஆகிய இரண்டு பிரிவுகளில் கிட்டத்தட்ட 450 தொழிலாளர்கள் உள்ளனர்.

முன்னதாக, ஜூன் 1 அன்று நிர்வாகம் புதிய வேலை இலக்கை அறிமுகப்படுத்திய போது அதற்கு எதிராக ஜூன் 3 அன்று தொடங்கி மூன்று நாட்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்தனர். நிர்வாகத்துடன் நடத்திய கலந்துரையாடலில், இ.தொ.கா. மற்றும் NUW, புதிய தினசரி வேலை இலக்குக்கு ஒப்புக் கொண்டு, தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குப் போக கூறினர்.

கே.ஓ. பிரிவு தொழிலாளர்கள் புதிய வேலை சுமைக்கு ஒப்புக் கொண்டாலும், டி டீ பிரிவின் தொழிலாளர்கள் அதை மறுத்து தங்கள் நடவடிக்கையைத் தொடர்ந்தனர். பின்னர் நிர்வாகம் ஜூன் 14 அன்று தொழிலாளர்களுக்கு ஒரு இறுதி எச்சரிக்கையை வெளியிட்டது. தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 20 கிலோ கொழுந்து பறிக்கத் தவறினால் அவர்கள் ஊதியக் குறைப்பை எதிர்கொள்வார்கள் என்றும் வேலை நாட்களை வாரத்திற்கு 3 நாட்களாகக் குறைக்கப்படும் என்றும் அது அச்சுறுத்தியது.

டி.டீ. பிரிவு தொழிலாளர்கள் புதிய நிபந்தனைகளை கடுமையாக எதிர்த்து பல போராட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் தொடங்கினர். தொழிற்சங்கங்கள் ஹட்டன் தொழில் ஆணையாளருடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதன் மூலம் போராட்டங்களைத் தடுக்க முயன்ற போதிலும், தொழிலாளர்கள் அதை மறுத்து தங்கள் போராட்டங்களைத் தொடர்ந்தனர்.

தோட்டங்களில் கடந்த மூன்று மாதங்களில் வேலைச் சுமையை அதிகரிப்பதற்கும், வேலை நாட்களைக் குறைப்பதற்கும், ஊதியங்களைக் வெட்டுவதற்கும் எதிராக, தோட்டத் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான தன்னிச்சையான மற்றும் இடைவிடாத வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்ட அலை தலை தூக்கியது. சமீபத்திய வாரங்களில், நுவரெலியா மாவட்டத்தில் கொட்டியகல, பொகவந்தலாவ மற்றும் கிளனுஜி உட்பட பல தோட்டங்களின் தொழிலாளர்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மைதானம் ஒன்றில் மறியல் போராட்டம் நடத்தும் டிரேட்டன் தோட்டத் தொழிலாளர்கள் [Photo credit: K. Kishanthan]

இருப்பினும், தொழிற்சங்கங்கள் அவர்களை தனிமைப்படுத்தி காட்டிக் கொடுத்தன. தொழிலாளர்கள் மீது அந்த தாக்குதல்களை திணிக்க அவை தோட்ட கம்பனிகளுடன் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன.

மோசமடைந்து வரும் வாழ்க்கை நிலைமைகள் குறித்த தொழிலாளர்களின் அமைதியின்மையைத் திசைதிருப்புவதற்கான ஒரு அரசியல் சூழ்ச்சியாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தினசரி ஊதியத்தை 700 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக (900 ரூபாயை அடிப்படை ஊதியமாகவும் 100 ரூபாய் கொடுப்பனவாகவும்) உயர்த்துமாறு தோட்ட கம்பனிகளுக்கு இராஜபக்ஷ அரசாங்கம் உத்தரவிட்டது. எவ்வாறாயினும், அதிகரிக்கப்பட்ட உற்பத்தி இலக்கை தொழிலாளர்கள் பூர்த்தி செய்யாவிட்டால், அரசாங்கம் கட்டளையிட்ட சம்பளத்தை கொடுக்க தோட்டக் கம்பனிகள் மறுத்துள்ளன.

டிரேட்டன் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள கடிதம்

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) வழிகாட்டுதலின் கீழ் வேலை நிறுத்தத்தின் போது டிரேடன் தோட்டத் தொழிலாளர்கள் ஒரு நடவடிக்கைக் குழுவை ஸ்தாபித்தனர்.

நடவடிக்கைக் குழுவில் உள்ள ஒரு தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறியதாவது: “அனைத்து தொழிற்சங்கங்களும் எங்கள் போராட்டத்தை காட்டிக் கொடுத்துவிட்டன. இந்த தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் இணைந்து முதலில் கே.ஓ. பிரிவில் அதிகரிக்கப்பட்ட வேலைச் சுமையை திணித்து எங்களை பிளவுபடுத்த முயற்சித்தன. எங்கள் போராட்டத்தை காட்டிக் கொடுத்தன. நாங்களும் கூட வேலைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, எங்கள் போராட்டம் முடிந்துவிடவில்லை.”

தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமைக்காக போராட நடவடிக்கை குழுவில் உள்ள தொழிலாளர்கள் உடன்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

உதவித் தொழில் ஆணையாளருடன் பல கலந்துரையாடல்கள் நடந்த போதிலும், தோட்ட நிர்வாகம் அவர்களின் கோரிக்கைகளை கடுமையாக நிராகரித்தது என்று அவர் விளக்கினார். 'கொழும்பில் தொழில் ஆணையாளருடன் ஒரு பேச்சாவார்த்தை நடத்தினால் கூட இந்த பிரச்சினை தீரும் என்று நான் நம்பவில்லை. நாங்கள் தொழிற்சங்கங்களை நம்ப முடியாது. அவர்கள் எங்கள் போராட்டத்தை ஆதரிக்கவில்லை.”

நடவடிக்கைக் குழுக்கள் ஊடாக ஒரு பொதுவான போராட்டத்தை ஒழுங்கமைக்க டிரேட்டன் தொழிலாளர்கள் ஏனைய தோட்டங்களில் உள்ள சக தொழிலாளர்களை அணிதிரட்ட வேண்டும் என சோ.ச.க. உறுப்பினர் விளக்கிய போது அவர் அதை ஒப்புக் கொண்டார்,”.

சோ.ச.க. பற்றி 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்குத் தெரியும் என்று அவர் மேலும் கூறினார். 'சோ.ச.க. சோசலிச கொள்கைகளில் உறுதியாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் சோ.ச.க பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டேன், ஆனால் அந்த நேரத்தில் அவர்களின் பேச்சாளர்கள் சொன்ன அனைத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கானவை அல்ல, அவை கம்பனிகளை ஆதரிக்கின்றன என்பதில் இப்போது எங்களுக்கு அதிக அனுபவம் உள்ளது.”

தொழிலாளர்கள் போராட்டத்தை விரிவுபடுத்த முயன்றால், 38 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட ஓல்டன் தோட்டத்தில் நடந்ததைப் போலவே அவர்கள் நிர்வாகத்தால் தண்டிக்கப்படுவார்கள் என்றும், அத்தகைய சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்றும் ஏனைய தொழிலாளர்கள் கேட்டார்கள்.

வேலைக்குச் செல்லும் டிரேட்டன் தோட்டத் தொழிலாளர்கள் [ Photo: WSWS media]

ஓல்டன் தொழிலாளர்கள் மீதான வேட்டையாடல், இ.தொ.கா.வின் ஒத்துழைப்புடன் கம்பனியும் பொலிசும் கூட்டாக சேர்ந்து செய்த சதி என்று சோ.ச.க. உறுப்பினர் விளக்கினார்.

சோ.ச.க.வின் ஆதரவுடன், ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் ஒரு நடவடிக்கைக் குழுவை அமைத்து, ஏனைய தோட்டத் தொழிலாளர்கள், இலங்கையிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வேட்டையாடப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்கள். வேலை நீக்கம் செய்யப்பட்ட 38 தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்த வேண்டும் என்றும் 24 தொழிலாளர்கள் மற்றும் இரண்டு இளைஞர்கள் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் நடவடிக்கைக் குழுவும் சோ.ச.க.வும் கோருகின்றன. தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க அந்த முறையில் ஒழுங்கமைந்து போராட வேண்டும் என்று அவர் கூறினார்.

பேரழிவுகரமான கொவிட்-19 தொற்றுநோய்களுக்கு மத்தியில் முதலாளித்துவ அரசாங்கங்களின் தாக்குதல்களுக்கு எதிராக இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச அளவிலும் எழுச்சிபெறும் வர்க்கப் போராட்டங்களின் ஒரு பகுதியாக தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள் இடம்பெறுகின்றன என்று அவர் விளக்கினார்.

தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க பாதுகாப்பு உபகரணங்கள் கோரியும் சம்பள உயர்வு கோரியும் சமீபத்தில் இலங்கை சுகாதார ஊழியர்கள் பல வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். பொறியியல் கூட்டுத்தாபனத் தொழிலாளர்கள் ஊதிய தாமதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

கலந்துரையாடலின் பின்னர், டிரேடன் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள், ஏனைய தொழிலாளர்கள் மத்தியில் தங்கள் உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும் ஒரு ஐக்கிய போராட்டத்திற்காகவும் பிரச்சாரம் செய்ய ஏகமனதாக உடன்பட்டனர்.

38 தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்தவும், சோடிக்கப்பட்ட வழக்குகளைத் விலக்கிக்கொள்ளவும் பிரச்சாரம் செய்து வரும் ஓல்டன் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவுக்கு ஆதரவளிக்கவும் டிரேட்டன் நடவடிக்கைக் குழு முடிவு செய்தது.

Loading