பாரிய கோவிட்-19 மரணங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் துனிசிய ஜனாதிபதி ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடங்கினார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிறன்று, துனிசிய ஜனாதிபதி காயிஸ் சயீத் இஸ்லாமிய என்னஹ்டா இயக்கத்தின் அரசாங்கத்தை கலைத்து, பாராளுமன்றத்தை இடைநிறுத்தி வைத்ததோடு, அரசு கட்டிடங்களை பாதுகாக்க இராணுவத்தையும் நிறுத்தியுள்ளார். இது, வேலையின்மை மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று நோயை தவறாக கையாண்டமை ஆகியவைகளுக்கு எதிராக துனிசியா முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்ட எதிர்ப்புக்களை தொடர்ந்து நடந்தேறியது.

கடந்த மாதத்தில், டெல்டா திரிபு வகை நாட்டை பேரழிவிற்கு உட்படுத்தியபோது கோபம் அதிகரித்தது, மருத்துவமனைகளானது நோயாளிகள் மற்றும் இறந்தவர்களால் நிரம்பி வழிந்ததால் மருத்துவ கவனிப்பு சரிவுக்கு வழிவகுத்தது. 11.9 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 19,000 இறப்புகளுடன், துனிசியாவில் மில்லியன் மக்கள்தொகைக்கு COVID-19 இல் 1,587 உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளன, இது ஆபிரிக்காவின் மிக உயர்ந்த விகிதமாகும். மேலும், அதன் பொருளாதாரம் பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டதால், வேலையின்மை கிட்டத்தட்ட 18 சதவீதமாகவும் இது இளைஞர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமாகவும் உள்ளது.

ஞாயிறு, ஜூலை 25, 2021, துனிசியாவின் துனிஸில் ஆர்ப்பாட்டக்காரர்கள். (AP Photo/Hedi Azouz)

ஒரு தசாப்தத்திற்கு முன்னர், டிசம்பர் 2010 இல், தெற்கு துனிசியாவின் வறிய சுரங்கப் பகுதியில் ஒரு இளம் பழ, காய்கறி வியாபாரி மொஹமட் பௌஅஜிசி தன்னைத்தானே தீக்குளிப்பு செய்த பின்னர் எதிர்ப்புக்கள் வெடித்தன. அரசியல் ஸ்தாபகத்திற்கு முற்றிலும் வெளியே தொடங்கிய இந்த எதிர்ப்புக்கள், பாதுகாப்பு படைகளின் இரத்தம் தோய்ந்த ஒடுக்குமுறையை மீறி, இறுதியில் துனிசிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை பாரியளவில் அணிதிரட்டத் தூண்டியது, இது ஜனவரி 2011 ல் ஜனாதிபதி ஜீன் எல் அபிடைன் பென் அலியை தூக்கி வீசியது. அடுத்த மாதம், எகிப்திய தொழிலாளர்கள் ஹோஸ்னி முபாரக்கை வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் ஒரு பொது வேலைநிறுத்தத்தினால் தூக்கி வீசினர்.

என்னஹ்டா அரசாங்கம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆழ்ந்த செல்வாக்கற்ற நிலையில் இருந்தாலும், காயிஸ் சயீத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முன்னர், ஞாயிறன்று நடந்த ஆர்ப்பாட்டங்கள் பற்றிய தகவல்கள், அவை ஜனவரி 2011 இயக்கத்தைப் போல் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை பரந்த அளவில் அணிதிரட்டவில்லை என்பதை தெளிவுபடுத்துகின்றன. அவை மிகவும் சிறியதாக இருந்தது மட்டுமல்லாமல், ஜனாதிபதியுடன் நெருக்கமாக வேலை செய்யும் சக்திகள் அதில் ஈடுபட்டன.

ஞாயிறன்று, நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் துனிஸிலுள்ள பாராளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர் மற்றும் அவர்கள் கலகப் பிரிவு போலீசாரால் தடுக்கப்பட்டனர். உல்லாசப் பிரயாண நகரமான சூஸ்ஸில் நடந்த அணிவகுப்பில் பல ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர், அதன் பின்னர் சிறிய எதிர்ப்பாளர்கள் நகரத்திலுள்ள என்னஹ்டா தலைமையகத்தை தாக்கி எரித்தனர். சிடி பூசிட்டில் (Sidi Bouzid) நடந்த ஆர்ப்பாட்டங்களானது சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் 'அரசாங்கம் வெளியேறுதல் மற்றும் அரசாங்கத்தை கலைத்தல்' போன்ற அழைப்புகளின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மொனாஸ்டிர், ஸ்ஃபேக்ஸ் மற்றும் எல் கெஃப் ஆகிய இடங்களிலுள்ள என்னஹ்டா கட்சி அலுவலகங்களுக்கு எதிராகவும் இதே போன்ற எதிர்ப்புக்கள் நடைபெற்றன, சிடி பூசிட் மற்றும் டோசர் இல் என்னஹ்டா அலுவலகங்கள் எரிக்கப்பட்டன.

எந்தக் கட்சியும் இந்த இயக்கத்தை அங்கீகரிக்கவில்லை என்று சில பத்திரிகை அறிக்கைகள் கூறினாலும், அரபு தேசியவாத மக்கள் நடப்புக் கட்சி (Arab nationalist Popular Current party) சனிக்கிழமையன்று என்னஹ்டாவை வீழ்த்துவதற்கான எதிர்ப்புக்களுக்காக ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த வசந்த காலத்தில் அரசாங்கத்தை அகற்றுமாறு அது ஏற்கனவே சயீத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த வார இறுதியில், அது துனிசியாவின் 'அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் சமூகத்தின் உயரடுக்கு ஒரு மக்கள் அணிதிரட்டலை ஒழுங்கமைக்க' அழைப்பு விடுத்தது, 'அனைத்து தேசிய சக்திகளும் ஒரு தேசிய இடைக்கால அரசாங்கத்தையும் ஒரு குறுகிய கால பொருளாதார மற்றும் சமூக மூலோபாயத்தையும் திவால் மற்றும் பெறுநர் நிலையிலிருந்து காப்பாற்ற பாரியளவில் அணிதிரள வேண்டும்' என்று அழைப்பு விடுத்தது.

அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட முறையில் பாராளுமன்றத்தை இடைநீக்கம் செய்தார் மற்றும் துனிசிய இராணுவத்திற்கு பாராளுமன்றத்தையும் அரசு கட்டிடங்களையும் பாதுகாக்கவும், பெருந்தொற்று நோய்க்கான விடையிறுப்பை மேற்பார்வையிடவும் உத்தரவிட்டு ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதியுடன் சயீத் எதிர்வினையாற்றினார். பாராளுமன்றம் ஆயுதமேந்திய வாகனங்களால் சுற்றி வளையமிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் என்னஹ்டா மீது நியாயமான கோபம் இருந்தாலும், சயீத்தின் நடவடிக்கைகள் குறித்து வலுவான எச்சரிக்கைகள் அவசியமாக இருக்கிறது. அவர் அதிகாரத்தை தொழிலாளர்களுக்கு மாற்றவில்லை, மாறாக என்னஹ்டாவின் பிற்போக்குத்தனமான கொள்கைகளில் தொடர்புடைய ஜனாதிபதி ஆட்சிக்கும் ஆயுதப் படைகளுக்கும் மாற்றியுள்ளார்.

துனிசியாவின் நிகழ்வுகள் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ள எகிப்திய புரட்சியின் அனுபவமானது இன்றைய நிலைமைக்கு முக்கிய படிப்பினைகளைக் கொண்டுள்ளது. 2013 இல், எகிப்திய இராணுவமானது மத்தியதர வர்க்க தமாரோட் ('கலகக்காரர்') கூட்டணியின் ஆதரவுடன், செல்வாக்கற்ற இஸ்லாமியவாத ஜனாதிபதி மொஹமட் மோர்சியை கவிழ்த்த ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியது. தமாரோட் மற்றும் அதன் கூட்டாளிகள் தெருக்களில் ஆட்சிக் கவிழ்ப்பைக் கொண்டாடிய அதேவேளை, அது ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-சிசியின் இரத்தம் தோய்ந்த சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு வழிவகுத்தது, அது இன்றும் பல்லாயிரக்கணக்கான அரசியல் கைதிகளை அதன் பரந்த சிறை அமைப்புமுறையில் தடுத்து வைத்து சித்திரவதை செய்து வருகிறது.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலையீடு இல்லாத நிலையில், சயீத் ஒரு எதிர்-புரட்சிகர சர்வாதிகாரத்தை அமைப்பார் என்பதை அனைத்தும் சுட்டிக்காட்டுகின்றன.

பரந்த அதிகாரங்களை தனக்கு கொடுக்கும் கொடூரமான நடவடிக்கைகளை சயீத் அறிவித்தார். பாராளுமன்றத்தை இடைநிறுத்திய அவர், அதன் அனைத்து பிரதிநிதிகளுக்கும் பாராளுமன்ற காப்புநிலையை (immunity) நீக்கினார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தயாரித்துவரும் அரசாங்க வக்கீல் அலுவலகங்களுக்கு அவர் தலைமை தாங்கப் போவதாக அறிவித்த அதேவேளை, அனைத்து அமைச்சர்களையும் தனிப்பட்ட முறையில் நியமிப்பதாகவும், அமைச்சர்கள் குழுவின் கூட்டங்களில் அவர் தலைமை தாங்கப் போவதாகவும் அறிவித்தார். 'சமூகம் அமைதிக்குத் திரும்புவதை உறுதி செய்வதற்கான ஆணைகளை' பின்னர் தயாரிப்பதாக சயீத் கூறினார்.

அதே நேரத்தில், அரபு லீக் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளில் பென் அலி ஆட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு அரசியலமைப்பு வழக்கறிஞரான சயீத், தனது ஆட்சிக்கு எதிராக மேலும் எந்த எதிர்ப்புக்களையும் அச்சுறுத்தினார். அவர் பொது தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட ஒரு அறிக்கையை வெளியிட்டார்: 'ஆயுதங்களை நாடுவது பற்றி சிந்திக்கும் எவரையும் நான் எச்சரிக்கிறேன்... யார் ஒரு துப்பாக்கி தோட்டாவை பயன்படுத்தினாலும், அவர்களுக்கு துப்பாக்கி தோட்டாக்களால் பதிலளிக்கப்படும்.

2011 எழுச்சியின் போது துனிசிய பாதுகாப்புப் படைகளின் இரத்தக்களரி எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால், கோவிட்-19 பெருந்தொற்று நோய் தொடர்பாக தொழிலாள வர்க்க எதிர்ப்புக்களுக்கு எதிராக பலாத்காரத்தை பயன்படுத்துவதற்கான ஒரு தெளிவான அச்சுறுத்தலாகும்.

2014 அரசியலமைப்பின் 80வது ஷரத்தின் கீழ் அவசரகால நிலைமையை திணிப்பதாக சயீத்தின் கூற்று தவறானது. உண்மையில், இந்த ஷரத்து கூறுகிறது: 'நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, பாதுகாப்பு அல்லது சுதந்திரத்தை அச்சுறுத்தும் உடனடி ஆபத்து ஏற்பட்டால், அது பொது அதிகாரத்தின் சரியான செயல்பாட்டைத் தடுக்கிறது, குடியரசின் ஜனாதிபதி அரசாங்கத் தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சபையின் தலைவருடன் கலந்தாலோசித்த பின்னர் விதிவிலக்கு நிலையை திணிக்கும் நடவடிக்கைகளை எடுக்கலாம், அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தலைவருக்கு தகவல் தெரிவித்த பின்னர்.'

சட்டபூர்வமாக, என்னஹ்டா உறுப்பினர்களாக இருக்கும் பிரதம மந்திரி ஹிசெம் மெச்சி மற்றும் சட்டமன்ற தலைவர் ரச்ட் கன்னௌச்சி ஆகியோருடன் 80வது ஷரத்தை செயற்படுத்துவதற்கு சயீத் கலந்தாலோசிக்க வேண்டியிருக்கும். எவ்வாறெனினும், நேற்று கன்னௌச்சி ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டார், சயீத் அவருடன் கலந்தாலோசித்தது என்பதை மறுத்து, சயீத்தின் நடவடிக்கையை 'அரசியலமைப்புக்கு முரணானது' மற்றும் 'சட்டவிரோதமானது' என்று அழைத்தார். '[2011] புரட்சிக்கும் அரசியலமைப்பிற்கும் எதிரான ஆட்சிக் கவிழ்ப்பு' என்று கன்னௌச்சி இதை அழைத்தார்.

இது ஏகாதிபத்திய சக்திகளின் பிற்போக்குத்தனமான பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்துகிறது, இவை அனைத்தும் சயீத்தின் ஆட்சிக் கவிழ்ப்பை மூடி மறைக்கும் அறிக்கைகளை வெளியிட்டன மற்றும் அரசியலமைப்பை மதிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தன. ஜேர்மனியின் Der Spiegel பத்திரிகை குறிப்பிட்டதாவது: 'இதுவரை பேர்லின், பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஆகியவை அரசியலமைப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பொதுவான அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுள்ளன. சர்வாதிகாரி பென் அலி தூக்கியெறியப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரு புதிய வலுவான மனிதர்தான் தீர்வு என்பது இரகசியமான பைத்தியக்காரத்தனமான கருத்து இல்லை என்று நம்பவேண்டும்.'

இதேபோல், பழைய பென் அலி ஆட்சியின் நீண்டகால கருவியான துனிசிய தொழிலாளர் பொது தொழிற்சங்க (UGTT) அதிகாரத்துவமானது 'இந்த கடினமான காலங்களில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளின் அரசியலமைப்பு சட்டபூர்வத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்க' அவருக்கு அழைப்பு விடுத்து, சயீத்திற்கு பின்கைவழி ஆதரவை வழங்கியது.

ஆனால், சயீத் அரசியலமைப்பைப் பாதுகாக்கவில்லை, மாறாக அதைக் காலடியில் போட்டு மிதிக்கிறார். சர்வாதிகார ஆபத்து ஆபிரிக்காவிலுள்ள நவ-காலனித்துவ நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல. வாஷிங்டனிலுள்ள கேபிடலில் ஜனவரி 6 ம் திகதி ட்ரம்ப் ஆட்சி கவிழ்ப்பு சதி முயற்சியைத் தொடர்ந்து, 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கைகளுக்கு மக்கள் எதிர்ப்பைக் கண்டு சீற்றம் அடைந்த பிரெஞ்சு மற்றும் ஸ்பெயின் அதிகாரிகளால் செய்யப்பட்ட அதிவலது ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளின் அச்சுறுத்தல்கள் இதற்கு ஒரு அப்பட்டமான அறிகுறியாகும்.

கோவிட்-19 பெருந்தொற்று நோயை எதிர்த்துப் போராடவும் இராணுவ சர்வாதிகாரத்தின் ஆபத்துக்கும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் போராடுவதற்கும் சோசலிசத்திற்காக தொழிலாள வர்க்கத்தை சர்வதேச ரீதியாக புரட்சிகர அணிதிரட்டல் செய்யப்பட வேண்டும். இந்த பெருந்தொற்று நோயும், சர்வதேச அளவில் ஆளும் வர்க்கத்தால் தொடரப்படும் வைரஸை பரவ அனுமதிக்கும் கொள்கையும் ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் மனித உயிர்கள் மீதான கொலைகார அலட்சியத்தை அம்பலப்படுத்தியுள்ளன. மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் வைரஸின் ஒழிப்பிற்கு தேவையான சமூக இடைவெளி நடவடிக்கைகளை பயன்படுத்துவதற்கு சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்ற வேண்டும்.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் தொழிலாளர்கள் பென் அலியை முதலில் கவிழ்த்தபோது இருந்ததைப் போலவே, இன்று முன்வைக்கப்படும் தீர்க்கமான கேள்வி, இந்தப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை வழிநடத்தக்கூடிய ஒரு சர்வதேச புரட்சிகர முன்னணிப் படையை கட்டியெழுப்புவதாகும்.

Loading