கோவிட்-19 டெல்டா மாறுபாட்டை கட்டுப்படுத்த சீனா போராடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நாஞ்ஜிங்கில் உள்ள லுகோ விமான நிலையத்தில் டெல்டா மாறுபாடு தொழிலாளர்களை பாதித்த பின்னர், சீனா முழுவதும் பரவி வரும் கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் திணறுகின்றனர். இது ஜூலை இறுதிக்குள் சீனா முழுவதும் 381 தொற்றுக்களையும், ஆகஸ்ட் 1 அன்று 75 புதிய தொற்றுக்களையும், ஆகஸ்ட் 2 அன்று 98 தொற்றுக்களையும் கண்டது.

டிசம்பர் 2019 இல் வூஹான் நகரில் தோன்றிய பின்னர், சீனா, கோவிட்-19 இன் ஆரம்ப மையமாக இருந்தபோதிலும், கடுமையான பூட்டுதல்கள், தொடர்பு தடமறிதல் மற்றும் பாரிய தடுப்பூசி வழங்கல் ஆகிய விஞ்ஞானரீதியான கொள்கை ஜூன் 2020 க்குள் கொரோனா வைரஸின் உள்நாட்டு பரவலை நிறுத்தியது. அப்போதிருந்து வெளிநாடுகளில் நோய்த்தொற்று ஏற்பட்ட பின்னர் சீனாவுக்கு வரும் தனிநபர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட வெடிப்புகள் உள்ளன. டெல்டா வகையின் அசாதாரண வைரஸால் இப்போது மிகவும் தீவிரமான இத்தகைய வெடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

ஸ்ராலினிச சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஆட்சியின் பிரதிபலிப்பிற்கும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய சக்திகளின் பிரதிபலிப்பிற்கும் இடையிலான வேறுபாடு வியக்கவைக்கிறது. இந்த வெடிப்பில் சீனாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொற்றுக்களின் எண்ணிக்கை 1,000 க்கும் குறைவாக உள்ளது. இது பிரான்சில் காணப்படும் 27,000 தினசரி தொற்றுக்களை விடவும் அல்லது அமெரிக்காவில் 48,000 இனை விடவும் டஜன் கணக்கான மடங்கு குறைவாக உள்ளது. நேட்டோ நாடுகளில் உள்ள தலைவர்கள், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் வார்த்தைகளில் தொழிலாளர்கள் 'வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்' என்று வலியுறுத்தும் அதேவேளையில், சீன சுகாதார அதிகாரிகள் தொற்றுநோயைத் தடுக்க ஒரு பொது சுகாதார முன்னெடுப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று, சீனாவின் பொது விமானப்போக்குவரத்து நிர்வாகம் (CAA) ஜூலை 20 அன்று, சினோவாக் அல்லது சினோஃபார்ம் தடுப்பூசிகள் மூலம் தடுப்பூசி போடப்பட்ட லுகோ விமான நிலையத்தில் துப்புரவு பணியாளர்கள் PCR சோதனைகளில் நேர்மறையை காட்டும் ஒரு அறிக்கையைப் பெற்றதாக உறுதிப்படுத்தியது. ஊழியர்கள் மற்றும் பயணிகளின் சோதனையில் மாஸ்கோவிலிருந்து ஏர் சீனா விமானமான CA910 இல் இந்த வைரஸ் வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விமானத்தில் கோவிட்-19 தொற்றுக்கள் இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் சீன அதிகாரிகள் மீண்டும் CA910 ஐ நிறுத்தி வைத்துள்ளனர்.

நேற்று பிற்பகல், நான்ஜிங் அமைந்துள்ள சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உயர் அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். நான்ஜிங்கில் 44 சதவிகித தொற்றுக்கள் விமான நிலைய துப்புரவு பணியாளர்களிடமும், 52 சதவிகிதம் அவர்களது தொடர்புகளிலும் (முதன்மையாக குடும்பங்கள்), மீதமுள்ளவர்கள் சீனாவிற்கு வருவதற்கு முன்பே வெளிநாடுகளில் தொற்றுக்குள்ளானவர்கள் என்று தொடர்பு தடமறிதல் மற்றும் சோதனை மூலம் தெரியவந்துள்ளது என அறிவித்தனர். 220 தொற்றுக்களில் 82 பேருக்கு நோய் அறிகுறிகளும், 6 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீன அரசு ஊடகங்களில் பல அறிக்கைகள், லுகோ விமான நிலையம் மற்றும் அதன் பெருநிறுவன தாய் நிறுவனமான கிழக்கு விமான நிலையக் குழுவில் பணிபுரியும் துணை ஒப்பந்த நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கான செலவு குறைப்பு மற்றும் மோசமான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை இத்தொற்று வெடிப்பை ஏற்படுத்தியுள்ளன என குறிப்பிடுகின்றன. அரசு நடத்தும் People’s Daily பல துணை ஒப்பந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டபோது. அவர்கள் தங்களுக்கு தொற்றுக்கள் இல்லை என்று மறுத்தனர் அல்லது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்தனர்.

நான்ஜிங் சொத்து நிர்வாகத்தின் மேலாளரான சென் மௌவ், 'நான்ஜிங்-லுகோவில் விமான நிலையம் மற்றும் விமான அறைகளை சுத்தம் செய்வது பல துணை ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது ... இந்த முறை இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்பட்டதற்கான காரணம் இந்த விமான நிலையம் சரியான தினசரி மேற்பார்வை செய்யவில்லை. பணத்தை மிச்சப்படுத்துவதற்காக துணை ஒப்பந்த நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்களை சரியாக பிரிக்கவில்லை' என்று பத்திரிகைக்கு தெரிவித்தார்.

துப்புரவு ஊழியர்களின் அதிகப்படியான வேலை இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று People’s Daily எழுதியது: 'பணத்தை சேமிப்பதற்காக, துணை ஒப்பந்தக்கார்கள் முதலில் இரண்டு நபர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை ஒருவருக்கு வழங்கினர்.'

ஜூலை 23 அன்று, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஜியாங்சு மாகாணக் குழு செயலாளர் ஃபெங் ஜுன் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், கிழக்கு விமான நிலைய குழுமத்தின் பெருநிறுவன வாரியத்தின் உறுப்பினராக இருந்ததாகவும் People’s Daily செய்தி வெளியிட்டது. 'கிழக்கு விமான நிலையக் குழுவின் செயல்பாடுகளை தொழில்திறமையுடன் கையாளவில்லை மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதை அனுமதித்தது' என்று ஃபெங் விமர்சித்தார்.

சீனாவில் டெல்டா வகையை ஒழிக்க ஒரு பரந்த பொது சுகாதார பிரச்சாரம் நடந்து வருகிறது.

மேலும் கோடிக்கணக்கான மக்கள் கோவிட்-19 க்கு சோதிக்கப்பட்டு, நோயாளிகளை அடையாளம் காணவும், தனிமைப்படுத்தவும், பராமரிக்கவும, மேலும் தொற்றுநோயைத் தடுக்கவும் முழு நகர மாவட்டங்களும் பூட்டப்பட்டுள்ளன. நான்ஜிங் (8 மில்லியன்) மற்றும் வூஹான் (11 மில்லியன்) ஆகிய முழு மக்களும் சோதிக்கப்பட உள்ளனர். யாங்ஷோவ், சியாமென், சோங்கிங், ஓரளவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஷெங்ஷோவ் மற்றும் தலைநகர் பெய்ஜிங்கிலும் பாரிய பரிசோதனை நடந்து வருகிறது.

வெகுஜன சோதனை மற்றும் தொடர்பு தடமறிதல் சீனா முழுவதும் வைரஸ் பரவுவதை விரைவாகக் கண்காணித்தது. ஜூலை இறுதி நிலவரப்படி, 381 தொற்றுக்களில் நான்ஜிங் அமைந்துள்ள ஜியாங்சு மாகாணத்தில் 243 அடங்கும். யுன்னான் மாகாணத்தில் 91, ஹெனான் மற்றும் ஹுனான் மாகாணங்களில் 12, சிச்சுவான் மாகாணத்தில் 8, மற்றும் வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் 5, பெய்ஜிங், சோங்கிங் மற்றும் புஜியனில் 2 இருந்தன. குவாங்டாங், ஷாண்டாங், நிங்சியா மற்றும் ஹூபே மாகாணங்களில் தலா ஒன்று இருந்தது. அப்போதிருந்து, ஷாங்காய் மற்றும் ஷான்சி மற்றும் புஜியான் மாகாணங்களில் மேலும் தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஹுனான் மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஜாங்ஜியாஜி நகரம் நேற்று வரை 13 தொற்றுக்குகள் கண்டறியப்பட்டு பூட்டப்பட்ட நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் WeChat சமூக ஊடகக் கணக்கு, பாதிக்கப்பட்டவர்களைப் பெயரிட்டு, அவர்கள் ஊரில் எங்கு சென்றார்கள் என்பதை அடையாளம் கண்டு, மக்களுடன் அல்லது அவர்களுடன் தொடர்பு கொண்ட சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கிறது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பிற பொதுத்துறை ஊழியர்கள் வீட்டில் தங்க வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன் மற்றும் தொற்றுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பாரிய அணிதிரட்டல் உத்தரவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.

டெல்டா மாறுபாட்டின் சமூக பரவல் மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பூட்டப்பட்டிருக்கும் அருகிலுள்ள ஜுஜோவின் நிலைமை 'கொடூரமான மற்றும் சிக்கலானது' என்று ஹுனான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனத் தொழிலாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் முயற்சிகள், உலகின் பிறபகுதிகளில் கோவிட்-19 கொள்கைகளின் குற்றத்தை அம்பலப்படுத்துகின்றன. பாசிச ஜனாதிபதி ஜெயர் போல்சனாரோவின் பிரேசிலிய ஆட்சியில், இந்தியாவின் இந்து-மேலாதிக்க ஆட்சியில் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் சோவியத்திற்கு பிந்தைய முதலாளித்துவ கொள்ளைக்கார ஆட்சி ஆகியவற்றிலும் 'மக்கள் வைரஸுடன் வாழவேண்டும்' என்ற அழைப்புகள் பிரதானமாக இருந்தன.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஏகாதிபத்திய சக்திகள் விஞ்ஞானரீதியான கொள்கைகளை நிராகரித்து, தங்கள் சொந்த பிரிட்டிஷ் பிரதமர் போறிஸ் ஜோன்சனின் பிரபலமற்ற அழைப்பான, 'இனி பூட்டுதல்கள் இல்லை, உடல்கள் ஆயிரக்கணக்கில் குவியட்டும்!' என்பதை உருவாக்கியுள்ளன.

இதன் விளைவு என்னவென்றால், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, வைரஸின் ஆரம்ப மையமான சீனாவில் 5,000 க்கும் குறைவான மக்களே இறந்தனர். அதே நேரத்தில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உலகின் பணக்கார ஏகாதிபத்திய சக்திகளை சேர்த்து நேட்டோ கூட்டணியில், 1.7 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர்.

நேட்டோ நாடுகளின் ஊடக பிரச்சாரத்தில் கூறப்பட்டுள்ளபடி, வைரஸை ஒழிப்பது சாத்தியமற்றது என்பதால் இது இல்லை. மாறாக பிரிட்டிஷ் மருத்துவ இதழ் (BMJ) சரியாக 'சமூக கொலை' என்று முத்திரை குத்திய இந்த அரசாங்கங்களை நடத்தும் சீரழிந்த அரசியல் குற்றவாளிகளின் கொள்கைகளால் தான். வங்கி மற்றும் பெருநிறுவன பிணையெடுப்பில் நிதிய பிரபுக்களுக்கு டிரில்லியன் டாலர்கள், யூரோக்கள் மற்றும் பவுண்டுகள் கொடுக்கும்போது, சீனாவில் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய விஞ்ஞானரீதியான சமூக விலகல் கொள்கைகளை அவர்கள் நிராகரித்தனர்.

1989 இல் முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதிலிருந்தும், சீன தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதிலிருந்தும் பிரிக்கமுடியாத சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஐயுறவற்ற ஊழல்தான் நான்ஜிங்கில் இருந்து பரவும் தொற்றுக்கு முக்கிய காரணம் என்று கூறுவது ஒரு மன்னிப்பாக இருக்க முடியாது. ஷிஜியாஜுவாங்கை மையமாகக் கொண்ட இன்றைய ஜனவரி 2021 அல்லது குவாங்சோவில் மே-ஜூன் 2021 போன்ற வெடிப்புகள் சீனாவிற்கு வெளியேயான கோவிட்-19 பரவலால் ஏற்படுகிறது. ஏனெனில் பாதிக்கப்பட்ட பயணிகள் அல்லது தொற்றுக்குள்ளான உறைந்த பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளன.

தொற்றுநோய் ஒரு உலக பேரழிவு ஆகும். இது சீனாவில் இப்போது மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞானரீதியான நடவடிக்கைகளின் ஒருங்கிணைந்த, உலகளாவிய நடைமுறைப்படுத்தலால் மட்டுமே நிறுத்தப்படும். இத்தகைய கொள்கைகளை திணிப்பதற்கு, முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். இது ஸ்ராலினிச சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியவாதக் கொள்கையின் முழுமையான திவால்நிலையைக் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சர்வதேசரீதியாக தொழிலாளர்களிடம் அழைப்புவிட அதனால் இயலாது மற்றும் விருப்பமும் இல்லை. இதனால் சீனாவின் எல்லைகளுக்கு வெளியே பெருகிவரும் தொற்றுநோய் பேரழிவை தடுக்க வழி இல்லை.

சர்வதேச அளவில் தொழிலாளர்களின் நிலைப்பாட்டில் இருந்து பார்க்கும்போது, சீனாவில் நிகழ்வுகள் ஒரு வேறுபட்ட முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. விஞ்ஞானத்திற்கும் தடுப்பூசிக்கும் எதிராக ஐரோப்பாவில் போராட்டங்கள் நவ-பாசிஸ்டுகளால் வழிநடத்தப்பட்டாலும், கோவிட்-19 க்கு எதிரான 'பாரிய அணிதிரட்டலுக்கு' சீனாவில் மக்கள் ஆதரவு 1949 சீனப் புரட்சியை போன்று 20 ஆம் நூற்றாண்டின் பெரும் போராட்டங்களின் தொலைதூர எதிரொலியாகும். இது கோவிட்- 19 போன்ற கொடூரமான பிரச்சினைகளைக் கூட தீர்க்க விஞ்ஞான மற்றும் புரட்சிகர போராட்டத்திற்கான பரந்த சாத்தியம் இருப்பதற்கு ஒரு சாட்சியமாக இருக்கின்றது.

Loading