உலகம் 200 மில்லியன் கொரோனா வைரஸ் தொற்றுநோயாளர்களை கொண்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த வாரம் உலகத்தில் 200 மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்கள் இருப்பதாகக் குறிப்பிடுப்படுகிறது. அதாவது கடந்த 20 மாதங்களாக மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கும் ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் ஒரு தொடர் கடுமையான மைல்கற்களில் இது சமீபத்தியதாகும். இந்த மிக மோசமான புள்ளிவிபரங்களுடன், வைரஸ் 4.26 மில்லியனுக்கும் அதிகமான மனித உயிர்களை அவர்களின் காலத்திற்கு முன்னதாகவே அவர்களது சக பணியாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களிலிருந்து பறித்துக் கொண்டுவிட்டது.

இந்த வாரம் தொடர்ச்சியாக ஆறாவது வாரமாக நாளாந்த புதிய நோய்தொற்றுக்கள் அதிகரித்துள்ளது. மேலும் தொடர்ச்சியாக நான்காவது வாரமாக நாளாந்த இறப்புக்கள் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 3 நிலவரப்படி, ஒவ்வொரு நாளும் சராசரியாக 605,000 க்கும் அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட புதிய நோய்தொற்றுக்கள் உருவானதுடன், 9,300 க்கும் அதிகமான இறப்புக்கள் ஏற்பட்டன. லூசியானாவின் பாட்டன் ரூஜில் (Baton Rouge) உள்ள Our Lady of the Lake Regional Medical Center இன் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கேத்தரின் ஓ நீல் “இந்த நாட்கள் தொற்றுநோயின் இருண்ட நாட்கள்” என்று கூறி அச்சுறுத்தும் எச்சரிக்கை விடுத்தார்.

கடந்த மாதம் யுனைடெட் மெமோரியல் மருத்துவ மையத்தில் கொரோனா வைரஸ் பிரிவுக்குள் ஒரு நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முயலும் ஒரு குழுவை டாக்டர் ஜோசப் வரோன் வழிநடத்துகிறார். (AP Photo/David J. Philip)

மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில், 36.1 மில்லியன் நோய்தொற்றுக்கள் மற்றும் 631,000 இறப்புக்களைக் கொண்ட அமெரிக்கா, 31.8 மில்லியன் நோய்தொற்றுக்கள் மற்றும் 426,000 இறப்புக்களைக் கொண்ட இந்தியா, மற்றும் 19.9 மில்லியன் நோய்தொற்றுக்கள் மற்றும் 559,000 இறப்புக்களைக் கொண்ட பிரேசில் ஆகியவை அடங்கும், இதன்படி இந்த நாடுகளின் மொத்த நோய்தொற்றுக்கள் உலகளவிலான நோய்தொற்றுக்களில் 44 சதவீதத்திற்கு அதிகமாக இருப்பதுடன், இந்த நாடுகளின் மொத்த இறப்புக்கள் உலகளவிலான உத்தியோகபூர்வ இறப்புக்களில் அண்ணளவாக 38 சதவீதமாக உள்ளது.

மொத்தத்தில் பார்த்தால், இரண்டு மில்லியனுக்கு அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றுக்களுடன் 19 நாடுகளும், நான்கு மில்லியனுக்கு அதிகமான நோய்தொற்றுக்களுடன் 12 நாடுகளும் உள்ளன. மேற்கூறிய மூன்று நாடுகளுடன், மெக்சிக்கோ, பெரு, ரஷ்யா, இங்கிலாந்து, இத்தாலி, கொலம்பியா, பிரான்ஸ், ஆர்ஜென்டினா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 12 நாடுகள் குறைந்தது 100,000 இறப்புக்களை பதிவு செய்துள்ளன.

கண்டங்கள் முழுவதுமாக தொற்றுநோயின் அளவு சமமாக வெளிப்படுகிறது. ஆசியாவும் பசிபிக்கும் 63 மில்லியனுக்கு அதிகமான நோய்தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து ஐரோப்பா 52 மில்லியன், வட அமெரிக்கா 43 மில்லியன், தென் அமெரிக்கா 35 மில்லியன், மற்றும் ஆபிரிக்கா அண்ணளவாக 7 மில்லியன் நோய்தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளன. சதவீத அடிப்படையில் பார்த்தால், தென் அமெரிக்காவில் 100 பேருக்கு 8.2 பேர், வட அமெரிக்காவில் 100 பேருக்கு 7.2 பேர், ஐரோப்பாவில் 100 பேருக்கு 6.9 பேர், ஆசியாவில் 100 பேருக்கு 1.3 பேர், மற்றும் ஆபிரிக்காவில் 100 பேருக்கு 0.5 பேர் என்ற விகிதங்களில் நோய்தொற்று பாதிப்பு உள்ளது.

உண்மையில், பதிவுசெய்யப்படாத நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களை கணக்கில் எடுத்தால் தற்போதைய புள்ளிவிபரங்கள் இன்னும் படுமோசமாக இருக்கும். சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டிற்கான நிறுவனம் (Institute for Health Metrics and Evaluation-IHME) மதிப்பீடு செய்துள்ளபடி, சர்வதேச அளவிலான அதிகப்படியான இறப்பு எண்ணிக்கையின் அடிப்படையில், அண்ணளவாக 9.2 மில்லியன் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொற்றுநோயால் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். எக்கனாமிஸ்ட் நாளிதழின் இதேபோன்ற கணக்கீட்டின்படி, 8 இற்கும் 16 இடையிலான மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் நோய்தொற்றால் ஏற்படும் சராசரி இறப்பு வீதம் சுமார் 0.5 சதவீதமாக இருப்பதை குறிப்பிட்டு, இந்த கணக்கீடுகள் உண்மையான நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை சுமார் 2 பில்லியனாக இருப்பதை, அதாவது உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை விட பத்து மடங்கு அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது.

இத்தகைய பாரிய மரணமும் பெரும் சமூக துயரமும் நிகழ்ந்திருப்பது உலகின் முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் அவை பாதுகாக்கும் சமூக பொருளாதார அமைப்பு மீதான ஒரு மோசமான குற்றச்சாட்டாகும். உலகின் ஆளும் உயரடுக்குகள் இந்த நோய்தொற்று அலைகளைத் தடுக்க ஏராளமான வாய்ப்புகளை கொண்டிருந்தன. அதாவது ஜனவரி மற்றும் பிப்ரவரி 2020 மாதங்களில் உலகம் முழுவதுமாக பரவுவதற்கு முன்னதாக நோய்தொற்றை நிறுத்துவதற்கான, குறைந்த நோய்தொற்று வீதங்களில் தொடங்கிய கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உலகளாவிய பூட்டுதல்களை அனுமதிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தன. என்றாலும் மிகுந்த பயனுள்ள தடுப்பூசி வழங்கல் திட்டம் பரவலாக ஜனவரி 2021 இல் தான் தொடங்கப்பட்டது.

முன்னொரு போதுமில்லாதவாறு, சமூக நோயெதிர்ப்பு சக்தியை பெருக்குதல் என்ற கொலைகாரக் கொள்கையை முன்னெப்போதும் விட வெளிப்படையாகப் பின்பற்றினர். அமெரிக்காவில், அப்போதைய குடியரசுக் கட்சி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், CARES சட்டத்தின் மூலம் வோல் ஸ்ட்ரீட்டுக்கும் பெரும் நிறுவனங்களுக்கும் டிரில்லியன் கணக்கான டாலர்களை மாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும் வரை, நோய்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் எதிர்த்தார். ட்ரம்ப் பின்னர், நிதிய தன்னலக்குழுவுக்கு பெரியளவில் செல்வ வளங்களை மாற்ற வகை செய்ய, அமல்படுத்தப்பட்டிருந்த பூட்டுதல்களை முடிவுக்குக் கொண்டுவரவும், தொழிலாளர்களை பாதுகாப்பற்ற நிலைமைகளில் இருந்த அவர்களது அலுவலகங்கள், ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வேலைக்குத் திரும்ப வைக்கவும் கடுமையாக போராடினார்.

ட்ரம்பின் கொள்கைகள் அவரது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவில் 427,000 க்கு சற்று குறைந்த உத்தியோகபூர்வ மரணங்களை விளைவித்தன. சர்வதேச அளவில் ஏனைய உலகத் தலைவர்களும் இதைப் பின்பற்றிய நிலையில், ஒட்டுமொத்தமாக அண்ணளவாக 2.2 மல்லியன் இறப்புக்கள் ஏற்பட்டன.

இந்த நடைமுறைகள் பைடெனின் கீழ் மட்டும் முடுக்கிவிடப்பட்டன. இதனால் அமெரிக்காவில் மேலும் 204,000 பேரும், மற்றும் உலகளவில் 2 மில்லியனுக்கு அதிகமானோரும் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இலையுதிர் காலம் தொடங்கியவுடன், அங்கு நேரடி கற்றலுக்கான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்ட நிலையில், தொற்றுநோய் மேலும் வேகமெடுத்து பரவுவதற்கு களம் அமைக்கப்பட்டது.

தற்போதைய நெருக்கடி புதிய மற்றும் மிகுந்த தொற்றும் தன்மை கொண்ட வைரஸ் மாறுபாடுகளின் வெளிப்பாடுகளால் தொடர்ந்து படுமோசமடைந்தது. கடந்த இலையுதிர் காலத்தில் இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஆல்பா மாறுபாடு உலகம் முழுவதும் பரவியமை, ஜனவரியில் உச்சபட்ச நோய்தொற்றுக்களையும் இறப்புக்களையும் விளைவித்தது. ஆல்பா மாறுபாடு சாதாரண மாறுபாட்டை விட இரண்டு மடங்கு தொற்றும் தன்மையை கொண்டிருந்ததையும், அதிக மருத்துவமனை அனுமதிகளை விளைவித்ததையும் இங்கிலாந்தின் தரவு தெளிவாகக் காட்டியது.

அதே நேரத்தில், பிரேசிலில் முதலில் மாதிரி எடுக்கப்பட்ட காமா வகை மாறுபாடு தென் அமெரிக்காவில் ஆதிக்க வகை மாறுபாடாக உருவெடுத்தது. இது மிகுந்த தொற்றும் தன்மையினது என்பதுடன், குறிப்பாக இளவயதினர் மத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மிகக் கொடிய வகையினதாகும். இது, சாதாரண மாறுபாட்டால் முன்னர் பாதிக்கப்பட்டவர்களையும் மீண்டும் பாதிக்கக்கூடிய திறன் கொண்டுள்ளமை, இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டு தடுக்க முடியாத நோய்தொற்று பரவல் மற்றும் மரணங்களின் முடிவில்லாத சுழற்சி நிகழக்கூடிய அச்சத்தை அதிகரிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இப்போது, உலகம் டெல்டா வகை மாறுபாட்டின் கொடிய நிழலின் கீழ் வாழ்கிறது. இது முதன்முதலில் இந்தியாவில் தோன்றி மற்றும் ஏப்ரலில் அந்த நாட்டில் உச்சபட்ச நோய்தொற்றுக்கள் உருவாவதற்கு காரணமாக இருந்தது, அப்போது அந்நாட்டில் நாளாந்த நோய்தொற்றுக்கள் 400,000 ஆக உயர்ந்ததுடன், அந்த நேரத்தில் உலகளவிலான நோய்தொற்றுக்களில் இது பாதியளவாக இருந்தது. தொற்றுநோயியல் ரீதியான நிலைப்பாட்டில், டெல்டா மாறுபாடு அசல் மாறுபாட்டை விட 2.5 மடங்கு அதிக பரவும் தன்மை கொண்டது என்பதால் பாரிய பரவல் ஏற்படுகிறது, கடந்த 18 மாதங்களில் மனிதர்களிடையே நோய்தொற்றை ஏற்படுத்த வைரஸ் பிறழ்வு கண்டதன் மற்றும் வீரியமடைந்ததன் விளைவாக நூற்றுக்கணக்கான மில்லியன் நோய்தொற்றுக்கள் உருவாகியுள்ளன.

டெல்டா மாறுபாட்டுக்கு தடுப்பூசிகளை ஓரளவு எதிர்க்கும் திறன் உள்ளது. இந்நிலையில் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர முகக்கவச பயன்பாடும், பொது சுகாதார நடவடிக்கைகளும் இனி தேவையில்லை என்ற காரணத்திற்காக பைடென் நிர்வாகம் அனைத்து நோய்க்குமான ஒரு மருந்தை ஊக்குவிக்கிறது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் (CDC) இருந்து சமீபத்தில் கசிந்த ஒரு உள் அறிக்கை, அமெரிக்காவில் தடுப்பூசி போடப்பட்ட மக்களிடையே ஒவ்வொரு வாரமும் தோராயமாக 35,000 கோவிட்-19 அறிகுறிகள் உள்ள நோய்தொற்றுக்கள் உருவாவதாக எச்சரிக்கிறது.

சிறிது நேரத்திற்கு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை தவிர்க்கும் வகையில் வாய் மற்றும் மூச்சு குழாய் வழிகளில் உயிர் வாழ்வதாக கண்டறியப்பட்டதான இந்த வைரஸை தடுப்பூசி போடப்பட்டவர்களும் கூட பரப்ப முடியும். இதன் அர்த்தம் என்னவென்றால் தடுப்பூசி போடப்படுவதால் மட்டும் ஒருவர் தானாகவே பறிமாற்ற சங்கிலியில் இருந்து தப்பிவிட மாட்டார் என்பதாகும். பொதுவான ஜலதோஷத்தை விட எளிதில் பரவக்கூடிய வகையில் டெல்டா மாறுபாடு எந்தளவிற்கு தொற்றும் தன்மையுள்ளது எனப் பார்த்தால் இது குறிப்பாக கவலையளிக்கிறது.

டெல்டா மாறுபாட்டின் வெளிப்படையான கொடிய நச்சுத்தன்மையும் தடுப்பூசிகளின் செயல்திறனை குறைக்கிறது. அமெரிக்காவில் தற்போது 50 சதவீத முழு தடுப்பூசி விகிதம் இருந்தாலும் கூட இது மிகவும் தொற்றக்கூடியது. குறிப்பாக தடுப்பூசி வழங்கப்படாத பகுதிகளில் சாதாரண மாறுபாட்டை விட டெல்டா மாறுபாடு அதிவேகமாக பரவ முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தடுப்பூசிகள் போடப்பட்டும் கூட, டெல்டா மாறுபாட்டின் தோற்றம், மார்ச் 2020 இல் ஏற்பட்டதை விட மோசமான கொரோனா வைரஸ் பரவலைத் தூண்டியுள்ளது. தற்போது ஏராளமான மருத்துவமனை அனுமதிகளை எதிர்கொள்ளும் புளோரிடா ஒட்டுமொத்த மக்களும் எதிர்கொள்ளும் ஆபத்துக்களுக்கான எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

உலகின் பெரும்பான்மை பகுதியாகவுள்ள குறைந்த தடுப்பூசி விகிதங்களைக் கொண்ட நாடுகளில், டெல்டா மாறுபாடு மேலும் பேரழிவை ஏற்படுத்துகிறது. ஏப்ரல் வரை மிகக் குறைந்த நோய்தொற்று விகிதங்களைக் கொண்டிருந்த பல்வேறு நாடுகளில், டெல்டா மாறுபாடு பரவத் தொடங்கியதும் கட்டுப்பாட்டை மீறி நோய்தொற்றுக்களையும் இறப்புக்களையும் அது விளைவித்தது. உதாரணமாக, ஆறு சதவீதத்திற்கு குறைவான முழு தடுப்பூசி விகிதம் கொண்ட தாய்லாந்தில், ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் 100 க்கும் குறைவான கொரோனா வைரஸ் இறப்புக்கள் ஏற்பட்டிருந்தன, ஆனால் தற்போது 5,300 க்கும் அதிகமான இறப்புக்கள் அங்கு ஏற்பட்டுள்ளன.

புவியில் மேலும் பல மாறுபாடுகள் உள்ளன. கொரோனா வைரஸ் தொடர்ந்து பிறழ்வு காண்பதால் அதன் தொற்றும் மற்றும் நோயெதிர்ப்பை தவிர்க்கும் தன்மை பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள், லாம்ப்டா மாறுபாடு தடுப்பூசிகளை எதிர்க்கும் தன்மை கொண்டது என்றும், ஏனைய மூன்று மாறுபாடுகளான ஈடா, அயோட்டா மற்றும் கப்பா வகைகளும் “அச்சுறுத்தும் சாத்தியமுள்ளவை” என்றும் விவரித்துள்ளனர்.

தடுப்பூசியை தவிர்க்கக்கூடிய மாறுபாடுகள் உருவாகி வருகின்றன என்பது தடுப்பூசிக்கு எதிரான ஒரு வாதமல்ல, மாறாக தொற்றுநோய்க்கு எதிரான ஒரு விஞ்ஞான வெற்றியைப் பற்றியது. கொடிய தொற்று நோயிலிருந்து தங்களையும் உலகத்தையும் பாதுகாத்துக்கொள்ள, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலுமுள்ள தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதுடன், இன்னும் பரந்த தடுப்பூசி பிரச்சாரத்திற்காக போராட வேண்டும். அதாவது இந்த முயற்சி, தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர முகக்கவச பயன்பாடு, பரிசோதித்தல், தொடர்புத் தடமறிதல், தனிமைப்படுத்தல் மற்றும் அத்தியாவசியமற்ற வணிகங்களை மூடுதல் போன்ற மருத்துவவழிமுறைகள் சாராத தலையீடுகளின் புதுப்பிக்கப்பட்ட எழுச்சியுடன் ஒன்றுபட வேண்டும்.

எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் என்பது, மிகவும் ஆபத்தான முதலாளித்துவ நோயின் அறிகுறியாகும். வைரஸ் விடாப்பிடியாக பரவி வருவது அதை முடிவுக்கு கொண்டுவருவதற்கான மருத்துவ நிபுணத்துவம் இதுவரை கண்டறியப்படாததால் மட்டுமல்ல, மனித உயிர்களை விட தனியார் இலாபங்களையும் சந்தையின் நடைமுறைகளையும் முன்னிலைப்படுத்தும் வகையிலான கொள்கைகளைச் செயல்படுத்த மிகப்பரந்த சமூக மற்றும் பொருளாதார சக்திகள் ஆணையிட்டதும், ட்ரம்ப், பைடென் மற்றும் அவர்களைப் போன்றவர்களது கொள்கைகளும் தான் அதற்கு காரணமாகும். சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் சமூகத்தில் ஏற்படும் புரட்சிகர மாற்றத்தினால் மட்டுமே, தொற்றுநோயை ஒரேயடியாக அழித்தொழிக்கக்கூடிய சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் உருவாகும்.

Loading