முன்னோக்கு

குழந்தைகளின் வாழ்க்கை முக்கியம்! பள்ளிகளின் மறுதிறப்பை நிறுத்து!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த ஆறு வாரங்களில், மிகுந்த அச்சுறுத்தலுக்குட்பட்ட, தடுப்பூசிக்கு தகுதியற்ற 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட, அமெரிக்காவில் நாளாந்த புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பத்து மடங்கிற்கு மேலாக அதிகரித்துள்ளன. தற்போது அமெரிக்காவிலுள்ள மொத்த கோவிட்-19 நோய்தொற்றாளர்களில் தோராயமாக 20 சதவீதம் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளமையால், நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன.

புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஐலின் மார்ட்டி (Dr.Aileen Marty), ஞாயிற்றுக்கிழமை “நமது குழந்தைகள் மருத்துவமனைகள் முற்றிலும் நிரம்பிவிட்டன” என்று CNN க்கு தெரிவித்தார். மேலும் அவர், “நமது குழந்தை மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் ஊழியர்களும் சோர்வடைந்துவிட்ட நிலையில், குழந்தைகள் சிரமத்திற்குள்ளாகிறார்கள். இது முற்றிலும் அழிவுகரமானது … நமது குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அளவிற்கு குழந்தை நோயாளிகளின் எண்ணிக்கையை நாங்கள் ஒருபோதும் எதிர்கொண்டதில்லை” என்றும் கூறினார்.

கடந்த வாரம் இதேபோல நியூ ஓர்லியன்ஸ் நகரிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் மார்க் க்லைன் (Dr. Mark Kline) உம், “நான் முன்னொருபோதும் கவலைப்படாத அளவிற்கு இன்று நமது குழந்தைகளின் நிலையை கண்டு நான் மிகவும் வருந்துகிறேன்” என்று கூறினார்.

ஆகஸ்ட் 4, 2021, புதன்கிழமை, மெக்டோனா, கா வில் உள்ள துஸ்ஸாஹா தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் நடைபாதையில் நடந்து செல்கின்றனர். (AP Photo/Brynn Anderson)

தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் எரிக் ஃபிகில்-டிங் (Dr. Eric Feigl-Ding) சமீபத்தில், “ஒட்டுமொத்த கோவிட்-19 உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றாளர்களில் உள்ள 1 சதவீத குழந்தை தொற்றாளர்களை மருத்துவமனைகளில் சேர்க்க நேரிடும் என்பதால் குழந்தைகள் மருத்துவமனைகள் மூழ்கிவிடும். சமுதாயத்தில் நாம் அனுமதிப்பதான, குழந்தைகள் இந்த அளவிற்கு நோய்வாய்ப்படும் நிலை உண்மையில் ‘ஏற்கத்தக்கதா’?” என்று எச்சரித்தார்.

கார்டியனில் ஞாயிறன்று வெளியான ஒரு தலையங்க எதிர்ப்புறக் கட்டுரையில் டாக்டர் ஜோர்ஜ் ஏ. கபல்லெரோ (Dr. Jorge A. Caballero) பின்வருமாறு குறிப்பிட்டார்: “குழந்தைகள் மத்தியில் டெல்டா மாறுபாடு மற்றும் லோங் கோவிட் வகை வைரஸ்கள் பரவுவது பற்றி நாம் அனைத்தும் அறிந்திருந்தும் கூட, தடுப்பூசி போடப்படாத குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை வகுப்பறைகளுக்கு அனுப்புவது முறையற்றதே. டெல்டா மாறுபாடு, அதன் பாதிப்புள்ள அனைவருக்கும் நீண்டகால இயலாமை அல்லது மரணம் ஏற்படுவதற்கான பெரும் அபாயத்தை அதிகரிக்கிறது, அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் வாழும் 73 மில்லியன் குழந்தைகளுக்கு இது மிக ஆபத்தானதாகும். இந்நிலையில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான நமது திட்டங்களை நாம் உடனடியாக சரிசெய்துகொள்ள வேண்டும்.”

குழந்தைகளுக்கும் நிகழ்வது உட்பட, நாடு முழுவதிலும் கோவிட்-19 நோய்தொற்றுக்களும் மருத்துவமனை அனுமதிகளும் பெரிதும் அதிகரிக்கையில், பள்ளிகளை முழுமையாகத் திறப்பதற்கான கோரிக்கையை பைடென் நிர்வாகம் இரட்டிப்பாக்குகிறது. கல்விச் செயலாளர் மிகுவல் கார்டோனா (Miguel Cardona) ஞாயிற்றுக்கிழமை CBS இன் Face the Nation நிகழ்ச்சியில், “நாடு முழுவதிலுமுள்ள 50 மில்லியன் மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு திரும்பத் தயாராகவுள்ளனர்” என்று கூறினார். பல பள்ளி மாவட்டங்கள் சமீபத்திய வாரங்களில் ஏற்கனவே பள்ளிகளை முழுமையாக திறந்துவிட்டன, மேலும் பெரும்பான்மையான மாவட்டங்கள் செப்டம்பர் நடுப்பகுதியில் மிகவும் வரையறுக்கப்பட்ட அல்லது தொலைதூரக் கல்விக்கு எந்தவித வாய்ப்புமில்லாத வகையில் பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை, வெள்ளை மாளிகை செய்திச் செயலாளர் ஜென் சாகி (Jen Psaki), “நாங்கள் ஆட்சிக்கு வந்தபோதான நேரத்தை விட நமது நாடு தற்போது மிகுந்த வலிமையான இடத்தில் உள்ளதால், நமது பொருளாதாரத்தையோ அல்லது பள்ளிகளையோ நாங்கள் மூடப்போவதில்லை” என்றும் “நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. நாங்கள் நேரத்தை பின்னோக்கி திருப்பப் போவதுமில்லை” என்றும் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

பள்ளிகளை மீளத்திறப்பதற்கான ஜனநாயகக் கட்சியினரின் ஈவிரக்கமற்ற முனைப்பு, குடியரசுக் கட்சியினரை மிகுந்த அடிப்படை விஞ்ஞான நடவடிக்கைகளை மேலும் கைவிடத் தூண்டியுள்ளது, இதில் குடியரசுக் கட்சி தலைமையிலான எட்டு மாநிலங்கள் பள்ளிகளில் முகக்கவச பயன்பாட்டிற்கான எந்தவித உத்தரவுகளையும் தடை செய்வது அடங்கும். புளோரிடா மற்றும் டெக்சாஸில் மிகுந்த பாசிசவகைப்பட்ட கொள்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன, அதாவது முன்னையது முகக்கவச பயன்பாட்டை அமல்படுத்தும் மாவட்டங்கள் மீது நிதி அபராதங்களை விதிக்கிறது, பின்னையது தொற்றுநோய் வெடித்துப்பரவும் பள்ளிகளில் தொடர்புத் தடமறியும் அல்லது மாணவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை முற்றிலும் நீக்குகிறது.

கல்வியாளர்களும், பெற்றோர்களும் மற்றும் மாணவர்களும் எதிர்கொள்ளும் வாழ்வா சாவா போரட்டாத்திற்கு பதிலிறுப்பாக, ஆசிரியர் சங்கங்கள் தங்களுக்கு பணம் செலுத்தும் உறுப்பினர்களின் இழப்பில் நிதிய உயரடுக்கின் நலன்களுக்காக மீண்டும் கடமையுடன் சேவையாற்றுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை NBC இன் Meet the Press நிகழ்ச்சியில் பேசுகையில், அமெரிக்க ஆசிரியர் கூட்டமைப்பின் (American Federation of Teachers-AFT) தலைவர் ராண்டி வைன்கார்டன் (Randi Weingarten), “இந்த வாரம் நான் நாடு முழுவதும் சுற்றி வந்தேன். பள்ளிகளை மீளத்திறக்க நாங்கள் தீவிர அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தபோது நான் மிசோரி மற்றும் புளோரிடாவில் இருந்தேன்” என்று கூறினார். டெல்டா மாறுபாட்டின் சமீபத்திய எழுச்சியின் போது புளோரிடா மற்றும் மிசோரி இரண்டு மாநிலங்களிலும் ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தது உட்பட, மோசமாக பாதிக்கப்பட்டிருந்த மாநிலங்களில் இவையும் அடங்கியிருந்தன.

குடியரசுக் கட்சி தலைமையிலான எட்டு மாநிலங்கள் பள்ளிகளில் முகக்கவச பயன்பாட்டிற்கான உத்தரவுகளை தடை செய்ய முயற்சிப்பது குறித்த ஆசிரியர்களின் கவலைகள் பற்றி கேட்டபோது, வைன்கார்டன் அந்த கேள்வியைத் தவிர்த்து, “அவர்கள் பயப்படுகிறார்கள் … ஆனால் அவர்களுக்கும் தெரியும், இது எனக்கு தெளிவாக உள்ளது. குழந்தைகளை மீண்டும் பள்ளிகளுக்குத் திரும்ப வைப்பதே முதன்மையானதாகும்” என்று தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்றுநோய் பற்றிய முன்னைய கருத்துக்களில் ஆசிரியர் சங்கங்கள் எப்போதும் ஏற்றுக்கொண்ட ஒன்று என்னவென்றால், குழந்தைகள் பெரும்பாலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதில்லை, மேலும் மற்றவர்களை அவர்கள் பாதிக்க வைக்கும் வாய்ப்பும் இல்லை என்பதே.

கடந்த டிசம்பர் மாதம், நியூயோர்க் நகரத்தின் ஜனநாயகக் கட்சி மேயர் பில் டூ பிளாசியோ (Bill de Blasio), “இளம் குழந்தைகளுக்கு இந்த நோய்தொற்றினால் மிகக் குறைந்த எதிர்மறை அனுபவம் தான் ஏற்படுகிறது என்பதை அனைத்து ஆய்வுகளும் தொடர்ந்து காட்டுவதை முதலில் நாங்கள் அறிவோம் என்பதுடன், இளம் குழந்தைகளுக்கு நோய்தொற்று ஏற்படுவதனால் பரவுவது குறித்த கவலையும் மிகக் குறைவே” என்று பொய்யாகக் கூறி ஒருதலைப்பட்சமாக பள்ளிகளை மீண்டும் திறக்கச் செய்தார்.

பைடென் பதவியேற்ற உடனேயே, அமெரிக்கா முழுவதுமான ஜனநாயகக் கட்சி தலைமையிலான நகரங்களும் மாநிலங்களும், தொழிற்சங்கங்களின் முழு ஆதரவுடன், பள்ளிகளை முழுமையாகத் திறக்க இதே கோரிக்கைகளை முன்வைத்தன. தேசிய தொலைக்காட்சியில் ஒரு இரண்டாம் வகுப்பு மாணவியிடம் “உங்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு, அம்மா அல்லது அப்பாவுக்கு இந்த நோய்தொற்றை பரப்ப வாய்ப்பில்லை” என்று பொய் கூறி, பைடென் இந்த பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார். மேலும், “கோவிட் அடிக்கடி வரக்கூடியது தான் என்றாலும் குழந்தைகளுக்கு அது தொற்றாது. இது நிகழ்வது அசாதாரணமானது” என்றும் கூறினார்.

நியூயோர்க் டைம்ஸ், சிகாக்கோ டிரிப்யூன், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் ஏனைய பெருநிறுவன ஊடகங்களால் மீண்டும் மீண்டும் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த அசிங்கமான பொய்கள், 2020 கோடையின் நடுப்பகுதியில் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டதுடன், தற்போது மிகவும் பரவும் தன்மையுள்ள மற்றும் கடுமையான டெல்டா மாறுபாட்டின் தாக்கத்தால் நோய்தொற்றுக்கள் முற்றிலும் வெடித்துள்ளன.

ஆனால் பள்ளிகளை மீளத்திறப்பதற்கான இந்த முனைப்பு ஒருபோதும் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, நிதிய தன்னலக்குழுவின் பொருளாதார நலன்களால் மட்டுமே தூண்டப்பட்டு வந்துள்ளன. ஏனென்றால், குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லையானால், அவர்களது பெற்றோர்கள் அவர்களை கவனித்துக்கொள்ள வீட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் பெருநிறுவனங்களுக்காக அவர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பி இலாபமீட்டித் தர முடியாது. பைடெனின் உயர்மட்ட பொருளாதார ஆலோசகர் பிரையன் டீஸ் (Brian Deese), “தொழிலாளர் பற்றாக்குறையின்” பின்னணியில் உள்ள ஒரு முக்கிய உந்துசக்திகளில் ஒன்று “குறிப்பாக பள்ளி வயது குழந்தைகளை உடைய பெற்றோருக்கு, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பள்ளிகளின் பற்றாக்குறை நிலவுகிறது” என்று சமீபத்தில் தெரிவித்தது உட்பட, தொற்றுநோய் காலம் முழுவதும் இது ஒரு பெரிய கவலைக்குரிய விடயமாக இருந்து வருகிறது.

உலகளவில் ஆசிரியர்களும் மாணவர்களும் முகக்கவசம் அணிவதை பின்பற்றி மீண்டும் முழுமையாக பள்ளிகள் திறக்கப்பட்டாலும், டெல்டா மாறுபாட்டின் தீவிர பரவும் தன்மை பாரிய நோய்தொற்று வெடிப்புக்கு வழிவகுக்கக்கூடும். இதே கொள்கைகள் தான் உலகெங்கிலுமுள்ள முதலாளித்துவ அரசாங்கங்களால் செயல்படுத்தப்படுகின்றன, இது உலகளவில் வைரஸ் பேரழிவுகரமாக வெடித்துப் பரவும் நிலைமைகளை உருவாக்குவதுடன், மிகுந்த தொற்றும் தன்மையுடைய, ஆபத்தான மற்றும் தடுப்பூசி எதிர்ப்பு மாறுபாடுகள் இதனால் அபிவிருத்தி காண்கின்றன.

உலகெங்கிலுமுள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் குழந்தைகள் வரவிருக்கும் மாதங்களில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகக்கூடிய, மேலும் தங்கள் சமூகங்கள் முழுவதும் அதை பரப்பக்கூடிய மிகுந்த ஆபத்து உள்ளதானது, கோவிட்-19 ஆல் ஏற்படும் பெரும் துன்பத்துடனும் மரணத்துடனும் சேர்ந்துகொள்கிறது. ஏற்கனவே, உலகளவில் 1.5 மில்லியன் குழந்தைகள் கோவிட்-19 ஆல் தங்களது ஒரு பெற்றோரையோ அல்லது பாதுகாவலரையோ இழந்து தவிக்கின்றனர். இந்த நிலைமைகளின் கீழ், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு தொடர்ந்து முன்வைக்கப்படும் வக்காலத்து குற்றத்திற்கு குறைவானது அல்ல.

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை அனைத்து பெற்றோர்களும், கல்வியாளர்களும் மற்றும் மாணவர்களும், அமெரிக்காவிலும் மற்றும் உலகளவிலும் ஒரே இயக்கமாக ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். உலகளாவிய பரிசோதனை, தொடர்புத் தடமறிதல், நோய்தொற்றாளர்களை தனிமைப்படுத்துதல், முகக்கவசம் அணிதல் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் போன்ற தொற்றுநோயை முழுமையாகக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள், நோய் பரவல் சங்கிலியை துண்டிக்கும் வகையில் அனைத்து பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமல்லாத பணியிடங்களை மூடும் பரந்த பணி முடக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் உலகளவில் செயல்படுத்தப்படுமானால், தொற்றுநோயை ஒருசில மாதங்களில் உலகளவில் முழுமையாக கட்டுப்படுத்திவிட முடியும்.

ஆனால் இத்தகைய கொள்கைகள், முழு அடைப்பு மற்றும் அனைத்து நோய் தணிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து எதிர்த்துவரும் அதேவேளை தொழிலாள வர்க்க எதிர்ப்பிற்கு பெரும் தடையாக தீவிர வலதுசாரிகளை வளர்த்தெடுக்கும் ஆளும் வர்க்கத்தின் நிதிய நலன்களுக்கு எதிரானது. முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் உள்ள அவர்களது ஆதரவாளர்களிடமிருந்து சுயாதீனமான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பாரிய தலையீடு மட்டுமே, கோவிட்-19 ஐ ஒழிப்பதற்கு செயல்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகளாக இருக்கும்.

வைன்கார்டன் போன்ற அதிகாரிகளால் உருவான, உயர் நடுத்தர வர்க்க தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், சாமானிய கல்வியாளர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களின் நலன்களுக்கு முற்றிலும் விரோதமானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (International Workers Alliance of Rank-and-File Committees) என்ற பதாகையின் கீழ் உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட சாமானிய தொழிலாளர் குழுக்களின் வலையமைப்பை கட்டமைப்பதன் மூலம் அவர்கள் எதிர்க்கப்பட வேண்டும்.

அமெரிக்கா, ஜேர்மனி, பிரேசில், இங்கிலாந்து மற்றும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வரும் ஏனைய அனைத்து நாடுகளிலும், இந்த கொடிய பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த தேசியளவிலான ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்பதுடன், குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் பரந்த மக்களின் தேவையற்ற துன்பத்தையும், இறப்புக்களையும் தடுக்க ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் அணிதிரட்டப்பட வேண்டும்.

Loading