ஆப்கான் கைப்பாவை ஆட்சியின் வீழ்ச்சி: அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு வரலாற்று தோல்வி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கைப்பாவை ஆட்சி திடீரென ஞாயிற்றுக்கிழமை வீழ்ந்தது அமெரிக்க ஏகாதிபத்தியதிற்கு ஓர் அவமானகரமான தோல்வியாகும். ஒரு குற்றவியல் போர் மற்றும் ஆக்கிரமிப்பின் மூலம் திணிக்கப்பட்ட, பொய்களின் அடிப்படையில் ஊக்குவிக்கப்பட்ட மற்றும் படுகொலை, சித்திரவதை மற்றும் அப்பாவி மக்கள் மீது குண்டுவீசுதல் மூலம் அதிகாரத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஓர் ஆட்சியின் பொறிவை இது குறிக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை பென்டகன் அறிவிக்கையில், ஆப்கானிய ஆட்சிக்குப் பக்கபலமாக கடற்படையின் இரண்டு படைப்பிரிவுகளும் அமெரிக்க தரைப்படைப் பிரிவு ஒன்றும் காபூல் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய இருப்பதாக அறிவித்தது. கைப்பாவை ஆப்கானிய ஜனாதிபதி அஷ்ரப் கானி, 'சட்டம் ஒழுங்கை' பராமரிக்குமாறு அவர் ஆட்சியின் பாதுகாப்புப் படைகளுக்கு அழைப்பு விடுத்து ஒரு காணொளி வெளியிட்டார்.

A U.S. Chinook helicopter flies over the city of Kabul, Afghanistan, Sunday, Aug. 15 2021. (AP Photo/Rahmat Gul)

ஆனால் தலிபான் துருப்புக்கள் காபூலின் வாயிலில் தங்கள் மின்னல் முன்னேற்றத்தை சிறிது நேரம் இடைநிறுத்திய பின்னர், அதே நாளில் ஆப்கானிய தலைநகரில் முக்கிய இடங்களைக் கைப்பற்றின. இரவுக்குள், தலிபான் அதிகாரிகள் அவர்கள் ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றி விட்டதாகவும், விரைவில் ஒரு புதிய அரசாங்கம் அமைக்கும் அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் அறிவித்தனர். கேடுகெட்ட நேட்டோ சிறைச்சாலை மற்றும் சித்திரவதை மையமான பக்ராம் விமான நிலையம் தாலிபான் வசம் வீழ்ந்தது, அவர்கள் அங்கே அடைக்கப்பட்டிருந்த 7,000 கைதிகளை விடுதலை செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நாள் நகர்ந்த போது, கானியும் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் நாட்டை விட்டு தப்பியோடினர். அமெரிக்க நேரப்படி, காலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கென் கூறுகையில், அமெரிக்க அதிகாரிகள் காபூல் விமான நிலைய தூதரகத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். ஆனால் மாலையிலேயே, காபூல் விமான நிலையம் கூட இனி வாஷிங்டன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும், காபூலில் உள்ள அமெரிக்க குடிமக்கள் தலைமறைவாகுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அமெரிக்க தூதர்கள் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது.

'அமெரிக்காவின் பல ஆண்டு கால தவறான கணக்கீடுகளைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானைத் தலிபான் கைப்பற்றுகிறது,” என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில், நியூ யோர்க் டைம்ஸ் பின்வருவதை ஒப்புக் கொண்டது: “தாலிபானின் ஆக்ரோஷமான, நன்கு திட்டமிட்ட தாக்குதலுக்கு முன்னால் ஆப்கானிஸ்தான் இராணுவம் வேகமாக பொறிந்ததால் ஜனாதிபதி பைடெனின் உயர்மட்ட ஆலோசகர்கள் திகைத்துப் போனதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். … சமீபத்தில் ஜூன் இறுதி வாக்கில் போல, தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினால், காபூலை அச்சுறுத்துவதற்கு குறைந்தது ஒன்றரை வருடங்களாவது ஆகும் என்று உளவுத்துறை மதிப்பிட்டிருந்தது.

யதார்த்தத்தில், ஆப்கானிஸ்தானில் வாஷிங்டனும் மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளாலும் நிறுவப்பட்ட பெரிதும் 'ஜனநாயக' ஆட்சியாக புகழப்பட்ட ஆட்சி அரசியல்ரீதியில் பூஜ்ஜியத்திற்கு நிகராக இருந்தது. பத்தாயிரக் கணக்கான நேட்டோ துருப்புக்கள் மற்றும் அமெரிக்க போர் விமானங்களால் மட்டுமே அதிகாரம் தக்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அது நடைமுறையளவில் அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டதும் ஒரே இரவில் கலைந்து போனது.

அமெரிக்க ஆளும் வட்டங்கள் இவ்வளவு பெரிய செலவில் அவை முட்டுக்கொடுத்திருந்த அந்த ஆட்சியின் திடீர் வீழ்ச்சிக்குத் தயாரிப்பாக இருக்கவில்லை, ஏனென்றால் கணிசமானளவுக்கு அவை அவற்றின் சொந்த பிரச்சாரத்தை நம்பிக் கொண்டிருந்தன. இரண்டு தசாப்த காலங்களின் போது, எந்த பெரிய பத்திரிகையோ, தொலைக்காட்சி வலையமைப்போ அல்லது பிரதான ஊடகங்களோ இந்த நவகாலனித்துவ ஆக்கிரமிப்புப் போரை நேர்மையுடன் ஆராய்ந்திருக்கவில்லை.

ஆப்கானிஸ்தான் போருக்காக கொடுக்கப்பட்ட மனித மற்றும் சமூக விலை, பேரழிவுகரமானவை. அந்த போரின் போது 164,436 ஆப்கானியர்களும், அவர்களுடன் சேர்ந்து 2,448 அமெரிக்க சிப்பாய்களும், 3,846 அமெரிக்க இராணுவ ஒப்பந்ததாரர்களும் மற்றும் பிற நேட்டோ நாடுகளைச் சேர்ந்த 1,144 சிப்பாய்களும் கொல்லப்பட்டதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன, ஆனால் சந்தேகத்திற்கிடமின்றி இவை மிகப்பெரியளவில் குறைத்துக் குறிப்பிடுவதாகும். நூறாயிரக்கணக்கான ஆப்கானியர்கள் மற்றும் பத்தாயிரக் கணக்கான நேட்டோ படையினர் காயமடைந்தனர். அமெரிக்காவுக்கான நிதிச் செலவு மட்டுமே 2 ட்ரில்லியன் டாலராக மதிப்பிடப்படுகிறது, கடன் மூலமாக வழங்கப்பட்ட நிதி என்பதால் வட்டியாக இன்னும் மேற்கொண்டு 6.5 ட்ரில்லியன் டாலர் செலுத்த வேண்டியிருக்கும்.

நேற்றைய சம்பவங்கள், தவிர்க்க முடியாமல், ஓர் அரை நூற்றாண்டுக்கு முன்னர், வியட்நாம் போர் முடிவில் சைகோன் தூதரகத்தின் மேல்தளத்திலிருந்து அமெரிக்க தூதர்கள் ஹெலிகாப்டர்கள் மூலமாக தப்பித்த புகழ்மிக்க புகைப்படங்களை நினைவூட்டுகின்றன. ஆனால் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தோல்வியை அதன் உள்நோக்கங்கள் மற்றும் அரசியல் விளைவுகளின் அடிப்படையில் பார்த்தால், அது வேறெதையும் விட அதிக குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.

ஆப்கான் அரசாங்கத்தின் பொறிவானது, 1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சோவியத் ஒன்றிய கலைப்பைத் தொடர்ந்து அமெரிக்க ஆளும் வர்க்கம் தழுவிய மாய கருத்தாக்கங்களைச் சிதறடிக்கிறது. வாஷிங்டனின் முக்கிய இராணுவப் போட்டியாளர் அங்கே இல்லாமல் போனது ஆளும் வர்க்கத்தால் அதன் படை பலத்தைப் பயன்படுத்தி அதன் உலகளாவிய வீழ்ச்சி மற்றும் உள்நாட்டு முரண்பாடுகளைக் கடந்து வர ஒரு சந்தர்ப்பமாக பார்க்கப்பட்டது. அமெரிக்க இராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கையைத் திட்டமிடுபவர்கள், சவாலுக்கிடமற்ற அமெரிக்காவின் பலம் வோல் ஸ்ட்ரீட் நலன்களுக்காக ஒரு 'புதிய உலக ஒழுங்கை' மேற்பார்வையிடும் ஓர் 'ஒரு துருவ தருணத்தை' பிரகடனம் செய்தனர்.

சோவியத் ஒன்றியம் இறுதியாக பொறிவதற்கு முன்னர், 1991 இல் ஈராக்கிற்கு எதிரான முதல் போரில், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் வெற்றி, அந்நேரத்தில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பிரகடனம் செய்ததைப் போல “படைபலம் வேலை செய்யும்!” என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளப்பட்டது. பெரும்பாலும் தற்காப்பு பலமில்லாத ஒரு நாட்டின் மீது அதன் குற்றகரமான குண்டுவீச்சு மூலம், அமெரிக்க ஏகாதிபத்தியம் 'வியட்நாம் கரும்புள்ளியை ஒரேயடியாக அகற்றி' விட்டதாக ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ் அறிவித்தார். ஓராண்டுக்குப் பின்னர், 1992 இல் பென்டகன் ஒரு மூலோபாய ஆவணத்தை ஏற்று, 'முன்னேறிய தொழில்துறை நாடுகள் நமது தலைமையைச் சவால் செய்வதை [இராணுவரீதியில்] அதைரியப்படுத்துவது அல்லது ஒரு மிகப்பெரிய பிராந்திய அல்லது உலகளாவிய பாத்திரம் வகிக்கும் விருப்பமே' அமெரிக்காவின் நோக்கம் என்று அறிவித்தது.

1999 இல், கிளின்டன் நிர்வாகத்தின் கீழ், சேர்பியா மீது நேட்டோ குண்டுவீசிய அந்நேரத்தில், துல்லியமாக வழிநடத்தப்படும் ஏவுகணை தளவாடங்களில் அமெரிக்கா கை மேலோங்கி இருப்பது உலக அரசியலையே மாற்றி, வாஷிங்டனை ஒரு சவாலுக்கிடமற்ற உலக மேலாதிக்க சக்தியாக ஸ்தாபிக்கும் என்ற மாயை எழுந்தது. இந்த கருத்துருக்களுக்கு விடையிறுத்து, உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது:

அமெரிக்கா தற்போது ஆயுத தொழில்துறையில் 'போட்டித்தன்மை ஆதாயத்தை' அனுபவித்து வருகிறது. ஆனால் இந்த ஆதாயமோ அல்லது இந்த தொழில்துறையின் உற்பத்தி தளவாடங்களோ உலக மேலாதிக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. அதன் ஆயுத தளவாடங்கள் மிக நவீனத்தன்மையில் இருந்தாலும், உலக முதலாளித்துவ விவகாரங்களில் முன்னணி பாத்திரம் வகிக்கும் அமெரிக்காவின் நிதிய-தொழில்துறை அடித்தளம் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட கணிசமாக சரிந்துள்ளது. உலக உற்பத்தியில் அதன் பங்கு வேகமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன் சர்வதேச வர்த்தக பற்றாக்குறை ஒவ்வொரு மாதமும் பில்லியன் கணக்கான டாலர்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. துல்லிமாக வழிநடத்தக்கூடிய ஏவுகணை தளவாடங்கள் மீதான வெறிக்கு அடியிலிருக்கும் கருத்துரு—அதாவது, ஆயுத தொழில்நுட்ப துறையில் தேர்ச்சி பெற்றதன் மூலம் தேச பலத்தைக் காட்டும் இத்தகைய முக்கிய அடிப்படையான பொருளாதார குறியீடுகளைச் சரி கட்டிவிடலாம் என்பது—ஓர் அபாயகரமான பிரமையாகும்.

உலகையே வெற்றிக் கொள்வதற்கான திட்டத்தின் பின்னணியில் தான், சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலையைப் பலப்படுத்துவதற்காக, ஆப்கானிஸ்தான் மீதான அந்த போர், மத்திய ஆசியாவையும் யுரேஷியாவின் அந்த 'உலக தீவையும்' கட்டுப்பாட்டில் எடுக்கும் அமெரிக்க மூலோபாயத்தின் மையமாக பார்க்கப்பட்டது. செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பின்னர், அந்த படையெடுப்பு அல் கொய்தா மற்றும் தாலிபானுக்கு எதிராக— அந்த அமைப்புகளே அதற்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் சோவியத் ஒன்றியத்தை நிலைகுலையச் செய்யும் அமெரிக்க முயற்சிகளின் தயாரிப்புகளாக இருந்த நிலையில்—'பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்' பாகமாக முன்வைக்கப்பட்ட வாதங்களை WSWS நிராகரித்து பின்வருமாறு குறிப்பிட்டது:

அமெரிக்க அரசாங்கம் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் நீண்டகால சர்வதேச நலன்களைப் பின்தொடர்வதற்காக இந்த போரைத் தொடங்கியது. இந்த போரின் முக்கிய நோக்கம் என்ன? ஒரு தசாப்தத்திற்கு முன்னர் சோவியத் ஒன்றியத்தின் பொறிவு, உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய நிரூபிக்கப்பட்ட பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு வளங்களின் தாயகமாக விளங்கும் மத்திய ஆசியாவில் ஓர் அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியது. … ஆப்கானிஸ்தானைத் தாக்கி, ஒரு வாடிக்கையாளர் அரசை அமைத்து, அப்பிராந்தியத்தில் பாரிய இராணுவ படைப்பலத்தை நகர்த்துவதன் மூலம், அமெரிக்கா ஒரு புதிய அரசியல் கட்டமைப்பை நிறுவி, அதற்குள் மேலாதிக்க கட்டுப்பாட்டைப் பெற முடியும் என்று பார்க்கிறது.

2003 இல், ஈராக் அரசாங்கத்திடம் பாரிய பேரழிவுகரமான ஆயுதங்கள் (WMDs) இருப்பதாகவும் அவற்றை அது அல் கொய்தாவுக்குக் கொடுத்து விடும் என்றும், ஒட்டுமொத்த அமெரிக்க ஊடகங்களால் பக்கவாத்தியம் வாசிக்கப்பட்டு, பொய்யான வாதங்களின் அடிப்படையில், அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தது. ஐரோப்பாவில் இரண்டாம் உலக போர் தொடங்க காரணமான 1939 நாஜியின் போலாந்து படையெடுப்புடன் தற்காப்பற்ற ஈராக் மீதான தூண்டுதலற்ற தாக்குதலை ஒப்பிட்டு, WSWS பின்வருமாறு எழுதியது:

இப்போது தொடங்கியுள்ள மோதலின் ஆரம்ப கட்டங்களின் விளைவு என்னவாக இருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் பேரழிவுகளுடன் முன்நகர்கிறது. அது உலகை வெற்றி கொள்ள முடியாது. மத்தியக் கிழக்கின் பெருந்திரளான மக்கள் மீது அது காலனியாதிக்க தளைகளை மீண்டும் திணிக்க முடியாது. அதன் உள்நாட்டு சிக்கல்களுக்குப் போர் மூலமாக ஒரு நம்பகமான தீர்வை அது காண முடியாது. அதற்கு பதிலாக, போரால் சூழப்பட்டு எதிர்பாரா சிக்கல்களும் அதிகரித்த எதிர்ப்பும் அமெரிக்க சமூகத்தின் உள் முரண்பாடுகள் அனைத்தையும் தீவிரப்படுத்தும்.

இந்த வார்த்தைகள் இன்று மிகவும் சரியாக பொருந்துகின்றன. ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்த்தால், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான போர்கள், இத்துடன் லிபியா மீதான படையெடுப்பு மற்றும் சிரியாவில் சிஐஏ-தூண்டிவிட்ட உள்நாட்டு போர் ஆகியவையும், மில்லியன் கணக்கானவர்களைப் பலி கொண்டுள்ளதுடன் ஒட்டுமொத்த சமூகங்களையே சிதைத்து சின்னாபின்னமாக்கி உள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சவாலுக்கிடமற்ற உலகளாவிய மேலாதிக்கத்தை நிறுவுவதற்குப் பதிலாக, அவை ஒன்று மாற்றி ஒன்று தோல்வியிலேயே முடிந்துள்ளன. முதல் வளைகுடா போருக்கு மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், ஈராக் நிலைமைகள் குறித்து ஏதாவது கூறுவதானால், அது ஆப்கானிஸ்தானை விட படுமோசமாக உள்ளன.

ஒட்டுமொத்த அமெரிக்க முதலாளித்துவ மாளிகையும் நிலைகுலைந்திருப்பதற்கு ஆப்கானிஸ்தான் ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. அமெரிக்க இருப்புநிலைக் கணக்கு பற்றாக்குறைகள், வங்கி பிணையெடுப்புகள் மூலமாக பெரும் செல்வந்தர்களுக்கு வாரி வழங்கப்பட்ட 'பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் விடும்' (quantitative easing) நிதிகளில் மின்னணு மூலமாக ட்ரில்லியன் கணக்கான டாலர் போலி மூலதனத்தை அச்சிட்டு வழங்கி சமாளிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க முதலாளித்துவத்தின் குமிழி பொருளாதாரம் சார்ந்துள்ள போலி மூலதனம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பென்டகன் நடத்திய 'சாதுர்ய குண்டுகள்' மற்றும் டிரோன் படுகொலை தாக்குதல்களில் அது கொண்டுள்ள போலி அதிகாரத்தை எடுத்துக்காட்டுகிறது.

ஒரு தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டியுள்ளது: சந்தேகத்திற்கிடமின்றி அமெரிக்க ஆளும் உயரடுக்கின் சக்தி வாய்ந்த கூறுபாடுகள் இந்த தோல்விக்கு விடையிறுக்க அப்போதைக்கு அப்போது பல்வேறு திட்டங்களைத் தயாரித்து வருகின்றன, இவை ஒவ்வொன்றும் முந்தையதை விட இன்னும் பொறுப்பற்று உள்ளன. உலகின் மிகவும் வறிய, போரால் மிகவும் சீரழிக்கப்பட்ட நாடுகள் ஒன்றில், மிகச் சாமானிய ஆயுதங்களை மட்டுமே தரித்த ஓர் இஸ்லாமியவாத இயக்கத்தின் கரங்களில் அவர்களின் தோல்வியின் படுமோசமான கௌரவ மற்றும் நம்பகத்தன்மையின் இழப்பைச் சர்வசாதாரணமாக விட்டுவிட அவர்களுக்கு எந்த உத்தேசமும் இல்லை.

வெள்ளிக்கிழமை ஒரு வானொலி நேர்காணலில் முன்னாள் சிஐஏ இயக்குனரும் ஓய்வுபெற்ற ஆயுதப்படை தளபதியுமான டேவிட் பெட்ரீயஸின் கருத்துக்கள் இந்த காட்சிக்குப் பின்னால் நடந்து வரும் விவாதங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் நிலையை 'அழிவார்ந்தது' என்று குறிப்பிட்ட பெட்ரீயஸ், “இது மிகப்பெரிய தேசிய பாதுகாப்பு பின்னடைவு, நாம் உண்மையிலேயே முக்கிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இது இன்னும் மோசமானதைப் பெறும் விளிம்பில் உள்ளது,” என்றார்.

அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானில் மிகப் பெரியளவில் அதன் கௌரவத்தையும் முதலீடு செய்துள்ளதுடன், ஏகாதிபத்திய வெற்றியின் பரந்த திட்டத்தில் அது ஒரு பாகமாக இருந்தது. இராணுவப் படை பலத்தின் மூலமாக உலகையே கட்டுப்படுத்துவதற்கான அதன் முயற்சிகளில் இருந்து அமெரிக்க ஆளும் வர்க்கம் பின்வாங்காது, அதன் செல்வ வளம் அதைச் சார்ந்துள்ளது.

வியட்நாம் விஷயத்தில் செய்ததைப் போல, ஆப்கானிஸ்தான் தோல்வியை அமெரிக்க ஆளும் வர்க்கத்தால் போர்-எதிர்ப்பு இயக்கத்தின் மீது சுமத்த முடியாது. “பயங்கரவாதம் மீதான போர்' மற்றும் 'மனித உரிமைகள் ஏகாதிபத்தியத்திற்கு' கொண்டு வரப்பட்ட உயர்மட்ட நடுத்தர வர்க்க அமைப்புகளின் உதவியுடன், அமெரிக்காவுக்குள் நிலவிய போருக்கு எதிரான பரந்த எதிர்ப்பு நசுக்கப்பட்டு, ஜனநாயகக் கட்சியின் பின்னால் திசைதிருப்பப்பட்டது, குடியரசுக் கட்சிக்குக் குறைவின்றி இருக்கும் அது, வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்தின் ஒரு கட்சியாக விளங்குகிறது.

எவ்வாறிருப்பினும் இந்த பெருந்தொற்றுக்கு ஆளும் வர்க்கத்தின் கொலைபாதக விடையிறுப்போ, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கின் பெருந்திரளான மக்களின் உயிர்கள் மட்டுமல்ல பிரதான முதலாளித்துவ நாடுகளுக்குள் தொழிலாளர்களின் உயிர்களைக் குறித்தும் கூட ஆளும் வர்க்கத்திற்கு அதிக அக்கறை இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்த பெருந்தொற்று தொடர்ந்து பரவி வருகையிலும் கூட, அங்கே தொழிலாள வர்க்க எதிர்ப்பின் வெளிப்பாடுகளும் அதிகரித்து வருகின்றன.

இந்த எதிர்ப்பு ஒரு நனவுபூர்வமான சோசலிச அரசியல் இயக்கமாக அபிவிருத்தி அடைவது பிரிக்க முடியாத விதத்தில் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்துடன் பிணைந்துள்ளது. இதுவே, ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க போரின் ஒட்டுமொத்த குற்றகரமான தோல்வியின் அடிப்படை படிப்பினையாகும்.

Loading